திருமறைக்காடு


பண் :

பாடல் எண் : 1

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மணாளன் ஆம் சிவபெருமான் தூண்டப்பட்ட விளக்கொளி போன்ற ஒளியினனாய்ப் பழைய தேவர்களுக்கு முடிமணியாய்த் தன்னை நினையாதார் காண்பதற்கு அரிய கடவுளாய்த் தன்னைத் தியானிப்பவருக்கு மிக எளியனாய் வேண்டுவார் வேண்டுவதை ஈவானாய்ப் பேறாகிய தன்னை அடைவதற்குத் தானே ஆறாய் ( வழியாய் ) விரதங்களால் மாட்சிமைப்பட்ட மனமுடைய சான்றோர்களின் மனத்தானாக உள்ளான் .

குறிப்புரை :

தூண்டப்பட்ட விளக்கு மிக்க ஒளியுடையதாகு மாகையால் . இறைவனை , ` தூண்டு சுடர் அனையசோதி ` என்றருளினார் . சூளாமணி - தலையில் அணியும் மணி ; இது பெருவிலையுடைய தாய் ஒர் அரிய மணியாய் இருக்கும் . ` கருதுவார்க்கு ஆற்ற எளியான் ` எனப் பின்னர் அருளிச் செய்தமையால் , முன்னர் , ` கருதாதார்க்கு ` ஆற்ற அரியான் என்பது கொள்ளப்படும் . ` காண்டற்கு ` என்பது பின்னரும் சென்று இயையும் . எனவே , அன்பரல்லாதார்க்குச் சால அரியனாயும் , அன்பர்க்குச் சால எளியனாயும் நிற்பன் என்பது உணர்த்தியருளியவாறாதல் அறிக . ` வேண்டுவது ` என்னும் ஒருமை , இனப்பொதுமை உணர்த்தி நின்றது . ஆகவே , அது , வேண்டப்படுவன பலவற்றையும் குறிக்கும் . உலகவர்க்கு அவரவர் வினைவழியால் எழும் விருப்பத்தினை , அவர்க்குத் தோன்றாது , அவரும் பிறருமாகிய உயிர்கட்குப் பின்னும் , அவரின் மேம்பட்ட தெய்வங்கட்குப் பின்னும் , சடமாகிய பௌதிகங்கட்குப் பின்னும் கரந்து நின்றும் , அடியவர் தன்மாட்டு வைத்த அன்பின்வழித் தோன்றும் விருப்பத்தினை , அவர்க்குக் கன்றை நினைந்துருகும் தாய்ப்பசுவின் முலையிற் பால்தானே விம்மி யொழுகுவதுபோல வெளிப்பட்டு நின்றும் முடித்தருளுதலை , ` வேண்டுவார் வேண்டுவதே ஈவான் ` என்று அருளிச்செய்தார் . ` ஈவான் ` என்றதனால் அங்ஙனம் முடித்தல் கைம்மாறற்ற கருணை காரணமாகவன்றிப் பிறிதொன்றான் அன்று என்பது விளங்கும் . ( உயர்ந்தோர் , தாழ்ந்தோர்க்கு வழங்குதலே ஈகை எனப்படும் என்க .) வினைகளின் பயன் , ` உயிர்கள் , தெய்வங்கள் சடமாகிய பௌதிகங்கள் என்னும் மூன்றன் வழியாகவே வரும் எனவும் , அவை முறையே , ` ஆதியான்மிகம் , ஆதிதைவிகம் , ஆதிபௌதிகம் ` எனப்படும் எனவும் உணர்க . ஆதியான்மிகம் முதலிய மூன்றன் விளக்கத்தை ` ஆதி தைவிகம் ஆதி பௌதிகம் ` ( ஞானாமிர்த அகவல் - 19.) எனவரும் பாடற் பகுதியிற் காண்க . இம்மையில் வினைவழித் தோன்றும் விருப்பம் இம்மையிலே முடிதல் , இறைவனை அது வேண்டிச் செய்யும் வழிபாட்டினால் ஆகும் . அவர்க்கு இறைவன் அதனை , கடைந்தவழித் தோன்றும் நெருப்புப்போலத் தோன்றியும் தோன்றாதும் நின்று அருளுவனாகலின் , அவர்க்கு , அவன் , காண்டற்கு அரியனுமாகாது எளியனுமாகாது இடைநிகரனாய் நிற்பன் என்க . அவனருளாலே அவனை அணுக வேண்டுதலின் , அவனையே மெய்ந்நெறி என்று அருளிச் செய்தார் . விரதமாவது , கடிவன கடிந்து , கொள்வன கொண்டு ஒழுகுதல் . அது மனத்திட்பத்தான் நிலைபெறுவதாகலின் , ( அவை ) ` மாண்ட மனத்தார் ` என்றருளிச் செய்தார் . மாண்ட - மாட்சிமைப்பட்ட . இவ்வெச்சம் இடப்பெயர் கொண்டதென்க . மணாளன் - அழகன் . இத்திருத்தாண்டகங்கள் முன் இரண்டு சீர்களும் மூவசைச் சீராகவும் , பின் இரண்டு சீர்களும் ஈரசைச் சீராகவும் , அவற்றுள்ளும் நான்காஞ்சீர் தேமாவாகவும் வந்த நாற்சீர்த் தூக்கு இரண்டானாய அடிகளால் வருதலேயன்றி , ஒரு தூக்கின் முதற்சீர் ஈரசையாய் வெண்டளை தட்டு நிற்கவும் , இரண்டாஞ் சீர் ஈரசையாய்ப் பெரும்பாலும் வெண்டளையும் , சிறுபான்மை ஆசிரியத் தளையும் தட்டு நிற்கவும் வருதலும் உண்டாகலின் இத்திருப்பாடலின் மூன்றாம் அடியின் இரண்டாந் தூக்கின் முதலிரண்டு சீர்கள் , ` மெய்ந்நெறி கண்டாய் ` என நின்றன .

பண் :

பாடல் எண் : 2

கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

கைகளால் ஒலிக்கப்படும் வீணையை வாசிப்பதில் வல்லவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய் ஒளி விளங்கும் ஞான விளக்குப்போன்ற வடிவினனாய் மெய் அடியார் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வித்தாய்ப் படம் எடுக்கும் நாகத்தை அணிந்தவனாய் மேலாளரையும் கீழ்ப்படுத்த மேலானாய்ப் பாசூரை உகந்தருளியிருப்பவனாய்க் கூர்மை மிக்க வாட்படையை உடையவனாய் மறைக்காட்டுள் உறையும் மணாளன் உள்ளான் .

குறிப்புரை :

கைகிளரும் வீணை - கைகள் மிக்குத் தோன்றுதற்கு ஏதுவாகிய வீணை . ` வல்லவன் ` என்பது இடைக்குறைந்து நின்றது . ` மெய்சோதி கிளரும் ` என மாற்றி , ` திருமேனி ஒளி மிகுகின்ற ` என உரைக்க . ` கிளரும் ` என்றது . சினைவினையை முதலோடு சார்த்தியது . முளைப்பது போன்று வெளிப்பட்டுத் தோன்றுதல்பற்றி , ` வித்து ` என்றருளினார் . பை - படம் . பாசூர் , தொண்டைநாட்டுத்தலம் . வை - கூர்மை . ` வாள் ` என்றது மழுவை .

பண் :

பாடல் எண் : 3

சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் முன்னொரு கால் சிலந்திக்கு அருள் செய்தவனாய் , திரிபுரங்களைத் தீ மடுத்தவ னாய் , நிலம் அதனைச் சூழ்ந்த நீர் , தீ , காற்று என்ற பூதங்களில் எங்கும் பரவி இருப்பவனாய் , உருவமும் உருவம் அற்ற நிலையும் உடையவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்ப் பிரமனும் திருமாலும் தானேயாய்க் களங்கம் நீங்கிய பெரிய விடை ஒன்றினை இவர்பவனாய் அடியார்கள் மனக்கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

சிலந்திக்கு அருள்செய்தமையை மேலே ( ப .20. பா .5) காண்க . ` துக்க ` என்பன மூன்றும் , ` தொக்க ` என்பதன் மரூஉ . ` மறைந்த ` என்பதே அவற்றின் பொருள் . ` தொக்க ` என்றே பாடம் ஓதுதலும் ஆம் . ` சலம் துக்க சடை ` என இயையும் . ` தானே ` என்பதை , ` தாமரையான் ` என்பதற்கு முன்னே கூட்டுக . ` மலம் தொக்க ` என்றது , தூய விடை என்றவாறு .

பண் :

பாடல் எண் : 4

கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளிமிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் கள்ளிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவனாய்க் காலனைக் காலால் ஒறுத்தவனாய்ப் புள்ளியை உடைய மான்தோலை உடுத்தவனாய்ப் புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய் , வெள்ளி போல ஒளி வீசும் பிறையை முடிமேல் சூடியவனாய் , வெண்ணீறு அணிந்தவனாய்த் திருச்செந்தூரை விரும்பும் முருகனுக்குத் தந்தையாய் உள்ளான் .

குறிப்புரை :

கள்ளி - கள்ளிச்செடி , முதுகாடு - சுடுகாடு . கடந்தான் - வென்றான் . உழை - மான்களில் ஒருவகை . வெள்ளிமிளிர் - வெள்ளி போல ஒளிவிடுகின்ற . ` வள்ளி மணாளன் ` என்றது , ` முருகன் ` என்னும் ஒரு சொற்றன்மைத்தாய் , ` நம் ` என்றதனோடு தொகைநிலை வகையான் இயைந்து நின்றது . ` நம் முருகன் ` என்றருளியது , சிவபெருமானுக்கு அடியராயினார்க்கெல்லாம் இளம்பெருமானடிகளாய் நிற்றல் கருதி , அவற்குத் தாதை யாயினமையை எடுத்தோதியதனால் , கணபதியை அருளி , தனதடி வழிபடும் அவர் இடர்களைக் கடிதல் போல , இப்பெருமானை அருளி அவரது பகைகளைக் கடிகின்றமை பெற்றாம் . பகையாவது வினையேயாகலின் , அப்பெருமானது கைவேலினை , ` வினை ஓட விடும் கதிர்வேல் ` ( கந்தரனுபூதி . 40.) என்றருளிச் செய்தார் , அவரைத் தலைப்பட்டு நின்ற அருணகிரிநாத அடிகள் என்க .

பண் :

பாடல் எண் : 5

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய் , தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய் , ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய் , ஆரியனாய்த் தமிழனாய் , அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய் , வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான் .

குறிப்புரை :

மூரி முழங்கு ஒலிநீர் - மிகமுழங்குகின்ற முழக்கத்தினையுடைய நீர் ; என்றது கடல் நீரையும் மழை நீரையும் . முழுத்தழல் - நிரம்ப எரிகின்ற நெருப்பு . ` பொங்கழலுருவன் ` ( தி .3. ப .120. பா .1.) என்றருளினார் , ஆளுடைய பிள்ளையாரும் . ` ஏரி நிறைந்தனைய ` என்னும் உவமை , மிகுதியேயன்றி , ` ஊருணி நீர்நிறைந் தற்றே ` ( குறள் - 215) என்றாற்போலப் பயனும் குறித்து நின்றது . ` இன்னடியார் ` என்றது , தனக்கு இனியராகும் சிறப்பின் உடையாரை அவர் அவன் அருளாலல்லது , தாமாக ஒன்றும் செய்யா ரென்க ; ` நல்ல அடியார் ` ( தி .2. ப .85.) என்றருளிச் செய்ததும் இவரையே என்க . ஆரியன் - ஆரியமொழியாய் இருப்பவன் . தமிழன் - தமிழ் மொழியாய் இருப்பவன் . சிறப்புடைய மொழிகள் இவை இரண்டல்லது பிறிதின்மையால் , இவைகளையே ஒதியருளினார் ; ` சத்தப் பிரபஞ்சம் ` எனப்படும் மொழியாய் உள்ளவனும் இறைவனே என்றருளியவாறு . வாரிமதம் - வெள்ளம் போலும் மதம் . ` மதம் ` என்பது வடசொல்லாகலின் ககரம் மிகாது நிற்றலும் உடைத்தாயிற்று . இறைவனை மதயானையோடு உவமித்தது , வலிமையும் பெருமையும்பற்றி .

பண் :

பாடல் எண் : 6

ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய் , கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய் , அகத்தியான்பள்ளியையும் , ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய் , அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய் , இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான் .

குறிப்புரை :

ஆடல் - வெற்றி . அகத்தியான் பள்ளி , கோடி ( கோடிக்குழகர் ) சோழநாட்டுத் தலங்கள் . நாடிய - விரும்பிய . ` நன்மையோடு ` என்பதனை ` நன்மையால் ` எனக் கொள்க . நன்மையாவது , அருள் . ` அருளால் , வாட்டம் தவிர்ப்பான் ` என இயையும் . இம்மை - இப்பிறப்பு . அம்மை - வருபிறப்பு . ` வாடிய ` என்பது , எதிர்வில் இறப்பாய் ` அம்மை ` என்பதனோடு இயைந்தது . அவ்வெச்சம் , தொழிற்பெயர் கொண்டது .

பண் :

பாடல் எண் : 7

வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்
பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன் . வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன் . மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன் . தேவர்கள் போற்றும் தலைவன் . பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன் . சீசைலத்தில் உறைபவன் . அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத் தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன் .

குறிப்புரை :

ஆல் ஐசேர் வேள்வி - மிக்க அழகு பொருந்திய வேள்வி . பருப்பதம் , ` சீசைலம் ` என்னும் தலம் . பரவை மேனி மால் - கடல்நிறம்போன்ற நிறத்தினையுடைய திருமால் .

பண் :

பாடல் எண் : 8

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கும் இறைவன் கண்டாய்
என்னெஞ்சே யுன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் அடியார்களுக்கு மறுமையைப் பயக்கும் அமுதமாய்ச் செல்வத்தைக் கொடுத்து இம்மையில் நலன்பயக்கும் தெளிந்த தேனாய் , நம் மனத்தைவிட நமக்கு இனியவனாய் , உண்மையான ஞானப்பிரகாசம் நல்கும் விளக்காய் , திருவெண்காட்டில் உறைபவனாய் , நம் தீவினைகள் நீங்குமாறு நம் மயக்கத்தைப் போக்கும் மருந்தாகவும் உள்ளான் .

குறிப்புரை :

` அம்மை பயக்கும் அமிர்து ` என்றது வேற்றுமை உருவகம் . ` அம்மை ` என்றது , வீட்டுலகத்தை . ஆக்கம்செய்து - செல்வத்தைக்கொடுத்து . உன்னில் - நினைத்தால் . வெண்காடு , சோழ நாட்டுத்தலம் . போக - நீங்குமாறு . மம்மர் - மயக்கம் ; அது , பொருளல்லவற்றைப் பொருளென்றுணர்வது . அதற்கு மாறாகின்றவன் இறைவனல்லது பிறிதின்மையின் , ` மம்மரறுக்கும் மருந்து ` என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 9

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்
ஆதியு மந்தமு மானான் கண்டாய்
பால விருத்தனு மானான் கண்டாய்
பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமான ஆணவ மலத்தைச் செயலறச் செய்யும் தலைவனாய் , முத்தமிழும் நான்மறையும் ஆகியவனாய் , கல்லால மர நிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறத்தை மௌனநிலையில் உபதேசித்தவனாய் , ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் அந்தமுமாக உள்ளவனாய்ப் பாலனும் விருத்தனுமாக வடிவு எடுத்தவனாய்ப் பெரிய பவள மலைபோன்ற உருவினனாய் , கொன்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனாய் , மறைக்காட்டு உறைகின்ற மணாளன் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

` நோய் மூலம் ` என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகை , பின்முன்னாக , ` மூலநோய் ` என நின்றது . எல்லாத் துன்பங்கட்கும் மூலம் , ` ஆணவம் ` எனப்படும் அகஇருள் . அதனை நீக்குவோன் இறைவனே என்றதாம் . ` அறத்தான் ` என்பது , ` அறத்தைச் சொல்லியவன் ` எனப் பொருள்தரும் . ` பால விருத்தம் ` என்பது உம்மைத் தொகையாய் நிற்ப , அதனோடு இறுதிநிலை புணர்ந்து , ` பால விருத்தன் ` என , வந்தது . ` எல்லாக் கோலங்களையும் உடையவன் ` என்பது பொருள் . மதுரைத் திருவிளையாடல்களில் , விருத்த குமார பாலரான திருவிளையாடல் இங்கு நினைக்கத்தக்கது . மாலை சேர் - மாலையின்கண் சேர்ந்த . கொன்றை - கொன்றைப் பூ . ` மலிந்தான் ` என . உடைமையை , உடைய பொருளோடு சார்த்தியருளினார் .

பண் :

பாடல் எண் : 10

அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று
சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் பிரமனும் திருமாலும் அறியாத வகையில் தீத்தம்பமாய் நீண்டு உயர்ந்த தலைவன் . இராவணன் துயரால் நடுங்குமாறு ஒளி வீசும் விரலால் அழுத்தியவன் . தசக்கிரீவன் என்ற பழைய பெயரை உடைய அவனுக்கு இராவணன் என்ற பெயரையும் வழங்கிப் பல அருள்களையும் செய்தவன் . அவனுக்கு மேம்பட்ட வாட்படையையும் ஈந்தவன் . அடியார்களுக்கு மயக்கத்தைத் தரும் ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களைத் தீர்ப்பவன் .

குறிப்புரை :

` அயனவன் , மாலவன் ` என்புழி நின்ற ` அவன் ` என்பன பகுதிப்பொருள் விகுதிகள் . ` துயரால் துளங்க ` என உருபு விரித்துரைக்க . துளங்க - நடுங்குமாறு . ` வைத்தான் ` என்பது ` ஊன்றினான் ` என்னும் பொருட்டாய் நின்றது . ` பெயர ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` மீட்சி எய்த ` என்பது பொருள் . பேர் , ` இராவணன் ` என்பது . இதற்கு ` அழுதவன் ` என்பது பொருள் . இஃது அவன் திருக்கயிலையின் கீழ்க்கிடந்து அழுதமையை என்றும் மறவா திருத்தற்பொருட்டுக் கொடுக்கப்பட்டது என்க . ` பேரும் ` என்னும் உம்மை , எச்சம் . மயர் உறு - மயக்கத்தால் வருகின்ற . வினைநோய் - வினையாகிய நோய் ; உருவகம் .
சிற்பி