திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தலைவனாய் , உலகங்கள் துதிக்க நின்றவனே ! ஒரே உருவம் அரி , அயன் , அரன் என்ற மூன்று வடிவம் ஆனவனே ! கோபங்கொண்டு கூற்றுவனை உதைத்தவனே ! மன்மதனையும் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பினால் சாம்பலாக்கியவனே ! பொருந்துதல் உடையவனாய் மண் உலகையும் , தேவர் உலகையும் படைத்தவனே ! மான்குட்டியைக் கையில் ஏந்தியவனே ! அழகியவளாம் பார்வதியை ஒருபாகமாக உடலில் கொண்டவனே ! இச்செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ , செய்த பின்னோ நீ திருவாரூரை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டுள்ளாய் ?

குறிப்புரை :

ஒருவனாய் - ஒப்பற்ற தலைவனாய் . மூவுருவம் ` அரன் , மால் , அயன் ` உருவம் . ` கறுவனாய் ` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது . ` சினங்கொண்டவனாய் ` என்பது பொருள் . மருவனாய் - பொருந்துதலுடையவனாய் . தெரித்த - படைத்த . மறி - கன்று . ` ஓர்மாது ஓர் பாகத்தைத் திருவினாளாய் ( அழகியாளாய்ச் ) சேரப்படுவதற்கு ` என்க . ` திருவாரூரைக் கோயிலாக் கொண்ட நாள் அந்நாள்களோ , முன்னோ பின்னோ ` என முடிக்க . ` முன் , பின் ` என்பன காலப் பெயர்கள் .

பண் :

பாடல் எண் : 2

மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையான்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

அழகிய மலை மங்கையாகிய பார்வதியோடு மகிழ்ந்தவனே ! தேவர்கள் வருந்தாதபடி கடல் விடத்தை உண்டவனே ! தேவர்கணம் புடைசூழ இருந்தவனே ! அவர்களுக்கு வலிமை தரும் அமுதத்தை உண்பித்து நிலைபேற்றை அருளியவனே ! நினைக்கவும் முடியாத தீப்பிழம்பாக ஓங்கி இருந்தவனே ! வில்லால் மும்மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவனே ! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்த பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?.

குறிப்புரை :

மலை ஆர் - மலையில் வளர்ந்த . வலி - இறவாதிருக்கும் வலிமை . தழற்பிழம்பாய் நிமிர்ந்தது , அயன் மாலுக்கென்க . ` அலசாமே ` என்பது , ` அலைசாமே ` எனப் போலியாயிற்று ; ` தளராமல் ` என்பது பொருள் . அலைகடல் , வினைத்தொகை . ` எரித்த ` என்பதன்பின் . ` பொழுதிற்கு ` என்பது வருவிக்க . இங்ஙனம் வருவியாது , ` பின்னோ முன்னோ ` என மாற்றியுரைப்பினுமாம் .

பண் :

பாடல் எண் : 3

பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

பாடகம் என்ற அணியினை அணிந்த மெல்லிய அடிகளை உடைய பார்வதியோடு பார்த்தனுடைய வலிமையைப் பரிசோதிப்பதற்கு வேடனாய் வில்லை வளைத்துக் கொண்டு நின்றவனே ! தேவர்களுக்கும் பற்றுக் கோடாய் நின்றவனே ! மாட மாளிகைகள் நிறைந்த தில்லைத் திருப்பதியில் அழகு விளங்கும் பொன்னம்பலத்தில் நிலைபெற்றுக்கூத்தாடத் தொடங்கியவனே ! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

` போய் எய்தநாள் ` என இயையும் . பார்த்தன் - அருச்சுனன் . காண்பான் - வெளிப்படக் காணுதற்பொருட்டு , ` கண்ணவன் ` என்பதில் அகரம் சாரியை .

பண் :

பாடல் எண் : 4

ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே யென்றங்கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

ஓங்கி உயர்ந்து எழுந்து நின்றவனே ! ஓர் ஊழியில் போலப் பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பவனே ! மிகச் சிறப்புடைய உயர்ந்த தேவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே ! நீருள் பூக்காது திருமாலின் உந்தியில் பூத்த தாமரையில் தோன்றிய பிரமனும் , திருமாலும் , ` பெருமானே ! எங்கள் உள்ளத்தில் நிலைபெற்றிருப்பாயாக ` என்று துதித்து , தம் உள்ளத்தின் கண் கொண்டு செறித்து வைக்கப்பட்டிருப்பவனே ! இச்செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்ட பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.

குறிப்புரை :

` ஓங்கி உயர்ந்து ` ஒருபொருட் பன்மொழி . எழுந்து நின்றது , அழற் பிழம்பாய் . ` ஏழ் ` என்பது பன்மை குறித்து நின்றது , ` ஒருநாள் எழுநாள் போற்செல்லும் ` ( குறள் . 1269.) என்புழிப் போல . ` உகம் ` என்றது , கற்பத்தை . ` ஓர் உகத்திற்போல ஏழ் உலகத்திலும் ஆகி ` என விரித்து , ` ஒரு கற்பத்திற் செய்தல்போலவே , பலகற் பத்திலும் படைப்பு முதலியவற்றைச் செய்து ` என உரைக்க . சீர் - புகழ் . தலையானவானோர் , ` சூரியன் , சந்திரன் , அயன் , மால் ` முதலியோர் . அவர் தக்கன் செயலுக்கு உடம்பட்டமையின் அவன் செய்த வேள்வியை அவர் செய்ததாகவே அருளினார் . ` நீங்கிய நீர்த்தாமரை ` என்றது , நீருட் பூவாத தாமரை , எனத் திருமாலது உந்தித் தாமரையை வெளிப்படுத்திற்று . அத் தாமரையான் பிரமன் . ` நெடுமாலோடு ஏத்தி ` என இயையும் . ஓடு , ஒருவினை ஓடு . நில்லாய் - ( எமது உள்ளத்தில் ) நீங்காதிருப்பாயாக . ` மதி வாங்கி வைப்பதற்கு ` என மாற்றி ` தமது உள்ளதின்கட் கொண்டு செறிப்பதற்கு ` என உரைக்க . அயனும் மாலும் இவ்வாறு இறைவனைத் தியானித்தமை , படைப்புக் காலத்தென்க .

பண் :

பாடல் எண் : 5

பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே
நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

பாலர் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே ! வழிபடும் அடியவர்களுக்கு அவ்வவ்விடங்களில் பற்றுக்கோடாய் இருப்பவனே ! நீலகண்டனே ! பெருந்தோள்களை உடையவனே ! முக்காலமும் ஆளும் செயலை உடையவனே ! சிவலோகம் சேரும் நெறியை அடியாருக்கு அருளும் புகழுக்குரிய தன்மையனே ! நுண்ணறிவு உடையவனே ! நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனே ! அருளுருவம் கொண்டவனே ! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்டதன் பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?.

குறிப்புரை :

` பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே ` என்றது , தோன்றி வளராது என்றும் ஒருபடியே நிற்றல்பற்றி . பற்று - துணை . நெருநல் - நேற்று . சீலம் - செயல் . சீர்மை - புகழுக்குரிய தன்மை . கூர்மை - நுண்ணறிவு . குணம் - நற்பண்பு . நல்ல கோலம் - அருளுருவம் . அவை , ` போகவடிவம் . யோக வடிவம் , வேகவடிவம் ` என மூவகைப்படும் . அவை அனைத்தும் உயிர்களுக்கு நன்மை செய்தற்பொருட்டே ஓரோர் காலத்திற் கொண்டன . ஆகலின் , ` நல்ல கோலம் ` என்றருளிச் செய்தார் . ` நீ ` என்றதனை , ` குணமே ` என்றதன் பின் வைத்துரைக்க . ` நீ கோலங்கொள்வதற்கு ` என்பவர் , இறைவனை அவனது அருட்டிறம் பலவற்றையும் சொல்லி விளித்தருளியது , ` அத்திறங்கட்கேற்ற கோலங்கள் பலவும் ` என்பது உடம்பொடு புணர்த்தலால் தோன்றுதற் பொருட்டு .

பண் :

பாடல் எண் : 6

திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து
மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை யேந்திப்
பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு மனித வாழ்க்கையின் பயனையும் அப்பயனை அடையும் வழி முறைகளையும் அறிவர் வாயிலாகக் காட்டியவனே ! அணுவை விடச் சிறிய அணுவாகவும் பெரிய பொருள்களை விடப் பெரியவனாகியும் உள்ளவனே ! ஒவ்வாத செயல்கள் பலவும் உடைய தாருகவனத்து முனிவருடைய மயக்கத்தைத் தீர்த்து அருள் செய்து இருந்தவனே ! மிக்க சிறப்புடைய பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நிற்பவனே ! அறம்பலவும் உரைத்தவனே ! இச் செயல்களை நீ செய்வதன் முன்னோ செய்த பின்னோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

` திறம் ` என்றது , பயனை . ` காட்டி ` என்பதைத் ` திறம் பலவும் ` என்பதற்குங் கூட்டுக . வழி - பயனை அடையும் முறை . செய்கை - அம்முறையிலே செய்யும் முயற்சி ; இவைகளை உயிர்களுக்கு அறிவர் வாயிலாகக் காட்டியது , தொடக்கக் காலத்து என்க . ` பலவும் ` என்றதனால் , ` இன்னபொழுது இன்னாருக்கு , இன்னவாற்றால் ` என வரையறுத்துணர ஒண்ணாதவாறு , பற்பல காலத்துப் பற்பலருக்குப் பற்பல வகையால் ஏற்ற பெற்றி காட்டியருளியதெனக் கொள்க . மறம் - ஒவ்வாத செய்கைகள் ; அவை , ` அவரவர் செய்த வினையே அவரவருக்குப் பயன்தரும் ; அதனைக் கூட்டுவிக்க ஒரு முதல்வன் வேண்டா ` என்னும் கொள்கையின் வழிச்செய்வன . ` மறம் பலவும் உடையாராகிய அவரை ` என்க . செய்யுளாகலின் சுட்டுச்சொல் முன் நிற்றல் பொருந்திற்று . ` உடையாரை மயக்கந் தீர்த்து ` என்பதை . ` நூலைக் குற்றங் களைந்தான் ` என்பதுபோலக் கொள்க . மாமுனிவர் தேவதாருவனத்து முனிவர் . தன்னொடு மாறுபட்டு நின்ற அவரை இறைவன் தெளிவித்துப் பின்னர் அருள் புரிந்தான் என்றுணர்க . ` பிச்சை ஏற்று ` என்றது , பிரமன் தலையைக் கிள்ளியஞான்று , தேவர் பலரது இரத்தத்தைப் பிச்சையாக ஏற்றமையை . அறம்பல உரைத்தமை , ஆல்நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கென்க .

பண் :

பாடல் எண் : 7

நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ஆயினவனே ! கலப்பினால் சராசரங்கள் யாவுமாகி நிற்பவனே ! எல்லோரும் கூடி உன் பெருமையைப் பேசக் கற்பகமாய் உள்ளவனே ! வானோருக்கு அசுரர்கள் தீங்கு விளைத்த காரணத்தால் திருமாலைப் படைத்து அசுரர்களுடைய வலிமையைச் சுருக்கி அவர்கள் மாண்டு அழியச் செய்தவனே ! வாசுகியால் வெளிப்பட்ட ஆலகால விடத்தை உண்டவனே ! சலந்தரனை அழித்தவனே ! இச்செயல்கள் செய்வதற்கு முன்னோ செய்தபின்னோ நீ குளிர்ந்த ஆரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

` நிலத்தந்தரத்து ` என்பதும் , ` நீண்ட உருவம் ` என்பதும் தொகுத்தலாயின . அந்தரம் - ஆகாயம் . ` மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ` என்பது பொருள் . அவ்வுருவம் , மாலும் அயனும் அடிமுடி தேட நின்ற உருவம் . நிற்பன . அசரம் . நடப்பன - சரம் ; இறைவன் கலப்பினால் இவையெல்லாமாய் நிற்பன் என்க . ` நீயேயாகிக் கலந்து ` என இயையும் . உரைக்க -( அந்நிலையை உணர்ந்து ) போற்ற கற்பகமாய் நிற்றல் , அங்ஙனம் போற்றுவார்க்கு அவர் வேண்டுவன எல்லாம் அளித்தல் . ` வானோர் உய்ய வல்லசுரர் மாண்டு வீழ , காரணத்தால் அன்று நாரணனைக் கற்பித்து வலம் சுருக்கி , வாசுகியை வாய்மடுத்துச் சலந்தரனைக் கொல்வதற்கு ` எனக் கொண்டு கூட்டுக . காரணம் - வானோர்க்கு இடையூறு விளைத்தமை . அன்று - முன்னர் . கற்பித்து - படைத்து . வலம் சுருக்கி - ( அசுரரது ) வலிமையை அடக்கி . ` வாசுகி ` என்றது , அவனால் உமிழப்பட்ட நஞ்சினை ; அதனை ` ஆலகாலம் ` என்பர் ` சலந்தரன் ` என்னும் அசுரனைச் சக்கரத்தால் அழித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க .

பண் :

பாடல் எண் : 8

பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

அழுத்திய திருவடியால் முயலகனை யாருக்கும் தீங்கு நிகழ்த்தாதவாறு அழுத்திவைத்து உலகில் மேம்பட்ட சுடராய்த் திகழ்பவனே ! உன்புகழ் பாடும் அடியவர்களுக்கு என்றும் அழிவில்லா வீட்டுலகம் நல்கியவனே ! பூத கணங்களை உடைய நந்தி தேவர் , தனக்குத் தானே ஒப்பாகும் பார்வதி , புனிதனாகிய பிரமன் , பொய் யுரையாத வேதத்தில் வல்ல நால்வர் மற்றத் தேவர் எல்லோருக்கும் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே ! நீ இச் செயல்களைச் செய்வதன் முன்னரோ செய்த பின்னரோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

` முயலகன் ` என்பவன் தாருகவனத்து முனிவர் விடுத்த அசுரன் . ` பாதுகாத்து ` என்றது , ` சிறைப்படுத்தி ` எனற்பாலதனை நகையை உள்ளுறுத்து அருளிச்செய்தவாறு . ` பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற ` என்றது , கூத்தப்பெருமானாய் நிலஉலகத்தில் நின்றதனை . அஃது ஐந்தொழிலும் உடைய உருவத் திருமேனியாதல் பற்றி அங்ஙனம் அருளிச் செய்தார் . ` அளப்பில கீதஞ் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே ` ( தி .4. ப .77. பா .3.) என , இசையால் ஏத்துவார்க்கு உளதாம் பயன் அளவிடப்படாமையைத் திருநேரிசை யுள்ளும் அருளிச் செய்தார் . ` கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் ` ( தி .2. ப .43. பா .5.) என்றருளிச்செய்த திருஞானசம்பந்தர் திருமொழியையும் நோக்குக . பூதத்தான் - பூதகணங்களை உடையவன் ; நந்தி தேவர் . பொரு நீலி - ( உம்மை ) ஒத்த நீலநிறம் உடையவள் ; உமை . புனிதன் - உயிர்கட்குச் செல்லும் நெறிவகுத்துச் செலுத்தும் ஆசிரியன் ; பிரமன் . பொய் உரையா - மெய்யே கூறும் ( நால்வர் என்க .) மறை நால்வர் - அந்தணர் நால்வர் . விண்ணோர் - தேவர் . இவர்கட்கெல்லாம் சிவபிரான் வேதங்களையும் ஆகமங்களையும் அறிவுறுத்தினமை ஆங்காங்குக் கூறப்படுதலறிக . ` காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம் கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழ்அறம் பகர ` என சுந்தரர் அருளிச்செய்ததுங் காண்க . ( தி .7 ப .65 பா .6.)

பண் :

பாடல் எண் : 9

புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

சென்று சேரத்தக்க எண் வகைப் பிறப்புக்கள் , எண்வகைக் குற்றங்கள் , எண்புலன்கள் , எண்வகை உலகங்கள் , எண்வகைத் தீவுகள் , எண்வகைக் கடல்கள் , எண்வகை அரண்கள் , தீவுகள் எட்டின் எண்வகைப்பட்ட இயல்புகள் , உன் திருவடிகளை அடைந்தவர்களுக்குக் கிட்டும் பயன்கள் எட்டு , எண்வகை ஒளிகள் , ஒன்றும் பலவும் ஆகிய பகுதிகளை உடைய எட்டு நாள்கள் , எட்டு நன்மைகள் , ஞானத்தின் மேம்பட்ட அடியார்களின் மனத்தில் அமைந்த எண்வகைப் பண்புகளாகிய எண்மலர்கள் , எட்டுத் திசைகள் ஆகிய இவற்றைத் தோன்றச் செய்வதன் முன்னோ தோற்றிய பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

புகுதப்படுதல் பற்றிக் கதியை , ` புகை ` என்றருளிச் செய்தார் ; ` மிகு , நகு ` என்பவை ஐகாரம்பெற்று மிகை , நகை ` என வருதல்போல , ` புகு ` என்பது ஐகாரம்பெற்று , ` புகை ` என வந்தது . நெருப்பிற்புகைக்கும் அப்பெயர் , எவ்விடத்தும் புகுதலுடைமை பற்றியே வந்ததென்க . எழுவகைப் பிறப்புக்களோடு , ` நரகர் ` என்னும் பிறப்புங் கூட்ட , பிறப்பு எட்டாம் . அவையே ஈண்டுக் கதியெனப் பட்டன . நரகரைத் தேவருள் அடக்கி , ` பிறப்பு ஏழ் ` எனப்படுமா யினும் , ` நரகரைத் தேவுசெய்வானும் ` ( தி .4. ப .4 பா .2.) என்பது முதலிய பலவற்றானும் , யாதனாசரீரமும் பூதசார சரீரமும் வேறு வேறேயாகலானும் நரகர் தேவரின் வேறாதலே யாண்டும் துணிபு . இனி , விலங்கிற் கீழ்ப்பட்ட பிறப்புக்களை எல்லாம் சிறப்பின்மை பற்றி , விலங்கினுள் அடக்கி , தேவகதி , நரககதி , மக்கள் கதி , விலங்குகதி ` என எல்லாப் பிறப்புக்களையும் நாற்கதியினுள்ளும் அடக்கிக் கூறுவர் . எனினும் , விரித்துக்கூறும் வழி எட்டென்பதே கருத்தென்க . போக்கு - குற்றம் . குற்றம் எட்டாவன , அறியாமை , மயக்கம் , யான் என்றல் ( அகங்காரம் ), எனதென்றல் ( மமகாரம் ), விருப்பு , வெறுப்பு , நல்வினை , தீவினை என்பன , பிறவாறு கூறுங்குற்றங்க ளெல்லாம் இவற்றுள் அடங்குமாறறிந்துகொள்க . இவை மேற்கூறிய கதிகட்கு ஏதுவாதலுணர்க . புலன்கள் - புலன் முதலிய கருவிகள் . அவை உணரப்படுங்கால் , புலன் முதலாகவே உணரப்படுதலின் , எல்லாவற்றையும் ` புலன்கள் ` என்றே அருளிச்செய்தார் . ` சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின் - வகை தெரிவான் கட்டே உலகு ( குறள் .27.) எனத் திருவள்ளுவ நாயனாரும் புலன்களையே எடுத்தோதினார் அவை எட்டாவன , தன் மாத்திரை , பூதம் , ஞானேந்திரியம் , கன்மேந்திரியம் , அந்தக்கரணம் , குணம் , மூலப்பகுதி , புருடதத்துவம் ` என்பன . இவற்றை ` எட்டுக்கொத்து ` என்பர் . இவற்றுள் , தன்மாத்திரை , முதலிய நான்கும் தனித்தனி ஐந்து ; அந்தக்கரணம் நான்கு ; குணம் மூன்றனை உள்ளடக்கிய ஒன்று ; மூலப்பகுதி ஒன்று ; புருடதத்துவம் , காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் ` என ஐந்து ; ஆகமுப்பத்தொன்றாகும் . இவற்றின் இயல்பெல்லாம் சிவாகமங்களுள்ளும் , அட்டப்பிரகரணம் , ஞானாமிர்தம் . சித்தாந்த சாத்திரம் முதலியவற்றுள்ளும் காண்க . ஈண்டு விரிப்பிற் பெருகும் . இவை மேற்கூறிய குற்றங்கட்குச் சார்பாய் நிற்றலுணர்க . ` பூதலங்கள் ` என்றதை , ` பூவோடு ( பூமியோடு ) கூடிய தலங்கள் ` எனவிரிக்க . ` தலங்கள் ` எனப் பொதுப்பட அருளிச்செய்தது , கீழுலகங்களையும் மேலுலகங்களையும் இருமுறையான் உணர்த்தற் பொருட்டென்க . எனவே , நடுநிற்பதாய பூவுலகம் கீழ்ஏழுலகங்களோடும் , மேல் ஏழ் உலகங்களோடும் இயைதற்குரித்தாக , ` எட்டு ` என அனைத்துலகங்களையும் அருளிச் செய்தவாறாயிற்று . இவ் வுலகங்கள் மேற்கூறியவற்றை எய்திய உயிர்கள் போக்கு வரவு புரிதற்கு இடமாய் நிற்றலறிக . பொழில்கள் - தீவுகள் : அவை எட்டாவன . ` நாவல் , சாகம் , குசை , கிரௌஞ்சம் , சான்மலி , கோமேதகம் , புட்கரம் ` என்னும் மக்களிடமாகிய ஏழும் , அவற்றிற்குப் புறத்தேயுள்ள பொன்னில மாகிய தேவர் இடம் ஒன்றுமாம் . ஈண்டுள்ளார்க்குப் புலனாகாமை பற்றி நரகரையும் தேவருள் அடக்கிப் பிறப்பு ஏழென்றல்போல தேவர்க்குரிய பொன்னிலத்துக்கு அப்பால் பேய்கட் குரித்தாய் உள்ள இருள் நிலத்தையும் பொன்னிலத்துளடக்கி , ` பொழில்கள் எட்டு ` என்று அருளிச்செய்தார் . கலை - அத்தீவுகட்கு உடையாய் அமைந்த கடல்கள் . இப்பெற்றி தோன்றவே கடல் என்னாது , ` கலை ` என்றருளினார் ; பிறவும் அன்ன . கடல் எட்டாவன , ` உவர்க்கடல் , பாற்கடல் , தயிர்க் கடல் , நெய்க்கடல் , கருப்பஞ்சாற்றுக்கடல் , தேன் கடல் , நன்னீர்க்கடல் என்னும் ஏழும் , அவற்றிற்கு அப்பால் சக்கரவாள கிரியைச் சூழ்ந்துள்ள பெரும்புறக் கடல் ஒன்றுமாம் . காப்பு - அரண் ; அஃதாவது அக்கடல்களைச் சூழ்ந்து அரண்போல நிற்கும் மலைகள் . அவை எட்டாவன , ஏழுகடலையும் சூழ்ந்துள்ள மலைகள் ஏழும் , பொன்னிலத்தைச் சூழ்ந்துள்ள சக்கர வாளகிரி ஒன்றுமாம் . காட்சி எட்டாவன , பொழில்கள் எட்டினும் காணப்படும் எண் வேறு வகைப்பட்ட இயல்புகள் . அவைகளை யெல்லாம் சிவாக மங்களுள்ளும் , கந்தபுராணத்து அண்டகோசப் படலத்துள்ளும் , சிவ ஞான மாபாடியத்துள்ளும் காண்க . ஈண்டு விரிப்பிற் பெருகும் . பொழில்கள் முதலிய நான்கும் இவ்வுலகத்தனவாகலின் , அவைகளை வகுத்தருளிச் செய்தார் . பயனை ` களைகண் ` என்றருளிச் செய்தார் , ` அவை காரணமாகவே கழற்சேவடியடைந்தார் ` என்பது அறிவித்தற்கு . எனவே , பயன்கருதி வழிபட்டார் அடையும் பயன்கள் எட்டென்ற வாறாயிற்று ; அவை , ` புவலோகம் , சுவலோகம் , மகலோகம் , சனலோகம் , தவலோகம் , பிரமலோகம் , விட்டுணுலோகம் , உருத்திர லோகம் ` என்பன . இவையெல்லாம் பதங்கள் ( பதவிகள் ) எனப்படும் புண்ணிய லோகங்கள் ; சிவலோகமாகிய வீட்டுலகம் இவையனைத்தினும் மேலாய் உளது . அதனிற் சென்றார்க்கு மாறிப்பிறத்தல் இல்லை . பயன் கருதாது வழிபடுதல் உலகியலிற்பற்று நீங்காதவர்க்குக் கூடாமையின் , வீட்டுலகத்தை அடைதல் அவர்க்கு இயலாதாயிற்று . உலகியலின் நீங்காதவருள்ளும் பயன் கருதாது வழிபடுவாருளராயினும் , ` வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் ` ( தி .8 திருவாசகம் . உயிருண்ணிப்பத்து .7) என உவர்த்து , ` வார்கடலுலகின் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரியாயே ` ( தி .8 திருவாசகம் . வாழாப்பத்து .1) என வேண்டுவாரல்லராகலின் , அவர் ஒருவாற்றாற் பயன் கருதி வழிபடுவோரே என்க ; எனினும் இவர் உருத்திரலோகத்தை அடைவர் என்க . நகை - ஒளி ; அஃது அதனை உடைய பொருள்களைக் குறித்தது . அவை எட்டாவன , இராகு கேதுக்கள் ஒழிந்த கோள்கள் ஏழும் , விண்மீன்களுமாம் . சிறப்புப்பற்றி ஞாயிற்றையுந் திங்களையும் வேறுவே றெண்ணுவார் , ஏனைய கோள்களையும் அவ்வாறு எண்ணி , சிறப்பில்லாத விண்மீன்களை ஒன்றாக வைத்து அருளிச்செய்தார் : வானத்திற் காணப்படுவனவற்றையே ஈண்டுக் கூறுதலின் , ` நகை ` என்றது தீயின்மேற்செல்லாதாயிற்று . இவை இரண்டு தொடர்களாலும் மேலுலகங்களும் , அவற்றுள் முன்னிற்பதாய புவலோக மண்டலங் களும் அருளிச்செய்தவாறு . ` நாள் ` என்றது , அஃது ஒன்றும் பலவுமாய பகுதிகளை . அவை எட்டாவன , ` நாள் , வாரம் , பட்சம் , மாதம் , இருது , அயனம் , ஆண்டு , உகம் என்பன . ` புலன்கள் ` என்புழிக் கூறப்பட்ட காலம் , பொருள் தொறும் நிற்கும் சிறப்புக் காலம் எனவும் , இஃது எல்லாப் பொருள் களுக்கும் பொதுவாகிய பொதுக் காலம் எனவும் உணர்க . ` பூதலங்கள் ` முதலாகச் சொல்லப்பட்டன யாவும் அன்ன . நன்மை எட்டாவன , ` அறம் , பொருள் , இன்பம் . வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கும் , அவற்றிற்கு மறுதலையாய . ` மறம் . இன்மை , துன்பம் , பிறப்பு ` என்னும் நான்குமாம் . உறுதிப் பொருட்கு மறுதலையாயவற்றையும் , ` நன்மை ` என்றருளிச் செய்தார் . மலத்தைத் தேய்த்தலிற் பிழையாமை நோக்கி , அங்ஙனம் அல்லாக்கால் அவை . கருணையுடையவனாற் படைக்கப்படுதல் என்னையோ வென்க . ` நலம் ` என்றது , ஞானத்தை . அதுமிக்காருடைய உள்ளத்தில் இருந்து ஞானபூசைக்கு உரியவாகும் மலர்கள் எட்டாவன ` கொல்லாமை , பொறியடக்கம் , பொறுமை , இரக்கம் , அறிவு , மெய் , தவம் , அன்பு ` என்பன . திகை - திசை . அவை எட்டு , கிழக்கு முதலிய பெருந்திசை நான்கும் . தென்கிழக்கு முதலிய கோணத்திசை நான்குமாம் . ` காட்சி எட்டும் ` என்பதனை அடுத்து நிற்றற்பாலதாய . ` திகை எட்டும் ` என்பது , செய்யுள் நோக்கி இறுதிக்கண் நின்றது . தெரித்தல் - தோன்றச் செய்தல் ; படைத்தல் . ` மண்ணும் விண்ணும் தெரித்தநாளோ ` எனமேலும் ( ப .34. பா .1) அருளிச் செய்தார் . ` எட்டு ` என்பது பல்கால் வந்தது , சொற்பொருட்பின் வரு நிலையோடு , இதுவும் ஒர் எண்ணலங்காரம் என்க . இவ்வாற்றா லெல்லாம் உலகத்தோற்றத்தை வகுத்தெடுத்தருளிச் செய்தவாறு . வேதாகம வழக்கும் ஆன்றோர் வழக்கும் பற்றி வரும் இன்னோரன்ன பொருள்கள் எல்லாவற்றையும் ஓரோர் இடத்து ஓரோர்வாயிலால் தன்னுட்கொண்டு நிற்றல் பெருமொழிகட்கு இயல்பென உணர்க . இத்திருத்தாண்டகமும் வரலாற்று முறையான் உணரும் பொருளை உடைத்து . இதற்கு இவ்வாறன்றிச் சில வேறுபடக் கூறு வாரும் உளர் ; வரலாற்று முறையின் உணர்ந்தார் உளராய் , அவர் வேறு பொருந்த உரைப்பன உளவேற் கொள்க . இங்ஙனம் , பொருள்களை அரிதின் உணர மறைவாகக் கொண்டு நிற்றலும் மறைமொழிகட்கு இயல்பேயாம் .

பண் :

பாடல் எண் : 10

ஈசனா யுலகேழும் மலையு மாகி
இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

உலகம் ஏழையும் மலைகள் ஏழையும் அடக்கி ஆள்பவனே ! இராவணன் ஆற்றலை அழித்து இருப்பவனே ! பொதிய மலையில் அமர்ந்து மலர்களின் மணங்களை மகிழ்ந்து ஏற்கும் தென்றலாகி இருப்பவனே ! மதயானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனே ! சூடிய மலர் மாலையைச் சண்டிகேசுவரருக்குக் கொடுத்தவனே ! சகரபுத்திரர்களின் சாபத்தைத் தீர்த்து அவர்களை ஆட் கொண்டவனே ! இச் செயல்களால் உலகவர் உன்னைப் பரம்பொருள் என்று அறிவதற்கு முன்னோ அறிந்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

`உலகேழும் மலையும்` எனப் பின்னர் வருகின்றமையின், `ஈசனாய்` என்றதற்கு, `அவைகளை ஆள்பவனாய்` என்றுரைக்க, மலை, திருக்கயிலை. அதனை இராவணன் பெயர்த்த காலத்து, உலகேழும் நடுங்கினவாகலின், அங்ஙனம் நடுங்கச்செய்த அவனை ஈடழித்தற்குரிய இயைபுணர்த்துவார், `உலகேழும், மலையுமாகி, ஈசனாய்` என்றருளிச்செய்தார். ஈடு - வலிமை. வடதிசைக் கயிலையே யன்றி, தென்றிசைப்பொதியிற்கண் ஆனமையும் குறிப்பினாலுணர்த்துவார், `தென்றலான நாளோ` என்றருளினார். `தாதுமலர்` என்றது தம் முடிக்கண் இருந்த கொன்றைமாலையை. சண்டேசுரநாயனாருக்கு அருளியது மிகப் பழைய வரலாறு என்க. மறித்திட்டு - (நரகத்தினின்றும்) மீட்டு, `சகரர்கள்` என்பார் அறுபதினாயிரவர் என்பதும், அவர் கபில முனிவரது வெகுளித்தீயால் சாம்பலாகி நரகடைந்தனர் என்பதும், அவர் வழியிற் தோன்றிய பகீரதன் தவம்செய்து தேவ கங்கையை மண்ணிற் கொணர்ந்து, அதனைச் சடையில் ஏற்றுப் பின்னர்த் தன் முன்னோர்கள் நல்லுலகை அடையுமாறு அவர் தம் சாம்பலிற் சென்று பாய விடுக்கும்படி சிவபிரானை வேண்டி அங்ஙனம் செய்யப்பெற்றான் என்பதும் பழைய வரலாறுகளாதல் உணர்க. தேசம் - உலகம். `உம்மை` என்னும் உருபேற்ற முன்னிலைப் பெயர் இடைக்குறைந்து, `உமை` என நின்றது. சிவபிரானை உலகம் அறிந்தது மிகப்பழைய காலத்தென்க. `நீயிர் திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள்` என்க.
சிற்பி