திருஅதிகை வீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

அலைகள் ஒன்றொடொன்று மோதுகின்ற கெடில நதி பாயும் நாடனாய்த் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியுள்ள எம் செல்வனுடைய திருவடிகள் திருமாலால் தியானித்துப் போற்றப்படும் . பிரமனுடைய தலைகளுக்கு அணிகளாகும் , முருகனால் தொழப்பட்டு அணுகப்பெறும் . பற்றுக் கோடாகக் கொண்ட அடியவர்களுக்கெல்லாம் அடைக்கலம் நல்கும் , தம்மை வழிபடுபவர்களுடைய பாவத்தைப் போக்கும் , பதினெண் தேவ கணத்தவராலும் பாடப் பெறும் .

குறிப்புரை :

அரவணையான் - திருமால் . அருமறையான் - பிரமன் . சரவணத்தான் - முருகப்பெருமான் . அரற்றுதல் - கூப்பிடுதல் , ` ஐயனே அரனேயென்றரற்றினால் - உய்யலாம் ` ( தி .5. ப .60. பா .7) என்றருளிச் செய்தமை காண்க . முதல் இரண்டு தொடர்களாலும் , காரணக் கடவுளர்களுக்குச் சார்பாய் நிற்றல் அருளிச் செய்தவாறு . மூன்றாவதனால் அபர முத்தர்க்குச் சார்பாதல் அருளிச்செய்தவாறு . நான்காவதனால் பரமுத்தியாதல் அருளிச்செய்தவாறு . ஐந்தாவதனால் , வினை நீக்கத்திற்கு வாயிலாதல் அருளிச்செய்தவாறு , ஆறாவதனால் , யாவராலும் வணங்கப்படுதல் அருளிச்செய்தவாறு , ` தென்கெடிலம் ` என்றதில் , ` தென்னங்குமரி ` ( பதிற்றுப்பத்து -2-1) என்றாற்போல , இனமில்லாத அடை அடுத்தது ; ` தென் ` அழகுமாம் , செல்வன் - எல்லாம் உடையவன் , ஏழு எட்டாம் தொடர்கள் எழுவாய்கள் ; ஏனையவை பயனிலைகள் ; எழுவாயாய் நிற்கும் ` அடி ` என்பன அடைவேறுபாட்டால் ஒரு பொருள் மேற்பல பெயராயின . பின் வருவனவற்றுள்ளும் இவ்வாறுணர்க .

பண் :

பாடல் எண் : 2

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.

பொழிப்புரை :

விரைந்து செல்வதாய் ஏனைய காளைகளினின்றும் மாறுபட்ட காளையை ஊர்பவனும் , நீண்ட பிறையை முடிமாலையாக அணிந்தவனும் , கெடில நதிக்கரையிலுள்ள அதிகை வீரட்டானத்தை நீங்காது உகந்தருளியிருப்பவனும் ஆகிய எம்பெருமானுடைய திருவடிகள் தீவினை உடையவரால் ஒரு காலும் அணுகப்பெறாதன . நலிவுற்றுச் சரணாக அடைந்தவரை அழியாமல் காப்பன . முழவு ஒலித்தலையும் தாளம் இடுதலையும் பயிற்றுவிப்பன . வெகுண்டெழுந்த கொடிய கூற்றுவன் மீது பாய்ந்தன . கடலால் சூழப்பட்ட இவ்வுலகைக் காக்கும் திருமாலால் விரும்பிப் போற்றப்படுவன .

குறிப்புரை :

முதல் தொடரில் சிலர் அடையாமைக்குக் காரணம் அருளிச் செய்தவாறு , குறைந்து - நலிவுற்று . ஆழாமை - அழியாமல் . இதனால் அருள் மிகுதி அருளியவாறு . பயிற்றுதல் - நன்கு உணரச் செய்தல் ; இது அவை கற்றாரை என்க . இதனால் முதன்மை அருளியவாறு . நான்காவதனால் ஆற்றல் மிகுதி அருளியவாறு . ஐந்தாவது முதலிய நான்கு தொடர்களும் எழுவாய்கள் .

பண் :

பாடல் எண் : 3

வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
திருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

கெடில நாடனாய் அதிகை வீரட்டத்தை உகந்தருளிய செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் எம் பெருமானைத் தூற்றிக் கொண்டே துயிலெழுபவருடைய தீய விருப்பங்களே நிறைவேறச் செய்வன ; வஞ்சனையாகிய வலையிலே அகப்படாதன . கையால் தொழுது நாவினால் துதித்து நாம் அகக் கண்ணால் காண வாய்ப்பு அளிப்பன . உலகத்தார் கணக்கிடும் எல்லையைக் கடந்து நிற்பன . அடியவராகிய நாம் உடலால் தொழுது நாவால் துதித்துக் கையால் நெய் அபிடேகம் செய்யப் பொருந்துவன . நீண்ட வானுலகையும் கடந்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பன .

குறிப்புரை :

வைதல் - கேடு கூறுதல் , எழுதல் - துயிலுணர்தல் . போகா அடி - போகாமைக்கு ( அவர்கள் அழுந்துதற்கு ) ஏதுவாய அடி ; இதனால் , மறைப்பாய் நிற்றல் அருளியவாறு . இவ்வாறருளிச் செய்தமையின் , இறைவனை உறவாக நினையாது பகையாய் நினையினும் , உள்பொருளாக நினையாது இல் பொருளாக நினையினும் வீடு கூடும் என்பாரது கூற்றுப்பொருந்தாமையறிக . வஞ்சவலை - வஞ்சனையாகியவலை . பாடு - படுதல் - ஒன்று - சிறிது . ` ஒன்றும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . இதனால் . கரவுடையார்க்கு அருளாமை அருளியவாறு . ` நாம் ` என்றது , கரவிலாதார் அனைவரையும் உளப்படுத்து , இதனால் , கரவிலார்க்கு அருள் செய்தலும் , அவர் அவ்வருளைப்பெறுமாறும் , அருளப்பட்டன . கணக்கு - எண் . வழக்கு - சொற்றொடர் . இதனால் , மனமொழிகளைக் கடந்து நிற்றல் அருளப்பட்டது . நெய் , என்றது , எண்ணெய் , ஆனெய் தேனெய் என்பன பலவும் அடங்க . இனம்பற்றிப் பால் , தயிர் முதலிய பலவுங்கொள்க . ` நெய் ஆட்டும் அடி ` என இயையும் . இதனால் , ` மன மொழி மெய்கட்கு அகப்படுதல் ` அருளியவாறு . ஆறாவது தொடரில் அண்டங்களின் உள்ளும் புறம்புமாய் நிற்றல் அருளிச் செய்யப்பட்டது .

பண் :

பாடல் எண் : 4

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

தெளிவான நீரை உடைய கெடில நதி பாயும் நாட்டினனாய் , திருவீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் தாமரையை அரும்பச் செய்யும் காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை நிறத்தாலும் ஒளியாலும் ஒப்பன . தம் அழகை ஓவியத்து எழுதலாகாத வனப்பினவாய் அடியார்களுக்கு அருளை வழங்குவன . சுரும்புகளும் வண்டுகளும் சுற்றித் திரியும் வாய்ப்பினை அளிப்பன . சந்திரனையும் கூற்றுவனையும் வெகுண்டன . பெருவிருப்புடைய அடியவரால் குழாமாகப் போற்றப்படுவன . தவறு செய்தவர்களுடைய தவறுகளை அறியும் ஆற்றல் உடையன .

குறிப்புரை :

` அரும்புவித்த ` என்பது , ` அரும்பித்த ` எனத்தொகுத்தலாயிற்று , அரும்புவித்தல் , தாமரையை என்க . தாமரையை மலர்விப்பதேயன்றி அரும்புவிப்பதும் , உலர்விப்பதும் ஞாயிறேயாகலின் , இங்கு அரும்புவித்தல் கூறப்பட்டது . இவ்வுவமையால் திருவடி உலகை முத்தொழிற்படுத்தல் விளங்கும் . இதனையே , ` வானின் முந்திரவி யெதிர்முளரியலாவுறும் ஒன்றலர்வான் முகையாம் ஒன்றொன்றுலரு முறையினாமே ` எனச் சிவப்பிரகாசத்துள் (17) எடுத்தோதினார் என்க . இரண்டாவது தொடரால் உயிருணர்வைப் பிணித்துக் கோடல் அருளியவாறு . ` சுரும்பும் வண்டினங்களும் ` என்க . ` மதம் ` ` மத்தம் ` என நிற்றல்போல , ` இதம் `, ` இத்தம் ` என நின்றது . இதம் - இனிமை , பிணிப்புண்டார்க்குப் பயனுந்தருதல் அருளியவாறு . சோமன் - சந்திரன் . நான்காவது தொடரில் குற்றம்செய்தலும் , செய்தற்கு உடம்படுதலும் உடையாரை ஒறுத்தல் அருளியவாறு . பித்தர் , அன்பர் . ` பெரும்பித்தர் ` என்றதும் , ` பிதற்றும் ` என்றதும் பழித்தது போலப் புகழ்ந்தவாறென்க . இதனால் , பயன் எய்தினார் அம்மகிழ்ச்சி மேலீட்டால் பலபட வாழ்த்துதல் அருளியவாறு . பிழைத்தல் - பிழை செய்தல் , பிழைப்பு - பிழை . அதை அறிய வல்லுதலாவது , அவர் , ` யாம் இதனை மறைத்துவிட்டேம் ` என்று உள் மகிழாதவாறு அப் பிழைக்கேற்ப ஒறுத்தலும் , மறைக்க வொண்ணாதவாறு வெளிப்படுத்தலும் . இதனால் , நடுவுநிலைமை நடாத்தும் திறன் அருளிச் செய்யப்பட்டது . திருந்துதல் - தெளிதல் .

பண் :

பாடல் எண் : 5

ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

கெடில நாட்டுத் திருவதிகை வீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் படைப்புக் காலத்து ஒன்றாகி நின்று முற்றழிப்புக் காலத்தில் மாயையைத் தொழிற்படுத்தாது தம் நிலையிலேயே நிற்பன . ஒன்றில் கழலும் மற்றொன்றில் சிலம்பும் ஒலிக்குமாறு அமைந்தன . புகழ்வாருடைய புகழ் உரைகளுக்கு முடிவு காண இயலாதபடி தடுக்கும் ஆற்றல் உடையன . இப்பெரிய நில உலகிலுள்ளார் மகிழ்ந்து துதிக்கும் வாய்ப்பினை அளிப்பன . அவ்வாறு இன்புற்று அடியவர்கள் அருச்சித்த பூக்களைத் தம்பால் தாங்கி நிற்பன .

குறிப்புரை :

` ஒருகாலம் ` என்றது , படைப்புக்காலத்தை . ` ஆண்டு , இறைவர் ஒரு திருவடியினராய் ( ஏகபாதராய் ) நின்று , தமது இடப் பாதியில் அரியையும் , வலப்பாதியில் அயனையும் தோற்று வித்தருளினார் ` எனப் புராணங் கூறலின் , ` ஒன்றாகிநின்றஅடி ` என்றருளிச் செய்தார் . இதனால் , முதலுருவாதல் அருளப்பட்டது . ` ஊழி ` என்றது , முற்றழிப்புக் ( சருவசங்கார ) காலத்தை . ஆண்டு உயர்தலாவது , மாயையைத் தொழிற் படுத்தாதொழிதல் , இதனால் , தன்னிலையில் நிற்றல் அருளியவாறு . கழல் ஆடவர்க்கும் , சிலம்பு பெண்டிர்க்கும் உரியன . இதனால் , அப்பனும் அம்மையுமாய்ச் செம்பாதியாய் இயைந்து நிற்றல் அருளிச் செய்யப்பட்டது . ` உருவிரண்டும் ஒன்றோடொன் றொவ்வாவடி ` ( ப .6 பா .6) என்றருளிச் செய்தலும் இது பற்றி , இஃது அவற்றின் அணிகலன்களையும் , அஃது அவற்றின் உருவத்தையும் வியந்தவாறென்க . இந்நிலை உலகின் கண் வைத்தறியப்படாத அதிசய நிலையாகலான் வியப்புத்தருவதாயிற்று . புகழ் - புகழ்தல் ; முதனிலைத் தொழிற் பெயர் , தகைத்தல் - தடுத்தல் . தகைத்தல் . முற்றுப் பெறாமையால் இடைக்கண் ஒழியச் செய்தல் , இதனால் , அளவில் புகழுடைமை அருளியவாறு . நிலத்தவர் இன்புறுதல் உலகின்பம் பெற்றமை பற்றி . இதனால் உலகவின் பத்தினைப் பயத்தல் அருளிச் செய்யப்பட்டது . ` இன்புற்றார் ` என்றது , அவர்தம்மையே . ` ஏறும் ` என்றது , பயன் பெற்றமை காரணமாக இட்டமையின் , ஏறாதவாறு ஒதுக்கத் தக்கதென்பதும் , அன்னதாயினும் , அப்பயன் வழித்தோன்றிய அன்பு காரணமாக இட்டமையானும் , அவ்வன்பு தானே பின்னர்ப் பயன்கருதாது செய்யும் அன்பாய் முறுகி வளர்தல் வேண்டுமாகலானும் ஏறக் கொள்ளப்பட்ட தென்பதும் தோன்ற நின்றன . இதனான் , உலகவரை ஆட்கொள்ளுமாறு அருளிச் செய்யப்பட்டது .

பண் :

பாடல் எண் : 6

திருமகட்குச் செந்தா மரையாமடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

அழகிய கெடிலநாடனாய திருவதிகை வீரட்டானத்து எம்செல்வன் சேவடிகள் திருமகளுக்குச் செந்தாமரை போல்வன . சிறந்த அடியார்களுக்குத் தேன் போல இனிப்பன . செல்வர்களுக்கு அவர்கள் செல்வத்தைச் செலவிடும் திறத்தை ஓர்ந்து அறிய உரைகல்லாய் இருப்பன . புகழ்பவர் புகழ் எல்லையைத் தடுக்க வல்லன . வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன . தமக்கு உருவம் உடைமையே இயல்பு என்று உணரப்படமுடியாமல் உருவம் அருவம் என்ற நிலைகளைக் கடந்திருப்பன .

குறிப்புரை :

முதல்தொடர் , செல்வத்திற்கு நிலைக்களமாதல் அருளியவாறு . வீடுபெறுதலை , ` சிறத்தல் ` என்பவாகலின் , சிறந்தவர் , வீடுபெற்றார் . ` தேனாய் ` என்புழி ` இன்பம் ` என்றது எஞ்சி நின்றது . உலகர்க்குச் செல்வம் வாயிலாக இன்பத்தை யருளி , வீடுபெற்றார்க்குத் தானே நேராய் இன்பம் அருளும் என்றவாறு . இவை இரண்டனாலும் சிற்றின்பம் பேரின்பங்களை யருளுதல் அருளப்பட்டது . பொருளவர் - செல்வர் . ` உரை ` என்றது கட்டளைக் கல்லினை . இதனால் , செல்வம் படைத்தாரது செல்வத்தின் நன்மை தீமைகளை நுண்ணிதாக அளந்து அவற்றிற்கேற்பப் பயன்கொடுத்தல் அருளப்பட்டது . நான்காவது தொடர் மேலைத் திருத்தாண்டகத்துள்ளும் வந்தமை காண்க . உருவென்று உணரப்படாத - உருவுடைமையே இயல்பென உணரப் படாத ; உருவம் அருவம் இவை அனைத்தையும் கடந்துநிற்றலே இயல்பென உணரப்படுகின்ற ; இதனால் , ஏனையோரது அடிகள் போலாமை அருளப்பட்டது

பண் :

பாடல் எண் : 7

உரைமாலை யெல்லா முடையவடி
உரையா லுணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையி லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பா ரில்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீரட்டானக் கபாலியடி.

பொழிப்புரை :

கரைகளிலே மக்களின் ஆரவாரத்தை மிகுதியாக உடைய கெடில நதி பாயும் நாட்டில் நறுமணம் கமழும் வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் , மண்டையோட்டை ஏந்திய சிவபெருமானுடைய திருவடிகள் பாட்டும் உரையுமாகிய சொற்கோவைகளை உடையன . சொற்களால் முழுமையாக உணரப்படாதன , உமா தேவியை மனம் வாடாமல் மகிழ்வாக வைப்பன . வானவர்களால் வணங்கி வாழ்த்தப்படுவன . அரைமாத்திரை ஒலியற்றாகிய பிரணவக் கலையில் அடங்குவன . தம் பரப்பினை யாரும் அளக்கவியலாதபடி எங்கும் பரவி இருப்பன .

குறிப்புரை :

உரைமாலை - சொற்கோவை ; இது பாட்டும் உரையுமாய் அமையும் ; அவை எல்லாவற்றையும் உடைய என்றதனால் , புகழ்தக்க பொருள் தாமேயாதல் அருளியவாறு . உரையால் - உரையளவையால் ; பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று . இதனால் , தலைப்பட்டே உணரற்பாலவாதல் அருளிச் செய்யப்பட்டது . வாடாமை - பிரிவால் வருந்தாதவாறு . வைக்கும் - ஒருகூறாகக் கொள்கின்ற . இதனால் , வரைமாது பொருளால் வேறாகாமை அருளியவாறு . வானவர்கள் வாழ்த்துதல் , துறக்கத்து அழியாது வாழ்தற்பொருட்டு . இதனால் , துறக்க இன்பம் அருளுதல் அருளப்பட்டது . மாத்திரை - அளவு . அவை எண்ணல் முதலாக உலகத்தார் கொள்வன . ` அரை ` என்றது , அவற்றின் நுணுக்கம் குறித்தவாறு . ` அரை மாத்திரை , பிரணவகலை ` என்பாரும் உளர் . அளக்கிற்பார் - அளக்க வல்லார் . ஐந்து ஆறாம் தொடர்களால் முறையே நுண்மையும் பெருமையும் அருளியபடி . கலி - நீராடுவாரது ஆரவாரம் . ` மாங்கலி ` மாமரங்களின் எழுச்சி என்க . கமழ் - பூவும் புகையும் கமழ்கின்ற .

பண் :

பாடல் எண் : 8

நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
நடுவா யுலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமும் ஆயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

கெடிலநாடர் பெருமானாம் திருவீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் இயற்கையிலேயே மலர் மணம் உடையனவாய் மலர்களாலும் அருச்சிக்கப் படுவன . அறமும் நீதியும் தம் வடிவமாக உலகியலையும் நாட்டியலையும் நிகழச்செய்வன . உலகிலே கதிரவனும் மதியமுமாய்ப் புறத்து ஒளிகளைத் தருவன . யோகியர் உள்ளத்தே ஒளிப்பிழம்பாய் உள்ளொளி பெருக்குவன . சந்திரனுக்கு ஏற்பட்ட மாசினைக் கழுவியன . மந்திரங்களும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களுமாய் உள்ளன .

குறிப்புரை :

` நறுமலராய் ` என்பதில் ஆக்கம் உவமை குறித்தது , ` பஞ்சாய்ப் பறந்தான் ` என்றாற்போல . ` ஏனையோர் அடிகள் மலரோடு உவமிக்கப்படுதல் பொலிவு பற்றியே ; இறைவர் அடிகள் அவ்வாறன்றி நறுமணம் பற்றியுமாகும் ` என்பார் , இதனை அருளிச்செய்தார் . இதனால் , அருள்வடிவாதல் அருளப்பட்டது . ` நடு ` என்றது அறத்தையும் நீதியையும் . ` உலகம் `, ` நாடு ` என்பன ஆகுபெயராய் , அவற்றது நடையினை உணர்த்தின . இம்மையோடு மறுமையையும் வேண்டி ஒழுகும் ஒழுக்கம் உலகியல் ; இம்மை ஒன்றனையே வேண்டி ஒழுகும் ஒழுக்கம் நாட்டியல் . அவ்விரண்டனையும் முறையே அறக் கடவுளிடத்தும் , அரசனிடத்தும் நின்று நடத்துதலின் இவ்வாறு அருளிச் செய்தார் ; இதனால் , உலகத்தை நடத்துதல் அருளியவாறு . மூன்றாவது தொடரால் , வெம்மையும் தண்மையுமாய் நின்று உதவுதல் அருளிச் செய்யப்பட்டது . தீத்திரள் - ஒளிப்பிழம்பு . உள்ளே -( யோகியர் ) உள்ளத்தே . இதனை , ` தகர வித்தை ` என உபநிடதங் கூறும் . இதனால் , யோகியர்க்கு அருளுதல் உணர்த்தப்பட்டது . ஐந்தாவது தொடர் தக்கன் வேள்வியில் நிகழ்ந்ததனைக் குறித்தது . அதனால் , மறக் கருணையால் மாசு நீக்குதல் விளங்கும் . மந்திரம் - வழிபாட்டுச் சொல் . தந்திரம் - வழிபாட்டு நூல் . இதனால் , அவையிரண்டாயும் நின்று பயன்தருதல் அருளப்பட்டது . செறி -( நீர் ) நிறைந்த ; இவ்வாறன்றி நாடருக்கு அடையாக்கலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
யடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார்வீ ரட்டத் தலைவன்னடி.

பொழிப்புரை :

இனிய இசை பாடப்படும் குளிர்ந்த கெடிலநதி பாயும் நாட்டில் பெருமைபொருந்திய அதிகைவீரட்டானத் தலைவனுடைய திருவடிகள் அடியார்களுக்குப் பக்கத்தில் உள்ளனவாயும் , அடியார் அல்லார்க்கு தூரத்தில் உள்ளவாயும் அமைந்திருப்பன . அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் போன்று உள்ளன . வழிபடுபவர்களுக்குத் துணையாகும் ஆற்றல் உடையன . உலகப் பற்றற்ற சான்றோர்கள் பற்றும் தகையவாய்ப் பவள நிறத்தை உடையன . மணிகள் போலவும் பொன் போலவும் மதிப்பிடற்கரிய பெருமை உடையன . மருந்தாய்ப் பிறவிப் பிணியை அடியோடு நீக்கும் ஆற்றல் உடையன .

குறிப்புரை :

அணியன அன்மை அடியவரல்லார்க்கும் , சேயன அன்மை அடியவர்க்கும் என்க ; இவ்வாறு எதிர்மறை முகத்தால் அருளிச்செய்தது வலியுறுத்தற்பொருட்டு . இரண்டாவது தொடர் அடியவர் அல்லார்க்கு அணியன வன்மை மாத்திரையேயன்றிச் செய்யும் தீங்கொன்றுமில்லை , அடியவர்க்கு அணியனவாய்ப் பேரின்பம் பயக்கும் என்றருளியவாறு . பாங்கு - பக்கம் . பக்கமாதல் ஆவது , துணையாய் நிற்றல் . வல்லுதல் , எவ்வகையான இடர்களையும் களையவும் , எல்லா இன்பங்களையும் அளிக்கவும் வல்லுதல் . ` பற்றற்றார் ` என்றது , உலகப்பற்றின் உவர்ப்புத் தோன்றப் பெற்றாரையும் , அவ்வாறு தோன்றப் பெற்று அதனின் நீங்கினாரையும் . ` பற்றுதல் ` என்றது , துணையாகப் பற்றுதலையும் , பேறாகப்பெற்று நிற்றலையும் . இந்நான்கனாலும் , பெறும்பேறாதல் அருளியபடி . ` மணியடி `. ` பொன்னடி ` உவமத்தொகைகள் ; இவற்றால் அருமை கூறியவாறு . மாண்பு - ஒப்பற்ற பெருமை ; இதனால் , ஒருசொல்லாகப் பெருமை அருளியவாறு . ` பிணி ` என்றது பிறவி நோயை . இதனாற் பிறவிப் பிணிக்கு மருந்து தானன்றி வேறின்மை அருளப்பட்டது . தணி - இனிய இசை . தகைசார் - பெருமை பொருந்திய .

பண் :

பாடல் எண் : 10

அந்தா மரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்ற லழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலன்னடி.

பொழிப்புரை :

ஒலிக்கும் தழற்பிழம்பாய் வளர்ந்த வடிவினனும் பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனும் , பெரிய பவள மலை போல்வானும் , அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் தூயோனும் ஆகிய எம் பெருமானுடைய திருவடிகள் தாமரைப் பூக்கள் போல மலர்ந்துள்ளன . இராவணனுடைய ஆற்றலையும் போக்கியன , ஏனைய பொருள்களின் தோற்றங்களுக்கு முன்னே தோன்றியன . சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்வனவாம் .

குறிப்புரை :

போது அலர்ந்த - போது அலர்ந்தது போன்ற . அரக்கனையும் , உம்மை உயர்வு சிறப்பு . இவையிரண்டனாலும் , முறையே மென்மையும் வன்மையும் அருளியவாறு . முந்தாகி - முதற்காலமாய் நின்று . முன்னே முளைத்தல் - ஏனைப் பொருள்களின் தோற்றங்கட்கெல்லாம் முன்னே தோன்றுதல் ; இதுவே . சிவதத்துவ நிலையாகச் சொல்லப்படுவது . நான்காவது தொடர் அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற நிலை ; இதுவே , சதாசிவ தத்துவ நிலையாகச் சொல்லப்படுவது , ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை ; இதுவே ஈசுவரத் தத்துவ நிலையாகச் சொல்லப்படுவது ; சுத்தவித்தை ஈசுரத் தத்துவத்துள்ளும் , சத்தி தத்துவம் சிவதத்துவத்துள்ளும் , அடங்க , சுத்த தத்துவம் மூன்றாகக் கூறப்பட்டவாறு உணர்க . ஆறாவது தொடரால் உயிருணர்வைப் பிணித்தற்றன்மை அருளியவாறு . வெந்தார் . எரிக்கப்பட்டார் . வெந்தாரது நீறு என்க . இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும் , யாவும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் அருளியபடி . ` முந்தாகி ` முதலிய ஐந்தனாலும் உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல் அருளிச் செய்யப்பட்டது .
சிற்பி