திருப்புன்கூரும் திருநீடூரும்


பண் :

பாடல் எண் : 1

பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்
பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

பிற பொருள்களின் கூட்டத்தால் பிறவாது எம் பெருமான் தானே தன் விருப்பத்தால் வடிவங்கொள்பவன். தன்னை விரும்பாதவர்களைத் தானும் விரும்பி உதவாதவன். இயல்பாகவே பந்தங்களின் தொடர்பு இல்லாத ஞான வடிவினன். தூய நன்னெறியில் ஒழுகுவதற்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகுக்கப்பட்ட எத்திசைக் கண்ணும் தானே பரவியிருப்பவன். திருப்புன்கூரை உகந்தருளியிருக்கும் அச்சிவலோகநாதனே நீடூரிலும் உகந்திருப்பவன். அத்தகைய செந்நிறச் சோதி உருவினைக் கீழ் மகனாகிய அடியேன் விருப்புற்று நினையாமல் இந்நாள் காறும் வாளா இருந்த செயல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

பிறவாதே தோன்றுதலாவது, பிற பொருள்கள் முதனிலையாய்க் கூடிநிற்க அக்கூட்டத்தின்வழித் தோன்றாது, தானே தனது இச்சையால், `அருவம், அருவுருவம், உருவம்` என்னும் மூவகைப்பட்ட வடிவங்களைக் கொண்டு, நிற்றல்.` `பிறவாயாக்கைப் பெரியோன்` (சிலப்பதிகாரம் 5 - 169) எனப் பிறருங் கூறினார். இதனானே பிறந்து தோன்றுவார் யாவரது பிறப்பிற்கும் தானே காரணன் என்பதுந் தானே போதரும். `அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக` என்பதும் காண்க. (திருக்களிற்றுப்படியார் - 1). `காரணம் காரணாநாம் தாதா` என்றது `அதர்வசிகை` என்னும் உப நிடதம். பேணுதல் - விரும்புதல். கட்டு - பந்தம். அதன்கண் என்றும் அகப்பட்டதின்மையால், துறத்தல் வேண்டாவாயிற்று. சோதி - ஒளி; என்றது, உணர்வை. எனவே, `இயல்பாகவே மலம் அற்ற தூய உணர் வுடையான்` என்பதுபெறப்படும். `வாலறிவன்` (குறள் - 2) என்றருளினார், திருவள்ளுவ நாயனாரும். அவ்வுணர்வுதானே அவற்கு வடிவமாகலின், `துறவாதே கட்டறுத்த சோதியானை` என்றருளிச்செய்தார். தூ நெறி - குற்றம் இல்லாத நெறி. அடையப்படும் பொருள்களது தூய்மையும், குற்றமும் அவற்றுக்கு வாயிலாகிய நெறிமேல் ஏற்றிக் கூறப்படும் என்க. தூநெறிக்குந் தூநெறியாய் நிற்றலாவது, நன்னெறிக்குச் சிறந்த பற்றுக்கோடாய் இருத்தல். அஃதாவது, அறம் தன்னொடு (இறைவனோடு) பொருந்தியவழிச் சிறந்த பயனாகிய வீடு பேற்றைத் தருதலும், பொருந்தாதவழி அதனைத் தராதொழிதலும், முரணியவழித் தீங்கு பயத்தலும் உடைத்தாமாறு நிற்றல். உம்மை சிறப்பும்மை. இறைவனொடு முரணிச்செய்யும் அறம் தீங்கு பயத்தல் தக்கன் செயலாலும், இறைவனொடு பொருந்திச் செய்யும் மறமும் வீடுபேற்றைத் தருதல் சண்டேசுரரது செயலாலும் நன்குணரப்படும்.
அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே.
என்றது சிவஞானசித்தி. (சூ.2 - 29) `அன்பிலார்` என்றது முரணி நிற்பாரை என்பது. எடுத்துக்காட்டால் விளங்கும். திறம் - பகுப்பு. திருப்புன்கூர்ப் பெருமானை, `சிவலோகன்` என்றே நாவரசர் அருளிச் செய்கின்றார். அப்பெருமானது திருப் பெயர் `சிவலோகநாதன்` என்பதேயாய் இருத்தல் கருதத்தக்கது. நீதன் (நீசன்) - கீழ்மகன். `நீதனேனாய்` என எச்சமாக்கியுரைக்க. `முன்னர் நினையாதிருந்த நெறியாகிய அறியாமை என்னே!` என்க. இது இவ்விருதலத்திலும் இறைவரை வணங்கிய பொழுது உண்டாகிய பேரின்பத்தில் திளைத்துநின்று, இளமைக் காலமெல்லாம் இதனைப் பெறாதே வாளா (சமணரோடு) கழிந்தமையை நினைந்து கழிவிரக்கங்கொண்டு அருளிச்செய்தது. அஞ்ஞான்றை நிலைபற்றியே தம்மை, `நீதனேன்` என்றார். இவ் வாறே, `ஏழையேன்` முதலாக வருவன காண்க. இத்திருப்பதிகத் துள்ளும், `சிவலோகனை` என்னும் கனிச்சீர் நின்ற அறுசீரடிகள் வந்தன.

பண் :

பாடல் எண் : 2

பின்றானும் முன்றானு மானான் தன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை
நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி
நல்வினையுந் தீவினையு மானான் தன்னைச்
சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீடூர் நிலாவி னானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

எதிர்காலமும் இறந்தகாலமும் ஆகியவன். தன்னிடம் பெருவிருப்புடைய அடியார்பக்கல், தானும் பெருவிருப் புடையவன். நல்வினையும் தீவினையும் செய்தவர்களுக்கு அவரவர் வினைகளுக்கு ஏற்பப்பயன்களை வழங்குபவன். வானளாவிய தீப்பிழம்பு வடிவானவன். திருப்புன்கூரை உகந்தருளிய அப் பெருமான் நீடூரிலும் நிலையாக உறைந்திருக்கின்றான். அப்பெருமானை நீசனேன் நினையாவாறு என்னே!

குறிப்புரை :

`பின்` முன்` என்றவை காலங்குறித்து நின்றன. அவையாகிநிற்றல், உடல் உயிர்போல அவற்றோடு ஒன்றாய் நின்று அவற்றை இயக்குதல், பித்தர் - பிறிதொன்றையும் விரும்பாது தன்னையே விரும்பும் பேரன்பர். இத்தகைய அன்பு பித்தோடு ஒத்தலின், `பித்து` எனப்படும். பித்தனாய் நிற்றல் - அவரிடத்துப் பேரருளுடையனாதல். இது, நம்பியாரூரர்க்குத் தூதனாய் இருகால் நடந்தமை முதலியவற்றாற் புலனாகும். நன்று - நன்மை; உறுதி. அவர்க்கு அவ்வுறுதிப்பொருள் தானேயாய் நின்றான்; என்றது, `உறுதி யுணர வல்லார்க்கு அவனையன்றி உறுதிப் பொருள் வேறில்லை` என்றவாறு. ஆங்கு, அசைநிலை. நல்வினையும் தீவினையும் செய்தார்க்கு அவை பயனாய்வருதல் அவனை இன்றி ஆகாமையின், `அவை ஆனான்` என்றருளினார். தீயாயது,மாலும் அயனும்தேட நின்ற நிகழ்ச்சியைக் குறிக்கும். ஆய - பொருந்திய. `நீடூர் நின்று நிலாவினானை` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 3

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை
இனிய நினையாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன். நல்லனவே நினையாதவர்களுக்குத் தான் இனியன் அல்லன். தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். ஓரிடம் விட்டு மற்றோரிடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்தருளியிருப்பவன். அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

`எவ்விடத்தும்` என்பது முன்னும் சென்று இயையும் இல்லாமை, ஊனக் கண்ணிற்குப் புலனாகாமை. எவ்விடத்தும் - எந்தப்பொருளிலும். இனிய - நல்லன. வல்லடைதல் - விரைந்து அடைதல். `அருளும் வண்ணம் வல்லான்` என இயைக்க. வண்ணம் - முறைமை. மாட்டாதார், அது (வல்லடைதல்) மாட்டாதார். மாட்டாதான் - இயலாதவன்போல வாளா இருப்பவன். செல்லாத செந்நெறி - ஓர் இடம் விட்டு மற்றோர் இடம் பெயராத நல்லநெறி; அணுவாந் தன்மை நீங்கி எங்குமாய் நிற்றற்குரிய நெறி. எனவே. பிறப்பின்றி வீடுபெறும் நெறி என்றதாம். ``பேரா இயற்கை`` (குறள் - 370.) என்பதும் காண்க. `விளை கழனி` என்பதற்கு, பயனை விளைக்கின்ற கழனி என உரைக்க. `நெல்லால்` என்பதில், ஆல், அசைநிலை.

பண் :

பாடல் எண் : 4

கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

கலைஞானத்தை முயன்று கற்றல் வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவன். கொடிய நரகத்தை அடையாதபடி காப்பவன். பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி ஆங்காங்கே உறைபவன். வில்லால் திரிபுரங்களை எரித்தவன். தீயின்கண் கூத்து நிகழ்த்துபவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்தருளியவன். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

`பணிவார்கட்கு, தானே பலவாய வேடங்கள் ஆகி அங்கங்கே பற்றானானை` என்றியைத்து, அதனை முதற்கண் வைத்து, அதன் பின்னர், அவர்கட்கு என்பது வருவித்துரைக்க.
தானே - தான் ஒருவனே. பற்று - உறைவிடம். `ஆனான்` என்றது, `ஆக இருந்தான்` என்னும் பொருளது. இது, `பணிய விரும்புவார்க்கு அவ்விருப்பத்தை எளிதில் நிறைவித்தற்பொருட்டுத் திருக்கயிலை ஒன்றையே இடமாகக் கொண்டிராது எண்ணிறந்த தலங்களில் எழுந்தருளியிருக்கும் பேரருளாளன் என்றருளியவாறு. கல்லாமே - கற்றல் வேண்டாதபடி. கற்பித்தான் - உள்நின்றே உணர்த்தினான்.
இதனைத் திருஞானசம்பந்தரிடத்து இனிது காண்கிறோம். ஏனையோர்க்கும் மெய்ந் நூல்களின் முடிந்த பொருளை எளிதில் தெளிய அருளினமை அறிக. `சிலையால்புரம் எரித்த` என்றது, `தானும் பிறரோ டொப்பக் கரணங்களாற் செய்வான்போலச் சென்றான்` என்றவாறு. நிலை ஆர்- பல நிலைகள் (அடுக்குக்கள்).

பண் :

பாடல் எண் : 5

நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

கருவிகளால் அன்றித் தன் நினைவினாலேயே எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்து அழிப்பவன். நுண்ணிய பொருள்களிலும் நுண்ணியனாக இயல்பாகவே கலந்திருப்பவன். கருவிகள் கொண்டு படைக்காமல் எல்லாப் பொருள்களையும் தன் நினைவினாலேயே தோற்றுவிப்பவன். தன்னை நெருங்காதவர்களுக்கு அருள் செய்தற்கண் ஈடுபடாதவன். தடுக்காமல் கடல் விடத்தை உண்டவன். அத்தகைய திருப்புன்கூர் மேவிய சிவலோகன் நீக்குதற்கரிய மிக்க பொலிவை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

நோக்குதல் - காத்தல். நோக்காதே நோக்குதல் - கரணத்தால் (கருவியால்) அன்றிச் சங்கற்பத்தால் (நினைவினாலே) நோக்குதல். எவ்வளவும் - எத்துணைப் பொருளையும் (எல்லாவற்றையும்). நுணுகாது - நுணுகாதபடி. யாதொன்றும் - பிறிதொன்றும். `யாதொன்றும் நுணுகாதே என்க. `நுணுகாதே நுணுகினான்` என்றது, இயல்பாகவே நுணுகினான் என்றவாறு. எத்துணை நுண்ணிய பொருளாய் இருப்பினும் அதனினும் நுண்ணியனாய் அதன்கண் நிறைந்து அதனால் தாக்குண்ணாது நிற்றலின், இறைவனினும் நுண்ணிய பொருள் பிறிதொன்றில்லையாதல் அறிக.
ஆக்குதல் - படைத்தல். `யாதொன்றும் ஆக்காதே` என்க. யாதொன்றும் - ஒன்றனையும் ஆக்கி எல்லாவற்றையும் ஆக்கி. நோக்கு தலை முன்னர் அருளிச் செய்தார். அஃது உலகம் ஒடுங்கியபின் மீளத் தோன்றுதற்கு உரித்தாமாறு செய்தலையும் குறித்தற்கு. `நோக்காதே நோக்கி` என்னும் வெண்பாவினை (சிவஞானபோதம். சூ.1.அதி.2.) நோக்குக. தேக்குதல் - நிறைதல்; அஃது இங்குக் `குமட்டுதல்` எனப் பொருள் தந்தது. நீக்காத - நீக்குதற்கரிய. பேரொளி - மிக்க பொலிவு.

பண் :

பாடல் எண் : 6

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த
முடையானை முடைநாறும் புன்க லத்தில்
ஊணலா வூணானை யொருவர் காணா
உத்தமனை ஒளிதிகழும் மேனி யானைச்
சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீணுலா மலர்க்கழனி நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

மற்றவர் அணியக் கருதாத பாம்புகளை அணிகளாகப் பூணுபவன். மற்றவர்கள் பூசிக்கொள்ள விரும்பாத சாம்பலைச் சந்தனம் போலப் பூசிக்கொள்பவன். புலால் நாறும் மண்டையோடாகிய இழிந்த உண்கலத்தில் உண்ணலாகாத பிச்சை எடுத்த ஊணினை உண்பவன். இவையாவும் தன்பொருட்டன்றிப் பிறர் பொருட்டேயாக, இவற்றின் காரணத்தை மற்றவர் காணமாட்டாத வகையில் செயற்படும் மேம்பட்டவன். இச்செயல்களால் ஒளிமிக்குத் தோன்றும் திருமேனியை உடையவன். மிக உயர்ந்த மேம்பட்ட பவள மலையை ஒப்பவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் மிகுதியாகக் காணப்படுகின்ற மலர்களை உடைய வயல்கள் பொருந்திய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

பூணலாப் பூண் - அணியலாகாத அணி; பாம்பு. பூசாச் சாந்தம் - பூசலாகாத சாந்து; சாம்பல். ஊணலா ஊண் - உண்ணலாகாத உணவு; பிச்சை. ``இரந்து முயிர் வாழ்தல் வேண்டிற் பரந்து - கெடுக உலகியற்றி யான்`` (குறள் - 1062.) என்றமையால், பிச்சை ஊண் உண்ணலாகாததாதல் உணர்க. `பூணலாப் பூண் முதலியவற்றைக் கொண்டது. தன்பொருட்டன்றிப் பிறர்பொருட்டேயாதலின், அவை அவனுக்குப் புகழாவனவன்றி இகழாமாறு இல்லை` என அவற்றது பெருமை உணர்த்தியவாறு.
அதனானே, அவன் உலகியற்கு வேறுபட்டவன் என்பதும் இனிது விளங்கும். `ஒருவர்` என்புழி, முற்றும்மை தொகுத்தலாயிற்று. காணா - உணராத. உத்தமன் - மேலானவன். ஒருவரும் காணாமை - யாவராலும் முற்ற உணர இயலாமை. சேண்உலாம் - உயர்ச்சி பொருந்திய. `நீளுலாம்` என்பது, `நீணுலாம்` எனத் திரிந்தது; `மிகுதி பொருந்திய` என்பது பொருள். மலர் - தாமரை முதலியன.

பண் :

பாடல் எண் : 7

உரையார் பொருளுக் குலப்பி லானை
யொழியாமே எவ்வுருவு மானான் தன்னைப்
புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்
புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிரையார் மணிமாட நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

சொற்பொருளுக்கு அப்பாற்பட்டவன். எல்லா உருவங்களிலும் நீங்காது உடன் உறைபவன். நீரில் ஆழாத உட்டுளை உடைய நொய்ய பொருள்களாகவும் நீரில் ஆழும் கனமான பொருள்களாகவும் உள்ளவன். மிகவும் பழைமையாகிய தான் புதியவனாகவும் இருப்பவன். அலைகள் நிறைந்த கங்கையைத் தலையில் சூடியவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் வரிசையான அழகிய மாடிவீடுகளை உடைய நீடூரானும் ஆவான். நீசனேன் அவனை நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

உரை ஆர் பொருள் - சொல்லின்கண் பொருந்திய பொருள்; சொற்பொருள். அதற்கு உலப்பிலாமை. முடிவு பெறாமை; `சொல்லி முடிக்கலாகாத தன்மைகளை உடையவன்` என்றபடி, உரு - பொருள். `எவ்வுயிரும்` என்பதும் பாடம். புரை - உயர்ச்சி. கனம் - பருமை. `ஆழாதானை` என்பதில் உள்ள எதிர்மறை, `புரை, கனம்` என்பவற்றையும் நோக்கி நின்றது. நிற்கவே, `புரைத்துப் புரையா தானை, கனத்துக் கனவாதானை` என்றலும் அருளியவாறாயிற்று. `புரைத்து, கனத்து, ஆழ்ந்து` என்பன, காலத்தொடுபட்டு நிகழும் செயற்கையை உணர்த்திநின்றன.
அதனால் `இயல்பாகவே, உயர்ந்தும், கனத்தும், ஆழ்ந்தும் இருப்பவன்` என அவனது பெருநிலையை உணர்த்தியருளியதாயிற்று. `புதியனவுமாய் மிகவும் பழையான்` என்றது, `காரண காரியத் தொடர்ச்சியாய் மேலும் மேலும் தோன்றுவனவாய பொருள்கள் எல்லாமாய்த்தான் நிற்பினும், யாதொரு பொருளுந் தோன்றாது ஒடுங்கிப் பாழ்போலக் கிடந்த நிலையிலும் தான் ஒடுங்காது அவற்றைத் தோற்றுவிக்கும் தலைவனாய் நின்றவன்` என்றருளியவாறு. `முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருள்` (தி.8 திருவாசகம். திருவெம்பாவை - 9) என்றருளிச் செய்ததும் இப்பொருட்டு. `ஸதேவ ஸௌம்யேத மக்ர ஆஸீத்` (சத்தாகிய இதுவே முதற்கண் இருந்தது) என்பது சாந்தோக்கிய உபநிடதம். `புதியனவு மாய்` என்பதில், புதியனவாயும்` என உம்மையை மாறிக் கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவத் தண்கழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

மேம்பட்ட ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமாலும், குளிர்ந்த பொய்கையில் தோன்றும் தாமரையை இருப்பிடமாக உடைய பிரமனும் ஆகிய இருவரும் காண முயன்றும் அறியமாட்டாத அப்பெருமான் இயல்பினை யாவர் உள்ளவாறு அறிய இயலும்? அவனை அறிவோம் என்று நினைக்கும் தேவர்களுக்கும் உண்மையில் அறிய முடியாதவனாய் ஒலிக்கும் அழகிய வீரக்கழலை அணிந்த அப்பெருமான் நிழல் தரும் சோலைகள் உடைய திருப்புன் கூரை மேவியவன். அவனே நீர் பாயும் ஓசையை உடைய குளிர்ந்த வயல்களை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் பண்டு நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

கூர் அரவம் - (பாம்புகள் எல்லாவற்றுள்ளும்) மிக்க பாம்பு. `மாட்டார்` என்புழி, `ஆயினார்` என்னும் ஆக்கச்சொல் தொக்கது. அவ்விடத்து, ஆகலான் என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `ஆரொருவராயினும் அவரது தன்மையை அறிய வல்லாராகிய தேவர், (அவருள் ஒருவனாக வைத்து) அறிவோ மெனப் புகுவராயின், அவர்க்கெல்லாம் அறியலாகாத திருவடியையுடையவன்` என்க.
`இதனை இனிது விளக்குவது, மாலும் அயனும் அறியலாகாது நின்ற நிலை` என்பார், அதனை முன்னர் அருளிச்செய்தார். `கழலானை` என்புழியும். `கழலுடையனாயினானை` என ஆக்கம் விரித்துரைக்க. சீர் - புகழ். `சீரரவம்` `நீரரவம்` என்புழி அரவம். ஓசை.

பண் :

பாடல் எண் : 9

கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

கைகளிலிருந்து நெய் கீழே சொட்டுதலால் அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாதே கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமலிருப்பதற்குக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்ணும் கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய் உரைகளாகக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத்தீங்கில் நின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்த அடியேன், வயல்களில் செழிப்பான தாமரைகள் களைகளாகத் தோன்றும் நன்செய் நிலங்களை எல்லையாக உடைய திருப்புன்கூர் சிவலோகநாதன் என்ற பெயரில் உகந்தருளியிருப்பவனாய், கடற்கரைப் பகுதியில் நீர்வளம் உடைய மனைக்கொல்லைகளை உடைய நீடூரிலும் உகந்து தங்கியிருக்கும் அப்பெருமானை, நினையாத கீழ்மகனாய் அடியேன் இருந்தவாறு இரங்கத்தக்கது.

குறிப்புரை :

`கழுத்தே` என்னும் ஏகாரம், பிரிநிலை. `கழுத்தினைக் கைசென்று அடையச் செய்து உண்ணாது, கையினைக் கழுத்துச் சென்று அடையுமாறு செய்து உண்ணுங் கையர்` என்க. அவ்வாறுண்ணுதல், நெய் மிகுதியாக வழிந்தோடாமைப் பொருட்டும், உணவு வீழாமைப் பொருட்டுமாம். கலம் இன்றிக் கையில் உண்ணுதலால், மார்பிற்கு நேராக நீட்டி விரித்தகைகள் அதற்குமேல் உயர்த்தலாகாவாயின. கால் நிமிர்த்தல், நிற்றலால் உண்டாகும் நோயை நீக்கிக்கொள்ளுதற் பொருட்டு நேராக்குதல், கையில் உண்ணுதல், பொருட்பற்று உண்டா காமைப் பொருட்டும், நின்றுண்ணுதல் இடப்பற்று உண்டாகாமைப் பொருட்டுமாம். இவ்வாறொழுகுவோர் ஒருசிலரே என்க. `இவர் இவ்வாறு பற்றுக்களையெல்லாம் விடினும். பற்றக்கடவ பொருளைப் பற்றாமையின், பெறநின்றது என்னை` என்பார். இவ்வாறு இகழ்ச்சி தோன்ற எடுத்தோதியருளினார். நின்று உண்ணும் கையர் - நின்று உண்ணுதலாகிய ஒழுக்கத்தையுடையவர். இனி ``கையர்`` என்பதற்கு `வஞ்சகர்` என்றுரைத்து, `இங்ஙனம் புறத்தாரைமருட்டிநின்றவர்` எனலுமாம். சமணருட் பலர் வஞ்சகராய் இருந்தமையை, அவர் வைதிக சமயத்தார்க்கு அரசன் வாயிலாக இழைத்துவந்த கொடுமைகள் பற்றி யறியலாம். பொய் - பிழை. மெய் - ஒத்தது. `கருதிப்புக்கு` என்றதனால், சுவாமிகள் சமண சமயத்துப் புகுந்த காரணம் நன்கு அறியப்படுகின்றது. `அப்புள்ளுவர்` எனச் சுட்டு வருவித்துரைக்க. புள்ளுவர் - வேடர்; இஃது உவமையாகு பெயராயிற்று. `வேடர்கள் பறவைகளையும், விலங்குகளையும் வலையில் வீழச் செய்தல்போல, மக்களைச் சொல்லில் வசப்படுத்துபவர்` என்றதாம். `அகப்படுத்தப்படாது` என்பது, `அகப்படாது` என விகாரமாயிற்று. `வேடரது வலையிற் சிக்கிய ஒரு பறவையேனும் விலங்கேனும் அவராற் கொல்லப்பட்டு அவர்க்கு இரையாகாது தப்பியோடினாற்போல, இறுதிவரையில் சமண சமயத்திலிருந்து கெட்டொழியாது, மீண்டு வந்தேன்` என்றருளிச்செய்தார். `இத் துணைத் தாழ்த்து வந்தேன்; முன்பே நினையாதொழிந்த வினைதான் என்னே` என்றிரங்கியவாறு காண்க. படப்பை - தோட்டம்.

பண் :

பாடல் எண் : 10

இகழுமா றெங்ஙனே யேழை நெஞ்சே
யிகழாது பரந்தொன்றாய் நின்றான் தன்னை
நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை
நலனழித்து நன்கருளிச் செய்தான் தன்னைத்
திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவ லோ கனை
நிகழுமா வல்லானை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

யாதொரு பொருளையும் புறக்கணிக்காது அவற்றிலெல்லாம் உடனாய் இருப்பவன் எம்பெருமான். அவன் இராவணனைக் கயிலை மலையின் அடியில் இட்டு வருந்தச் செய்து அவன் வலிமையைக் குலைத்துப் பின் அவனுக்கு நல்லனவாகிய வாளும் நாளும் வழங்கியவன். மதத்தால் விளங்கிய யானையின் தோலைப் போர்த்தியவன். அவனே திருப்புன்கூர் மேவிய சிவலோக நாதன். தன் விருப்பப்படியே செயற்படவல்ல அப்பெருமான் நீடூரிலும் உகந்தருளியுள்ளான். `அறிவில்லாத மனமே! அப்பெருமானைக் கீழ்மகனாகிய யான் நினையாத செயலே இரங்கத்தக்கது. அவ்வாறாக நீயும் இகழும் செயல் எவ்வாறு ஏற்பட்டது?`

குறிப்புரை :

`ஏழை நெஞ்சே இகழுமாறு எங்ஙனே` என்பதை ஈற்றில் வைத்து, `நான் நினையாவாறு என்னே! நீதானும் இகழுமாறு எங்ஙன் ஆயிற்று` என உரைக்க. இது தம் நெஞ்சினை வேறாக்கி அருளிச்செய்தது. இகழாது - யாதொரு பொருளையும் இகழ்ந் தொழியாது; (எல்லாவற்றிலும் நிறைந்து அவற்றைத் தனது வியாபகத்துள் அடக்கி நிற்பவன்). நகழ - வருந்த. நகழ்வு - துன்பம்; வருத்தம்: `நகழ்வொழிந் தாரவர் நாதனை உள்கி` என்றது காண்க. (தி.10. தந்.9. பா.14.) நிகழுமாவல்லான் - தன் இச்சைவழியே செல்ல வல்லவன்; தன்வய முடையவன்.
சிற்பி