திருஅதிகை வீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களும் சிவனுடைய தொடர்புடையன என்று கூறுமாறு எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனே ! தீ கதிர் மதியம் ஆகி நிற்பவனே ! கொலைத் தொழிலைச் செய்யும் மழு என்ற படைக்கலம் ஏந்தியவனே ! உயிர்களை உடல்களிலிருந்து பிரிக்கும் கூற்றுவனை உதைத்தவனே ! அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறியாதவருடைய மானதக் காட்சிக்கு அரியவனே ! முறையாகக் குருவிடம் உபதேசம் பெற்றவர்களுடைய துயரை நீக்குபவனே ! வில்லினைக் கொண்டு பெரிய மதில் களை அழித்தவனே ! அதிகை வீரட்டத்தினை உகந்தருளி யிருக்கும் களங்கமற்றவனே ! உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

` சிவன் ` என்பது விடாதவாகுபெயராய் , ` சிவன் வடிவம் ` எனப் பொருள்தரும் . என்ன நின்றாய் என்று சொல்லுமாறு கலந்து நின்றவனே . ` போற்றி ` என்பதன் முன்னும் பின்னும் , ` நினக்கு ` என்பதும் , ` ஆகின்றது ` என்பதும் எஞ்சி நின்றன . யாண்டும் இவ்வாறே கொள்க . எரி சுடர் - எரிகின்ற சுடர் ; ஒளிப் பிழம்பு . ஆக்கம் , உயிர்களின் பொருட்டு அவ்வுருவத்தினை மேற்கொள்ளுதலை யுணர்த்திற்று . இவ்விரு தொடர்களும் , ` ஆசனம் - மூர்த்தி - மூலம் ` என்னும் முறையிற் செய்யும் வழிபாட்டில் முறையே ஆசனத்திற்கும் , மூர்த்திக்கும் உரிய மறைமொழிகளாதற் குரியனவாதலறிக . ` கொல் ` கொல்லுதல் என முதனிலைத் தொழிற் பெயர் . ` கூற்று ` என்பது அஃறிணை வாய்பாடாகலின் , ` ஒன்றை ` என அருளிச்செய்தார் ; அத் தொழில் பெற்று வாழ்ந்து நீங்குவார் பலராகலின் , அவருள் ஒருவனே உதைக்கப்பட்டான் என்க . இனி , ` கூற்றாகிய ஒன்றை ` என்றுரைப்பினும் ஆம் . கல்லாதார் - நல்லாசிரியர் மொழியை உணராதார் . அவர் ஒரு மொழியாகச் செவியறிவுறுப்பது திருவைந்தெழுத்தும் , நூல்களாலும் பொருந்துமாற்றாலும் விளக்குவது அதன் பொருளுமாகலின் , வாளாதே , ` கல்லாதார் ` எனவும் , ` கற்றார் ` எனவும் அருளிப் போயினார் . ` காதல் ` என்பதன் பின் ` செய்யும் ` என்பது தொகுத்தல் ஆயிற்று .

பண் :

பாடல் எண் : 2

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி
உள்குவா ருள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாக மசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

பாடுதலையும் , கூத்து நிகழ்த்துதலையும் பண்புகளாக உடையவனே ! பல ஊழிக்காலங்களையும் படைத்தவனே ! மண்டையோட்டில் இரந்து பெறுவனவற்றையே உணவாக விரும்பி ஏற்றவனே ! உன்னைத் தியானிப்பார் உள்ளத்தைத் தங்குமிடமாக உடையவனே ! சுடுகாட்டில் கூத்தாடுதலை உகப்பவனே ! கார்மேகம் போன்ற கறுத்த கழுத்தை உடையவனே ! ஒதுங்கியிருந்து படமெடுத்து ஆடச்செய்ய வேண்டிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் கொள்பவனே ! அலைகள் வீசும் கெடில நதியை அடுத்த அதிகை வீரட்டானத்திலிருந்து உயிர்களை ஆள்பவனே -- உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

பாட்டு - பாடுதல் . ஆட்டு - ஆடுதல் . பண்பன் - செம்மையன் ; வல்லவன் . ` பாடுமே யொழியாது நால்வே தம்மும் ` என மேலே ( தி .6. ப .4. பா .5.) அருளிச் செய்தமையின் , இறைவன் பாடுதலுடையனாதலையறிக . ஊண் - உண்ணுதல் . ` ஊண் ஓட்டகத்தே ஆக உகந்தாய் ` என மாற்றியுரைக்க , காடு - சுடலை . அசைத்தல் - கட்டுதல் ; ` ஆட்டுதற்குரிய பாம்பைக் கட்டிக்கொண்டுள்ளாய் ` என வியந்தருளிச் செய்தவாறு . ` ஓர் நாகம் ` என்றதில் ` ஒன்று ` ஒரு தன்மையைக் குறித்து நின்றது . ` அலை கெடிலம் ` என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது . வீரட்டத்து ஆள்வாய் - வீரட்டத்தின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே .

பண் :

பாடல் எண் : 3

முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.

பொழிப்புரை :

முடியில் முல்லை மாலை சூடியவனே ! உடல் முழுவதும் திருநீறு பூசியவனே! எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே ! யாழின் ஏழு நரம்புகளிலும் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே ! உருண்டை வடிவினதாகிய மயிர் நீங்கிய , மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே ! உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்குபவனே ! தில்லைச் சிற்றம்பலத்தை உகந்தருளி யிருக்கிறவனே ! அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே ! உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

முல்லை நிலத்தார் செய்யும் வழிபாட்டினையும் ஏற்றருளுதல் பற்றி , முல்லைக்கண்ணியும் இறைவற்கு உரித்தாயிற்று . பிறநிலப் பூக்களும் இவ்வாற்றான் உரியவாம் என்க . இதனானே சிவபிரான் யாவராலும் வணங்கப்படும் முழுதற் கடவுளாதல் உணரப்படும் . முழுநீறு - மேனி முழுவதுமாகிய நீறு . ` எல்லையாய் ` என ஆக்கம் வருவித்து , ` எல்லாக் குணங்கட்கும் எல்லையாய் நிரம்பி ( உயர்ந்து ) நிற்கும் அருட்குணங்களையுடையவனே ` என உரைக்க . படைத்தல் - உடையனாதல் . சில்லை - வட்டம் . சிரை - மழிப்பு . செல்வன் - இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன் .

பண் :

பாடல் எண் : 4

சாம்ப ரகலத் தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

மார்பில் திருநீறு பூசியவனே ! அடியார்கள் மேற் கொள்ளும் தவநெறிகள் அவற்றிற்கு உரிய பயன்களைத் தரும்படி செய்து நிற்பவனே ! ஐம் பொறிகளையும் மனத்தால் அடக்கி உன்னை வழிபடுபவர்கள் செய்யும் சிறிய தொண்டுகளை உள்ளத்துக்கொண்டு அவர்களுக்கு அருள் செய்ய இருக்கும் இளையோனே ! பாம்பும் , பிறையும் , கங்கையும் தம்மிடையே பகை இன்றி ஒருசேர இருக்குமாறு அவற்றைச் சடையில் அணிந்த பண்பனே ! ஆம்பற் பூக்களையும் அணிந்தவனே ! அலைகளை உடைய கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டானத்திருந்து எல்லோரையும் ஆள்பவனே ! உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

தவநெறிகள் , அடியவர் மேற்கொண்டவை . சாதித்தல் - ( துணையாய் நின்று ) முற்றுவித்தல் . கூம்புதல் - மனம் ஒருங்கி நிற்றல் , குற்றேவேல் ( அவர் செய்யும் ) வழிபாடு ; இங்குப் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று . குறிக்கொண்டிருத்தல் - பொருளாக நோக்கியிருத்தல் , நஞ்சுடைய பாம்பிற்கு நீர் பகை என்க . ` சந்திரனை மா கங்கை திரையால் மோதச் சடாமகுடத் திருத்துமே ` என மேல் ( தி .6. ப .4. பா .1.) அருளிச்செய்தமையால் , அது மதிக்கும் பகையாதல் அறிக . பகை தீர்த்தலாவது ஒன்றால் மற்றொன்று அழிந்தொழியாது என்றும் இருக்கச் செய்தல் . ` ஒற்றியூரும் ஒளிமதிபாம்பினை - ஒற்றியூருமப் பாம்பு மதனையே - ஒற்றியூர வொருசடை வைத்தவன் ` ( தி .5. ப .24. பா .1) என அருளிச்செய்தமையுங் காண்க . இஃது இறைவனது திருவருளின் வன்மையைக் குறிக்கும் குறிப்பாதல் உணர்க . ஆம்பல் மலர்க்கு மேல் ( தி .6. ப .5. பா .4.) முல்லைக்கு உரைத்தவாறே உரைக்க .

பண் :

பாடல் எண் : 5

நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
யிருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.

பொழிப்புரை :

திருநீறு பூசிய நீலகண்டனே ! ஒளி விளங்கும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவனே ! தன் உடலில் ஒரு கூறாகப் பொருந்துமாறு உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டவனே ! கொடிய பாம்புகளை ஆடச்செய்யும் இளையவனே ! கங்கை தங்கிய தலையினனே ! அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் ஆயினவனே ! காளையை வாகனமாக ஏறிச்செலுத்துதலை என்றும் விரும்புபவனே ! கெடில நதிக் கரையிலுள்ள பெரிய அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையே ! உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

கூறு ஏறு உமை - கூறாய்ப் பொருந்திய உமையை உமையது கூற்றினை என்றவாறு . கோள் - கொடுமை . ` ஏறவே ; என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று . உகப்பாய் - விரும்புவாய் .

பண் :

பாடல் எண் : 6

பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாக மரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடும்ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

உன்னையே விரும்பிப் பாடும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிச் செவிமடுக்கின்றவனே ! பழையாற்றைச் சார்ந்த பட்டீச்சுரத்தை உகந்தருளியிருப்பவனே ! உலகப் பற்றறுத்த அடியார்களுக்கு வீடுபேற்றினை அருள வல்லவனே ! உமாதேவி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்திக் கொண்டவனே ! தம் முயற்சியாலே உன்னை அடைய விரும்புபவர்கள் ஆராய்ந்து அறிதற்கு அரியவனே ! இடையிலே பாம்பினை இறுகக் கட்டியிருப்பவனே ! பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புபவனே ! அலைகெடில வீரட்டானத்தை உகந்து உலகை ஆள்பவனே ! உன்னை வணங்குகின்றேன் .

குறிப்புரை :

பழையாறு , பட்டீச்சுரம் சோழநாட்டுத் தலங்கள் , பழையாற்றின்கண் உள்ள , என்க . ` பட்டீச்சுரத்தாய் ` என்பது ` இறைவனே ` என்னும் அளவாய் நின்றது . வீடுவார் - பாசம் நீங்கப் பெறுவார் . ` வீடுவார்க்கு ` என்னும் உருபு தொகுத்தலாயிற்று . வன்மை , பிறர் அது மாட்டாமை விளக்கிற்று . ` வெருவ ` என்றது , இறைவியுங் கண்டு அஞ்சுதல் பற்றி . ஆடுதல் - மூழ்குதல் . ஆன் ஐந்து - ஆவினின்றும் உளவாகின்ற ஐந்து ; அவை , ` பால் , தயிர் , நெய் , நீர் , சாணம் ` என்பன . இவை ஐந்தும் ஒருங்கு சேர்ந்ததே ` ஆனைந்து ` ( பஞ்சகௌவியம் ) எனப்படும் . இவற்றுள் ஆனீர் ( கோசலம் ) சிலதுளிகளாகவும் , சாணம் அதனினும்மிகக்குறைந்த அளவுமாகச் சேர்க்கப்படும் என்க . ` இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில் - நின்ற மலம் அனைத்தும் நீக்குவது ` ( திருக்களிற்றுப்படியார் - 7) என்பதனான் ஆப்பியது பெருந்தூய்மையையும் , அந்நயத்தானே ஆனீரினது தூய்மையையும் தெற்றெனவுணர்க . இக்காலத்து இஃதறியாத சிலர் , ஆனீரினையும் சாணத்தினையும் பிறவுயிர்களுடையவற்றோடொப்ப வாலாமை யுடையனவென மயங்கி அவற்றை மறுத்து , மோரும் வெண்ணெயும் கொண்டு , தம் மனஞ்சென்றவாறே கூறுப . மோரும் வெண்ணெயும் தயிர் நெய்களின் வேறாகாமைதானும் அவர் நோக்கிற்றிலர் என்க .

பண் :

பாடல் எண் : 7

மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலும் மால்விசும்பு மானாய் போற்றி
விண்துளங்க மும்மதிலு மெய்தாய் போற்றி
வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
பார்முழுதும் ஆய பரமா போற்றி
கண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலங் கொண்ட கபாலீ போற்றி.

பொழிப்புரை :

நில உலகம் அசையுமாறு கூத்தாடுதலை மகிழ்ந்தவனே ! பெரிய கடலும் வானமும் ஆனவனே ! வானுலகம் நடுங்கும் படி மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்தவனே ! யானைத் தோலினால் உடம்பை மூடிக்கொள்ளும் , உலகியலுக்கு வேறுபட்டவனே ! பண்கள் பொருந்தப் பாடுதலில் பழகியவனே ! உலகம் முழுதுமாய் பரவியிருக்கும் மேம்பட்டவனே ! கண் அசைத்துத் திறந்த அளவில் முற்காலத்தில் மன்மதனை அழித்தவனே ! நீரின் ஆழத்தால் கருநிறம் கொண்ட கெடிலக்கரை வீரட்டானத்தை உகந்து கொண்ட , மண்டைஓட்டை ஏந்தியவனே ! உன்னை வணங்குகின்றேன் .

குறிப்புரை :

விண்துளங்க - விண்ணுலகம் அதிருமாறு . விகிர்தன் - ( உலகியலின் ) வேறுபட்டவன் . ` கார் ` என்னும் மேகத்தின் பெயர் , நீருக்கு ஆயிற்று .

பண் :

பாடல் எண் : 8

வெஞ்சினவெள் ஏறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

மிக்க சினத்தையுடைய வெண்ணிறக் காளையை வாகனமாக உடையவனே ! விரிந்த சடையின் மேல் கங்கை வெள்ளத்தைத் தங்கச் செய்தவனே ! உறங்காது பிச்சை எடுக்கும் மேம்பட்டவனே ! உன்னை வழிபடும் ஒழுக்கத்தை உடைய அடியார்களின் துயரைத் துடைப்பவனே ! விடம் தங்கிய கழுத்தை உடைய தலைவனே ! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே ! இனிய சொல்லை உடைய பார்வதி பாகனே ! அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் ! உன்னை வணங்குகின்றேன் .

குறிப்புரை :

சினம் , இன அடை . ` துஞ்சாது ` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று . ` கை ` என்பது இடப்பகுதியை யுணர்த்தல் போலக் காலப் பகுதியையும் உணர்த்துமாகலின் . ` தொழுத கை ` என்பதற்கு , ` தொழுத பொழுதே ` என உரைக்க . ` தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி ` என்பது ( தி .8 4.131) திருவாசகத்துப் போற்றித் திருவகவலுள்ளும் வந்தமை காண்க . அம்சொல் - அழகிய சொல் . சொற்கு அழகாவது , கேள்வியிலும் பயனிலும் இன்பந்தருதல் . அமர்தல் - விரும்புதல் . ` அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி ` என்னும் இதுபோல்வன . சார்த்துவகையால் அம்மைக்குரிய மறைமொழிகளாதலுணர்க .

பண் :

பாடல் எண் : 9

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப் பதஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

அடியார் உள்ளத்தை இருப்பிடமாய்க் கொண்டு நிலைபெற்ற சிவபெருமானே ! இதயத்தாமரையில் ஞானவடிவாகத் தங்கியிருப்பவனே ! புண்ணியமே வடிவானவனே ! தூயனே ! காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்திகளாகவும் இருக்கும் மேம்பட்டவனே ! உண்மைப்பொருளே ! என் தந்தையே ! நேரங்களில் சிறந்த அந்திப்பொழுதாக இருக்கும் அரனே ! வீரட்டத்திலிருந்து உலகை ஆள்பவனே ! உன்னை வணங்குகின்றேன் .

குறிப்புரை :

` சிந்தை ` என்றது சிந்திக்கப்படும்பொருளை . எனவே , அசிந்திதனாயினும் சிந்திதனாய் நின்று அருளுதலைக் குறித்தருளிய வாறாம் . ` சிந்தையாய் நின்ற சிவனே போற்றி ` என்பது வழிபாட்டில் மூலமறையாய் நிற்றற்குரியதாதலறிக . சீபர்ப்பதம் ` ` சீசைலம் ` என்னும் தலம் . இது தெலுங்கநாட்டில் உள்ளது ` ` புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் ` என் றருளினாரேனும் , ` புந்திப் புண்டரிகமாய் அதனுள் இருப்பவனே ` என்றல் திருக்குறிப்பென்க . இஃது ஆசனம் , மூர்த்தி இரண்டற்கும் ஒருங்கே யுரித்தாதல் அறிக . இதனால் , அடியவர் உள்ளத்திருந்து அவரது அகவழிபாட்டினை ஏற்றருளுதலைக் குறித் தருளினமை காண்க . புண்ணியன் - அறவடிவினன் . சந்தி ; ` காலை , நண்பகல் , மாலை , என்னும் முப்போதுகள் , சந்திக்குரிய இறைவனை , ` சந்தி ` என்றருளினார் . இம்முப்போதுகளினும் இறைவி முறையே படைப்பாள் ( பிராமி ), காப்பாள் ( வைணவி ), துடைப்பாள் ( இரௌத்திரி ) என நிற்க , இறைவன் அவளோடு அவ்வாறே உடனாய் நின்று . அவைகளில் செய்யப்படும் தொழுகைகளை ஏற்று அருள் புரிவன் என்க . இதனாற் பல தெய்வ உணர்வின்றி , ஒருமுதல் உணர்வோடு செய்யும் சிவநெறி வழிபாட்டு முறை பெறப்படுதல் காண்க . சதுரன் - திறலுடையவன் . தத்துவன் - உண்மைப் பொருளாய் உள்ளவன் . தாதை - தந்தை ; இது விளியேற்று , ` தாதாய் ` என நின்றது . அந்தி - மாலை ; ` முனிவர் வந்தார் ; அகத்தியனும் வந்தான் ` என்பது போல , அருளுதலாகிய சிறப்புப்பற்றி மாலைப்போதினைச் சிறந்தெடுத்தோதினமையின் , மேல் ` சந்தி ` என்றது , ஏனை இரண்டனையுமே எனக்கொள்க . அரன் - அழிப்பவன் . உயிர் அழிக்கப்படாமையின் , அழித்தல் , உயிரைப்பற்றியுள்ளமாசுகளையே என்க . அந்திக்கண் அரனாய் நிற்றல் குறிக்கப்பட்டவாறறிக .

பண் :

பாடல் எண் : 10

முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.

பொழிப்புரை :

முக்கண்ணனே ! முதல்வனே ! முருகனுடைய தந்தையே ! தென்திசைக் கடவுளே ! அறவடிவினனே ! மெய்ப் பொருளே ! என் தந்தையே ! திருமாலும் , பிரமனும் ஒன்று சேர்ந்து அண்ணலே என்று அழைத்துக் கை கூப்புமாறு அசையாது ஒளிப்பிழம்பாய் நின்றவனே ! வீரட்டானத்து இறைவனே ! வேறு எங்கும் பற்றுக் கோடில்லாத அடியேன் தந்தையாகிய உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

` முதல்வன் தலைவன் , பதி ` என்பன ஒரு பொருட் சொற்கள் . ஒரு சில முதன்மையன்றி , எல்லா முதன்மையுமுடைமையின் , ` முதல்வன் ` என்றருளிச்செய்தார் ; கிளந்தோது மிடத்து , ` முழுமுதற் கடவுள் ` எனக் கூறுப . ` பயந்தாய் ` என்றது . உலக நலத்தின் பொருட்டு மகன்மை முறையாற் படைத்தருளினமை பற்றி ; இதனை , ` கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் - கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும் ` எனப் பின்னர் ( தி .6. ப .53. பா .4.) மூத்த பிள்ளையார்க்கு அருளிச்செய்யுமாற்றான் அறிக . ` முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி ` என்னும் இதுபோல்வன , சார்த்து வகையால் முருகக்கடவுளுக்குரிய மறைமொழிகளாதலுணர்க . ` தக்கிணன் ` என்பது , எதுகை நோக்கித் ` தக்கணன் ` என நின்றது ; இது , தென்முகக் கடவுளாய் இருந்து அருள்செய்தலைக் குறித்தருளியவாறு . தருமன் - அறவடிவினன் . ` தத்துவனே போற்றி என்தாதாய் போற்றி ` என்பன மேலும் அருளிச்செய்யப்பட்டன . இவ்வாறு வருதல் , அன்புமேலீட்டால் பாடப்படும் வாழ்த்துச் செய்யுள்களுக்கு இயல்பென்க . தொக்கு - கூடி . ` அண்ணால் ` என்பது மருவி , ` அண்ணா ` என வழங்கும் ; அஃது இங்கு இடைக்குறைந்து நின்றது . ` தோளும் கையும் கூப்ப ` என்றருளியது , கைகளைத் தலைக்கு மேலாக எடுத்துக் குவித்தலை உணர்த்துதற் பொருட்டென்க . துளங்காது - அசையாது ; இங்கு ` எரிசுடராய் ` என்று அருளியதுமாலும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற உருவத்தினை . எக்கண்ணும் - எவ்விடத்தும் . ` கண்ணிலேன் ` என்பதில் ` களைகண் ` என்பது , முதற்குறையாய் , ` கண் ` என நின்றது ; புகலிடமுமாம் . ` எறிகெடிலம் ` என்பதற்கு , ` அலைகெடிலம் ` என்பதற்கு உரைத்தவாறேயுரைக்க . ` எக்கண்ணும் கண்ணிலேன் ` என்பதனை ஈற்றில் வைத்து ` நீயே எனக்குக் களைகண் ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க .
சிற்பி