திருநல்லூர்


பண் :

பாடல் எண் : 1

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர்களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர் . சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர் . பிறை சூடியவர் . தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி , அரிதின் கிட்டி , அவர்கள் , தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார் . இஃது அவர் பேரருளின் தன்மையாம் .

குறிப்புரை :

நைய - மேலும் மனம் இளக ; ` தற்போதங் கெடும்படி ` என்பது கருத்து . இத்திருப்பதிகத்துள் , ` வைத்தார் ` என்பது சொற்பொருட்பின் வருநிலையாய் , கருத்து வகையால் , செய்தார் , அணிந்தார் , உடையார் , வைத்தார் என . ஏற்ற பெற்றியால் பொருள் தந்துநிற்றல் அறிக . ` நையவைத்தார் ` என்பதன்பின் , ` அவரிடத்து ` என்பது வருவிக்க . திருகு - முறுகுகின்ற ; வலுப்படுகின்ற . சிறந்து - மிகுந்து . துருவி - தேடி ; என்றது , ` அரிதிற் கிட்டி ` என்றவாறு . ஏற - முழுதுமாக . துற்ற - நெருங்கிய . போது , போதாயிருந்து , மதுவாய் - தேனே வடிவாய் . பில்கி - ஒழுகியதனால் . ` நனைந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` அனைய ` என்பது சுட்டு ; அது திருவடியின் சிறப்புணர நின்றது . ` என் தலை மேல் ` என்பது இசையெச்சத்தால் , ` ஒன்றற்கும் பற்றாத சிறியேனாகிய எனது புல்லிய தலையின்மேல் ` எனப்பொருள் படுமாற்றினை ` எடுத்தலோசையாற் கூறிக் காண்க . ` நல்லூர் எம்பெருமானார் ` என்பதனை முதற்கண் கொண்டு உரைக்க . ` ஆறு ` என்றது , செய்கையை . ` நல்லூர் எம்பெருமானார் , நைய வைத்தார் ; நீங்க வைத்தார் ; போர்வை வைத்தார் ; தளிர் வைத்தார் ; அவைபோலத் திருவடி என் தலைமேல் வைத்தார் ; இது , நல்ல செய்கையே ` என்க . ` இது ` என்பது , தமக்குத் திருவடி சூட்டினமையை , ` நல்லூர் எம்பெருமானார் என்பதற்கேற்ப , நல்ல செய்கையே செய்தார் ` என்பது நயம் . ` வைத்தனபல ; அவைபோலத் திருவடியையும் வைத்தார் ` என்றது , ` இஃது அவரது பேரருளின்றன்மை ` என வியந்தருளியவாறு . வருகின்ற திருப்பாடல்களினும் இவ்வாறே உரைக்க .

பண் :

பாடல் எண் : 2

பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் னதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை , கங்கை , பிறை என்பன சூடி , காதில் குழை அணிந்து , மார்பில் பூணூல் தரித்து , இடையில் புலித்தோலை உடுத்து , யானைத் தோலைப் போர்த்து , மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு , அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத் தாங்கி , மேம்பட்ட சிறப்புடைய திரு வடிகளை , என் தலைமேல் வைத்த , பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

பொன் நலத்த - பொன்னினது அழகை உடைய . புலி உரி - புலியை உரித்த . இன் அதள் - இனிய தோல் ; இனிமை , மெத்தென்றிருத்தல் . மன் நலத்த - நிலைபெற்ற அழகினையுடைய . மின் நலத்த - மின்னலினது அழகினையுடைய . நன்னலம் - மிக்க நன்மை .

பண் :

பாடல் எண் : 3

தோடேறு மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதல்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

இதழ்கள் மிக்க கொன்றை மலரைத் தலையில் சூடி , எருக்கம் பூ மாலை பூண்டு , தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து , மலைமகளைப் பாகமாகக் கொண்டு , அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக்கொண்டு , கையில் வில் ஏந்தி , யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

தோடு ஏறு - இதழ் நிறைந்த . ` சடைமேல் ` என்பதனை முதற்கண் வைக்க . துவலை - துளி . பாடு ஏறு - பக்கங்களில் ஏறுகின்ற . படு திரைகள் - ஒலிக்கின்ற அலைகள் . எறிய - வீச , பனி மத்த மலர் - குளிர்ந்த ஊமத்தம் பூ . சேடு ஏறு - அழகு மிகுந்த . நாட்டம் - கண் . சிலை - வில் ; பினாகம் . நாடு ( நாடுதல் ) ஏறு - யாவரும் விரும்புதல் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 4

வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி அறம்நால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் , வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு , விரிந்த சடையில் கங்கையைச் சூடி , மலையை வில்லாகக்கொண்டு , கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு , கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு , வேதங்களை அருளி , முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து , தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி , தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து , மிக்க அருளினாலே , தம் திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

வில் அருளி வரு புருவம் - வில்லுக்கு அருள்புரிந்து ( உவமையாகின்ற பேற்றினை வழங்கித் ) தோன்றுகின்ற புருவம் . பொருத்தாகி - பொருந்துதலாகி . அருவி - யாறு ; கங்கை . கல் அருளி - ( மேரு ) மலைக்கு அருள்புரிந்து . ` ஊராகக் கயிலாயமலையை வைத்தார் ` என்க . சொல் அருளி - சொற்களை வழங்கி ; ` சொல் ` என்றது ஆகுபெயராய் , அதனால் ஆகிய நூலை ( வேதத்தை ) க் குறித்தது . ` விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் ` ( தி .4. ப .7. பா .8.) என சுவாமிகள் அருளிச்செய்தல் காண்க . ` சிவபிரான் , ஆலமர நீழலில் எழுந்தருளியிருந்து நான்கு முனிவர்கட்கு வேதத்தைச் சொல்லி அருளினார் ` என்பது மிகப் பழையதொரு வரலாறாகும் . சனகாதி நான்கு முனிவர்கட்கு மோனநிலையிலிருந்து வேதப்பொருளின் அநுபவத்தைக் காட்டிய வரலாறன்று இது . துறவி - துறவு ; இச்சொல் , ` பிறவி ` என்னும் சொல்போன்றது . தகுதி யெய்திய உயிர்கட்கு ` துறவு ` என்கின்ற ஒருவழியை வைத்தார் என்க .

பண் :

பாடல் எண் : 5

விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவிவைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி , அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி , நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து , தீயினையும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு , அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து , மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

விண் இரியும் - தேவர்கள் அஞ்சி நீங்குவதற்குக் காரணமாய் நின்ற . விண் , ஆகுபெயர் ; `திசை` என்றதும் அது . ` தொழுவார்க்கு வினை அற வைத்தார் ` என்க . கமல மலர்வைத்தது ஆசனமாக என்க ; ` எரியாய தாமரைமேல் இயங்கினாரும் ` ( ப . 16. பா .7.) என்றருளுதல்காண்க . திண் எரி - வலிய ( அவித்தற்கரிய ) நெருப்பு . ` உடனே ` என்றது , ஒரு திருமேனியிலே என்றவாறு . ` தொழுது ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது .

பண் :

பாடல் எண் : 6

உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர் . குறைந்த சந்திரனை வளரவைத்தவர் . பகை , ஆர்வம் , காமம் , உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்த பாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்ல தவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

` பிணி உலவு உலகம் ` என்க . உற்று உலவுதல் - மிகுந்து பரவுதல் . எழுமை - எழுவகைப்பட்ட பிறவி . ` உயிரை அப்பிறவிகளில் வைத்தார் ` என்க . கதிகள் - துறக்க நிரயங்கள் . மற்று , அசைநிலை . ` காணாது ` என்பது ஈறுகெட்டு நின்றது . மறை - மறைவு ` குறை மதியம் வளர வைத்தார் ` என்றது . ` தக்கனது சாபத்தால் தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதவாறு முடியில் அணிந்து , பின் வளர வைத்தார் ` என்றவாறு . செற்றம் - சினம் ; பகையுமாம் . ஆர்வம் - மோகம் . ` மலி ` என்றது , ஆர்வத்திற்கு அடை ; காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் ` என அகப்பகை ஆறென்பர் . அவை சிறவாத ( மிகாத ) நெறி - நன்னெறி .

பண் :

பாடல் எண் : 7

மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமேல் அரவைத்தார் அணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர் . அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர் . அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர் . நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர் . தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர் . மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

மாறு - பகை . மலைந்தார் - போர் செய்தவர் . ` மாறாய் மலைந்தார் ` என்க . அரணம் - மதில் . ` அரா ` என்பதிற் குறிற்கீழ் அகரம் , செய்யுளாதலின் குறுகிநின்றது . நிலவ - நிலைத்து நிற்க . நிலையம் - திருக்கோயில்கள் . மலைந்து - முடியில் அணிந்து . அறு திரைகள் - கரையை மோதிஉடைகின்ற அலைகள் .

பண் :

பாடல் எண் : 8

குலங்கள்மிகு மலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளிவிடம்வைத்தார் எண்டோள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர் . இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர் . திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்த விடத்தை உண்டு , அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர் . எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர் . நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர் . அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

குலங்கள் - கூட்டங்கள் . ` குலங்கள் மிகு மலைகள் ` எனவும் , ` ஞாலத்தில் வைத்தார் ` எனவும் கொள்க . குருமணி - நிறம் வாய்ந்த மாணிக்கம் . கோலம் - வேடம் . உலம் கிளரும் - திரண்ட கல்போல உயர்கின்ற ; இது வடிவுவமை . ` உச்சி ` என்றது , படத்தை , ` விடம் உண்டருளிவைத்தார் ` என மாற்றி , ` வைத்தார் ` என்பதற்கு , ` கண்டத்தில் வைத்தார் ` என உரைக்க . ` உள் ` என்பதனை , ஒடுவாகத் திரிக்க . அனிலம் - காற்று . ` விசும்பின் ` என்பதில் உள்ள இன் , வேண்டாவழிச் சாரியை . மிசை - மேல் இடம் . ` விசும்பாகிய மேலிடம் ` என்க . ` நினைந்தாராய் ` என எச்சப்படுத்துக . நினைந்தது சுவாமிகளது வேண்டுகோளை . ` உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் ` ( தி .12 திருநாவு . புரா . 195.) எனக் கூறியதுகொண்டு இவ்வாறு அருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 9

சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர் . இவ்வுலகில் எண்திசைகள் , கீழ்ப்புறம் , மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர் . தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர் . நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர் . கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன் புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர் . காளையை வாகனமாகக் கொண்டவர் . வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

ஞாயிறும் , திங்களும் வட்ட வடிவினவாதல் பற்றி . அவற்றின் இயக்கத்தை உருள்வதாக அருளிச்செய்தார் . ` சென்று உருளும் ` என்றருளினாராயினும் ` உருண்டு செல்லும் ` என்றலே கருத்து . நின்று - வெளி நின்று ; அருளி என்றது துணை வினை . ` கொன்றருளி ` என வருவதும் அது . மறைபொருள் - இரகசியப் பொருள் ; நல்லாசிரியர்பாற் கேட்டன்றித் தாமே உணரலாகாத பொருள் . ` சேவடியை , கூற்றம் நடுங்கியோடவைத்துக் கொன்றருளினார் ` என்பது கருத்து . இங்கு , ` வைத்தார் ` என்பது , ` உதைத்தார் ` என்னும் பொருளது . நன்று - நன்மை . திருவடிகளே , கூற்றைக் கொன்றதுபோலும் தீமையாகிய மறக்கருணையையும் , மார்க்கண்டேயருக்கு உலவா வாழ்நாள் அளித்ததுபோலும் நன்மையாகிய அறக்கருணையையும் செய்யுமாகலின் ஈண்டு அறக்கருணையே செய்தன என்பார் , ` நன்றருளும் திருவடி ` என்றருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 10

பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவும் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் , பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க , கங்கை அலை வீச , அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர் . தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர் . சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்டவர் . நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர் . உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவர் . விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர் .

குறிப்புரை :

உரிஞ்சி - உராய்ந்து , ` உரிஞ்சி , கிடந்து , என்னும் எச்சங்கள் எண்ணுப்பொருளில் வந்தன . ஆம் பரிசு - ஏற்றவகையில் . ` தமக்கு ` என்புழித் ` தாம் ` என்றது , உயிர்களை . ஒம்பரிய - நீக்குதற்கு அரிய . ` வானோரும் நாமும் பரவும் ` என்க . ` நாம் ` என்றது மக்களை .

பண் :

பாடல் எண் : 11

குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா என்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் , கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளையும் அமைத்தவர் . கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர் . இராவணன் ` தலைவனே ` என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர் . தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து , நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர் .

குறிப்புரை :

குலம் - கூட்டம் . ` வருதிரைகள் ` என்னும் அன்மொழித் தொகை , ` கடல் ` என்னும் ஒரு சொற்றன்மையாய் , ` கிளரும் ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று . குரு - நிறம் . மலை , கயிலாயம் . உலம் - திரண்டகல் ; அஃது உவமையாகு பெயராய் , தோள்களை யுணர்த்திற்று . ` உற ` ` துன்பம் உற ` என்க . புகழ் , இராவணனை அடர்த்தும் . அருளியும் இறைவர் அடைந்தவை . புரிந்து ஆளாக - மக்கள் இடைவிடாது சொல்லித் தமக்கு ஆளாகுமாற்றால் . கொள்ள - ( அவர்களை ) ஏற்றுக் கொள்ளுதற்கு ( அப்புகழை வைத்தார் ). ` இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் - பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு ` ( குறள் - 5) என்றருளியது காண்க .
சிற்பி