திருஆலவாய்


பண் :

பாடல் எண் : 1

முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய் , செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய் , அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய் , தூய முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான் பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம் .

குறிப்புரை :

` தோன்றி முளைத்தானை ` என முன்னே கூட்டுக . ` எல்லார்க்கும் ` எனச் சிறப்புடைய உயர் திணைமேல் வைத்து அருளிச்செய்தாராயினும் , ` எல்லாப் பொருட்கும் ` என்பதே திருக் குறிப்பாகக் கொள்க . எல்லாப் பொருட்கும் முன்னே தோன்றி முளைத் தமையாவது , அவற்றின் தோற்றத்திற்கெல்லாம் தானே நிமித்த காரணனாய் முதற்கண் நின்றமை . இனி இதற்கு , ` ஏனைய தலங்களில் உள்ள இலிங்க மூர்த்திகட்கெல்லாம் முன்னே தோன்றி முளைத்த , தான்றோன்றியாகிய ( சுயம்புவாகிய ) இலிங்கமூர்த்தி ` எனவும் உரைப்பர் . வளைத்தான் - அணிந்தான் . ` சுடுசரம் கோத்து அதனால் துளைத்தானை ` என்றல் கருத்தென்க . துவள - உடல் மெலிய . துவளவும் நீறு ஆகவும் ஆடி என்க . உமையது மேனி துவளுதலும் , நீறு படிதலும் கலவியால் ஆவன ; நீறே சாந்தாகலின் , அதனையே கூறினார் ; உமையொடு கூடிய அழகர் ( சோமசுந்தரர் ) ஆதலின் இவ்வாறு அருளிச்செய்தார் . ` கூடல் ` என்பது மதுரை நகரத்திற்கும் , ஆலவாய் என்பது அங்குள்ள திருக்கோயிலுக்கும் பெயர் , திருக் கோயிலின் பெயராகிய ஆலவாய் என்பதே பின்னர் நகரத்திற்கு ஆகி வழங்கிற்று . ` தென்கூடல் ` என்பது , செய்யுள் நெறியாகிய இனச் சுட்டில்லா அடை . மேலனவற்றோடியைய , ` சிவன் ` என்பதில் தொகுத்தலாய் நின்ற இரண்டனுருபு விரித்து , ` அடியே ` என்னும் பிரிநிலை ஏகாரத்தை அதனுடன் கூட்டுக . அவ்வேகாரம் மேல்நின்ற ஐயுருபுகளோடும் இயையும் . ` சிந்திக்க ` என்னும் வினையெச்சம் , ` சிந்தித்தல் ` என்னும் தொழிற்பெயர்த் தன்மைத்தாய் நின்றது . இவ்வாறு நிற்றல் . வழக்கினுட் பயின்றுவருவதேயாம் . இது , ` வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய ` ( தொல் . சொல் .457.) என்னும் விதியானே அமையும் . ` சிவனை அடிசிந்தித்தல் ` என்பது , ` அரசனை அடி பணிதல் ` என்பதுபோலக் கொள்க . ` பெற்றேன் ` என்றது , அப்பேற்றின் அருமை உணர நின்றது . எனவே , ` முளைத்தானை ` என்பது முதலாக வகுத்துக் கூறிய பலவற்றிற்கும் அவனது அருமையை உணர்த்துதலே கருத்தாயிற்று .

பண் :

பாடல் எண் : 2

விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் தன்னைத்
தெண்ணிலவு தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

தேவருலகிலுள்ள மேலாருக்கும் மேலாயவனாய் , வானத்தில் உலவிய முப்புரங்களையும் அழித்தவனாய் , வண்டுகளின் பண்ணோசை நிலைபெற்ற பசிய பொழில்களை உடைய பழன நகரில் உள்ளானாய் , பசும் பொன்நிறத்தனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , சடைக்கற்றைக்குள் அடங்கிய கங்கையை உடையவனாய் , உமையோடு வெளிப்படையாக உடனாகியும் அவளைத் தன் உருவில் மறைத்தும் இருப்பவனாய்த் தெளிந்த ஞானம் உடையார் பலரும் தங்கியிருக்கும் தென் கூடல் ஆலவாயில் உள்ள சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

விண்ணுலகின் மேலோர்கள் - தேவர்கள் . பண்நிலவு - ( வண்டுகளின் ) இசை நிலைபெற்ற . பழனம் , சோழ நாட்டுத் தலம் . உள்நிலவு - உள் இடம் வாய்ந்த . தெள் நிலவு - தெளிவு ( ஞானம் ) நிலைபெற்ற ; கூடல்மாநகர் , சங்கம் முதலியவற்றை யுடையதாய் இருந்தமையும் , திருஞானசம்பந்தரால் திருப்பாசுரம் அருளி உண்மையை விளக்கியருளப் பெற்றமையும் ஓர்க .

பண் :

பாடல் எண் : 3

நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக்
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
கடுங்குரலா யிடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கங்கையை நீண்ட சடையில் தங்கச் செய்தவனாய் , பின் பகீரதன் பொருட்டாக அதன் ஒரு பகுதியை நிலத்தின்கண் பெருகி ஓடவிட்டவனாய் , பால் , தயிர் , நெய் என்பவற்றின் அபிடேகத்தைப் பலகாலும் உடையவனாய் , பகை கொண்டு வந்த கொடிய கூற்றுவனைத் தண்டித்தவனாய் , காற்றின் திரட்சியாய் மேகத்தின் உள்ளே இருந்து கொடிய இடியாக ஓசை எழுப்புபவனாய் , நெற்றியின் கண் தீத்திரட்சி போன்ற கண்ணை உடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

` அந்நீர் ` என எடுத்துக் கொண்டு , ` நிலம் மருவி ஓடக் கண்டான் ` என இயைக்க . கண்டான் - ஆக்கினான் . பகீரதன் பொருட்டு , முதற்கண் கங்கையைச் சடையில் தாங்கி . பின்னர் நிலத்தின்கண் பெருகியோட விட்ட வரலாறுண்மை அறிக . பயின்று - மிகுதியாக . கால் திரள் - காற்றின் திரட்சி . ஆகாயத்தின் ஓசை காற்றினால் வெளிப்படுமாகலின் , ` கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடுங்குரலாய் இடிப்பானை ` என்றருளிச் செய்தார் . ` நெற்றி ஓர் கண் ` என மாற்றி , ` நெற்றியில் உள்ள ஒரு கண்ணாகிய தீத் திரளை ` என உரைக்க . கண்ணையே தீத்திரள் என்றருளிச்செய்தமையால் , ` திரள் ` என்பது , சினையிற் கூறும் முதலறி கிளவியாம் . ( தொல் . சொல் . 114.)

பண் :

பாடல் எண் : 4

வானமிது வெல்லா முடையான் தன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் தன்னைக்
கடைக்கண்ணால் மங்கையையு நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் தன்னை
யுணர்வாகி யடியேன துள்ளே நின்ற
தேனமுதைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

வான் உலகினையும் நிலவுலகினையும் தன் உடைமையாக உடையவனாய்ப் பாம்பினைக் கச்சாக அணிந்தவனாய் வலிய பேய்கள் சூழச்சுடுகாட்டில் கூத்தாட வல்லவனாய் , தன் கடைக்கண்களால் உமாதேவியை நோக்கி அவள் பரிந்துரைத்த குறிப்பினையும் பெற்று என்பால் உள்ள குறைகளை எல்லாம் நீக்கினவனாய் , அடியேன் உள்ளத்துள்ளே ஞானவடிவினனாய் நின்று தேன் போலவும் அமுது போலவும் இனியனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

இது - இவ்வுலகம் , ` ஊனமது ` எல்லாம் என்பதில் ` எல்லாம் ` என்பது ` முழுதும் ` என்னும் பொருளதாய் நின்றது . வரி - கீற்று ; ` வரியும் ( கட்டுகின்ற ) கச்சு ` எனக் கச்சிற்கு அடையாக்கலும் ஆம் . ` வல்லான் ` என்றது , பிறர் அது மாட்டாமை யுணர்த்திநின்றது . ` மங்கையையும் நோக்கி ` என்றதனால் , ` என்னையும் நோக்கி ` என்பது பெறப்பட்டது . ` மங்கையை நோக்கி ஊனம் ஒழித்தான் ` என்றதனால் பாசம் அறுதல் அவன் அருளாலே என்பது பெறப்பட்டது . ` மங்கையுமை ` என்பதும் பாடம் . தேனமுது - தேனாகிய அமுது . சுவையாலும் பயனாலும் சிறந்ததாகிய உணவை , ` அமுதம் ` என்றல் வழக்கு . இறைவனைத் தேனமுதாக அருளிச்செய்தது உருவகம் .

பண் :

பாடல் எண் : 5

ஊரானை யுலகேழாய் நின்றான் தன்னை
யொற்றைவெண் பிறையானை யுமையோ டென்றும்
பேரானைப் பிறர்க்கென்று மரியான் தன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கயிலை மலையை இருப்பிடமாக உடையவனாய் , ஏழுலகமும் பரந்து இருப்பவனாய் , ஒற்றைப்பிறையை அணிந்தவனாய் , உமாதேவியை விடுத்து என்றும் நீங்காதவனாய் , அடியார் அல்லாதார் நினைத்தற்கு அரியனாய் , பேயோடு எந்நாளும் சுடுகாட்டில் கூத்தாடுதலில் தெவிட்டாதவனாய் , தான் விடத்தை உண்டு அமரர்களுக்கு அமுதம் ஈந்தவனாய் , வேதமந்திரங்களைக் கூறிப் பிரமனும் திருமாலும் துதிக்கும் புகழுடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

` உலகு ` எனப் பின்வருகின்றமையின் ` ஊர் ` என்றது , கோநகரங்களை ; அவை தேவர் உலகங்கட்குமாம் . ஒற்றைப் பிறை - ஒரு கலையை உடைய பிறை ; ` உமையோடு ` என்புழி , ` இருத்தல் ` என ஒருசொல் வருவிக்க . அன்றி , ஓடுஉருபை இன்னுருபாகத் திரிப்பினும் ஆம் . பேரான் - நீங்காதவன் . ` பேயோடு ஆடல் ` என இயைக்க . ஆரான் - நிரம்பான் ; முடித்திடாதவன் . சீர் - புகழ் .

பண் :

பாடல் எண் : 6

மூவனை மூர்த்தியை மூவா மேனி
யுடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் தன்னைப்
படியெழுத லாகாத மங்கை யோடு
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

யாவரினும் முற்பட்டவனாய் , அடியார்கள் விரும்பிய வடிவில் காட்சி வழங்குபவனாய் , என்றும் மூத்தலில்லாத திருமேனியை உடையவனாய் , தானே மூவுலகம் முழுதும் பரவியிருப்பவனாய் , அடியவர்களின் தீவினையைப் போக்குபவனாய் , ஓவியத்து எழுதவொண்ணா அழகிய உமையோடு விரும்பி யிருப்பவனாய் , தேவர்கள் நடுங்குதலைக் கண்டு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அமுதத்தை ஈந்த தேவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே .

குறிப்புரை :

மூவன் - மூத்தல் ( யாவரினும் பெரியோனாதல் ) உடையவன் ; இது ` மூ ` என்னும் முதனிலைத் தொழிற்பெயரடியாகப் பிறந்த பெயர் . ` பாவன் , மேவன் ` என்பனவும் அவை ; தமிழகத்துள் பண்டைக்காலத்தில் , ` மூவன் ` என்னும் பெயர் வழக்கில் இருந்தமை பழந்தமிழ்ச் செய்யுள்களால் அறியப்படுகின்றது . ` அம்மூவனார் ` ( அகம் - 10) ` மூவன் ` ( புறம் - 209) முதலியன காண்க . மூவா - மூப்பு அடையாத ; அழியாத . பாவன் - பரத்தலுடையவன் . மேவன் - விரும்பியிருத்தலுடையவன் .

பண் :

பாடல் எண் : 7

துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் தன்னை
இறந்தார்க ளென்பே யணிந்தான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னை
மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னை
மற்றொருபற் றில்லா அடியேற் கென்றும்
சிறந்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

பற்றறுத்த சான்றோருக்குப் பற்றுக்கோடாகும் வழியாய் இருப்பவனாய் , அடியார்களுடைய துன்பத்தைப் போக்கி அவர்களை ஆட்கொள்ளவல்லவனாய் , இறந்தவர்களுடைய எலும்பையே அணிந்தவனாய் , இரவில் கூத்தாடவல்லவனாய்த் தன்னை மறந்த அசுரர்களின் மும்மதில்களையும் அழித்தவனாய் , வேறுபற்றில்லாத அடியார்களுக்கு என்றும் மேம்பட்டு அருளுபவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

துறத்தல் பிறப்பிற்கு அஞ்சியாகலின் , அதனை அறுப்பவன் , பிறப்பில் பெருமானாகிய சிவபிரான் ஒருவனேயாதல் உணர்த்துவார் , ` துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் ` என்றும் , அவ்வாறு தன்பற்றினையே தூநெறியாக அறிந்து பற்றுவார்க்கு அவர் விரும்பியவாறே பிறவித்துன்பத்தினை அடியோடு அவன் அகற்றியருளுதல் உணர்த்துவார் , ` துன்பந் துடைத்தருள வல்லான் ` என்றும் அருளிச்செய்தார் . எல்லி - இரவு . திரிபுரத்து அசுரர்கள் , முன்பு சிவபிரானை வழிபட்டிருந்து , பின்னர் புத்தனது போதனையால் அதனை விட்டொழித்தாராதலின் , அவர்களை , ` மறந்தார் ` எனக் குறித்தருளினார் . சிறந்தான் - தாங்கிநிற்கும் தலைவன் . ` மற்றொரு பற்றில்லா அடியேற்கு ` என எடுத்தோதியருளியது , ஏனையோர்க்கும் அஃது இன்றியமையாததாதல் உணர்த்துதற்கு ; இதனை , ` மற்றுப் பற்றெனக்கின்றி நின்றிருப் பாதமேமனம் பாவித்தேன் ` ( தி .7. ப .48. பா .1.) என வன்றொண்டப் பெருமான் வலியுறுத்தருளியது காண்க . ` அடியார்க்கு ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 8

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி , அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய் , மாசற்றவனாய் , கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய் , பிறையைச் சடையில் சூடியவனாய் , தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

வாயான் , மனத்தான் , என்பன இறைவன் , சொல்லுதற்கும் , நினைத்தற்கும் உரிய கருவிகளாகிய அவற்றிற் கலந்து நின்று தொழிற்படுத்துதலைக் குறித்தன . ` கருத்தான் ` என்றது மனத்தின் தொழிற்பாடாகிய எண்ணத்தில் , அவன் கலந்து நிற்றலை உணர்த்திற்று . ` கருத்து ` என்றது , விருப்பத்தையே . அதனை அறிந்து முடித்தலாவது , வேண்டுவார் வேண்டுவனவற்றை அவர்தம் முயற்சியின்வழிக் கூட்டுவித்தல் . கருதப்பட்டதே சொல்லப்படுதலின் , ` வாயுள் நின்ற சொல்லானை ` என்று அருளிச் செய்யாராயினார் . தூயான் - இயல்பாகவே பாசம் இல்லாதவன் ; அஃது அவன் ஊர்தியாலும் கொடியாலுமே அறியப்படும் என்பது அருளுவார் , ` தூவெள்ளை ஏற்றான்றன்னை ` என்றருளிச் செய்தார் . தொடர்ந்து நிற்றல் - உடனிருந்து புரத்தல் . ` நின்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` நின்ற தாயானை ` என்பதும் பாடம் . தவத்தவர் செய்யும் தவமேயாய் நிற்பவன் இறைவன் என்க . எனவே , அவனை நோக்கிச் செய்யப்படுவதே தவம் எனப்படுவது என்பதாம் . இனி , தவத்தின் பயனாய் உள்ளவன் என்பதும் , அதன் பொருளாகும் . தலையாய தேவராவார் . திசைக்காவலர் , அயன் , மால் முதலியோர் . இவர்கள் தேவர்கட்குத் தலைமை பூண்டு நிற்றலின் , ` தேவாதி தேவர் ` என வழங்கப்படுவர் . அவ்வழக்கின் பொருளை நன்குணர்த்தத் திருவுளம்பற்றி , ` தலையாய தேவாதி தேவர் ` என்றருளினார் . ` தேவர்க்கும் ` என்னும் சிறப்பும்மை தொக்கது . இறைவன் அவர்கட்குச் சேயன் ( காணப்படாதவன் ) ஆதல் , அதிகாரச் செருக்கினால் அவனை , எண்ணாதொழிதலால் என்க . இறைவன் , தன் அடியார்கட்குத் தொடர்ந்து நின்ற தாயாகி நிற்றலும் , செருக்குடையார்கட்குத் சேயனாகி நிற்றலும் ஒருங்கு அருளிச்செய்யப்பட்டன .

பண் :

பாடல் எண் : 9

பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் தன்னைப்
பழியிலியாய் நஞ்சுண் டமுதீந் தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
மேலாய தேவாதி தேவர்க் கென்றும்
திகைச்சுடரைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

தீவினையாகிய இருளைப் போக்கும் ஞானச் சுடராய் , அடியார்களின் பாவங்களைப் போக்குபவனாய்ப் பழி ஏதும் இல்லாதவனாய் நஞ்சினை உண்டு தேவர்க்கு அமுதம் ஈந்தவனாய்க் கிளைத்தெழுந்த தீயாகி அசுரருடைய மும்மதில்களையும் அழித்தவனாய் , நடுவுநிலை தவறாதவனாய் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவனாய் , மேலான ஒளிவடிவினனாய் , விண்ணவர்களுக்கு மேலும் உயர்வுதரும் அப்பக்தியாய் உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்களுக்கும் ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

பகையாவது இருளேயாம் , ஒளிக்குப் பகையாவது அதுவேயாகலின் , ` பகைக்குச் சுடராய் ` என நான்காவது விரிக்க . சுடராவது ஞானம் . புண்ணியமும் வினையேயாயினும் கொடுமை மிகுதிபற்றி பாவத்தைக் களைதலையே எடுத்தோதியருளினார் . இருளாவது , மூலமலமாகிய அறியாமை . அதனாலேயே வினை வருதலின் , அதனை நீக்கவே வினையொழியும் என்றதாயிற்று . ` பழியிலி ` என்றது , ` தான் அமுதத்தை உண்டு பிறர்க்கு நஞ்சைக் கொடுத்தான் என்ற பழி இல்லாதவன் ` என்றருளிய படி ; இது . தேவர்கள் இப்பழியுடைமையை உட்கொண்டு அருளிச்செய்தது . வகைச் சுடர் - கிளைத்தெழுகின்ற தீ . ` தீயாக ` என்க . வளைவிலி - கோட்டம் ( பட்சபாதம் ) இல்லாதவன் ; நடுவு நிலைமையுடையவன் . ` சலமிலன் சங்கரன் ` ( தி .4. ப .11. பா .6.) ` சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய் ` ( சிவஞானபோதம் சூ .10 அதி . 2. ) என்பன காண்க . ` மிகைச் சுடர் ` என்றதற்கு ` மிகைமக்கள் ` ( நாலடி -163) என்றாற் போல , ` மேலான ஒளி ,` என உரைக்க . ` விண்ணவர்கட்கு மேலும் அப்பக்தியாய் உள்ளவன் ` என்க . ` மேலாய ` என்றதற்கு , மேல் , ( பா .8.) ` தலையாய ` என்றதற்கு உரைத்தது உரைக்க . திகை - திசை . திகைச்சுடர் - திசை காட்டும் ஒளி ; கலங்கரை விளக்கு . தேவர்கட்கும் உண்மைநெறி உணர்த்துவோன் என்றபடி .

பண் :

பாடல் எண் : 10

மலையானை மாமேரு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை யென்தலையி னுச்சி யென்றுந்
தாபித் திருந்தானைத் தானே யெங்கும்
துலையாக வொருவரையு மில்லா தானைத்
தோன்றாதார் மதில்மூன்றுந் துவள எய்த
சிலையானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கயிலை மலையை உடையவனாய் , மேரு மலையில் தங்கியிருப்பவனாய் , வளர்ந்த செஞ்சடையினனாய் , வானோருள் மேம்பட்டவனாய் , என் தலையின் உச்சியில் என்றும் நிலைபெற்றிருப்பவனாய் , எங்கும் தனக்கு நிகராவார் இல்லாதவனாய்த் தன்னை அணுகாது பகையைப்பூண்ட அசுரர் மதில்கள் மூன்றும் அழியுமாறு பயன்படுத்திய வில்லை உடையவனாய் இருக்கும் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

மலையான் - மலைபோன்றவன் ; பெருமை யுடையவன் . தாபித்து - நிறுவி ; ` தன்னை நிறுவி ` என்க ; ` நிலையாய் இருந்தான் ` என்றபடி . ` தானேயாய் ` என ஆக்கம் வருவிக்க . ` எங்கும் ஒருவரையும் துலையாக இல்லாதான் ` என இயையும் . துலை - ஒப்பு . தோன்றாதார் - அருகில் வாராதவர் ; பகைவர் . துவள - மெலிய . ` தூளா ` என்பதும் பாடம் . ` துகளா ` என்பதே பாடம் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 11

தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் தன்னைத்
தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப்
பரிந்தவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை
ஆத்தனை யடியேனுக் கன்பன் தன்னை
யளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

பிறன் மனைவியை விரும்பிய இராவணனுடைய தோள்களையும் பத்துத்தலைகளையும் நசுக்கியவனாய் , பின் அவன் எழுப்பிய வீணை இசைகேட்டு அருள் செய்தவனாய் அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்கு இரங்கிப் பாசுபதாத்திரம் ஈந்தவனாய் , நம்பத்தகுந்தவனாய் , அடியேன் மாட்டு அன்பு உடையவனாய் , அளவற்ற பல ஊழிக்காலங்களையும் கண்டும் தன் நிலைபேற்றில் மாறுபடாது இருக்கும் பரிசுத்தனாகிய தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

தூர்த்தன் - பிறன்மனை விழைந்தவன் ; இராவணன் . பார்த்தன் - அருச்சுனன் . பணி - தொண்டு ; தவம் . பரிந்து - இரங்கி . ஆத்தன் - நம்பத்தக்கவன் . தீர்த்தன் - பரிசுத்தன் .
சிற்பி