திருஆவடுதுறை


பண் :

பாடல் எண் : 1

திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

நல்லூழே ! என் செல்வமே ! வானோர்க்குப் புகழ் உண்டாக ஆற்றலை அருளும் ஞானமே ! அடியார்க்குத்திருக்காட்சி வழங்கும் பெரிய சோதியே ! என் கற்பகமாகவும் உறவாகவும் , உடலாகவும் உள்ளமாகவும் உள்ளத்தின் உணர்வாகவும் கண்ணாகவும் கண்ணின் கருமணியாகவும் கருமணியின் பாவையாகவும் செயற்படும் ஆவடுதுறையிலுள்ள தேவர் தலைவனே ! வடிவு புலப்படாத என் வல்வினை நோய் என்னைத் தாக்காதபடி காப்பாயாக .

குறிப்புரை :

` திரு ` என்பது இங்கு , திருமகளது வரவிற்குக் காரணமாகிய நல்லூழ் ; புண்ணியம் . ` என் ` என்பது , ` திரு ` என்றதனோடும் இயையும் . உலகின்பங்கள் எல்லாவற்றையும் தருதலின் , ` செல்வம் ` என்றும் , சித்தத்துள் தித்தித்தலின் , ` தேன் ` என்றும் , வானோர்க்குப் புகழ் உண்டாக ஓரோர் ஆற்றலை வழங்கலின் , அவர்க்குச் சுடர் ( விளக்கு ) என்றும் , முன்னைத் தவம் உடையார்க்குத் தனது உண்மை வடிவிற்றோன்றி யருளுதலின் , ` செழுஞ்சுடர் நற்சோதி மிக்க உருவே ` என்றும் தமக்கு ஆவன பலவும் அவனே அறிந்து செய்தலின் . ` உறவே ` என்றும் , உடலும் உள்ளமும் அருளே ஆகப் பெற்றமையின் ` என் ஊனே ஊனின் உள்ளமே ` என்றும் , உள் நின்று உணர்வைத் தோற்றுவித்து உணர்விற்கு வித்தாய் நிற்றலின் , ` உள்ளத்தினுள்ளே நின்ற கருவே ` என்றும் , வேண்டியவற்றை வேண்டியவாறே பெறத் தருதலின் ` என் கற்பகமே ` என்றும் , உணருந்தோறும் உணருந்தோறும் மேன்மேற் சிறந்து தோன்றலின் , ` கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் ` என்றும் , உருவாய உடல்நோயின் நீக்குதற்கு , ` அருவாய வல்வினை நோய் ` என்றும் அருளிச்செய்தார் . ` அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் காவாய் ` எனக் கூட்டி , அதனை இறுதிக்கண்தந்து முடிக்க . ` கரு ` என்றது , வித்தென்னும் பொருளது . ` உரு , அரு ` என்பன , இங்கு , பொறிகட்குப் புலனாதலையும் , ஆகாமையையும் குறிக்கும் . அமரர் ஏறு - அமரராகிய விலங்குகட்கு அரியேறு ( ஆண் சிங்கம் ) போன்றவன் - ` தலைவன் ` என்றவாறு . ` செழுஞ்சுடர் நற் சோதி ` என்பது சமாஜப் பதிப்பு த் தரும் பாடம் .

பண் :

பாடல் எண் : 2

மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்
மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தை என் நாவிலிருந்து நீக்கேன் , திருவருள்களை என் நெஞ்சினால் மறவேன் . எண்ணினால் எம்பெருமான் திருவடிகளையே எண்ணுவதல்லால் பிற தெய்வங்களை எண்ணா நாயேன் அத்தெய்வங்களை என் நெஞ்சில் ஏலேன் . என்மேல் நீ செய்யும் செயல்களைக் கண்டு வேதனைப் பட்டு நானும் பொறுக்க இயலாதவனாக உள்ளேன் . ஆவடுதுறையில் உறையும் தேவர் தலைவனே ! அடியேனை அஞ்சேல் என்று அருளுவாயாக .

குறிப்புரை :

` எண்ணின் எம்பெருமான் திருவடியே யல்லால் பிற தெய்வம் எண்ணாநாயேன் ` என மாறிக் கூட்டி , அதனை முதற்கண் வைத்துரைக்க . திருவருள் செயல்வகையாற் பலவாமாகலின் , பன்மையாற் கூறினார் . ` நாவின் மாற்றேன் ; நெஞ்சின் மறவேன் ; ( அதன்கண் ) வஞ்சம் ஏற்றேன் ( ஏற்றமாட்டேன் )` செய்வன , ` ஒறுப்புக்கள் ` என இயையும் . ` செய்வனகள் ` , ` கள் ` ஒரு பொருட் பன்மொழியாய் வந்த விகுதிமேல் விகுதி . ` வேதனைக்கே இடங்கொடுத்து ` என்றது , ` வேதனைகளைப் பொறுத்து ` என்றவாறு . ` நாளும் நாளும் இடங்கொடுத்து ` எனக்கூட்டுக . ` இனி ஆற்றேன் ஆயினேன் ; அதனால் அஞ்சேல் என்னாய் ` என்க .

பண் :

பாடல் எண் : 3

வரையார் மடமங்கை பங்கா கங்கை
மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
உரையா உயிர்போகப் பெறுவே னாகில்
உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
கரையா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

பார்வதி பாகனே ! கங்கையைச் சடையில் தரித்தமணவாளா ! உன் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே உயிர் நீங்கப் பெறுவேனாயின் மிக்க நோய்கள் எத்தனையும் என்னை அடைந்து என் செய்ய முடியும் ? கரைந்து நினைந்து உருகிக் கண்ணீர் வடித்துக் காதலித்து உன் திருவடிகளே துதிக்கும் அன்பர்களுக்கு அரசே ! ஆவடுதுறை உறையும் அமரர் ஏறே ! அடியேனை அஞ்சேல் என்று அருளுவாயாக .

குறிப்புரை :

` அடியேனை அஞ்சேல் என்னாய் ` என்பதனை , ` உற்றால் என்னே ` என்பதன் பின்னர்க் கூட்டி , ` நின்றன் நாமம் ` என்பது தொடங்கி அஃது இறுதியாக அனைத்தையும் ஈற்றில் வைத்து உரைக்க . உரையா - சொல்லிக்கொண்டு . இறக்குங் காலத்து இறைவனை நினைத்துத் துதிப்பவர்க்குப் பிறவி நீங்குதல் திண்ணமாதலின் இவ்வாறு அருளினார் . எனவே , ` அஞ்சேல் என்னாய் ` என்றது , ` அவ்வாறு போகப் பெறுவதனை அருளுக ` என்றவாறாம் . ` நின் - நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் - சாம் அன்றுரைக்கத்தருதி கண்டாய் எங்கள் சங்கரனே ` ( தி .4. ப .103. பா .3.) என்றாற்போலப் பிறவிடத்தும் அருளிச்செய்தல் காண்க .

பண் :

பாடல் எண் : 4

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிக்
கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்
களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
நில்லா வுயிரோம்பு நீத னேன்நான்
அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

ஆவடுதுறையில் உறையும் தேவர் தலைவனே ! ஆரவாரித்த அசுரர்களின் மும்மதில்களும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்து , பார்வதியை அஞ்சுமாறு பார்த்துக் கரிய பெண் யானையைத் தழுவி ஓடிய யானையின் தோலை உரித்தவனே ! முழு எலும்புக்கூட்டை அணிந்தவனே ! எங்கள் தலைவனே ! பூமிக்குப் பாரமாய் , நில்லாத உயிரை உடலில் நிலை நிறுத்த உடலைப் பாதுகாக்கும் கீழ்மகனாகிய அடியேன் அலுத்து விட்டேன் . அடியேனை அஞ்சேல் என்று காப்பாயாக .

குறிப்புரை :

சிலைத்தார் - ( சினத்தால் ) ஆரவாரித்தவர்கள் . உமையவளை அஞ்சநோக்கியது , யானையின்மேல் எழுந்த வெகுளிக் காலத்து . கலித்து - பிளிறி . ` பிடிமேற் கைவைத்து ஓடும் ` என்றது , ` மதங் கொண்டு பெயரும் ` என்றவாறு . ` நிலத்தார் ` என அஃறிணையை உயர்திணைப் பன்மையாகிய உயர்சொல்லால் அருளியது , இழித்தற் குறிப்பினால் ; இழித்தல் , வினைத்தொடக்குடை யாரையே சுமப்ப தாதல் பற்றி . ` அவர் ` பகுதிப்பொருள் விகுதி . ` தம் ` சாரியை . பொறை - சுமை . ஓம்புதல் , நிலை நிறுத்த முயலுதல் . அலுத்தது , நிலத்துக்குப் பொறையாய்த் தோன்றி நில்லா உயிரை ஓம்பி .

பண் :

பாடல் எண் : 5

நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
துறவாத துன்பந் துறந்தேன் தன்னைச்
சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

நீரில் மூழ்கிப் பின் நறிய சிறந்த மலர்களைப் பறித்து உன் திருவடிகளிலே இட்டு , உன்னைத் துதித்து வாழ்த்தித் துன்பங்களைப் போக்கிய அடியேனை , இவ்வுலகில் ஊழ்வினை வந்து யாது செய்ய இயலும் ? தேவர்களிடத்து உறவு பூண்டு அவர்கள் வேண்டியதனால் கடல் நஞ்சினை உண்டு அவர்களைப் பாதுகாத்த அறவோனாகிய ஆவடுதுறை அமரர் ஏறே ! அடியேனை அஞ்சேல் என்பாயாக .

குறிப்புரை :

` நீரின் மூழ்கி நறுமா மலர்கொய்து ` என மாறிக் கூட்டுக . ஏத்தி - புகழ்ந்து . துறவாத - நீக்கலாகாத . ` துன்பம் ` என்றது , துன்பங்கள் எல்லாவற்றிற்கும் அடியாய பேதைமையை . இதனை , ` பிறப்பென்னும் பேதைமை ` ( குறள் - 358) என்றருளினார் , திருவள்ளுவ நாயனார் . சிவாகமங்களுள் ; ` ஆணவம் ` எனப்படுவது இதுவே . இதுவே துன்பத்திற்கெல்லாம் முதலாய் எல்லா உயிர்களும் எஞ்சாது , பற்றியது தெரியாமற் பற்றி , நீக்குதற்கரிதாய் நின்று வருத்துதலின் , ` பொல்லாத ஆணவம் ` ( சிவஞான சித்தி . சூ . 2-79) என்றருளினார் , அருணந்திதேவ நாயனார் . இதனை நீக்கிக் கொண்டோர்க்கு . பிராரத்த கன்மமும் உயிரைத் தாக்காது உடலோடே பற்றி யொழிந்திடுமாகலின் , ` சூழுலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே ` என்றருளிச் செய்தார் . ` வானந்துளங்கிலென் மண்கம்ப மாகிலென் ` ( தி .4. ப .112. பா .8.). என்றற் றொடக்கத்தனவாக சுவாமிகளும் , ` எங்கெழிலென் ஞாயிறெமக்கு ` ( தி .8 திருவாசகம் , திருவெம்பாவை - 19) என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தன , இந்நிலைபற்றியே என்க . இங்ஙனம் அருளிச் செய்தவர் , ` அஞ்சேல் என்னாய் ` என வேண்டியது , ` இந்நிலை சலிக்குங்கொலோ ` என் றெழுந்த அச்சம்பற்றி யென்க . இதனை , ` பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சும் - அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு ` ( குறள் - 1295) என்றருளிய அப்பொருளின் வைத்து அறிந்துகொள்க . ` நறுமா மலர் கொய்து ` முதலியன , துறவாத துன்பம் துறத்தற்கு வாயிலை உடம்பொடு புணர்த்தலாக அருளியவாறு . அறவன் - அறம் உடையவன் ; ` தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் - அருளாதான் செய்யும் அறம் ` ( குறள் - 249) என்பதனால் , அருளுடையவனே அறமுடையவன்ஆவனாகலானும் , பிறர் உய்தற் பொருட்டுத் தான் நஞ்சுண்டவன்போலப் பேரருளுடையார் பிறர் ஒருவரும் ஓரிடத்தும் இன்மையானும் , சிவபிரானை , ` அறவா ` என , வாயார அழைத்தருளினார் . ` அன்ன அறமுடையை ஆதலின் , அடியேனை அஞ்சேல் என்னாய் ` என்பது குறிப்பு .

பண் :

பாடல் எண் : 6

கோன்நா ரணன் அங்கந் தோள்மேற் கொண்டு
கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

அரசனாகிய நாராயணனுடைய முழு எலும்புக் கூட்டைத் தோள் மேல் தரித்துப் பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்தி யானைத் தோலைப் போர்த்துக் கங்காள வேடம் தரித்தவராய் , எங்கும் உலவுபவரே ! அடியேன் உமக்கு என்ன உரிமை உடையேன் ? வினையாகிய கேட்டினை உடைய எமக்கு எல்லா நல்வினையும் தீவினையும் ஆகிய ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! அடியேனை அஞ்சேல் என்பாயாக .

குறிப்புரை :

` கோனாகிய நாரணன் ` என்க . அங்கம் - எலும்புக் கூடு . ` அங்கம் தோள்மேற்கோடல் ` முதலியவற்றை எடுத்தோதியது , எல்லாவற்றையும் இறுதி செய்ய வல்லீராகலின் , என் வினையையும் இறுதிசெய்வீர் என்றற்கு . ` நான் ஆர் ` என்பதில் உள்ள ` ஆர் ` என்பது , ` என்ன உரிமையுடையேன் ` என்னும் பொருளதாகிய ` யார் ` என்னும் வினா வினைக் குறிப்பின் மரூஉ . வினைக்கேடன் - வினையாகிய கேட்டினை உடையவன் . ` கேடு ` என்பது , அதன் காரணத்தை உணர்த்திய காரியவாகு பெயர் . ` ஓர்வினைக் கேடனாகிய நான் உமக்கு ஆர் ` எனக் கூட்டி , ` ஆயினும் , முன்னே , நல்வினையும் தீவினையும் ஆகிய எல்லா நெறிகளும் நீயே ஆனாய் ஆகலின் , அடியேனை அஞ்சேல் என்னாய் ` என முடிக்க . வினைகாரணமாக உமக்கு நான் அயலவனாயினும் , வினையை அதனோடு ஒற்றித்து நின்று நடத்துவோன் நீயேயாகலின் , வினையை நீக்கி என்னை அஞ்சேல் என்னலாமன்றோ ? ` என்றபடி . வினையை நடத்துவோனும் இறைவனே என்பது உணரவல்லார்க்கு , வினை , பந்தமாகாமையான் இவ்வாறு அருளிச்செய்தார் . ` வேடராய் ` முதலியன , ஒருமை பன்மை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 7

உழையுரித்த மானுரிதோ லாடை யானே
உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே
கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா
கயிலாய மலையானே உன்பா லன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
கடனன்றே பேரருளுன் பால தன்றே
அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

அகவிக்கொண்டு மயில்கள் ஆடும் ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! மானை உரித்து அதன் தோலை ஆடையாக உடையவனே ! பார்வதியின் தலைவனே ! தேவர் தலைவனே ! மூங்கிற் கோல் சுட்டும் ஆழத்தையும் கடந்த ஆழத்தை உடைய கடலின் நஞ்சினை உண்ட நீலகண்டனே ! கயிலாய மலையில் உறைபவனே ! உன் அடியவர் பிழைகளைப் பொறுப்பதும் உன் கடமை அன்றோ ? உன்பால் பேரருள் உண்டு அன்றோ ?.

குறிப்புரை :

` உழை உரித்து அம் மானுரி தோலை ஆடையாக உடையவனே ` என்க . கழை , இறுத்த - மூங்கில்களை ஒடித்த ; என்றது . மலையினின்றும் வருகின்ற யாறுகள் கலத்தல்பற்றி . ` அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல , தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் ` ( குறள் - 151) தலையாயினார்க்கு இயல்பாகலின் , ` உன்னை , பிழை பொறுப்பாய் என்று அறிந்தோர் சொல்வது , நினக்குப்புகழாகாது , பெரியோயாகிய நினக்கு அது கடனாகலின் ` என்றருளினார் . ` அடியேனை அஞ்சேலென்னாய் ` என்பது இத்திருப்பாடற்கண்ணும் வந்து இயையுமாகலின் , ` உன்பாலது அத்தகைய பேரருளன்றே ; அதனால் அடியேனை அஞ்சே லென்னாய் ` என முடிக்க . ` பிழைத் தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை ` ( தி .8 திருவாசகம் . திருச்சதகம் - 66.) என்றருளியது காண்க . அழை - அகவுதலை . உறுத்து - ( பலர் செவியினும் ) உறுவித்து . ஆலும் - ஆடுகின்ற . ` இமையோர் ஏறே ` என முன்னர் வந்தமையின் , இங்கு இறுதிக்கண் உள்ள ` அமரர் ஏறே ` என்பது , வாளா பெயராய்நின்றது .

பண் :

பாடல் எண் : 8

உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ
ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
கலந்தார் மனங்கவருங் காத லானே
கனலாடுங் கையவனே ஐயா மெய்யே
மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய
மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! இறந்தவ ருடைய தலையோட்டைக் கையில் ஏந்தித் தேவர் உலகில் பிச்சை ஏற்பானே ! உன்பால் அன்பால் கலந்தவர்களுடைய உள்ளத்தைக் கவரும் அன்புடையாய் ! கையில் தீ கொழுந்துவிட்டு எரியுமாறு வைத் திருப்பவனே ! தலைவனே ! உண்மையாகத் தூய்மைஅற்ற இவ்வுடலில் ஏற்பட்ட மயக்கங்களில் விழுந்து அழுந்தி ஒவ்வொருநாளும் வருந்தும் அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வாயாக .

குறிப்புரை :

உலந்தார் - இறந்தார் . காதலான் - அருளாளன் . ` மேவினார் பிரிய மாட்டா விமலனார் ` ( தி .12 கண்ணப்பர் புரா . 174) என்றதுங் காண்க . மலம் தாங்கு உயிர்ப் பிறவி மாயக் காயம் - இயல்பாகவே மலத்தினை உடைய உயிரினது பிறவியாகிய நிலையாமையுடைய உடம்பு ; இதனால் , ` நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் ` ( சிவஞானபோதம் சூ .2 அதி . 2.) என்றதற்கு உரையளவை பெறப்பட்டது . அலந்தேன் - துன்பமுற்றேன் .

பண் :

பாடல் எண் : 9

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்
பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்
கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
எல்லாரு மென்தன்னை யிகழ்வர் போலும்
ஏழையமண் குண்டர்சாக் கியர்களொன்றுக்
கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! பல் நிறைந்த வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திக் காளையை இவர்ந்து ஊர் ஊராகப் பிச்சை எடுப்பவனே ! பார்வதியும் நீயும் சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்புகிறீர் . நீங்கள் இருவீரும் என்னை ஆட் கொள்ளக் கருதவில்லையென்றால் மக்களெல்லாரும் அடியேனை இகழ்ந்து கூறுவர் . அறிவற்ற பரு உடல்களை உடைய சமணர் புத்தர் ஆகிய பயனற்றவர் தொடர்பை நீக்கிவிட்ட அடியேனை அஞ்சேல் என்பாயாக .

குறிப்புரை :

` ஊரூரனாய் ` என எச்சமாக்குக . ` எல்லாம் ` என்பது , உம்மையெண்ணின் தொகைப் பொருட்டாய் நின்றது , இதன் பின் வருவனவற்றிற்கு , ` நீவிர் இருவீரும் என்னை ஆளக்கருதீராகில் , ஒன்றுக்கும் அல்லாதாரது கூற்றிலேபட்டு நல்லாரை இகழ்ந்தமை பற்றி எல்லாரும் என்னை இகழ்வர் ; ஆதலின் , அஞ்சே லென்னாய் ` என உரைக்க . ` கருதீர் ` என்பது வேறு முடிபாகலின் , பால்வழுவின்று ; ` நீரும் எல்லாம் ` என்பது பாடம் அன்று . இதனால் அப்பனையேயன்றி , அம்மையையும் சார்த்துவகையால் வேண்டுதல் பெறப்பட்டது . ` போலும் ` என்பது அசைநிலை . சமண் சமயமும் புத்த சமயத்தோடு ஒத்ததாகலின் , தம்மைச் சாக்கியர் திறத்து ஒழிந்ததாகவும் அருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 10

துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்
துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்
செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

ஆவடுதுறைத் தேவர் பெருமானே ! துறந்தவர் செல்லும் தூய நெறியிலே வாழ்கின்றேன் அல்லேன் . உனக்கு இணையான மாலைகளைச் சூட்டும் தூய்மை உடையேன் அல்லேன் . உன் திருவருளைப் பற்றிப் பேசியும் அப்படிப் பேசாத நாள்களைப் பயனற்ற நாள்களாகக் கணக்கிட்டும் வாழ்கின்றேன் . செறிவாகப் பொருந்திய மதில்களை உடைய இலங்கை அரசனாகிய இராவணனைச் செறிவான கயிலை மலைக்கீழ் நசுக்கிப் பின் அவனுக்கு அருளிய உன் செயல்களை எல்லாம் அறிந்த அடியேனை அஞ்சேல் என்பாயாக .

குறிப்புரை :

துறந்தார் - உண்மைத் துறவிகள் ; அவர் , தம் செயலற்றுத் தலைவன்வழி நின்றவர் . அவரது தூநெறியாவது , ` யான் , எனது ` என்னும் மயக்க உணர்வாகிய குற்றம் நீங்கிய நெறி . ` சமணத் துறவிகள் அத்தன்மையரும் அவரது நெறி அத்தகையதும் ஆகாமையின் , துறந்தார்தம் தூநெறிக்கண் சென்றேனல்லேன் ` என்றருளிச்செய்தார் . துணைமாலை - பூக்களைப் பிணைத்துச் செய்யும் மாலை . ` தூயேனல்லேன் ` என்றது மேற்கூறிய குறையை நினைந்த நினைவினால் என்க . ` பிறந்தேன் ` என்றதனை , ` பேசின் ` என்றதன் பின்னர்க் கூட்டுக . ` இலங்கைக் கோமானை முன்னர் அடர்த்து , பின்னர் அருள்செய்கை யெல்லாம் ` என்க . ` அவற்றை அறிந்தேன் ` என்றது , ` என்னையும் அடர்த்தே யொழியாது அருளவும் வேண்டும் ` என வேண்டியவாறு . இதனால் , இராவணனுக்கு அருள் புரிந்த வரலாற்றினை சுவாமிகள் ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதிப் பாடலிலும் அருளிச்செய்து முடித்தலின் கருத்து நன்குணரப்படுதலின் . ` அறியா - அத்தன்மையனாய இராவணனுக் கருளுங்கருணைத்திற மானவதன் - மெய்த்தன்மையறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கினர் ` என சுவாமிகள் வரலாற்றினும் , ` மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற் கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளு மெனக்காட்ட எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிந் திசைபாட அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா டருள்செய்தார் .` ( தி .12) என ஆளுடைய பிள்ளையார் வரலாற்றினும் இனிது விளக்கி யருளினார் , சேக்கிழார் நாயனார் .
சிற்பி