திருஅதிகை வீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

வெறிவிரவு கூவிளநல் தொங்க லானை
வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் தன்னை
அதியரைய மங்கை யமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் கெடில நதிக்கரையிலுள்ள எம் பெருமான் நறுமணம் கமழும் வில்வ மாலை அணிந்தவன் . அதிகை வீரட்டத்தில் உகந்தருளியிருப்பவன் . இடபவாகனன் . ஆதிசேடனாகவும் , கருடவாகனத் திருமாலாகவும் பொன் நிறமுடைய பிரமனாகவும் அவருள் உடனாய் இருந்து அவரைச் செயற்படுப்பவன் . பொருள்சேர் புகழுக்குத் தக்கவன் . உணர்ந்தார்க்கும் உணர்வரிய சிறப்பினை உடைய தலைவன் . அதியரைய மங்கை என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன் . அத்தகைய பெருமானை அறிவிலியாகிய யான் என் வாழ்க்கையின் முற்பகுதியில் வழிபடாது பழித்துக் கூறிய செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

வெறி - வாசனை . கூவிள - கூவிளம் = வில்வம் . தொங்கல் - மாலை . பொறி அரவு - ( படத்தில் ) புள்ளிகளை உடைய பாம்பு . புள் ஊர்தியான் - திருமால் . பொன் நிறத்தினான் - பிரமன் . சிவபிரானை இவ்விருவராகவும் அருளிச்செய்தது . காத்தல் படைத்தல் என்னும் அவற்றைச் செய்தும் , செய்வித்தும் நிற்றல்பற்றி . ` செய்தல் தூய உலகங்களிடத்து ` என்றும் , ` செய்வித்தல் தூயவல்லாத உலகங்களிடத்து என்றும் ` அறிக . ` ஒரு விண்முதல் பூதலம் - ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் - படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை ` ( தி .1. ப .128. திருவெழுகூற்றிருக்கை .) என்றருளியதும் இக் கருத்துப் பற்றி . இனி அவ்விடத்து , ` இருவரோடொருவ னாயினானை ` ( தி .1. ப .128.) என்றருளிச்செய்தது , ` இருவர்க்கும் முன்னோனாய் நின்று அவரைத் தோற்றுவித்துப் பின்னர் , அவரோடு ஒப்பவைத்து ` மூவர் ` என்று எண்ணுமாறு நின்றனை ` என்றருளியவாறாம் . அதியரைய மங்கை , அதிகை . வேறுதலமாகவும் கூறுவர் . கெடிலம் , திருவதிகையை அடுத்து ஓடும் நதி . இறை - இறுத்தல் ; எல்லாப் பொருளினும் தங்குதல் . இது வகர இடைநிலை பெற்று இறைவன் என வந்தது , ` துறைவன் , தலைவன் ` முதலியனபோல , இடைநிலை பெறாதவழி இறையன் , இறையான் என வரும் . பண்டு - முன்பு . ` இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது ` என்க .

பண் :

பாடல் எண் : 2

வெள்ளிக் குன்றன்ன விடையான் தன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் தன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் தன்னைப்
பொன்பிதிர்ந் தன்ன சடையான் தன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை
வாரா வுலகருள வல்லான் தன்னை
எள்கவிடு பிச்சை யேற்பான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய நிலையில்லாத வீட்டுலகை அருளவல்ல எம்பெருமான் வெள்ளி மலை போன்ற காளையை வாகனமாக உடையவன் . வில்லைப் பயன் கோடலில் வல்ல மன்மதனுடைய வில்லைக் கையாண்ட செயலைக் கோபித்தவன் . படப்புள்ளிகளையும் கோடுகளையும் உடைய நாகத்தை அணிகலனாக அணிபவன் . பொன் துகள் போல ஒளிவீசும் செஞ்சடையினன் . சந்திரனைப் போல ஒளிவீசும் தோள்வளை அணிந்த முதல்வன் . பிறர் தன்னை இகழுமாறு பல வீட்டிலுள்ளவர்களும் வழங்கும் பிச்சையை ஏற்பவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

வில்வலான் - காமவேள் . வில் வட்டம் - வில்லை வட்டித்த ( கையாண்ட ) செயல் . பிதிர்தல் - பொடியாதல் . வள்ளி வளை - வள்ளிபோலும் வளை ; வள்ளி - கொடி . வாரா உலகு - மீண்டு வாராத உலகு ; வீட்டுநிலை . ` மீண்டு வாரா வழியருள் புரிபவன் ` ( தி .8 திருவாசகம் , கீர்த்தித்திருவகவல் - 117) எனவும் . ` மற்றீண்டு வாரா நெறி ` ( குறள் - 356) எனவும் அருளிச்செய்தன காண்க . ` எள்க ஏற்பான் ` என இயையும் . எள்க - ( உலகர் ) இகழுமாறு .

பண் :

பாடல் எண் : 3

முந்தி யுலகம் படைத்தான் தன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் திங்க ளணிந்தான் தன்னைத்
தவநெறிகள் சாதிக்க வல்லான் தன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
செழுங்கெடில வீரட்டம் மேவி னானை
எந்தை பெருமானை யீசன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

செழிப்புடைய கெடிலநதி பாயும் அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையாய்ப் பெருமானாய் , எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள எம்பெருமான் தான் , என்றைக்கும் கெடுதலில்லாத முதற்பொருள் . அவனே முற்பட்ட காலத்தில் உலகங்களைப் படைத்தவன் . அழகிய வெள்ளியபிறை சூடி அடியார்களின் தவமாகிய நெறியை முற்றுவிப்பவன் . சித்தம் முதலிய கருவிகளால் செய்யப்படும் செயல்களின் பயனாய்த் தேனும் பாலும் போன்று இனியவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது .

குறிப்புரை :

மூவா - கெடாத . மூத்தல் , கெடுதல் என்பது , ` மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து - முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் ` என்னும் தி .11 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக் கோவையாலும் (14) அறிக . முதல் - தலைவன் . ` வடிவமுடையவன் ` என்னும் பொருளையுடையதாகிய ` மூர்த்தி ` என்னும் சொல் , ` அருட்டிருமேனியை யுடையவன் ` என்னும் பொருளில் வழங்கப் படும் . சந்தம் - அழகு . தவநெறிகள் - தவமாகிய நெறிகள் . சாதித்தல் - முற்றுவித்தல் ; இது , தன்னை உணர்ந்தார்க்கு என்க . இதனானே , உணராதார்க்கு முற்றுவியாமையும் பெறப்பட்டது . இவ்விரண்டனையும் மார்க்கண்டேயர் வாழ்நாள் பெற்றமையும் , தக்கன் தலை யிழந்தமையுமாகிய வரலாறுகள் பற்றி யுணர்ந்து கொள்க . சிந்தையில் தீர்வினை - சித்தம் முதலிய கருவிகளின் நீங்கும் செயல்கள் , அவை : கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் பகுதியவாய்ப் பல்வேறு வகைப்பட நிகழ்வன . இஃது ஆகுபெயராய் , அதன் பயனைக் குறித்தது . எந்தை பெருமான் - என் தந்தையாகிய பெருமான் , ஈசன் - ஐசுவரியம் உடையவன் .

பண் :

பாடல் எண் : 4

மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை
மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்
அந்தரமு மலைகடலு மானான் தன்னை
யதியரைய மங்கை யமர்ந்தான் தன்னைக்
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும் வானவரும் தொழச்செல் வானை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

ஆகா , ஊகூ என்ற கந்தருவர் இருவரும் பாடித் திருவடிகளில் நறுமலர்களைத் தூவிக் கைகளைக் குவித்துக் காலையும் மாலையும் இந்திரனும் மற்ற தேவர்களும் வழிபடுமாறு எளிமையில் காட்சி வழங்கும் சிவபெருமான் வேதமந்திரமும் அவற்றின் பொருளும் ஆயவன் . மதியம் , வெங்கதிர் , காற்று , தீ , வான் , அலைகளை உடைய கடல் ஆகியவற்றின் உடனாய் நின்று அவற்றைச் செயற்படுப்பவன் . அதியரையமங்கை என்ற திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது .

குறிப்புரை :

மறைப் பொருள் வேதத்தின் பொருள் . அவை , அறம் முதலிய நான்கு . அந்தரம் - ஆகாயம் . கந்தருவம் - இசை . இருவர் : ` ஆகா , ஊகூ ` என்னும் கந்தருவர் . ` செய்து ` என்பதனைச் ` செய ` எனத் திரித்து , ` இருவர் கந்தருவம் செய இந்திரனும் வானவரும் கூப்பித் தூவித்தொழ ` என இயைக்க . ` காலை மாலை ` என்றது அடியவர் வழிபடுங் காலங்களை வகுத்தருளிச்செய்தவாறு . செல்லுதல் , அடியவர் வழிபாட்டினை ஏற்றருளுதற் பொருட்டு . ` கந்தருவம் செய்து ` என்பது முதல் , ` தொழ ` என்பதுகாறும் இறைவனது முதன்மையையும் , ` செல்வான் ` என்றது , அவனது எளிமைத் தன்மையையும் வியந்தருளியவாறு .

பண் :

பாடல் எண் : 5

ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை யறுப்பிக்கும் அதிகை யூரன்
அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வெறுவியரா யிருந்தார் சொற்கேட்
டேழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

பிறவாயாக்கைப் பெரியோன் திருவடிகளை நினைத்துப் பார்ப்பது கூடச் செய்யாராய் உயர்கதியை அடைவதற்குரிய வழியைத்தேடி அவ்வழியே வாழ்க்கையை நடத்தாதவராய் , இடையறாது வருகின்ற பிறப்பின் காரணத்தை உணராராய் , உடம்பில் அழுக்கினைத் தாமே பூசிக்கொண்டு அகக்கண் குருடராய சமண முனிவருடைய மனம்போல் நடப்பேனாகி , இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படாத செயல்களைச் செய்யும் அவர்களுடைய சொற்களை உபதேசமாகக் கொண்டு , கொடிய பிறவியை அடியோடு போக்குவிக்கும் அதிகை வீரட்டானத்து எம்பெருமான் திருவடிகளைச் சரண் புக்கு வாழாமல் ஏழையேன் பண்டு அப்பெருமானை இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் திருவிலராய அமணர்களது இரங்கத்தக்க நிலையில் தாமும் பன்னாள் இருந்தமையை நினைந்து இரங்கியருளியது . ` ஒரு பிறப்பும் ` ஒன்றும் ` என்னும் சிறப்பும்மைகளும் , ` அரும் பிறப்பு ` என்னும் மகர ஒற்றும் தொகுத்தலாயின . உணர்ந்தும் காணார் - நினைந்தும் அறியார் என்றவாறாம் . வருபிறப்பு - தொன்றுதொட்டு இடையறாது வருகின்ற பிறப்பு ; இஃது ஆகுபெயராய் அதன் காரணத்தைக் குறித்தது . நீராடாமையேயன்றி , மாசு பூசிக்கொள்ளுதலும் சமண முனிவரது ஒழுக்கம் என்க . ` வழி காணாதவர் ` என்றது , குருடர் என்றருளியவாறாம் . மனத்தனாகி - மனம்போல் நடப்பவனாகி ; என்றது , ` அவர்வயப்பட்டு ` என்றவாறு . இருபிறப்பு - இம்மை மறுமை . வெறுவியர் - பயன் ஏதும் பெறாதவர் ; ஐம்புல இன்பங்களைக் காய்ந்தமையின் இம்மைப் பயனை இழந்தமையும் , அறத்தின் மெய்மையாகிய திருவருளை உணராமையின் மறுமைப் பயனை இழந்தமையும் அறிக ; ` பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார் ` ( தி .1. ப .116. பா .10.) என்றருளிச்செய்தார் , திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் . ` ஆகி , வாழாது , கேட்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது ` என முடிக்க . ` அடியிணையே ` என்னும் பிரிநிலை ஏகாரம் , இடைக்கண் அதனை விடுத்து வேறொன்றைப் பற்றி அல்லலுற்ற நிலையை விளக்கி நின்றது .

பண் :

பாடல் எண் : 6

ஆறேற்க வல்ல சடையான் தன்னை
அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் தன்னைக்
கோல்வளைக்கை மாதராள் பாகன் தன்னை
நீறேற்கப் பூசும் அகலத் தானை
நின்மலன் தன்னை நிமலன் தன்னை
ஏறேற்க வேறுமா வல்லான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

கங்கையைத் தன்னுள் அடங்குமாறு ஏற்றுக் கொள்ள வல்ல சடையான் , மைபோலக் கரிய முன் கழுத்தினன் . எல்லாப் பொருள்களின் நுண்ணிலையையும் ஏற்று அவற்றுக்குப் பற்றுக் கோடாக நிற்கவும் பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்கவும் வல்லவன் . திரண்ட வளையல்களைக் கையில் அணிந்த பார்வதி பாகன் . நீறு , தன்னையே சார்பாக ஏற்க அதனைப் பூசிய மார்பினன் . தானும் களங்கம் இல்லாதவனாய்ப் பிறர் களங்கத்தையும் போக்குவிப்பவன் . காளை வாகனத்தில் தக்கபடி ஏறி அதனைச் செலுத்துவதில் வல்லவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

` கூறு ` இரண்டனுள் முன்னையது , ` உடற்கூறு , நிலக்கூறு ` முதலியனபோல , ` தன்மை ` என்னும் பொருளது ; பின்னது , ` பகுதி ` என்னும் பொருளது . ` தன்மை ` என்றது , நுண்ணிலையை . ` பகுதி ` என்றது . சத்தியை . எனவே , ` கூறு ஏற்க ` என்றது , ` எல்லாப் பொருள்களின் நுண்ணிலையும் ஏற்று , அவற்றிற்குப் பற்றுக்கோடாய் நிற்க ` எனவும் , ` கூறு அமர ` என்றது , அவற்றின் பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்க ` எனவும் அருளிச்செய்தவாறாம் . ` கோல்வளைக்கை மாதராள் பாகன் ` எனப் பின்னர் அருளிச்செய்தலின் , இவற்றை மாதொருபாகராதலின்மேல் வைத்துரைத்தல் கூடாமை யறிக . ` கூறேற்கவும் கூறமரவும் வல்லான் ` என்க . நீறு ஏற்க - நீறு , தன்னையே சார்பாகப் பொருந்த - எல்லாம் நீறாயினமையின் அந்நீற்றிற்குப் பிறிதொரு சார்பு இன்றாயிற்று , நின்மலன் - மலம் இல்லாதவன் . நிமலன் - மலத்தை நீக்குபவன் ; எனவே , ` உலகத்தில் தோய்ந்தும் , தோயாது நிற்பவன் ` என்றதாம் . ஏற்க ஏறுதல் - தக்கவாற்றால் நடத்துதல் . ஏறு , அறமும் உயிரும் ஆதலின் , அவற்றைத் தக்கவாற்றால் நடத்துபவன் என்பது உள்ளுறைப் பொருள் .

பண் :

பாடல் எண் : 7

குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்
டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
வானவர்க ளேத்தப் படுவான் தன்னை
எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

மூர்க்கர்களாய் தடுமாறி இளைய பெண்கள் முன்னிலையில் நாணமின்றி உடையில்லாமல் நின்று உணவைக் கையில் பெற்று நின்றவாறே உண்ணும் சமணத்துறவியரின் சொற்களை மனங்கொண்டு அவர்கள் இனத்தவனாகி நல்லுணர்வில்லாமல் திரிந்த நான் , வண்டுகள் சூழ்ந்து திரியும் கொன்றைப் பூ மாலையை அணிந்து வானவர்களால் புகழப்பட்டு , எண்திசையிலுள்ளார்க்கும் தலைவனாய் நிலைபெற்ற எம்பெருமானை ஏழையேனாகிய யான் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது .

குறிப்புரை :

அரசரை ` அரசு ` என்றல்போல , குண்டரை ` குண்டு ` என்றருளினார் . குண்டர் - மூர்க்கர் ; என்றது , சமணரை ; கொண்டது விடாமைபற்றி அங்ஙனம் கூறினார் ; ` திருந்தா அமணர் ` என்றார் திருவிருத்தத்திலும் . ( தி .4. ப .94. பா .10.) குண்டு ஆக்கன் - மூர்க்கர் இனமாகிய செல்வத்தை உடையவன் ; என்றது . ` அவரையே ஆக்கந் தருவாராக மயங்கியவன் ` என்றவாறு . ` குண்டரக்கனாய் ` என்பதும் பாடம் ` ஆய் ` கேட்டு , ஆகி உழந்தேன் ` என இயையும் . ` உண்டி உகந்து ` என்பதனை , கையில் உண்டு என்பதன் பின்னாக வைத்துரைக்க . ` கையில் உண்டு ` என்றது ` கையில் உண்ணும் ஒழுக்கத்தை யுடையாராய் ` என்றவாறு . கையில் நின்று உண்ணுதல் , இலை முதலியவற்றை நிலத்தில் இடின் சிற்றுயிர்கள் பற்றி இறக்கும் என்று . ` உழன்று ` உண்டு , உகந்து , இன்றி நின்றார் ` என்க . அமண் - சமண் முனிவரது கோலம் ( உடையின்றியிருத்தல் .) உடனாகி - கூடி . ` உணர்வு ஒன்று இன்றி இகழ்ந்தவாறு ` என இயையும் . ` உழிதந்தேன் ` என்பதனை , ` உழிதந்தேனாய் ` என எச்சப்படுத்துக . மூர்த்தி - தலைவன் .

பண் :

பாடல் எண் : 8

உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
யூத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் தன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

உறியில் சுருக்கிட்டு வைத்த கஞ்சிக்கரகத்தைக் கையில் தொங்கவிட்டுக்கொண்டு ஊத்தை வாயினை உடைய சமணர்களிடையே யானும் ஒரு மூர்க்கனாகி , கறியோடு நெய் ஊட்டப் பட்ட சோற்றினைக் கையில் வாங்கி உண்டு காண்பவருக்கு வெறுக்கத் தக்க காட்சிப் பொருளாக இருந்த யான் , அலைமோதும் கெடில நதி பாயும் நாட்டிற்குத் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட பெருமானைத் தீவினை உடையேனாய் , பரம்பரையாக வழிபட்டுவரும் குடும்பப் பழக்கம் பற்றியும் நினைக்க இயலாதேனாய் ஏழையேனாய்ப் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

` உறியில் முடித்த ` என்க . முடித்த - முடியிட்ட ; சுருக்கிட்ட . குண்டிகை - கரகம் ; இது கஞ்சியை யுடையது . இவ்வாறு உணவை உறியில் வைத்துத் தூக்கித் திரிதல் , ஈ எறும்பு முதலிய சிற்றுயிர்கள் வீழ்ந்து இறவாமல் காத்தற்பொருட்டு என்க . ` தூக்கிய ` என்னும் பெயரெச்சத்தின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று . ஊத்தை வாய் , பல் விளக்காமையாலாயிற்று . ` சமணர்க்கோர் குண்டாக்கனாய் ` என்றது , ` குண்டர்க்கேற்ற குண்டனாய் அகப்பட்டேன் ` என்றிரங்கி யருளியவாறு . ` நெய் விரவு கறி சோறு ` என்க . பொல்லாத காட்சி - அருவருக்கத்தக்க கோலம் ; அஃது உடையின்றித்திரிதல் . ` மறித்து நினைக்க மாட்டேன் ` என்றது , ` முன்பு நினைந்த பொருளாய் இருந்தும் பழக்கம்பற்றியும் நினையா தொழிந்தேன் ` என்றதாம் . ` ஒருகாலும் ` என உம்மை விரித்துரைக்க . ` வல்வினையேன் ` என்றது , ` அத்துணை வலிதாய் இருந்தது என்வினை ` என்றிரங்கி யருளியவாறு . ` நினைக்க மாட்டேனாய் இகழ்ந்தவாறு ` என்க . கெடில நாடர் பெருமான் - கெடில நாடர்க்காக எழுந்தருளியுள்ள பெருமான் .

பண் :

பாடல் எண் : 9

நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் தன்னை
மறையானை மாசொன்றி லாதான் தன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் தன்னைக்
கறையானைக் காதார் குழையான் தன்னைக்
கட்டங்கம் ஏந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

எல்லார் உள்ளத்திலும் தங்கியிருப்பவனாகிய எந்தை பெருமான் குறைவிலா நிறைவினனாய் நிலைபெற்றவன் . நெற்றிக்கண்ணன் . வேத வடிவினன் . களங்கம் ஏதும் இல்லாதான் . தேவர்கள் தலையில் தன் திருவடிகளை வைத்து அருளியவன் . கழுத்தில் விடக்கறை உடையவன் . குழைக்காதன் . கையில் கட்டங்கம் என்ற படைக்கலன் ஏந்தியவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

நிறைவு ஆர்ந்த நீர்மை - நிறைவு பொருந்தியதாகிய குணம் . ` குறைவிலா நிறைவேகுணக்குன்றே ` எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் , ( தி .7 ப .70 பா .6) ` குறைவிலா நிறைவே ` என வாதவூர் அடிகளும் ( தி .8 கோயிற்றிருப்பதிகம் - 5) அருளிச்செய்தவாறறிக . அக்குணமே அவற்கு வடிவாதலை நினைவார் , ` நீர்மையனாய் என்னாது ` ` நீர்மையாய் ` என்றருளிச் செய்தார் . ` நிறையார்ந்த ` என்பதும் பாடம் . மறையான் - வேதத்தின்கண் உள்ளவன் . மாசு - மலம் . ஒன்று - சிறிது . ` ஒன்றும் ` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது . கறையான் - நஞ்சை உடையவன் . ` எல்லாவற்றையும் இறத்தலை உடையவன் ` என்பாரும் உளர் ; அப்பொருள் , ` கடவுள் ` என்பதனான் அமைதலின் , இச்சொற்கு வேறு பொருள்வேண்டும் என்க .

பண் :

பாடல் எண் : 10

தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் தன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலும் ஊதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி எங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

முல்லை நிலத்திலிருந்த குருந்த மரத்தை , அதன் கண் பிணைத்திருந்த இடைக்குலச் சிறுமியர் ஆடைகளை அவர்கள் மீண்டும் எடுத்துக் கொள்வதற்காக வளைத்துக் கொடுத்து , வேய்ங் குழல் ஊதி அவர்களை வசப்படுத்திய இடையனாய் அவதரித்த திருமாலும் , பிரமனும் ஆகிய இருவரும் முயன்றும் அடிமுடிகளின் எல்லையைக் காண இயலாதவாறு அனற்பிழம்பாய் நின்றவனாய்த் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைவனாய் , எனக்கும் தலைவனாய் , பண்டைத் தீவினைகள் என்னைச் சூழ்ந்தமையாலே அவற்றின் வழியே சென்று அவனைப் பலவாறு இழித்துப் பேசியும் பின் ஒருவாறு தெளிந்தும் நின்ற அடியேனுடைய அறிவுக்கு அறிவாய் நின்று விரைவில் என் சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்ட பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது .

குறிப்புரை :

தொல்லை வான் சூழ்வினைகள் - பழைய , பெரிய , நிறைந்த வினைகள் ; என்றது சஞ்சிதத்தை . சூழ - ( அவை பிராரத்தமாய் வந்து ) பற்றினமையால் . போந்து - ( ஆற்றமாட்டாது ) வந்து . ` இயற்றியான் `,` எண்ணியார் `,` தேறியார் , என்றாற்போல ( குறள் - 1062, 494, 1154), ` தூற்றினேன் ` ` ஆற்றினேன் ` என்பன , ` தூற்றியேன் ` ` ஆற்றியேன் ` என வந்தன . தூற்றியது , அவ்வினை காரணமாக நிகழ்ந்தவற்றைப் பலரும் அறியப் பாடியருளியது . அதனை , ` காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் ` என்பது முதலிய திருப்பாடல்களில் ( தி .4. ப .1. பா .5.) காண்க . ஆற்றியது , நோயின் முதலினையும் , அது நீங்கும் வாயிலினையும் தமக்கையார் அருளக் கேட்டு ஒருவாறு ஆற்றியது . சுடராய் - சோதியுட் சுடராய் ; ( தி .5. ப .97. பா .3.) அறிவுக்கறிவாய் . ` தூற்றியேனும் , ஆற்றியேனும் ஆகிய எனக்குச் சுடராய் நின்று ` என்க . யமுனை ஆற்றில் ஆடையின்றி நீராடிய மகளிர் பலதேவன் வருகையால் நாணமடைய , அவர்கள் மானம் இழவாதபடி கண்ணன் குருந்த மரத்தின் தழைநிரம்பிய கிளையை வளைத்து உதவினான் என்பது பழைய வரலாறு . ஓசித்து - வளைத்து . தானவர் - அசுரர் .

பண் :

பாடல் எண் : 11

முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்
முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
மதனழியச் செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றையந் தாரான் தன்னை
ஏழையேன் நான்பண்டி கழ்ந்த வாறே.

பொழிப்புரை :

மாசுதீரப்புனல் ஆடும் வழக்கத்தை விடுத்து அற்றம் மறைத்தலுக்கு உடைமாத்திரம் அணிந்த சமணசமயப் பெண் துறவியர் தங்கள் தெய்வம் என்று பெரிதும் மதித்துத் தம் கைகளால் தலைமயிரைப் பறிக்கும் பண்புடையவர்களாகித் தங்கள் கொள்கைகளிலேயே நிலைநின்று தக்க செயல் இன்னது என்று ஆராய்ந்தறிய இயலாதவர்களாகித் தவம் என்ற பெயரால் பொருத்த மற்ற செயல்களைச் செய்பவர் சமணத் துறவியர் . அவர் வழி நின்றேனாகிய யான் . புட்பகவிமானம் சென்ற வழியைக் கயிலை மலை தடுத்ததனால் அதனைப் பெயர்க்கச் சென்ற இராவணனுடைய வலிமை கெடத்துன்புறுத்திய சிவந்த திருவடிகளை உடையவனாய் இலைகளுக்கு இடையே தோன்றிய கொன்றைப் பூவாலாகிய மாலையை அணிந்த எம்பெருமானைப் பண்டு அறியாமை உடையேனாய் இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

` உடை உடாமை , நீராடாமை ` என்னும் சமணநோன்புகளுள் பெண்டிர்க்கு உடை உடாமை உரித்தாகாது , நீராடாமை மட்டுமே உரித்தாகலின் , ` முலைமறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் ` என்றருளிச்செய்தார் . எனவே , இப்பெண்கள் சமணத்துறவெய்தியவர் என்றதாயிற்று . இவர்க்குத்தவமாவது ஆடவராய சமணத் துறவி யார்க்குப் பணிவிடைகள் செய்தலே யாகலானும் , அவற்றுள் சிறந்ததொன்றாகிய தலைமயிரைப்பறித்தலை ஒவ்வொருவராய்ப் போந்து அவர்க்குச் செய்வராகலானும் , ` முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித் தலைபறிக்கும் தன்மையர்கள் ` என்று அருளிச்செய்தார் . ` தீண்டி ` என விதந்தோதியது , தீண்டலாகாமையை உட்கொண்டென்க . கானலை நீரென்றே மயங்கி , அதனைத் தெருட்டுவார் சொற்கும் செவிகொடாது செல்லும் பேதைபோல , அவச் செயலைத் தவச்செயலென்றே மயங்கினார் என்பார் . ` தவமே யென்று அவம் செய்து தக்கது ஓரார் ` என்றருளிச்செய்தார் . அவர் செயல் அன்னதாதல் , ` தவமும் அவமும் , வகுத்தான் வகுத்த வகை ` ( குறள் - 377) என்பதும் , ` அதனால் அவனை யறிதலே தவம் ; அவனையறியாமை அவம் ` என்பதும் உணராது , அறம்முதலிய உறுதிப் பொருள்களை அடைதற்பொருட்டுக் கிடைத்த , அரிய உடம்பை , ஆற்றப் பகையாக வெறுத்து ஒறுத்தலான் என்க . ` காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம் ; அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம் வீண்செயல் ; இறைவன் சொன்ன விதி அறம் .` என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தினை ( சூ .2.27.) ஈண்டுக் கருதுக . மதன் - வலிமை .
சிற்பி