பொது


பண் :

பாடல் எண் : 1

காச னைக்கன லைக்கதிர் மாமணித்
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்
மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம்
ஈச னையினி யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

காசு உடையவனும் , கனல் உடையவனும் , ஒளிச்சுடர்விடும் செம்மணி விளக்கம் உடையவனுமாகிய பெருமானைச் சில தெளிவற்ற மூடர்கள் புகழார் . குற்றத்தினைக் கழித்து ஆட்கொள்ளவல்ல எம் இறைவனை இனி நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?.

குறிப்புரை :

காசனை - விடக்கறையாகிய மாசினை உடையவனை ; பொற்காசு போல்பவன் எனினுமாம் . தேசு - ஒளி . தெண்ணர் - கீழோர் . தெளிந்த அறிவில்லாதவர்கள் . மாசினைக் கழித்து - குற்றம் நீக்கி . மறக்கிற்பனே - மறப்பேனோ .

பண் :

பாடல் எண் : 2

புந்திக் குவிளக் காய புராணனைச்
சந்திக் கண்நட மாடுஞ் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே.

பொழிப்புரை :

புத்திக்கு விளக்காக உள்ள மிகப்பழமையனும் , நடம் ஆடும் சதுரப்பாடு உடையவனும் , அந்திச்செவ்வண்ணம் உடையவனும் , நிறைந்த அழல்கொண்ட மூர்த்தியும் , வந்து என்னுள்ளம் கொண்டவனுமாகிய பெருமானை மறப்பேனோ?

குறிப்புரை :

புந்திக்கு - அறிவுக்கு . புராணன் - பழையவன் . சந்தி - இரவு . சதுரன் - சதுரப்பாடுடையன் . அந்தி வண்ணன் - செம் மேனியன் . ஆரழல்மூர்த்தி - அரிய நெருப்பின் வடிவமாயவன் . வந்து என் உள்ளம் கொண்டானை - தோன்றி என் மனத்தை இடமாக் கொண்டவனை . மறப்பனே - மறப்பேனோ ?

பண் :

பாடல் எண் : 3

ஈச னீசனென் றென்று மரற்றுவன்
ஈசன் தானென் மனத்திற் பிரிவிலன்
ஈசன் தன்னையு மென்மனத் துக்கொண்டு
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

ஈசன் ஈசன் என்றும் வாய்விட்டு அரற்றுவேன் ; ஈசன் என் மனத்தில் பிரிவில்லாதவனாய் உள்ளான் - ஈசனையும் என் மனத்துக்கொண்டபின் , தன்னை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

என்றும் - எப்பொழுதும் . அரற்றுவன் - சொல்லிக் கொண்டிருப்பேன் . பிரிவிலன் - நீங்காது எழுந்தருளியிருப்பவன் . மறக்கிற்பனே - மறப்பேனோ ?

பண் :

பாடல் எண் : 4

ஈச னென்னை யறிந்த தறிந்தனன்
ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால்
ஈசன் சேவடி யேத்தப்பெற் றேனினி
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

இறைவன் சேவடிகளை ஏத்தப் பெறும் இயல்பினன் ஆதலால் என்னை இறைவன் அறிந்ததை யான் அறிந்தேன் ; பிறகும் அவன் சேவடியை ஏத்தப்பெற்றேன் ; ஆதலின் இனி ஈசனை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

என்னை அறிந்தது - என்னைத்தெரிந்து திருவருள் பாலித்ததை . அறிந்தனன் - நானும் அறிந்தேன் . சேவடி - திருவடிகளை . ஏற்றப்பெறுதலால் - என் உள்ளத்தில் ஏற்றிக் கொண்டிருத்தலால் . ஏத்தப்பெற்றேன் - துதிக்கப்பெற்றேன் .

பண் :

பாடல் எண் : 5

தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

தேனும் , பாலும் போல்வானும் , சந்திரனும் சூரியனும் போல்வானும் , வானத்தின்கண் வெண்மதியினைச் சூடிய வீரனும் , இளவேனிலுக்குரியவனாகிய மன்மதனைத் தீயழலால் மெலியச் செய்தவனுமாகிய ஞானக் கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

மெலிவுசெய் - எரித்தழித்த . தீயழல் ஞான மூர்த்தியை - நெருப்பின் வடிவமாய் விளங்கும் அறிவுத்தெய்வத்தை .

பண் :

பாடல் எண் : 6

கன்ன லைக்கரும் பூறிய தேறலை
மின்ன னைமின் னனைய உருவனைப்
பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய
என்ன னையினி யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

கன்னலும் , கரும்பின் ஊறிய சாற்றுத் தெளிவு போல்வானும் , ஒளியை உடையவனும் , மின்னலைப் போன்ற உருவம் உடையவனும் , பொன்போலும் மேனியினனும் ஆகிய மாணிக்கக் குன்றுபோல் விளங்கும் என்னை உடையானை , இனியான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

கன்னலை - கரும்பை . கரும்பூறிய கன்னலை . தேறலை - கரும்பினிடத்தே ஊறிய சாற்றை . தேறலை - தேனை . மின்னனை - மின்னல் வடிவாயிருப்பவனை . மின்னனைய உருவனை - மின்னல் போன்ற ஒளிவடிவினனை . பொன்னனை - பொன் போன்றவனை . மணிக்குன்று பிறங்கிய - சிறந்த மாணிக்க மலையாய் விளங்கிய . என்னனை - என்னுடைய பொருளாயுள்ளவனை .

பண் :

பாடல் எண் : 7

கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச்
சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர்
விரும்பு மீசனை யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

கரும்பும் கட்டியும் போல்வானும் , வண்டுகள் சூழும் நறுமண மலர்களை அணிந்த சுடர்விடும் ஒளிக்குள் ஒளி ஆகியவனும் , அரும்புகளிற் பெரிய போதுகளைக் கொண்டு ஆய்மலரால் விரும்பும் இறைவனுமாகிய பெருமானை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

கட்டி - கரும்பின் கட்டியாகிய வெல்லம் . கந்த மாமலர்ச் சுரும்பு - மணங்கமழும் மனத்தாமரை மலரின் அன்புத் தேனை நுகரும் வண்டு . சுடர்ச்சோதியுட் சோதி - விளங்கும் ஒளிக்குள் ஒளியாய்த் திகழ்பவன் . அரும்பினில்பெரும்போது கொண்டு - அரும்புகளாக இருக்கும்போதே மலராவதன் முன்பே எடுக்கப்பட்ட பெரிய மலர்களை ஏற்றுக்கொண்டு . ஆய்மலர் விரும்பும் - அழகிய உள்ளத் தாமரைமலரை விரும்பும் .

பண் :

பாடல் எண் : 8

துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை
வஞ்ச னேனினி நான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

உறங்கும் போதும் சுடர்விடும் சோதியும் , நெஞ்சத்துக்குள் நிலைத்து நின்று நினைக்கவைக்கும் நீதியும் , ஆலகாலவிடத்தைத் திருக்கழுத்துள் அடக்கிய நம்பனுமாகிய பெருமானை வஞ்சனை உடைய யான் இனி மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

துஞ்சும்போதும் - உறங்கும்பொழுதும் . சுடர்விடு சோதியை - உள்ளத்தில் ஒளிவிடும் விளக்கை . நெஞ்சுள் நின்று - மனத்தில் எழுந்தருளியிருந்து . நினைப்பிக்கும் - என் செயலன்றி அவன் செயலாய்ப் பல்வகை நினைப்புக்களையும் உண்டாக்கும் . நீதியை - நீதியின் வடிவானவனை .

பண் :

பாடல் எண் : 9

புதிய பூவினை புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான் மறக் கிற்பனே.

பொழிப்புரை :

புதிய பூவும் , புண்ணியநாதனும் , செல்வமும் , நீதியும் , முத்துக்குன்றும் , அடைந்தோர்க்குக் கதியும் , மதியும் , மைந்தனும் ஆகிய திருநீலகண்டமுடைய கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

புதிய - அன்றலர்ந்த . நிதியை - பெறுதற்கரிய செல்வத்தை . நித்திலக் குன்றினை - திருநீற்றுப்பூச்சால் முத்துமலையை ஒப்ப வீற்றிருப்பவனை . கதியை - வீடுபேறான நற்கதியின் வடிவாயிருப்பவனை . மதியை - ஞான வடிவினனை .

பண் :

பாடல் எண் : 10

கருகு கார்முகில் போல்வதொர் கண்டனை
உருவ நோக்கியை யூழி முதல்வனைப்
பருகு பாலனைப் பால்மதி சூடியை
மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

கருமை உடைய கார்முகில் போல்வதாகிய ஒப்பற்ற திருநீலகண்டனும் , அழகுடைய நோக்கு இயைந்த ஊழிக் காலத்தும் உள்ள முதல்வனும் , பருகுதற்குரிய பால் போன்ற வெண் மதியைச் சூடியவனும் , அன்பால் நினைவாரை மருவுகின்ற மைந்தனுமாகிய பெருமானை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

கருகு - கருகிய . கார்முகில் - கார்காலத்து மேகம் . உருவ நோக்கியை - உலகம் உருப்பெற்று உண்டாம்படி நோக்கியவனை . ஊழிமுதல்வனை - ஊழிக்காலத்தும் அழியாத முதற்கடவுளை . பருகு - பருகுகின்ற . பாலனை - பாலாயிருப்பவனை . அல்லது பாலனைய என்று விரிக்க . மருவும் - நம்முள்ளத்தே வந்து பொருந்தும் .
சிற்பி