திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

பொழிப்புரை :

நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே ! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர் . இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச் சிறிது , சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை . ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய் , எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரிய கடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன் . அழிந்து போகக் கூடியவர்களே ! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள் .

குறிப்புரை :

பொய் - நிலையின்மை . மாயம் - மாய்தலுடையது ; என்றது , பல்வேறு வகையினவாய்க் காணப்படும் உலகப் பொருள்களை . ` நீரில் எழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும் போல நிலை யின்றிமாயும் பொருள்களாகிய பெருங்கடல் ` என்றவாறு . புலம்புதல் , ஈண்டு அலமருதல் . நல்வினை தீவினை என்னும் இருவகை வினைகட்கும் பற்றுக்கோடு உலகமாகலின் , அவற்றை உலகின்கட் கிடந்து அலமருவனவாக அருளிச் செய்தார் . இனி , அவ்வுலகப் பொருள்களது இயக்கங்கள்யாவும் இருவினை வழிப்பட்டல்லது நிகழாமையின் , தமக்குக் காட்சிப்பட்ட உலகப் பொருள்கள் அனைத்தையும் அவை காணப்பட்டவாறே கண்டு அவற்றின் வீழ்ந்தழியாது , அவற்றது முதனிலை ஒன்றையே நோக்கி நீங்குவார் , அவைகளை அவ்வினைகளாகவே விளித்தருளினார் . இதனானே , திருப்புகலூரில் தம்மை மயக்குவான் வந்து தம் செயலெல்லாம் செய்த அரம்பையரை சுவாமிகள் நோக்கிய நோக்கு வகையும் பெறப்பட்டுக் கிடந்தது ; பின்னர்ப் பலவாறாக விளிப்பதும் அவர்களையே என்க . இங்ஙனம் நோக்கினும் , மயக்கின்கட்படாது நீங்குதல் , ` எம்மான்றன் அடித்தொடர்வான் ` என்பதனால் இனிதருளிச் செய்யப்பட்டது . ` இங்குளி வாங்குங் கலம்போல ஞானிபால் முன்செய் வினைமாயை மூண்டிடினும் - பின்செய்வினை மாயையுட னில்லாது மற்றவன்றான் மெய்ப்பொருளே ஆயவத னாலுணரும் அச்சு ` ( சிவஞானபோதம் . சூ .10. அதி .2) என்றருளிச்செய்தது இவ்வநுபவத்தையே யென்க . எனவே , சிவஞானிகட்கு , ` இங்குளி வாங்குங் கலம்போல ` ஒரோவழி மல வாசனைவந்து தாக்குமிடத்து , மீளச்சிவஞானத்தின்கண் உறைத்து நிற்கும் நிலையைப் பெற்று அதனின் நீங்குதற் பொருட்டுத் தோன்றி யருளியது இவ்வருமைத் திருப்பதிகம் என்பது விளங்கும் . ` தண்நல் ஆரூர் ` எனப் பிரிக்க . தடங்கடலோடுவமித்தது , தன்னைத் தொடர்ந் தோரை ( த் தனது திருவடிப் பேரின்பத்துள் ஆழ்த்தி ) அடங்கச்செய்தல் ( தாம் தோன்றாதவாறு செய்தல் ) பற்றி என்பது , ` தொடர்ந்தோரை அடங்கச் செய்யும் ` என்பதனால் விளக்கியருளப்பட்டது . ` திருவே ` என்னும் ஏகாரம் எதிர்மறுத்தலை உட்கொண்ட வினாப்பொருட்டு , ` நீங்கள் திருவே ` என மாற்றியுரைக்க . ` நீங்கள் நலஞ்செய்வீரல்லீர்கள் ` என்றபடி , ` இம்மாயப் பெருங்கடல் ` என்றது , உடம்பை . ` கிடந்தது இல்லையே ` என மாறிக் கூட்டுக . கிடந்தது - தின்னக் கிடந்த பொருள் . ` கிடந்து ` என்பதும் பாடம் . ` இல்லையே ` என்னும் ஏகாரம் , தேற்றம் . ` தான் `, அசை . ` தம்மான் . தலைமகன் , தடங்கடல் ` என்பன ஒருபொருள்மேற் பல பெயராய் வந்து , ` தான் ` என்னும் பொருளவாய் நின்றன . எனவே , அப்பெயர்களிடத்து நின்ற இரண்டனுருபுகள் , ` தொடர்ந்தோர் ` என்பதனோடு முடியும் . ` தொடர்வான் ` என்பது ஒடு உருபின் பொருளில் வந்த ஆன் உருபு ஏற்ற பெயர் . அதனை வினையெச்சமாகக் கொள்ளின் , வல்லெழுத்து மிகுதல் கூடாமை யறிக . இடை - இடையீடு , ` கெடுவீர்காள் ` என்பது வைதுரை ( சாபமொழி ). இடறுதல் - இடைநின்று தடுத்தல் . ` கெடுவீர் காள் ` என விளித்தது , ` இடறின் கெடுவீர்கள் ` என்றறிவுறுத்தி அருளியவாறு .

பண் :

பாடல் எண் : 2

ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமா யூழியுமா யுலகே ழாகி
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.

பொழிப்புரை :

ஐம்பெரும் பூதங்களே ! உங்களிலே ஒருவர் விரும்பியதை மற்றவர் விரும்பாது இவ்வுலகம் முழுதையும் உம்மால் தாங்கப்படுவதாக்கி உம் வசப்படுத்துவதில் நீங்கள் ஆற்றலுடையீர் . உங்களுக்கு என்பால் நுகரத்தக்க இன்பம் தரும் பொருள் ஒன்று மில்லை . ஏனெனில் யான் தேவர்களும் தேவருலகமும் ஊழிகளும் ஏழு உலகங்களுமாகி , வள்ளலாய்த் தேவர் தலைவனாய் , ஒளி பொருந்திய ஆரூரில் குளிர்ந்த அமுதமாக இருக்கும் அரனை இடையீடு இன்றித் தொடர்ந்து எப்பொழுதும் காண்பேன் ஆவேன் . உங்களுடைய இடையூறுகளில் என்னை அகப்படுவேனாய்க் கருதிச் செருக்குக் கொள்ளாதீர்கள் .

குறிப்புரை :

` நிலந்தீ நீர்வளி விசும்போடைந்துங் கலந்த மயக்கம் உலகம் ` ( தொல் . பொருள் . 635) ஆதலின் , ` ஐம்பெருமா பூதங்காள் ` எனவிளித்தருளினார் . மயக்குவன சடமின்றிச் சித்தாகாமை யறிக . ` ஒருவீர் ` என்பன முன்னிலைப் பெயர்கள் . இன்னதொரு பெயர் உண்டென்பதும் , உயர்திணையுள் ` ஒருவன் , ஒருத்தி ,` என்னும் இருபாற்கும் பொது என்பதும் ` ` ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி , - இருபாற்கு முரித்தே தெரியுங்காலை ` ( தொல் . சொல் . 191) என்னுங் கட்டளையுள் தன்னின முடித்தலாற் கொள்ளப்படும் . இன்னோரன்ன முன்னிலைப் பெயர்களும் இரு திணைக்கும் பொது என்பது , ` நீயிர் நீயென வரூஉங் கிளவி - பால்தெரிபிலவே உடன்மொழிப் பொருள ` ( தொல் . சொல் . 188.) என்னுங் கட்டளையுள் ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் . ` ஒருவர் ` என்பது , இன்னார் எனச் சுட்டிக் கூறாது , பொதுப்படக் கூறுதற்கண் வருவதாகலின் , இவ் , ` ஒருவீர் ` முதலியனவும் அன்ன என்க . வேண்டிற்று - அவாவியது ; அது , பண்பானும் , தொழிலானும் ஐயைந்தாகும் . அவைகளை , ` உண்மை விளக்கம் ` முதலிய நூல்களிற் காண்க . பரம் - சுமை ; தாங்கப்படுவது . ` நுகர் போகம் இல்லையே ` என்க . உம்பர் - மேலிடம் ; விண்ணுலகம் . நள் அமிர்து - குளிர்ந்த அமுதம் . காண்பேன் - எப்பொழுதும் காண்பேன் .

பண் :

பாடல் எண் : 3

சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
செழுங்கண்ணால் நோக்குமிது வூக்க மன்று
பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப்
பளகீரும் வசமன்றே பாரே லெல்லாம்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
தூநயனம் மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே யடைவேன் நும்மால்
நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.

பொழிப்புரை :

பல வடிவங்களில் திரிந்து வேறுபடுகின்ற ஐம்பூதங்களாகிய பொய்ம்மையுடையீர் ! அழிகின்ற சில உருவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நாடோறும் அவற்றை விரும்பிப் புறத்தில் அழகாக உள்ள கண்களால் பார்க்கும் இச்செயல் நல்லொழுக்கம் ஆகாது . இவ்வுலகம் முழுதும் உம் வசப்பட்டிருப்பது போதாதா ? யானோ ஐம்புலங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய ஞாயிறு திங்கள் தீ என்ற முச்சுடர்களாய் , அயன் அரி அரன் என்ற உருவம் மூன்றாய் , அச்சுடர்களாகிய கண்கள் மூன்றாய்க் கொண்டு , இவ்வுலகத்தை ஆளும் ஆரூரில் உள்ள நல்ல செந்நிறத்தவனாகிய சிவனடிகளையே அடைவேனாக உள்ளேன் . உம்மால் தேய்க்கப்படுவேன் அல்லேன் . உமக்கு நான் இணங்காததைப் பொறுத்துக்கொண்டு நுமக்கு வயப்படும் வேற்றுப் பொருள்களை நோக்கிச் செல்லுங்கள் .

குறிப்புரை :

` சில்லுரு ` என்றது , அழிகின்ற சில உருவங்கள் ` என்ற இகழ்ச்சி தோன்ற . குறி - குறிக்கேள் . பற்றி - பற்றுச் செய்து , விரும்பி . செழுங்கண் - புறத்தில் அழகாய் உள்ள கண்கள் . இது - இச்செயல் . ` ஊக்கம் ` என்பது , இங்கு , ` ஒழுக்கம் ` என்னும் பொருளதாய் நின்றது . தொழில் , திரிந்து வேறுபடுதல் . பளகீர் - பொய்ம்மையுடையீர் ; விளி ; உயர்திணையாக அருளிச்செய்தது , இகழ்ச்சிபற்றி . ` பாரேல் எல்லாம் உம் வசம் அன்றே ` என்க . பார் - உலகம் . சொல் உருவின் - ஐம்புலன்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய . சுடர் மூன்று , ` ஞாயிறு , திங்கள் , தீ , என்பன . உருவம் மூன்று , அயன் , அரி , அரன் ` எனப் பெயர்பெற்று நிற்பன . நயனம் - கண் . நமைப் புண்ணுதல் - தேய்க்கப்படுதல் ; கெடுக்கப்படுதல் . கமைத்து - ( நுமக்கு இணங்காமையைப் ) பொறுத்து ; என்றதும் இகழ்ச்சி பற்றியே என்க .

பண் :

பாடல் எண் : 4

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

பொழிப்புரை :

விரும்பி நினைக்கப்படும் உடலிலே , வாய் கண் உடல் செவி மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐவீர்களே ! உங்களுடைய மயக்கம் பொருந்திய உருவங்களின் இயற்கைகளால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய உரு வினைத் தந்தவனாய் , அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வானாய் , இவ்வுலகுக்கு எல்லாம் அழகாகும் சிவக்கொழுந்தாய் , என் சிந்தையுள்ளே புகுந்து அதன்கண் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன் . ஆதலால் என்னை உம் அளவில் படுத்தற்குச் செருக்கிக்கொண்டு என்பக்கல் வாராதீர்கள் .

குறிப்புரை :

உன் உருவில் - ( விரும்பி ) நினைக்கப்படுகின்ற உடம்பில் . ` உறுப்பு ` என்றது பொறியையும் , ` குறிப்பு ` என்றது புலனையும் என்க . ` நாற்றத்து ஐவீர் ` என இயையும் . அத்து , வேண்டாவழிச் சாரியை . மன் உருவம் - ( மயக்கம் ) நிலைபெற்ற உருவம் . வைப்பீர் - ( எழாது ) இருத்துவீர் . ` அதற்கு ` என்பது வருவிக்க . ` என் சிந்தை புகுந்து ( அதன் கண் ) தன் உருவைத் தந்தவனை ` என இயைக்க . தலைப்படுவேன் - எப்பொழுதும் அணைந்திருப்பேன் ; இங்கு , ` அதனால் ` என்பது வருவிக்க . துலைப்படுப்பான் - உம் அளவிற்படுத்தற்கு .

பண் :

பாடல் எண் : 5

துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

பொழிப்புரை :

நுகர்பொருள்களிடத்துப் பண்டுதொட்டுப் பற்றுக்கொள்ளுதல் நீங்காமைக்கு ஏதுவாகிய வெற்றி மிக்க பிறர் மயங்குதற்குக் காரணமான வஞ்சனைகளே ! நீங்கள் செயற்கை அழகைப் பரப்பி நீங்கள் கருதிய செயலைச் சுகமாக முடிப்பதற்கு இவ்வுலகம் முழுதும் உழலும் செயல் உங்களுக்கு அரிதன்று . ஆனால் அடியேன் என்சேமநிதியாய் அழகிய மதில்களை உடைய ஆரூரில் மாணிக்கமாய் , வைகல் என்ற தலத்தில் மணவாளனாய் , எனக்கும் தேவர்களுக்கும் பெருமானாய் உள்ளவனை முறைப்படி அடைபவன் . ஆதலின் உங்களால் நான் மற்றவர்போல ஆட்டுவிக்கப்பட மாட்டேன் . ஓடிவந்து என்னை வருத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

துப்பு - துப்புரவு ; நுகர்ச்சிப் பொருள் . பற்று , ` பற்றுதல் ` என முதனிலைத் தொழிற்பெயர் . அறாவிறல் - அறாமைக்கு ஏதுவாய வெற்றி . சோர்வு படு சூட்சியம் - பிறர் அயர்த்தற்கு ஏதுவாகிய வஞ்சகம் . சூழ்ச்சி என்பதன் மரூஉ வாகிய ` சூட்சி ` என்பது , அம்முப்பெற்று நின்றது . ஒப்பனை - செயற்கை அழகு . ` ஒப்பினை ` எனவும் பாடம் ஓதுவர் . பாவித்து பரப்பி . பாவுவித்து என்பது குறைந்தது . உழறுதல் - உழலுதல் . ` இது நுமக்கு அரிதோ ` என்றவாறு . குறை - கருதிய செயல் . ` அரிதே `, ஏகாரம் வினா . வைப்பு - சேம நிதி . வைகல் - ` வைகல்மாடக்கோயில் ` என்னும் சோழநாட்டுத் தலம் . ` நானும் ` என்ற உம்மை எச்சத்தோடு சிறப்பு . ` நானும் பிறர்போல ஆட்டுணேன் ` என்க . ஓட்டந்து - ஓட்டம் தந்து ; அலைந்து . ` ஈங்கு ஓட்டந்து ( என்னை ) அலையேன்மின் ` என்க . அலைத்தல் - வருத்துதல் .

பண் :

பாடல் எண் : 6

பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
குரோதமே யுலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்று
மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச்
செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே.

பொழிப்புரை :

பெருமிதம் கொண்ட செருக்கே ! மாண்பு இழந்த மானமே ! காமமே ! பகையே ! கோபமே ! கஞ்சத்தனமே ! துன்பச் சுமைகளே ! நீங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இப்பேருலகத்தின் எல்லைகாறும் நீங்கள் கருதிய செயலை நிறைவேற்றுவதற்குச் சுற்றித் திரிவது உங்களுக்கு அரிது அன்று . ஆனால் யானோ செந்தாமரையில் தங்கிய பிரமனும் திருமாலும் ஆகி அவர்களையும் கடந்த ஒன்றே ஆகிய பரம்பொருளாகி , எவராலும் தம் முயற்சியால் அறிய முடியாத ஒப்பற்ற செம்பொற் குன்று போன்ற சிவபெருமானாகிய ஆரூர்ச் செல்வனைச் சேர்கின்றவன் . உம்மால் செலுத்தப்படுவேன் அல்லேன் .

குறிப்புரை :

ஆர்வச் செற்றங்களை உம்மைத்தொகை படத்தொகுத்தருளிச் செய்தாராயினும் , அவைகளையும் ஏகார உருபால் தனித்தனி நிற்க விளித்தலே திருவுள்ளம் என்க . மானம் , மாண் பிறந்த மானம் ; அது , உயர்ந்தோரை வணங்க மறுத்தல் . ஆர்வம் - காமம் , செற்றம் - பகை ; மாற்சரியம் . இவைகளைக் கூறவே மோகமும் தழுவிக் கொள்ளப்படும் . பொறை - சுமை ; துன்பம் . ` அயன் , மால் ` என்பவை அவரவர் நிலையைக் குறித்தன . ஒன்று - ஒன்றேயாய பரம்பொருள் . ` ஆகி ` என்னும் எச்சங்கள் , ` ஒண்ணா ` என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தோடு முடிந்தன . குன்று - உவமையாகுபெயர் .

பண் :

பாடல் எண் : 7

இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

பொழிப்புரை :

துன்பங்களே ! பாவங்களே ! மிக்க துயரம் தரும் வேட்கையே ! வெறுப்பே ! எல்லீரும் உலகுகளைச் சுற்றிச் சுழன்று அவற்றை வசப்படுத்த அவை தடுமாறி உங்கள் இட்ட வழக்காக இருத்தல் போதாதா ? யானோ தேவர்களின் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துத் தேவர்கள் பெருமானாய்த் தீங்குகளைப் போக்குபவனாயுள்ள ஆரூர்ப் பெருமானை விரையச் சென்று அடையப் போகிறேன் . உம்மால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன் . என்பக்கல் ஓடி வந்து என்னைத் துன்புறுத்தி நும் வசப்படுத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

` வெறுப்பே ` என்னும் எண்ணேகாரம் , இடர் முதலிய எல்லாவற்றோடும் இயையும் . அமையாதே - போதாதோ . அடையார் - பகைவர் ; வானோர்க்குப் பகைவர் அசுரர் .

பண் :

பாடல் எண் : 8

விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே.

பொழிப்புரை :

விரைந்து வந்து ஏவல் கொள்ளும் வறுமையே ! செல்வமே ! கொடிய கோபமே ! மகிழ்ச்சியே ! வெறுப்பே ! நீங்கள் வரிசையாகச் சென்று இவ்வுலகத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து உண்ணுவீர்கள் . உங்களுக்கு நுகரத்தக்க இன்பம் கிட்டவில்லையா ? யானோ தேவர்கள் ஓலமிட்டு ஓடுமாறு வெளிப்பட்ட விடத்தை உண்ட கற்பகமாய் , உயிருக்கு மேற்பட்ட பொருளாய்த் திருவாரூரில் உள்ள மேம்பட்ட சோதி வடிவினனைக் காண்கின்றவன் . உங்களுடைய பண்புகளில் அகப்படமாட்டேன் . விரைந்து ஓடிவந்து என்னை அச்சுறுத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

ஆளும் - ஏவல் கொள்ளும் . செல்வத்தாற் பயன் கொள்ளுதலினும் வறுமையால் துயருழத்தல் விரைவுடைத்தாதல் பற்றி , ` விரைந்தாளும் நல்குரவே ` என்றருளினார் . ` செல்வம் ` என்பதில் அம்முத் தொகுத்தலாயிற்று . வெகுட்சி - சினம் . நிரைந்து - கூடி . ` நிரந்து ` என்பதும் பாடம் . கரைந்து - ஓலமிட்டு . தற்பரம் - உயிருக்கு மேற்பட்ட பொருள் . ` கற்பகம் ` முதலியன ஆகுபெயர்கள் . பரிந்து - விரைந்து . பகட்டல் - வெருட்டல் , ` பகட்டேன் மின்னே `, என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 9

மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை யாரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

பொழிப்புரை :

தத்தம் தொழில்களிலேயே ஈடுபட்ட ஐம்பொறிகளாகிய காக்கைகளே ! இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு நாளும் மயக்கமாகிய ஆட்சியை நடத்துகின்ற உமக்கு இன்னும் மனநிறைவு ஏற்படவில்லையா ? யானோ தேவருலகின் உச்சியைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாய்ப் பாதாளத்துக்கும் அடிநிலையாய் ஆரூரை ஆளும் பெருமானை விரைந்து சென்று அடைவேன் . உங்களால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன் . ஓடி வந்து என்னை வருத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

முகரி - காக்கை , ` ஈச்சிறகன்னதோர் தோலறினும் வேண்டுமே - காக்கை கடிவதோர் கோல் ` ( நாலடி -41) என்றவாறு , புண்ணுற்ற உடம்பினை , அதன்கண் உள்ள உயிரது துன்பம் நோக்காது மொய்த்துக் கொத்திப் பறிக்கும் இயல்புடைய காக்கைபோலப் பல வழிகளில் ஈர்த்துத் துன்புறுத்தலின் , பஞ்சேந்திரியங்களை , ` காக்கை காள் ` என விளித்தார் ; ` எறும் பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப் புண்டலந்த - வெறுந்தமியேனை விடுதி கண்டாய் ` ( தி .8 திருவா . நீத்தல் விண்ணப்பம் - 25.) என்றருளியதுங் காண்க . நாள் வாயும் - நாள் தோறும் . மம்மர் ஆணை - மயக்கமாகிய ஆட்சி . ` அவ்வுலகம் அமையாதே ` என்க . ` தாங்கிநின்ற ` என்றருளினார் , வீழாது நிற்பித்தல் பற்றி . அதற்கேற்ப ` நெடுந்தூண் ` என்றருளினார் . ` கரு ` என்றது அடிநிலை என்றவாறு .

பண் :

பாடல் எண் : 10

சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல்
செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்
தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்
திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

பொழிப்புரை :

சுருக்கமே ! பெருக்கமே ! காலநிலையே ! செல்வமே ! வறுமையே ! இவ்வுலகைச் சுற்றிப் பெருமிதம் கொண்டு உங்கள் ஆட்சியைச் செலுத்தி நாடோறும் உங்கள் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயல் போதாதோ ? யானோ மிகவும் செருக்குற்றுக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் தளருமாறு அவனை அழுத்திப்பின் அவன் பாடலைக் கேட்டு இரங்கி அவனுக்கு அருளிய எம்பெருமானுடைய திருவடிகளிலே இடையீடு இன்றிச் சேர்ந்துள்ளேன் . அழிந்து போகக் கூடிய நீங்கள் என்னைத் துன்புறுத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

` நிலை என்றது , காலநிலையை . துப்பு , துப்புரவு ; அஃது அதற்கு ஏதுவாய செல்வத்தின்மேல் நின்றது . அறை - இன்மை ; வறுமை . ` என்று ` எண்இடைச் சொல் . ` அனைவீரும் நித்தல் நிலை பற்றிச் செருக்கி உலகை மிகைசெலுத்தி ` என இயைக்க ; முற்றும்மை தொகுத்தலாயிற்று . மிகை - வரம்பு கடந்த ஆட்சி . மிகைசெலுத்தி என்பது , ` ஆண்டு ` என்னும் பொருளதாய் , ` உலகை `, என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று . வைகல் - நாள்தோறும் . ஆகம் - உடம்பு . ` எடுத்து ` என்றது , ஊன்றுதலாகிய தன் காரியந் தோற்றி நின்றது . இடை - இடையீடு .
சிற்பி