திருவொற்றியூர்


பண் :

பாடல் எண் : 1

வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
ஒற்றியூர் மேய வொளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
கடும்பிணியுஞ் சுடுந்தொழிலுங் கைவிட் டவே.

பொழிப்புரை :

சிவலோகநாதராய ஒற்றியூரில் விரும்பி உறையும் சோதிவடிவினர் , வண்டுகள் மொய்க்கும் செந்தாமரை , கழுநீர் , ஊமத்தை இவற்றை அணிந்த சடை மீது பிறை சூடி , ஆயிரம் தோள்களையும் எட்டுத் திசைகளின் எல்லைகளையும் அவை அடையுமாறு வீசிக்கொண்டு , கூத்தாடி , உலகுக்கு நலன் பயப்பதற்காக விடத்தை உண்டவர் . அவரை அடியேன் கனவில் கண்டேனாக , அவ்வளவில் என் கடிய நோயும் அவை செய்த செயல்களும் நீங்கி விட்டன .

குறிப்புரை :

ஓங்கு - உயரப்பறக்கும் . மல்கும் - நிறைந்த . ` திண்டோள்கள் ஆயிரமும் ` என ஈண்டு அருளிச்செய்தாற் போலவே , ` ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடையானும் ` என முன்பும் ( தி .4. ப .4. பா .8.). அருளிச்செய்தார் . ` உலகுக்கு ஓர் உறுதிவேண்டி நஞ்சு உண்டார் ` என்க . கனவு அகம் - கனவாகிய இடம் . ` ஒளிவண்ணனார் , சூடி , நடமாடி , உண்டார் . அவரைக் கனவகத்திற் கண்டேன் நான் ` என முடிவு செய்க . கடும்பிணி - அவரை முன்னை ஞான்று கண்டதனால் உண்டாகிய காதல்நோய் . ` சுடுந்தொழில் `, அப்பிணியினது என்க . கைவிட்ட - கையகன்றன ; நீங்கின . இத்திருத் தாண்டகத்துள்ளும் அடியின் இறுதிச்சீர்கள் பல கனிச்சீராய் வந்தன .

பண் :

பாடல் எண் : 2

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
பசுவேறி யுழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே.

பொழிப்புரை :

மார்பில் பாம்பு சூடி , வெண்ணிறக் காளையை இவர்ந்து , கங்கையைச் சடையில் ஆரவாரிக்குமாறு சூடிப் பார்வதி பாகராய் , ஆண்மைத் தொழிலராய் , அக்காளையை இவர்ந்தே உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய் , காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணைத் தீப் புறப்பட விழித்த பெருமான் , வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கின்றார் .

குறிப்புரை :

ஆகம் - மார்பு . ஆர்க்க - ஒலிக்க . காமத்து ஆல் ஐங்கணை - காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகள் ; ` ஆல் ` என்பதனை அசைநிலை என்றலுமாம் . ` எரி விழித்த ` என்பதில் , ` எரி ` என்னும் முதனிலை வினை யெச்சப் பொருள் தந்தது ; ` செய்தக்க வல்ல செயக்கெடும் ` ( குறள் . 466.) ஓமத்தால் - ஓமத்தொடு ` ஒற்றியூர் உறைகின்றார் : ஏறி , சூடி , ஆவர் ; யோகிகண் மூன்றினார் ; அவரை யான் அணையுமா றெங்ஙனம் ` என்க . இத்திருத்தாண்டகத்துள் , எதுகை இருவிகற்பமாய் வந்தது .

பண் :

பாடல் எண் : 3

வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்
வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்
கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்
கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

வேதம் ஓதுதல் நீங்காத ஞான ஒளி திகழும் ஒற்றியூரை உடைய தலைவரே , நீர் விரும்பிக் கங்கையைச் சடையில் சூடி , அதன்கண் பிறையையும் பாம்பையும் உடன் வைத்து , காதல் உணர்வாகிய வஞ்சனையை மனத்தில் மறைத்து வைத்திருப்பது காண்பவர்களுக்குப் பெரியதொரு தீங்காய்த் தோன்றுவதாகும் . பகற்பொழுதில் பிச்சை வாங்கவருபவரைப் போல இசையைப் பாடிக் கொண்டு வந்து , பிச்சையையும் ஏலாது , உம்முடைய பாம்பு , பிறை , காளை எழுதிய கொடி இவற்றைக் காணச் செய்து , எம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டீர் . இதனைச் சற்று நினைத்துப் பார்ப்பீராக .

குறிப்புரை :

` தலையை ஆழ்த்தும் வெள்ளத்தைத் தலையில் வைத்ததும் , மதியும் பாம்பும் ஆகிய பகைப்பொருள்களை உடன் சேர வைத்ததும்போல , கரப்பினும் கரவாது வெளிப்படுவதாகிய கள்ளத்தை ( காதலுணர்வை ) வெளிப்படாதவாறு மனத்தினுள்ளே கரந்துவைத்தீராகலின் , இது , காண்பவர்கட்குப் பெரியதொரு தீங்காய்த்தோன்றும் ` என்றாள் . எல்லே - பகற்கண்ணே . ` பலி ` எனப் பின்னர் வருகின்றமையின் , வாளா , ` கொள்ளத்தான் ` என்றாள் . ` பகலிற்றானே பலிகொள்வீர் போல் வந்து அதனைக் கொள்ளாது வேறு செய்கின்றீர் ` என்பாள் , ` எல்லே ` என்றாள் . கொடி , விடைக்கொடி . ஓதல் - கடல் ஓசை . வேதம் ஓதுதலுமாம் . ` ஓதம் ` என்பதே பாடம் என்றலும் ஒன்று . ` வைத்தீர் ` முதலியன , ஒருமை பன்மை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 4

நரையார்ந்த விடையேறி நீறு பூசி
நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்
விடுங்கலங்கள் நெடுங்கடலுள்நின்றுதோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
திருவொற்றி யூரென்றார் தீய வாறே.

பொழிப்புரை :

வெள்ளை நிறக் காளையை இவர்ந்து , நீறுபூசி , இடுப்பில் பாம்பைக் கச்சாக உடுத்தி , மண்டைஓட்டைக் கையில் ஏந்தி , ஏதும் பேசாது , எம் இல்லத்தினுள் வந்து பிச்சை வேண்ட , ` எம் வணக்கத்திற்கு உரியவரே ! உம் ஊர் யாது ?` என்று யான் வினவ ` வேல் போன்ற கண்களை உடைய பெண்ணே ! அவசரப் படாமல் கேள் . கடலில் மரக்கலங்கள் காணப்படுவதும் , திரைகள் தள்ளுவதனால் சங்குகள் கரையை அடைந்து தவழ்வதுமாகிய திருஒற்றியூர் ` என்றார் . ஒற்றியூரே ஒழியச் சொந்த ஊர் ஒன்று இல்லாமையால் அவரை எங்குச் சென்று மீண்டும் காணஇயலும் ! என்ற எண்ணத்தால் அவருக்கு என ஒரு சொந்த ஊர் இல்லாதது என் தீவினையே என்றாள் .

குறிப்புரை :

நரை - வெண்மை . உரையா - சொல்லாமல் . விரையாது - பதையாமல் . கலங்கள் - மரக்கலங்கள் . நின்று - உயர்ந்து . ` சங்கம் கரை ஏறி ஊரும் ` என்க . ` தோன்றும் ஊர் . ஊரும் ஊர் ` எனத் தனித்தனி முடிக்க . ` பிறருடையதை ஒற்றியாகக் கொண்டுள்ள ஊர் ` என்றமையால் , அவருக்கென்று ஓர் ஊர் இல்லாமை பெறப்பட்டமையின் , ` அவரை ஒருதலையாகச் சென்று அணைவது எங்கு ?` என நினைந்து அவலமுற்றாளாகலின் , ` தீயவாறு ` என்றாள் . ` என் தீவினையின் பயனிருந்தவாறு இது ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

மத்தமா களியானை யுரிவை போர்த்து
வானகத்தார் தானகத்தா ராகி நின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்
பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்
பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.

பொழிப்புரை :

மதயானைத் தோலைப் போர்த்தித் தேவருலகில் இருக்க வேண்டிய அவர் , எம் வீட்டிற்குள் வந்து பைத்தியம் பிடித்தவரைப் போலத் தாமே தம் பெருமையைப் பேசிக்கொண்டு , பெண்களைப் பயமுறுத்திவிட்டு வெளியே வரக் கண்டு , பத்தர்கள் பலரும் அவரை அணுகி ` நீங்கள் பாடிக்கொண்டே தங்கியிருக்கும் ஊர் யாது ?` என்று வினவப் பங்குனி உத்திரத்தில் தீர்த்தவிழாக் கொண்டாடும் ஒளி திகழும் ஒற்றியூர் என்றார் .

குறிப்புரை :

` தான் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் . அகத்தார் - இல்லிடத்தார் . ` வானத்திருக்கற்பாலராகிய அவர் என் இல்லத்தாராய் வந்துநின்றார் ` என்றவாறு . கேட்பார் இன்றியும் , தமது பெருமையைத் தாமே எடுத்துக் கூறினமையின் . ` பித்தர்போல் ` என்றாள் ; இங்ஙனங் கூறுதல் பிச்சையெடுப்போர்க்கு இயல்பென்க . பேதையர் - பெண்டிர் . `( நீர் ) கூடிப்பாடிப் பயின்றிருக்கும் ஊர் ஏதோ ` என்க . ` உத்திரநாள் தீர்த்தமாக ஒளிதிகழும் ஒற்றியூர் ` என்றமையால் , இஞ்ஞான்று இங்கு மாசிமாதத்தில் நடைபெறும் தீர்த்தவிழா அஞ் ஞான்று பங்குனி உத்திரத்தில் நடந்துவந்ததுபோலும் . ஒத்தமைந்த - இத்தலத்திற்கு ஏற்புடைத்தாய் அமைந்த . ஏற்புடைமைக்குக் காரணம் , நிலத்தியல்பு முதலியன கொள்க . ` என்கின்றார் . இஃதென்னை ` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிவுசெய்க . ` இஃதென்னை ` என மருண்டது . ` இத்துணைப் பெருமையராகிய இவருக்குத் தமக்கென அமைந்ததோர் ஊர் இல்லையோ ` என்று .

பண் :

பாடல் எண் : 6

கடிய விடையேறிக் காள கண்டர்
கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடுவெண் டலையொன் றேந்தி வந்து
திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.

பொழிப்புரை :

நீலகண்டர் கைகளில் மானையும் மழுவையும் ஏந்தி , விரைந்து செல்லும் காளையை இவர்ந்து , இடவந்த உணவையும் பிச்சையாகக் கொள்ளாராய் , இடத்தை விட்டு நீங்காதவராயும் உள்ள இப்பெரியவர் யார் என்று எல்லோரும் மருண்டனர் . முன்பு இவர் வடிவுடையமங்கையும் தாமுமாய் மயிலாப்பூரில் வந்த காட்சியைக் கண்டுள்ளோம் . பின் ஒரு நாள் புலால் நாற்றம் வீசும் மண்டை ஓட்டை ஏந்தி இங்கு உலவியவராய்த் திருவொற்றியூரில் புகுந்து விட்டார் . இவர் எவ்வூரார் என்பதனைக் கூட அறிய முடியாமல் இருப்பது நம் தீவினையாகும் .

குறிப்புரை :

கடிய - விரைவுடைய . ` காள கண்டராய் ` என எச்சப் படுத்துக . கலை - மான் . இடிய பலி - மாவால் அமைந்த பிச்சை ; அப் பவகை ; சில்பலி , ஏற்பவராகலின் , இடிய பலியும் ஒருத்தி இடவந்தாள் என்க . ` இட்டிய ` ( சுருங்கிய ) என்பது இடைக் குறைந்தது என்றலுமாம் . ` வடிவுடைய மங்கையுந்தாமுமாய் மயிலாப்புள்ளே வருகின்ற இவரை எல்லாம் எதிர்கண்டோம் ; ( அதனால் , இக்கோலத்துடன் வந்த இவரை ,) எல்லாரும் இவ்வடிகள் யார் என மருள்வாராயினார் ; ( அங்ஙனம் மருளுமாறு ) வெண்டலை ஒன்று ஏந்தி வந்து , மீள மயிலாப்பிற்புகாது திருவொற்றியூர் புக்கார் , இஃது என் தீவினைப் பயன் இருந்தவாறு ` என்பது படக்கொண்டு கூட்டியுரைக்க . ` எல்லாம் ` இரண்டனுள் முன்னது , படர்க்கையிடத்தினும் . பின்னது தன்மையிடத் தினும் உயர்திணைக்கண் வந்தது . ` தான் ` என்னும் அசைநிலை பன்மை ஒருமை மயக்கம் . செடிபடு - முடைநாற்றம் தோன்றுகின்ற . வடிவுடைய மங்கை - அழகு மிக்க பெண்டு ; ` வடிவுடை அம்மை ` என்பதே இத்தலத்து அம்மையது பெயராதல் நினைக்கத்தக்கது .

பண் :

பாடல் எண் : 7

வல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி
வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன
எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.

பொழிப்புரை :

தேவர்கள் எல்லோரும் கூடி வணங்கி வாழ்த்தி நிற்கும் பெருமான் எல்லாச் செயல்கள் செய்வதிலும் வல்லாராகவே , பகற் காலத்தில் எந்த வழியினாலும் எந்த வடிவினாலும் தேவர்கள் தம்மைக் காணமாட்டாதவராய் , இவ்வுலகில் எழுந்தருளப் பெண்களும் நான்மறைவல்லோர்களும் ஒன்று கூடி அவரைத் தேடிக் கண்டு ` சான்றீரே ! தாங்கள் இருக்கும் ஊர் யாது ` என்று வினவ , விரைவில் கடல் அலைகள் கரையில் மோதி மீளும் ஒற்றியூர் என்கின்றார் .

குறிப்புரை :

எல்லே - பகற்காலத்திற்றானே . எவ்வாற்றால் - எந்த வழியினாலும் . எவ்வகையார் - எந்த வடிவிலும் . உம்மைகள் தொகுக்கப்பட்டன . ` காணமாட்டார் ` என்பதன்பின் , ` ஆகலின் என்பது வருவிக்க . நாம் இருக்கும் ஊர் - நாமத்தொடு ( அச்சத்தொடு ) காத்திருக்கும் ஊர் . ஓதம் - கடல் ; ஆகுபெயர் . ` திரை கரையேறிப் பின் கடலில் மீளும் ` என்க . ` கரையேறி ` என்பதே பாடம் எனலுமாம் . ` ஒளி திகழும் ஒற்றியூர் ` எனப் பலவிடத்தும் அருளியது . பிரம தேவனது யோகாக்கினியே இங்குக் கோயிலாக அமைந்தது என்னும் இத் தலத்துப் புராண வரலாற்றை நினைப்பிக்கின்றது .

பண் :

பாடல் எண் : 8

நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
கலந்து பலியிடுவே னெங்குங் காணேன்
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்
தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே.

பொழிப்புரை :

தோழி ! நான் என் பண்டை நிலையை அடைவதற்கு முடிவு செய்த வழியைக் கூறுகின்றேன் கேளாய் . நேற்று நடுப்பகலில் இங்குப் பெரியவர் ஒருவர் வந்து என் உடையினது பெருமையும் கண்களும் அவர் உள்ளத்திலும் கண்களிலும் பொருந்துமாறு என்னைக் கூர்ந்து நோக்கி என்னை உள்ளத்தால் கலந்தாராக , அவருக்கு உணவு கொண்டு வரச்சென்ற நான் திரும்பி வர எங்கும் காணேனாய் , வஞ்சனையாக மறைந்து விட்டார் . இனி ஒருநாள் அவரைக் காண்பேனானால் அவர் மார்பிலே என் மார்பு அழுந்தும் வண்ணம் என் முலைச்சுவடு அவர் மார்பில் படும்படியாகத் தழுவிக்கொண்டு , ஒற்றியூரில் தங்கி இங்கு உலவும் அவரை , என்னை விடுத்து ஒற்றியூருக்குப் போக விடமாட்டேன் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் , தலைவி தோழிக்குக் கூறியவாறாக அருளிச்செய்யப்பட்டது . ஏடீ , தோழி முன்னிலைப் பெயர் . ` நிலைப் பாடாக நான் கண்ட ஊர் கேளாய் ` என்க . கலைப்பாடு - உடையினது பெருமை . கலக்க - நிலைகுலையச் செய்ய . வந்து கலக்க ` என இயையும் . கலந்து - பல பொருள்களைக் கூட்டி . இடுவேன் - இடுவேனாகிய யான் . சலப்பாடு - ( இது ) வஞ்சத்தன்மையாகும் . ` அதனால் , அத் திரிவானை இனியொருநாள் காண்பேனாகில் தழுவிப் போகலொட்டேன் ` என முடிவு செய்க . ஆகம் - மார்பு - உலைப்பாடு பட - உலைக்களத்து இரும்புத் தன்மை உண்டாக ; ` உடல் சிவக்க ` என்றபடி , இனி , மோனை நயம் கருதாது . ` முலைப்பாடு பட ` எனப் பிரித்து . ` என்கொங்கையது பெருமை ` பயன்பட ` என்றுரைத்தலுமாம் . ` அடிகள் ` என முன்னர் உயர்த்துக் கூறியவள் , பின்னர் . ` திரிவான் ` என்றது செற்றம் பற்றி .

பண் :

பாடல் எண் : 9

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே . நீ - மண் , விண் , ஞாயிறு முதலிய மண்டலங்கள் , மலை , கடல் , காற்று , எரி , எண் , எழுத்து , இரவு , பகல் , பெண் , ஆண் , பேடு , முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தை யாயும் உள்ளாய் .

குறிப்புரை :

வலயம் - ஞாயிறு முதலிய மண்டிலங்கள் . பேடு - அலி . ` பெரியாயாகிய நீயே ` என்க . உம்மை , எதிரது தழுவியது . ` இத்துணைப் பெரியாய் ; நல்லார்க்கு உள் நல்லை ; தீயை அல்லை ; ஆதலின் , அருள் பண்ணுவாயாக ` என முடிக்க . நல்லார் - பெண்டிர் . உண்மைப் பொருளில் இது அருள் கைவரப் பெற்றாரைக் குறிக்கும் . உள் நல்லை - மனம் நன்றாக உடையாய் .

பண் :

பாடல் எண் : 10

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
ஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.

பொழிப்புரை :

எம்பெருமான் , தன்னைப் பொருந்திய மலர் சூடிய கூந்தலை உடைய பார்வதி அஞ்சுமாறு , இராவணன் செய்த செயலால் கயிலை மலை அசைய , எண்திசைகளும் நடுங்க , அவனை வெகுண்டு நோக்கி , அவன் பலம் முழுதும் அழியுமாறு திருவடிவிரல் ஒன்றினால் அவன் அலறுமாறு அழுத்தி , தன் உருவத்தைத் தேடிப் பிரமனும் திருமாலும் முயன்று காணுமாறு தீப்பிழம்பாய் உயர்ந்த பெருமானார் இங்கே ( என்னிடத்தில் ) வந்து தம்முடைய ஊர் திருவொற்றியூர் என்று கூறிச் சென்றார் . அவர் நினைவால் என்னுடைய செறிந்த வளையல்கள் ஒன்று ஒன்றாய் கழன்று விட்டன .

குறிப்புரை :

மரு - வாசனை . ` செரு ` என்றது , கயிலையைப் பெயர்த்தமையை . உரு ஒற்றி - வடிவைக் கூர்ந்து நோக்கி , வளைகள் ஒன்றொன்றாச் சென்றது , மீள மீள நினைத்து மெலிந்தமையால் என்க . ` சென்றவாறு கொடிது ` என , சொல்லெச்சம் வருவித்து முடிக்க .
சிற்பி