பொது


பண் :

பாடல் எண் : 1

ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை யோடும் உடுத்தது
ஒன்று வெண்தலை யேந்தியெம் உள்ளத்தே
ஒன்றி நின்றங் குறையு மொருவனே.

பொழிப்புரை :

வெண்தலை ஒன்று ஏந்தி எம் உள்ளத்தே ஒன்றிநின்று அங்கு உறையும் ஒருவனாம் இறைவன் வெண் பிறையாகிய கண்ணி ஒன்று உடையவன் ; உமையோடும் உடுத்தது ஒரு கிழிந்த கோவண உடை .

குறிப்புரை :

கண்ணி - தலைமாலை . வெண்பிறையாகிய தலை மாலை ஒன்று . இடையிலணிந்தது ஓர் கோவணம் என்க . ஒன்று - பொருந்திய . கீள் - கோவணத்தொடு சேர்த்துக் கட்டப்படும் அரை நாண்துணி . உமையொடு கூடியவனாயிருந்தும் உடுத்தது கோவணத் தொடு கூடிய கீள் ஒன்றே என்க . வெண்தலை ஒன்றை என ஐயுருபு விரிக்க . ஒன்றி - பொருந்தி . ஏந்தி உள்ளத்து உறையும் ஒருவன் ஒன்றாகிய வெண்பிறைக் கண்ணியுடன் உடுத்தது ஓர் கோவணம் ஒன்றிய கீள் என வினை முடிவு காண்க .

பண் :

பாடல் எண் : 2

இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில்
இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள்
இரண்டு மில்லிள மானெமை யாளுகந்
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.

பொழிப்புரை :

அவர்க்கு உள்ளனவாகிச் செய்யுந்தொழில்கள் இரண்டு ; அவர்க்கு உள்ளனவாகிய கோலங்கள் இரண்டு ; எமை ஆளாகக்கொண்டு உகந்து இரவும் பகலும் என் சிந்தையுள் தங்கியிருக்கும் .

குறிப்புரை :

அவர்க்கு - அப்பெருமானுக்கு . உள்ளன - இயல்பாக உள்ளனவாகிய . செய்தொழில் - செய்தொழில்கள் . இரண்டு - பந்தம் , வீடு . உயிர்கட்குப் பந்தம் வீடு என்றவற்றைச் செய்தல் . கோலங்கள் இரண்டு - சிவம் , சக்தி . இல் இளமான் - கங்கையும் , உமையுமாகிய மனைவியர் இருவர் . இரண்டு போது - நினைப்பு மறப்பு ; பெத்தம் முத்தி ; பகல் இரவு .

பண் :

பாடல் எண் : 3

மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழின் மூன்றினன்
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.

பொழிப்புரை :

மும்மூர்த்திகளுள் நின்று இயலுகின்ற தொழில் மூன்றும் உடையவன் ; மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவன் ; மூன்று கண்ணினன் ; தீத்தொழில் மூன்றுடையவன் ; மூன்றுபொழுதும் என் சிந்தையுள் மூழ்கியிருப்பான் .

குறிப்புரை :

மூன்று மூர்த்தி - அரி , அயன் , அரன் . மூர்த்தியுள் நின்று - மூவரை அதிட்டித்து நின்று . இயலும் - செய்விக்கும் . தொழில் மூன்று - படைத்தல் , காத்தல் , அழித்தல் . மூவிலைச் சூலம் - முத்தொழிலுக்கும் தானே முதல்வனாம் அடையாளம் ; ` மூவிலை ஒருதாட் சூல மேந்துதல் மூவரும் யானென மொழிந்தவாறே ` ( ஒற்றி - ஒருபா ஒருபஃது . 5.11.12) மூன்று கண் - சூரியன் , சந்திரன் , அக்கினி . தீத் தொழில் - வேள்வி . ` தொலையா நிதிய மெய்தித் தந்தையைத் தீத் தொழில் மூட்டியகோன் ` ( தி .11 ஆளுடைய பிள் . திருவந் . 85) தீத்தொழில் மூன்று - ஆகவனீயம் , காருக பத்யம் , தாக்ஷிணாக்கினி என்ற மூவேள்விகள் . மூன்றுபோது - முற்பகல் , நண்பகல் , பிற்பகல் . ` முட்டாத முச்சந்தி ` ` சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்திறைஞ்சு `. ( தேவாரம் .)

பண் :

பாடல் எண் : 4

நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம்
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி
நாலு போலெம் அகத்துறை நாதனே.

பொழிப்புரை :

எம் உள்ளத்து உறையும் இறைவன் நான்கின் மேலும் ஒருமிகைமுகமாகிய பிரமனது ஐந்தாவது முகத்தைச் சினந்தவன் ; நிலைபெற்ற ஆல நிழலில் நன்கு உணர்ந்திட்ட வேதங்கள் நான்கினை உடையவன் ; இன்பமாகிய நான்கு வேதங்களையே குதிரைகளாகக் கொண்டவன் ; நல்ல நெறி சரியை முதலிய நான்கு ஆகும் .

குறிப்புரை :

நாலின்மேல் முகம் - பிரமனது நான்கு முகங்களுக்கும் அதிகமாய் நின்ற ஐந்தாம் முகம் . செற்றது - கிள்ளியழித்தது . மன்நிழல் - கல்லாலின்கீழ் மன்னிய நிழல் . நன்கு உணர்ந்திட்டது நாலும் - நன்கு உணரும்படிசெய்தது அறம் , பொருள் , இன்பம் , வீடாகிய புருஷார்த்தங்கள் நான்குமாம் . இன்பமாம் நாலுவேதம் - பேரின்பத்திற்கு வாயிலாகிய நான்கு வேதங்கள் ; இருக்கு , யசுர் , சாமம் , அதர்வணம் . சரித்தது - ஓதியருளியது . வேதம் உணர்த்திட்டது எனவும் சரித்தது நாலு நன்னெறி எனவும் கூட்டலாம் . நன்னெறி நாலு - சரியை , கிரியை , யோக , ஞானங்கள் . போல் அசை .

பண் :

பாடல் எண் : 5

அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை
அஞ்சு போலரை யார்த்ததின் தத்துவம்
அஞ்சு மஞ்சுமோ ரோரஞ்சு மாயவன்
அஞ்சு மாமெம் அகத்துறை யாதியே.

பொழிப்புரை :

என் அகத்து உறை ஆதி . ஆனைந்து ஆடி . ஐந்தொழில் நடனம் ஆடி . இடையில் ஐந்தலை அரவார்த்தவன் அவன் . தத்துவங்களாகிய இருபத்தைந்தின் கூறானவன் .

குறிப்புரை :

அஞ்சும் அஞ்சும் - ஐந்து வகையான பசுக்களிலிருந்து உண்டாம் ஐந்து பொருள்களையும் . அஞ்சும் ஆடி - பஞ்சகவ்வியங்கள் ஐந்தையும் அபிஷேகம் கொண்டு . ஓர் அஞ்சும் - ஒப்பற்ற ஐந்தொழில்களையும் . ஆடி - கூத்தின் தத்துவங்களாய் அமைய ஆடி . ` ஐந்து கொலாம் அவர் ஆடினதாமே ` ( தி .4. ப .18. பா .5). அஞ்சுபோல் அரை ஆர்த்த - அரையில் கட்டியது ஐந்தலையரவு என்பதாம் . ` அஞ்சு கொலாம் அவர் ஆடரவின்படம் ` ( தி .4. ப .18. பா .5). அஞ்சும் அஞ்சும் ஓர் ஓர் அஞ்சும் ஆயவன் - ஐம்பூதங்கள் , ஐந்து தன் மாத்திரைகள் , ஞானேந்திரியங்கள் ஐந்து . கன்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இருபது தத்துவங்கள் . அஞ்சுமாம் - ஐம்புலன்களும் ஆகும் .

பண் :

பாடல் எண் : 6

ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்
ஆறு போலெம் அகத்துறை யாதியே.

பொழிப்புரை :

எம் உள்ளத்துறையும் முதல்வனாகிய பெருமான் , ஆறு கால்களையுடைய வண்டு ஒலிக்கும் கொன்றையை உடையவன் ; கங்கையாற்றைச் சடையிற் சூடிய அண்டங்களுக்கெல்லாம் முதல்வன் ; கூரிய அறிவுடைய அறுவகைச் சமயத்தார்க்கு அச்சமயப் பொருளும் நெறியும் ஆயவன் .

குறிப்புரை :

ஆறுகால்வண்டு - ஆறுகால்களையுடைய வண்டு . மூசிய - மொய்த்த . ஆறு - கங்கை . ஆறு கூர்மையர் - கூரிய அறிவைத் தருகின்ற ஆறு சாத்திரம் . சமயப்பொருள் ஆறு - ஆறு சமயத்தவர் பொருள்போல் இருப்பவன் . ` அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் ` ( சிவஞானசித்தி - சுபக்கம் .1)

பண் :

பாடல் எண் : 7

ஏழு மாமலை யேழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.

பொழிப்புரை :

ஏழுமலை ஏழுபுவனம் ஏழ்கடல் போற்றும் இராவணனது ஏழிசைகேட்டு அருள்செய்தவன் . அவன் திருவடிகள் எழுபிறவிகளிலும் என்னுள்ளத்தின்கண்ணே உள்ளன .

குறிப்புரை :

ஏழுமாமலை - கயிலை தவிர்ந்த ஏழுமலைகள் . பொழில் - தீவு . கடல் ஏழு - பாற்கடல் முதலியன . நரம்பு ஏழு - ஏழு ( சப்த ) சுரங்கள் . ஏழும் சூழ் - ஏழ்பிறப்பிலும் .

பண் :

பாடல் எண் : 8

எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்
எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை
எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே
எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.

பொழிப்புரை :

அட்டமூர்த்தியாய்த் தொழில் செய்பவன் . எண் குணன் . எம் இறைவனாயுள்ள அவ்வெட்டுமூர்த்தி என்னுள்ளத்து எட்டும் மூர்த்தியாய் ஒடுங்கியிருப்பன் .

குறிப்புரை :

எட்டுமூர்த்தி - இறைவனது அட்டமூர்த்தவடிவம் . ஐம் பூதம் , சூரியன் , சந்திரன் , ஆன்மா . எட்டு வான்குணம் - தன்வயத்தனாதல் முதலிய எட்டு உயரிய குணம் . எட்டுமூர்த்தி - நிலம் முதலியவற்றிற்குரிய தேவர்கள் . அவ்வெட்டு மூர்த்தி என்றே பின்னும் கொள்க .

பண் :

பாடல் எண் : 9

ஒன்ப தொன்பதி யானை யொளிகளி
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.

பொழிப்புரை :

எண்பத்தொரு பதங்களில் பேசப்படுபவன் . பதினெண் சிவகணங்கள் அல்லது எண்பத்தொரு யானைகள் சூழப் பெற்றவன் . உடலிடத்துள்ள ஒன்பது வாயிலும் தீத்தொழிலிற் சேராதவாறு ஒன்பது ஒத்து எனக்குள் ஒடுங்குவான் .

குறிப்புரை :

ஒன்பது களிறு - திசையானைகள் எட்டும் அயிராவணமும் ஆகிய ஒன்பது யானை . ஒன்பது யானை - அவற்றிற்குரிய பிடிகள் . ஒளிகளி எனவும் பாடம் . ஒன்பது ஒன்பது பல்கணம் - பதிணென் சிவகணங்கள் . ஒன்பதாமவை தீத்தொழில் - ஒன்பது வகையான வேள்விகள் . ஒத்து - ஒன்பது வாசல்களும் ஒத்து . சி . கே . எஸ் . அவர்கள் கூறும் விரிவுரை பின்வருவன : ` உரை ஒன்பதொத்து நின்று என்னுள் ஒடுங்கும் என் பேச்சுக்கள் முதலிய எல்லாம் எவ்வளவு விரிந்து சூழினும் முடிவில் நான் என்ற அகங்கார நிலையினவாய் வந்து என்னையே சுற்றி என்னகத்தொடுங்கும் அது ஒன்பது என்னும் எண்ணினைப் போல ; இஃதெவ்வாறெனில் ஒன்பதை எதனால் எத்தனை பெருக்கினும் பெருக்கிவந்த எண்ணில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் ஒன்பதே வருவதுபோல . 9x2=18=1+8=9 9x3=27=2+7=9 9x4=36=3+6=9 9x5=45=4+5=9 9x6=54=5+4=9 9x7=63=6+3=9 9x8=72=7+2=9 9x9=81=8+1=9 மேலும் 9x144=1296=1+2+9+6=18=1+8=9 என்றிவ்வாறு கண்டுகொள்க . ஒன்பது என்ற எண் ஒன்று இரண்டு முதலிய ஏனை எண்களைப்போலத் தனக்கென்று ஒரு தனிப்பெயரில்லாமல் பின் வரும் பத்து என்பதில் ஒன்று குறைந்தால் எதுவோ அது என்றறியப்படுமாறு பெயர்கொண்டிருத்தல் பின்வரும் பாகமாகிய உலகமும் முன்னிற்கும் பதியுமல்லாதது என்றறியப்பட்டும் தனித்து நில்லாது பதியினையோ அன்றிப் பாசத்தையோ சார்ந்து நிற்றலுமான நிலையின் உள்ள உயிரை ஒத்திருக்கின்றதென்பதும் கடிகார யந்திரங்களிலும் ஒன்பதைக் குறிக்க ( IX என்ற X ல் I குறைக்க என்ற பொருள்பட ) IX என்ற குறியீடு கொள்வதும் பிறவும் இங்குக் காணத்தக்கன .`

பண் :

பாடல் எண் : 10

பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்
பத்து நூறவன் பல்சடை தோள்மிசை
பத்தி யாமில மாதலின் ஞானத்தால்
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.

பொழிப்புரை :

அளவற்ற பெருமையன் . சிவகணங்கள் பல்லாயிரவரை உடையவன் . அடியவர் உள்ளங்களையே தங்குமிடமாகக் கொண்டவன் .

குறிப்புரை :

பத்து நூறவன் - பத்து என்றும் நூறென்றும் கூறும்படிப் பல பொருளாயுள்ளவன்; பத்தியான். பத்து என்றும் நூறு என்றும் சொல்லும் சிலவும் பலவுமாய சடைகளையுடையவன் ஆயிரம் என்றலுமாம். அடியவர்க்கு உள்ள பத்து இலக்கணங்கள் (உபதேச காண்டம் பார்க்க). பள்ளி - உள்ளத்தை. பத்தியான் - பத்தி வலையிற் படுவானாய இறைவன். இடங்கொண்டது - தமக்குரிய இடமாகக் கொண்டது. ஞானத்தால் - என் அறியாமையை உணர்ந்து அருளியதால்.
சிற்பி