திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றும்
சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்
தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றும்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சே ! நீ துன்பங்கள் ஒழியும் பகையை ஆராய்வாயாயின் இங்கே வந்து நான் சொல்வதனைக் கேள் . செந்நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே ! ஞானஒளியாய் உள்ளத்தில் விளங்குபவனே ! திருநீறணிந்த தோளனே ! கடல்விடம் உண்டு கறுத்த கழுத்தினனே ! மான் குட்டியை ஏந்திய கையனே ! ஆற்றலுடைய காளை வாகனனே ! கிட்டுதற்கரிய அமுதே ! எல்லோருக்கும் முற்பட்டவனே ! ஆரூரனே ! எனப்பலகாலும் அழைப்பாயாக .

குறிப்புரை :

இடர் கெடும் ஆறு - துன்பம் ஒழியும் வகையை . எண்ணுதியேல் - ஆராய்வையாயின் ; ` நீ வா ` என்பது , ` யான் சொல்வதைக் கேள் ` என்னும் பொருள்பயப்பதொரு வழக்கு . ` ஈண்டு அலறா நில் ` என இயையும் . ` ஈண்டு ஒளி ` என்று இயைத்து , ` மிக்க ஒளியினையுடைய ` என்றுரைத்தலும் ஆம் . ` சுடர் ஒளி `. வினைத் தொகை ; ` ஒருகாலைக் கொருகால் மிக்கெழுகின்ற ஒளி ` என்பது பொருள் . உள் - உயிருக்குள் . ` சோதி ` என்பது அதனையுடைய பொருள்மேலாகி வாளா பெயராய் நின்றது . உயிரது அறியாமை நீங்குந்தோறும் , இறைவன் அதனுள் அறிவு வடிவாய் நிறைந்து நிற்றல் வெளிப்பட்டு வருதலின் , ` சுடர் ஒளியாய் உள்விளங்கு சோதி ` என்று அருளிச்செய்தார் . கலை மான் - ஆண் மான் . மறி - கன்று . ` என்றென்று ` என்பதன் பின் , ` சொல்லி ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . அடுக்கு , பல்கால் அழைத்தலைக் குறித்தது . நில் - ஒழுகு . ` அலறா நில் ` என்னும் நிகழ்காலச் சொல் இடைவிடாமையை விதித்தற் பொருட்டாய் நின்றது . இறுதியில் , ` இதுவே இடர்நீங்கும் வழியாகும் ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க . இவை பின்வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும் . எண்ணத்தின் பின்னதே சொல்லாகலின் , ` இவ்வாறெல்லாம் எண்ணி ` என்பது முன்னரே முடிந்தது . ` உலகியலை நினையாது , இறைவனது அருள் நிலைகளையே நினைந்தும் , சொல்லியும் , பணிந்தும் ஒழுகுவார்க்கே துன்பம் அடியோடு ஒழிவதாகும் ` என்பது கருத்து . ` தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் - மனக்கவலை மாற்றலரிது ` ( குறள் . 7.) என எதிர்மறை முகத்தான் உணர்த்தியதுணர்க . இடர்தான் , ` பேரிடரும் , சிற்றிடரும் ` என இருவகைத்து , பேரிடர் , கட்டு நீங்காதார்க்கு வினைகளான் இடையறாது வருவன ; சிற்றிடர் , கட்டு நீங்கினவர்க்கு முன்னைப் பழக்கத்தால் நிகழும் மறதியான் ஒரோவழி வருவன ; இவ்விருவகை இடர்களுக்கும் காரணமான கட்டும் , கட்டுள் நின்ற பழக்கமும் நீங்குதல் இறை பணியால் அல்லது இன்மையின் , பொதுப்பட , ` இடர் ` என அருளிச் செய்தார் . கட்டு நீங்காதார் செய்யும் பணி அறிவுப் பணியும் , கட்டு நீங்கினார் செய்யும் பணி அன்புப் பணியும் ஆகும் . என்னையெனின் , அவர் முறையே , ` இடர் கெடுமாறு இதுவே ` என்று அறிந்த அறிவு காரணமாகவும் , ` இடர்களையாரேனும் எமக்கு இரங்கா ரேனும் - படரும் நெறி பணியாரேனும் ` ( தி .11 அற்புதத் திருவந்தாதி .2.) இப்பணி தானே எமக்கு இன்பமாவது என்னும் அன்பு காரணமாகவும் செய்தலான் என்க . இப்பணியினைச் சிவாகமங்கள் , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என நான்காக வகுத்து , ` கீழ் உள்ளவர்கள் மேலனவற்றிற்கு உரியரல்லர் ; மேலுள்ளவர்கள் கீழ்உள்ளவற்றிற்கும் உரியர் ; ஆகவே , ஞானிகள் மேற்சொல்லிய நான்கிற்கும் உரியர் ` எனக் கூறும் . இதனை , ` ஞானயோ கக்கிரியா சரியை நான்கும் நாதன்றன் பணி ; ஞானி நாலினுக்கும் உரியன் ; ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன் யோகி ; கிரி யாவான்றான் ஒண்கிரியை யாதி யானஇரண் டினுக்குரியன் ; சரியையினில் நின்றோன் அச்சரியைக் கேயுரியன் ... ` என்னும் ( சிவஞானசித்தி சூ . 12.5) திருவிருத்தத்தால் நன்குணர்க . இந் நால்வருள் ஞானிகள்தம் பணி அன்புப் பணி என்றும் , மற்றையோர் பணி அறிவுப் பணி என்றும் கொள்க . இதனால் , கட்டுற்று நின்றார்க்கேயன்றி , கட்டு நீங்கி வீடு பெற்றார்க்கும் இறைபணி இன்றியமையாததாதல் தெற்றென உணர்ந்து கொள்ளப்படும் . செல்வமுற்றாரும் , தமக்கு ஒரோவழி வரும் சிறு துன்பத்தையும் பெருந் துன்பமாக நினைத்து வருந்துதல்போல , வீடு பெற்றாரும் ஒரோவழித் தமக்கு மறப்பினால் தோன்றும் சிறிது இடரினையும் பேரிடராக நினைந்து வருந்துவர் ; அதனை ஆங்காங்கு அறிந்துகொள்ளலாகும் . இறைபணியின் பெருமை யுணர்த்துவனவே திருப்பதிகங்களுட் பெரும்பாலனவாயினும் , அவற்றுள் இத்திருப்பதிகம் , அஃதொன்றனையே கிளந்தெடுத்துத் தெள்ளத் தெளிய இனி துணர்த்தும் சிறப்புடையது என்க . எனவே , இத் திருப்பதிகம் , சிவநெறிக்கு இன்றியமையாச் சிறப்புடைத்தாதல் இனிது விளங்கும் .

பண் :

பாடல் எண் : 2

செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
சிந்தித்தே னெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
அம்மானே ஆருரெம் மரசே யென்றும்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! துன்பம் மிக்க தீவினைகள் நீங்கும் வழியை எண்ணுவாயானால் உறுதியாகத் திருநீறணிந்த திருமேனி உடையவனே ! இந்திரனுடைய தோள்களை நீக்கிய தூயனே ! அடியேனை அடிமையாகக் கொண்டவனே ! தலைவனே ! ஆரூரில் உள்ள எம் அரசனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள ஏகம்பனே ! கற்பகமே ! என்று பலகாலும் அழைப்பாயாக .

குறிப்புரை :

செடி - துன்பம் . ` சிந்தித்தியேல் ` என்பது தொகுத்தலாயிற்று . ` நான் சிந்தித்தேன் ; சிந்தித்து இது கண்டேன் ` என்றுரைத்தலுமாம் . ` சிந்தித்தே நெஞ்சமே ` என்னும் பாடத்திற்கு , ` சிந்தித்து என்றென்று கதறாநில் ` என உரைக்க . திண்ணமாக - ஒருதலைப்பட்ட மனத்துடன் . புரந்தரன் - இந்திரன் . ` இந்திரனைத் தோள் நெரித்திட்டு ` ( தி .8 திருவாசகம் . அம்மானை .15) எனவும் , ` புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி - மரந்தனிலேறினார் ` ( தி .8 திருவாசகம் . உந்தியார் 9.) எனவும் அருளிச் செய்பவாகலான் , தக்கன் வேள்வியில் , ` இந்திரன் தோள் நெரிக்கப்பட்ட பின்னர்க் குயிலாகி ஓடி ஒளிந்து பிழைத்தான் ` என்க . அடியேனை ` ஆளாகக் கொண்டாய் ` என்றது , ` இயல்பாகவே அடிமையாய் உள்ள என்னை , அத்தன்மையேனாதலைத் தெளிவித்துப் பணி புரிவித்துக் கொண்டாய் ` என்றவாறு . இதனால் , இனிக் கூறுவன அன்புப் பணியாதல் அறிந்துகொள்ளப்படும் . கற்பகம் , வேண்டுவார் வேண்டுவதை ஈயும் .

பண் :

பாடல் எண் : 3

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சே ! நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நாள்தோறும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி மெழுகிப் பூ மாலையைக் கட்டி எம் பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித் தலையால் முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் ` சங்கரா நீ வெல்க வாழ்க !` என்றும் ` கங்கையைச் சிவந்த சடையில் வைத்த ஆதிப்பொருளே !` என்றும் ` ஆரூரா !` என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக .

குறிப்புரை :

நிலைபெறுதல் - அலமரல் ஒழிதல் . ` மெழுகு ` என்னும் வினைமுதனிலை , ` மெழுக்கு ` எனத் திரிந்து பெயராயிற்று , ` ஒழுகு ` முதலியன ` ஒழுக்கு ` முதலியனவாகத் திரிந்துநிற்றல்போல . தலை ஆர - தலைநிரம்ப . தலை , வணங்குதலாலேயன்றி அதன்மேல் கையைக்குவித்தலாலும் இன்புறும் என்க . ` தலையினாற் கும்பிட்டு ` எனவும் பாடம் ஓதுவர் . ` மெழுக்கும் , கூத்தும் ` என்னும் உம்மைகள் , இறந்தது தழுவின . சய - வெல்க . அலை புனல் . வினைத்தொகை .

பண் :

பாடல் எண் : 4

புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம்
நெஞ்சமே யிதுகண்டாய் பொருந்தக் கேள்நீ
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும்
நுந்தாத வொண்சுடரே யென்றும் நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
எண்ணரிய திருநாம முடையா யென்றும்
எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழிகளும் ஆகியவற்றை எல்லாம் நான் கூறக்கூர்ந்து கேள் . பூணூல் அணிந்த மார்பனே ! தூண்ட வேண்டாத விளக்கே ! தேவர்களும் நால்வேதங்களும் தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும் கணக்கிடமுடியாத திருநாமங்களை உடையவனே ! அழகிய ஆரூரனே ! என்று பலகாலும் துதிப்பாயாக .

குறிப்புரை :

` புண்ணியத்திற்கு வாயில் நன்னெறி ` என்க . நுந்தாத - தூண்ட வேண்டாத ; எஞ்ஞான்றும் ஒரு தன்மையாய் ஒளிவிடும் . ` நொந்தாத ` என்பதே , ` அவியாத ` எனப்பொருள் தரும் . கூடி எண்ணரிய - ஒருங்குகூடி எண்ணி அளவிடுதற்கரிய .

பண் :

பாடல் எண் : 5

இழைத்தநா ளெல்லை கடப்ப தென்றால்
இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்
பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்
அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.

பொழிப்புரை :

நெஞ்சே ! இவ்வுடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் தாண்ட வேண்டுமென்றால் இரவும் நடுப்பகலும் எம் பெருமானைத் துதித்து வாழ்த்தித் தவறு செய்தனவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அருள் செய்யும் பெரியோனே ! தலைக்கோலம் உடையவனே ! நீலகண்டனே ! எனப் பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள் நான் உனக்குப் பாதுகாவலாக இருக்கிறேன் . ஆரூர் உறையும் அழகா ! என்றும் சுருண்ட சடையை உடைய இளையோனே ! என்றும் கூப்பிடு . உனக்கு இவ்வாறு உப தேசித்துவிட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம் ஏற்படாது . செயற்படாமல் வாளா இருந்தால் குற்றம் உன்மேலதே .

குறிப்புரை :

இழைத்தநாள் எல்லை - இவ்வுடம்பொடு கூடி வாழ்வதற்கு வரையறுத்த நாள்களின் அளவு . ` அவைகளைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் கடப்பதென்றால் ` என்க . ` பிழைத்தது ` பன்மை யொருமை மயக்கம் . ` பிழைத்தவெலாம் ` என்பதே பாடம்போலும் . ` ஞவிலும் ` உவம உருபு ; ` நவிலும் ` என்பதன் போலி ; ` என்ற ` என்பதோர் உவம உருபுண்மையறிக . அரணம் - பாதுகாப்பு ; அது காக்கப்படும் பொருளைக் குறித்தது . ` என்மேல் குற்றமில்லை ` என மாறி , இறுதிக்கண் கூட்டுக . அறியாதார்க்கு , அறிந்தார் கூறாதொழியிற் குற்றமாமாகலான் , ` நான் கூறினேன் ; ( அதனால் ) என்மேல் ( இனிக் ) குற்றம் இல்லை ; ( இனி நீ அது செய்யாதொழியின் குற்றம் உன் மேலதே )` என்றவாறு . இதனான் , அஃது ஒருதலையாகச் செயற்பாலதாதல் அறிக .

பண் :

பாடல் எண் : 6

நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும்
சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்
திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! அழிக்கமுடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து பார்த்து இவ்வழியைக் கண்டுள்ளேன் . நாடோறும் காளை எழுதிய கொடியை உடையவனே ! சிவலோகம் அடையும் வழியைக் காட்டிய சிவனே ! தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரமனும் கருடனை இவரும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கு பவனே ! செல்வம் நிறையும் திருவாரூரா என்று பலகாலும் ` நெஞ்சே நீ நினை `.

குறிப்புரை :

நீப்பு - நீத்தல் விடுதல் . இருந்தேன் - நெடிது நேரம் இருந்தேன் ; ` இருந்து இது கண்டேன் ` என்க . காண் , அசைநிலை . நித்தம் ஆக - நாள்தோறும் நிகழ ; சிந்தி என்க . சே - எருது . தந்த - உலகிற்குச் சொல்லிய . ` சிவன் ` என்பதற்கு , ` மங்கலம் உடையவன் ` என்பது பெரும்பான்மையாகப் பலவிடத்தும் கூறப்படும் பொருள் . ` பேரின்பத்துக்குக் காரணன் , முற்றுணர்வினன் , தூய தன்மையன் , உலகெலாம் ஒடுங்கிக் கிடத்தற்கு இடமாய் இருப்பவன் , நல்லோரது உள்ளங்கள் பதிந்துகிடக்க நிற்பவன் , அறியாமையை மெலிவித்து அறிவை மிகுவிப்பவன் . உயிர்களை வசீகரிப்பவன் ` என்னும் பொருள்களும் கூறுவர் . இனி ` சிவ ` எனும் முதனிலை அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லாகவும் கொண்டு பொருளுரைப்பர் . இப் பொருள்களை இவ்விடத்தும் பிறவிடத்தும் ஏற்ற பெற்றியாற் கொள்க . புள் - கருடன் . ` மேலை ` என்பதில் ` ஐ ` சாரியை .

பண் :

பாடல் எண் : 7

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சே ! நான் சொல்வதனைக் கேட்பாயாக . நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால் , மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால் , உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால் , செயலற்று இராமல் நான் சொல்வதைக் கேள் , எனக்கு உறவினரும் துணையும் நீயே , உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன் . புற்றில் வாழத்தக்க பாம்பினைக் கச்சாக அணிந்த தூயோனே ! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே ! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக .

குறிப்புரை :

` வேண்டில் ` மூன்றும் வினைச் செவ்வெண் . ஆகவே , அவற்றின்பின் உம்மை கொடுத்துப் பொருளுரைத்துக் கொள்க . பாற்றுதல் - அழித்தல் . பரிசு - தன்மை ; தகுதி - பாவம் நீங்கினால் உலகத்துன்பங்கள் மட்டுமே நீங்கும் ; பிறவித் துன்பம் நீங்காது ; அது நீங்கவேண்டில் இருவினையையும் வீழ்த்துதல் வேண்டும் . அவ்வினைகள் உயிரைப் புறஞ்செல்ல ஒட்டாது வளைத்துக்கொண்டு நிற்றலின் , ` சுற்றிநின்ற சூழ்வினைகள் ` என்றருளிச்செய்தார் . சுற்றி நிற்றல் வளைத்து நிற்றலாகவும் , சூழ்தல் பலவாக மொய்த்து நிற்றலாக வும் கொள்க . ` வேண்டில் ` என்பதனை ` துஞ்சாவண்ணம் ` என்பதனோடுங் கூட்டி , மேலனவற்றோடு கூட்டுக . ` அவைகளுக்குரிய வழியைச் சொல்லுவேன் ` என்க . துஞ்சுதல் - இறத்தல் , இறந்தால் பிறத்தல்வேண்டும் என்க . இவ்வுலகிலே வீட்டின்பத்தைப் பெற்று நின்று உடம்பு நீங்கப்பெற்றார் , கால வயப்பட்டு இறந்தாரல்லரென்க . ` கூற்றம் குதித்தார் ` ( குறள் - 269) எனப்படுவோர் இவரேயாவர் . உற்றவர் - உறவினர் . உறுதுணை - சிறந்த நட்பினர் . உள்கேன் - நினையேன் . ` புற்றரவம் ` என்றது . இனம்பற்றி .

பண் :

பாடல் எண் : 8

மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும்
அம்மானே ஆரூரெம் ஐயா வென்றும்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்
சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! உனக்கு நான் நல்ல புத்தியைக் கொடுக்கிறேன் . பிழைத்துப் போவதற்கு உரிய வழி இதுவே . தேவர்கள் தலைவனே ! அரிய அமுதமே ! ஆதியே ! என்றும் , தலைவனே ! ஆரூரில் உள்ள எம் குரிசிலே என்றும் , அவனைப் போற்றிக் கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி , அவன் கோயிலை வலம் செய்து , தொண்டர்களையும் துதித்து , ஒளிவீசும் பிறை சேர்ந்த தலைவனே ! காலனுக்கும் காலனே ! கற்பகமே ! என்றும் பலகாலும் கதறுவாயாக .

குறிப்புரை :

மதி தருவன் - ( உனக்கு நான் ) அறிவு தருவேன் ; ` கேள் ` என்க . இது , தன்மை வினைமுற்று . ` உய்ந்து ` என்பது ` உஞ்சு ` என மருவிற்று . பதி - தலைவன் . இது மிகுதி உணர்த்தும் , ` அதி ` என்னும் இடைச்சொல்லடுத்து , ` அதிபதி ` என வந்தது . துன்று - நெருங்கிய ; சூழும் - சுற்றிலும் ; ` சூழ்வதாகிய வலம் ` என்றலுமாம் . தொண்டு ( அடியவரது ) தொண்டு ; அது காரிய ஆகுபெயராய் அதற்கு அவன் செய்த அருளைக் குறித்துநின்றது . கதிர் , வெள்ளொளி .

பண் :

பாடல் எண் : 9

பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும்
எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சே ! மேம்பட்ட சோதியே ! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே ! பாவத்தைப் போக்குபவனே ! உலகுக்கே ஒளிதரும் விளக்கே ! தேவதேவனே ! திருவாரூர்த் திருமூலட்டானத்து உறையும் பெருமானே ! தேவர்கள் தலைவனே ! எம்பெருமானே ! என்று அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து நாளும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூசி நின்று அவன் பெருமையைப் பாடுவாயாக . இவ்வாறு செய்தால் உலகப் பற்றினை அடியோடு நீக்கிவிடலாம் .

குறிப்புரை :

` பாசத்தைப் பற்றறுக்கலாகும் ` என்பதை ஈற்றில் வைத்துரைக்க . பண்டரங்கன் - ` பாண்டரங்கம் ` என்னும் கூத்துடையவன் . ` பாண்டரங்க மாடுங்கால் ` ( கலித்தொகை . கடவுள்வாழ்த்து ) என்றது காண்க . தேசம் - உலகம் ; அஃது உயிர்களைக் குறித்தது . உயிர்கட்கெல்லாம் ஒரு விளக்குப் போன்றவன் இறைவன் என்க . நேர்நின்று - அவன் அருள்வழி நின்று . ` பெருக்கி , உள்கி வீழ்ந்து நின்று , ஏசற்று நின்று , என்பவற்றை , ` நெஞ்சே ` என்பதன் பின்னர் வைத்துணர்க . ஏசற்று நின்று - கூசி நின்று . ` என்றென்று ` என்புழியும் உம்மை விரிக்க . ` எம்பெருமான் ` என்பது , அன்பு மீதூர்வாற் சொல்லப்படுவதாகலின் , அஃது ஒன்றனையும் பல்காற் சொல்லுக என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 10

புலன்கள்ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும்
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும்
எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
நலங்கொளடி யென்தலைமேல் வைத்தா யென்றும்
நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! ஐம்புலன்களால் செயற்படுத்தப்பட்டுக் காலத்தைக் கழித்து , மிகக் தொலைவான இடங்களுக்கு அலையாமல் , என்பக்கம் வந்து யான் சொல்வதனைக் கேள் . கங்கையைச் சடையில் சூடிய தலைவா ! தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே ! இராவணன் தலைகளை நெரித்த தலைவனே ! அழகிய ஆரூரில் உறையும் எம் தந்தையே ! உன் பல நலன்களும் கொண்ட திருவடிகளை என் தலைமேல் வைத்தவனே ! என்று நாள்தோறும் கூறி அவனைத் துதிப்பாயாக . அச்செயலே நமக்கு நன்மை தருவதாகும் .

குறிப்புரை :

போது போக்கி - பொழுதைக் கழித்து . புறம் புறம் - மிகச் சேயதான இடம் . திரியாதே போது - அலையாமல் என்பக்கல் வா ; என்றது , ` யான் சொல்வதைக் கேள் ` என்றபடி . நன்மை ஆம் - ( துன்பம் நீங்கி ) இன்பம் உண்டாகும் . ` என்றென்று ` என மேலெல்லாம் அருளிச்செய்ததனை , இங்கு ` நாடோறும் நவின்றேத்தாய் ` என்றருளிச் செய்தார் . தமது தலையை , நெஞ்சின் தலைபோல அருளிச்செய்தார் .
சிற்பி