பொது


பண் :

பாடல் எண் : 1

நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத்
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

திருநீறு நன்கு பூசப்பெற்ற ஒப்பற்ற மேனியையும், ஓங்கிய சடையில் கங்கையாறு அலைவீச நின்று ஆடும் அமுதமும், தேனும் அதன் தெளிவும் அத்தெளிவுவாய்த்த ஊறல் போல்வானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.

குறிப்புரை :

நீறலைத்ததோர் மேனி - திருநீறு நிரம்பப்பூசிய திருமேனி. நிமிர்சடை - கட்டி உயர்ந்த சடை. ஆறு அலைக்க - கங்கையாறு அலைவீச. அமுது - அமுதம் போன்றவன், தேறல் - தேன். தெளிவு - தேனின் தெளிவு. தெளிவாய்த்ததோர் - தெளிதல் பொருந்தியதொரு. ஊறல் - ஊறிய தெளிந்த நீர்.

பண் :

பாடல் எண் : 2

பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச்
சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்
எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

பொந்துபோல்வதாகிய உடலிற்புகுந்து அதன் கட்டினை நீக்கப் புகுந்திடும் தந்தையும், தீப்போன்ற மேனியை உடையவனும், என் சிந்தையாக உள்ளவனும், தெளிவாகவும் அத்தெளிவு வாய்த்த எந்தையும் ஆகி நின்ற பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

பொந்தை - பொய். புக்குநீக்க - முயன்றுநீக்க. பொந்தையை - பொய்யாகிய உடலின்கண். புக்கு - புகுந்து. நீக்கப் புகுத்திடும் - நாமே அவனை நீக்கவும் நீங்கானாய் உடலில் சென்று புகும். தழல் - நெருப்பு. எந்தை - என்தந்தை.

பண் :

பாடல் எண் : 3

வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்
கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின்
றுள்ளத் தில்லொளி யைக் கண்ட துள்ளமே.

பொழிப்புரை :

இன்ப வெள்ளத்தாராகிய விஞ்சையர்கள் விரும்பும்படி கங்கைவெள்ளத்தைச் சடையில்வைத்த மேலோரை மனம் கள்ளத்தை நீங்க உள்ளம் ஒன்றியிருந்து உள்ளத்தில் ஒளியாகக் கண்டது.

குறிப்புரை :

வெள்ளத்தார் - வெள்ளம்போல நிறைந்த கருணையை உடையவர். விஞ்சையார்கள் விரும்ப - வித்தியாதரர்கள் விரும்ப. வெள்ளத்தை - கங்கையை, கள்ளத்தைக் கழிய - ஆணவம் நீங்க.

பண் :

பாடல் எண் : 4

அம்மா னையமு தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழும்
செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

அம்மானை, அமுதே! இன்னமுதே! என்று தத்துவத்தை அறிந்த அடியார் தொழும் நம் தலைவனும் செம்மையாகிய பெருமை மிக்க நிறம்போல்வதாகிச் சிந்தையுள் இருக்கும் எம்மானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.

குறிப்புரை :

அம்மானை - தலைவனை. அமுதின் அமுதே. அமுதத்தினும் மேலான அமுதம் போன்றவனே. தம்மானை - தனக்குத் தானே தலைவனை. தத்துவத்து அடியார் - தத்துவங்களை அறிந்த அடியவர்கள். செம்மானநிறம் - செம்மையான நிறம்.

பண் :

பாடல் எண் : 5

கூறே றும்உமை பாகமோர் பாலராய்
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை யேந்திப் பலவி(ல்)லம்
ஏறே றுமெந்தை யைக்கண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

கூறாகப் பொருந்தி உமையொரு பாகராகிக், கங்கை ஏறிய சடைமேற் பிறை சூடியவராய், பருந்துகள் ஏறிப்பறக்கும் வெண்டலை ஏந்திப் பல இல்லங்கள் தோறும் இடபம் ஏறிவரும் எந்தையை என் உள்ளம் கண்டு கொண்டது.

குறிப்புரை :

கூறுஏறும் - உடம்பில் ஒரு பாதியில் பொருந்தும். பாறு ஏறும் தலையேந்தி - இடுகாட்டுள் பொருந்திய மண்டையோட்டை ஏந்தி. ஏறுஏறும் - இடபத்தில் ஏறும்.

பண் :

பாடல் எண் : 6

முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
தந்நெஞ் சந்தமக் குத்தாமி லாதவர்
வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரே
என்னெஞ் சிலீச னைக்கண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

தம் நெஞ்சம் தமக்குத்தாம் இல்லாத சிலர், முன்னுதற்குரிய நெஞ்சம் இல்லாமல் மூர்க்கராய் வாழ்ந்து சாகின்றார்; வன்மையுடைய நெஞ்சத்தை நீங்க வல்லமை உடையவர்களே! என் நெஞ்சில் ஈசனை என்னுள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

முன் - நினைக்கும். நெஞ்சமின்றி - மனத்தின் கண் இரக்கமின்றி. மூர்க்கராய் - கொடியவராய், சாகின்றார் - இறந்து படுகின்றார்கள். தன்நெஞ்சம் தமக்குத்தாம் இலாதவர் - தன்நெஞ்சினாலாகும் நன்மைகளைத் தாமேதேடிக்கொள்ளாதவர். வன்னெஞ்சம் - கொடியமனம். நீங்குதல்வல்லீரே - நீக்கிக் கொள்ளுதலில் வல்லவர்களே.

பண் :

பாடல் எண் : 7

வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

புலன்கள் ஐந்தும் வென்றவனும் என் தீய வினைகளைக் கொன்றவனும், குணத்தால் வணங்கிட நன்றாக நல்ல மனத்தில் வைக்கும் ஞானம் என்னும் ஒப்பற்ற பொருளை உடையானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

புலனைந்தும் வென்றானை என்க. குணத்தாலே வணங்கிட - நற்குணங்களினால் வணங்க. நன்றா நன் மனம் - நன்றாகிய நல்ல மனத்தின்கண். ஞானம்வைத்திடும் - அறிவொளியை உண்டாக்கித் தரும். ஒன்றானை - ஒரு வடிவாய் விளங்குபவனை. ஞானமாகிய ஒன்றினால் அறியப்படுபவனை.

பண் :

பாடல் எண் : 8

மருவி னைமட நெஞ்சம் மனம்புகும்
குருவி னைக்குணத் தாலே வணங்கிடும்
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

அறிவற்ற மடநெஞ்சமே! மனம்புகும் குரு நாதனும், குணத்தால் வணங்கத்தக்க திருவும் ஆகிய பெருமானைப் பொருந்தினாய்; சிந்தையுள் சிவனாய்நின்ற உருவினை என்னுள்ளம் கண்டு கொண்டது.

குறிப்புரை :

மருவினை - மருவினையையாய். மடநெஞ்சமே - அறிவற்ற மனமே. குணத்தாலே - நற்குணங்களினாலே. திருவினை - செல்வவடிவாய் உள்ளவனை. உரு - முன்னர் மறைந்து நின்று பின்னர் நினைப்பில் உருவெளிப்பாடுபெற்ற நிலை.

பண் :

பாடல் எண் : 9

தேச னைத்திரு மால்பிர மன்செயும்
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

ஒளி உடையவனும், திருமாலும், பிரமனும் செய்யும் பூசனைகள் பொருந்தினால் அங்குப் பொருந்துகின்ற விருப்பம் உடையவனும், நெஞ்சுக்குள் நிறைவாகி நின்ற ஈசனுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

தேசு - ஒளி. பூசனைபுணரில் - வழிபாடு கூடினால் புணர்வாயதோர் - நம்மோடு கலந்து நிற்பதொரு. நேசன் - அன்பன்.

பண் :

பாடல் எண் : 10

வெறுத்தா னைம்புல னும்பிர மன்தலை
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
கறுத்தா னைக்கா லினில்விர லொன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

ஐம்புலன்களை வெறுத்தவனும், பிரமன் தலையினை அறுத்தவனும், இராவணன் திருக்கயிலாயத்தின் மேற்சினந்த போது காலினில் திருவிரல் ஒன்றினால் ஒறுத்தவனும் ஆகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

ஐம்புலனும் வெறுத்தான் என்க. கறுத்தானை - சினந்தவனாகிய இராவணனை. ஒறுத்தானை - தண்டித்தவனை.
சிற்பி