திருமணஞ்சேரி


பண் :

பாடல் எண் : 1

பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறும்
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.

பொழிப்புரை :

பட்டமணிந்த நெற்றியினரும் , பாயும் புலியின் தோலை உடுத்தவரும் , நாள்தொறும் நட்டமாடி நின்று பாடுவோரும் , உயர்ந்தவர் வாழ்கின்ற திருவுடைய மணஞ்சேரியில் வட்டமாகிய வார்சடை உடைய எமது பெருமானுமாகிய இறைவர் வண்ணத்தை வாழ்த்துவீராக .

குறிப்புரை :

பட்டநெற்றியர் - பட்டமணிந்த நெற்றியினை உடையவர் . பாய்புலித்தோலினர் - பாய்கின்ற புலியினது தோலை அணிந்தவர் . நாடொறும் நட்டம் நின்று நவில்பவர் - நாள்தோறும் நின்று நடனம் இயற்றுபவர் . வட்டவார்சடை - வட்டமாகக் கட்டிய நீண்ட சடையினை உடையவர் . வண்ணம் - தன்மை .

பண் :

பாடல் எண் : 2

துன்னு வார்குழ லாளுமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின வோயுமே.

பொழிப்புரை :

நெருங்கிய நீண்ட கூந்தலை உடைய உமா தேவியோடு கூடியவரும் , பின்னிய நீண்ட சடைமேற் பிறையை வைத்தவரும் ஆகிய நிலைபெற்ற நீண்ட புகழை உடைய திருமணஞ் சேரியில் மருந்தாம் பெருமானை உள்ளத்தே உன்னுவார்களின் வினைகள் ஓயும் .

குறிப்புரை :

துன்னு - நெருங்கிய . வார் - நீண்ட . குழலாள் - கூந்தலை உடையவளாகிய . பின்னு - ஒன்றோடொன்று பின்னிய . மன்னுவார் - எழுந்தருளியவராகிய . மணஞ்சேரி மருந்தினை - திருமணஞ் சேரியில் எழுந்தருளிய மருந்து போல்வானை . உன்னுவார் - நினைப்பவர்கள் . வினையாயின - பழவினைகளானவை . ஓயும் - ஒழியும் .

பண் :

பாடல் எண் : 3

புற்றி லாடர வாட்டும் புனிதனார்
தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.

பொழிப்புரை :

புற்றிற் பொருந்திய அரவினை ஆட்டும் புனிதரும் , எல்லை மீறிய முப்புராதிகளின் கோட்டைகளைத் தீயெழச் சினந்தவரும் , சுற்றிலும் நெருங்கிய மதில் சூழ்ந்த மணஞ்சேரி உறைபவருமாகிய இறைவரைப் பற்றினார்க்கு அவர் பற்றாவர் ; காண்பீராக .

குறிப்புரை :

ஆடரவு - ஆடுகின்ற பாம்பு . ஆட்டும் - ஆடச்செய்யும் . புனிதனார் - தூயவர் . தெற்றினார் - உலகங்களையெல்லாம் அழித்து வந்தவராகிய ( திரிபுராரிகளின் ). புரம் - கோட்டைகளை . தீயெழ - நெருப்புப்பற்ற . செற்றவர் - அழித்தவர் . சுற்றினார் மதில் - சுற்றிலும் பொருந்திய மதில்கள் . பற்றினாரவர்பற்று அவர் - நிலையாகக் கொண்டவர்களுடைய பற்றுக்கோடு அவரே .

பண் :

பாடல் எண் : 4

மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை
முத்தர் முக்கணர் மூசர வம்மணி
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம்
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.

பொழிப்புரை :

ஊமத்தமலரும் , பிறையும் வளருஞ் சிவந்த சடையை உடைய முத்தி நாயகரும் , முக்குணங்களை உடையவரும் , ஒலிக்கும் அரவம் அணிந்த சித்தரும் , தீயின்வண்ணம் உடையவரும் , பெருமைமிக்க மணஞ்சேரியில் வித்தாயிருப்பாருமாகிய இறைவர் தம்மை விரும்பியவரைத் தாம் விரும்புபவர் ஆவர் .

குறிப்புரை :

மத்தம் - ஊமத்தமலர் . செஞ்சடைமுத்தர் - சிவந்த சடையினையுடைய முத்திக்குரியவர் . முக்கணர் - மூன்று கண்களை உடையவர் . மூசு அரவம் - உடலில் மொய்க்கும் பாம்பை ( அணிந்த ). தீவணர் - நெருப்புப்போன்ற சிவந்த நிறத்தை உடையவர் . வித்தர் - வித்தகர் ; அறிவே வடிவானவர் . விருப்பாரை விருப்பர் - தன்னை விரும்புவாரை விரும்புபவர் .

பண் :

பாடல் எண் : 5

துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்
அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம்
வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வாவதே.

பொழிப்புரை :

துள்ளும் மான்குட்டியையும் , தூய மழு வாளினையும் உடையவரும் , சடைமேற் கங்கையை மறைத்தவரும் ஆகிய சேறு நிறைந்த வயல் சூழ்ந்த மணஞ்சேரியில் உறையும் வள்ளலார் கழல்களை வாழ்த்தலே வாழ்வாவது .

குறிப்புரை :

துள்ளும் - துள்ளிச்செல்லும் . மான்மறி - மான்குட்டி . தூமழுவாள் - தூயமழுவாகிய வாள் . வெள்ளநீர் - வெள்ளமாக வந்த கங்கை நீரை . கரந்தார் - மறைத்துவைத்தார் . சடைமேல் அவர் எனப் பிரிக்க . அள்ளல்ஆர் - சேறு பொருந்திய . வாழ்த்தலே வாழ்வு ஆவது என்க .

பண் :

பாடல் எண் : 6

நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர்ப ரந்த உரகம் அணிபவர்
சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்
ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.

பொழிப்புரை :

கங்கைநீர் பரவி நிமிர்ந்து விளங்கும் சடையின் மேல் ஊர்ந்து பரவுகின்ற பாம்பினை அணிந்தவராகிய பெருமை பரவிய திருமணஞ்சேரி இறைவர் எழில் பெருகி விளங்கும் சூலப் படையினை உடையவர் .

குறிப்புரை :

நீர் பரந்த - கங்கைநீர் பரவிய . நிமிர் புன்சடை - நிமிர்ந்த மெல்லிய சடை . ` நீர் பரந்த நிமிர்புன்சடை மேலோர் நிலாவெண்மதி சூடி ` ( தி .1 ப .1 பா .3.) ஊர் பரந்த - ஊரின்கண் பரவி வந்த . உரகம் - பாம்பு . ஏர்பரந்த அங்கு - அழகு பெருகிய அவ்விடத்து . இலங்கு - விளங்கு . சூலத்தர் - சூலத்தை உடையவராய் எழுந்தருளியுள்ளார் .

பண் :

பாடல் எண் : 7

சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார்
விண்ணத் தம்மதி சூடிய வேதியர்
மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார்
வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.

பொழிப்புரை :

சுண்ணம் பூசியவரும் , சுட்ட வெண்ணீற்றினை உகந்து ஆடுபவரும் , விண்ணின் மதியைச் சூடிய வேதியரும் ஆகிய மார்ச்சனை பொருந்திய முழவு ஆர்க்கும் மணஞ்சேரி உறையும் இறைவர் , நிறம் உடைய முலையாளாகிய உமையின் வண்ணம் உடையவர் ஆவர் .

குறிப்புரை :

சுண்ணத்தர் - திருநீற்றுப்பொடி அணிந்தவர் . சுடுநீறு - சாம்பல் . உகந்து - மனமகிழ்ந்து . ஆடலார் - ஆடுபவர் . விண்ணத்து - ஆகாயத்தே உள்ள . அம்மதி - அழகிய சந்திரன் . மண்ணத்தம்முழவு - மார்ச்சனையிடப்பட்ட ஒலி பொருந்திய முழவு . வண்ணத்து அம்முலை - நல்ல நிறத்தோடு கூடிய அழகிய தனங்கள் . உமை வண்ணர் - உமையை ஒரு கூற்றிலே பொருந்திய தன்மையர் .

பண் :

பாடல் எண் : 8

துன்ன வாடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.

பொழிப்புரை :

பின்னிய நூலாடையினரும் , தூயமழு வாளினரும் , பின்னிய சிவந்த சடையின்மேல் பிறை வைத்தவரும் ஆகிய , நிலை பெற்ற நீண்ட பொழில்கள் சூழும் மணஞ்சேரி உறையும் மன்னனார் கழலே தொழ வாய்ப்பாவது .

குறிப்புரை :

துன்ன ஆடையர் - ஆடை உடுத்தியவர் . தூமழுவாளினர் - தூய மழுவாகிய வாளை உடையவர் . பின்னு - பின்னிய . மன்னு - நிலைபெற்ற . வார் - நீண்ட . மன்னனார் - தலைவனார் . கழலே - திருவடிகளையே . தொழ - வணங்க . வாய்க்கும் - நமக்கு வேண்டுவன எல்லாம் உண்டாகும் .

பண் :

பாடல் எண் : 9

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேரமண் கையர் புகழவே
மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்
அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

சித்தர்களும் , தேவர்களும் , திருமாலும் , நான்முகனும் , புத்தரும் , உடையற்றவராய சமண ஒழுக்கத்தினரும் புகழ , உலக மையலிற்பட்டவர் அறியாத மணஞ்சேரி மேவிய எம் தலைவரது அடியார்க்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

சேர் - புத்தமதத்தினரோடு சேர்ந்த . தேர் எனவும் பாடம் . அமண்கையர் - அமண ஒழுக்கத்தினை உடையவர் . மத்தர்தாம் அறியார் - சித்தர் , தேவர் , மால் , நான்முகன் முதலானோர் புகழவும் புத்தர் அமண்கையர் முதலான உன்மத்தர் அறியார் . மத்தர் தாம் - ஊமத்த மலர் அணிந்தவராய இறைவர் தம்மை . அல்லல் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

கடுத்த மேனி யரக்கன் கயிலையை
எடுத்த வன்னெடு நீண்முடி பத்திறப்
படுத்த லும்மணஞ் சேரி யருளெனக்
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.

பொழிப்புரை :

ஆற்றல் மிகுந்த இராவணன் திருக்கயிலையை எடுத்தபோது அவன் நீண்ட முடிகள் பத்தும் இற்றுவிழச்செய்தலும் , ` மணஞ்சேரி இறைவா ! அருள்வாயாக ` என்று அவன்கூவ அவனுக்கு வெற்றிதரும் வாளையும் , நாமத்தையும் கொடுத்தனன் பெருமான் .

குறிப்புரை :

கடுத்த - வெறுக்கத்தக்க . மேனி - உடல் . அரக்கன் - இராவணன் . நெடுநீண்முடி - மிகப்பெரிய நீண்ட திருமுடி . இற - நொறுங்க . படுத்தலும் - செய்தலும் . மணஞ்சேரி அருள் என - மணஞ்சேரி இறைவனே அருள்செய்வாய் என்று வேண்ட . கொற்றவாளொடு நாமம் - வெற்றிபொருந்திய சந்திரகாசம் என்ற வாளையும் இராவணன் என்ற திருப்பெயரையும் .
சிற்பி