திரு அதிகை வீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

சந்திரனைப் பெரிய கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் வைத்துள்ளான் . சாமவேதமாகிய இசையை விரும்புபவன் . மண்டையோட்டை ஏந்திய கையினன் . பொன்னார் மேனியில் , மெல்லிய விரலில் பந்தினை ஏந்திய பார்வதி பாகன் . காளையை வாகனமாக உடையவன் . மேம்பட்டயோகி . ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன் ஆகிய இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருப்பவனே .

குறிப்புரை :

` கனகமேனிமெய்யனே ` எனமாற்றியுரைக்க . அணவும் - பொருந்திய . சுடர்த்தொடி அணிதல் முதலியன போல , பந்தடித்தலும் செல்வமகளிர்க்குச் சிறப்பாவதாம் . மாசுணம் - பாம்பு . ` பசு ` என்பது ஆனினத்து இருபாற்கும் பொது ; அஃது ஈண்டு அதன் ஆணினைக்குறித்தது . ` இருத்துமே ` முதலிய எல்லாவற்றிற்கும் , ` உம்மாற் காணப்பட்டவன் ` என்னும் எழுவாய் வருவித்துரைக்க . ` இருத்தும் ` என்பது முதலிய எதிர்கால முற்றுக்கள் இயல்புகுறித்து நின்றன . ` அவன் ` என்பது , ` அத்தன்மையன் ` என்னும் பொருட்டாய் நின்றது . கந்தருவம் - இசை .

பண் :

பாடல் எண் : 2

ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
படஅரவந் தடமார்பிற் பயில்வித் தானே
நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

காளை மீது ஏறி ஏழுலகமும் சுற்றி வருபவன் . தேவர்கள் தொழுது துதிக்குமாறு இருக்கின்றவன் . பருந்துகள் படியும் , மண்டையோட்டில் பிச்சை எடுப்பவன் . தன் பெரிய மார்பில் படமெடுக்கும் பாம்பு ஊரப்பெற்றவன் . நீறு படிந்த செழுமையான பவள மலையை ஒத்த வடிவினன் . நெற்றியில் அமைந்த கண் ஒன்று உடையவன் . கங்கை தங்கிய சடைமுடிமேல் பிறையைச் சூடியவன் . இத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான் .

குறிப்புரை :

` உழிதருவான் ` என்பதில் இடைநின்ற உகரம் தொகுத்தலாயிற்று . பாறு - பருந்து ; அஃது ஏறுதல் , ஊன் உண்மையால் என்க . ` நீறேறு செழும் பவளக் குன்றொப்பான் ` என்றது இல் பொருளுவமை .

பண் :

பாடல் எண் : 3

முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

இறந்த பிரமர்களின் தலைமாலையால் பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினன் . உலகில்தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவன் . கழுத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவன் . கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடிக் காட்சி வழங்குபவன் . இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்குச் சார்பாய் உள்ளவன் . ஐம்பெரும் பூதங்களாய் அண்டங்களின் புறமும் உள்ளும் இருப்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான் .

குறிப்புரை :

` முண்டம் ` என்றது , இறந்த பிரமர்களது தலைகளை ; அவற்றால் இயன்ற மாலை சிவபிரான் மார்பில் உளதென்க . ` முண்டத்தின் ` என்னும் இன்னுருபு , ஏதுப்பொருட்டு . ` முதல் நடு முடிவு ` என்றது , உலகத்தின் தோற்றம் நிலை இறுதிகளை ; அவற்றைச் செய்வோனை அவையாகவே உபசரித்தருளினார் ; ` அந்தம் ஆதி ` ஒடுங்கின சங்காரம் , சங்காரமே முதல் , ஈறே முதல் ` எனப் பல விடத்தும் இவ்வாறே சிவஞான போதத்தும் கூறப்பட்டது . ` வெண் மருப்பு ` என்றது , மாயோன் பிறப்பாகிய வராகத்தின் கொம்பினை , அவ்வராகத்தின் செருக்கினால் உண்டாகிய இடரை நீக்குதற் பொருட்டு , அதனை இறைவன் அழித்து , அவ்வெற்றிக்கு அடையாளமாக அதன் கொம்பினை அணிந்து கொண்டான் என்பது வரலாறு . காறை - கம்பியாக அமைத்து அணியும் அணிகலம் . பன்றிக் கொம்பு மார்பில் உளதாகவும் சொல்லப்படும் . கதம் - கோபம் . கொண்டு - அணிந்து . பிண்டம் - உடம்பு ; ` அதன் இயற்கை ` என்றது , அதற்கு முதல்களாய் உள்ள தத்துவங்களை ; ` அவற்றிற்கு ஓர் பெற்றி என்றது , சார்பாய் நிற்றலை . அப்பாலாய் இப்பாலாதல் - உள்ளும் புறம்புமாய் நிறைந்து நிற்றல் .

பண் :

பாடல் எண் : 4

செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவில் தனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

நிறத்தால் செய்யவன் . கண்டம் கறுத்தவன் . பசிய கண்களையும் வெளிய பற்களையும் உடையவாய்ப் படமெடுத்தாடும் பாம்புகளை அணிந்தவன் . அடியார்களுடைய வினைகள் நீங்குமாறு அவற்றிற்குப் பகைவனாக உள்ளவன் . குளிர்ந்த கொன்றை சூடிய சடையினன் . சூலத்தைத் தாங்கும் கையினன் . முக்காலங்களாகவும் உள்ளவன் . கரும்பு வில்லினை ஒப்பற்ற வளைந்த அணிகலன் போலக் கைக்கொண்ட மன்மதனைக் கோபித்த தலைவன் . உயரமும் பருமையும் உடைய காளைவாகனன் . இத்தகைய சிறப்பினை உடையவன் அதிகை வீரட்டானத்துப் பெருமானே .

குறிப்புரை :

` செய்யன் ` என்பதற்கு , ` மேனி ` என்னும் எழுவாய் வருவித்து , ` கண்டம் கரியனே ` என மாற்றியுரைக்க . ` போக ` என்னும் வினையெச்சம் , ` வெய்யன் ` என்பதில் தொக்கு நின்ற ` ஆனான் ` என்பதனோடு முடிந்தது ; ` வினைகள் நீங்குமாறு அவற்றுக்குப் பகைவனாய் நின்றான் ` என்றவாறு . கொடும் பூண் - வளைந்த அணிகலம் ; கழல் .

பண் :

பாடல் எண் : 5

பாடுமே யொழியாமே நால்வே தம்மும்
படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

இடைவிடாமல் நால்வேதமும் பாடும் இயல்பினன் . பரவிய உடையின் மீது ஒளி சிறக்குமாறு குளிர்ந்த வெள்ளிய பிறையைச் சூடியவன் . தன் இடையில் விளங்குமாறு புலித்தோலையும் பாம்பினையும் சுற்றியிருப்பவன் . கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் குடமுழா , வீணை , தாளம் இவற்றை ஒலிக்குமாறு , ஐந்தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன் . அழகிய நீண்ட கையொன்றில் தீயை ஏந்துபவன் . அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனே .

குறிப்புரை :

தொண்டை - கொவ்வைக்கனி . குடமுழவம் - குடமுழா ; கடம் . ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாகிய ( தி .12 பெரிய புராணம் , திருநீலகண்ட நாயனார் -1) ஐந்தொழில் நடனமாகலின் , ` மாக் கூத்து ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 6

ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ
வெள்ளப் புனற்கங்கை செஞ்ச டைமேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

தன்னையே தியானிப்பவருடைய உள்ளத்தில் மிக்க நோயையும் அவர்களைத் தாக்கும் உட்பகைகளாகிய காமம் முதலிய ஆறனையும் அடியோடு நீக்குபவன் . தனித்திருக்கும் நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பலாகி விழுமாறு நோக்கியவன் . நீர் வெண்மையாகிய கங்கையைத் தன் செந்நிறச் சடையில் இறங்கித் தங்குமாறு செய்தவன் . ஏழுலக இயக்கத்திற்கும் தானே காரணமாகியவன் . வானில் உலாவிய முப்புரங்களையும் ஓர் அம்பினால் அழித்தவன் . பண்டு தொட்டு மேம்பட்ட தவத்தைச் செய்பவனாய்த் தன் அடியவர்களுக்குத் தவம் செய்ய வழிகாட்டி ஆகியவன் அத்தகைய பெருமான் அதிகை வீரட்டத்தானே .

குறிப்புரை :

உள்ளத்துள்ள உறுபிணி , பழவினை , ` உறு `, மிகுதி உணர்த்தும் உரிச்சொல் . செறுதல் - தம்மை உடையாரை அழித்தல் , பகை , ஆறு : காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் . இழித்தல் - இறக்கிக்கொள்ளுதல் . ` தவம் ` என்றது ஆகுபெயராய் , அந்நிலையைக் குறித்தது , தவம் செய்வார் பலர்க்கும் முதலாய் நின்று காட்டிய தவமாகலின் ` ஆதிமாதவம் ஆயிற்று . இங்குக் கண்ணுருபு விரிக்க . திரிபுரங்களை அழித்தலும் , ஆதி மாதவத்திருத்தலும் ஒன்றொடொன் றொவ்வாச் செயல்களாய் . புத்தியும் முத்தியும் தரும் முதல்வன் சிவபிரான் ஒருவனேயாதலை விளக்கி நின்றன .

பண் :

பாடல் எண் : 7

குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
குறட்பூதம் முன்பாடத் தான்ஆ டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
ஈமப்பு றங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேஅட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

குழல் , கொக்கரை , மொந்தை முதலிய இயங்களை இயக்கிக் கைத்தாளமிட்டுக் குட்டையான பூதங்கள் பாட அப் பாடலுக்கு ஏற்பத் தான் ஆடுபவன் . திருவடிகளிலே அசைகின்ற திரு விரல்களால் உயிர்களின் நுண்ணுடம்புகளை அசைத்துச் செயற்படுத்தி , அடியார்களுடைய கனவிலே தன் திருவுருவை அவர்களுக்குக் காட்டுபவன் . அழகு நிரம்பிய தோள்களை விரைவாக அசைத்துக் கூத்தாடுபவன் . ஊருக்குப் புறத்தே உள்ள சுடுகாட்டில் இரவு தோறும் நெருப்பின்கண் நின்று ஆடுபவன் . எட்டு உரு உடையவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

கொக்கரை - சங்கு . மொந்தை - ஒருதலைப்பறை . கழல் ஆடு திருவிரல் - திருவடியின்கண் அசையும் சிறந்த விரல்கள் , ஞான சத்தியும் கிரியாசத்தியுமே திருவடிகளாதலின் , விரல்கள் அவற்றின் கூறுகள் என்க . கரணம் செய்தல் - அசைத்தல் ; இது உயிர்களின் நுண்ணுடம்பை அசைத்தலாகக் கொள்க . இறைவன் கனவில் தோன்றியருளுதல் இவ்வாறென்பது இதனாற்பெறுதும் . ஈமம் - பிணம் சுடும் விறகு . புறங்காடு - சுடுகாடு . ` யாமம் ` என்பது , ` ஏமம் ` என மருவிற்று . அழல் ஆடுதல் - நெருப்பின் கண் நின்று ஆடுதல் . அட்ட மூர்த்தி - எட்டுரு உடையவன் . அவை : நிலம் , நீர் , தீ , காற்று , வானம் , ஞாயிறு , திங்கள் , உயிர் .

பண் :

பாடல் எண் : 8

மாலாகி மதமிக்க களிறு தன்னை
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்
வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

மதம் மிகுதலானே மயக்கம் கொண்ட ஆண் யானையைக் கொன்று அதன் தோலினைத் தனியே உரித்துத் தன் திருமேனியை முழுதுமாக அது மறைக்குமாறு உதிரப் பசுமை கெடாது உடம்பில் போர்த்தவன் . ஆரவாரம் ஏற்பட மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக் கடைகயிறாகச் சுற்றி ஒலிக்கின்ற கடலை அதன் அலைகள் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட பெரிய விடத்தை உட்கொண்டு இருண்ட கழுத்தினன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

` மதம் மிக்கு மாலாகிய களிறு ` என மாற்றியுரைக்க . ` மேலால் , கீழால் ` என்புழி நின்ற ஆல் இரண்டும் அசைநிலை . ` கை ` என்பது இடைச்சொல் . ` மெய் போர்த்தான் ` என்புழி ஏழாவதன் பொருட்கண் வல்லெழுத்து மிகாமை , இரண்டாவதற்குத் திரிபோதிய இடத்துத் ( தொல் , எழுத்து . நச் .157) தன்னின முடித்தலாற் கொள்ளப்படும் ; அன்றி , இரண்டாவது விரிப்பினும் ஆம் . ` கோலாகலம் ` என்பது குறைந்து நின்றது . கோலாகலம் - ஆரவாரம் . பட - உண்டாக . கொண்ட - ( தேவர் தமது அறியாமையால் ) தேடிக்கொண்ட .

பண் :

பாடல் எண் : 9

செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினாண் மலர்க்கூந்தல் உமையாள் காதல்
மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

செம்பொன்னாற் செய்து அதன் கண் அழகினை ஊட்டினாற்போல இயற்கையாக அமைத்த செஞ்சடைப்பெருமான் , இயற்கையான தெய்வ மணம் கமழும் தன்மையோடு மலர்களையும் அணியும் கூந்தலை உடைய உமாதேவியினுடைய காதலுக்கு இருப்பிடமான கணவன் . வலக்கையில் மழுப்படையை உடையவன் . நம்மால் விரும்பப்படுபவன் . நான்கு வேதங்களும் வழிபடுமாறு இருப்பவன் . அச்சமில்லாத அசுரர்களின் மும்மதில்களும் நடுங்குமாறு அவற்றை அழித்த அம்பினன் . எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

` அழகு பெய்தாற் போலும் ` என்றது , ` ஊட்டி யன்ன ஓண்டளிர்ச் செயலை ` ( அகம் -68) என்றாற்போல இயற்கையைச் செயற்கையோடுவமித்து வியந்தருளியவாறு . ` எம் ` என்றது , பிற அடியாரையும் உளப்படுத்து . தெய்வம் - தெய்வ மணம் ; இயற்கை மணம் . ` தெய்வம் நாறும் கூந்தல் , நாண்மலர்க் கூந்தல் ` எனத் தனித்தனி முடிக்க . ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது . மழுவாள் , இருபெயரொட்டு . கோசரம் - தேயம் ; என்றது உலகங்களை . ` அண்டகோசத்துளானே ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 10

எழுந்ததிரை நதித்திவலை நனைந்த திங்கள்
இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

கங்கையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் துளிகளால் நனைக்கப்பட்ட பிறைச் சந்திரன் மெல்லிய ஒளியோடு விளங்குகின்ற நீண்ட சடையினன் . கச்சியில் காமக்கோட்டத்திலுள்ள பவளம் போலச் சிவந்த , கனிபோன்று மென்மையை உடைய வாயினள் ஆகிய உமாதேவியின் இரு தனங்களும் எம்பெருமான் மார்பில் போரிட்டதனால் ஏற்பட்ட அழகிய தழும்புகள் தங்கிய மலைபோன்ற அவன் மார்பில் பூணூல் உள்ளது . சந்தனமும் , நறுமணக்கூட்டுக்களும் சேறுபோலப் பொருந்திய தன் செம்மேனியில் வெண்ணீறு அணிந் துள்ளான் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

எழுந்த - ஓங்கிய . ` நதியது எழுந்த திரைத் திவலை களால் நனைந்த திங்களினது இள நிலவு விளங்குகின்ற சடை ` என்க . இனி , ` நனைந்த ` என்பதனையும் சடைக்கு அடை ஆக்கலுமாம் . கோட்டி - கோட்டத்தை யுடையவள் . காமக்கோட்டம் , கச்சியில் உள்ளது . பொருது - பொருததனால் . கோலம் - அழகு . ` கோலமாக ` என ஆக்கச் சொல் வருவிக்க . வரை - ஆடவர் மார்பில் இருத்தற் குரியவாகக் கூறப்படும் கீற்று . ` சாந்து ` பூசப்படுவ தெனவும் . ` அளறு ` அப்பப்படுவதெனவும் உணர்க . அழுந்திய - நீங்காது நின்ற . ` உமையம்மையார் கச்சியில் கம்பையாற்றங்கரையில் இறைவனை இலிங்கத்தில் வழிபட்டுக்கொண்டிருக்கும்பொழுது , அவனது திருவிளையாடலால் கம்பையாறு பெருக்கெடுத்துவர , அதனைக் கண்டு , அம்மையார் செய்வதறியாது இறைவனைத் தழுவிக்கொள்ள , வெள்ளம் நெருங்கி வாராது சூழ்ந்து சென்றது ` என்பதனையும் , ` பின்னர் அம்மையார் தழுவிய கைகளை வாங்க , அவரது தனத் தழும்பும் , வளைத்தழும்பும் இறைவரது திருமேனியில் நீங்காது நின்றன ` என்பதையும் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத் துள்ளும் , காஞ்சிப் புராணத்துள்ளும் காண்க . இவ்வரலாறு இறைவனது வழிபாட்டினை வலியுறுப்பதாகலின் , இதனைச் சிறந்தெடுத் தோதியருளினார் . இக்கருத்துப் பற்றியே பிற பல இடங்களினும் திருவேகம்பத்தினை நினைந்தருளிச் செய்தலை ஆண்டாண்டுக் கண்டுணர்க . கச்சியம்பதி இச்சிறப்பினை யுடைத்தாதல் பற்றியே , திருக்கயிலையில் உபமன்னிய முனிவர் , தம் மாணாக்கர்க்கு , ` மாதவம் செய்த தென்றிசை` ( தி .12 பெரிய புராணம் - திருமலைச் சிறப்பு -25) எனத் தென்றிசையின் உயர்வைக் கூறியருளியபொழுது . அவர்கள் , ` மானுடர் வாழும் அத்தென்றிசை , கடவுளர் வாழும் இவ்வடதிசையினும் சிறந்ததாதல் எவ்வாறு ?` என ஐயுற்று வினவியதற்கு , ` அங்குள்ள சிவத்தலங்களே அச்சிறப்பிற்குக் காரணம் ` என்பதுணர்த்துவார் , சிறந்தெடுத்தோதிய மிகச் சிலவாகிய தலங்களுள் , இதனை எடுத்தோதி யருளினார் என்க .

பண் :

பாடல் எண் : 11

நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண் டன்னே
கொல்வேங்கை யதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்
புவலோகந் திரியுமே புரிநூ லானே
அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

தனக்கு ஒப்பார் பிறர் இல்லாத சிவபெருமான் திருமாலும் பிரமனும் தம்முயற்சியால் தேடியும் காண இயலாதவாறு நீண்ட வடிவு கொண்டவன் . தன் சிறப்புத் தோன்றக் கொடியை உயர்த்துமாறு அமைந்த நீலகண்டன் . கொலைத் தொழிலை உடைய வேங்கையின் தோலைக் கோவணத்தின் மீது ஆடையாக உடுத்தவன் . திருநீறு பூசிய திருமேனியினன் . பூணூலை அணிந்த அப்பெருமான் பிச்சை ஏற்றலைக் கருதி மேலுலகங்களிலும் திரிபவன் . தன் அடியவர்களைத் தேவர் உலகத்தை ஆளுமாறு செய்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

நெடியான் - திருமால் , நேடி - தேடி ` காணாமை ` என்பது , ஈறு குறைந்துநின்றது . ` கொடி ` என்பது பாம்பிற்கு உவமையாகு பெயராயிற்று . ` மணிகண்டன் ` என்னும் உவமத்தொகை , வடநூன் முடிபு . ` புவ லோகம் ` பூவுலகத்திற்கு மேல் உள்ளது . இதனானே , இனம் பற்றிப் பிற மேல் உலகங்களும் கொள்ளப்படும் என்க . ` அமரர் உலகம் ` என்பது குறைந்து நின்றது .
சிற்பி