திருவாட்போக்கி


பண் :

பாடல் எண் : 1

கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

பொழிப்புரை :

காலபாசத்தைப் பிடித்தெழும் யமதூதுவர்கள் இவர் பாலகர் , இவர் விருத்தர் , இவர் பழையவர் என்று கூறிவிட்டுச் செல்லார் ; கல்லால் நிழற்கீழ் அமர்ந்த வாட்போக்கியாரது சீலம் நிறைந்தவரே செம்மையுள் நின்று சிவகதிபெறுவர் .

குறிப்புரை :

காலபாசம் - உயிர்களைக்கொண்டு போவதற்கு எம தூதர் வீசும் கயிறு . தூதுவர் - எமதூதுவர்கள் . பாலகர் - இவர்கள் சிறு பிள்ளைகள் . விருத்தர் - இவர்கள் முதியவர்கள் . பழையார் - நல்ல செயல்களில் அறத்தில் பழகினவர்கள் . எனார் - என்று கருத மாட்டார்கள் . வாட்போக்கியார் - வாட்போக்கி என்னும் தலத்திலே எழுந்தருளிய இறைவனுடைய . சீலம் - தூய்மையை . ஆர்ந்தவர் - மனத்தால் எண்ணியவர் . செம்மையுள் நிற்பர் - எமதூதர்க்கும் அஞ்சாது செம்மையான சிவநெறியிலே எஞ்ஞான்றும் வாழ்வர் .

பண் :

பாடல் எண் : 2

விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்தும் ஏத்தியும் இன்புறு மின்களே.

பொழிப்புரை :

பாவிகளே ! எமன் விடுத்த தூதுவர்கள் வந்து வினைக்குழியிலே படுவித்தபோது கதறிப் புலம்பிப் பயன் இல்லை ; அடுத்த கின்னர இசை கேட்கும் வாட்போக்கியை எடுத்தேத்தி இன்புறுவீர்களாக .

குறிப்புரை :

விடுத்த - எமனால் அனுப்பப்பட்ட . வினைக்குழிப் படுத்தபோது - நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நரகக்குழியின் கண் போதரும் போதின்கண் . தேற்றம் - தெளிவு . தெளிவுறலாகுமே - நாம் இந்நாள்வரை அறிந்தன பொய் ; உண்மை இறைவன் திருவடிகளே என்ற தெளிவு ஏற்படும் .

பண் :

பாடல் எண் : 3

வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரகத் திடாமுனம்
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.

பொழிப்புரை :

வந்து இவ்வாறு வளைத்தெழுகின்ற எமதூதுவர்கள் மனம் உந்துதலால் ஓடி நரகத்து இடுவதன் முன்னம் அந்தியின் செவ்வொளி தாங்கிய மேனியராகிய வாட்போக்கியிறைவர் தம்மைச் சிந்தித்து எழுவார்களின் வினை தீர்ப்பர் .

குறிப்புரை :

இவ்வாறு - இவ்விடம் . உந்தி - நும்மைச் செலுத்தி . அந்தியின்னொளி - செவ்வொளி .

பண் :

பாடல் எண் : 4

கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே
ஆற்ற வும்மருள் செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.

பொழிப்புரை :

எமன் வந்து அழித்திடும்போதில் முடிவு வந்து தெளிவுறல் ஆகாதன்றோ ? மிகவும் அருள்செய்யும் வாட்போக்கி இறைவர்பால் விளக்கை இருள் நீங்க ஏற்றுவீராக .

குறிப்புரை :

தேற்றம் - உறுதி . விளக்கு - அறிவு . இருள் - அறியாமை . ஏ , அசை . ஆற்றவும் ஏற்றுமின் - இயன்ற அளவு இறை ஒளியை உள்ளத்தில் ஏற்றுங்கள் . இருள் நீங்க - அறியாமையாகிய இருட்டுக்கெட . விளக்கு - சிவம் .

பண் :

பாடல் எண் : 5

மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்
கூறி யூறி யுருகுமென் னுள்ளமே.

பொழிப்புரை :

மாறுபாடுகொண்டு வளைத்தெழும் எமதூதுவர் உடல் வேறு உயிர் வேறு படுப்பதன்முன்பே , கங்கையைச் சிவந்த சடையில் வைத்த வாட்போக்கி இறைவர்க்கு என் உள்ளம் ஊறி ஊறி உருகும் .

குறிப்புரை :

மாறுகொண்டு - பிரம்பைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து . வளைத்துஎழு - எங்கு இருந்தாலும் உயிர்களை வளைத்துப் பிடித்துப் புறப்படுகின்ற . வேறுவேறு படுப்பதன் முன்னம் - உயிரையும் உடலையும் வேறுவேறாய்ப் பிரிப்பதன் முன்பாக . ஊறி ஊறி - அன்பு சுரந்து சுரந்து .

பண் :

பாடல் எண் : 6

கான மோடிக் கடிதெழு தூதுவர்
தான மோடு தலைபிடி யாமுனம்
ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார்
ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.

பொழிப்புரை :

இடுகாட்டிற்கு ஓடி , விரைந்து எழுந்த எம தூதுவர் இடத்தோடு தலையைப்பிடிப்பதற்கு முன்பே , பஞ்சகவ்வியம் ஆடுதலை உகந்த வாட்போக்கி இறைவர் , குற்றமற்றவர்க்கு உண்மையில் முன்னின்றருள்வர் .

குறிப்புரை :

கானம் ஓடி - இடுகாட்டுக்குச் சென்று . கடிது எழு - விரைந்து எழும் . தானமோடு தலைபிடியாமுனம் - நாம் வாழும் இடத்தின்கண் வந்து நம்முடைய தலைகளைப்பற்றி உயிர்கொண்டு போவதற்கு முன்பே . ஆனஞ்சாடி - பஞ்சகவ்விய அபிடேகம் கொண்டவன் . உகந்த - மகிழ்ந்து எழுந்தருளிய . ஊனம் - இருவினைக் குற்றம் . உண்மையில் நிற்பர் - உண்மையாகத் தோன்றி அருள்செய்வர் .

பண் :

பாடல் எண் : 7

பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார்
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.

பொழிப்புரை :

பார்த்துப் பாசம் பிடித்தெழுந்த எமதூதுவர் கூரிய வேலாற்குத்தி வருத்துவதன் முன்பே , ஆரவாரித்த கங்கையைச் சடையில் அடக்கும் வாட்போக்கி இறைவர் புகழ்த்தன்மைகளை உள்ளம் கிளர்ந்து உரைப்பீராக .

குறிப்புரை :

பார்த்து - வாழ்நாள்களைக் கணக்கிட்டுப்பார்த்து . பாசம் - கயிறு . கூர்த்தவேலால் - கூரிய சூலத்தால் . குமைப்பதன் முன் - அழிப்பதற்கு முன்பே . ஆர்த்த - ஆரவாரித்துவந்த . அடக்கும் - சடையின்கண் கொண்டு அதன் வேகத்தைக் குறைத்த . கீர்த்திமைகள் - புகழ்கள் . கிளர்ந்து - விரித்து .

பண் :

பாடல் எண் : 8

நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாட லுகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.

பொழிப்புரை :

எமனைச் சார்ந்தோராகிய தூதுவர் நாடிவந்து , நள்ளிருளில் தாம் பலராய்க் கூடிவந்து வருத்துவதன் முன்பே , ஆடல் பாடல் உகந்த வாட்போக்கி இறைவரை வாடி வழிபட நம்வாட்டம் தீரும் .

குறிப்புரை :

நாடி - தேடி . நமன்தமர் - எமதூதர் . நல்லிருள் - நல்ல நடு இரவில் . கூடிவந்து - சேர்ந்துவந்து . குமைப்பதன்முன் - நம் உயிரை வருத்திக்கொண்டு போகுமுன்னே . ஆடல் பாடல் உகந்த - ஆடுதல் பாடுதல் ஆகிய கலைகளில் விருப்பமுடைய . வாடி - வருந்திச் சென்றடைந்து . ஏத்த - தோத்திரிக்க . வாட்டம் - துன்பம் . தவிரும் - நீங்கும் .

பண் :

பாடல் எண் : 9

கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க்
கிட்ட மாகி இணையடி யேத்துமே.

பொழிப்புரை :

கட்டுக்களை அறுத்து விரைந்து எழுந்த எம தூதுவர்கள் புறப்படுவதற்கு முன்பே , எட்டுப் பூக்களைச் சூடும் வாட் போக்கி இறைவர்க்கு விருப்பம் உடையவராகித் திருவடி ஏத்துவீராக .

குறிப்புரை :

கட்டுஅறுத்து - நாம் இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டுள்ள பிணிப்பை நீக்கி . கடிதுஎழு - விரைவாய்ப் புறப்பட்டு வரும் . பொட்ட நூக்கிப் புறப்படாமுன்னம் - உயிரைக் கவரும் நோக்கோடு விரைந்து வருமுன் . அட்ட மாமலர் - எட்டுமலர்கள் . இட்டமாகி - விருப்பத்தை உடையவராகி . இணையடி - இரண்டு திருவடிகளை . ஏத்தும் - வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 10

இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.

பொழிப்புரை :

இரக்கமென்பதை முன்னும் அறியாது எழுந்த எமதூதுவர்கள் பரவிவந்து அழித்துப் பற்றிக்கொள்வதற்கு முன்பே , இராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் அவர்கட்கு அகப்படாமல் தம்மடியாரை ஒளிக்கவும் ஒளிப்பர் .

குறிப்புரை :

இரக்கம் முன்னறியாது எழு - இரக்கம் என்பதையே நம்முன் அறியாது வருகின்ற . பரக்கழித்து - இகழ்ந்து , பழித்து . பற்றுதல் முன்னமே - நம்மைப் பிடித்துக்கொண்டு போகுமுன்பாகவே . அரக்கன் - இராவணன் . கரப்பாரவர் தங்கட்குக் கரப்பதும் - கரப்பாரவர் தங்கட்கே கரப்பார் .
சிற்பி