திருச்சோற்றுத்துறை


பண் :

பாடல் எண் : 1

மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

காலத்தால் எல்லாருக்கும் முற்பட்டவனே ! முறையாக எல்லா உலகையும் படைக்கின்றவனே ! ஏழுலகும் தாங்கு கின்றவனே ! இன்பம் தருபவனாய்த் துன்பங்களைப் போக்கு கின்றவனே ! முன்னே காத்தமை போல எப்பொழுதும் எல்லோரையும் காக்கின்றவனே ! தீவினையை உடைய அடியேனுடைய தீவினையை நீக்கியவனே ! திருச்சோற்றுத்துறையிலுள்ள விளங்கும் ஒளியை உடைய சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

மூத்தவன் - காலத்தால் எல்லார்க்கும் முன்னர் உள்ளவன் . முறைமையால் - ஊழின்படி . ` ஏந்து ` என்பது வலிந்து நின்றது . ஏந்து அவன் - எல்லாவற்றையும் தாங்குகின்ற அத் தன்மையன் . இயல்பாகவேகொண்டு , ` யாவரும் ஏத்துதற்குரிய அத்தன்மையனாய் ` என்றுரைத்தலுமாம் . காத்தவனாய் - முன்னே காத்தவனும் தானாய் . காண்கின்றான் - ( பின்னும் ) காக்கின்றான் . கண்டு - திருவுள்ளத்திற் குறித்து . ` நான் உன் அபயம் ` என்க . அபயம் - பயம் இன்மை ; என்றது , ` பயம் இன்மை உளதாமாறு காத்தற்குரிய பொருள் ; அடைக்கலப் பொருள் ` என்றவாறு .

பண் :

பாடல் எண் : 2

தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே
நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட
கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த
சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

உலகத் தலைவனே ! தத்துவனே ! அடியார்க்கு அமுதே ! நிலைபேறுடையவனே ! ஒப்பற்றவனே ! அறிவில்லாத கூற்றுவனை வெகுண்டு உதைத்துத் தண்டித்தவனே ! யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய கஜசம்கார மூர்த்தியே ! கொடிகள் உயர்த்தப்பட்ட மும்மதில்களையும் அழித்த வில்லை உடையவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

` தலையவன் ` என்பதில் தலை , ` தலைமை ` என்னும் பண்பு குறித்தது . அகரம் சாரியை . தத்துவன் - முதற்பொருளானவன் . நிலையவன் - அழிவில்லாதவன் . நின்று உணரா - மனம் ஒருங்கி ஆராயாத , தோலை மேல் இட்ட ( போர்த்த ) என்க . கூற்றுவன் என்றது , யானைக்குக் கூற்றுவனாயினமையை .

பண் :

பாடல் எண் : 3

முற்றாத பான்மதியஞ் சூடி னானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே
உற்றாரென் றொருவரையு மில்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங்
கற்றானே யெல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

வெள்ளிய பிறை மதி சூடியே ! முளைத்து வெளிப்பட்ட கற்பகத் தளிர் ஒப்பவனே ! தனக்கென வேண்டியவர் யாரும் இல்லாதானே ! உலகைப் பாதுகாக்கும் சுடரே ! எல்லாக் கலைஞானமும் ஒதாதுணர்ந்து வேதம் ஓதுபவனே ! ஒன்றும் கல்லாத அடியேனுடைய தீவினையும் அதனால் விளையும் நோயும் நீங்குமாறு அவற்றை அழித்தவனே ! திருச்சோற்றுத் துறையுள் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

உற்றார் - பிறப்பால் வரும் உறவு முறையினர் ; அன்னார் ஒருவரையும் இல்லாதான் என்றது , ` பிறவியை ஒரு ஞான்றும் அடைந்தறியாதவன் ` என்றவாறு . ` கற்றான் ` என்பதுபற்றி மேலே ( ப .1. பா .2.) குறித்தாம் . ` எல்லாக் கலைஞானமும் ` என்னும் உம்மையை எச்சப்படுத்தாது முற்றாகவே கொண்டு , ` எந்தக் கலை ஞானமும் கல்லாதேன் ` என்பது பொருளாக உரைக்க . தீவினை நோய் - தீவினையால் வந்த நோய் ; சூலைநோய் .

பண் :

பாடல் எண் : 4

கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே
காலங்க ளூழிகண் டிருக்கின் றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே
வேதனாய் வேதம் விரித்திட் டானே
எண்ணவனா யெண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

பற்றுக் கோடாய் இருந்து உலகைக் காப்பவனே ! பல ஊழிகளையும் கண்ட , காலம் கடந்த பெருமானே ! தேவனாய்த் தேவர்களுக்கும் மற்றை உயிர்களுக்கும் அருள் செய்பவனே ! வேத வடிவினனாய் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே ! எங்கள் உள்ளத்தில் இருப்பவனாய்ப் பகைவருடைய மும்மதிலும் இமை கொட்டும் நேரத்தில் தீக்கு இரையாகுமாறு அவற்றைக் கண்டு சிரித்த உறுதியுடையவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! யான் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

கண் அவன் - ( உலகிற்கெல்லாம் ) கண்போலும் அத்தன்மையன் . ` காலங்களாய ஊழி ` என விரிக்க . ` விண்ணவர்க்கும் ` என்னும் உம்மை , சிறப்பு ; அதனால் , ` சிவபிரான் விண்ணவனாதல் , ஏனைய விண்ணவர்போல் வினைவயத்தாலன்றித் தன் இச்சையால் ` என்பதுணர்த்தியருளியவாறாம் . ` விரித்திட்டான் ` என்றது , ` செய் திட்டான் ` என்றதாம் . அதனால் , ` வேதன் ` ( வேதத்தை ஓதுபவன் ) என்றது , பிரமன் முதலிய ஏனையோர்போலன்றி , அவரை ஓதுவித்தற் பொருட்டென்பது உணர்த்தியருளியவாறாம் . எண் அவன் - எல்லா வற்றையும் நினைவு மாத்திரையாற் செய்யும் அத் தன்மையன் ; ` காரணமும் காரணங்களைப் படைத்தோரும் கருதினோரும் ஆகிய வர் ` ( காரணம் காரணானாம் தாதா த்யாதா ) என்னும் அதர்வசிகை வாக்கியத்துள் , கருதினோர் என்றதும் இப்பொருட்டு . எண்ணார் - மதியாதவர் . திண்ணவன் - வலியவன் . ` எண்ணவனே ` என்றும் பாடம் உள்ளது .

பண் :

பாடல் எண் : 5

நம்பனே நான்மறைக ளாயி னானே
நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகரு ளானே
கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமை யானே
அடியார்கட் காரமுதே ஆனே றேறுஞ்
செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பப்படுபவனே ! நால் வேத வடிவினனே ! கூத்தாடவல்ல ஞானத் கூத்தனே ! கச்சி ஏகம்பனே ! காவலை உடைய மும்மதில்களும் பொடியாகுமாறு செலுத்திய அம்பினை உடையவனே ! எல்லையற்ற பெருமை உடையவனே ! அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவனே ! காளையை இவரும் பொன்னார் மேனியனே ! திருச்சோற்றுத்துறை உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

ஞானக் கூத்து - மெய்யுணர்வைத் தரும் கூத்து . அது . கட்டு நெகிழப்பெறாதோர்க்கு , ` ஐந்தொழிற்கும் முதல்வன் தானே ` எனப் பொதுவகையானும் , கட்டு நெகிழப்பெற்றோர்க்கு , ` தனது திருவடி இன்பமே இன்பமாவது ` எனச் சிறப்புவகையானும் உணர்த்தும் . அதனை , முறையே , ` தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு ` எனவும் , ` மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார்பரதந் தான் ` எனவும் விளக்கும் உண்மை விளக்க வெண்பா க்களால் (36,37) உணர்க . கம்பன் - ( உமையம்மைக்கு ) நடுக்கத்தை உண்டாக்கியவன் . ` ஏபெற் றாகும் ` ( தொல் . சொல் . 304) என்றாங்கு , ` ஏகல் லடுக்கம் ` ( நற்றிணை - 116.) என்றாற்போல . ` ஏ ` என்பது , பெருக்கம் உணர்த்தி உரிச்சொல்லாய் நிற்குமாதலின் , அவ்வாறு ` கம்பன் ` என்பதனோடு தொடர்ந்து நின்ற பெயரே ` ஏகம்பன் ` என்பது . இனி , அதனை , ` ஒற்றை மாமரத்தின்கீழ் உள்ளவன் ` எனப் பொருள் தரும் , ` ஏகாம்பரன் ` என்பதன் சிதைவாகவும் உரைப்பர் .

பண் :

பாடல் எண் : 6

ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி
யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூல மேந்திப்
பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

உலகமெல்லாம் நீயேயாகிப் பொருந்திக் குறையாது மின்றி நிரம்பியிருப்பவனே ! எல்லையற்ற பெருமை உடையவனே ! உயிர்களிடத்து அருள் மிகுந்தவனே ! குற்றாலத்தை விரும்பிய கூத்தனே ! முத்தலைச் சூலம் ஏந்தி ஊழிவெள்ளங்கள் எல்லாம் மறையுமாறு உலாவுபவனே ! உன்னைப் பெருமான் என்று நினைக்கும் உள்ளங்களில் சேர்ந்தவனே ! திருச்சோற்றுத்துறையில் உள்ள திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

ஆர்ந்தவன் . பொருந்தினவன் . இதனை , ` நீயே யாகி ` என்பதன்பின் கூட்டுக . அமைந்தவன் - குறை யாதுமின்றி நிரம்பி யிருப்பவன் . கூர்ந்தவன் - ( உயிர்களிடத்து அருள் ) மிகுந்தவன் . பேர்ந்தவன் ( பெயர்ந்தவன் ) - உலாவியவன் . பிரளயம் - ஒடுக்கம் . நெஞ்சினை உடையாரது செயல் , நெஞ்சின் மேல் ஏற்றப்பட்டது .

பண் :

பாடல் எண் : 7

வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே
கடிய அரணங்கள் மூன்றட் டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

தேவனாய் வரம் கொடுக்கும் உள்ளத்தானே ! சிந்தாமணியை உடைய தேவர்கள் பெருமானே ! வேடனாய்ப் பன்றிப் பின் சென்றவனே ! கொடிய மும்மதில்களை அழித்தவனே ! குளிர்ந்த கயிலாயத்தை உறைவிடமாக விரும்பி உறைபவனே ! தன்னை ஒப்பார் பிறர் இல்லாத பார்வதிக்கு இனியனே ! திருச்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

வானவன் - தேவன் ` வானவனாய் ` என்னும் எச்சம் , ` மனத்தினான் ` என்னும் வினைக்குறிப்போடு முடியும் . வண்மை மனம் - வரங்கொடுக்கும் உள்ளம் . மாமணி - சிந்தாமணி ; ` வானோர் அதனை உடையராயினும் , உன்னையே அடைவர் என்றபடி . ` வானோர் பெருமானாகிய நீயே உண்மைவானவனாய் நின்றாய் ` என்பது பட . ` நீயே வானவனாய் ` என மேலே கூட்டுக . கானவனாய் ஏனத்தின் பின் சென்றது அருச்சுனனுக்காக . ` வானவர் பெருமான் இது செய்தான் ` என்றது அவனது எளிவரும் பொருளைத் தெற்றென விளக்கும் . ஏனம் - பன்றி . தானவன் - எவற்றையும் கொடுப்பவன் ; சந்திரன் , எனலுமாம் . ` சந்திரன் ` எனல் தட்பமாய அருளுடைமை பற்றி . இனி , ` அவன் ` என்பதனைப் பகுதிப்பொருள் விகுதியாக்கி , ` தன்னிகரின்றித் தானேயாய் ` என்றுரைத்தலுமாம் . தேனவன் - தேன்போல இனிப்பவன் .

பண் :

பாடல் எண் : 8

தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனா யென்னிதயம் மேவி னானே
யீசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

சுதந்திரனாய் , எல்லா உலகங்களும் தானே ஆனவனாய் , மெய்ப்பொருளாய் , அடியார்க்கு அமுதமாய் என்னை அடிமை கொண்டவனாய் , என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , பாச வினைகளைப் போக்கும் தலைவனாய்ப் பார்வதி பாகனாய்த் தேவர்கள் வணங்கும் காவிரியின் தென்கரையிலுள்ள திருத்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

தன்னவன் - தன்வயமுடையவன் ; சுதந்திரன் . என்னவன் - எனக்கு உரியவன் . பொன்னித் தென்னவன் - காவிரியின் தென்கரையில் உள்ளவன் . திருச்சோற்றுத்துறை , காவிரியின் தென்கரையில் இருத்தல் காண்க .

பண் :

பாடல் எண் : 9

எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே
ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே
அறிந்தார்தாம் ஓரிருவ ரறியா வண்ணம்
ஆதியும் அந்தமு மாகி யங்கே
பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம்
பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற்
செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளுக்கும் கண்ணாகி உலகங்களைக் காப்பவனாய் , முன் ஏழ் உலகங்களையும் படைக்கும் முதற் பொருளாய் நின்று , பின் அவற்றை அழித்தவனே ! பிரமனும் திருமாலும் அறியாவண்ணம் ஆதியும் முடிவும் ஆகி அவர்களிலிருந்து வேறு பட்டவனே ! தன்னைத் தலைவன் என்று துதிப்பவர்கள் மனத்தில் மற்றவர் அறியாதபடி பொருந்தியிருப்பவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

எறிந்தான் - அழித்தான் . ` எல்லாம் ` என்புழி , சாரியையும் நான்கனுருபும் தொகுத்தலாயின . ` எறிந்தானே ` முதலிய மூன்றும் , அழித்தல் காத்தல் படைத்தல்களைக் குறித்தனவென்க . அறிந்தார் - ( ஏனைய எல்லாவற்றையும் ) அறிந்தவர் . ` அறிந்தாராகிய இருவர் ` என்க . இருவர் மாலும் அயனும் . ஆதியும் அந்தமும் ஆயது , ஈண்டு , மேற்குறித்த இருவர்க்கும் என்க . பிறிந்தான் - வேறாயினான் ; அவர்கட்கு மேலோனாயினான் . ` ஏத்து நெஞ்சு ` என்பதற்கு , மேல் ` பேசு நெஞ்சு ` ( பா .6.) என்றதற்கு உரைத்தாங்கு உரைக்க .

பண் :

பாடல் எண் : 10

மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை
வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை யன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

நீலகண்டனே ! திருமாலும் மற்றைத் தேவரும் அறியாத சூலபாணியே ! இராவணனுடைய ஒளி வீசும் தலைகளையும் தோள்களையும் கால் விரலால் நசுக்கிய மெய்ப்பொருளே ! அடியவர்கள் விரும்பியவற்றை அருளும் தேவனே ! உயிரினங்களின் வேண்டுகோள்களைக் கேட்டு அவர்களுக்கு அருளும் நடுநிலை யாளனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உனக்கு அடைக்கலம் !

குறிப்புரை :

மை - அஞ்சனம் ; மேகமுமாம் . ` கடிய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் . மெய்யவன் - மெய்ப்பொருளானவன் . செய்யவன் - நடுவுநிலையன் .
சிற்பி