திருப்பூந்துருத்தி


பண் :

பாடல் எண் : 1

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
காணா தனவெல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் இருத்தி, அவனை நினையாத என் மனத்தை அவனை நினைக்கச் செய்து, அரும் பேருண்மைகளை எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, என்னை அடிமையாகக் கொண்டு, கொடிய சூலை நோயைத் தீர்த்து எனக்குக் காணாதன எல்லாம் காட்டிய தூயோனாகிய புண்ணியனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.

குறிப்புரை :

நில்லாத நீர் - உறைந்து நில்லாது ஒழுகும் தன்மைத் தாய நீர்; `அதனைத் தலையிலே நிறுத்திய வல்லாளனாகிய அவனுக்கே நின்று நினைக்குந் தன்மையில்லாது அலமந்து திரியும் தன்மைத்தாகிய என் நெஞ்சினை நினைவித்தல் கூடுவதாயிற்று` என்பது, உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. கல்லாதன - திருவருள் வாயாதவர்க்குச்செய்ய வாராதன; அவை, அவன் கோயில்புக்குப் புலர்வதன்முன் அலகிடல், மெழுக்கிடல் முதற்பலவாய தொண்டுகள்; அவற்றை, சுவாமிகளது அருட்டிருமொழிகளாலும், அருள் வரலாற்றாலும் அறிந்துகொள்க. காணாதன - எங்கும் யாரும் கண்டறியாதன; அவை, வெய்ய நீற்றறையது தான் ஐயர் திருவடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததும், வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாய தும், பொங்கு கடற் கல்மிதந்ததும் போல்வன. சொல்லாதன - மறை பொருள்கள்; அவை, `நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்` என்றற் றொடக்கத்து அரும்பேருண்மைகள். `என்னை` என்பதனை, `எனக்கு ` எனத்திரித்து, `எனக்குச் சொல்லி` என மாறிக் கூட்டுக. சொல்லி - தமக்கையார் வாயிலாகத் தெரிவித்து. தொடர்ந்து - இடையறாது அருள்பண்ணி. `என் பொல்லாநோய்` என இயையும்; அது, `கொல்லாது குடர் முடக்கி நின்ற சூலைநோய்` என்பது வெளிப்படை. `பூந்துருத்தி கண்டேன்` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 2

குற்றாலங் கோகரணம் மேவி னானைக்
கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை
உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை
யுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப்
பற்றாலின் கீழங் கிருந்தான் தன்னைப்
பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்
புற்றா டரவார்த்த புநிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

குற்றாலம் கோகரணம் இவற்றை விரும்பி உறைந்து கொடிய செயலை உடைய கடியவனாகிய கூற்றுவனை ஒறுத்து, ஆலகால விடத்தை உண்டு கழுத்தில் இருத்தி, உணராத என் நெஞ்சத்தில் அரும் பேருண்மைகளை உணர்வித்து, கல்லால மரத்தின் கீழ் அதனைச் சார்பாகக் கொண்டிருந்து, பண் நிறைந்த வீணையை வாசித்து, புற்றிலிருக்கும் படம் எடுத்தாடும் பாம்பினை இறுக அணிந்த தூயோனாகிய புண்ணியனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

குற்றாலம், பாண்டிநாட்டுத் தலம். கோகரணம், துளுவ நாட்டுத் தலம். `கொடுங் கை` என்பதில், கை - செய்கை. உற்று - (மனம்) பொருந்தி. `நஞ்சினை உற்று உண்டு ஒடுக்கினானை` எனக் கூட்டுக. `பற்று` என்புழி, `ஆக` என்பது வருவிக்க. அங்கு, அசை நிலை.

பண் :

பாடல் எண் : 3

எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை
யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை
மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்
நில்லானை நின்றியூர் மேயான் தன்னைத்
தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட
சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

ஏகம்பம் நின்றியூர் இவற்றில் தங்குபவனாய், எனக்கு என்றும் இனிய எம் தலைவனாய், மனத்தில் என்றும் இருப்பவனாய், வஞ்சகர் நெஞ்சில் நில்லாதவனாய், என்னைத் தனக்கு என்றும் ஆளாகக் கொண்டு நன்மை செய்கின்றவனாய், சங்கினால் ஆகிய நீண்ட காதணியை உடையவனாய் மேட்டு நிலத்தில் வளரும் கொன்றைப் பூமாலை அணிந்த தூயோனாகிய, பாசம் இல்லாதவனை, யான் பூந்துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

`மனத்துக்கண்` என்னும் பொருட்டாகிய `மனத்துக்கு` என்பதில், அத்துத் தொகுத்தலாயிற்று. நின்றியூர், சோழநாட்டுத் தலம். புனம் - முல்லை நிலம். `பொய் ` என்றது, பாசத்தை.

பண் :

பாடல் எண் : 4

வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை
வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை
அறியா தடியே னகப்பட் டேனை
அல்லற்கடல் நின்று மேற வாங்கி
நெறிதா னிதுவென்று காட்டி னானை
நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்
பொறியா டரவார்த்த புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மணம் கமழும் கொன்றைப் பூச் சூடி, ஐராவதம் வழிபட்ட வெண்காட்டில் உறைவானாய், அறியாத புறச்சமயத்தில் அகப்பட்ட என்னை அத்துயரக்கடலில் மூழ்காதபடி தூக்கி எடுத்து, இது தான் நேரிய வழி என்று காட்டி, நாடோறும் என்னை வருத்தும் பிணிகளைத் தீர்த்து, புள்ளிகளை உடைய ஆடும்பாம்பினை இறுகக் கட்டிய தூயோனாகிய பாசம் அற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

வெறி - வாசனை. வெள்ளானை, இந்திரனுக்கு உரிய `ஐராவதம்` என்னும் யானை. இது திருவெண்காட்டிற் பூசித்தமை மேலே காட்டப்பட்டது, (ப.35 பா.9) `அல்லற் கடல்` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, `அகப்பட்டேனை` என்றருளினார். `அடியேன் அகப்பட்டேனை` என்பதனை, `அகப்பட்ட அடியேனை` என மாற்றியுரைக்க. நிச்சல் - நித்தல். பொறி - புள்ளி.

பண் :

பாடல் எண் : 5

மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை
விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி
நக்கானை நான்மறைகள் பாடி னானை
நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானைத் தண்டா மரைமே லண்ணல்
தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம்
புக்கானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

எல்லாரினும் மேம்பட்டவனாய், வெண்ணீறு பூசி, பகைவரின் மும்மதில்களையும் அழித்து, அவற்றின் அழிவுகண்டு சிரித்து, நான்கு வேதங்களையும் ஓதித் தக்கோர்களால் விரும்பி முன்னின்று துதிக்கப்படுபவனாய், பிரமன் மண்டை ஓட்டைச் சுமந்து ஒரு கணநேரத்தில் உலகமெல்லாம் சுற்றித் திரியும் புண்ணியனாய்த் தூயனாய்ப் பாசம் அற்றவனாயுள்ள எம்பெருமானைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.

குறிப்புரை :

மிக்கான் - உயர்ந்தோன். சண்ணித்தான் - பூசினான். மாத்திரைக்கண் - நொடி நேரத்தில்; `மாத்திரைக்குள்` என்பதும் பாடம். உலகமெல்லாம் புக்கது, இரத்த பிச்சை யேற்றற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 6

ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா
அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப்
பூத்தானத் தான் முடியைப் பொருந்தா வண்ணம்
புணர்ந்தானைப் பூங்கணையா னுடலம் வேவப்
பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை
படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை
போர்த்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

வாசுகி என்ற பாம்பினையே வில்லுக்கு நாணாகக் கட்டியும், இடையிலே கச்சாக அணிந்தும் இருப்பவனாய், பொன் போன்ற உடம்பும் தாமரையாகிய இருப்பிடமும் உடைய பிரமனுடைய தலை ஒன்றனை அவன் உடலில் பொருந்தாதபடி நீக்கியவனாய், மன்மதன் உடல் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய்ப் பின் அவனிடம் அருள் கூர்ந்தவனாய், கங்கையைச் சடை மீது தரித்தவனாய், யானை நடுங்க அதன் தோலை உரித்துப் போர்த்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன்.

குறிப்புரை :

ஆர்த்தான் - கட்டினான். `கச்சா ஆர்த்தான்` எனக் கூட்டுக. அசைத்தான் - ஆட்டினான், ஆட்டியதும் வாசுகியையே என்க. பூத்தானத்தான் - பூவை உறைவிடமாகக் கொண்டவன்; பிரமன். புணர்ந்தான் - நெருங்கிச் சென்றான்; `சென்று கிள்ளினான்` என்றபடி. `புணர்த்தான்` என்னும் பாடத்திற்கு, `பொருந்தி நில்லாமைக்கு ஏதுவாகிய செயலைச் செய்தான்` என உரைக்க. பரிந்தான் - (பின்னர்) அருள்கூர்ந்தான்; உயிர்ப்பித்தான். `யானை பதைப்ப அதனை உரித்துப் போர்த்தான்` என்க.

பண் :

பாடல் எண் : 7

எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி
யுமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்
திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பகைவர் முப்புரங்களையும் இமைகொட்டும் நேரத்திற்குள் பொடியாகுமாறு எரித்து, மத யானையைப் பற்றித் தன் அழகிய கைகளால் தோலை உரித்து, உமாதேவி அது கண்டு அஞ்ச, அவள் அச்சத்தைப் பார்த்து, சிரித்துச் சடையில் பிறையும் பாம்பும் கங்கையும் சூடிப் பூதகணங்கள் சூழ இருக்கும் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் இல்லாதவனான பெருமானை யான் பூந் துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

`பொடியாக எரித்தானை` எனவும், `கையாற் பற்றி உரித்தானை` எனவும் இயையும். சிரிப்பு, அவள் பேதைமை பற்றி வந்தது. `நீரும்` என்புழி, `வைத்து` என்பது வருவிக்க. புரித்தான் - புரியாகத் திரித்தான்.

பண் :

பாடல் எண் : 8

வைத்தானை வானோ ருலக மெல்லாம்
வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை
விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக
உய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி
யொளித்தானை யொருபாகத் துமையோ டாங்கே
பொய்த்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

வானோர் உலகமெல்லாம் படைத்தவனாய், அத்தேவர்கள் வந்து வணங்கி மலர்கொண்டு நின்று துதிக்கும் உலக காரணனாய், அடியவர்கள் விரும்பியதை அளிப்பவனாய், இந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கியவனாய், கங்கையைச் சடையில் மறைத்துப் பாதி உருவாய் உள்ள பார்வதிக்குப் புலப்படாதவாறு செய்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாயுள்ள பாசமற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

`வானோர் உலகமெல்லாம்` என்பது தாப்பிசையாய், முன்னரும் சென்றியையும். வித்தான் - காரணன்; முதல்வன். உய்த்தான் - ஓட்டினான். ஒலிகங்கை, வினைத்தொகை.
ஆங்கே - அவ்வொருகூற்றிடத்தே. உமையோடு பொய்த்தது, `நின்னையன்றிப் பிறள் ஒருத்தியையும் யான் கண்டிலேன்` என்று கங்கையைக் கரந்தமையை மறைத்தது; இஃது, `அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப` என்றவாறு வரும் (தொல். பொருள். 218.) அகப் பாட்டு வழக்குப்பற்றி அருளிச்செய்தது.

பண் :

பாடல் எண் : 9

ஆண்டானை வானோ ருலக மெல்லாம்
அந்நா ளறியாத தக்கன் வேள்வி
மீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி
விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேட
நீண்டானை நெருப்புருவ மானான் தன்னை
நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்
பூண்டானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

தேவருலகமெல்லாம் ஆண்டவனாய், ஒரு காலத்தில் தக்கன் வேள்வியில் தொடர்பு கொண்டு தன்னால் தண்டிக்கப்பட்ட தேவர்களோடும் திரும்பியவனாய், தாமரையில் உள்ள பிரமனும் திருமாலும் தேடுமாறு தீப்பிழம்பாக நின்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீப்பற்றி அழியுமாறு வில்லைப் பூண்டவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய் உள்ள பாசம் அற்றவனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.

குறிப்புரை :

`வானோர் உலகமெல்லாம் ஆண்டானை` எனவும், `கூடி மீண்டானை` எனவும் இயைக்க. அறியாத - அறிய வேண்டுவதனை அறியாத. `வேள்வி` என்புழி, நீக்கப் பொருளில் வந்த இன்னுருபு விரிக்க. தக்கன் வேள்வியினின்றும் விண்ணவர்கள் உடன் கூடி மீண்டது. அவர்களை உயிர்ப்பித்த பின்னர் என்க. `நீண்டானை` என்பதன்பின், `ஆங்கு` என்பது வருவிக்க. `மாலும் தேர` என்பதும் பாடம். நிலை இலார் - உள்ளம் ஒருநெறியில் நிலை பெறுதல் இல்லாதவர்; `புத்தன் போதனையால், சிவநெறியைக் கைவிட்டவர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 10

மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை
மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
யெண்டிசைக்கும் கண்ணானான் சிரமே லொன்றை
அறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

நந்தி பெருமான் அறிவுரையை அலட்சியம் செய்து தன் கைகளைக் கோத்துக் கயிலை மலையை எடுத்த இராவணனைப் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு காலால் அழுத்தியவனாய்ப்பின் அவன் பாடிய ஏழுநரம்பின் ஓசையைக் கேட்டு அவனுக்கு அருள் செய்தவனாய், எட்டுக் கண்களை உடைய பிரமனின் மேல்தலையாகிய ஐந்தாம் தலையை அறுத்தவனாய்த் தேவர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், எவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருத்தியவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன்.

குறிப்புரை :

மறுத்தது, நந்திபெருமான் அறிவுரையை. `மறுத்து மலையைக் கையாற்கோத்து எடுத்தான்` என உரைக்க. இறுத்தான் - சிதைத்தான். `பின்பு அவன் இசை கேட்டானை` என உரைக்க. `திசைக்கும்` என்பதனை, `திசைக்கணும்` எனத் திரிக்க. எட்டுக்கண் உடையவன் பிரமன். `கண்ணானை` என்பதும் பாடம். சிரமேல் ஒன்றை - சிரங்களில் மேல் இருந்த ஒன்றை. பொறுத்தான் - (மிடற்றில்) தாங்கினான்.
சிற்பி