திருவாரூர் அரநெறி


பண் :

பாடல் எண் : 1

பொருங்கைமத கரியுரிவைப் போர்வை யானைப்
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலட் டானத்
தெழுந்தருளி யிருந்தானை யிமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

போரிடும் துதிக்கையை உடைய மத யானையின் தோலைப் போர்த்தியவனாய்ப் பூவணமும் வலஞ்சுழியும் உறைவிடமாகக் கொண்டவனாய்க் கருப்பங்கட்டியையும் அமுதையும் தேனையும் போன்ற இனியவனாய் , காட்சிக்கு செஞ்சுடராய்ப் பொற் குன்றாய்ப் பெரிய பொன்மயமான மதில்களை உடைய ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளியவனாய் , தேவர்கள் துதிக்கும் பெருந்தவத்தோனாய் உள்ள திருவாரூர் அரநெறியப்பனை அடைந்து அடியேன் நீக்கற்கரிய வினையாகிய நோயினைப் போக்கிக் கொண்ட திறம் நன்று .

குறிப்புரை :

` பொருங் கரி , கைக்கரி , மதகரி ` எனத் தனித்தனி முடிக்க . பொரும் - போர் செய்கின்ற . ` கைக் கரி ` என்பதில் , ` கரி ` என்பது வாளா பெயராய் நின்றது ; ` கரத்தை உடையது ` என்னும் பொருளுடைய வடசொல் விலங்குகளுள் கையுடைத்தாதல்பற்றி , யானையைக் குறிப்பதாயிற்று . தமிழிலும் , ` கைம்மா ` என்பர் . இன்னும் ` களிறு ` எனக் கூறுமிடத்தும் , ` கைக் களிறு ` என்பர் . ` பூவணம் ` பாண்டி நாட்டுத் தலம் . வலஞ்சுழி , சோழநாட்டுத் தலம் . ` இரு மதில் ` என இயைக்க . இரு - பெரிய . அருந்தவன் - அரிய தவ வடிவினன் . அரு வினை - நீக்குதற்கரிய வினை . ` வினையாகிய நோய் ` என்க . ` அறுத்தவாறு நன்று ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

கற்பகமும் இருசுடரு மாயி னானைக்
காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை
விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியஎம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

கற்பகமும் , சோம சூரியருமாய் ஆகிக் காளத்தி மலையிலும் கயிலாயத்திலும் உறைந்து , விற்றொழிலில் பழகிய மன்மதன் நீறாகுமாறு நெற்றிக்கண்ணைவிழித்து , அருச்சுனன் முன் வேடனாய்க் காட்சியளித்து , அழகிய சோலைகள் சூழ்ந்த ஆரூர் மூலட்டானத்திலே பொருந்திய எம்பெருமானாய்ப் பகைவர்கள் உள்ளத்தே சூனியமாய் உள்ளவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` காளத்தி , கயிலாயம் ` என்னும் சிறப்புப் பெயர்கள் உம்மைத் தொகையாய்ப் பின் பண்புத் தொகையாகி ` மலை ` யென்னும் பொதுப்பெயரைச் சிறப்பித்து நின்றன . வில் - விற்றொழில் . மதன் - மன்மதன் . ` அற்புதம் ` என்றது , சூனியம் என்னும் பொருட்டாய் நின்றது ; இஃது இப்பொருளதாதலை , ` அற்புதம்போல் ஆனா அறிவாய் ` ( சிவஞானபோதம் . சூ .9. அதி .2) என்புழியுங் காண்க .

பண் :

பாடல் எண் : 3

பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்
பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை
வேதியனைத் தன்னடியார்க் கெளியான் தன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலட் டானம்
புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

பார்வதி பாகனாய்க் கங்கையை இருத்திய முடியினனாய்ப் பாசூரிலும் பரங்குன்றிலும் விரும்பி உறைபவனாய் , வேதியனாய்த் தன் அடியார்களுக்கு எளியவனாய் , மெய்ஞ்ஞான விளக்காய் , நறுமணம் கமழும் மலர்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உள்ள புற்றிடங்கொண்ட பெருமானாய்த் தன்னைத் துதிப்பவர்கள் தலைவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` பாதி ` என்பது அவ்வளவையுடைய உடம்பைக் குறித்தது . ` பாதிக்கண் ` எனவும் , ` பெண்ணொடு ` எனவும் , உருபுகள் விரித்து , ஒடுவை , ` கங்கையான் ` என்னும் வினைக் குறிப்புப் பெயரோடு முடிக்க . பாசூர் , தொண்டைநாட்டுத் தலம் . பரங்குன்று , பாண்டி நாட்டுத் தலம் . வேதியன் - வேதம் ஓதுபவன் . விளக்கான் - விளக்காய் உள்ளவன் . விரை - வாசனை ; பிரிநிலை ஏகாரம் பிறிதொன்றும் இன்மையைக் குறிக்கு முகத்தால் , விரையது மிகுதியுணர்த்தி நின்றது . போது இயலும் - பேரரும்புகள் நிறைந்து தோன்றும் . ` நாறும் பொழில் , இயலும் பொழில் ` எனத் தனித்தனி முடிக்க . ஆதியன் - முதல்வன் ; தலைவன் ; ` இடர் நீக்கிக் காப்பவன் ` என்றல் திருவுள்ளம் .

பண் :

பாடல் எண் : 4

நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரம்மாற் கீந்தான் தன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம்
இடங்கொண்ட பெருமானை யிமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

நந்திதேவருடைய முதற்பெருங்காவலை ஏற்றுக்கொண்ட தலைவனாய் , நாகேச்சுரத்தில் உறைபவனாய் , காலை நண்பகல் மாலை என்ற முப்போதும் வானவர்கள் பூக்களால் அலங்கரித்துத் துதிக்கும் மெய்ப் பொருளாய் , திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய் , சந்திரன் நுழைந்து செல்லுமாறு வானளாவி உயர்ந்த சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உறையும் பெருமானாய் , தேவர்கள் போற்றும் அந்தணனாய் உள்ள ஆரூரில் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` நந்தி பணி ` என்றது , நந்திதேவர் சிவபிரான் திரு முன்பிற் செய்யும் முதற்பெருங் காவலை . நாகேச்சரம் - சோழநாட்டுத் தலம் . சந்தி - காலை , மாலை , நண்பகல் . தத்துவன் - மெய்ப் பொருளாய் உள்ளவன் . இந்து - சந்திரன் . உயரத்தால் மீது செல்லாது உள் நுழையற்பாலதாயிற்று . அந்தணன் - அழகிய தட்பத்தினை ( கருணையை ) உடையவன் ; அது , தான் நஞ்சினை உண்டு பிறரைக் காத்தமையானே நன்குணரப்படுவதாகும் .

பண் :

பாடல் எண் : 5

சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை
விடக்கிடுகா டிடமாக வுடையான் தன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான் தன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம்
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

பவளம் போல ஒளி வீசும் செம்மேனியில் வெண்ணீறு அணிந்தவனைச் சோதிலிங்கமாக உள்ளவனைப் பெண்ணாகடத்துத் தூங்கானைமாடத்து உறைபவனைப் பிணங்கள் இடும் சுடுகாட்டை உறைவிடமாக உடையவனை , தீமை மிக்க முப்புரங்களை எரித்தவனை , பூக்களின் இதழ்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் நிலைபெற்ற எம்பெருமானை , தன்னை மதியாதவர்களுடைய வேள்வியை அழித்தவனை , அரநெறியில் உறையும் தலைவனை இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய பெருமானை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` பவளம்போலும் திருமேனியில் ` என்க . ` சோதி லிங்கம் ` எனச் சில உள . திருப்பெண்ணாகடக்கோயில் தூங்கானை மாடமாய் உள்ளது . விடக்கு - இறைச்சிகளை உடைய . இடுகாடு - பிணங்களைப் புதைக்கும் காடு . ` மிக்க ` என்பது , ஈறு தொகுத்தலாயிற்று . ` அரண்கள் எல்லாவற்றிலும் மிக்க ` என்பது பொருள் . மிகுதியாவது , வானில் இயங்குதல் . மடல் - பூவிதழ் . ` மடல் குலவும் ` எனற்பாலது , எதுகை நோக்கித் திரிந்தது . குலவும் - விளங்குகின்ற . இறைவன் வலிமையினும் தக்கன் வலிமைக்கே அஞ்சி அவன் வேள்விக்குச் சென்றமையின் , தக்கனேயன்றிப் பிற தேவர்களும் இறைவனை மதியாதவரேயாயினர் . வேள்வி தக்கனுடையதேயாயினும் , உடன்பட்டு முடிக்கச் சென்ற காரணத்தால் , ஏனையோருடைய தும் ஆயிற்று . அன்றி , ` தக்கனார் அன்றே தலையிழந்தார் ` ( தி .8 திருவாசகம் திருவுந்தியார் . 16) என்றாற்போல இழித்தற் குறிப்பால் தக்கனை , ` மதியாதார் ` எனப் பன்மையால் அருளிச்செய்தார் என்றலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 6

தாயவனை யெவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் தன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்
விரும்பியவெம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

எல்லா உயிர்களுக்கும் தாயாய் , தனக்கு ஒப்பு இல்லாத திருத்தலமாகிய தில்லையில் கூத்தனாய் , திருமாலும் , பிரமனும் ஏனைய வானவரும் துதிக்குமாறு அலைகள் மோதி மீளும் கடலின் நஞ்சினை உண்டு மகிழ்ந்த வலியவனாய் , எல்லா உயிர்களையும் விரும்பியவனாய் , சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை விரும்பிய எம்பெருமானாய் , எல்லாப் பொருள்களிலும் தொடக்கத்திலேயே பரவி அவற்றைச் செயற்படுத்துபவனாய் உள்ள ஆரூரில் அர நெறியில் உறையும் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` எவ்வுயிர்க்கும் தாயவனை ( தாய்போல்பவனை )` என்க . ` தாயவனை ` என்பதில் அகரம் சாரியை , ` தன்னொப்பில்லாத் தலைவன் ` என இயையும் . ` வானோர் ` என்புழியும் உம்மை விரிக்க . மறிவன , அலைகள் என்க . மைந்தன் - வல்லாளன் . ` ஆரூர் மேயவனை ` என மாறுக . மேயவன் - விரும்பியவன் . ஆரூரது சிறப்பும் , மூலட்டானத்தது சிறப்பும் வகுத்துணர்த்தல் வேண்டி , ` மேயவன் ` ` விரும்பியவன் ` எனத் தனித்தனி அருளினார் . ` எல்லாம் ஆயவன் ` என இயையும் . முன்னே - அவற்றது தோற்றத்திற்கு முன்பே ; அனாதியே . எல்லாம் செயற்படுமாறு அவற்றது செயற்பாட்டிற்கு முன்பே அவற்றின்கண் இறைவன் தங்கினாலன்றி அவை செயற் படுதல் கூடாமையின் , ` முன்னே ஆயவனை ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 7

பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்
புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத்
தினிதமரும் பெருமானை யிமையோ ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

பொருள்களை உடைய சொற்களாக அமைந்தவனாய் , புகலூரிலும் புறம்பயத்திலும் விரும்பி உறைபவனாய் , மயக்கம் பொருந்திய மனத்தவருக்கு மயக்கம் போக்கும் அமுதமாய் , மறைக்காட்டிலும் , சாய்க்காட்டிலும் உறைபவனாய் , மரச்செறிவால் இருண்ட பெரிய பொழில்களை உடைய ஆரூர் மூலட்டானத்தில் மகிழ்வாக அமர்ந்திருக்கும் பெருமானாய்த் தேவர்கள் துதிக்க அவர்களுக்கு அருளியவனாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

பொருள் இயல் - பொருள் விளங்குதற்கு ஏதுவாகிய . நற்சொல் - புறத்தே இனிதிசைக்கும் சொல் ; இதனைச் சிவாகமம் ` வைகரி வாக்கு ` என்று கூறும் . பதம் - ( அச்சொல்லது ) நுண் நிலைகள் ; அவற்றை , ` மத்திமை , பைசந்தி , சூக்குமை ` என மூன்றாகப் பகுத்து , ` வாக்கு நான்கு ` என்னும் சிவாகமம் . இனி , ` பொருளியல் நற்சொற் பதங்கள் , உயர்ந்த பொருள்கள் நிறைந்த நல்ல புகழுடைய உலகங்கள் ` என்றலுமாம் . புகலூர் , புறம்பயம் , மறைக்காடு , சாய்க்காடு சோழ நாட்டுத்தலங்கள் . மருள் இயலும் சிந்தை - தன்னைப் பொருளாக உணராது , பிறவற்றைப் பொருள் என்று உணரும் மயக்கம் . அதனைப் பல்லாற்றானும் நீக்கிவருதலின் , ` அதற்கு மருந்து ` என்றார் . இருள் , தழைத்தமையான் ஆயது . ` அருளியன் ` இறந்தகால வினைப் பெயர் ; ` துன்னியார் ` ( குறள் - 188) என்பதுபோல , விரைவு தோன்ற இறந்த காலத்தால் அருளினார் .

பண் :

பாடல் எண் : 8

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்
காரோணங் கழிப்பாலை மேயான் தன்னைப்
பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் தன்னைப்
பணியுகந்த அடியார்கட் கினியான் தன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ்
சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

காலனைக் காலால் வெகுண்ட கடவுளாய் , குடந்தை நாகைக் காரோணங்களையும் கழிப்பாலையையும் விரும்பி உறைபவனாய் , உபமன்னியுவாகிய பாலனுக்காகப் பாற்கடலையே அளித்தவனாய் , தன் திருத்தொண்டில் மகிழ்ந்து ஈடுபட்ட அடியவர்களுக்கு இனியனாய் , சேல்மீன்கள் தாவித் திரியும் வயல்களை உடைய திருவாரூர் மூலட்டானத்தில் சேர்ந்திருக்கும் பெருமானாய் , பவளத்தின் ஒளியைத் தருகின்ற ஆலம்விழுது போன்ற சடையை உடையவனாய் உள்ள ஆரூரின் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

காரோணம் , ( குடந்தை , நாகை ) கழிப்பாலை சோழநாட்டுத் தலங்கள் . பாலன் - உபமன்னிய முனிவர் . அவர் மகவாய் இருந்தபொழுது பால் இல்லாது அழ , அவர்க்குப் பாற்கடலை அழைத்து அளித்த வரலாற்றைக் கோயிற்புராணத்துட்காண்க . ` பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் ` ( பா .9) என்ற தி .9 திருப்பல்லாண்டுங் காண்க . பணி உகந்த - தொண்டினை விரும்பிச் செய்யும் . பவளம் ஈன்ற - பவளத்தினது ஒளியைத் தருகின்ற . ஆல் - ஆலம் விழுது போலும் சடை .

பண் :

பாடல் எண் : 9

ஒப்பொருவ ரில்லாத ஒருவன் தன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பவனை மாணிக்கச் சோதி யானை
மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானைப்
பொ * * * * * * *

பொழிப்புரை :

தன்னை ஒப்பவர் வேறு யாவரும் இல்லாத ஒப்பற்றவனாய் , ஓத்தூரையும் , உறையூரையும் விரும்பி உறைபவனாய் , நமக்குச் சேமநிதிபோல்வானாய் . மாணிக்கத்தின் ஒளியை உடையவனாய் , காற்றும் தீயும் , ஆகாயமும் நீரும் மண்ணும் ஆகிய ஐம்பூதங்களாகவும் உள்ளவனாய் , ......

குறிப்புரை :

ஓத்தூர் , தொண்டை நாட்டுத்தலம் . உறையூர் சோழ மநாட்டுத்தலம் . வைப்பு - சேமநிதி ; அது போல்பவன் என்க . ` வைப்பவன் ` என்பதில் அகரம் சாரியை , மாருதம் - காற்று . வெளி - ஆகாயம் .

பண் :

பாடல் எண் : 10

பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப்
பராய்த் துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை யிடர்செய் தானை
யேத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வஞ்சகனாய் , பராய்த்துறையையும் பைஞ்ஞீலியையும் உறைவிடங்களாகக் கருதியவனாய் , மாறுபட்ட இராவணனைத் துன்புறுத்தியவனாய்த் தன்னைத் துதியாதவர் மனத்தினில் இருளாக இருப்பவனாய்ப் புகழ் பொருந்திய சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை உறைவிடமாகக் கொண்ட எம்பெருமானாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

படிறன் - வஞ்சகன்; `வஞ்சகன்` போல நின்று செய்தான் என்பது கருத்து. பராய்த்துறை, பைஞ்ஞீலி சோழநாட்டுத் தலங்கள். இடம் - இடமாக. பாவித்தான் - கருதினான். `இகலவனை` என்றதும் இராவணனையே என்க. இகலவன் - மாறுபாடுடையவன். இருளாதல் - தோன்றாதிருத்தல். அகலவன் - நீங்குதலுடையவன். `அகலவன்` என்பதில் அகல், முதனிலைத் தொழிற்பெயர்; அகரம், சாரியை.
சிற்பி