திருப்பந்தணைநல்லூர்


பண் :

பாடல் எண் : 1

நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நூல்பூண்டார் நூன்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும் , மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர் . அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு , பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து , கையில் தீயினைக் கொண்டு , பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர் .

குறிப்புரை :

` நோவதங்கம் ` என்பது இடைக்குறைந்து , ` நோதங்கம் ` என நின்றது ; ` வருந்துவதாகிய மாயை உடம்பு ` என்பது பொருள் . ஆமை - ஆமை ஓடு ; ஆகுபெயர் . ` ஆதங்கு ` என்பதில் , ` ஆ ` முதனிலைத் தொழிற்பெயர் , ` ஆதல் ( வளர்தல் ) பொருந்திய ` என்பது பொருள் . அந்திவாய் வண்ணம் - அந்தி பொருந்திய நிறம் ; என்றது செவ்வானத்தினை . பாதம்கம் - பாதம் முதல் தலைவரையிலும் . பைங்கண் ஏற்றார் - பசிய கண்ணையுடைய இடபத்தையுடையவர் . பலி ஏற்றார் - பிச்சை கொண்டார் . இத்தலத்தில் இறைவரைப் பிச்சைக் கோலம் உடையவராகவே அருளிச்செய்தார் , நாவுக்கரசர் . ` பைங்கண் ஏற்றார் ` என்பதனையும் உடன் கூறுதலின் , விடையேறிய பிச்சைக் கோலமாக அருளினமை பெறப்படும் .

பண் :

பாடல் எண் : 2

காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணால்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து , களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து , மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு , ஒற்றியூரை உகந்து , அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து , பிடவம் , மொந்தை , குடமுழா , கொடுகொட்டி , குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது , அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர் .

குறிப்புரை :

கலன் - உண்கலன் . ஒற்றைக்கண் , நெற்றிக்கண் ; ஒருகண்ணாலே என்றுமாம் . பீடு உலாம்தனை செய்வார் - வலிமை கெடும் அளவு செய்வார் . ஈண்டு , ` உலக்குந்தனை ` என்பது , ` உலாந்தனை ` என நின்றது . ` பிடவம் ` முதல் குழல் ஈறாக உள்ளன , வாச்சியவகைகள் .

பண் :

பாடல் எண் : 3

பூதப் படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப் பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர் . விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர் . வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர் . திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர் . அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் .

குறிப்புரை :

திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் உருத்திரிந்து தாங்கிய இடபம் ` போர்விடை ` என்றும் , அறக்கடவுள் உருத்திரிந்து தாங்கும் இடபம் ` அறவிடை ` என்றும் உணர்க . இனி , ` போர்விடை ` என்புழி , ` போர் ` என்றதனை , ` இன அடை ` என்றலுமாம் . இவை ` செங்கண் விடை ` என வருகின்றுழியும் ஒக்கும் . வேதத்தொழில் வேதத்தின் வழிப்பட்ட தொழில் ; வேள்வி . அதனை உடையவர் , அந்தணர் ; அவர் விரும்ப நிற்றலாவது , வேள்விக்கு முதல்வனாகக் கொண்டு முதற்கண் அவியளித்து அவர் வழிபட , அதனை யேற்று அவர் எண்ணியவற்றை முற்றுவித்தல் . சிவபிரானையே வேள்வியின் முதல்வனாக வேதம் கொண்டுள்ளது என்பது , ` மேத பதிம் காத பதிம் ருத்ரம் ` ( இருக்குவேதம் . 1.43.47.) என்பதனான் அறிக . இதற்கு மாறாகச் செய்யத் தொடங்கிய தக்கன் வேள்வி அழிந்தது ; அவனும் தன்தலை இழந்து யாட்டுத் தலை பெற்றான் என்க . ஓதம் - அலை . உம்பர் - தேவர் . தேவரை அடியவராகவும் , அவரது உலகத்தை உடைமையாகவும் உடையவர் என்றவாறு . ` ஆண்டு ` என்னும் எச்சம் எண்ணுப் பொருளாய் நின்று , ` கழலார் ` என்னும் வினைக்குறிப்பொடு முடிந்தது . ` பாதக்கழலார் ` என இயையும் . தொடு - சுற்றிக் கட்டப்பட்ட . ` போரேற்றினார் ` என்பதும் , இருமாச்சீர்கட்கு ஈடாக மாங்கனிச்சீர் வந்தது .

பண் :

பாடல் எண் : 4

நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர் . மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று , ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று , பிச்சையிட வந்த மகளிரின் நிறை என்ற பண்பினைக் கவர்ந்தவர் . அவர் மழு ஏந்தி , உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் .

குறிப்புரை :

` அங்கையில் நெருப்பேற்றார் ` என்க . நிறையும் ஏற்றார் - தாருகாவன முனிவர் பத்தினிமாரது கற்பினை வாங்கிக் கொண்டார் ; நெஞ்சைப் புலன்வழி ஒடாது நிறுத்துதலைப் பொருந்தினார் என்றுமாம் . ` ஊரெலாம் பலியேற்றார் ` என்றது செயலையும் , ` பலியேற்றார் ` என்றது கோலத்தையும் குறிக்கும் . இறுதித் திருப்பாடலிலும் இவ்வாறே கொள்க . ஒர்கையில் ` என்பது , ` மழுவேற்றார் ` என்பதனோடும் இயையும் . மறி - கன்று . பார் உலாம் - பூமி முழுவதும் உலாவுகின்ற ; என்றது , யாவராலும் புகழப்படுகின்ற என்றபடி . ` ஏற்றார் ` என வந்தன பலவற்றுள் , ` பைங்கண் ஏற்றார் ` என்புழி உள்ளது ஒன்றும் , ` விடையை உடையார் ` எனவும் , ஏனைய எல்லாம் , ` ஏற்றலைச் செய்தார் ` எனவும் பொருள் தரும் . வருகின்ற திருப்பாட்டினுள்ளும் இவ்வாறே நிற்றல் காண்க .

பண் :

பாடல் எண் : 5

தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவராய் , எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து , அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர் . நடுங்காத அழகிய தலையை உடையவர் . தூய நீறணிந்தவர் . சடையில் முடிமாலை சூடியவர் . இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடு காட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர் . அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் .

குறிப்புரை :

ஏத்தும் - ஏத்துதற்கு ஏதுவாகிய . சோதி - ஒளி ; ஞானம் ; அது . தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்தாங்கறிதல் . இதுவே ஏனைய அருட்குணங்கட்கும் முதலாமாறுணர்க . துளங்கா மணி முடியார் - நடுங்காத அழகிய தலையையுடையவர் ; அஞ்சுவ தொன்றில்லாத முதல்வர் என்றபடி . ` அச்சம் வரின் தலை நடுங்கும் ` என்பதை ` அரசுதலை பனிக்கும் ஆற்றலை ` ( புறம் 42) என்பதனாலறிக . இண்டை . முடியில் அணியும் மாலை . ஈமம் - பிணத்தைச் சுடுங்காடு , பிணத்தை இடும் ( புதைக்கும் ) காடு அதனைச் சூழ்ந்திருக்கும் என்பது பற்றி , ` ஈமஞ்சூழ்ந்த இடுபிணக்காடு ` என்று அருளிச் செய்தார் . இடு பிணக்காடு - இடப்படும் பிணத்தையுடைய காடு . ஏமம் - இரவு . ` ஏமந் தோறும் இடுபிணக் காட்டு ஆடலார் ` என்க . ஆடலார் - ஆடுதலை உடையவர் . ` சுடுகாட்டு ஆடுதல் , இடுகாட்டு ஆடுதல் ` எனவருவன , இறைவன் எல்லாவற்றையும் அழித்த முற்றழிப்புக் காலத்தில் ( சருவ சங்கார காலத்தில் ) மீளத் தோற்றுவித்தற்கு உரியவற்றைச் செய்தலைக் குறிப்பனவாம் . இதுவே ` சூக்கும நடனம் ` எனப்படும் . ` அண்டத்துக்கு அப்புறத்தார் ` என்றது , மாயைக்கு அப்பாற்பட்டு நிற்றலை உணர்த்தும் . ஆதியானார் - எப்பொருட்கும் தாமே முதலாயும் , தமக்கொரு முதல் இல்லாதவராயும் உள்ளவர் . இதுபற்றியே சிவபிரானுக்கு ` ஆதி ` என்னும் பெயர் வழங்கும் . அஃது ஆதிபுராணத் திருக்குறுந்தொகை ` ( தி .5. ப .100.) என்பதனாலும் , ` ஆதியன் ஆதிரையன் ` ( தி .7. ப .97. பா .1.) என்றற்றொடக்கத்துத் திருப்பாடற் பகுதிகளாலும் அறியப்படும் . ` ஆதி பகவன் ` எனத் திருவள்ளுவ நாயனார் தமது முதல் திருக்குறட்கண்ணே இரு பெயரொட்டாக அருளிச்செய்ததும் , ` முதற்கடவுளாவான் சிவபிரானே எனச் சிறப்புவகையான் உணர்த்துதற் பொருட்டே ` எனச் சிவஞான முனிவர் ( சோமேசர் முதுமொழி வெண்பா . பா .1 ) அருளினார் .

பண் :

பாடல் எண் : 6

கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும் , உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான் , மத யானைத் தோலைப் போர்த்தவர் . எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர் . மான் தோலைத் தோளில் அணிந்து , நாகத்தைத் திருமேனியிற் பூண்டு , முடியிலும் பாம்பினைச் சூடி , நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓது கின்ற நாவினை உடையவர் . அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர் .

குறிப்புரை :

கடம் மன்னு - மதம்மிக்க . களி - மயக்கம் . கானப்பேர் , பாண்டிநாட்டுத் தலம் . மடம் - அறியாமை ; அவனருளியவாறன்றித் தாமாக ஒன்றையும் அறியாமை , மான் உரி தோல் - மானை உரித்த ` தோல் . மிசைத் தோளார் ` என்பதனை , ` தோள்மிசையார் ` என மாற்றிப் பொருள்கொள்க . ` மன்னி மங்கை காண நடம் ஆடுவார் ` என இயைக்க . மன்னி - நிலைபெற்று . ` என்றும் இடையறாது ` என்றவாறு . ` ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் நாதனார் ` ( தி .12 திருநீலக்கண்ட நாயனார் புராணம் -1) என்றருளிச் செய்தமை ( தி .6. ப .4. பா .5 உரை ) கூறினாம் , இதனை ; ` அனவரததாண்டவம் ` என்பர் . ` படம் ` என்றது பாம்பினை , சினையாகு பெயர் .

பண் :

பாடல் எண் : 7

முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி யுலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர் . அவர் பிறை சூடிய சடையினர் . மூவுலகும் துதிக்கும் முதல்வர் . சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர் . பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர் . வெள்ளியநீறு அணிபவர் . தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர் . பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார் .

குறிப்புரை :

மூவர் , ` அயன் , மால் , உருத்திரன் ` என்னும் காரணக் கடவுளர் , ஒரோவோர் அதிகாரத்தை இவரிடத்து வைத்து அவர் வாயிலாக , ` படைத்தல் . காத்தல் , அழித்தல் ` என்னும் தொழில்களை நடத்துதலால் , ` மூவரானார் ` என்றும் , முத்தொழிற்கும் தாமே உரியராதல் பற்றி , ` முதல்வ ரானார் ` என்றும் அருளிச்செய்தார் . திங்கள் கங்கையாள் காதலார் - திங்களையும் கங்கையாளையும் காதலித்தலைச் செய்வார் ; திருமுடியில் அணிவார் . ` காதலார் ` என்பதை இருபெயரோடும் தனித் தனி இயைக்க . காம்பு - மூங்கில் . ஏய் , உவம உருபு . ` ஊழி ஆனார் , உலகமானார் ` என்க . ஊழி , உலகம் ஒடுங்குங்காலம் . பற்றார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 8

கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும் , பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும் , நில உலகத்தவரும் வானுலகத்தவரும் , பிரமன் உபபிரமர்களும் , உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர் . கண் பொருந்திய நெற்றியை உடையவர் . கையில் மழு ஏந்தியவர் . காட்டிலும் , நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார் .

குறிப்புரை :

காட்டார் - காட்டில் வாழ்பவர் . நாட்டார் - நாட்டில் வாழ்பவர் . ஈண்டு , மலை காட்டினுள்ளும் . கடல் நாட்டினுள்ளும் அடக்கப்பட்டன . எனவே , நிலமுழுதும் உள்ளவர் என்றபடி . இதனை , நாடனென்கோ ஊரனென்கோ ` ( புறநானூறு - 49.) என்பதனோடு நோக்குக . ` சென்னியில் முடியார் ` ( முடியினையுடையார் ) என்க . ` பெண் ` என்றது , கங்கையை . சடைமுடி - சடையாகிய மகுடம் . ` பேரொன்றில்லார் ` என்றது , ` சொல்லுட்படாதவர் .` என்பதையும் ` பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன்றில்லார் ` என்றது , கருவி களுள்ளும் வினையுள்ளும் படாதவர் என்பதையும் குறிக்கும் . மற்றையோர் , உரகர் முதலிய கணத்தவர் . ஏத்த - ஏத்துதலினால் , பாடலார் - பாட்டுக்களை உடையவர் .

பண் :

பாடல் எண் : 9

ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
யனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர் . தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர் . நீறணிந்த மேனியர் . விடத்தை உண்டவர் . வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர் . உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர் . கங்கை தங்கு சடையினர் . ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர் . தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர் . புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர் .

குறிப்புரை :

நீலம் - நீலநிறத்தை உண்டாக்கும் விடம் . நெருப்பு உண்டார் - ` நெருப்பு ` என்றது , வேள்வித்தீயில் இடப்படும் அவியைக் குறிக்கும் . ` வட்டக்குண் டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார் - அட்டக்கொண்டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோமே ` ( தி .7. ப .18. பா .2.) என்றருளிச் செய்தமை காண்க . ` அங்கை அனலும் உண்டார் ` என்றதில் ` உண்டார் ` என்பது , ` ஏற்றார் ` என்னும் பொருள் பட நின்றது .

பண் :

பாடல் எண் : 10

கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

ஞானத்தை அடியார்க்கு வழங்குபவராய்த் தாமே ஞானவடிவாகி , நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய் , நாகை , குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான் . அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர் . வலிமை மிகுந்த அழகிய கயிலாய மலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன் தலைகள் சிதறுமாறு கோபித்த அப் பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர் . அவர் பைங்கண் ஏறு இவர்ந்து பணி ஏற்றவர் .

குறிப்புரை :

கல் ஊர் - கல் மிகுந்த நல்லூர் , சுவாமிகளுக்கு இறைவன் திருவடி சூட்டிய திருத்தலம் ; சோழநாட்டில் உள்ளது . ஞானத்தார் ஞானம் - தம்மை ( இறைவரை ) உணரும் ஞானியரது ஞானம் . எனவே , இத்தகைய ஞானம் இல்லாதார் ஞானியராகார் என்பது பெறப்பட்டது . மல் ஊர் - வலிமை மிகுந்த . மணிமலை - அழகியமலை ; கயிலாயம் .
சிற்பி