திருக்கழிப்பாலை


பண் :

பாடல் எண் : 1

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

சதைப்பகுதியை வளைத்துச் சுவராகச் செய்து ஒன்பது வாயில்களை அமைத்து வெள்ளிய ஒளியை உடைய எலும்புகளைத் தூணாக அமைத்து மயிரினை மேற்பரப்பித் தாமே படைப்பித்த குடில் நீங்கும்படி தக்காரிடத்து வலியச் சென்று , தாவும் மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய் அருள் செய்கின்றார் . தோகைகளைப் பரப்பி மயில்கள் ஆடும் சோலைகளை உடைய திருக்கழிப்பாலைத் தலத்தை உகந்தருளியுள்ள மண்டை யோட்டினை ஏந்திய தலைவராகிய அப்பெருமான் வான் உலகங்களை எல்லாம் கடந்து விரைவாகச் செல்லும் வீடுபேற்றுலகிற்குச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார் . இவ்வுடம்பு பெற்றதனாலாய பயன்கொண்டு அவர் வகுத்த வழியிலே செல்வது ஒன்றே நாம் செயற்பாலது . அவர்க்குக் கைம்மாறாக நாம் செயற்பாலது ஒன்றும் இல்லை .

குறிப்புரை :

ஊன் - தசை , உடுத்தி - வளைத்து ; சுவராகச் செய்து மேய்ந்து - மேற்பரப்பி . எடுத்த - கட்டிய . கூரை - குடில் . தவிர - நீங்கும்படி . போவார் - ( தக்காரிடத்துத் ) தாமே வலியச் சென்று அருள் புரிவார் . தயக்கம் - விளக்கம் ; அது , வேடத்தை உணர்த்திற்று , படைத்தார் - உடையார் . தாமரையினார் - தாவுகின்ற மானை ( க்கையிலே ) உடையார் . கான் - காடு ; இஃது உவமையாகுபெயராய்த் தோகையை உணர்த்திற்று . எடுத்து - விரித்து . ` கபால ` என்பதன் ஈற்று அகரம் தொக்கது . கபாலப்பனார் ` என்னும் கனிச்சீரினை இங்கும் மேலைத் திருப்பதிகத்திற்போலக் கொள்க . வானிடம் - மண்ணுலகின் வேறாய உலகங்கள் ; அவற்றை ஊடறுத்துச் செல்லுதல் , எல்லாத் தத்துவங்ளையும் கடந்து சென்று அவரது திருவடியை அடைதல் . வல்லைச்செல்லுதல் , எளிதிற் செல்லுதல் . ` வழி ` என்றது , குறிகளும் அடையாளமும் கோயிலும் ( தி .5. ப .90. பா .6.) முதலாயினவற்றை . ` வழி ` என்பதன் பின் , ` வைத்தார் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . வைத்தார்க்கு என்பது , ` வைத்த அவர்க்கு ` எனப் பொருள்தரும் . இவை வருகின்ற திருப்பாடல்கட்கும் ஆம் . அவர்க்கு - அவர் பொருட்டு ; என்றது ` அவரது கருணைக்குக் கைம்மாறாக ` என்றபடி . அவ்வழியே போதுதல் , அவற்றாற் பயன்கொள்ளும் முறையை யறிந்து , அவ்வாற்றானே ஒழுகுதல் . ` அங்ஙனம் ஒழுகிப் பயன்பெறுதலை யன்றி , அவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு வேறில்லை ` என்றதாம் . இஃது அடித்தடித்து அக்காரம் தீற்றுதல் போலாம் ( திருவாசகம் அற்புதப்பத்து - 3) என்க .

பண் :

பாடல் எண் : 2

முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை
பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்
கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

மதில்களுக்குரிய இலக்கணங்கள் நிரம்பிய மூன்று மதில்களையும் சாம்பலாகுமாறு அழித்த பெருமான் ஏனைய பொருள்கள் தோன்றுவதன் முன்னும் அவை அழிந்தபின்னும் உள்ள முக்கண் தலைவர் . கங்கை தங்கிய சடைமுடியிலே பிறைச்சந்திரனும் பாம்பும் பகைமை நீங்கச் சேர்த்து வைத்தவர் . கொடிய விடக் கறையைக் கழுத்தளவில் தங்கச் செய்தவர் , எம்பெருமானார் . கழிப் பாலை மேவிய அக்கபாலப்பனார் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தம் சொற்களால் , இவ்வுடல் அழிய உயிர் செல்லுதற்குரிய வழியை வகுத்தருளியுள்ளார் . அவ்வழியிலே நாம் செல்லுவோம் .

குறிப்புரை :

முறை - ஆக்கும் முறை . முன்னுமாய்ப் பின்னுமாய் தோன்றிக் கெடும் பொருள்கள் எல்லாவற்றின் தோற்றத்திற்கு முன்னும் , ஒடுக்கத்திற்குப் பின்னும் உள்ளவனாகி ; என்றது , ` அவை எல்லாவற்றையும் தோற்றி ஒடுக்கித் தனக்குத் தோற்றக் கேடுகள் இன்றி என்றும் ஒருபடித்தாய் இருப்பவனாய் ` என்றவாறு . ` முக்கண் எந்தை கண்ட எந்தை ` என்பன , ஒரு பொருள்மேற் பல பெயர்கள் . அவை பன்மையொருமை மயக்கமாய் , ` கபாலப்பனார் ` என்பதனோடு இயைந்தன . பிறைக்குப் பாம்பு பகையாயிருப்ப , அவ்விரண்டனையும் அலைத்து ஈர்த்து ஓடுவது கங்கையாகலின் , அவைகளை , ` பிணக்கந் தீர்த்து உடன்வைத்தார் ` என்று அருளிச்செய்தார் . கறை - கறுப்பு ` நஞ்சுக் கறையை ( கறுப்பினை ) ஆர்ந்த ( அழகு நிறைந்த ) மிடற்று அடங்கக் கண்ட ( செய்த ) எந்தை ` என்க . மறை ஆர்ந்த - மந்தணம் நிறைந்த , ` வாய்மொழியான் ` என்றது , தனது வாய்மொழியால் என்றவாறு . அவை வேத சிவாகமங்கள் . யாக்கை மாய என மாறுக .

பண் :

பாடல் எண் : 3

நெளிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னை
நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
யொருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்
களிவண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

தூயனாகிய அப்பெருமானாரை நெகிழ்ச்சியால் இடையறவு படாமல் நாடோறும் தொடர்ந்து விருப்போடு நினையுங்கள் . சிறந்த அணிகலன்களை உடைய , வண்டுகள் ஒளிந்து தங்கும் கருங்கூந்தலை உடைய உமாதேவியைத் தம் உடம்பில் ஒருபாகமாக விரும்பிக்கொண்டு , அடியார்கள் நினைந்து துதிக்குமாறு , களிப்பை உடைய வண்டுகள் நிறைந்த இருண்ட சோலைகளுக்குத் தாழைவேலியாகச் சூழ்ந்த கழிப்பாலை மேவிய கபாலப்பனார் காற்றை நுகர்தலாலே நிலைத்து நிற்கும் , மாயையின் காரியமாகிய இவ்வுடம்பை இனிக்கொள்ளாது நிலையாக விடுத்தற்குரிய நெறியைக் குறிப்பிட்டுள்ளார் . அந்நெறியிலே நாம் செல்வோம் .

குறிப்புரை :

நெளிவு - நெகிழ்வு . ` அஃது உண்டாமாறு கருதாது நினைமின்கள் ` என்றது , உறுதியாக நினைமின்கள் என்றதாம் . நிமலன்றன்னை என்பது முதற்கண் நிற்கும் . கரும்பொழில் - இருண்ட சோலை . கண்டல் - தாழை . வளி - பிராணவாயு . ` அதனை வாங்கியும் விட்டும் நுகர்தலாலே நிலைத்துநிற்கும் குரம்பை ` என்க . உண்டு - உண்ணுதலால் . ஆர் - பொருந்துகின்ற .

பண் :

பாடல் எண் : 4

பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநூறு கமலத்தர் ஆரூ ராதி
ஆனஞ்சு மாடும் ஆதிரையி னார்தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

திருநீறு விளங்கும் திருமேனியை உடைய பெருமானார் திருநீற்றுப்பையையும் வைத்துள்ளார் . அவர் பூணூல் அணிந்து புலித்தோலை உடுத்துப் பாம்புகளை அணிகலனாகப் பூண்டவர் . ஆதிரை நட்சத்திரத்தை உகந்து கொண்டு திருவாரூரில் உள்ள அவ்வாதி மூர்த்தி பஞ்சகவ்விய அபிடேகத்தை ஏற்றுத் தம் திருவடிகளில் அடியவர்கள் இட்ட பல தாமரைப் பூக்களை உடையவர் . சோலைகள் நறுமணம் வீசும் கழிப்பாலை மேவிய அக் கபாலப்பனார் , இறந்து போகும் இப்பொய்யாய உடல் நீங்க உயிர் நிலையாகத் தங்குதற்குரிய இடத்தை அடைவதற்கு உரிய வழியை வகுத்துக் கொடுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .

குறிப்புரை :

` பூதிப் பையர் ` என ஈண்டு அருளியவாறே திரு முறைகளுள் பிற இடங்களிலும் சிவபிரான் விபூதிப்பை உடையனாய் இருத்தல் குறிக்கப்படுகின்றது . கமலம் , வழிபடுவோர் இட்டவை . ஆதி - முதல்வன் . கடி - நறுமணம் . ` கமழ்ந்து நாறும் ` என்றது . ` மிகுதியாக நறுமணம் பெற்று வீசும் ` என்றபடி . மடி நாறும் - இறப்புத் தோன்றும் . மேனியாகிய இம்மாயம் என்க . மாயம் - பொய்ம்மை ; நிலையாமை ; அஃது அதனை உடைய பொருள்மேல் நின்றது .

பண் :

பாடல் எண் : 5

விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
இறையானாய் எம்மிறையே யென்று நிற்கும்
கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

தேவர்கள் விரும்பி வந்து ` தேவருலகம் ஆகிய வனே ! எல்லா இடங்களிலும் பரவி வேதம் ஓதி , கீதம்பாடி , எண் ஆனவனே ! எழுத்தானவனே ! ஏழ்கடலும் ஆனவனே ! எல்லாப் பொருள்களுக்கும் தலைவனே ! எங்கள் தலைவனே ! எங்கள் பற்றுக் கோடே ! மேகங்களும் உலகப் பொருள்களும் ஆயவனே !` என்று போற்றி நிற்கும் கழிப்பாலை மேவிய கபாலப்பனார் இவ்வுலகில் தோன்றிய நிலையாமையை உடைய உடல் நீங்க வழி வைத்தார் . அவ்வழி நாம் செல்வோம் .

குறிப்புரை :

விண்ணவர்கள் விரும்பிவந்து , விண்ணானாய் வேதத்தாய் கடல் ஏழானாய் கண்ணானாய் காரானாய் மண்ணானாய் இறையானாய் எம் இறையே என்று நிற்கும் கழிப்பாலைமேய கபாலப்பனார் ` என்றியைத்துக்கொள்க . இறை - எப்பொருட்கும் தலைவன் . தமக்கு இறைவனாதலை வேறெடுத்துக் கூறினார் என்க . கண் , அறிவு . ` தேவர்கள் பலவாறாக ஏத்திப் பணியும் பெருமான் ` என்றவாறு .

பண் :

பாடல் எண் : 6

விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரான் எரிசுடரான் விண்ணு மாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

கழிப்பாலை மேவிய கபாலப்பனார் , வேண்டு கோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க , சூரியன் , அக்கினி , விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆக்கும் தந்தையார் . அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவர் . பாசுபதவேடத்தையுடைய ஒளி வடிவினர் . கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவர் . அவர் பவவகையான பிணிகளுக்கு இருப்பிடமாகிய இந்நிலையற்ற உடம்பு நீங்க வழி வகுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .

குறிப்புரை :

விண்ணப்பம் - வேண்டுகோள் . விச்சாதரர் - வித்தியாதரர் . விண்ணப்ப விச்சாதரர்கள் - வேண்டுகோளை உடைய வித்தியாதரர்கள் . இவர்கள் இசைபாடுபவர் ஆதலின் , அவர்களையே ஏத்துவோராகவும் , விண்ணப்பத்தை உடையவராகவும் அருளினார் . விரி கதிரான் - சூரியன் . எரிசுடரான் - அக்கினி , பண் அப்பன் - எல்லாப் பொருள்களையும் ஆக்குகின்ற தந்தை ; ` கதிரோன் முதலிய எல்லாப் பொருள்களுமாய் இருந்து , அவற்றை முதலாகக்கொண்டு தோன்றும் பொருள்களைத் தோற்றுவிப்பவன் ` என்றருளியவாறு . ஏயும் - பொருந்துகின்ற . பசுபதி - உயிர்கட்குத் தலைவன் . பாசுபதன் - பாசுபத வேடத்தை உடையவன் . தேச மூர்த்தி - ஒளி உடைய வடிவத்தை உடையவன் . காளத்தி , கண்ணப்ப நாயனார் வழிபட்ட இடமாதலை நினைந்து உருகி அருளிச்செய்தவாறு . வண்ணம் - பல வகை .

பண் :

பாடல் எண் : 7

பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
பேதப் படுகின்ற பேதை மீர்காள்
நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

பிணமாதலைப் பொருந்தும் ஓட்டைக் குடிசையை நிலைபேறுடையதாகத் தவறாக எண்ணும் அறிவிலிகளே ! கழிப்பாலை மேவிய கபாலப்பனார் , கொழுப்புத் தங்கும் சூலத்தவராய் , நீல கண்டராய் , எண்தோளினராய் எண்ணற்ற குணத்தினாலே கணம்புல்ல நாயனாரின் கருத்தை விரும்பி ஏற்றவராய்க் காஞ்சிமாநகரில் உகந்தருளியிருப்பவர் . நறுமணப் பொருளால் நாற்றம் மறைக்கப்பட்ட நிலையில்லாத இவ்வுடல் தொடர்பு நீங்குதற்கு வழிவகுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .

குறிப்புரை :

பிணம் புல்கு - பிணமாதல் பொருந்தும் . பீறற் குரம்பை - ஒழுகுமாடம் ( தி .5. ப .31. பா .7.), பொத்தல் மண் சுவர் ... குரம்பை . ( தி .5. ப .76. பா .5), ஓட்டை மாடம் ( தி .5. ப .82. பா .9) என அருளிச் செய்வதும் காண்க . எண்குணம் , நிறைந்த குணம் எனத் தனித்தனி இயைக்க . அறுபான் மும்மை நாயன்மாருள் , கணம்புல்லர் ஒருவர் . கருத்து - கருதிச்செய்த தொண்டு ; அது , தலைமயிரை விளக்காக எரித்தமை . ` அது குற்றமாயினும் , அன்பினால் விரும்பி ஏற்றார் ` என்றவாறு . கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள் - ` குற்றம்செய்யினும் குணம்எனக் கருதும் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் `. ( தி .7. ப .55. பா .4.)

பண் :

பாடல் எண் : 8

இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி யுறைகின் றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான
தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்
கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

கயல்மீன்கள் தம் மீது பாயப்பெற்ற தாழை மரங்களை எல்லையாகக் கொண்டு அவற்றால் சூழப்பட்ட கழிப்பாலை மேவிய கபால அப்பன் செயற்கையான் அன்றி இயற்கையாகவே எல்லோருக்கும் தலைவன் . எம் குலத்தலைவன் . என் சிந்தையில் விரும்பித் தங்கியிருக்கின்றவன் . இடையறாது தொழில் செய்பவன் . அவ்வத்தொழில்களுக்கு ஏற்ற திருமேனிகளை உடையவன் . தூயவன் , முக்கண்ணன் , முத்தலைச் சூலத்தினன் . தீயை வெளிப்படுத்தும் சிரிப்பினன் . அப்பெருமான் மயக்கத்தைத் தரும் நிலையில்லாத இவ்வுடல் நீங்க வழிவைக்க , அவ்வழியே நாம் போதுகம் .

குறிப்புரை :

ஈசன் - ஆள்பவன் ; தலைவன் . ` ஒருவரது ஆணையால் தலைவனாகாது , தானே தலைவனாய் நிற்பவன் ` என்பார் , ` இயல்பாய ஈசன் ` என்றருளிச்செய்தார் . ஐகாரங்கள் சாரியை . எந்தை - என்தந்தை , தந்தை - ( அவன் ) தந்தை , சிந்தை ` என்பது , ` எந்தை ` தந்தை ` என்பவற்றோடும் இயையும் . மேவி - விரும்பி . தம் குடிமுழுதாண்டமை அருளிச்செய்தவாறு . முயல்வான் - இடையறாது தொழில்செய்து நிற்பவன் . தொழில் , ஐந்தொழில் . மூர்த்தி - மூர்த்தம் உடையவன் . தொழில் - தொழிற்கேற்ற திருமேனிகளை யுடையவன் . தீர்த்தன் - தீர்த்தவடிவினன் ; பரிசுத்தன் எனலுமாம் . திரியம்பகன் என்பது , ` தியம்பகன் ` என வந்தது . அம்பகம் - கண் . திரியம்பகன் - முக்கண்ணன் . ` திரிசூலத்தன் , நகையன் ` எனப் பிரிக்க . நகை , புன் முறுவல் , ` கயல்பாயுங் கண்டல் ` என்றது மருதமும் நெய்தலும் மயங்கி நிற்றல் குறித்தவாறு . சூழ்வுண்ட - சூழ்தல் பொருந்திய . ` கண்டலால் சூழ்வுண்ட ` என்க . மயல் - மயக்கம் .

பண் :

பாடல் எண் : 9

செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாம்
கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

கழிப்பாலை மேவிய கபால அப்பன் , மனத்தில் பகை எண்ணத்தை நீக்கிச் சிவபெருமான் என்று தன்னை அன்போடு தியானிப்பவர்களின் உள்ளத்தில் உள்ள நோய்களைப் போக்கி அவர்களை இவ்வுலகத்தார் போற்றச் செய்யும் உத்தமனாய் எல்லா வற்றையும் ஓதாதே உணர்ந்தவனாய் இயல்பாகவே எல்லாப் பாசங்களையும் நீங்கியவன் . அப்பெருமான் இந்த நிலையற்ற உடல் நீங்க வைத்த வழியிலே நாம் போவோம் .

குறிப்புரை :

செற்றது - பகைத்தது ; முரணியது . ` சிந்தை உள்ளால் , என்புழி , ஆல் அசைநிலை . சிந்தையுள் உறும் நோய் , கவலை . காட்டுவான் - காணச்செய்வான் ; என்றது , ` உலக முழுதும் அவரைப் போற்றச்செய்வான் ` என்றதாம் . கற்றது ஓர் நூலினன் - பிறர் கற்ற ஒப்பற்ற நூலினது உணர்வினன் ; இயல்பாகவே , எல்லா ஞானங்களையும் உடையவன் என்றபடி . கயிறு - பாசம் . செற்றான் - அறுத்தான் . ` நூலினன் , செற்றான் ` என்பன பன்மை யொருமை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 10

பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
கால்விரலா லூன்று கழிப்பா லையார்
வருதலங்க மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

போரில் வல்ல அரக்கனாகிய இராவணனுடைய புட்பக விமானம் வெற்றிமாலை சூடிய சிவபெருமானுடைய மலையின் மீது செல்லாதாகக் கீழ் நிலம் அசையுமாறு அவன் மலையைப் பெயர்த்த அளவில் உமாதேவி அஞ்ச அப்பெருமான் மனத்தால் நோக்கி அவன் இருபது கரங்களையும் பத்துத் தலைகளையும் தன் கால் விரலை ஊன்றி நசுக்கியவன் . அப்பெருமான் திருக்கழிப்பாலையை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு பிறத்தலை உடைய நிலையாமையை உடைய இவ்வுடம்பின் தொடர்பு உயிருக்கு என்றும் நீங்கு மாறு செய்யும் வழியை அறிவித்துள்ளான் . அவ்வழியிலேயே நாம் செல்வோம் .

குறிப்புரை :

` பொருத அலங்கல் ` என்பதில் அகரம் தொகுத்தல் . அலங்கல் , வெற்றிமாலை . ` இறைவன் ` என்பது , ` தான் ` என்னும் பொருட்டாய் நின்றது . வருதல் அங்கம் - வருதலை ( பிறத்தலை ) உடைய உடம்பு ` அங்கமாகிய குரம்பை ` என்க .
சிற்பி