திருவலிவலம்


பண் :

பாடல் எண் : 1

நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

பெரியவனாய் , நான்கு வேத சொரூபனாய் நம்மால் விரும்பப்படுபவனாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் எய்தவில்லை உடையவனாய்த் தேவர்களுக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய் , மந்திர வடிவினனாய்ச் சந்திரன் சூரியன் தீ என்ற மூஒளிகளின் உருவனாய்த் தொண்டராகி வழிபடுபவர்களுக்கு வீட்டுலகை ஈய வல்லவனாய்த் தேவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்தை உகந்தருளியிருக்கும் பெருமான் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

` மேலவர்க்கு மேலான் ` என்பதும் பாடம் . வேத வேள்விச் சொல் - மந்திரம் ; ` அம் மந்திர வடிவாய் இருக்கின்றான் ` என்க . சுடர் மூன்று , ` சூரியன் , சந்திரன் , நெருப்பு ` என்பன . தொல்வான் - பழைய வானுலகம் ; என்றது , தனது உலகத்தை ( சிவலோகத்தை .)

பண் :

பாடல் எண் : 2

ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண்
உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட்கென்றுந்
தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண்
தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட
கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண்
களியானை யீருரிவை கதறப் போர்த்த
வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

வலிவலத்துப் பெருமான் எல்லோருக்கும் உடம்பாய் , உயிராய் , அருளாளர்களுக்கு அநுபவப் பொருளாய் , உலகியலில் திளைப்பார்க்கு அநுபவம் ஆகாதவனாய்ப் பார்வதிக்குத் தேன் போன்று இனியனாய்ச் செல்வமாய்த் திசைகளாய்த் தூயவனாய் , அருச்சுனனுடைய போர்த்தொழிலை அநுபவித்த வேடனாய் , கடலாய் , மலையாய் , மதயானையைக் கொன்று அதன் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்திய தேவனாய் , தேவர்களும் வணங்கித் துதிக்கப்படுபவனாய் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

` ஊனவன் , தேனவன் , என்பவற்றில் அகரம் சாரியை . ஊன் - உடம்பு . உள்ளவன் - அருளாளர்க்கு அநுபவப் பொருளாய் இருப்பவன் . இல்லவன் - உலகத்தார்க்கு அநுபவமாகாதவன் . தேனவன் - தேன்போல இனியவன் . திரு - செல்வம் . தீர்த்தன் - ஆசிரியன் . பணி - செயல் ; போர் .

பண் :

பாடல் எண் : 3

ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண்
இன்பன்காண் துன்பங்க ளில்லா தான்காண்
தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யெங்கும்
ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
அகங்குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்
வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

எப்பொருளையும் நடத்துபவனாய் , எல்லாருக்கும் இயக்கத்தை வழங்குபவனாய்த் துன்பக்கலப்பற்ற இன்பம் உடையவனாய்த் தாயாய் , உலகில் தன்னை ஒப்பார் இல்லாத மெய்ப் பொருளாய் , உத்தமனாய்த்தானே எங்கும் பரவியவனாய் , அண்டங் களுக்கும் அப்பாற்பட்டவனாய் , மனம் உருகி மெய் மயிர் பொடித்து அழும் அடியவர்களுக்குத் தன்னை அழைக்கும் அவர்கள் வாயிலுள்ள வனாய்த் தேவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்தில் உறைபவன் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

ஏயவன் ( ஏவியவன் ) - எப்பொருளையும் நடத்தியவன் . இயல்பு - நடை ; இயக்கம் . ` ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ ` ( தி .8 திருவாசகம் . திருச்சாழல் . 1.) என்றருளிச் செய்தமை காண்க . இன்பன் - நிறைந்த இன்பமுடையவன் . துன்பங்கள் - துன்பங்கள் யாவும் . தாயவன் - தாய்போன்ற கருணையை உடையவன் . ` உலகுக்கு ஓர் தாயவன் ` எனக் கூட்டுக . தத்துவன் - மெய்ப் பொருளாய் இருப்பவன் . ஆயவன் - பொருந்தியவன் . அரும்பி - மயிர் சிலிர்த்து ` மெய்வருந்தி ` என்பதும் பாடம் . அன்பர் வாயவனாக அருளியது , அவரது வாய் பிறிதொன்றை அறியாமை குறித்து .

பண் :

பாடல் எண் : 4

உய்த்தவன்காண்உடல்தனக்கோர்உயிரானான்காண்
ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்
வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண்
விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத்தென்றும்
பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண்
புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி
வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

வலிவலத்துப் பெருமான் உடலுக்கு உயிராய் அதனைச் செலுத்துபவனாய் , ஓங்காரத்தால் குறிப்பிடப்படும் எப் பொருட்கும் தலைவனாய் , உலகுக்கெல்லாம் காரணனாய் , வானத்து மழையாய் , மழையின் விளைவாய்த் தன்னை விரும்பாதார் மனத்துத் தோன்றாதவனாய் , ஏழுலகையும் தாங்குபவனாய்த் தலையில் கங்கை பிறை பாம்பு இவற்றை அணிந்தவனாய் ; வானவர்கள் வணங்கித் துதிக்கப்படுபவனாய் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

உய்த்தவன் - எல்லாவற்றையும் செலுத்தியவன் . ஓங்காரத்து ஒருவன் என்றது , அதன் சமட்டி ( முழு ) ப் பொருளை நோக்கி ; அப்பொருளாவது ` எப்பொருட்கும் தலைவன் ` என்பது . விளைவு - வித்தினின்றும் முளைமுதலியன தோன்றி வளர்ந்து முடிவில் தரும் பயன் . பொய்த்தவன் - தோன்றாதொழிந்தவன் . தாங்குதல் - காத்தல் .

பண் :

பாடல் எண் : 5

கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண்
குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய
நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண்
நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை
ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ
மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் சொற்களாகவும் , சொற்பொருளின் பொதுத் தன்மையாகவும் , சிறப்புத் தன்மையாகவும் , எல்லாக் குற்றங்களாகவும் , நீறணிந் தவனாகவும் , நிழலாகவும் , வெப்பமாகவும் , மேல்நோக்கிய சிவந்த சடையின் மேல் கங்கை நீரை ஏற்றவனாகவும் , ஏழுலகும் ஆகியவனாய் இமை நேரத்தில் மன்மதனைச் சாம்பலாக்கியவனாய் , என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

கூற்று - சொல் . சொல்லின் பொருளை , ` குணமும் , குறியும் ` என இரண்டாக்கியருளினார் ; அதனால் அவற்றை உடைய பொருள்களும் கொள்ளப்படும் . ` குணம் ` என்றது பொதுத் தன்மையையும் , ` குறி ` என்றது சிறப்புத்தன்மையையும் என்க . ` நிழல் ` என்றது - தட்பத்தை உணர்த்தி , நீர்மேல் நின்றது . ` கங்கை ` இயற்பெயர் . ` மாற்று `, முதனிலைத் தொழிற்பெயர் ; மாற்றவன் - மாற்றுதலை உடையவன் ; ` மாற்றிய அவன் ` என வினைத் தொகையுமாம் .

பண் :

பாடல் எண் : 6

நிலையவன்காண் தோற்றவன்கா ணிறையா னான்காண்
நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்த
சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல்
தேன்மொழியை ஒருபாகஞ் சேர்த்தி னான்காண்
கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக்
கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ
மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் தோற்றம் நிலை இறுதியாய் நீராய் நிலனாய்த் திரிபுரம் எரித்த வில்லேந்தியவனாய்ச் செவ்வாயினையும் கரிய கூந்தலையும் உடைய பார்வதி பாகனாய்க் கலைகளாய்க் காற்றாய்க் கூற்றுவன் கீழே விழுமாறு அவனை வெகுண்டவனாய்க் கயிலாய மலையினனாய் என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

` நிலையவன் ` முதலிய பலவற்றுள்ளும் அகரம் சாரியை . தோற்று - ` தோன்று ` என்பது திரிந்த தொழிற்பெயர் ; ` தோன்றுதல் ` என்பது பொருள் . நிறை - நிறைவு ; இறுதி ; எனவே , தோற்றம் முதலிய மூன்றனையும் அருளியவாறாயிற்று . கலை - நூல் . கறுத்தவன் - வெகுண்டவன் .

பண் :

பாடல் எண் : 7

பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும்
பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்
எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி
இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங்
கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்த
மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் பெண்ணாய் , ஆணாய் , அரியாய்ப் பிரமனாய்ப் பெரியோரில் பெரியோனாய் , எண்ணாய் , எழுத்தாய் , இயலாய்ச் செவிக்கு இன்பம் தரும் இசையாய்க் கண்ணாய்க் கருத்தாய் , இறந்தோர் செல்லும் வழியாய் , ஞானமாய் , ஏழ்கடல் சூழ்ந்த நிலமாய் என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

பெரியோர்க்குப் பெரியவன் - பெரியராயினார்க்குத் தனது பெருமை தோன்ற நிற்பவன் ; எனவே , ஏனைச் சிறியரா யினார்க்கு அவ்வாறு நில்லாதவன் என்பது பெறப்பட்டது . கேள்வி - ஓசை ; ` கேட்கப்படுவது ` என ஆகுபெயர் . ` இன்பந்தரும் ஓசையாகிய இசை` என்க . ` இயல் ` என்றது , இயன்று ( அடிபெயர்த்துச் ) செய்யப் படுவதாகிய ஆடலை ; எனவே , ` எழுத்தவன்காண் ` முதலிய மூன்றாலும் ` இயல் , இசை , நாடகம் ` என்ற மூன்றும் அருளியவாறு ஆயிற்று . கழிந்தோர் - பாசம் நீங்கப்பெற்றோர் . மதி - ஞானம் .

பண் :

பாடல் எண் : 8

முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி
முதலவன்காண் முடிவவன்காண் மூன்று சோதி
அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும்
அணியவன்காண் சேயவன்காண் அளவில் சோதி
மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம்
வேண்டினன்கா ணீண்டுபுனற் கங்கைக் கென்றும்
மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

வானவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்துப் பெருமான் முன்னவனாய்ப் பின்னவனாய் , என்றும் ஒரே நிலையிலிருக்கும் முதலும் முடிவுமாய் இருப்பவனாய்த் திங்கள் ஞாயிறு தீ என்ற மூவொளியாய் , அடியார்க்கு அணியனாய் , உலகியலில் மூழ்கியவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய் , எல்லையற்ற ஒளியை உடைய மின்னலாய் , இடியாய்த் திருமாலை உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாய்க் கங்கையைச் சடையில் நிலைபெறச் செய்தவனாய் என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

முன்னவன் பின்னவன் - உலகத்தோற்ற ஒடுக்கங்கட்கு முன்னும் உள்ளவன் ; பின்னும் உள்ளவன் . ` மூவாமேனி ` என்றது உடம்பொடு புணர்த்தலாகலின் ` மூவா மேனியன்காண் ` எனவுங் கொள்ளப்படும் . மூவா மேனி - என்றும் ஒரு நிலையாயே இருக்கும் தன்மை . ` சோதி ` என்றது . ` சுடர் ` என்றவாறு . ` மூன்று சுடர் ஆகிய அத்தன்மையன் ` என்க . ` அடியார்க்கு அணியவன் ( அண்மையில் உள்ளவன் ); அண்டத்தார்க்குச் சேயவன் ` ( தொலைவில் உள்ளவன் ) என நிரனிறையாகக் கொள்க . படைப்புக் காலத்துச் சிலகற்பங்களில் , பிரமனை வலப்பக்கத்திலும் , திருமாலை இடப் பக்கத்திலும் சிவபிரான் தோற்றுவிப்பனாகலின் , ` திருமால் பாகம் வேண்டினன் ` என்றருளிச் செய்தார் . ஈண்டு புனல் - மிக்க நீர் . கங்கை - ` கங்கை ` என்னும் தேவி . மன்னவன் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 9

நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா
நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்
கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண்
காலங்க ளூழியாய்க் கலந்து நின்ற
பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண்
பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

வானவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் செல்வமாய் , யாரும் மனத்தால் அணுக இயலாத நீதியனாய் வேதியனாய்த் தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் சென்று சேரும் கதியாய் , நீராய்த் தீயாய்ப் பல ஊழிக்காலங்களாய் , எல்லாருக்கும் தலைவனாய்ப் பழமாய்ப் பழத்தின் சாறாய்ப் பாம்பையும் பிறையையும் பழகுமாறு அருகில் வைத்த ஞானமுடையவனாய் என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

` நெதி ` யெனினும் , ` நிதி ` எனினும் ஒக்கும் . நினைய ஒண்ணா - மனத்தால் அணுக இயலாத ; உண்மை நீதி மக்களால் உணர்தற்கு அரிதாகலின் , ` யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதி ` என்றருளினார் ; இது பற்றிச் சேரமான்பெருமாள் நாயனார் அரசுபூணுதற்கு அஞ்சி , இறைவனை வேண்டிக் கழறிற்றறிவாராந் தன்மை பெற்றமை யறிக ; இதனால் , அரசன் , அநீதி என்றுணராமையால் ஓறாதொழியினும் , அது செய்தாரை இறைவன் அருள் ஒறுக்கும் என்பது பெற்றாம் . இன்னும் இதனானே , நீதியாயினவற்றை அரசன் உணர்ந்து அளிசெய்யா தொழியினும் , அவனருள் அது செய்யும் என்ப தும் போதரும் . வேதியன் - வேதம் ஓதுபவன் . கார் - மேகம் . பதி - தலைவன் . இரதம் - சுவை . மதியவன் - ஞானமுடையவன் : ` தன்னை அடைந்தாரையும் தன்வண்ணமாக்கும் ஆற்றல் வாய்ந்த ஞான ஒளியை உடையவன் ` என்பார் , ` பாம்போடு திங்கள் பயில ( அச்ச மின்றிப் பழகும்படி ) வைத்த மதியவன் ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 10

பங்கயத்தின் மேலானும் பால னாகி
உலகளந்த படியானும் பரவிக் காணா
தங்கைவைத்த சென்னியரா யளக்க மாட்டா
அனலவன்காண் அலைகடல்சூ ழிலங்கை வேந்தன்
கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங்
குழகன்காண் அழகன்காண் கோல மாய
மங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

தேவர் வழிபடும் வலிவலத்தான் தாமரையில் உறையும் பிரமனும் வாமனனாய் உலகை அளந்த திருமாலும் கைகளைத் தலைமிசைக் குவித்து முன்னின்று துதித்து முடியையும் அடிகளையும் எளிமையில் காணமாட்டாது , தம் முயற்சியால் காண முற்பட்டமையின் காணமுடியாத தீப்பிழம்பாக நின்றவனாய் இராவணனுடைய பூக்களைச் சூடிய தலைகள் நெரியுமாறு விரலால் அவனை அழுத்திய இளையனாய் , அழகனாய் , அழகிய பார்வதி பாகனாய் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

பாலன் - சிறியவன் ; வாமனன் . ` பாலகனாய் ` என்பதும் பாடம் . படியான் - நிலைமையன் . ` அங்கை வைத்த சென்னியராய் ` என்பதனை , ` சென்னி வைத்த அங்கையராய் ` என மாற்றிப் பொருள் கொள்க . இவ்வாறருளினாராயினும் , பரவிக் காணாது ` அளக்க மாட்டாது சென்னி அங்கை வைத்த ` என்றலே கருத்தென்க . ` பரவிக் காணாது ` என்றது , ` முன்பே பரவிக் காண நினையாது ` என்றபடி . பின்பு அங்கை சென்னி வைத்து , பரவி , ` அலர ` என்பது , துச்சாரியை பெற்று , ` அலர்த்த ` என நின்றது ; ` மலர்களை உடைய ` என்பது பொருள் . குழகன் - இளையன் : என்றது , ` அழகன் ` எனப் பின் வருவதற்கு ஏதுக்கூறுங் குறிப்பினதாய் நின்றது . ` மங்கையர் ` என்றது , உயர்த்தற் பன்மை .
சிற்பி