கோயில்


பண் :

பாடல் எண் : 1

மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்குமிட மறியார் சால நாளார்
தருமபுரத் துள்ளார் தக்க ளூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

பொலிவு தரும் வெண்ணீறு அணிந்து, பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வர, நம்பெருமானார் வானத்தில் உள்ள சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ச்சியை உடைய பெருந்தெருக்களை உடைய மயிலாப்பூர், மருகல், கொங்குநாட்டுக் கொடுமுடி, குற்றாலம், குடமூக்கு, கொள்ளம்பூதூர், தருமபுரம், தக்களூர் என்ற திருத்தலங்களில் பல நாள் தங்கி, தாம் உறுதியாகத் தங்கும் இடமாகப் பிறவற்றை அறியாராய், தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கி விட்டார்.

குறிப்புரை :

மாடவீதி - பெருந்தெரு. அஃது உயர்ந்த மேல் மாடங்களை இருமருங்கும் உடையதாய் இருத்தல் இயல்பாதலின், அப்பெயராற் கூறப்படும். மயிலாப்பு - மயிலாப்பூர். இது தொண்டை நாட்டில் (சென்னையில்) உள்ளது. உமையம்மை மயில் உருவாய் இருந்து வழிபட்டது. `ஆப்பு` தறியாகலின், பிணிப்புண்ட இடம் என்னும் கருத்துடையதாம். கொடுமுடி கொங்கு நாட்டுத் தலம். குடமூக்கு, `கும்பகோணம்` என வழங்கப்படுகின்றது. மருகல், கொள்ளம்பூதூர், தருமபுரம் சோழநாட்டுத் தலங்கள். தக்களூர், வைப்புத்தலம். தங்குமிடம் அறியார் என்பதனை முதற்கண்வைத்து எச்சப்படுத்து, ``உள்ளார்`` முதலிய வினைக்குறிப்புக்களிலெல்லாம், `ஆயினார்` என்பதனையும், `அதன் பின்பு` என்பதனையும் முறையானே விரித்து, `புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்` என முடிக்க. ``தங்கும் இடம் அறியாராய்`` என்றருளியது, `தமக்கு ஏற்ற இடம் தேடு வாராய்` என்னும் பொருளையுடையது. `சிற்றம்பலமே` என்னும் ஏகாரம், பிரிநிலை. `வேதமும்` என்பதில் உயிரெதுகை வந்தது. `தாம்` என்பது அசைநிலை. அவ்விடத்துள்ள ஏகாரம் ஈற்றசை. `எம்பெருமானார்` என்னும் எழுவாய் வருவித்துரைக்க. இவை எல்லாம் மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும். மங்குல் - மேகம். மதி - சந்திரன்.

பண் :

பாடல் எண் : 2

நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுதெலாம் பாசூர்த் தங்கிப்
பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்விப் புகையும் ஓவா
விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளு மானார்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

ஐம்புல இன்பப் பொருள்களும் மெய்ப்பொருளும் ஆகிய, பாம்பினை இடையிலே கட்டிய, நம்மால் விரும்பப்படும் இறைவர் நனிபள்ளி, நல்லூர் இவற்றில் தங்கி ஓர் இராப்பொழுது முழுதும் பாசூரில் தங்கிப் பன்னிருநாள் பரிதிநியமத்திலும் ஏழு நாள் வேதமும் வேள்விப் புகையும் நீங்காத நீர்வளம் மிக்க திருவீழிமிழலையிலும் உகந்திருந்து, இந்நாளில் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கிவிட்டார்.

குறிப்புரை :

நனிபள்ளி, நல்லூர், பரிதிநியமம், மிழலை (வீழிமிழலை) சோழ நாட்டுத்தலங்கள். பாசூர், தொண்டைநாட்டுத் தலம். பாகப் பொழுது-பாதிநாள்; இரவு. `பன்னிருநாள், பரிதி நியமத்தாராய்` என்க. `பன்னிருநாள் எழுநாள்` என்றாற்போலக்கால அளவை அருளியது, அவ்வத் தலங்களின் சிறப்பினைப் புலப்படுத்தற் பொருட்டு. மேலைத் திருத்தாண்டகத்திற், `சால நாளார்` என்றருளியதும் அது. சுவாமிகள் திருமொழியுள் தோன்றியவாறே கொள்வதன்றி, அத்தலங்களின் பெருமை அளவிற்குக் காரணங்காண நாம் வல்லோமல்லோம். அரைக்கு, `அரையின்கண்` என உருபுமயக்கம். போகம்-ஐம்புல இன்பப் பொருள். பொய்யாப் பொருள்-மெய்ப் பொருள். ``போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்`` என்பதனை ``நாகம் அரைக்கசைத்த நம்பர்`` என்பதன் பின்னும், `இந்நாள்` என்பதனை `எழுநாள் தங்கி` என்பதன் பின்னும் கூட்டுக. `பன்னிரு நாள்` என, இருமாச்சீர்க்கு ஈடாக ஒரு விளங்காய்ச் சீர் சிறுபான்மை வந்தது.

பண் :

பாடல் எண் : 3

துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலும்
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும்
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

உலகவருக்கு ஒழுக்கத்தை அறிவித்து, ஒரு காலத்தில் சனகர் முதலிய அந்தணர் நால்வருக்கு வேதத்தின் விழுமிய பொருளை அருளிச்செய்த சிவபெருமான் நிலையில்லாப் பொருள்களில் பற்றறுத்தலாகிய ஞானத்தை அறிவித்து, மெய்ந்நூற் பொருள்கள் அனைத்தையும் அருளினார். களங்கமற்ற பிறைமதியையும் பாம்பினையும் அணிகலனாக உடையார், தம் வீரத்தை வெளிப்படுத்தி மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தார். மந்திரங்களும் அவற்றை முறையாகப் பயன்படுத்தும் செயல்களும் தாமேயாக உள்ளார். அப்பெருமான் இந்நாள் தாமே உகந்து தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.

குறிப்புரை :

`மண` என்னும் வினைமுதனிலை விகுதி அம்மின் அகரங்கெட்டு, `மணம்` என வருதல்போல, `துற` என்னும் வினை முதனிலை `துறம்` என வந்தது. எனவே, துறவு என்பது அதன் பொருளாயிற்று. அது, ஞானத்தின்மேலதாம். `எல்லாம்` என்றருளியது, `மெய்ந்நூற் பொருள்கள் அனைத்தையும்` என்றருளியவாறாம். `போலும்` என்பன உரையசைகள்.
தந்திரம் - கடவுள் வழிபாட்டு முறையைக் கூறும் நூல் (கிரியா பாதம்). அறம் - ஒழுக்கம். அந்தணர் நால்வராவர்; அவரைச் சனகர் முதலிய நால்வராகவும் கூறுவர். `அரனார்` என்னும் எழுவாயை முதற்கண் வைத்து, அதனை, `விரித்தார்` முதலிய நான்கனோடும் முடித்து, `அவர்` எனச் சுட்டுப் பெயர் வருவித்து முடிக்க. அறம் அருளிச்செய்தமை, எல்லாம் விரித்தமை முதலியவற்றை எடுத்தோதியருளியது, அவரது பெருமையை வியந்தவாறு. மேலும் இவ்வாறு வருவனவற்றை உணர்ந்துகொள்க. புறங்காட்டில் எரியின்கண் ஆடல், உலகம் யாவும் இறுதி எய்தும் காலத்து, அவ்விறுதியால் தான் தாக்குண்ணாது நிற்றலைக் குறிக்கும். மறம் - வீரம். புறங்காடு -சுடுகாடு.

பண் :

பாடல் எண் : 4

வாரேறு வனமுலையாள் பாக மாக
மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய திருத்தனங்களை உடைய பார்வதி தம் உடம்பில் ஒரு பகுதியாக அமைய, மழுப்படையைக் கையில் தாங்கிச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தி, விடக்கறை தங்கிய கழுத்தினராய், மன்மதனை வெகுண்ட கண் விளங்கும் நெற்றியினராய்க் கடலில் தோன்றிய விடத்தைத்தாம் உண்டு, உலகைப் பாதுகாத்த பெருமானார், சிறப்புமிக்க குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டதும், நீர் வெள்ளத்தை எல்லையாக உடையதுமாகிய திருவாஞ்சியம், திருநள்ளாறு இவற்றை உகந்தருளின திருத்தலங்களாக உடையவராய், பகைவரோடு போரிடும் காளையை வாகனமாகக் கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவரத் தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.

குறிப்புரை :

வாள்-படைக்கலம். திருவாஞ்சியம், திருநள்ளாறு சோழநாட்டுத் தலங்கள். `கண்டத்தார்` முதலிய மூன்றனையும் முதற் கண் வைத்து உரைக்க. வார் - கச்சு. வனம் - அழகு. ஓதம் - அலை.

பண் :

பாடல் எண் : 5

காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
ஊரா ரிடுபிச்சை கொண்டு ழல்லும்
உத்தமராய் நின்ற ஒருவ னார்தாம்
சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
திருவாரூர்த் திருமூலட் டான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

தம் சிறப்பு நிறைந்த திருவடிகளை வணங்கும் தேவர்களுக்கும் தலைவராகிய சிவபெருமானார் கார்காலத்தில் மணம் வீசும் கொன்றைப் பூவாலாகிய முடிமாலையைச் சூடி, மண்டை யோட்டைக் கையில் ஏந்தி, பூதகணங்கள் தம் பெருமையைப் பாட, ஊரிலுள்ளார் வழங்கும் பிச்சையை உணவாகக் கொண்டு திரிகின்ற மேம்பட்டவராய்க் காட்சி வழங்கும் ஒப்பற்றவராய், திருவாரூர்த் திருமூலத்தானத்தில் விரும்பித் தங்கிப் பின் போர் செய்யும் காளை மீது இவர்ந்து பூதங்கள் தம்மைச் சுற்றிவரத் தில்லைச்சிற்றம்பலத்தில் புகுந்தார்.

குறிப்புரை :

கார் ஆர் கொன்றை - கார்ப்பருவத்து நிரம்பப் பூக்கும் கொன்றை. பலவகைக் கொன்றைகளில் `கார்க் கொன்றை` என்பதே சிவபிரானுக்குச் சிறப்பாக உரியது. இதனை, ``கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் - வண்ண மார்பின் தாருங்கொன்றை`` (புறம் - கடவுள் வாழ்த்து), ``கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்`` (அகம் - கடவுள் வாழ்த்து) என்னும் பழந்தமிழ்ப் பாடல்களாலும்.
``ஆர்க்கின்ற நீரும் அனலும் புனலும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குட னாகிக் கலந்தனவே.``
என்னும் பதினொன்றாந் திருமுறையாலும் (தி.11 பொன்வண்ணத் தந்தாதி - 50) அறியலாம். கண்ணி - முடியில் அணியும் மாலை. கபாலம் - தலை ஓடு. `ஒருவன்` என்பது சிவபிரானுக்கே உரிய ஒரு சிறப்புப் பெயர். பிச்சை ஏற்றல், துறவியாதற் கேற்பக் கொண்டதென்க. ``கழல் வணங்கும் தேவ தேவர்`` என்பதில் ``வணங்கும்`` என்பது, முதற்கண் நின்ற `தேவர்` என்பதனோடு முடிந்தது. இனி, ``வணங்கும்`` என்பதனை வணங்கப்படும் என்னும் பொருளுடையதாகக் கொண்டு, `தேவ தேவர்` என்பதனோடே முடித்தலும் ஆம். தேவ தேவர் - தேவர்க்கெல்லாம் தேவர். இதுவே இறைவற்குரிய சிறப்புப் பெயராகத் திருவாசகத்து அருளிச்செய்யப்பட்டது. அதனை, ``ஆதி மூர்த்திகட் கருள்புரிந்தருளிய - தேவதேவன் திருப்பெயராகவும்`` (தி.8 கீர்த்தித் திருவகவல் - 121-22) என்புழிக் காண்க. இப்பெயரே திருத்தசாங்கத்துள், `தேவர்பிரான்` என்றருளப்பட்டதென்க. `மகாதேவன், பெரியோன், நெடியோன்` என வருவனவும் இப்பெயர்பற்றி என்க. `திருமூலட்டானம் மேயாராய்ப் (பின்பு) விடை ஏறிப் பூதஞ்சூழப் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்` என்க. `கொண்டு ழல்லும்` என்னும் விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 6

காதார் குழையினர் கட்டங் கத்தர்
கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
முதலும் இறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று
வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாள்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

ஆண்டில் மூத்த ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒல் உறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் என்ற ஐவகையராய செவிலித்தாயரும், நற்றாயும் தந்தையும் இல்லாதவராய், உலகிற்கு முதலாயும் முடிவாயும் உள்ளவர் தாமேயாய்க் காதில் குழை அணிந்து கட்டங்கம் என்ற படைக்கலத்தை ஏந்திக் கயிலாய மலையிலும், காரோணப் பதிகளிலும், உகந்தருளியிருக்கும் சிவபெருமான் அழகிய பெண் இனத்தார் மகிழுமாறு பார்வதியின் திருமணத்துக்கு முற்பட்ட காலத்திலே மன்மதனுடைய உடம்பினை அழித்தவராய், இந்நாளில் பூக்கள் நிறைந்த தம் சடைகள் தொங்கவும், பூதங்கள் சூழவும், தில்லைச் சிற்றம்பலத்தில் புகுந்தார்.

குறிப்புரை :

`மூதாயர் மூதாதை` உம்மைத்தொகை; `மூத்த தாயரும் மூத்த தந்தையும்` எனப் பொருள்தரும். முதல் - தோற்றம். இறுதி - ஒடுக்கம்; இவ்விரண்டும் காரியவாகுபெயர்களாய்த் தத்தம் காரணங்களைக் குறித்தன. `உலகிற்கு முதலாயும் முடிவாயும் உள்ளவன் ஒருவனேயன்றி, வேறுவேறு உளர் அல்லர்` என அறிவுறுத்தவாறு. ``ஆதியந்தமாயினாய்`` (தி.3. ப.52. பா.7.) எனவும். ``ஆதியுமந்தமுமாயினாருக்கு`` எனவும் அருளியனகாண்க. (தி.8 திருவாசகம், திருப்பொற்சுண்ணம் - 20) `மாது ஆய` - அழகாகிய. `மாதர்` என்பது வாளா பெயராய் நின்றது. தலைவரது பிரிவின்கண் தம்மைத் துன்பத்திற் குள்ளாக்குவோன் மதவேளாகலின், அவனைக் காய்தல் மாதர்க்கு மகிழ்ச்சியாவதாயிற்று என்க. போது ஆர் - பூக்கள் நிறைந்த. ``கயிலாய மாமலையார் காரோணத்தார், இந்நாள் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்`` என்க. `காரோணம்` என்பதும், `மயானம்` என்றல் போல்வது. இப்பெயருடைய கோயில்கள் சில தலங்களில் உள்ளன. திருமாலும் பிரமனும் ஒருசேரத் துஞ்சும் நாளில், அவரது காயங்களை மேலே எடுத்து நின்று ஆடல்புரிந்த இடமென்னும் காரணத்தால் `காயாரோகணம்` எனப்பட்டவை, `காரோணம்` என மரூஉ வழக்காக வழங்கப்படும். காயாரோகண வரலாற்றைக் காஞ்சிப் புராணம் காயாரோகணப் படலத்துட் காண்க. கட்டங்கம் - மழு.

பண் :

பாடல் எண் : 7

இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்
பெரியார்தம் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

தம்மை மறந்தவர் மனத்தில் என்றும் விரும்பித் தங்காதவராய்த் திருமறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மழுப் படையை உடைய பெருமான் உலகியலில் நின்று வாழ்நாள் இறுதி வந்துழி இறந்தவர். யோகம் முதலியவற்றால் நீண்ட நாள் இறவாது இருந்தவர். தேவர்கள் ஆகிய எல்லோருக்கும் தாமே துணையாய், உலகில் பிறப்பெடுப்பவருக்கும் என்றும் பிறப்பெடுக்கும் நிலையைக் கடந்து வீடுபெற்றவருக்கும் தலைவராய்த் தம் பெருமையையே அவர்கள் என்றும் பேசுமாறு அவர் மனத்துள் என்றும் நிலைபெற்று, பின்புறமாக நீண்டு தொங்கும் சடையை உடையவராய்ப் பூதம் சூழத்தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.

குறிப்புரை :

இறந்தார் - உலகியலின் நின்று. நாள்வந்துழி இறந்தவர். இறவாதார் - யோகம் முதலியவற்றால் நெடிதுநாள் இறவாதிருந்தவர். ஏகமாய் நிற்றல் - இவர் எல்லார்க்கும் தாமே துணையாய் நிற்றல். `ஏகமாய் நின்று` என்னும் எச்சம், `பெரியார்` என்னும் வினைக் குறிப்போடு முடிந்தது. பிறந்தார் - கட்டுற்று நின்றவர். பிறவாதார் - வீடு பெற்றார்; இவர் எல்லார்க்கும் தலைவன் இறைவன் என்க. `பேச` என்புழியும் `அவர் மனத்து என்றும் ` என்பது இயையும். `பேச` என்பது `மறந்தார்` என்புழியும் இயையும். மறைக்காடு - வேதாரணியம். `பெரியான்றன்` என்பது பாடமன்று. புறம் தாழ் சடை - பின் புறமாக நீண்டு தொங்கும் சடை; `இது பிறரை வணங்காது நிற்றலைக் குறிக்கும்` என்பர் சிலர். ``தாழ`` எனப் பின்னர்க் கூறியது, அப்பொழுது நிகழ்ந்ததை; `புறந்தார்` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 8

குலாவெண் தலைமாலை யென்பு பூண்டு
குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கையோ டனலேந்திக் காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
நிறைவயல்சூழ் நெய்த்தானம் மேய செல்வர்
புலால்வெண் தலையேந்திப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

ஒளி விளங்கும் வெண் மதியம் தீண்டுமாறு உயர்ந்த மாடங்களை உடையதாய் மற்ற இடம் எங்கும் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திரு நெய்த்தானத்தை உகந்தருளிய பெருமான் வளைந்த வெண்தலைமாலை, எலும்புகள் இவற்றை அணிந்து குளிர்ந்த கொன்றைப் பூ மாலையை மார்பில் சூடி, கொல்லுதலில் வல்ல காளையை இவர்ந்து, உடம்பை ஒட்டிக் கொடிய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து உடம்பை மறைத்துக் கொண்டு, கைகளில் மண்டை ஓட்டினையும் தீயையும் ஏந்திச் சுடுகாட்டில் தங்கும் இயல்பினர். அவர், புலால் நாற்றம் கமழும் வெள்ளிய மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பூதங்கள் சூழத் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்தார்.

குறிப்புரை :

குலாவுதல் - வளைதல்; விளங்குதலுமாம். கொல் ஏறு- கொல்லும் இடபம், ` கொல்`, இன அடை.
கலாவுதல் - கலத்தல். `ஓடு` உருபை, கண்ணுருபாகத் திரிக்க. நிலா - சந்திரனது ஒளி. உரிஞ்ச - உராய; தவழ.

பண் :

பாடல் எண் : 9

சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரரைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லா
மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்றப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

கோவணம் அணிந்து வெள்ளிய பூணூல் தரித்தவராய் எல்லோருக்கும் இன்பம் செய்யும் பெருமானைக் கண்டீரோ என்று முக்கணான் முயக்கம் வேட்ட தலைவி தன்பால் அன்புடைய அயலாரை வினவினாள். கட்டியிருந்த வெண்ணிறக் காளையைக் கட்டவிழ்த்து அது விரைந்து செல்லுமாறு அதன் மீது தாவி ஏறி, மண்டை ஓட்டில் எதனையோ ஏந்திக்கொண்டு அழகிய ஆரூரிலே அந்தி நேரத்தில் எங்கள் வெள்வளைகளைத் தாம் முழுமையாய்க் கைக்கொள்வதற்காக நின்று, இந்நாளில் அழகிய தீப்போன்ற ஒளி விளக்குக்களைப் பூதங்கள் ஏந்தி வரத் தில்லைச் சிற்றம்பலத்தில் தாம் விரும்பியவாறு புகுந்தார்.

குறிப்புரை :

சந்தித்த - கூடிய; `சங்கரன்` என்பது பாடம் அன்று. `சங்கரரைக் கண்டீரோ கண்டோம்` என்பதனை ஈற்றிற்கூட்டி, `அச் சங்கரரை` எனச் சுட்டு வருவித்துரைக்க.
இனி, `இந்நாள்` என்பது முதல், `கண்டோம்` என்றாரிடம் கூறுவனவாக வைத்து, கிடந்த வாறே உரைத்தலும் ஆம். சங்கரர் - இன்பத்தைச்செய்பவர். `கண்டீரோ` என்பது, காதல்கொண்டவளது வினாவும், `கண்டோம்` என்பது கண்டோரது விடையும் என்க. `இந்நாள்` என்பது, `ஏறி` என்பது முதலியவற்றோடு இயையும். பந்தித்த - கட்டிய. என் வெள்வளையும் தாமுமாய் மணி யாரூர் நின்று என்க. `எல்லாம்` என்புழி, `எல்லாவற்றையும்` என உருபு விரித்து, அதனை, `அந்தி கொள்ளக் கொள்ள` என்பதனோடு முடிக்க.
அந்தி - மாலைக்காலம். கொள்ள - கவர; இது, `கொள்ளும் பொழுது` எனக் காலம் உணர்த்தி நின்றது. அடுக்கு, பன்மை குறித்தது. பொன் தீ மணி விளக்கு - அழகிய தீப்போலும் மணியாகிய விளக்கு. இனஎதுகை பற்றி, `பொற் றீ` என்பது மெலிந்து நின்றது. `என்கொலோ` என்றது, வெறுப்புப்பற்றி.

பண் :

பாடல் எண் : 10

பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்
பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம்
வேதங்க ளோதிஓர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழு பிறப்புக்களிலும் நம்மை அடியவராகக் கொள்ளும் சிவபெருமான் தம் திருவடிகளைச் சான்றோர்கள் முன்னின்று வழிபட்டுத் துதிக்கப் பக்தியால் அவருடைய உகப்பிற்காகவே தொண்டு செய்யும் அடியார் களுடைய துன்பங்கள் நீங்குமாறு திருத்தலங்களில் உகந்தருளி யுள்ளார். வீணையைக் கையில் ஏந்தி வேதங்களை ஓதிக் கொண்டு காளை மீது இவர்ந்து புலித்தோலை இடையில் கட்டிய அவ்வேத கீதர் பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வரத் தில்லைச் சிற்றம்பலத்தைத் தாமே விரும்பிச் சேர்ந்தார்.

குறிப்புரை :

`பத்திமை` என்புழி, `மை` பகுதிப்பொருள் விகுதி. `வேத கீதராய்` என ஆக்கம் வருவித்துரைக்க. ``ஏத்தி`` என்பதும் பாடம். ஏதங்கள் - துன்பங்கள். வீக்கி - கட்டி.

பண் :

பாடல் எண் : 11

பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத்
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.

பொழிப்புரை :

இடையில் பட்டை உடுத்தி அதனைப் பாம்பு ஒன்றினால் இறுக்கிக் கொண்டு மேலே யானைத் தோலைப் போர்த்துப் பெருமான் பூதங்கள் தம்மைச் சூழத் தீயைக் கையில் ஏந்தி ஆடற் கலையில் வல்லவராய் உள்ளார். அவர் இந்நாள் தில்லைச் சிற்றம்பலத்திலேயே ஒளிவீசும் சூலப்படை ஏந்தி, பூணூல் அணிந்து, வீணையை எழீஇ வேதம் ஓதி, ஒருகையில் கட்டங்கம் என்ற படையை ஏந்தி விடக்கறை பொருந்திய கழுத்தினராய் மண்டை ஓட்டினை ஏந்தியவராய் உள்ள காட்சியை எல்லீரும் சென்று காண்மின்கள்.

குறிப்புரை :

`பாம்பு` என்றது, உடையின்மேல் கச்சாக உள்ளதனை. `நட்டம் செய்வார்` என இயையும். `செல்வார்` என்பது பாடம் அன்று. `கண்டோம் இந்நாள்` என்பதன் பின்னர், (கண்ட) `கறைசேர் மிடற்றெங் கபாலியார்க்கு` என்றுரைக்க. `உண்டு` என்பது, `சூலம்` என்பதனோடும் இயையும். இத்திருத்தாண்டகம், இறுதிக்கண், தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவர் வெளிப்பட்டு நின்றருளுதலைக் கண்டு, அதனைப் பிறருங் காணுமாறு அருளிச் செய்ததாம். `தில்லையைக் காணமுத்தி` என்னும் வழக்குண்மையையும் நினைக்க. காண வேண்டினார்க்கு அடையாளம் அருளுவார்போல் அருளிச் செய்தது. அவை இறைவனுக்கேயுரிய சிறப்படையாளமாதலையும், அவ்வடையாளங்களை ஓர்ந்துணர்வார்க்கு இறையுணர்வு பெருகு மாற்றினையும் நினைந்தருளியென்க. பின்னும் இவ்வாறு அருளிச் செய்வன உள; அவற்றை ஆண்டாண்டு உணர்க. ஆர்த்து - கட்டி. பகவன் - `ஐசுவரியம், வீரம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்` என்னும் ஆறு குணங்களையுடையவன். பாரிடம் - பூதகணம். சிட்டர் - மேலானவர். விட்டு - ஒளி விட்டு.
சிற்பி