திருவான்மியூர்


பண் :

பாடல் எண் : 1

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

விரிந்தமாமலர்களைக் கொண்டு விரைந்து நீர் , தேவர்நாயகனும் , வண்டுசேர் பொழில்களை உடைய வான்மியூர் ஈசனுமாகிய இறைவன் சேவடியைச் சூழ்வீர்களாக ; முன்பு செய்த பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

விண்ட - முகையவிழ்ந்து மலர்ந்த . மா - சிறந்த . அண்ட நாயகன் தன் - எல்லா உலகங்களுக்கும் தலைவனாகிய பெருமானுடைய . அடி - திருவடிகளை . சூழ்மின்கள் - வலம் செய்து வணங்குங்கள் . பண்டு செய்த பாவம் - முற்பிறப்பில் செய்த பிறவிக்குக் காரணமான பழவினை . பறைந்திடும் - நீங்கும் . வான்மியூர் ஈசனை எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 2

பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

பொருளும் , சுற்றத்தாருமாகிய பொய்ம்மையை விட்டு நீர் மருளுதற்குரிய மாந்தரை மாற்றி மயக்கம் நீக்கி அருளு மாறுவல்ல ஆதியாய் ! என்று கூறியதும் வான்மியூர் ஈசன் மயக்கம் நீக்குவன் .

குறிப்புரை :

நீர் - நீங்கள் . மருளும் மாந்தரை - உலக வாழ்வில் மயங்கி நிற்கும் மக்களை . மயக்கு அறுத்து - அறியாமையாகிய மயக்கத்திலிருந்து விடுவித்து . அருளுமாவல்ல - அருள் செய்யவல்ல . ஆதியாய் - முதன்மையானவனே . என்றலும் - என்று கூறியவுடனே . மருள் - பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் அறியாமையாகிய இருட்டு . அறுத்திடும் - நீக்கும் .

பண் :

பாடல் எண் : 3

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத் தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

மந்தமாகிய சிந்தையின் மயக்கத்தை அறுத்து முடிவற்ற குணத்தை உடையவனாகிய பெருமானை அடைந்துநின்று எந்தையே ! ஈசனே ! என்று வழிபடவல்லமை உடையீரேயாயின் வான்மியூர் ஈசன் வந்து நின்றிடும் .

குறிப்புரை :

மந்தமாகிய - அறியாமையால் ஏற்படும் மந்தத் தன்மையாகிய . சிந்தை மயக்கு - மன மயக்கத்தை . அறுத்து - நீக்கி . அந்தம்இல் - முடிவில்லாத . வல்லிரேல் - ஏத்தும் வன்மையை யுடையீரானால் . வந்து நின்றிடும் - வெளிப்பட்டு வந்து தோன்றும் .

பண் :

பாடல் எண் : 4

உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலால்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

கங்கையும் பாம்பும் கலக்கும் சடையோடு கூடிய வள்ளலாகிய வான்மியூர் ஈசன் , உள்ளம் கலந்து ஏத்த வல்லவர்க்கு அல்லால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அல்லன் .

குறிப்புரை :

உள்ளம் உள்கலந்து - உள்ளம் முழுமையும் அவனுக்கே இடமாகக்கொண்டு ; மேற்போக்கான நினைப்பு பயனற்றது ஆதலின் உள்கலந்து என்றார் . ஏத்தவல்லார்க்கலால் - வணங்கவல்லார்க்கே அல்லாமல் . கள்ளம் உள்ளழி - வஞ்சகத்தன்மை உள்ள இடத்து . கசிவானலன் - அருள் செய்யமாட்டான் . வெள்ளம் - கங்கை . விரவும் - கலந்தணிந்த .

பண் :

பாடல் எண் : 5

படங்கொள் பாம்பரைப் பால்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

படம் கொண்ட பாம்பு உடையவனும் , பால் மதி சூடியவனும் , மாலைகள் கொண்ட மென்முலைமாதாகிய உமையொரு கூறனுமான வான்மியூர் ஈசன் , தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினைகள் மடங்க முன்னே வந்து நின்று அருளுவான் .

குறிப்புரை :

படங்கொள் - படத்தைக் கொண்ட . பாம்பரை - பாம்பணிந்தவரை . மதிசூடியை - பிறைமதி சூடியவரை . வடங்கொள் - முத்துமாலைகளை அணிந்த . தொடர்ந்து நின்று - இடையறாது சிந்தித்து நின்று . தொழுதெழுவார் - வணங்கி எழுவார் . மடங்க நின்றிடும் - சுருங்கும் . வான்மியூர் ஈசனைத் தொழுது எழுவார் வினை மடங்கும் என்க .

பண் :

பாடல் எண் : 6

நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்று
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

` நெஞ்சில் நினைக்க ஐம்புலக் கள்வர் நினைக்கவையார் ; பஞ்சனைய மெல்லடியாளாகிய உமைபங்கனே !` என்று அஞ்சிப் புதிய மலர்கள் தூவி அழுதீரேல் வான்மியூர் ஈசன் உம் வஞ்சனையைத் தீர்ப்பர் .

குறிப்புரை :

நெஞ்சில் - மனத்தில் . ஐவர் - ஐம்பொறிகள் . நினைக்க - பல வழிகளிலும் மனத்தை ஈடுபடுத்திப் பலவற்றை நினைக்க . நினைக்குறார் - இறைவனை நினைத்தலைப் பொருந்தாராயினர் . பஞ்சின் மெல்லடியார் - பஞ்சு போன்ற மென்மைத் தன்மை வாய்ந்த காலடிகளை உடையவர் . அஞ்சி - அச்சத்துடனே . நாண் மலர் - புதிய மலர்கள் . அழுதிரேல் - இறைவனைக் கூவி அழைத்து அழுவீர்களேயானால் . வஞ்சம் தீர்த்திடும் - நினைக்க ஒட்டாது தடுத்து இடுக்கண் செய்யும் புலனாசையை நீக்கும் .

பண் :

பாடல் எண் : 7

நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தான்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

நுண்ணிய நூல் பல உணர்ந்த பிரமனும் திருமாலும் அறியும்வல்லமை இல்லாத பேரருட் குணங்களைப் பரவி சுணங்கு படர்ந்த பூண்களை உடைய முலையையும் தூய மொழியையும் உடைய பெண்கள் வணங்க வான்மியூர் ஈசன் நின்றிடுவான் .

குறிப்புரை :

நுணங்கு - நுண்ணிய . நூல் - வேதங்கள் . பரவி - தோத்திரித்து . குறைந்து உக்கவர் - செருக்கொழிந்து மனமுருகியவர் . சுணங்கு - பசலை . பூண் - அணிகலன் . தூமொழியாரவர் - இறைவன் புகழ் மொழிகளைப் பேசுபவர்களாகிய பெண்கள் . உக்கவரும் , மொழி யாரவரும் வணங்க என எண்ணும்மை விரிக்க . வணங்க நின்றிடும் - வணங்க எழுந்தருளும் .

பண் :

பாடல் எண் : 8

ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

வான்மியூர் ஈசன் முதலாகிய மூர்த்தி அரனும் அயனும் திருமாலும் ஆயவன் . பாதிபெண்ணுருவுமாகிய பரமன் என்று ஓதி உள்ளம் குழைந்து ஏத்த வல்லமை உடையவர்களின் துன்பங்களைத் தீர்த்திடுவான் .

குறிப்புரை :

ஆதி - எல்லார்க்கும் முன்னே தோன்றியவன் . அரனாய் அயன் மாலுமாய் - அரன் அயன் அரி ஆகிய மும்மூர்த்திகளாகியும் . பரமன் - மேலானவன் . உள் குழைந்து - மனமுருகி . வாதை - பிறவித் துன்பம் .

பண் :

பாடல் எண் : 9

ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

ஓட்டைமாடமாகிய உடம்பில் உள்ள ஒன்பது வாயில்களும் இடுகாட்டில் வெந்து எரிந்து சாம்பலாவதன் முன் , தன் கழலடியை நெஞ்சில் நாட்டிப் புதுமலர் தூவி வலம் செய்தால் வான்மியூரீசன் வாட்டம் தீர்ப்பான் .

குறிப்புரை :

ஓட்டை மாடத்தில் - எண்ணிறைந்த ஓட்டைகளை உடைய வீடாகிய உடலில் . உருவகம் . ஒன்பது வாசலும் - ஒன்பது வாசல்களும் . வழிகளாவன ; வாய் , கண் , மூக்கு , காது , சிறுநீர் , மலம் கழிப்பதற்கான வாயில்கள் ஆகிய ஒன்பது வழி . காட்டில் - இடு காட்டில் . நாட்டி - மனத்தில் நிலையாக எழுந்தருளச்செய்து . நாண் மலர் - புதியமலர்கள் . வாட்டம் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

பாரமாகத் திருக்கயிலையை எடுத்த இராவணனைச் சிதையும்படி திருவிரலால் ஊன்றியவனும் , ஆர்வம் பெருகி அழைத்து அவன் ஏத்தலும் அன்பு கொண்டவனும் வான்மியூர் ஈசன் ஆவன் .

குறிப்புரை :

பாரமா - சுமையாக. மலை - கயிலைமலை. சீரமாக - சீரணிக்க; அழிய. சிரமம் என்றதன் மரூஉவாகக் கொண்டு துன்புற எனலுமாம். ஊன்றினான் - கால்விரலை ஊன்றினான். ஆர்வமாக - அன்புடனே. அழைத்து அவன் ஏத்தலும் - அழைத்து அவனை வணங்குதலும். வாரம் - அன்பு; அருள். `வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்` என்பது ஓர்க.
சிற்பி