திருவெண்காடு


பண் :

பாடல் எண் : 1

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

தாம் விரும்பியவாறே விரைந்தும் தாவியும் மெல்லென்றும் நடக்கும் காளையை இவர்ந்து திருவெண்காட்டை விரும்பி அடைந்த , உலகியலுக்கு வேறுபட்ட பெருமான் , தூண்டப் பட்ட விளக்கினது ஒளி போன்ற பிரகாசம் உடைய திருமேனியில் வெண்ணீறணிந்து , சூலத்தைக் கையில் ஏந்திச் சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு , காதிலும் பாம்பினை அணிந்து , பொன் போன்ற சடைகள் தொங்கப் பூணூல் அணிந்தவராய் நீண்டு கிடந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி நீண்ட தெருவழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார் .

குறிப்புரை :

தூண்டு சுடர் மேனி - தூண்டப்பட்ட விளக்கினது ஒளி போலும் திருமேனியில் , ` வாய் ` என்றது நாவினை ; ஆகு பெயர் ; நாவினைப் பலவழியாலும் அடிக்கடி நீட்டுதல் நாகத்திற்கு இயல்பு . பொறி - படத்திற் புள்ளி . ` பொறியரவம் ` என்றது , ` அதனை ` என்னும் சுட்டளவாய் நின்றது . பொற்சடைகள் - பொன்போலும் சடைகள் . ` வெண்ணூலராய் ` என்க . ` நீண்டு ` என்றது , ` நீட ` என்பதன் திரிபாய் , ` பலகாலமாக ` எனப் பொருள்தந்து நின்றது . வேண்டும் நடை - அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும் , மெல்லென்றும் , தாவியும் நடத்தல் . ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் , என்பது உண்மைப் பொருள் . விகிர்தன் - உலகியலுக்கு வேறுபட்டவன் .

பண் :

பாடல் எண் : 2

பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
யொத்துலக மெல்லா மொடுங்கி யபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்காடு மேவிய விகிர்தனார் தம் திருவடிகளை மனத்துக் கொள்ளும் அடியவர்களுக்குத் திருவடி தீட்சை செய்து , பாதலத்தையும் கடந்து , கீழ் உருவிச் சென்ற திருவடிகளை உடையவராய் , யாருக்கும் தீங்கு நேராதவகையில் ஏழுலகமாய் நின்ற ஒரே திருவடியை உடையவராய் , ஊழி வெள்ளத்தின் ஒலி , உலகை யெல்லாம் வெள்ளம் மூழ்குவித்து அவ்வுலகமெல்லாம் அழிந்த பின்னர் அடங்கியபோது , தாம் ஒடுங்காது வேதம் ஓதி வீணையை இசைத்து அவ்வொலியில் மகிழ்வர் .

குறிப்புரை :

` பாதம் தனிப்பார் ` என்னும் பாடத்திற்கு , ` பாதத்துத் தனித்து நிற்பார் ` என்றாயினும் , ` பாதத்தைத் தனிப்பக்கொண்டு நிற்பார் ` என்றாயினும் பொருள் கொள்க . ஏழாவதன் தொகையில் மகரங்கெடாது நிற்றல் , இரண்டாம் வேற்றுமைக்குத் திரிபோதிய விடத்துத் ( தொல் . எழுத்து . 158.) தன்னின முடித்தலாற் கொள்ளப்படுவது . ` பாதாளம் ஏழுருவப் பாய்ந்த பாதர் ` என்பதனோடு , ` பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் ` ( தி .12 திருவாசகம் , திருவெம்பாவை . 10) என்றருளிச்செய்ததனை நோக்குக . ஏதம் - துன்பம் ; அடியார்களிடத்துத் துன்பம் உண்டாகாதவாறு துணையாய் நின்றபாதத்தை உடையவர் என்க . இறைவனது ஒரு திருவருளே மறைப்பதாயும் , அருளலாயும் நிற்கும் . அவற்றுள் மறைப்பதாகிய மறக்கருணை ` திரோதான சத்தி ` என்றும் , அருளலாகிய அறக்கருணை ` அருட்சத்தி ` என்றும் சொல்லப்படும் . அவ்விரண்டனுள் உலகத்தை அதனொடு கலந்து நின்று தோற்றி நிறுத்தி ஒடுக்குதலாகிய தொழிலைச் செய்வது திரோதான சத்தி ஒன்றேயாதல்பற்றி ` ஏழுலகுமாய் நின்ற ஏக பாதர் ` என்றருளிச்செய்தார் ; மாகேசுர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் , ` ஏகபாதர் ` என்ற மூர்த்தம் இந் நிலையையே குறித்துநிற்றல் அறிக . ஓதம் - ( கடலின் ) அலைகள் . ஊர் உண்டு - ஊர்களை விழுங்கி ; நிலத்தை அழித்து . ஏறி - மீதூர்ந்து . ஒத்து - ஒன்றாய்க் கலந்து ; கோத்து , ` மடங்கி ` என்பதனை , ` மடங்க ` எனத்திரித்து , ` ஒத்து ` என்பதன்பின் கூட்டுக . வேதத்தை வீணையிலிட்டு வாசித்துக் கேட்டு அமைதி யோடிருப்பார் என்க . உலகமெல்லாம் ஒடுங்கியபின்னர் ஒடுங்காது இன்புற்றிருப்பவர் இவர் ஒருவரே என்றபடி . எனவே , மீள உலகம் தோன்றுங்கால் இவரிடத்திருந்தே தோன்றும் என்பதும் , அதனால் உலகிற்கு முதல்வர் இவரே என்பதும் தாமே பெறப்பட்டுக் கிடந்தன ; இதனையே , ` ஒடுங்கிமலத் துளதாம் ; அந்தம் ஆதி என்மனார் புலவர் ` ( சிவஞானபோதம் . சூத்திரம் . 1.) என்று வரையறையாக அருளிப் போந்தார் , மெய்கண்ட தேவ நாயனார் என்க . இத்திருப்பாடல் பெரும் பான்மையும் திருவடிப் பெருமையையே அருளிச்செய்தவாறாதல் உணர்க .

பண் :

பாடல் எண் : 3

நென்னலையோர் ஓடேந்திப் பிச்சைக் கென்று
வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி யாடும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

மெல்லிய தனங்களை உடைய மகளிர் கூடி விரும்பி விளையாடும் வெண்காடு மேவிய விகிர்தனார் நேற்று ஒரு மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை பெறுவதற்காக வந்தாராக ` இதோ வந்துவிட்டேன் ` என்று வீட்டிற்குள் புகுந்து உணவுடன் நான் மீண்டுவர நின்ற இடத்திலேயே நின்று கொண்டு யான் இடவந்த பிச்சையை ஏற்காமல் பக்கத்தில் வருபவரைப் போல என்னைக் கூர்ந்து நோக்கினார் . ` உம் மன நிலை எவ்வாறு இருக்கிறது ? உம்முடைய ஊர் யாது ?` என்று வினவிய எனக்கு மறுமாற்றம் தாராமலே நின்று பின் சென்று விட்டார் ?

குறிப்புரை :

நென்னல் - நேற்று . ஐ சாரியை . ` வந்தேன் ` என்றது , விரைவுபற்றி எதிர்காலத்தை இறந்த காலமாகக் கூறிய வழுவமைதி . நென்னற் கதையாகலின் , ` நிற்கின்றாரும் , கொள்ளாரும் நோக்கு கின்றாரும் , சொல்லமாட்டாருமாயினார் ` என உரைக்க . இவ்வாறெல்லாம் செய்தது , அவளை மெய் தீண்டும் குறிப்புத்தோன்ற . அக்குறிப் புணர்ந்தே அவள் , அவரது நிலைமை முதலியவற்றை வினவினாள் . அவற்றை அவர் அன்று ஒன்றாகச் சொல்லாது பலவாறு சொல்லினமையால் பிற்றைநாள் , ` அவரை எவ்வாறு உணர்ந்து அடைவேன் ` என அவள் கவன்றாள் . இதன் உண்மைப்பொருள் , சத்திநிபாதவகையினால் கேள்வியுணர்வை எய்தி , சிந்தனை உணர்வில் தலைப்பட்ட அடியவரது நிலையென்க . ` விரும்பி ஆடும் விகிர்தனார் ` என்க . ஆடுதல் , காதல் மிகப்பெற்றதனால் அவரது புகழைப் பாடி ஆடுதல் ; அதற்கு ஏதுவான விகிர்தர் என்றதாம் . இனி , ` ஆடும் வெண்காடு ` என முடித்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 4

ஆகத் துமையடக்கி யாறு சூடி
ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

பார்வதியைப் பாகமாகக் கொண்டு கங்கையைத் தலையில் சூடி ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் காளையை இவர்ந்து சிவபோகத்தை நுகரும் பூதங்கள் பலவும் தம்மைச் சூழப் புலித்தோலை உடுத்து இல்லத்துப்புகுந்து நின்ற அவருக்கு உணவு வழங்க வந்த என்னை உள்ளத்தால் பற்றிக் கூர்ந்து நோக்கி என் அடக்கம் என்ற பண்பினை அழித்துத் தீ வினையை உடைய என் வளைகளை , மேக மண்டலத்தை அளாவிய சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனார் கவர்ந்து சென்றுவிட்டார் .

குறிப்புரை :

` உமை ` என்ற உயர்திணைப் பெயரிடத்து இரண்டனுருபு தொகுத்தலாயிற்று . போகம் - சிவபோகம் . ` உடைத்தாய் ` என்பது , ` பூதம் ` என்னும் அஃறிணை இயற்பெயரொடு பன்மை யொருமைமயக்கமாய் இயைந்தது . ` சூழ ` என்ற குறிப்பால் , ` பூதம் ` என்பது பன்மைப் பெயராயிற்று . பாகு - பாகம் ; அடிசில் . ` பற்றி ` என்றது , உள்ளத்தால் பற்றியதனை . பரிசு - அவள் தன்மை ; நிறை ; பசு போதம் என்பது , உண்மைப் பொருள் . ` பாவியேனைப் பரிசழித்து ` எனக் கூட்டுக . பாவியேனை - அவரை உள்ளத்துட்கொள்ளாத என்னை ; இனி , ` அவரை அணையும் விதி இல்லாத தீவினையேனை ` என்றுரைப்பினுமாம் . மேக முகில் - நீரைப் பொழிகின்ற முகில் .

பண் :

பாடல் எண் : 5

கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல
உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணாற்
கண்ணுள்ளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

மிக்க ஒளியை உடைய குழைகளை அணிந்த , பருத்துக் குறிய வடிவுடைய பூதங்கள் கொடுகொட்டி என்ற பறையை இசைத்துக் கூத்தாடிப்பாட , என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு போவாரைப் போல என்னைச் சுற்றி வருகிறார் . நான் அவரை உள்ளவாறு அறிய இயலாதேனாய்த் திரும்பினேன் . என்னை நேரில் பாராதவரைப் போல அரைக்கண்ணால் பார்க்கிறார் . கண்ணுக்கு அகப் படுபவரைப் போலக் காட்டி மறைந்து நிற்கிறார் . அவர் கங்கையைச் சடையில் கொண்டவர் . வேதம் ஓதிய நாவினை உடையவராய் வெண்காடு மேவிய விகிர்தனார் ஆவர் .

குறிப்புரை :

கொள்ளை - மிகுதி ; அது மிக்க ஒளியைக் குறித்தது . ` குண்டை ` என்பதில் ஐ சாரியை . ` பெருவயிறு ` என்பது பொருள் . ` கவர்ந்திட்டு உழிதருவர் ` என இயையும் . உழிதருவர் . ( போகாது ) சுழல்வர் . தெரியமாட்டாமை , அவரது கருத்துணரமாட்டாமை . ` மாட்டேனாய் ` என்க . கள்ள விழி - மறைத்து நோக்கும் கண் . காணாக் கண் - பாராததுபோலப் பார்க்கும் பார்வை ; இது , ` கள்ளவிழி ` என முன் வந்ததனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது . கண்ணால் - கண்ணோடு . கண் உள்ளார் போல் - கண்ணுக்கு அகப்படுவார்போல ; ஏகாரம் தேற்றம் .

பண் :

பாடல் எண் : 6

தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்
சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாரால்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்
கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

காலையும் மாலையும் எப்பொழுதும் மின்னுகின்ற சடைமுடியை உடையவராய் , வேதம் ஓதும் நாவினராய் , வெண்காடு மேவிய விகிர்தனார் , ஏவிப்பணி கொள்ளும் சூலம் மழு என்ற படைகளை ஏந்தியவராய் , ஒளி வீசும் கொன்றைப் பூ மாலையை அணிந்து இருபொருள்படச் சுவையான சொற்களைப் பேசித் தொழுவத்தில் தங்கக் கூடிய வெண்ணிறக் காளையை இவர்ந்து வந்து பிச்சையையும் ஏற்காதவராய்த் தம்மை நோக்கி நிற்பவர் இயல்பினை அழிக்கின்றவர் போல , முப்பட்டைகளாகத் திருநீற்றை அணிந்து எனக்குக் காமத் தீ ஏற்படும் வகையில் பேசி என் உள்ளத்தில் அடக்கத்தை நீக்கி என் வளைகளையும் கவர்ந்து சென்று விட்டார் .

குறிப்புரை :

தொட்டு - ஏவி ; ` படைதொட்டார் ` என்றல் முறை . ` சுவை ` என்பது ஆகுபெயராய் அதனைத் தரும் சொல்லை உணர்த்திப் பின் பன்மை விகுதியேற்றது . ஈண்டுச் ` சுவை ` சொற்சுவை ; அது பொருள் கவர்த்து நிற்றல் . பட்டி - தொழுவம் ; இஃது இன அடை . பரிசு - இயல்பு , ` ஒக்கின்றார் ` என்றது . துணியாமைக்கண் சொல்லியது . கட்டு - பிணிப்பு ; நீங்காது நிற்றல் . கனல் - காமத்தீ ; அதுமூண்டெழ என்க . கருத்து - உள்ளத்து நிறை ; தன்முனைப்பு என்பது உண்மைப் பொருள் . காலை மாலை விட்டு - பொழுது வேறுபாடுகள் இன்றி ; எப்பொழுதும் ; இரவிலும் சடை ஒளிவிடுவதென்றவாறு . ` விட்டு ` என்பது , ` விட ` என்பதன் திரிபு . இனி , ` காலையும் மாலையும் எப்பொழுதும் விட்டு விளங்குகின்ற ( மின்னுகின்ற ) சடை என்று உரைப்பினும் , அமையும் .

பண் :

பாடல் எண் : 7

பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்
கோணாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய்
உண்பதுவும் நஞ்சன்றேல் ஓவியுண்ணார்
பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப்
பாலைப் பரிசழியப் பேசு கின்றார்
விண்பால் மதிசூடி வேதம் ஓதி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

நங்காய் ! வானத்தில் இயங்கும் பிறையைச் சூடி , வேதம் ஓதி , வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியைப் பாகமாகக் கொண்டு , பெண்கள் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொடிய பாம்புகளைப் பூண்டு நான் வெட்கப் படும்படியாக என்னை நலம் பாராட்டுவார் . உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவருடைய செயல்கள் ஒவ்வா . அவர் விடம் ஒன்றே உண்பார் . அன்றேல் கஞ்சத்தனத்தால் உண்பதனை விடுத்து உண்ணாதே இருப்பார் . அழகாக விரிந்த சடையுடையவர் . என்னை நெருங்கி வந்து கூர்ந்து பார்த்துப் பாலினும் இனிமையாக என்னிடம் பேசுகின்றார் .

குறிப்புரை :

` ஒருபாகம் பெண்பால் ; வாழ்வது பேணா வாழ்க்கை ; பூண்பனவும்கோணாகம் ` என்க . ` வாழ்வது ` என்பதுசொல்லெச்சம் . பேணாவாழ்க்கை - ஒருவரும் விரும்பாத வாழ்க்கை ; பிச்சை யூண்வாழ்க்கை . கோணாகம் . ` கோண் ( வளைந்த )+ நாகம் ` எனவும் , ` கோள் ( கொடுமையுடைய )+ நாகம் ` எனவும் ஆம் . நாண் ஆம் சொல் - நாணம் மிகுதற்கு ஏதுவாய சொல் ; அவை நலம் பாராட்டல் முதலியன . உண்மைப் பொருளில் , ஆன்மாவின் தன்னியல்பு பொதுவியல்புகளை இனிதுணர்த்தித் தன்முனைப்பை அகற்றுதலாகக் கொள்க . ` உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவர் செயல்கள் ஒவ்வா ; என்னையெனின் , ` உண்பதுவும் நஞ்சு ; அன்றேல் யாதொன்றையும் உண்ணுதலை யொழித்து உண்ணாதே யிருப்பார் ` என்க . தலைவி தோழியை , ` நங்காய் ` என விளித்தாள் . ` அன்றேல் ` என்பது விகற்பித்தற்கண் வந்தது . ஓவி - ஒழித்து . ` ஓபி ` என்பது பிழைபட்டபாடம் . ` நஞ்சென்றால் ` என்பதும் , ` ஒப்பி ` என்பதும் பாடம் . பண்பு , ஈண்டு அழகு . ` அவிர்சடையர் ` என்பதும்பாடம் . பாலைப் பரிசு அழிய - பகுப்பு ( வேற்றுமை ) த் தன்மை நீங்க ; ஒற்றுமை கொண்டாடி - ஐ சாரியை .

பண் :

பாடல் எண் : 8

மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்
சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்
தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்
கருதுங்கொல் எம்பெருமான் செய்குற்றேவல்
என்பார்க்கு வேண்டும் வரங்கொ டுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்ணிறக் காளையை இவர்ந்து வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியிடம் அவள் ஊடலைப் போக்கும் சொற்களைப் பேசுபவராய்த் தேவர்களும் திருமாலும் பிரமனும் கூடி வேத வாக்கியங்களால் துதித்து அபிடேகம் செய்து தோத்திரங்கள் பலவற்றைச் சொல்லி நறுமணப் பொருள்களைப் புகைத்து , ` எம்பெருமான் யாங்கள் செய்யும் குற்றேவல்களை மனத்துக் கொள்வாரோ ` என்று வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தமக்கு வேறுபட்ட செயல்கள் உளவாகக் கொண்டு அவற்றிற்காக இடம் பெயர்ந்து செல்வர் .

குறிப்புரை :

மருதங்களா ( க ) - மருதத் திணைச்சொற்களாக ; மனைவி உயர்வும் கிழவோன் பணிவுமாக ( தொல் . பொருள் . 223.) ` மங்கையோடு ` ` மருதங்களா மொழிவர் ` என மாறிக்கூட்டுக . இது புலவிக்காலத்தென்க . சுருதம் - கேள்வி ; மந்திரம் . அதுவும் , இறைவனது பெருமையுணர்த்துவதே யாதல்பற்றி , ` துதித்து ` என்று அருளிச் செய்தார் . கருதுதல் - பொருளாகக் கொள்ளல் , ` யாம் ` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து , ` யாம் செய்யும் குற்றேவலை எம் பெருமான் கருதுங்கொல் ` என்று இயைக்க . விகிர்தங்கள் ஆ - வேறுபட்ட செயல்கள் உளவாக ; நடப்பர் - ஒழுகுவர் . எதுகை இன்மையின் , ` விருதங்களா நடப்பர் ` என்பதே பாடம் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
காணார் பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
உலகுக் கொருவிளக்காய் நின்றான் தன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங்கொ டுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்காடு மேவிய விகிர்தனார் , கருடனை உடைய திருமாலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் கீழும் மேலும் தேடிச் சென்றும் காண இயலாதவராய்ப் பொறிகளை வெளிப்படுத்தும் அழற்பிழம்பாய் நின்றவராய் எல்லாப் பொருள்களின் உள்ளிடத்தும் இருப்பவராய் , அடியார்கள் விரும்பும் பல உருவங்களையும் உடையவராய்த் தேன் நிறைந்த கொன்றைப்பூவை அருச்சித்து நீங்காமல் நன்னெறியில் நின்று தவம் செய்த ஐராவதம் என்ற வெள்ளானைக்கு அது வேண்டிய வரங்களைக் கொடுப்பவர் ஆவர் .

குறிப்புரை :

புள்ளான் - கருடக்கொடியை உடையவன் ; திருமால் . ` மண் , விண் ` என்பன வருவித்து , ` மண்புக்கும் , விண் போந்தும் ` என உரைக்க . உள்ளான் - எல்லாப் பொருள்களின் உள்ளிடத்துமிருப்பவன் ; அந்தரியாமி . ஒன்றல்லா உரு , இரண்டாகிய ( அம்மையும் அப்பனுமாகிய ) வடிவம் . விளக்குப் போல விளக்கி நிற்றலின் , ` விளக்கு ` என்றருளினார் . சிறப்புப் பற்றிக்கொன்றை மலரையே எடுத்தோதினார் . காலை - காலம் . வெள்ளானை - ஐராவதம் ; இது கீழ்த்திசைக்கு உரியதாய் இந்திரனுக்கு ஊர்தியாகும் . இத்தலத்தில் ஐராவதம் இறைவனை வழிபட்டுத் துன்பம் நீங்கப்பெற்றமையை , கந்த புராணம் அமரர் சிறைபுகு படலத்துட் காண்க .

பண் :

பாடல் எண் : 10

மாக்குன் றெடுத்தோன்தன் மைந்த னாகி
மாவேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் தன்னைக்
காக்குங் கடலிலங்கைக் கோமான் தன்னைக்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி
வீக்கந் தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்காடு மேவிய விகிர்தனார் கோவர்த்தனத்தைக் குடையாக உயர்த்திய கண்ணனாகிய திருமாலின் மகனாய்க் கரும்பையே வில்லாகக் கொண்ட மன்மதனுக்குத் துணையாக வந்த தேவர்களெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற போதே ஒரே நொடி நேரத்தில் அவன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் நோக்கியவர் . கடலே அரணாகப் பாதுகாக்கப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய ஒளிவீசும் மகுடம் தாங்கிய தலைகளும் கண்களும் நசுங்கி வெளிப்புறம் தோன்றுமாறு தம் திருவடி விரலை ஊன்றி அவனுடைய செருக்கினை அடக்கியவர் ஆவர் .

குறிப்புரை :

குன்றெடுத்தோன், கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தியவன்; திருமால். வேழம் - கரும்பு. நோக்கும் - அவன் வெற்றியை எதிர்நோக்கும். துணைத் தேவர்-துணையாகப் பின்வந்த பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள். `அவர்கள்யாதும் செய்ய மாட்டாதவராய் ஒழியக் காமனை நெற்றிக்கண்ணால் நொடியில் எரித்தொழித்தான்` என இறைவனது பேராற்றலை வியந்தருளிச் செய்தவாறு. `விழித்து ஆன் தன்னை` எனப்பிரிக்க. ஆன் - அவ்விடத்து. தன்னை - அவனை (காமனை). `விழித்தான் - விழிக்கப் பட்டான்` என்றுரைத்தலுமாம். `காக்கும்` என்னும் பெயரெச்சம். `விரலார்` என்பதனோடு முடிந்தது. இறைவன் காமனை எரித்துப் பின்னர் அவன் மனைவியாகிய இரதி வேண்ட உயிர்ப்பித்தருளினமை அறிக. வீக்கம்-(செருக்கின்) மிகுதி போலும், அசைநிலை.
சிற்பி