திருநாகைக் காரோணம்


பண் :

பாடல் எண் : 1

பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

உலகத்தார் போற்றும் திருப்பழனம் , சீசைலம் பைஞ்ஞீலி என்ற திருத்தலங்களை உடைய பெருமான் சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய்த் திருமுடிமேல் பிறையைச் சூடியவனாய் , எண்ணிறந்த பெயர்களை உடையவனாய்ப் பிறர் தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்க் கரிய கடலால் ஒருபுறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான் .

குறிப்புரை :

பழனம் , பைஞ்ஞீலி சோழநாட்டுத் தலங்கள் . சீபருப் பதம் ( சீசைலம் ), வடநாட்டுத் தலம் . ` சூடி ` என்னும் எச்சம் , ` உடைய ` என்னும் பெயரெச்சக் குறிப்போடும் , ` தன்னை ` என்னும் இரண்டாவது , ` காட்சி ` என்னும் தொழிற்பெயரோடும் முடிந்தன . காட்சி , காணுதல் என்க . கார்ஆர் - கருமைநிறைந்த ; கார் , மேகமும் ஆம் . ` நாகை ` என்பது , ` நாகபட்டினம் ` என்பதன் குறுக்கம் . இது கடற் கரையில் உள்ளதென்பது வெளிப்படை . ` காரோணம் ` என்பது , திருக்கோயிலின் பெயர் .

பண் :

பாடல் எண் : 2

விண்ணோர் பெருமானை வீரட் டனை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்
பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை
அண்ணா மலையானை ஆனைந் தாடும்
அணியாரூர் வீற்றிருந்த அம்மான் தன்னைக்
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய் , வெண்ணீறு அணிந்த மேனியனாய்ப் பெண் ஆண் பேடிகளாய் உள்ளானாய்ப் பெரும்பற்றப் புலியூர் அண்ணாமலை அழகிய ஆரூர் என்ற திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானாய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்பும் பெருமானை இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்தில் என்றும் காணலாம் .

குறிப்புரை :

வீரட்டன் - வீரட்டானத்தான் . ` வீரட்டானை ` எனவும் பாடம் ஓதுவர் . மெய் - உடம்பு . மேனி - நிறம் . ` அணிந்த மேனி ` என்பது ` அணிந்ததனால் ஆகிய மேனி ` எனக் காரண காரியப் பொருளதாய் நின்றது . பெரும்பற்றப் புலியூர் - தில்லை . ` ஆன் ஐந்து ஆடும் அம்மான் ` என இயையும் . கண் ஆர் - இடம் மிகுந்த ; ` கண்ணுக்கு நிறைந்த ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

சிறையார் வரிவண்டு தேனே பாடுந்
திருமறைக் காட்டெந்தை சிவலோகனை
மறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும்
வலிவலமும் தேவூரும் மன்னி யங்கே
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
பற்றியாள் கின்ற பரமன் தன்னைக்
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப்பாடும் திருமறைக்காடு , வேதம் முழங்கும் திருவாய்மூர் , கீழ்வேளூர் , வலிவலம் , தேவூர் இவற்றில் உகந்தருளி இருக்கும் உத்தமனாய் , எந்தையாகிய சிவலோகனாய் , ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற மேம்பட்ட பெருமானைக் கருமை நிறைந்த கடல்புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

தேனே பாடும் - தான் உண்ட தேனையே இசையாகப் பாடுகின்ற ; ` மிக இனிமையாகப் பாடுகின்ற ` என்றதாம் . ` எந்தையாகிய சிவலோகனை ` என்க . மறை ஆன்ற - வேதம் நிறைந்த . வாய்மூர் , கீழ்வேளூர் , வலிவலம் , தேவூர் சோழநாட்டுத் தலங்கள் . ஒற்றியூர் , தொண்டைநாட்டுத் தலம் . ` ஒற்றி ஊரை இல்லாக ( உறையுளாக ) ப் பற்றி ` என்க . கறை ஆர் கடல் - கருமை நிறைந்த கடல் .

பண் :

பாடல் எண் : 4

அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
ஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை
மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர் , பாச்சிலாச்சிராமம் , ஆனைக்கா என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய் , மூவுலகும் தான் பரந்திருக்கும் வடிவினனாய்ச் செஞ்சடைமேல் தனக்குரிய அடையாளப் பூச்சுக்களையும் பிறையையும் சூடிய பெருமானை இளையனவாதலின் நெடுநாள் நிலைத்திருக்கக்கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

அன்னம் ஆம் - அன்னப்பறவை மிகுகின்ற . அம்பர் - திருவம்பர் ; அம்பர்ப் பெருந்திருக்கோயில் , அம்பர் மாகாளம் இரண்டுங் கொள்க . ஆச்சிராமம் - திருப்பாச்சிலாச்சிராமம் ; இம் மூன்றும் சோழநாட்டுத் தலங்களே . சின்னம் - தனக்கென்று உள்ள அடையாளம் ; அவை , ` கொன்றை , எருக்கு , ஊமத்தை ` முதலியன . கன்னி - அழியாமை . அம் . சாரியை .

பண் :

பாடல் எண் : 5

நடையுடைய நல்லெருதொன் றூர்வான் தன்னை
ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய
படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்
பன்மையே பேசும் படிறன் தன்னை
மடையிடையே வாளை யுகளும் பொய்கை
மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்
கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

நல்ல நடையினை உடைய காளையை இவர்ந்து செல்பவனாய் , ஞானப் பெருங்கடலாய் , நல்லூரை விரும்பியவனாய் , மழுப்படையை ஏந்தியவனாய்த் தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய் , மடைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை உடைய மருகலின் ஒளிவீசும் நீல கண்டனாய் உள்ள பெருமானை நல்ல முகப்புக்களை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

படையுடைய - படைஞராவார் பிடிக்கின்ற . மழுவாள் - மழுவாகிய ஆயுதம் . பன்மையே பேசுதல் - தனது நிலையை ஒன்றாகச் சொல்லாது , பலவாறாகச் சொல்லுதல் . அஃதாவது , தன்னை , ` உருவுடையன் ` என்றும் , உருவிலன் ` என்றும் , ` ஓர் ஊரும் இல்லாதவன் ` என்றும் , ` பல ஊர்களை உடையவன் ` என்றும் , ` பெயர் ஒன்றும் இல்லாதவன் ` என்றும் , ` அளவற்ற பெயர்களை உடையவன் ` என்றும் , ` இல்லத்தவன் ` என்றும் , ` துறவி ` என்றும் மற்றும் இன்னோரன்ன பலவாகச் சொல்லுதல் . இது பற்றி , ` படிறன் ` ( பொய்யன் )` என்றருளிச்செய்தார் . எல்லாவற்றுக்கும் ` அப்பாற் பட்டவன் ` என்பது திருக்குறிப்பு . எனவே , ` படிறன் ` என்றது , உள்ளுறைச் சிறப்பு ( பழிப்பது போலப் புகழ்தல் ) ஆயிற்று . மருகல் சோழநாட்டுத் தலம் . வாய் , ஏழனுருபு . ` மருகல்வாய் உள்ள சோதியாகிய மணிகண்டன் ` என்க . கடை - வாயில் ; இதனை எடுத்தோதியது அழகு பற்றி .

பண் :

பாடல் எண் : 6

புலங்கள்பூந் தேறல்வாய் புகலிக் கோனைப்
பூம்புகார்க் கற்பகத்தைப் புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூ ழணிநீர்க் கங்கை
யவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
ஏகாச மிட்டியங்கு மீசன் தன்னைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

வயல்களிலே பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகலித் தலைவனாய் , பூம்புகாரில் உள்ள கற்பகமாய் , அசைகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த புன்கூரில் அழகிய நீரை உடைய கங்கையைச் சடைமேல் கொண்ட தலைவனாய் , தலைமாலையைச் சூடிப்பாம்பினை மேலாடையாகத் தரித்து விளங்குகின்ற ஈசனைக் கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

புலம் - வயல் . தேறல் - தேன் . வாய் - வாய்ந்த ; பொருந்திய . ` வயல்கள் பூக்களது தேனைப் பொருந்தியுள்ள புகலி ` என்க . ` வாய்ப்புகலி என்பதும் பாடம் . புகலி - சீகாழி , பூம்புகார் - காவிரிப்பூம்பட்டினம் . புன்கூரும் சோழநாட்டுத்தலம் . ` புன்கூர்மேய அம்மான் ` என இயையும் . அலங்கல் - அசைதல் . அசைவன நெற்கதிர்கள் என்க . ` கழனிசூழ் புன்கூர் ` என முன்னே கூட்டுக . இனி , ` கழனியைச் சூழ்தற்குரிய கங்கை ` என , கிடந்தவாறே கங்கைக்கு அடையாக்கலும் ஆம் . ஆதரித்தல் - விரும்புதல் ; அது . விரும்பி அணிதலாகிய காரியத் தின்மேல் நின்றது . ` தலைமாலையையும் ` பாம்பையும் பற்றி ஏகாசமாக இட்டு ` என்க . ஏகாசம் - மேலாடை . அது மேலாடை போலத் தோளில் இடப் படுவதைக் குறித்தது . ` கொண்டு ` என ஏகாரம் இன்றி ஓதுதல் பாடம் அன்று . கடலில் கலங்கல் கரையோரத்து உளதாகும் என்க . ` கலங்கள் ` எனப் பாடம் ஓதுதலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 7

பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்
புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத்
தென்சிராப் பள்ளிச் சிவலோகனை
மன்மணியை வான்சுடலை யூராப் பேணி
வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

பொன்போன்று அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனாய் , வெண்ணீறு பூசியவனாய்ச் சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய் , அழகிய சிராப்பள்ளிமேய சிவலோகனாய்த் தலையாய மணிபோல்பவனாய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக்கொண்டு வலிய காளையை இவரும் வேதங்களில் வல்ல பெருமானை இரத்தினக் கற்களைக் கரைசேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

பொன் மணி - பொன்போலும் அழகிய . அம் , சாரியை . பூங்கொன்றை ` என்பதனை , ` கொன்றைப் பூ ` என மாற்றியுரைக்க . சில் மணிய - சில மணிகள் கட்டிய ( சூலம் ). மன்மணி - நிலைபெற்ற இரத்தினம் ; ` தலையாய மணி , என்றலுமாம் . வல்லெருது - தன்னைத் தாங்கவல்ல எருது . கல்மணி - கற்கள் என்னும் பெயரவாகிய மணிகள் .

பண் :

பாடல் எண் : 8

வெண்டலையும் வெண்மழுவும் ஏந்தி னானை
விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
புண்தலைய மால்யானை யுரிபோர்த் தானைப்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
எண்டிசையும் எரியாட வல்லான் தன்னை
யேகம்பம் மேயானை யெம்மான் தன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

கோவணம் உடுத்து வெண்ணீறு பூசிப் புண்ணைத் தலையிலுடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து வெண்தலை ஓட்டையும் வெள்ளிய மழுவையும் ஏந்திய புண்ணியனாய் , வெண்ணீறணிந்து எட்டுத் திசைகளிலும் தீயில் கூத்தாடுபவனாய் , ஏகம்பத்தில் விரும்பித் தங்கும் எம்பெருமானைத் தாழைப்புதர்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

வெண் மழு - கூரிய மழு . அசைத்த - கட்டிய யானைக்குத் தலைபுண் ஆதல் , அங்குசத்தால் குத்தப்படுதலால் என்க . இது , இனப் பொதுமைபற்றிக் கூறப்பட்டது . எட்டுத் திசையிலும் எரியாடுதல் , அவற்றை அழித்தென்க . கண்டல் - தாழை . கழனி போலுதல் பற்றி , தாழம்புதர் உள்ள இடங்களைக் ` கழனி ` என்றருளிச் செய்தார் ; நெய்தலொடு மருதம் மயங்கியது என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் தன்னைத்
தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை
வில்லானை மீயச்சூர் மேவி னானை
வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்
பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்
பொறியரவம் மார்பாரப் பூண்டான் தன்னைக்
கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை , மீயச்சூர் என்ற இவற்றை மேவியவனாய்ப் பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்து நரகலோகத்தைப் பாழ்படச் செய்பவனாய் , ஒளியுடையவனாய் , வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்த் தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய்ப் புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க் கல்லாலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

சொல் - புகழ் . நரகத்தைத் தூர்த்தலாவது , பலரும் நன்னெறியில் ஒழுகச் செய்தலால் பாழ்படச் செய்தல் ; இதுவே இறைவனது குறிக்கோள் என்க . ` வில்லானை ` எனப் பொதுப்பட அருளிச் செய்தாரேனும் , ` மேருமலையாகிய வில்லானை ` என்பது இசையெச்சத்தாற் கொள்ளப்படும் . மீயச்சூர் - சோழநாட்டுத் தலம் . பொல்லாதார் - அசுரர் . ` புல்லாதார் ` என்பது பாடம் எனலுமாம் . ` பூண்டான் ` என்பது , ` பூண்டு சென்றான் ` எனத் தன் காரியந் தோன்ற நின்றமையின் , ` பொன்ற ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று . பொன்ற - அழிய . பொறி - புள்ளி . ஆர - நிரம்ப .

பண் :

பாடல் எண் : 10

மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை
அவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால்
கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்திலுள்ள அறிவிலிகள் பேசும் பொய்யுரைகளையும் உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய்யுரைகளையும் மனத்துக் கொள்ளாமல் , யானைத்தோல் போர்த்த எம்பெருமானைப் பற்றும் பற்றினையே உண்மையான விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக் கடலின் கழி சூழ் நாகைக் காரோணத்து எம் பெருமானைக் காண இயலுமா ? அப்பெருமான் தன்னையே பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள் செய்து அகக்கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது .

குறிப்புரை :

அமணர் - ஆருகத மதக் குருமார் . ` அவர்களது மாண்பினை உரைக்கும் ( உரைத்துப் போற்றும் ) குண்டர் ` என்க ; இவர் , இல்லறத்தவர் . சினை - உடம்பு . சீவரத்தர் - துவர் தோய்த்த ஆடையர் ; புத்தமதத் துறவிகள் . ` போத ` என்பதனை , போந்து , எனத் திரிக்க . பனை , உவம ஆகுபெயராய்த் துதிக்கையையும் , சினையாகு பெயராய் யானையையும் உணர்த்திய இருமடியாகு பெயர் . எந்தை அவன் - எம் தந்தையாகிய அவன் . பற்று - துணை . ` அவன் பற்று ` என்பது , ` அவனது துணை ` எனத் துணைக்கிழமைப் பொருளதாகிய ஆறாம் வேற்றுமைத் தொகை . ` காணலாமே ` என்னும் ஏகாரம் , இங்கு வினாப்பொருள் தந்தது . ` நெஞ்சே பொய்யர் பொய்களை எல்லாம் மெய்யென்று கருதாதே போந்து அவன்பற்றே பற்றாகக் காணில் அல்லால் காணலாமே ` என முடிக்க . இனி , ` அல் ஆல் கடல் ` எனப் பிரித்து இயைத்து , ` இருள் நிறைந்த கடல் ` எனப் பொருள்கொண்டு , ` காணின் காணலாமே ` என முன்னைத் திருப் பாடல்களிற் போலவே உரைத்தலும் ஆம் . ` தென்கழி ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 11

நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
நேருருவங் காணாமே சென்று நின்ற
படியானைப் பாம்புரமே காத லானைப்
பாம்பரையோ டார்த்த படிறன் தன்னைச்
செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக் கென்று
சென்றானை நின்றியூர் மேயான் தன்னைக்
கடிநாறு பூஞ்சோலை யந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய் , பாம்புரத்தை விரும்பியவனாய் , பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய் , முடை நாற்றம் வீசிய தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவனாய் , நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

நெடியான் - திருமால் . நேடி - தேடி . ` உருவம் நேர் காணாமே ` என்க . காணாமே - காணாதபடி . சென்று - நீண்டு . படி - வடிவம் . பாம்புரம் , நின்றியூர் , இவை சோழ நாட்டுத் தலங்கள் . ` அரையோடு `, ` அரையின்கண் ` என்க . ` அரையோடு சேர ` என . ஒரு சொல் வருவித்தலும் ஆம் . செடி - முடைநாற்றம் . சென்றது , தாருகாவன முனிவரது பத்தினியர்பால் என்க . கடி நாறு - மணம் வீசுகின்ற .
சிற்பி