திருநாகைக்காரோணம்


பண் :

பாடல் எண் : 1

பாணத் தால்மதின் மூன்று மெரித்தவன்
பூணத் தானர வாமை பொறுத்தவன்
காணத் தானினி யான்கடல் நாகைக்கா
ரோணத் தானென நம்வினை யோயுமே.

பொழிப்புரை :

ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும் , தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும் , காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும் !

குறிப்புரை :

பாணத்தால் - அம்பால் . மதில்மூன்று - திரிபுரம் . எரித்தவன் - எரியச்செய்தவன் . பூண - அணிய . பொறுத்தவன் - சுமந்தவன் . காணத்தான் இனியான் - காணுதற்கு இனிய அழகியவன் . இனியதைச் செய்பவன் . என - என்றுசொல்ல . ஓயும் - ஒழியும் . காண - தரிசித்துப் பெருமைகளைக் காண .

பண் :

பாடல் எண் : 2

வண்ட லம்பிய வார்சடை யீசனை
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை யான கழலுமே.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும் , விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும் , தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

அலம்பிய - ஒலித்த . வார் - நீண்ட . விண்தலம் - தேவருலகம் . விகிர்தன் - வேறுபாடில்லாதவன் . கண்டல் அம்கமழ் . தாழைமலர்கள் மணம் வீசுகின்ற . அம் , சாரியை , அல்லது அம் கண்டல் எனலும் ஆம் . கண்டலும் - பார்த்தலும் . காண்டலும் என்பது எதுகைநோக்கி கண்டலும் என்றாயது . கழலும் - நீங்கும் .

பண் :

பாடல் எண் : 3

புனையும் மாமலர் கொண்டு புரிசடை
நனையும் மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
நினைய வேவினை யாயின நீங்குமே.

பொழிப்புரை :

மாமலர்களைக்கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும் . கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

புனையும் - அலங்கரியுங்கள் . மாமலர்கொண்டு - சிறந்த மலர்களைக் கொண்டு , புனையும் என்க . புரிசடை - முறுக்குண்ட நனையும் மாமலர் சூடிய . நனையும் மாமலரும் என்க . நனை - அரும்பு . கனையும் - ஒலிக்கின்ற . வார்கடல் - நீண்டகடல் .

பண் :

பாடல் எண் : 4

கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநட மாடு மிறைவனைக்
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை யானவை சோருமே.

பொழிப்புரை :

முல்லைநிலத்து விடையேறிய அரசனும் , இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய , கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும் .

குறிப்புரை :

கொல்லை - முல்லை நிலத்துக்குரிய . மால்விடை - திருமாலாகிய எருதினை . ஏறிய - ஊர்தியாக ஏறிய . கோவினை - தலைவனை . எல்லி - இரவு . மா - சிறந்த . கல்லினார்மதில் - கற்களினால் பொருத்திக்கட்டப்பட்ட . சோரும் - அழியும் .

பண் :

பாடல் எண் : 5

மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

உண்மையே உருவானவனும் , விடையை ஊர்தியாகக்கொண்டவனும் , வெண்மழுவைக் கையிற்கொண்டவனும் , நாகைக்காரோணனும் , ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

மெய்யன் - உண்மையின் வடிவாய் விளங்குகின்றவன் . வெண்மழுக்கையன் - வெள்ளிய மழுவாயுதத்தைக் கையின்கண் உடையவன் . மை - கரியவிடம் . அனுக்கிய - வருத்திய , வென்ற . விடத்தினை மாற்றிய நீலகண்டன் என்க . ` பிறையனுக்கிய செஞ்சீறடி ` வானவர் ஐயன் - தேவர்கள் தலைவன் .

பண் :

பாடல் எண் : 6

அலங்கல் சேர்சடை யாதிபு ராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை , மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை , கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

அலங்கல் - மாலை . ஆதிபுராணன் - முதலில் தோன்றிய பழையவன் . விலங்கல் மெல்லியல் - மலைமகள் . பாகம் விருப்பனை - பாகமாக விரும்பியவனை . கலங்கள் - கப்பல்கள் .

பண் :

பாடல் எண் : 7

சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவ ரேத்திய வீசனைக்
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும் , தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்திய ஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

சினங்கொள் - கோபம்கொள்ளும் . மால் - கரிய அல்லது பெரிய . கரி - யானையை . சீறிய - சினந்து உரித்துப் போர்த்த . ஏறு - சிங்கஏறு அல்லது காளை . இனங்கொள் - கூட்டம்கொண்ட . கனம்கொள் - மேகங்கள் தங்குதலைக்கொண்ட .

பண் :

பாடல் எண் : 8

அந்த மில்புக ழாயிழை யார்பணிந்
தெந்தை யீசனென் றேத்து மிறைவனைக்
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.

பொழிப்புரை :

ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே ! ` ஈசனே ` என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும் .

குறிப்புரை :

அந்தமில் - கெடுதல் இல்லாத . புகழ் - புகழையுடைய . ஆயிழையார் - அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்கள் ; பார்வதி எனலுமாம் . எந்தை - என்னுடைய தந்தை . ஈசன் - தலைவன் . கந்தம் - மணம் . திண்ணம் - நிச்சயம் . ` கௌரிநாயக , நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து பெரும்பதம் பிழையா வரம் பலபெற்றோர் இமையாநெடுங்கண் உமையாள் நங்கையும் தாரகற்செற்ற வீரக் கன்னியும் நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும் ...`. ( திருவிடை - மும்மணி .28)

பண் :

பாடல் எண் : 9

கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழத் தீவினை தீருமே.

பொழிப்புரை :

உலகிற்கெல்லாம் கருவாகியவனும் . கடல்நாகைக் காரோணனும் , பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும் , ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும் .

குறிப்புரை :

கருவன் - மூலகாரணனாய் விளங்குபவன் . இருவர் - திருமால் பிரமன் . ஒருவன் - ஏகன் . அழியாதவன் தானொருவனே யாகலின் ஏகன் என்றார் . உணரார் - பகைவர் . செருவன் - முப்புர மெரித்தலாகிய போரைச் செய்தவன் .

பண் :

பாடல் எண் : 10

கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன்
வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை
அடர வூன்றிய பாத மணைதரத்
தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே.

பொழிப்புரை :

கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான் .

குறிப்புரை :

கடற்கழி தழீஇய , அகரம்தொக்கது . தழி - தழுவுதலை உடையது . வடவரை - வடக்கின்கண் உளதாய திருக்கயிலைத் திருமலை . ஆர்த்த - செருக்கினால் ஆரவாரித்த , அடர - இறக்குமாறு வருத்த . அணைதர - நெருங்கித்தொழ . காலன் தொடர அஞ்சும் . அஞ்சும் - அஞ்சுவான் . துயக்கு - துன்பம் .
சிற்பி