திருமருகல்


பண் :

பாடல் எண் : 1

பெருக லாந்தவம் பேதைமை தீரலாம்
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோ ரானந்தம்
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.

பொழிப்புரை :

மருகல் இறைவன் திருவடி வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம் ; அறியாமை தீரலாம் ; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம் ; கடவுண்மயமாகிய ஒப்பற்ற பேரானந்தத்தைப் பருகலாம் .

குறிப்புரை :

தவம் பெருகலாம் - தவம் பெருகுதல் உண்டாகும் . வணங்கவே தவம் பெருகல் ஆகும் . சிந்தை திருத்தல் ஆகும் , பருகல் ஆகும் என்க . பேதைமை - அறியாமை . தீரலாம் - நீங்குதல் உண்டாகும் . திருகல் - மாறுபட்ட எண்ணம் . சிந்தை - மனம் . திருத்தலாம் - அம்மாறுபாட்டுத் தன்மையை நீக்கித் தூய்மை செய்யலாம் . பரமாயதோர் ஆனந்தம் பருகலாம் - மேலானதொரு இன்பத்தை உண்ணலாம் . மருகலில் எழுந்தருளிய இறைவன் திருவடிகளை வாழ்த்தி வணங்க இவை உண்டாகும் என்க .

பண் :

பாடல் எண் : 2

பாடங் கொள்பனு வல்திறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்திரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.

பொழிப்புரை :

பாடங்கொண்ட நூல் திறங்களையெல்லாம் கற்றுப்போய் நாட்டில் உள்ளன எல்லாம் பொருந்திய நாணமற்றீரே ! மாடங்கள் சூழ்ந்த மருகற் பெருமானின் திருவேடத்தைக் கைகளால் தொழுதால் வீட்டுலகமும் உமக்கு எளிதாகும் .

குறிப்புரை :

பாடங்கொள்பனுவல் திறம் - பல கலைப் பிரிவுப் பாடங்களைக்கொண்ட வேதம் முதலிய நூல்களின் தன்மையாய அபர ஞானம் . கற்றுப்போய் - கற்றுச்சென்று . நாடங்குள்ளன - பல நாடுகளிலும் சென்று . தட்டிய - பொருந்திய . நாணிலீர் - பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் பிரானடி பேணாதொழிந்தமையால் வெட்கமில்லாதோரே . மாடஞ் சூழ் - மாடவீடுகள் சூழ்ந்த . மருகற்பெருமான் - திருமருகலில் எழுந்தருளிய பெருமானது . திருவேடம் - அழகிய தோற்றத்தை .

பண் :

பாடல் எண் : 3

சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை
அனைத்து நீங்கிநின் றாதர வாய்மிக
மனத்தி னால்மரு கற்பெரு மான்திறம்
நினைப்பி னார்க்கில்லை நீள்நில வாழ்க்கையே.

பொழிப்புரை :

கோபத்தினால் வருகின்ற செய்யப்படுவதான தொழில்களாகிய பிற தீச்செயல்கள் அனைத்தையும் நீங்கி நின்று ஆதரவாகி உள்ளத்தினால் மருகல் பெருமானாகிய இறைவன் திறத்தை நினைப்பவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை .

குறிப்புரை :

சினத்தினால் - கோபம் முதலியவைகளினால் . வரும் - உண்டாகும் . செய்தொழிலாமவை அனைத்தும் - தீக்குணங்களால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் . மிக ஆதரவாய் - மிக்க அன்பாய் . திறம் - தன்மை . நினைப்பார்க்கு - நினைப்பவர்களுக்கு . நீள் நில வாழ்க்கை இல்லை - வீடு பேற்றின்கண் வாழ்தல் உண்டாம் .

பண் :

பாடல் எண் : 4

ஓது பைங்கிளிக் கொண்பா லமுதூட்டிப்
பாது காத்துப் பலபல கற்பித்து
மாது தான்மரு கற்பெரு மானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

பொழிப்புரை :

இப்பெண் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைக்கு ஒள்ளிய பால் அமுது ஊட்டிப் பின் அதனைப் பாதுகாத்துப் பலபல வார்த்தைகளை அதற்குக் கற்பித்து மருகற் பெருமானுக்குத் தூது சொல்லிவிடத் தொடங்குகின்றாள் .

குறிப்புரை :

ஓது - சொன்னது கேட்டுப் பதிகங்களையும் வேதங்களையும் பேசுகின்ற . பைங்கிளிக்கு - பச்சைக்கிளிக்கு . ஒண்பால் அமுது ஊட்டி - சிறந்த பால் உணவை உண்பித்து . அட்டி எனவும் பாடம் , பாதுகாத்து - அதைப் பறந்து போகாமலும் இறந்து போகாமலும் பேணி . மாதுதான் - மருகற்பெருமான்மேல் காதல்கொண்ட ஒரு பெண் . தான் இரண்டும் அசை .

பண் :

பாடல் எண் : 5

இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு கற்பெரு மான்திறம்
உன்னி யொண்கொடி யுள்ள முருகுமே.

பொழிப்புரை :

நிலைபெற்ற அழகிய மருகல் இறைவன் திறமே நினைந்து இப்பெண் கொடியாளாகிய தலைவி உள்ளம் உருகுகின்றாள் ; நெருங்கிய கைவளைகள் சோர நின்று கண்ணீர் மல்குகின்றாள் ; இதனைத் தீர்ப்பது இன்ன வழி உண்டு என்பது அறியேனாயினேன் யான் .

குறிப்புரை :

செவிலி கூற்று . இன்னவாறு என்பது - இன்ன தன்மையினால் ( இப்பெண் கைவளை சோரக் கண்ணீர் சொரிதலாகிய ) இது நிகழ்ந்தது என்பது . உண்டு - ஓர் காரணம் இருக்கிறது . அறியேன் - அது இன்னது என்பதை நான் அறியாதவளாயிருக்கிறேன் . இன்று - இற்றைய நாள் . துன்னு - நெருங்கிய . கைவளை - கையின்கண் அணிந்த வளையல்கள் . சோர - கழன்றுவிழ . கண்நீர் மல்கும் - கண்களில் நீர் துளிர்ப்பாள் ( இத் தலைவி ). மன்னு - நிலைபெற்ற . தென் - காவிரியின் தென்கரைத் திசையில் உளதாய அல்லது அழகிய . திறம் - தன்மைகளை . உன்னி - எண்ணி . ஒண் கொடி - சிறந்தகொடி போன்றவளாகிய தலைவி . உள்ளம் - மனம் .

பண் :

பாடல் எண் : 6

சங்கு சோரக் கலையுஞ் சரியவே
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும்
அங்க வீதி யருகணை யாநிற்கும்
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.

பொழிப்புரை :

பெண்களே ! தன் சங்கு வளையல்கள் நெகிழவும் , உடை சரியவும் இம்மங்கைதான் , மருகல் இறைவன் திருவீதியுலா வருகின்ற அங்க வீதியின் அருகு நாளும் அணைந்து நிற்பாள் ; நான் இதற்கு என்னசெய்வேன் ?

குறிப்புரை :

சங்கு - சங்கினால் அறுத்துச்செய்த வளையல்கள் . சோர - கழன்றுவிழ . கலை - ஆடை . சரிய - இடையினின்றும் அவிழ . மங்கை - மருகற்பெருமான் மேல் காதல் கொண்ட அம்மங்கை . வரும் - உலாவரும் . அங்கவீதி - பிரதானத்திருவீதி . அருகு - சமீபத்தில் . அணையாநிற்கும் - நெருங்கிவரும் . நாளும் - நாடோறும் . ஏ , அசை . நங்கைமீர் - தோழியர்களே .

பண் :

பாடல் எண் : 7

காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.

பொழிப்புரை :

என் பெண் மாட்சிகள் நிறைந்த மருகற்பெரு மானுக்கு மனம் தாழும் விருப்பம் மிகவும் உண்டாயினள் ; அவனைக் காணும் காட்சியைப் பெற்றிலள் ஆயினும் காதலினின்று மீளுகைக்கு ஒன்றும் அறியாதவள் ஆகி அவ்விருப்பமே மிகுந்தது .

குறிப்புரை :

காட்சி பெற்றிலளாயினும் - கண்களால் காணும் வாய்ப்பைப் பெறாவிட்டாலும் . காதல் - ஆசை . ஏ , அசை . மீட்சி ஒன்றறியாது - மீளும் வழி ஒன்றையும் அறியாமல் . மிகுவதே - பெருகுகின்றதே . மாட்சி - நற்குண நற்செயல்கள் ; உடையவர் வாழும் மருகல் என்க . மாட்சியாராகிய மருகற்பெருமான் எனலுமாம் . தாழ்ச்சி - விருப்பம் . சால உண்டாகும் - பெரிதும் உண்டாகும் . என்தையல் - என் பெண் .

பண் :

பாடல் எண் : 8

நீடு நெஞ்சுள் நினைந்துகண் நீர்மல்கும்
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
மாடம் நீள்மரு கற்பெரு மான்வரில்
கூடு நீயென்று கூட லிழைக்குமே.

பொழிப்புரை :

நெஞ்சுக்குள் நீள நினைந்து கண்ணீர் மல்கி ஓடும் மயக்கத்தினோடு இவ்வொண் தொடியணிந்த பெண் , மாடங்கள் நீண்டுயர்ந்த மருகல் இறைவன் வரின் நீ கூடு என்று கூடல் இழைத்து வருந்துவாள் .

குறிப்புரை :

நெஞ்சுள் நீடு நினைந்து என மாறுக . நெஞ்சுள் - மனத்தினுள் . நீடு - நெடிதாக . கண் நீர் மல்கும் - கண்களிலிருந்து நீரைச்சிந்தும் . ஓடும் - நீங்கத்தகும் . மாலினோடு - மயக்கத்தோடு . ஒண்கொடி - ஒள்ளிய கொடி போன்ற . மாதராள் - தலைவி . மாடம் நீள் - மாடவீடுகள் நீண்டுள்ள . மருகற்பெருமான் வரில் - திருமருகலில் எழுந்தருளிய என் காதலனாகிய பெருமான் என்னைத் தேடி வருவானேயானால் , நீ கூடு - நீ கூடுவாயாக . கூடலிழைக்கும் - கண்ணை மூடிக்கொண்டு தான் எண்ணிய காரியம் பலிக்குமா என்பதை அறிய வட்டமிட்டுப் பார்த்து . அக்கூடல் முனை இரண்டும் கூடின் பலிதம் என அறிவது , ` ஆழிதிருத்திச் சுழிக்கணக்கோதி ` ( தி .8 திருக்கோவையார் 186).

பண் :

பாடல் எண் : 9

கந்த வார்குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.

பொழிப்புரை :

மணம் வீசும் நீண்ட கூந்தலை முடியாதவளாய் இப்பெண் , மால்விடையோடும் மிக்க அன்பாய் ` மருகற்பெருமானே ! வந்திடாய் !` என்று சிந்தித்து வாராமையாற் பின்னும் திகைப்பாள் ; காண்பீராக .

குறிப்புரை :

கந்தம் - மணம் பொருந்திய . வார் - நீண்ட . குழல் - கூந்தல் . கட்டிலள் - முடித்தாளில்லை . காரிகை - தலைவி . அந்தி - அந்திப்பொழுதின்கண் . மால் விடையோடும் - திருமாலாகிய இடபத்தோடும் . அன்பாய் - காதலாய் . வந்திடாய் - வருவாயாக . மருகற்பெருமானே வந்திடாய் என்று என்க . சிந்தைசெய்து - மனத்தினால் எண்ணி . திகைத்திடும் - திகைப்பெய்தி நிற்கும் .

பண் :

பாடல் எண் : 10

ஆதி மாமலை யன்றெடுத் தானிற்றுச்
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு கற்பெரு மான்திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கு மும்பரே.

பொழிப்புரை :

ஆதியிற்றோன்றிய திருக்கயிலாயத் திரு மலையினை அன்று எடுத்தவனாகிய இராவணன் தலை இற்றுச் ` சோதியே ` என்று கூறுதலும் , பழைய அருள் புரிந்திடும் ஆதியானாகிய மருகற்பெருமான் திறத்தையே ஓதி வாழ்பவர் தேவர்க்கும் தேவராவர் .

குறிப்புரை :

ஆதி - முதன்மையான. மாமலை - பெருமைக்குரிய திருமலை. அன்றெடுத்தான் - தான் வாகீசராய் வலம்வந்த அக் காலத்துத் தூக்கியவன். இற்று - அங்கங்கள் நெரிந்து. சோதி - ஒளி வடிவானவனே. உம்பர்க்கும் உம்பர் - தேவர்களால் வணங்கப்படும் தேவர்.
சிற்பி