திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்
பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை
வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை
வன்கருப்புச் சிலைக்காம னுடல் அட்டானைச்
சோதிச்சந் திரன்மேனி மறுச்செய் தானைச்
சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
ஆதித்தன் பற்கொண்ட அம்மான் தன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

பார்வதி பாகனாய்ப் பண்டு இராவணனை வருத்தியவனாய், வருத்திப் பிரமன் தலை ஒன்றை நீக்கியவனாய், வலிய கரும்பு வில்லை உடைய மன்மதன் உடலை எரித்தவனாய், ஒளி பொருந்திய சந்திரனுடைய உடலில் களங்கத்தை உண்டாக்கியவனாய், ஒளி வீசும் அக்கினி தேவனுடைய கை ஒன்றனைப் போக்கிச் சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய அப்பெருமானைத் திருவாரூரில் அடியேன் தரிசித்து அவனைத் தவிர ஏனையவற்றை எல்லாம் மறந்தேன்.

குறிப்புரை :

`தன் பாதித் திருவுருவில்` எனக் கூட்டுக. தசமுகன் - இராவணன்; இப்பெயர்க்கு, அழுதவன் என்பதே பொருளாதலைக் கருதுக. வாதித்தமை, `நீ தலைவனாதல் எவ்வாறு?` என்று வாதித்தல்; வருத்துதலுமாம். மறுச்செய்தமையாவது; காலால் தரையில் இட்டுத் தேய்த்தமை. அங்கி - அக்கினி. `கைக்கொண்டான்` என்பதில் ககர வொற்று, விரித்தல். சந்திரனைத் தேய்த்தமை முதலிய மூன்றும், தக்கன் வேள்வியிற் செய்தன. அயர்த்தல் - மறத்தல், மறந்தமை, அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் என்க. `அயர்த்தவாறு நன்று` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் தன்னை
ஓதாதே வேத முணர்ந்தான் தன்னை
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் தன்னை
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

இராவணன் பொருட்டு மலையை அழுத்திய திருவடியால் கூற்றுவனை உதைத்தவனாய், விளக்கு மின்னல் முத்து இவற்றை ஒத்த திருமேனி ஒளியினனாய், வேதங்களை ஓதாது உணர்ந்தவனாய், நீரை மிகுதியாக நிறைத்த கடலில் தோன்றிய விடத்தை உண்டு அமுதமுண்ட தேவர் இறந்த போதும் தான் இறவாதவனாய், கடல் நீரினுள் இருக்கும் பெண் குதிரை முக வடிவினதாகிய தீயாகவும் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.

குறிப்புரை :

வெற்புறுத்த - இராவணன் பொருட்டு மலையை அழுத்திய; `திருவடி இவ்வாறு மறக்கருணையையும் செய்யும்` என்பதனை நினைந்தருளியவாறு. விளக்கொளியும் மின்னொளியும் செந்நிறமுடையனவாக, வெண்மை நிறமுடைய முத்தின் சோதியையும் உடன்கூட்டி யருளிச்செய்தது. சிவபிரான் செந்நிறமுடையனாதலேயன்றி, படிகம் போலும் வெண்ணிறமும் உடையனாதல்பற்றி யென்க. `வெண்பளிங்கி னுட்பதித்த சோதியானை` (ப.26. பா.4.) எனப் பின்னும் அருளிச்செய்வார். நெருப்பின் நிறத்தையும் வெண்மை என்றே கூறுவர். நையாயிகர். இனி, முத்தின்சோதி திருநீற்றுப் பூச்சிற்கு உவமையாயிற்று. எனினுமாம். ஓதாதே வேதம் உணர்ந்தமை, இயல்பாகவே எல்லாவற்றையும் உணர்ந்திருத்தல். அப்பு உறுத்த கடல் - நீரைத் தன்னிடத்தே உறுவித்துக்கொண்ட கடல். அமுது உண்டவர். எல்லாத் தேவர்களும், உலந்தாலும் - அழிந்தாலும். `சாவா மருந்துண்டவர் சாவ, சாகும் நஞ்சுண்டவன் என்றும் சாவாதிருக்கின்றான்; இதுபோல்வதொரு வியப்புண்டோ` என வியந்தருளிச் செய்தவாறு. `நீல மணிமிடற்றொருவன்போல - மன்னுக பெருமநீயே` (புறம் - 91.) என்ற ஔவையார் பாட்டின் பகுதியையும். அதன் உரையையும் ஈண்டு நினைவு கூர்க. அப்பு உறுத்த - நீரை மிகுதியாக நிறைத்த. `நீரகம்` என்பது, `நீரை உடைய இடம்` என்னும் காரணம் குறித்துக் `கடல்` என்னும் பொருளதாய் நின்றது. `அழல்` என்றது; வடவைத் தீயை. இது, கடலின் நடுவில் நின்று, கடல் பொங்கி உலகை அழியாதவாறு காப்பது என்பது புராணவழக்கு.

பண் :

பாடல் எண் : 3

ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை
யூழிதோ றூழி யுயர்ந்தான் தன்னை
வருகாலஞ் செல்கால மாயி னானை
வன்கருப்புச் சிலைக்காம னுடலட் டானைப்
பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்
புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை
அருவேள்வி தகர்த்தெச்சன் தலைகொண் டானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

தக்கன் வேள்வி செய்த காலத்தில் சூரியன் ஒருவனுடைய கண்களை நீக்கியவனாய், ஊழிகள் தோறும் மேம் பட்டுத் தோன்றுபவனாய், எதிர் காலமும் இறந்த காலமும் ஆயினவனாய், வலிய கரும்பு வில்லை ஏந்திய மன்மதனுடைய உடலை நலிவித்தவனாய், தன்னோடு பொரவந்த யானையை உரித்துப் போர்த்தவனாய், செருக்கொடு வந்த கருடன் உடலைப் பொடி செய்தவனாய், அரிய வேள்வியை அழித்து வேள்வித் தேவனின் தலையை நீக்கிய பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.

குறிப்புரை :

ஒருகாலம், தக்கன் வேள்விசெய்தகாலம். ஒரு தேவர் `பகன்` என்பவர். `உண்ணப் புகுந்த பகனொளித்தோடாமே - கண்ணைப் பறித்தவா றுந்தீபற` (தி.8 திருவா. திருவுந்தி.12) என்றருளினமை காண்க. ஊழிதோ றூழி உயர்தல், மேலே (ப.6. பா.5. குறிப்புரை) விளக்கப்பட்டது. வருகாலம் - எதிர்காலம். செல்காலம் - இறந்த காலம். இவை இரண்டையும் கூறவே, இடைநிற்கும் நிகழ்காலமாதல் தானே பெறப்படும். காலதத்துவமாய் நின்று அதுவாயிலாக எல்லாவற்றையும் நடத்துகின்றான் என்றருளியபடி. புள்ளரையன் - கருடன். அவன் செருக்குக் காரணமாகக் கயிலையில் இடப தேவரது மூச்சுக் காற்றில் அகப்பட்டுச் சிறகொடிந்து வருந்தி வணங்கிச்சென்ற வரலாற்றினைக் காஞ்சிப்புராணத்துட் காண்க. `கார்மலி யுருவக் கருடனைக் காய்ந்தும்` (கோபப்பிரசாதம் - 39.) என்றார் நக்கீரரும். எச்சன் - வேள்வித் தேவன். `தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் - தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடி` (தி.8 திருவாச. திருச்சாழல் - 5.) என்றருளியது காண்க.

பண் :

பாடல் எண் : 4

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

திருநீறணிந்த மேனியனாய்ப் பளிங்கினுள் பதித்தாற் போன்ற செஞ்சோதியனாய்த் தன்னொப்பார் பிறர் இல்லாதானாய், உத்தமனாய், முத்துப் போன்று இயற்கை ஒளி உடையவனாய், உலகங்களை எல்லாம் காத்து அழித்துப் படைப்பவனாய்த் தீவினையை உடைய அடியேன் மனத்தில் நிலைபெற்றவனாய், மாயைக்கு அப்பாற்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டவனை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.

குறிப்புரை :

பதித்த - (தான்) வைத்த. ஓப்பான் - எல்லாப் பொருளிலும் ஒரு நிகராகப் பொருந்தியிருப்பவன். உத்தமன் - மேலானவன். வைப்பான் - படைப்பான். `வருவிப்பான்` என்றருளியது, களைந்தபின் மீள வருவித்தலை. இனி, `வைப்பான்` என்றது, நிறுத்துதலை எனக்கொண்டு, `வருவிப்பானை` என்றதனை அதற்கு முன்னே கூட்டியுரைப்பினும் ஆம். அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலான் - மாயைக்கு அப்பாற்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டவன்.

பண் :

பாடல் எண் : 5

பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்
பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்
துண்டத்திற் றுணிபொருளைச் சுடுதீ யாகிச்
சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்
கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை
அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

மனித உடலில் பிறந்த உயிர் கொண்டு உணரும் உணர்விற்குத் தோன்றுபவனாய், அவ்வுடலையும் படைத்தவனாய்ப் பெரிய வேதங்களின் யாப்பினுள் துணியப்படும் பரம்பொருளாகக் கூறப்படுபவனாய்ச் சுடு தீயாகியும் சுழன்றடிக்கும் காற்றாகியும் நீராகியும் மண்ணாகியும் இருப்பவனாய்த் தீமைக்கு இருப்பிடமாகிய நஞ்சினை உண்டு அதனைக் கழுத்தளவில் இருத்தியவனாய், முக் கண்ணனாய்க் கரும்பும் பாலும் போல இனியனாய், முத்தர்களுக்குப் பயன் தரும் பொருளாய் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.

குறிப்புரை :

பிண்டம் - உடல். `அது கொண்டு உணரும் உணர்விற்கும் தோன்றுவான்` என்றதாம். `மற்று` என்னும் அசை நிலை ஈறு திரிந்தது. ஏனையவற்றோடு இயைய, `படைத்தது` என அஃறிணையாக அருளினார். `துண்டம்` என்றது, யாப்பினை. `இன்` ஏதுப் பொருளில் வந்த ஐந்தனுருபு. `இற்றை` என்றதனை, `சுடு தீ` முதலியவற்றோடு சேர முன்னே கூட்டுக. `இன்று காணப்படும்` என்பது பொருள்; ஆயிற்றை` என வினைப்பெயராக்கி உரைத்தலுமாம். தீதின் நஞ்சு - தீமையை உடைய நஞ்சு. அமுது செய்தமை யாவது, தீங்கு யாதும் செய்யாது, அழகு செய்துகொண்டு இருக்க வைத்தமை. `கண்` என்றது `கணு` என்ற நயத்தையும் தோற்றியது. அண்டத்துக்கு அப்புறத்தார் - முத்தர்கள். அவர்கட்குத் தான் ஒருவனே பயன்தருதல்பற்றி, `வித்து` என்று அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 6

நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்
பாதியா யொன்றாகி யிரண்டாய் மூன்றாய்ப்
பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்
சோதியா யிருளாகிச் சுவைக ளாகிச்
சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

ஒழுங்குக்கு ஓர் உறைவிடமாய், நிலம் நெருப்பு நீர் எங்கும் நிறைந்த காற்று என்ற இவற்றின் ஒழுங்குகளையும் பண்புகளையும் நிருவகிப்பவனாய், எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடாய்ப் பரசிவமாகிய ஒன்றாய்ச் சிவமும் சத்தியும் என இரண்டாய், அயன் மால் அரன் என்ற மும்மூர்த்திகளாய், அணுவுக்கும் அணுவாய் நிறைந்திருப்பவனாய், செவ்வனம் நிரம்பிய ஏழிசை வடிவினனாய்ச் சோதியாகியும் இருளாகியும் பொருள்களின் சுவைகளாகியும் அடியார்களுக்கு எத்திறத்தினும் சுவைக்கும் திறம் கலந்த பகுதியனாய், வீட்டுலகம் அருளுபவனாய், வீட்டிற்கு வாயிலாகிய ஞானமும் அந்த ஞானத்தால் அடையத்தக்க பயனுமாய், அடியார்க்குத் தன்னை அடையத்தானே ஆறும் பேறுமாக (உபாயமும் உபமேயமும்) இருக்கும் பெருமானைத் திருவாரூரில் அடியேன் கண்டு அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் மறந்தேன்.

குறிப்புரை :

கால் - காற்று. நியமம் - கட்டளை, ஒழுங்கு; என்றது, வன்மை முதலிய பண்புகளையும், பொறுத்தல் முதலிய தொழில்களையும். பாதி - எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடு. ஒன்று - பரசிவம். இரண்டு - சிவமும், சத்தியும். மூன்று - `அரன், மால், அயன்` என்னும் நிலை. பரமாணு - அணுவுக்கு அணுவாய் நிறைந்திருத்தல். பழுத்த - ஏழிசையும் செவ்வனம் நிரம்பிய. சோதி - அறிவு. இருள் - அறியாமை. அறியாமையைச் செய்யும் மலத்தின் ஆற்றலையும் அச்செயலைச் செய்யுமாறு தூண்டி அதன்வழி நிற்றலின், `இருளாய்` என்றும் அருளிச்செய்தார். இந்நிலையே `திரோதானகரி` எனப் படுவது. `சோதியனே துன்னிருளே` (தி.8 திருவாசகம். சிவபுராணம். 72.) என்றருளிச்செய்ததுங் காண்க. அப்பால் - அத்தன்மையுடைய பால். வீட்டின் ஆதி - வீட்டிற்கு வாயிலாகிய ஞானம். `ஞானத்தின் அந்தம்` என்றது, பயனை; அஃதாவது, நிரம்புதல்.

பண் :

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 10

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *
சிற்பி