திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

அநுபவப் பொருளை ஞானதேசிகன் பால் உணர்ந்தவர்கள் உண்ணும் கனியே! திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் நற்பேறே! உன்னையன்றிப் பிறிதொருபற்றற்றவர்களுக்குக் கிட்டும் அமுதமே! துயர் துடைத்து அடியேனை ஆட்கொண்டவனே! பிறர் ஒப்பாகமாட்டாத வலியவனே! தேவர்கள் போற்றும் அமுதமே! பகைவர்களின் மும்மதில்களை அழித்த சிவனே! திருவாரூர் திருமூலட்டானனே! நீ வாழ்க.

குறிப்புரை :

கற்றவர்கள் - மெய்ப்பொருளை வரலாற்று முறையின் வந்த நல்லாசிரியர்கள்பால் உணர்ந்தவர்கள். கேள்வியுணர்வின் பின்னரே தலைப்பட்டுணரும் உணர்வு நிகழற்பால தாகலின், இறைவனை, கற்றவர்கள் உண்ணும் கனியாக அருளிச் செய்தார். `கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை` (தி.9 திருவிசைப்பா. 5. 2.) என்றருளினமையுங் காண்க. `விழுங்கும் கனி` என்றது, `காழில் கனி` (திருக்குறள். 1191.) என்றது போல, முழுவதூஉம் சுவையுடைய கனியென்றவாறு. இங்கு, `உண்ணும்` என்றதற்கும் அதுவே பொருளென்க. இறைவனைப் புகலிடமாக அடைந்தார்க்குப் பயனும் அவனேயாகலின், `கழலடைந்தார் செல்லுங் கதி` என்றருளினார். அற்றவர் - பிறிதொரு பற்றும் இல்லாதவர். மைந்தன் - வலிமை யுடையவன். `பிறர் ஒருவர்க்கும் இல்லாத வலிமை யுடையவன்` எனவே, அவனது, `முடிவிலாற்றல்` என்னும் அருட் குணத்தினை வியந்தவாறாயிற்று. மருந்து - சாவா மருந்து; அமுதம். `அமுதுண்ணுதலில் விருப்பமுடையவராய வானவர்களுள் மெய்யுணர்வுடையோர், இறைவனையே உண்மை அமுதமாக உணர்ந்து போற்றுவர்` என்றபடி. செற்றவர் - பகைத்தவர்.

பண் :

பாடல் எண் : 2

வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

கப்பல்கள் செல்லும் கடலின் நஞ்சை உண்டவனே! மத யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைப் போர்த்தியவனே! தேனொடு மலரும் நறுங்கொன்றை மாலையை அணிந்தவனே! உன்னால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்த இளையவனே! அழகிய நெற்றிக் கண்ணை உடையவனே! தேவர் தலைவனே! ஆல நிழலில் அமர்ந்து அறத்தை மௌன நிலையில் சனகர் முதலியோருக்கு அருளியவனே! ஒப்பற்ற பொற்குன்றே! சிவனே! திருமூலட்டானத்து உறைபவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

வங்கம் மலி கடல் - மரக்கலங்கள் நிறைந்த கடல். ஈர் உரிவை - உரித்த தோல். கொங்கு - தேன்; தேனோடு அலரும் என்க. அம் கண்ணன் - அழகிய கண்களையுடையவன். கண்ணுக்கு அழகாவது, கருணை. `கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்` (குறள். 575) என்றருளியவர், பெயக்கண்டு நஞ்சுண்ட டமைதலையே கண்ணோட்டத்துக்கு எல்லையாக அருளிச் செய்தார். (திருக்குறள். 580.) ஆகலின், அது செய்த சிவபிரான் ஒருவனையே `அங்கணன்` என்றல், ஆன்றோர் மரபாயிற்று. அமரர்கள்தம் இறைவன் - தேவர்க்குத் தேவன்.

பண் :

பாடல் எண் : 3

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பார்வதி மணவாளனே! இளைய காளையை உடையவனே! என் நெஞ்சில் நிலையாக நிற்பவனே! நெற்றிக் கண்ணனே! இலைவடிவாய் அமைந்த முத்தலைச் சூலம் ஏந்தியவனே! ஏழ்கடலும் ஏழ் உலகமும் ஆகியவனே! வில்லால் மும்மதில்களை எரித்த சிவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! உன் திருவடி வாழ்க.

குறிப்புரை :

மழ விடை - இளைதாகிய இடபம். இலை ஆர்ந்த - தகட்டுநிலை பொருந்திய. மூவிலை - மூன்று கவட்டினையுடைய, ஏழ்கடல், `உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல். கருப் பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நன்னீர்க் கடல்` என்பன. ஏழ் பொழில் - ஏழு தீவு; அவை, `சம்புத் தீவு, சாகத் தீவு, குசத் தீவு, கிரௌஞ்சத் தீவு, சான்மலித் தீவு, கோமேதகத் தீவு, புட்கரத் தீவு` என்பன.

பண் :

பாடல் எண் : 4

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பொன்னார் மேனியனே! பூதப்படையனே! சிறப்பு நிலைபெற்ற நான்கு வேதங்களும் ஆனவனே! மான் குட்டியை ஏந்திய கையினனே! உன்னையே தியானிப்பவருக்கு உள் பொருளாய் அகக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றவனே! உலகுக்கு ஒப்பற்ற தலைவனே! சென்னியில் வெண்பிறை சூடியவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

பொன் இயலும் - பொன்போல விளங்கும். மறி - மான் கன்று. உன்னுதல் - அன்பால் நினைத்தல். உண்மையன் - உள்பொருளாகின்றவன்; அஃதாவது, அவர் நினைத்த பயனைத் தருபவன். ஒருவன் - முழுமுதல்; பிறரெல்லாம் ஒவ்வொரு கூற்றில் முதன்மையுடைய பல ஏவல் தொழிலினராக, தான் எல்லா முதன்மையும் உடைய ஒரு பெருந்தலைவனாய் இருப்பவன் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 5

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

விடம் தங்கிய கழுத்தினனே! ஞானயோக வடிவினனே! சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வேந்தனே! வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனே! எல்லாம் ஒடுங்கிய இருளில் கூத்தாடுதலை உகந்தவனே! திருநீறு பூசிய சோதியே! சிவந்த சடையை உடையவனே! திருமூலட்டானனே! உன் திருவடி வாழ்க.

குறிப்புரை :

நற்றவன் - ஞானயோக வடிவினன்; அவ்வடிவு மோன முத்திரைக் கையினான் மெய்ம்மையுணர்த்தும் தென்முகக் கடவுள் வடிவென்க. வெஞ்சுடரோன் - பகலவன். துஞ்சு இருள் - எல்லாம் ஒடுங்கிய இருள். இந்நிலையில் ஆடுதல், மீளப்படைத்தற் குரியவற்றைச் செய்தலாகும். இதுவே, `சூக்கும நடனம்` எனவும், `சூக்கும ஐந்தொழில்` எனவும் சொல்லப்படும். தூநீறு, ஒடுங்கிய பொருள்களின் ஆற்றல் வடிவினையும், அதனை மெய்யின்கண் பூசிக் கொள்ளுதல், அவற்றிற்குத் தானே பற்றுக்கோடாதலையும் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 6

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

சங்கரனே! சதாசிவனே! படம் எடுக்கும் பாம்பை அணிந்தவனே! புண்ணியனே! தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும் காணமுடியாத தீப்பிழம்பின் வடிவானவனே! திருமூலட்டானத்து உறைபவனே! உன் திருப்பாதங்கள் வாழ்க.

குறிப்புரை :

சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். `சதாசிவன்` என்பதும் சிவனுக்கு ஒரு பெயர். பொங்கு அரவன் - மிக்க பாம்புகளை அணிந்தவன். புண்ணியன் - அறவடிவினன். இத்திருப்பாடல் முழுவதும் உயிர்களது தலைமேல் தங்கும் இயல்புடைமைபற்றிச் சிறப்பு வகையில் திருவடிக்கே வணக்கங் கூறியதாதல் அறிக. `திருமூலட்டானனே` என்றதனைத் தாப்பிசையாக, `செங்கமலத் திருப்பாதம்` என்றதற்கு முன்னேயுங்கூட்டி, `நின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 7

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் கொன்றைப் பூ அணிந்த சடையனே! சடையில் வானில் உலவும் பிறையையும் ஒளிவீசும் பாம்பினையும் சூடியவனே! பூங்கொம்பு போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனே! கழலணிந்த திருவடிகளால் கூற்றுவனை உதைத்த தலைவனே! விரும்பும் அடியார்க்குக் கிட்டுதற்கு இனிய செல்வமே! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே! செம்பொன், மரகதம், மாணிக்கம் போன்றவனே! திருமூலட்டானத்தில் உறைகின்றவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

வம்பு - வாசனை. வான் - வானத்திற் செல்லுந் தன்மையுடைய. வாளரவு - கொடிய பாம்பு. `வைத்தாய்` என்றது, `பகைதீர்ந்து வாழ வைத்தாய்` என்னும் குறிப்புடையது. நம்புதல் - விரும்புதல். அரும்பொருளாதலாவது, பயனால், `கிடைத்தற்கரியது கிடைக்கப் பெற்றோம்` என உணரப்படுதல்.

பண் :

பாடல் எண் : 8

உள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் நிலைத்திருப்பவனே! உன்னை விரும்புவார் உள்ளத்தை என்றும் நீங்காது இருப்பவனே! வள்ளலே! மணவாளனே! இந்திரனுடைய தோளை நீக்கிய வலிமையுடையவனே! வெண்ணிறக் காளையை ஏறும் உலகியலிலிருந்து வேறு பட்டவனே! எல்லாருக்கும் மேம்பட்டவனே! தெளிந்த நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்றவனே! திருமூலட்டானத்தில் உள்ளவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

உகப்பார் - விரும்புவார். மணாளன் - நாயகன். விகிர்தன் - உலகியலுக்கு வேறுப்பட்டவன். வானவர்கோன் தோள் துணித்த வரலாற்றை மேலே (ப.31. பா.2. குறிப்புரை.) காண்க.
மேலோர் - தேவர். அவர்க்கு மேலோர், அயனும் மாலும்.

பண் :

பாடல் எண் : 9

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பூக்கள் நிறைந்த சடைமுடியை உடையவனே! தூயவனே! தேவர்கள் துதிக்கும் பரம்பொருளே! தெய்வத்தன்மை நிரம்பிய தேவர்களுக்கும் தேவனே! திருமாலுக்குச் சக்கரம் அளித்தவனே! இம்மனிதப் பிறப்பெடுத்தும் வீணாகச் சாகாமல் பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்றி என்னை ஆண்டவனே! சங்கினை ஒத்த வெள்ளிய நீற்றினை அணிந்த பெருந்திறமை உடையவனே! காளை வடிவம் எழுதிய கொடியை உடையவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

பூ, கொன்றை மத்தம் முதலியன. தேவார்ந்த - தெய்வத்தன்மை பொருந்திய. `தேவர்` என்றது வாளா பெயராய் நின்றது. சதுரன் - திறமையுடையவன். சே - எருது.

பண் :

பாடல் எண் : 10

பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
யன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பிரமனுடைய ஐந்தாம் தலையை நீக்கிய பெரியோனே! பெண்ணுருவும், ஆணுருவுமாய் இருப்பவனே! நான்கு கைகளும் முக்கண்களும் உடையவனே! அமுதத்தை உண்ணும் தேவர்களுக்கு அரசே! ஒரு காலத்தில் இராவணனுடைய இருபது தோள்களையும் கால்களையும் தலைகளையும் நெரித்த திருவடியை உடையவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

பெண்ணுருவோடு ஆண் உருவாய் நிற்றலை, அவனது திருமேனியிலும், உலகிலும் கொள்க. ஆற்ற - மிகவும். `அருமருந்த` என்பது இடைக் குறைந்து நின்றது. `அமுதத்தை உடைய` என்பது பொருள். `சிரம்` என்புழியும் உம்மை விரிக்க; `சிரத்தொடு` என ஒடு உருபு விரிப்பினும் ஆம்.
சிற்பி