திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனியான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

துதிக்கையையும் , பெருமையையும் மதத்தையும் உடைய யானைத் தோலைப் போர்த்தியவனாய் நீலகண்டனாய் , கண் பொருந்திய நெற்றியை உடையவனாய் , எல்லாருக்கும் தலைவனாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பு ஒன்றினை ஆட்டியவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய்க் கூரிய சூலத்தை ஏந்தியவனாய் , எங்களுக்குத் தலைவனாய் , ஏழுலகும் பரந்தவனாய் , எரிகின்ற விளக்குப் போல்பவனாய் , விளங்கும் மழுப்படையை ஏந்தியவனாய்ச் செந்நிற வானம் போன்ற மேனியனாய்த் திருவாரூரில் உறைபவனாய் , என் மனக் கண்ணிற்குச் சிவபெருமான் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

` கை , மானம் , மதம் ` என்ற மூன்றும் ` களிறு ` என்ற ஒன்றனோடு தனித்தனி முடிந்தன . அம்மான் - அனைவர்க்கும் தலைவன் ; இதில் , அகரம் , ` அவனன்றி ஒர் அணுவும் அசையாது ` ( தாயுமானவர் .) என்பதிற்போலப்பலரறி சுட்டு . ` ஆடரவு ஒன்று ` என்பதில் ` ஒன்று ` என்றது , இழிபு குறித்து நின்றது ; அணுகலாகாத தீமை ஈண்டு இழிபு என்க . அயில் - கூர்மை . எம்மான் - எம் தலைவன் . ` எம் ` என்றது , தம்மை உள்ளுறுத்த அடியவர்களை . எரி சுடரோன் - எரிகின்ற விளக்குப் போல்பவன் . ` நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த ` ( தி .4. ப .80. பா .5.) எனத் திருவிருத்தத்துள்ளும் அருளிச் செய்தார் . செம்மானம் , ` செவ்வானம் ` என்பதன் மரூஉ . என் சிந்தையான் - என் உள்ளத்தில் புக்கவன் ; இதனையே , எழுவாயாகக் கொண்டுரைக்க .

பண் :

பாடல் எண் : 2

ஊனேறு படுதலையி லுண்டி யான்காண்
ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் ரூர்ந்துழலும் ஐயா றன்காண்
அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

புலால் மணம் தங்கிய மண்டையோட்டில் உணவைப் பெற்று உண்பவனாய் , ஓங்கார வடிவினனாய் , ஊழிகளுக்குத் தலைவனாய்க் காளையை இவர்பவனாய் , திருவையாற்றில் உறைபவனாய் , எல்லா உலகங்களும் பரவினவனாய் , அண்டங்களுக்கு அப்பாலும் பரவியவனாய் , கையில் மானை ஏந்திய நீலகண்டனாய்ப் பெருந்தவத்தினனாய்த் திருவாரூர்ப் பெருமான் என் மனக் கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

இதனுள் வந்த ஏறுதல் , பொருந்துதல் . படுதலை - அற்றதலை . ஓங்காரம் , மொழியின் நுண்ணிலை பருநிலைகளைக் குறிக்கும் குறி . இந்நிலைகள் , ` வாக்குக்கள் ` எனப்படும் . நுண்ணிலை , ` சூக்குமை , பைசந்தி ` என இரண்டாகவும் , பருநிலை , ` மத்திமை , வைகரி ` என இரண்டாகவும் சொல்லப்படும் . இந்நால்வகை வாக்குக்களே பொருள்களின் துணிபுணர்வுக்குக் காரணமாகும் . ஊழி - படைப்புத் தொடங்கி , அழிப்புக்காறும் உள்ள கால அளவு . முதல் - முதல்வன் ; முதற்கண் உள்ளவன் . ` ஊழிக்கண் முதல் ஆனான் ` என்க . இனி , ` ஊழிக்கு முதல்வன் ஆனான் ` எனக் கொண்டு , ` எல்லாவற்றையும் நடத்தும் அக்காலத்தை நடத்தும் தலைவன் ஆயினான் ` என்றுரைப்பினும் அமையும் . ` ஐயாறன் ` என்பது ஒரு பெயர்த் தன்மைத்தாய் , ` உழலும் ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று . ` தவமும் , தவப்பயனும் ஆகின்றவன் ` என்க .

பண் :

பாடல் எண் : 3

ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் தான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடிகாண் அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண் என்சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூரில் உள்ள பெருமான் அம்பைச் செலுத்தும் வில்லால் முப்புரத்தையும் அழித்தவன் . அவன் இறைவனாய் , மறை ஓதுபவனாய் , நிர்விக்கினனாய்ப் பாவத்தை அழிக்கும் தூய ஒளியுடைய சூலப்படையினனாய் , சூரியன் சந்திரன் அக்கினி என்பவரைத் தன் மூன்று கண்களாக உடையவனாய் , ஏற்றமுறையால் என்னை அடிமை கொண்டவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய் , அடியார்க்கு அமுதமாயினவன் . தீப் போன்ற தன்னுடைய திருவுருவில் கழுத்தில் விடத்தாலாய கருமையை உடையவனாவான் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

ஏ வண்ணத்த சிலை - அம்பை உடைத்தாகும் தன்மையை உடைய வில் . மறையவன் - மறை ஓதுபவன் . ஈசன் - ஆள்பவன் . தூ வண்ணச் சுடர் - வெள்ளிய ஒளி ; இது கூர்மை குறித்தவாறு . பாவத்தை அழித்தற்குத் தூயதாயிற்றென்பது உள்ளூறை , சுடர் மூன்றாவன ; சூரியன் , சந்திரன் , நெருப்பு . இவை இறைவனிடத்து முறையே , ` வலக்கண் ` இடக்கண் , நெற்றிக்கண் ` எனநிற்கும் . ஆவணம் - அடிமையோலை ; என்றது , அஃது உடையார் , தம் அடிமையை எங்கிருப்பினும் விடாது பற்றி ஈர்த்து ஆள்வதுபோல ஆண்டமையை . இனி , ` ஆ வண்ணத்தால் - ஏற்கும் வழியால் ` என்றுரைப்பினும் அமையும் . கரி உரு , மிடற்றில் உள்ளது ; ` கரியுரியன் ` என்பதே பாடம் எனக் கோடலுமாம் .

பண் :

பாடல் எண் : 4

கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
எங்கள்பால் துயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
ஏழ்கடலு மேழ்மலையு மாயி னான்காண்
பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் தான்காண்
பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்
செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூரில் உள்ள பெருமான் தேன் ஒழுகும் மலராலான முடி மாலையைச் சூடி குற்றாலத்தும் உறைபவன் . கொடிய மழுப்படையும் வெண்ணிறக் காளை வாகனமும் உடையவன் . எங்கள் துயரைப் போக்கும் தலைவன் . ஏழ் கடல்களும் ஏழு மலைகளும் ஆகியவன் . அலைகள் உயர்ந்த பெரும்பரப்புடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன் . பொன்னால் ஆகிய தூணையும் பவளத் திரளையும் நிகர்ப்பவன் . பிறையோடு சிவந்த கண்களை உடைய ஒளி வீசும் பாம்பினையும் உடன் வைத்தவன் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

கொங்கு வார் - தேன் ஒழுகுகின்ற . ` கொல்லை . என்பதில் ஐ சாரியை . ` எங்கள் ` என்றது அடியார்களை . ` போல்வான் ` என்பதை , ` பொற்றூண் ` என்பதனோடுங் கூட்டுக . ` அராவை ` என இரண்டனுருபு விரிக்க .

பண் :

பாடல் எண் : 5

காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
போரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண்
புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் மேகங்கள் தவழும் பெரிய உச்சியை உடைய கயிலாய மலையிலும் இருப்பவன் . நீல கண்டன் . நெற்றிக்கண்ணன் . காளை எழுதிய நீண்ட கொடியை மேல் உயர்த்தியவன் . புண்ணியன் , குணபூரணன் . நீர் சுவறுதலுக்குக் காரணமான தீப்போன்ற அழிக்கும் சூலப்படையவன் . மாசற்றவன் . தன் நிகர் இல்லாதவன் . சிறப்பு மிக்க திருமாலைத் தன் உடம்பின் ஒரு பாகமாக உடையவன் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

கார் - மேகம் . நெடுங்குடுமி - உயர்ந்த சிகரம் . ` போர் ஏற்றை நெடுங்கொடிமேல் உயர்த்தான் ` என்க . ` பல்குணம் ` என்றது , எண்குணங்களும் புலப்பாட்டு வகையாற் பலவாதல் பற்றி ; ` அனந்த கல்யாண குணன் ` என்னும் வழக்குண்மையும் உணர்க . நீர் ஏறு சுடர் - நீர் சுவறுதற்கு இடனாகும் தீ . சீர் - புகழ் .

பண் :

பாடல் எண் : 6

பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபாலி காண்
இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்
இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் பிறையையும் பாம்பாகிய முடிமாலையையும் சடையில் உடையவன் . பிறப்பற்றவன் . ஆண் , பெண் என்ற இருபகுப்பினை உடைய உருவத்தன் . நீலகண்டன் . வெண்ணீற்றன் . தன் திருவடிகளை வழிபடுபவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கும் காபாலக் கூத்தாடுபவன் . கைகளில் பெரிய வளையல்களை அணிந்த பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவன் . பெரிய நிலமாகவும் அதனைத் தாங்கிப் பாதுகாப்பவனுமாக உள்ளவன் . சிறகுகளை உடைய அழகிய களிப்புடைய வண்டுகள் பொருந்திய செம்மைப் பகுதியை உடையவன் . அவன் என் சிந்தையுளான் .

குறிப்புரை :

` பிறையும் அரவுமாகிய கண்ணி ` என்க . ` பெண்ணோடு ஆண் ` என்றது , பிறப்பெய்திய உயிர்களைக் குறித்தவாறு . ` மிடற்றான் , வெண்ணீற்றான் ` என்க . இறை - கை . ` இறையின்கண் வளையாள் ` என்க . உருவம் - அழகு . நிலன் - நிலமாய் இருப்பவன் . இயல்பென்றது , தாங்குதல் , பயன்தரல் முதலியவற்றை . ` செம்மை ` என்றது செம்பாதியை ; அம்மை கூற்றைக் குறித்தருளியவாறு . வண்டு ஆர்த்தல் , கூந்தலில் என்க . இயற்கை மணத்தை விரும்பி வண்டுகள் சென்று ஆர்த்தலின் , ` வண்டார் குழலி ` என்பது . அம்மைக்கு ஒரு பெயராதல் அறிக .

பண் :

பாடல் எண் : 7

தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்
தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்
அலையுருவச் சுடராழி யாக்கி னான்காண்
அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்
கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்
கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் தலையில் பொருந்துமாறு தலைமாலையைச் சூடியவன் . மக்களும் தேவரும் உள்ள உலகின் மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை வாங்குபவன் . பகைவர்களைத் துன்புறுத்தும் அஞ்சத்தக்க ஒளியை உடைய சக்கரத்தைப் படைத்தவன் . சலந்தரனை அழித்தபிறகு அச்சக்கரத்தைத் திருமாலுக்கு வழங்கியவன் . கொலைத் தொழிலைச் செய்யும் அஞ்சத்தக்க கூற்றுவனை உதைத்தவன் . ஐம்பூதங்களும் ஆகியவன் . வில்லிலிருந்து புறப்படும் அம்பினைச் செலுத்திய செயலை உடையவன் . அவன் என் சிந்தையானே .

குறிப்புரை :

தலை உருவ - தலையில் கயிறு ஊடுருவுமாறு ; ` தலை உருவாகிய வச்சிர ( வயிர ) மாலை ` என்றுரைத்தலும் ஆம் . தமர்கிளைஞர் ; என்றது , தேவரையும் மக்களையும் ; இவர் அனைவரும் அவனுக்கு அடியவராதல் பற்றி , ` தமர் ` என்றருளினார் . ` அலை ஆழி ` என இயையும் . அலைத்தல் - அழித்தல் . ஆழி - சக்கரம் . ஆக்கியது , சலந்தராசுரனை அழித்தற் பொருட்டு . கொள்கை - செய்கை . கூர் - மிக்க . ` சிலையால் ` என உருபு விரிக்க . சரம் - அம்பு . துரந்த - செலுத்திய .

பண் :

பாடல் எண் : 8

ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்
கண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ந் தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் தலைவனாய் , என்றும் இளையவனாய் , எல்லோருக்கும் ஆதியாய் , மழுப்படையைத் தோளில் சுமந்த கையனாய்க் கடல் போன்ற பூதப்படையனாய்க் கண் எரியால் மன்மதன் உடலை எரித்தவனாய் , வெப்பம் உடையவனாய்க் கங்கை சூழ்ந்த செஞ்சடையனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , அருச்சுனனுக்கு அருள் செய்தவனாய் , வெண்மை , செம்மை , கருமை என்ற எல்லா நிறங்களையும் உடையவனாய் என் சிந்தையில் உள்ளான் .

குறிப்புரை :

ஐயன் - தமையன் ; கணபதி . ஆதி - ( அவர்க்குத் ) தந்தை . பியல் - சுவல் ( தோள் ). வெய்யன் - வெப்பம் ( தவறு செய்வாரைத் தெறல் ) உடையவன் . ` செய்யன் ` முதலாக அருளியது . ` எல்லா நிறங்களும் உடையவன் ` என்றதாம் . இத்திருத்தாண்டகத்தின் மூன்றாம் அடி மூன்றாஞ்சீர் விளச்சீராய் வந்தது .

பண் :

பாடல் எண் : 9

மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் பார்வதி பாகனாய்ச் சுடுகாட்டில் இருப்பவனாய்ப் பிறை சூடியவனாய் , இலைகளிடையே வளர்ந்த கொன்றை மலர் மாலையைச் சூடியவனாய் , எல்லோருக்கும் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன் . முல்லை நிலத் தலைவனான திருமாலை இடபமாக உடைய அப்பெருமான் கொடுங்குன்றத்தும் உறைபவன் . கொல்லும் முத்தலைச் சூலத்தை உடைய அப்பெருமான் வில்லில் பூட்டிய அம்பினைச் செலுத்தும் ஆற்றலுடையவன் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

இலை வளர்த்த - இலையால் வளர்க்கப்பட்ட ( மலர் என்க ). கொலை வளர்த்த - கொல்லும் ஆற்றலை மிகக்கொண்ட . கொடுங்குன்றம் - பிரான்மலை ; பாண்டிநாட்டுத் தலம் .

பண் :

பாடல் எண் : 10

பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்
மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் தன்னை ஒப்பார் இல்லாதவன் . பூணூல் அணிந்து நீறு பூசி வேதம் ஓதி , பொன் போன்ற மகரந்தம் உடைய கொன்றைப் பூச்சூடி , ஒன்றாலும் குறைவில்லாத் தலைவனாகிய அப்பெருமான் கடல் நஞ்சு உண்டு வேதவடிவினனாய் எல்லாரையும் நிருவகிப்பவனாய்ப் பகைவர் மும்மதில்களையும் அழித்தவன் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

பொன் தாது கொன்றை மலர் - பொன்போலும் மகரந்தத்தினை உடைய கொன்றை மலர் . ஓதி - ஓதுபவன் . எறிநீர் - கடல் ; அன்மொழித்தொகை . செற்றான் - அழித்தான் .
சிற்பி