திருக்காளத்தி


பண் :

பாடல் எண் : 1

விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காண் அவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

விற்று அப்பணத்தால் உணவு வாங்குவதற்குரிய பொருள் ஒன்றும் தன்பால் கொள்ளாத வறியவனைப் போலக் காட்சி வழங்கி, கச்சி ஏகம்பத்தில் உகந்தருளியிருந்து, பிச்சை எடுத்தலைத் தவிர உணவுக்கு வேறு வழியில்லாத பெருந்திறமையனாய், மயானத்துக் காணப்படுபவனாய், ஏழு உலகங்களையும் இடையறாது தாங்கி நிற்கும் கற்றூண் போல்வானாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணங்களின் தலைவனாகிய எம்பெருமான் எப்பொழுதும் என் மனக்கண்களுக்குக் காட்சி வழங்கியவாறே உள்ளான்.

குறிப்புரை :

` விற்று ` என்னும் எச்சம், ` ஊண் ` என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயரைக் கொண்டது . ` ஊண் ` என்பது ஆகுபெயராய், அதற்கு ஏதுவாய பொருள்மேல் நின்றது. ` மற்றூண் ` என்றதும், அவ்வாறே நின்றது. ` பிச்சை` என்பதும், அதனாற்பெறும் உணவையே குறித்தது. மா சதுரன் - பெருந் திறமையன். ` பிச்சை யல்லால் மற்றூண் ஒன்றில்லாத மா சதுரன் ` என்றது, எள்ளி நகைத்தல்போலக் கூறி, இறைவரது இயல்பாய பற்றற்ற நிலையை வியந்தருளியவாறு. மயானத்து மைந்தன் - சுடலைக்கண் வாழும் ஆற்றலுடையவன்; என்றது, ` யாவரும் ஒடுங்குங் காலத்துத் தான் ஒருவனே ஒடுங்காது நிற்கும் முதல்வன் ` என்றபடி. மாசின்மை பொன்னுக்கு அடை. ` பொன் தூண் `, அருமையும் ஒளியும் பற்றிய உருவகம் . பொய்யாது - இடையறாது . பொழில் - உலகம் . தாங்குதல் - நிலைபெறுவித்தல். ` கல் தூண் ` என்றதும் உருவகம். கணநாதன் - சிவகணங்கட்குத் தலைவன். ` சிவகணம் ` என்பது மெய்யுணர்ந்தார் திரட்சி . ` கண் உளான் ` என்றது, ` கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் - நுண்ணியர் எம் காதலவர் ` ( குறள் 1126) என்றாற்போல காதல் மிகுதியால் நிகழ்ந்ததோர் அனுபவம்.

பண் :

பாடல் எண் : 2

இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

என் வினைகளை அழிப்பவனாய் , ஏகம்பத்தில் உறைபவனாய் , அணிகலன்களாக எலும்புகளையே அணிபவனாய் , எல்லா உலக நிகழ்ச்சிகளையும் வகுத்து அமைப்பவனாய் , மூவுலகங்களிலும் வியாபித்திருப்பவனாய் , பஞ்சாதியாக முறையாக வழு ஏதுமின்றி வேதங்களை ஓதும் பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கிய பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாய் , பராய்த்துறை . பழனம் , பைஞ்ஞீலி இவற்றில் உகந்தருளியிருப்பவனாய்க் கொன்றைப் பூவினாலாய மார்பு - மாலை , முடிமாலை இவற்றை அணிபவனாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

இடித்தல் - அழித்தல் , முடித்தல் - வகுத்தமைத்தல் . எனவே , உலக நிகழ்ச்சிகள் யாவும் அவன் வகுத்தவகையே நிகழ்வன என்பதாம் . ஐம்புரி என்பது ` பஞ்சாதி ` என்னும் வேத உறுப்பினை . இஃது ஐம்பது சொல்லாற் புரிக்கப்பட்ட தாயினும் , இப்பெயராற் கூறப்படுதல் வழக்கு . வேதத்தைப் படித்தான் , பிரமன் . பாசுபதன் - பசுபதியாதலை விளக்கும் அடையாளங்களை யுடையவன் . கடி - புதுமை . ` கடிக்கொன்றைக் கமழ்தார் கண்ணியான் ` என மாற்றிப் பொருள் கொள்க . தார் , மார்பில் அணியும் மாலை . கண்ணி , முடியில் அணியும் மாலை . ` கண்ணி கார்நறுங்கொன்றை ; காமர் - வண்ண மார்பிற் றாருங்கொன்றை ` என ( புறநானூறு - கடவுள் வாழ்த்து ) வருதலுங் காண்க .

பண் :

பாடல் எண் : 3

நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன்காண் அவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

நாராயணனாய் , பிரமனாய் , நான்கு வேதங்களையும் ஓதுபவனாய் , ஞானப் பெருங்கடலின் அக்கரையை அடையச் செய்யும் படகு போன்ற நிறைவானவனாய்ப் புண்ணியனாய்ப் பழையோனாய் , முறுக்குண்ட சடை மீது கங்கையை ஏற்ற தூயோனாய் , எங்கும் இயங்குபவனாய்ச் சந்திர சூரியர்களை உடனாய் இருந்து செயற்படுப்போனாய் , நற்பண்புகளில் தனக்கு உவமை இல்லாதானாய் , மெய்யுணர்வுடையோருக்குத் தானே முதற் பொருளாகத் தோன்றுபவனாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணத் தலைவனாகிய எம்பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

` காப்பவன் , படைப்பவன் ` என்னும் பொருளுடையனவாய , ` நாரணன் , நான்முகன் ` என்பன , முத்தொழில்களும் , சிவபிரானுடைய தொழில்களே என்பதை அறிவுறுத்து நின்றன . எனவே , அவற்றுள் ஒரோவொரு தொழிலை நல்வினை மிகுதியாற் பெற்று நின்ற கடவுளரையும் சிவபிரானையும் ஒருவரேயாக மயங்கிக்கொள்ளுதல் வேண்டா என்பதாம் . நாவாய் - மரக்கலம் . ஞானத்தின் கரையை அடையச்செய்தலின் அக் கடற்கு நாவாய் அன்னவன் என்றருளினார் . புண்ணியன் - அறவடிவினன் . புராணன் - பழையோன் ; யாவர்க்கும் முன்னோன் . சாரணன் - எங்கும் இயங்குபவன் . எல்லாவற்றையும் அறிபவன் ; எங்கும் தோற்றுபவன் . சந்திர சூரியர்களது தட்ப வெப்பங்களும் , ஒளிகளும் இறைவனுடைய திருவருளின் பயனே யாதல்பற்றி , ` சந்திரன்காண் கதிரோன் தான் காண் ` என்றருளினார் ; ` நின்வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள ; நின்தண்மையும் சாயலுந் திங்களுள ` ( பரிபாடல் .4. அடி 25 - 26. ) என்பதுங் காண்க . ` தன்மைக்கண் தானே ` என்றது , தன்மையிடத்தில் தன்னோடு உளப்படுத்திக் கூறத்தக்கார் ஒருவரும் இன்றித்தான் ஒருவனேயாய் நிற்பவன் ; தனக்குவமை யில்லாதான் என்றருளியவாறு . இனி , ` எல்லாப் பொருள்களும் தம்தம் இயற்கை நிலையில் நிற்குங்கால் ` தன்னின் வேறாதல் தோன்றாது நிற்ப , தான் ஒருவனேயாய் நிற்பவன் ` என்றருளியதூஉமாம் . ` தக்கோர்க்கெல்லாம் காரணன் ` என்றது , ` தக்கார்க்காயின் முதற்பொருள் தானேயாய்த் தோற்றுபவன் ` என்றபடி . தகுதியாவது . மெய்யுணர்வு ( அருட்கண் ). எனவே , ` மயக்க உணர்வுடையார்க்குத் தான் முதல்வனாய்த் தோன்றான் ` என்பதாம் .

பண் :

பாடல் எண் : 4

செற்றான்காண் என்வினையைத் தீயாடி காண்
திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க்
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோரேத்தும்
சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன்காண் அவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய் , உமா தேவியின் கணவனாய் , தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய் , மன் மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய் , ஒற்றியூர் , ஏகம்பம் , சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறை பவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

தீ ஆடி - நெருப்பின்கண் நின்று ஆடுபவன் ; சுடலைக் கண் சாம்பர்போல நெருப்பும் பரந்திருத்தல் அறிக . ` காடுடைய சுடலைப் பொடி பூசி ` ( தி .1. ப .1. பா .1.) என்றாற்போல வரும் பொடிபூசுதல் வேறு ; ` மண்பொடிக் கொண்டெரித்தோர்சுடலை மாமலை வேந்தன் மகண்மகிழ - நுண்பொடிச் சேரநின்றாடி நொய்யன செய்ய லுகந்தார் ` ( தி .1. ப .39. பா .7.) என்றாற்போல வரும் பொடியாடுதல் வேறு . அவ்வாறே தீ ஏந்துதல் வேறு ; தீ ஆடுதல் வேறு என்க . ` கையெரி வீசி நின்று கனலெரியாடுமாறே ` ( தி .4. ப .22. பா .4.) என்புழி இரண்டும் ஒருங்கு அருளிச் செய்யப்பட்டமை காண்க . ` தழலில் நின்றாடி ` ( பெரிய நாயகியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் -3) எனப் பிற்காலத்தாருங் கூறுதல் நோக்கத்தக்கது . உற்றான் - உறவினன் . ` இமையோர் ஏத்தும் சொல் ` என்புழிச் சொல் என்றது உருவகமாய் , சொல்லே உருவாய் நிற்பவன் எனப் பொருள் தந்தது , ` அறிந்தோர் சொன்மலை ` ( தி .11 திருமுருகாற்றுப்படை -263) என்றாற்போல . சுறா வேந்தன் - மீனக் கொடியுடைய தலைவன் ; மன்மதன் . ஏ வலம் - அம்பின் வலிமை . ` கற்றான் ` என்றது . ` நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் - தீயாண்டுப் பெற்றா ளிவள் ` ( குறள் - 1104) என்றாற்போலக் காதல்பற்றி இயற்கையைச் செயற்கையாக்கி அருளிய பான்மை வழக்கு .

பண் :

பாடல் எண் : 5

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய் , மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய் . தேவர்கள் தலை மேலானாய் , ஏழுலகங்களையும் கடந்தவனாய் , இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய் , நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய் , மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

` மனத்தகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் ` என்றது , ` மனம் , மொழி , மெய் ` என்னும் முப்பொறிகளினும் நின்று அவற்றைத் தொழிற்படுத்துவோன் என்றருளியவாறு . இப்பால் - இவ்வுலகத்துள் . செம்பொன் புனத்தகத்தான் - செவ்விதாகிய பொன்னையுடைய குறிஞ்சி நிலத்து உள்ளவன் ; இங்ஙனம் கூறவே , இனம் பற்றி ஏனைய மூன்று நிலங்களும் கொள்ளப்படும் . இனி இவ்வாறன்றி , ` செவ்விய பொன்போல்வதும் , புனங்களில் உள்ளதும் ஆகிய ( கொன்றைப் போது )` என்று உரைத்தலும் ஆம் . இப் பொருட்கு , ` புனம் ` என்றது முல்லை நிலத்தைக் குறித்ததாகவும் , புனத்தகத்தான் என்புழி ` ஆன் ` என்பதனை மூன்றன் உருபாகவும் கொள்க . ` புனத்தகத்தார் ` எனவும் பாடல் ஓதுப . ` கொன்றைப் போதின் உள்ளான் ` என்றது , கொன்றைப்பூ சிவபிரானுக்கு அடையாளப் பூவாதற் சிறப்புப் பற்றி , அதன்கண் விளங்கி நிற்பான் என்றவாறு . கனம் - மேகம் .

பண் :

பாடல் எண் : 6

எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்பம் மேயான்காண் இமையோ ரேத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்
நல்லவிடை மேல்கொண்டு நாகம் பூண்டு
நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

ஏனைய பொருள் தோன்றுதற்கு முன்னும் இருப்பவனாய் , ஏகம்பத்து விரும்பி உறைபவனாய் , தேவர்கள் துதிக்கப் பொறிவாயில் ஐந்து அவித்தவனாய் , முறுக்கேறிய சடையின் மேல் பாய்ந்த கங்கையை அதன்கண் நிரப்பியவனாய் , பெரிய காளைமீது ஏறிப் பாம்புகளைப் பூண்டு குளிர்ந்த மண்டை யோட்டை ஏந்தி , நாணத்தைக் காப்பதொரு பொருளாகத்துறந்தார் அணியும் காவி யாடை உடுத்துக் காபாலம் என்னும் கூத்தாடும் காளத்திநாதன் என் கண் உள்ளான் .

குறிப்புரை :

` தோன்றாமே ` என்புழி , நிற்க ` என ஒரு சொல் வருவிக்க . ` எல்லாம் தோன்றாமே முன் தோன்றினான் ` எனக் கூட்டுக . ` தோன்றினான் ` என்றது , ` உள்ளான் ` என்பதையும் , ` புலன் ஐந்தும் போக்கினான் ` என்றது , இயல்பாகவே பாசங்களின் நீங்கினமையையுமே குறித்தன . ` பாசத்துட் பட்டவராகிய இமையோர் ஏத்துமாறு , பாசம் இலனாய் நிற்பவன் ` என்றருளியவாறு . பூரித்தல் - நிரப்புதல் . நளிர் - குளிர்ச்சி ; இரத்தம் முதலிய தாதுக்கள் இல்லாமை . ` ஓர் நாணாய் ` என்பது , ` நாணத்தைக் காப்பதொரு பொருள் ` என்னும் அளவாய் நின்றது . அற்ற கல்லாடை - துறந்தமையைக் காட்டும் காவியுடை . காபாலி - ` காபாலம் ` என்னும் கூத்தையுடையவன் . ` கபாலி ` என்பது நீட்டலாயிற்று என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 7

கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

நீலகண்டனாய் , எமக்குக் காட்சி வழங்குபவனாய் , அருளால் ஏற்ற பெற்றியின் பல்வேறு வடிவு உடையவனாய் , வண்டுகள் நுகரும் கொன்றைப் பூவினை அணிந்தவனாய் , ஒளிவீசும் பவள வண்ணனாய் , ஏகம்பனாய் , எட்டுத் திசைகளும் தானேயாய பண்பினனாய் , முப்புரங்களையும் தீக்கொளுவியவனாய் . நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவனாய் , என் உள்ளத்திலிருந்து தீவினைகளை அழிப்பவனாய் , யானைத் தோலைப் போர்த்து மகிழ்ந்து காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்திப் பெருமான் என் கண் உள்ளான் .

குறிப்புரை :

கரி உருவு - கரிபோன்ற நிறம் ; கரிந்த உருவம் எனலுமாம் . ` எம் கண் உளான் ` என்றது ` அடியவர் கண்ணில் உள்ளான் ` என்றதாகக் கொள்க . கண்டன் - வரையறைப்பட்டவன் ; ` அருளால் ` ஏற்ற பெற்றியிற் பல்வேறு வடிவுடையவனாய் நிற்பவன் ` என்றவாறு . எரி பவளவண்ணன் - நெருப்பும் பவழமும் போன்ற நிறமுடையவன் . ` குணம் ` என்றது முற்றும் உணர்தலை ; உணர்தல் கூறவே , இயக்குதலும் தானே பெறப்படும் . ` தீர்த்திடும் ` என்னும் எச்சம் , ` சிந்தையான் ` என்பதன் இறுதிநிலையோடு முடியும் . எனவே , தீர்த்திடுவான் ` எனவும் , ` சிந்தையான் ` எனவும் அருளியவாறாம் .

பண் :

பாடல் எண் : 8

இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண்
வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய் , தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய் , வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய் . பூணூலும் பூண்ட மார்பினனாய் , வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய் , பார்வதி கணவனாய் , மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

` இல் ஆடிச் சென்று சில்பலி ஏற்கின்றான் ` என இயைக்க . இல் ஆடி - இல்லங்கள் தோறும் நடந்து . சில் பலி - அட்டனவும் அடுதற்கு உரியனவும் ஆகிய பொருள்கள் . வில்லாடி - வில் விளையாடல் செய்து . அகலம் - மார்பு . மல் ஆடு - வலிமை பொருந்திய . மழு வாள் - மழுவாகிய படைக்கலம் ; கையில் ஏந்துவன வற்றைத் தோளின்கட் சார்த்துதலும் உண்டாகலின் , மழுவைத் தோளின்கண் உளதாக அருளினார் .

பண் :

பாடல் எண் : 9

தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க
ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்
நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்
வானப்பே ரூரு மறிய வோடி
மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்
கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திரு ஏகம்பத்தனாய் , தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய் , நமக்கு இனியவனாய் , ஞானப் பிரகாசனாய் , ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய் , வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

` தேனப் பூ ` என்பதில் அகரம் சாரியை . ` உண்ட ` என்னும் பெயரெச்சம் , அதன் காரணந் தோன்ற நின்று , உண்ணுதற்குச் சென்ற எனப் பொருள் தந்து நின்றது , ` அறிவறிந்த மக்கட் பேறு ` ( குறள் . 61) என்புழிப் போல , இவ்வாறருளினாரேனும் , ` கொன்றையினது வண்டு உண்டதேனப் பூவினன் ` என்றல் திருவுள்ளமாகக் கொள்க . தேன் ஆர்ந்து உக்க - தேன் நிரம்பித் ததும்பிய . ` உக்க பூ ` என இயைக்க . ` பூங்கோதையாள் ` என்பது ஒருசொற் றன்மையாய் , ` மகடு ` என்னும் பொருள் உடைதாய் நின்று , ` ஞானம் ` என்னும் அடையடுத்து நின்றது . ` ஞானமே வடிவாகிய அம்மை ` என்றருளியவாறு . ` ஞானப் பூங்கோதை ` என்பதே இத்தலத்து அம்மைக்குப் பெயராக வழங்குதல் இங்கு அறியற்பாலது . ` ஞானத்து ஒளியானான் ` என்புழி நின்ற ஞானம் , உயிரறிவு . அதன்கண் ஒளியானான் என்றருளியது . அவ் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்தலை . ` வானப் பேரூர் ` என்புழி , ஊர் என்றருளியது , உலகத்தை . உம்மை சிறப்பும்மை . மறிய - அழிய . ஓடி - விரைந்து , ` மடித்து நின்றான் ` எனற்பாலது , ` மட்டித்து நின்றான் ` என விரித்தலாயிற்று ; எல்லா உலகத்தையும் எஞ்சாது ஒடுக்க வல்லவன் என்பது பொருள் . எல்லாம் ஒடுங்கியபின் ஆடல் புரிந்து நின்றான் ` என்றலுமாம் . கானப்பேர் , பாண்டிநாட்டுத் தலம் .

பண் :

பாடல் எண் : 10

இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் தான்காண்
மறைக்காட் டுறையு மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

யாவருக்கும் முதல்வனாய் , ஏழுலகும் , ஏழ் கடலும் இவற்றைச் சுற்றிய மலைகளும் ஆகிப் பலகுறைபாடுகளையும் உடைய உயிர்கள் தனக்குச் செய்யும் குற்றறேவல்களை ஏற்றுக் குடமூக்குத் தலத்திலுள்ள கீழ்க்கோட்டத்தை விரும்பி , வேதம் ஓதும் வானோருக்கும் தலைவனாய்த் திருமறைக் காட்டுத் தலத்தில் தங்கும் நீலகண்டனாய்க் கறைக் கண்டனாய்க் காபாலக்கூத்து ஆடும் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

இறையவன் - யாவர்க்கும் முதல்வன் . குறைஉடையார் - பல்வகையான குறைபாடுகளை உடைய மக்கள் . குற்றேவல் - சிறிய தொண்டு . கொள்வான் - குறைநோக்கி ஒழியாது , மாட்டாமை நினைந்து ஏற்றுக்கொள்பவன் , மறை உடைய - வேதங்கள் தமக்குப் பொருளாக உடைய , ( வானோர் ) என்க ; ` வேதங்களிற் சொல்லப்பட்ட பலதேவர் ` என்றபடி . ` வானோர் ` எனவே , உயிர்வகையினர் என்பதும் , பெருமான் எனவே , பரம்பொருள் என்பதும் பெறப்படும் . படவே , வேதங்களுள் ஒரோவிடத்தில் அவர்களைப் பரம்பொருள் போலக் கூறுதல் , ஒரோ ஒரு கருத்துப் பற்றி எனவும் , சிவபிரானே பரம்பொருள் என்பதே வேதத்தின் துணிபு எனவும் தெளிவித்தவாறாம் .

பண் :

பாடல் எண் : 11

உண்ணா வருநஞ்ச முண்டான் தான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

பிறர் உண்ண இயலாத கொடிய நஞ்சினை உண்டவனாய் , ஊழித் தீயை ஒப்ப அழிப்பதனைச் செய்பவனாய்ப் பண்களுக்குப் பொருந்தப் பல வாச்சியங்களை இயக்கிப் பாடியவனாய் , தான் ஓதிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட இறைமைப் பண்புகளை உடையவனாய் , அண்ணாமலையானாய் , அடியார் கூட்டம் தன் திருவடிகளைத் தொழுது போற்றுமாறு அருளுபவனாய் , தன்னை மனக்கண்களால் காண்பவர்களுக்கு அரிய காட்சிப் பொருளாய் இருப்பவனாய் உள்ள காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

உண்ணா - உண்ணலாகாத , அரு நஞ்சம் - மீட்டல் இயலாத பெருவிடம் , அதனை உண்டான் என்றருளினமையால் , அவனது பேராற்றலுடைமையையும் , பேரருளுடைமையையும் விதந்தருளிச் செய்தவாறு . ` ஊழித்தீ அன்னான் ` என்றது , நிறமாகிய பண்பும் , முழுவதூஉம் அழித்தலாகிய தொழிலும் பற்றி வந்த உவமை உகப்பார் - விரும்புவார் ; என்றது தாருகாவனத்து முனிவர் மனைவியரை . ஆர - பொருந்த ` பண்பாடினான் ` என இயையும் . பல் இயம் - வீணை , துடி முதலிய வாச்சியங்கள் , ` பல்லியத்தோடு ` என உருபுவிரிக்க . ` எஞ்சிய பொருள்களை ஏமுறநாடி ` ( தி .11 திருமுரு காற்றுப்படை . 97) என்றாங்கு , வெளிப்படாது நிற்கும் மறைகளும் உளவாதலின் வெளிப்பட்டு வழங்கும் நான்மறைகளை ` பயின்ற நால்வேதம் ` என்றருளிச் செய்தார் . வேதத்தின் பண்பு என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகையை ` காட்டதுயானை ` என்பதுபோல , வாழ்ச்சிக்கிழமையாகக்கொண்டு , ` வேதத்தின்கண் விளங்கும் பண்பு ` என உரைக்க . ` பண்பு ` என்றது , இறைமைக் குணங்களை . அவை சத்தாதல் , ஏகனாதல் , பலவுந் தானாதல் முதலியன . கண் ஆரக் காணுதலாவது , அன்பாகிய காரணத்தால் , கண்ணுக்கு நிறைந்த , இன்பப் பொருளாகக் காணுதல் . அங்ஙனங் காண்பாரது கண்ணையும் , கருத்தையும் தன்னை யன்றிப் பிறிதொன்றையுங் காணாதவாறு ஈர்த்து நிற்றலை , ` ஓர் காட்சியான் ` என்றருளிச் செய்தார் . ` கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியுள் அண்டா ` ( தி .6. ப .26. பா .1.) ` மேவினார் பிரியமாட்டா விமலனார் ` ( தி .12 கண்ணப்ப நாயனார் புராணம் - 174) என்ற இத்திருமொழிகட்கு எல்லாம் இலக்கியமாய் நின்றது , கண்ணப்ப நாயனார் அநுபவமேயாம் . அவர் காளத்தியப்பரைக் கண்ட பின்னர் தம் உடம்பைத் தானுங் காணா தொழிந்தமை அறிக .
சிற்பி