திருஆவடுதுறை


பண் :

பாடல் எண் : 1

நம்பனை நால்வேதங் கரைகண் டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்
கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை யாவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

நம்மால் விரும்பப்படுபவனாய் , நான்கு வேதங்களையும் கரை கண்டவனாய் , ஞானப் பெருங்கடலாய் , நன்மையாய் , ஏகம்பனாய் , கல்லாலின் கீழ் இருந்தானாய் , கற்பகமாய் , அடியார் களுக்கு அருள் செய்வானாய் , செம்பொன் , பவளம் , முத்துத்திரள் திங்கள் , ஞாயிறு , தீ இவற்றை ஒப்பானாய் , நீராய் , செல்வமாய் உள்ள , ஆவடுதுறையிலுள்ள சிவபெருமான் திருவடிகளை அடியேன் அடைந்து தீவினையிலிருந்து பிழைத்தேன் .

குறிப்புரை :

` ஞானப் பெருங்கடல் ` என்னும் உருவகம் , இங்கு உவமையாகு பெயராயிற்று , நன்மை - இன்பம் . ` கம்பன் ` என்பது , காஞ்சியில் உள்ள இறைவன் பெயர் . ` அடியார் கட்குக் கற்பகமாய் அருள்செய்வான் ` என்க . ` கற்பகமாய் ` என்பது , ` கற்பகத் தருப்போல ` எனப் பொருள்தரும் . ` செம்பொன் ` என்பது , பொதுவாகப் பொன்னையும் , ` அம்பொன் என்பது , சிறப்பாகத் தூய்மை செய்து ஓடவிடப்பட்ட மாற்று உயர்ந்த பொன்னையும் குறிக்கும் . இனி , ` அம்பொன் ` என்பதில் உள்ள ` பொன் ` என்பது , திருமகளைக் குறித்து , ஆகுபெயராய் , அவளால் தரப்படும் செல்வத்தை உணர்த்திற்று என்றலுமாம் . ` ஆ அடு துறை ` என்பது , ` ஆவினால் ( பசுவினால் ) அடுக்கப்பட்ட ( அடையப்பட்ட ) துறை ` என்னுங் காரணத்தாற் பெற்ற பெயர் . உமையம்மை இங்கு இறைவனைப் பசுவடிவில் வந்து வழி பட்டாள் என்பது இத் தலத்தின் புராணத்தால் அறியப்படுவது . இனி , ` ஆ அடு ` என்பது , ` பசுத்தன்மையை நீக்கிய ` என்றும் ஆம் . இது , வடமொழியில் , ` கோமுத்திபுரம் ` எனப்படுகின்றது , எனவே , ` ஆவடுதுறை ` என்பது மும்மொழித் தொடராய் நிற்றலின் , அவற்றுள் , ` துறை ` என்பதனை ` ` தண்மை ` என்னும் அடை புணர்த்து அருளிச் செய்தார் என்க . ` அரனடியே ` என்னும் ஏகாரம் , ` பிறிதொரு பொருளையும் அடையாது ` எனப் பிறபொருள்களினின்றும் பிரித்தலிற் பிரிநிலை . அடி நாய் - அடிக்கீழகப்பட்ட நாய் . இறைவற்குத் தம்மை அது போன்றவராகக் கொண்டு ஒழுகினமையின் , ` அடி நாயேன் ` என்றருளிச்செய்தார் . ` அடைந்து ` என்னும் வினையெச்சம் , எண்ணின்கண் வந்தது , ` அரன் ` என்புழியும் இரண்டன் உருபு விரித்து , ` அரனையே நாயேன் அடிஅடைந்து உய்ந்தேன் ` எனக் கூட்டுக . பிரிநிலை ஏகாரம் ஏனைப் பெயர்களோடும் இயையும் .

பண் :

பாடல் எண் : 2

மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை
வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை யெந்தை பெருமான் தன்னை
இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

மின்னாய் , மின்னிடையே சேரும் இடியாய் , வெண்முகிலாய் , மழைபெய்யும் கார்முகிலாய்ச் சுதந்திரனாய் , தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனாய்ப் பல்லுயிர்க்கும் தாயாய்த் தந்தையாய் எனக்கு உரிய எந்தையாய்ப் பெரிய உலகங்களும் உலகங்களின் தொகுப்பாகிய அண்டங்களுமாய்ச் செவ்வான் போன்ற நிறத்தினனாய் , ஆவடுதுறையுள்மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேனே .

குறிப்புரை :

மின் - மின்னல் . மின்னிடைச்சேர் உருமு - மின்னலின்கண் பொருந்திய இடி . ` மழை ` என்றது , கருணைமழையை . கருணையை மழையாக உருவகிப்பார் , இறைவனை முகிலாக ( மேகமாக ) உருவகஞ்செய்தார் . சிவபிரான் வெண்ணீறு சண்ணித்த மேனியனாம் இயைபுபற்றி வியப்பத்தோன்ற ` வெண்முகிலாய் மழை பொழிவான் ` என்றருளினார் . இனி மழையையே குறித்தருளியதாகக் கொண்டு , ` வெண்முகிலாய் , எழுந்து , பின் மழை பொழிவான் ` என உரைத்து , ` கருமுகிலாய் , என்பது ஆற்றலாற்கொள்ளப்படும் ` என்றலுமாம் . தன்னான் , தன் வயமுடையவன் . ` பல்லுயிர்க்கு ` என்பதில் , முற்றும்மை விரித்து , அதனையும் , ` ஓர் ` என்பதனையும் , ` தாய் ` என்றதற்கு முன்னுங்கூட்டுக . என்னான் - எனக்கு உரியவன் . ` எந்தை யாகிய பெருமான் ` என்க . செக்கர்வான் - செவ்வானம் . ` வானே ` என்னும் ஏகாரம் தேற்றம் . அன்னான் - போன்றவன் ; இது நிறம்பற்றி அருளப்பட்டது .

பண் :

பாடல் எண் : 3

பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்
பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை
வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

அடியார் உள்ளத்தே பரவினவனாய்ப் பவளக் கொழுந்தாய் , மாணிக்கக் கொத்தாய்த் தன்னை அடைவதற்குத்தானே பற்றுக்கோடாகிய வழியாய்ச் சொற்பொருளின் உணர்வாய் , வித்தாய் , முளையாய் , முளைகளின் கிளையாய் , வேராய்ப் பயனாய் , ஊழ்வினை வயத்தால் வந்த அதன் கொடிய தொடர்பான துயரங்களைத் தீர்க்கும் தலைவனாய் , ஆவடுதுறை மேய அத்தனாய் உள்ள அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

பாவித்தான் - பாவிக்கப்பட்டான் . தொத்து - கொத்து . ` தோற்றம் ` என்றது , உணர்வை . முளைக்கிளை - முளையின்கட் கிளை ; ` முளையை ` என்பதும் உடம்பொடு புணர்த்தலாற் கொள்ளப்படும் . சீர் என்றது பயனை . ` வினைவயத்தின்றன் ` என்புழி , சாரியைகள் இரண்டு வந்தன . வயம் - வழி . சார்பு - நிமித்தம் . இதனால் , ` ஆன்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும் ` ( சிவஞானபோதம் சூ .2. அதி .2) என்றதற்கு உரையளவை பெறப்பட்டது . வெய்ய - கொடியன ; துன்பங்கள் .

பண் :

பாடல் எண் : 4

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்
கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்
தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்
சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

பிறைதவழ் செஞ்சடையனாய்த் தன்பால் பெரும் பற்றுக் கொண்ட அடியவரை வீட்டுலகத்திற்கு ஏற்றும் ஏணியாய்த் துயர்க் கடல் சுழியில் அகப்பட்டு வருந்தும் அடியேனை ஏறி அக்கரை அடைய உதவிச்சேர்க்கும் தோணியாய் , தூய ஒளி வீசும் வெள்ளிய காதணி அணிந்தவனாய் , ஒளிவீசும் பொற்காசின் மாற்றினை அளக்கும் உரையாணியாய் ஆவடுதுறையில் மேவிய அரனடியே தொண்டனாகிய அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

பேணிய - பேணப்பட்ட . பித்தர் - பேரன்புடையார் . ` ஏணி ` என்றது ஏகதேச உருவகமாகலின் , ` முத்தியாகிய உயர்ந்த இடத்தை ` என உரைக்க . ` அதனால் சுழிக்கப்பட்டு ` என்க . இங்கு - இவ்வுலகில் . ` இளைக்கின்றேற்கு ` என்பது ` இளைக்கின்றேனை ` என்னும் பொருட்டாகிய உருபு மயக்கம் . அக்கரை - அவ்வுலகு ; இறைவனுலகம் . சுலாவுதல் - அசைதல் . வெண்குழை - சங்கக்குழை . ` ஆணி ` என்பது , பொன்னது மாற்றின் அளவை அறிவது ; இதனை , ` உரையாணி ` என்பர் . ` சுடர் பொற்காசின் ஆணி ` என்றது , ` பொற் காசினது சுடரை அளக்கும் ஆணி ` என்னும் குறிப்பினது ; இங்கு அதனைக் கூறியது , ` உயர்ந்த பொன் ` எனல் வேண்டி . ` பொற்காசு ` என்பது ஒரு சொல்லாய் , ` சுடர் ` என்றதனோடு வினைத்தொகைநிலை படத் தொக்கது .

பண் :

பாடல் எண் : 5

ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை
உதயத்தி னுச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

ஒப்பற்ற மாணிக்கமாய் , உலகுக்கு உறுதியாய் , உதயமலையின் உச்சியாய் , இடியாய் , பெரிய இரத்தினமாய் , பஞ்சகவ்ய அபிடேகப் பிரியனாய் , தூயனாய் , ஆன்மாக்களின் தலைவனாய்ப் பவளக்குன்றாய் , செல்வம் நல்கும் சிந்தாமணியாய்த் தேன் கரும்பு இவற்றின் இனிப்பாய் , ஒளிவீசும் கிட்டுதற்கு அரிய மாணிக்கமாய் , ஆவடுதுறைமேய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

ஒரு மணி - ஒப்பற்ற மாணிக்கம் ; என்றது , ` மாணிக்கம் என்பனதாம் பலவுளபோலாது , தான் ஒருவனேயாய் உள்ளவன் ` என்றதாம் . ` உதயம் ` என்றது , ஆகுபெயராய் , பகலவனை உணர்த்திற்று . ` உச்சி ` என்றதும் , அவ்வாறு , உச்சிப்பொழுதில் விளங்கும் ஒளியைக் குறித்தது . உரும் - இடி , பருமணி - பெரிய மாணிக்கம் ; சிறியது சிறப்புடைத்தன்மையின் , இவ்வாறருளிச் செய்தார் . பவித்திரன் - தூயோன் . பசுபதி - உயிர்கட்குத் தலைவன் . திருமணி - ( கழுவ வேண்டாது இயல்பாகவே ) அழகிய மணி . ` தேனது ` என்பதில் , அது பகுதிப்பொருள் விகுதி . இதனை முன்னே கூட்டி , ` தேனாகித்தித்திப் பாகியவனை ` என உரைக்க . ` சோதியை உடைய அருமணி ` என்க , அருமணி - யாண்டும் கிடைத்தற்கரிய ஒருவகை மாணிக்கம் . ` ஒருமணி ` முதலியன உவமையாகு பெயர்கள் .

பண் :

பாடல் எண் : 6

ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்
குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை
நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை
நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

காளை வாகனனாய் , எண்தோளனாய் , இரவில் கூத்து நிகழ்த்துபவனாய் , அழித்தற் கடவுளாய்க் கூற்றுவனை உதைத்தவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சுண்ட நீலகண்டனாய்த் திருநீறு அணிந்தவனாய் , நீண்ட பாம்பு ஒன்றனை இடையில் இறுகக் கட்டியவனாய் , நீண்ட சடையில் கங்கை சூடியாய் , ஆவடுதுறை மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

ஏற்றான் - இடபவாகனன் . எல்லி - இரவு . கூற்றான் - கூற்றமாய் உள்ளவன் ; அழித்தல் தொழிலைச் செய்பவன் . சிவபிரான் கூற்றுவனை உதைத்தது , அழித்தல் தொழிலைத் தன் ஆணையின் வழிச்செய்யாது , அவன் இச்சைவழித் செய்யத் தொடங்கினமையால் ; எனவே , அதனை இங்கு எடுத்தோதியது , ` அத்தொழிலைத் தனதாக உடையவன் அப்பெருமானே ` என்பது உணர்த்துதற் பொருட்டாயிற்று . குரைகடல் - ஒலிக்கின்ற கடல் .

பண் :

பாடல் எண் : 7

கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்
கடல்வரைவா னாகாச மானான் தன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயா னானை
எம்மானை என்மனமே கோயி லாக
இருந்தானை என்புருகும் அடியார் தங்கள்
அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

துதிக்கையை உடைய தோலாத மத யானைத் தோலை உரித்தவனாய்க் கடல் , மலை , மேகம் , ஆகாயம் இவையாவும் ஆனவனாய்ச் செம்பவளமும் வெண்முத்தும் போன்றவனாய்த் திங்கள் சூரியன் தீ என்ற முச்சுடராய் , எம் தலைவனாய் , என் மனத்தையே இருப்பிடமாகக் கொண்டிருப்பது போல எலும்பும் உருகும் அடியவர்களுக்கும் தலைவனாய் , ஆவடுதுறையுள் மேய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

மானக்களிறு - தோலாத களிறு . மானப் பவளம் - பெருமையுடைய பவளம் . எம்மான் - எம் தலைவன் . அம்மான் - அனைவர்க்கும் தலைவன் .

பண் :

பாடல் எண் : 8

மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை
வெள்ளிடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த
கண்ணானைக் கண்மூன் றுடையான் தன்னைப்
பையா டரவமதி யுடனே வைத்த
சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னை
ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

வாய்மை வடிவினனாய் , வஞ்சகக் கலப்பு இல்லாதவனாய் , வெற்றிடமாய் , குளிர்ந்த நிழலாய்த் தீ ஏந்திய கையனாய்க் காமன் உடலை எரித்த கண்ணனாய் , முக்கண்ணனாய் , பட மெடுத்தாடும் பாம்பையும் பிறையையும் சேர்த்து வைத்த சடையனாய்ப் புலித்தோல் ஆடையனாய் , எல்லாருக்கும் தலைவனாய் ஆவடுதுறை மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

மெய்யான் - வாய்மை வடிவாய் உள்ளவன் . பொய்யர் - வஞ்சர் . வெள்ளிடை - வெற்றிடம் . ` வெள்ளடை ` என்னும் திருக் கோயிலை அருளுதற்கு ஈண்டு இயைபின்மையின் , அது பாடம் அன்று . ` பை அரவம் . ஆடரவம் ` எனத் தனித்தனி முடிக்க . இவை இனச்சுட்டுடைய அடை . பை - படம் . ஐயான் - அழகியான் ; தலைவனுமாம் .

பண் :

பாடல் எண் : 9

வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை
விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்
சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை
மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்
ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

வேண்டுதல் வேண்டாமை இலானாய் , அருச்சுனனை முன்னொரு காலத்தில் வருந்தச் செய்த வேடனாய்த் தூண்டாமலே ஒளிவீசும் சோதியாய்ச் சூலப்படையானாய் , கூற்றுவன் வாழ்நாள் கழியுமாறு உதைத்த வலியவனாய் , மக்களும் தேவரும் வணங்கித் துதிக்கும் தலைவனாய் , ஆவடுதுறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

வேண்டாமை - வெறுத்தல் . வேண்டுவது - விரும்புதல் . ` வேண்டுதல்வேண் டாமை யிலான் ` ( குறள் - 4.) என்றது காண்க . விசயன் - அருச்சுனன் . அசைவித்த - தளர்வித்த . வேடன் , சாதிப் பெயராகவும் ` வேடத்தன் ` என்னும் பொருளதாகவும் கொள்க . மைந்தன் - வலிமையுடையவன் . ஆண்டான் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 10

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
பாடலோ டாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்
கோலமா நீல மிடற்றான் தன்னைச்
செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்
திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

பந்தினைப் பொருந்திய மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனாய்ப் பாடலும் ஆடலும் பயின்றவனாய்க் கொத்தாகப் பூக்கும் நறிய கொன்றை மாலையை அணிந்தவனாய் , அழகிய நீலகண்டனாய்த் தமிழும் வடமொழியும் ஆகிய மேம்பட்டவனாய் , மார்பில் வெள்ளிய பூணூல் அணிந்த அந்தணனாய் , ஆவடு துறை மேவிய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

பந்து அணவும் - பந்தினைப் பொருந்திய . பந்து , அகங்கை புறங்கை இரண்டுங்கூடிய திரட்சியுமாம் ; அது , பந்து போலத் திரண்டு தோன்றுதலே ஈண்டுச் சிறப்பென்க . ` பந்து ` என்பது இப் பொருளதாதலை ` கைக ளும்மணி பந்தசைந்து ` ( தி .12 திருநாவு . புரா . 358.) என்றதனால் அறிக . கொந்து அணவு - கொத்திற் பொருந்திய . கோலமாம் - அழகான ; இங்கு ` செந்தழிழோடு ஆரியன் ` என்றாற் போல , முன்னும் , ` ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் ` என்றருளிச் செய்ததனை மேலே ( ப .23. பா .5.) காண்க . சீரியான் - சிறந்தவன் .

பண் :

பாடல் எண் : 11

தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்
பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை
நீசனேன் உடலுறு நோயான தீர
அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் தரித்தவனாய்த் தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்த வனாய் , அவனுடைய செருக்கைப் போக்கியவனாய்ச் சடையில் பிறை சூடியாய்ப் பெரிய வலிமையால் கயிலையைப் பெயர்த்த இராவணனை நெரித்தவனாய்ப் பார்வதி பாகனாய்க் கீழ் மகனான அடியேனுடைய உடலில் ஏற்பட்ட நோயை நீக்கிய ஆவடுதுறை மேவிய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

` தரித்தானை ` என்பதனை , ` உண்டான்றன்னை ` என்பதன் பின்னர்க் கூட்டுக . தரித்ததும் , நஞ்சினையென்க . பிரித்தது , தக்கன் செருக்கினை ; அதனை ஆற்றலாற்கொள்க . அரித்தான் - அழித்தான் ; நீக்கினான் .
சிற்பி