திருக்கோகரணம்


பண் :

பாடல் எண் : 1

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

பெரிய மேலைக் கடலால் ஒருபுறம் சூழப்பட்ட கோகரணத்தில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் தாழ்ந்த சடையில் பிறையையும் கங்கையையும் அணிந்தவனாய் , அடியார்களுக்கு அமுதாய் வானத்தில் உலவிய அசுரரின் முப்புரங்களையும் அழித்தவனாய் , அழகிய உருவங்களின் மேம்பட்ட அழகுடைய உருவினனாய் , இசைவகைகளை உடைய நான்கு வேதங்களையும் பாடினவனாய்த் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய் , மந்திரத்தை உடைய வேதமாகவும் உள்ளான் .

குறிப்புரை :

சந்தித்தான் - பொருந்தினான் ; அணிந்தான் , அவ்வுரு - அவரவர் விரும்பி வணங்கும் வடிவம் . இனி , ` அழகிய உருவம் ` எனக் கொண்டு , ` அழகிய உருவங்கள் பலவற்றுள்ளும் அழகிய திரு மேனியை உடையவன் ` என்றுரைத்தலுமாம் . ` பண்தரத்து ` என்பது , ` பந்தரத்து ` எனத் திரிந்து நின்றது . ` இசை வகைகளை உடைய ` என்பது பொருள் . பாணி - தாளம் ; என்றது . அதற்கியைய ஆடும் கூத்தினை . மந்திரத்து மறை - மந்திரத்தை உடைய வேதம் . மாகடல் - பெரிய கடல் ; என்றது மேற்குக் கடலை .

பண் :

பாடல் எண் : 2

தந்தவத்தன் தன்தலையைத் தாங்கி னான்காண்
சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்
கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்
கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்
வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்
வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்
வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ ணான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் உலகைப் படைத்த பிரமனது மண்டையோட்டை ஏந்தி எங்கும் சஞ்சரிப்பவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் , மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய் , அதிகை வீரட்டனாய்த் தான் என்றும் அழிவில்லாதவனாய்த் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய்த் திருநீறு பூசியவனாய்த் தவமாகிய பெருமிதம் உடையவனாய் , பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்த் தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய் , உள்ளான் .

குறிப்புரை :

தந்த அத்தன் - ( உலகத்தைப் ) பெற்ற தந்தை ; பிரமன் . இனி , ஓரொரு கற்பத்தில் . குணருத்திரர் பிரமனிடத்துத் தோன்றுதல் பற்றியும் , விண்ணவர் பகுதியினராகிய பதினோர் உருத்திரர் பிரமனது நெற்றியினின்றும் தோன்றினர் என்று புராணம் ( கந்த புராணம் உருத்திரர் கேள்விப் படலம் ) கூறுதல் பற்றியும் . அவ்வுருத்திரரைத் தந்தமையை மகாருத்திரனாகிய இறைவனைத் தந்ததாக உபசரித்து அருளிச்செய்ததாக உரைத்தலுமாம் . இனி , ` சிருட்டியைக் கற்பித்தற் பொருட்டுச் சிவபிரான் பிரமன்பால் தோன்றினான் ` எனவரும் வரலாறுகள் பற்றி அருளிச்செய்ததூஉமாம் . இவ்வரலாறுகள்பற்றிச் சிவபிரானுக்குத் தாழ்வு ஏற்றுதல் கூடாதென்றற்கு ` தந்த , அத்தன் தன்தலையைத் தாங்கினான் ( ஏந்தியுள்ளான் ) காண் ` எனப் பழிப்பது போலப் புகழ்புலப்பட ஓதியருளினார் . ` தந்தையாதல் உண்மையாயின் , அவனது தலை தடிந்து தாங்கப்படுதல் எவ்வாறு கூடும் . உலக மக்களுள் தந்தையும் மகனும் போலக் கொள்ளுதல் ஈண்டுப் பொருந்தாமையின் ` என்பது திருக்குறிப்பு . சாரணன் - எங்கும் சரிப்பவன் . ` கந்தம் ` என்பது , ` கெந்தம் ` என வந்தது . கெந்தத்தன் - ( மலரில் ) மணம் போல்பவன் . வந்து ஒத்த நெடுமால் - தன்னிடத்துத் தோன்றி , தன்னோடு ஒத்து நின்ற ( முத்தொழில்களுள் ஒன்றைச் செய்கின்ற ) திருமால் .

பண் :

பாடல் எண் : 3

தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண்
தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள
பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண்
புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்
மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் தான்காண்
மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் தன் உருவையார்க்கும் எதிர்ப்படச் செய்யாதவனாய்த் தாழ் சடையனாய் , அடியார்களுக்கு அநுபவப் பொருளாகிய பொற்சோதியாய் , கங்கா தரனாய் , பழையோனாய் , ஐம்பூதங்களாய் , மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனாய் , யானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு போர்த்தவனாய் , என்றும் நிலை பெற்ற உருவமுடையவனாய் , வேதங்களை ஓதிக்கொண்டு இருப்பவன் ஆவான் .

குறிப்புரை :

தாக்குதல் - எதிர்ப்படுதல் : ` யானை - வெரூஉம் புலிதாக் குறின் ` ( குறள் - 599) என்பதன் உரை காண்க . உள்ள - உள் பொருளாகிய ( அநுபவமாகின்ற ). ` சோதி ` என்பதில் , ` காண் ` என்பது தொகுத்தலாயிற்று . புனலாடினான் , நீரைத் தலையில் அணிந்தவன் . ` பூதலங்களாயினான் ` என்பதும் பாடம் . ` அவள் வெருவ ` என்க . மன் உரு - நிலைபெற்ற . பொருள் ஓதினான் - செய்தான் .

பண் :

பாடல் எண் : 4

ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண்
அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண்
நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண்
நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்
கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ்கோகரணம் மன்னிய பெருமான் கங்கையைச் சடையில் சூடிய ஆரூரனாய்ப் பழனத்தில் உறைபவனாய் , அன்பனாய்த் திருநீறணிந்து ஒளிவீசும் மேனியனாய் , தலைவனாய் , ஒப்பற்றவனாய் , பிளவு தோன்றுதற்குக் கருவியாகிய மழுப்படையினனாய் , கொக்கரை என்ற வாச்சியத்தை உடையவனாய் , மேம்பட்ட பூதக்கூட்டத்தை உடையனாய் , பகையாகச் செயற்பட்ட மும்மதிலையும் அழித்து மறையச் செய்தவனாவான் .

குறிப்புரை :

பழனம் , சோழநாட்டுத் தலம் . நிழல் - ஒளி . நிருபன் - அரசன் ; தலைவன் . கூறு ஏறு - பிளவு தோன்றுதற்குக் கருவியாகிய . கொக்கரை - ஒரு வாச்சியம் ; சங்குமாம் . மாறு - பகை ; மதிலை உடையாரது செயல் , மதில்மேல் ஏற்றப்பட்டது .

பண் :

பாடல் எண் : 5

சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்
தீயம்பன் காண்திரி புரங்கள் மூன்றும்
பொன்றப் பொடியாக நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையா ளிகாண்
அன்றப் பொழுதே அருள்செய் தான்காண்
அனலாடி காண்அடியார்க் கமுதா னான்காண்
மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் திரிபுரங்களை நோக்கிச் சென்று மேரு மலையாகிய வில்லை வளைத்துத் தீயாகிய அம்பைச் செலுத்தி வானத்தில் திரிந்த மும்மதில்களும் சாம்பலாகுமாறு செய்தவனாய் , உயிர்களை ஆளாக உடையவனாய் , பூதப் படை உடையவனாய் , அடியார்களுக்கு அன்றன்று அவ்வப்பொழுதே அருள் செய்தவனாய்த் தீயிடையே கூத்தாடு பவனாய் , அடியவர்களுக்கு அமுதானவனாய் , நறுமணம் கமழும் நீண்ட சடையை உடையவனாய் உள்ளான் .

குறிப்புரை :

` அச் சிலை ` என்பதில் , அகரம் பலரறிசுட்டு , ` மேரு மலையாகிய அவ் வில் ` என்பது பொருள் . தீ அம்பு - அக்கினி தேவனாகிய அம்பு . திரி புரங்கள் - ( வானத்தில் ) திரியும் மதில்கள் . பொடி - சாம்பல் . பூதன் - உயிர்களை ஆளாக உடையவன் . ` அன்று அப்பொழுதே ` என்பதற்கு முன் , ` வேண்டினார்க்கு ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . மன்றல் மணம் - நறுமணம் .

பண் :

பாடல் எண் : 6

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபா லிகாண்
கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் சடைமுடியாகிய ஓரிடத்தில் பிறையையும் கங்கையையும் சேர்த்து வைத்த புகழோனாய் , பிறப்பில்லாதவனாய் , நஞ்சுபொருந்திய நீல கண்டனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய்க் கட்டங்கம் என்ற படை உடையவனாய்க் கையில் மண்டையோட்டை ஏந்திப் பறை ஒலிக்கப் பல பாடல்கள் பாடியவனாய் , தாளத்திற்கு ஏற்ப ஆடியவனாய் , அடியார்கள் ஓதும் வேத ஒலியையும் பாடும் பாடல் இசையையும் செவிமடுத்தவனாவன் .

குறிப்புரை :

` பெண் ` என்றது , கங்கையை . ஒருபால் - ஓர் இடம் : சடைமுடி . பேர் ( பெயர் ) - புகழ் . கறை ஓடு - நஞ்சு பொருந்திய . பாணி ஆக - தாளம் உண்டாக ; ` ஆடினான் ` என முன்னே கூட்டுக . மறையைக் கேட்டல் பொருள்பற்றியும் , கீதம் கேட்டல் இனிமை பற்றியும் என்க . கேட்டல் , ஓதுவாரிடத்து .

பண் :

பாடல் எண் : 7

மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்
விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்
முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண்
மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்
எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்
ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று
மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் ஒளிவீசும் அண்டச்சுவரின் மேலும் பொருந்தியவனாய்த் தேவர்கள் தலைவனாய் , எவ்விடத்தையும் தம் தொழிலுக்கு உட்படுத்திய மூவருக்கும் காரணனாய் , முத்தலைச்சூலம் ஏந்திய அழகினனாய் , என் எண்ணத்தை அளந்து என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய் , அம்பு எய்தலில் வல்லவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு இருந்து , உலகை அளந்த திருமாலால் அறியப்பட முடியாத வியக்கத்தக்க நிலை உடையவனாக உள்ளான் .

குறிப்புரை :

` மேல் ` என்றது , அண்டச்சுவரை உணர்த்தி நின்ற ஆகுபெயர் . முகடு - உச்சி . எங்கும் அளந்த மூவர் - எவ்விடத்தையும் தம் தொழிலுக்கு உட்படுத்திய மும்மூர்த்திகள் . ` மூவர்க்கும் முதலானான் ` என்றதனால் , பரமசிவன் . ` நான்காவது பொருள் ` என்றும் , ` துரிய மூர்த்தி ` என்றும் சொல்லப்படுதல் பெறப்பட்டது . மூவரும் குணமூர்த்திகள் ஆதலின் , நிர்க்குணனாகிய பரமசிவன் , அவர்க்கு அப்பாற்பட்டவனாயினான் என்க . எண் - எண்ணம் ; அதனை அளந்து என்றது , உடன் நின்று உணர்தலை . ஏவலன் - அம்பு எய்யும் தொழிலில் வல்லவன் ; இது , திரிபுரத்திடத்தும் , அருச்சுனனிடத்தும் சென்றமை முதலியவற்றால் நன்கறியப்படும் . ` இமையவர்கள் ஏத்த நின்று அவர்களை அவர்தம் தொழிலில் ஏவுதல் வல்லவன் ` எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 8

பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண்
பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்
முன்னி யுலகுக்கு முன்னா னான்காண்
மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்
இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் இணைத்த சடைமீது பிறை சூடிப் பேரருளாளனாய்ப் பிறப்பிலியாய் , உலகுக்குக் காரணனாய் , மும்மதிலும் அழித்து மகிழ்ந்த முதல்வனாய்த் தன் உண்மை உருவை மற்றையார் அறிய இயலாத இயல்பினனாய் , ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவனாய்ப் பார்வதி பாகனாய் உள்ளான் .

குறிப்புரை :

` உலகுக்கு முன்னாய் ( அது தோன்ற ) முன்னினான் ( நினைத்தருளினான் )` என்க . ` முன்னினான் ` என்றதனால் , ` ஏனை யோர்போலக் கரணத்தால் ( கருவிகளால் ) அன்றிச் சங்கற்ப ( நினைவு ) மாத்திரையானே , எல்லாம் செய்பவன் ` என்பதாயிற்று . இதனை , ` நோக்காதே நோக்கி ` என்பது முதலாகச் சிவஞானபோத வெண்பா இனிதுணர்த்திற்று . இங்ஙனம் சங்கற்ப மாத்திரையாற் செய்தலான் . அத்தொழில்கள் பற்றி அவன் தன் நிலை வேறுபடுதல் இல்லை என்க . ` அச்செயலை உகந்த ` என்க . எனவே , ` அவ்வாறு செய்தலை விரும்பியே செய்தனன் ` என்பது கருத்தாயிற்று . ` உரு ` என்றது தன்மையை ; எத்திறத்தாராலும் அறிய ஒண்ணாத தன்மையுடையவன் என அவனது பெருமை விளக்கியருளியவாறு . ` இப்படியன் இந் நிறத்தன் , இவ் வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே ` ( ப .97. பா .10.) என இனி வருவதும் , ` இன்ன உரு இன்ன நிறம் என்றறிவதேல் அரிது `( தி .3. ப .71. பா .4) என்றருளிச் செய்ததுங் காண்க .

பண் :

பாடல் எண் : 9

வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்
வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண்
பொட்ட அநங்கனையும் நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையி னான்காண்
கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் வீணாக அடியவர்களை உரத்தகுரலில் இழித்துப் பேசுபவருக்குக் கொடிய நெருப்புப் போன்றவனாய்த் தவத்தின் பெருமிதம் உடையவனாய் , வீரட்டத் தலங்களில் விரும்பியிருப்பவனாய் , விரைவாக மன்மதனைச் சாம்பலாகுமாறு தீவிழித்தவனாய் , ஐம்பூத வடிவினனாய்ப் பூதப் படையினனாய் , தீங்குதரும் கொடிய வினைகள் தாக்காதவாறு காத்து அடியவர்களை ஆட்கொள்பவனாய் , கற்கண்டு போன்ற இனியவனாய் , வண்டு தேன் உண்ட கொன்றையைச் சூடியவனாய் , பிறை சூடியாய் உள்ளான் .

குறிப்புரை :

வெடித்தல் - ஒலித்தல் ; நெருப்பை , ` குரையழல் ` ( வெண்பா மாலை - 8) என்றல் செய்யுள் வழக்காதல் உணர்க . ` வெட்ட வெடித்தல் ` என்பது , மிக ஒலித்தல் என்னும் பொருளதாகிய ஓர் இரட்டைக்கிளவி . ` ஆர்க்கும் ` என்பதன் இறுதிநிலை தொகுத்த லாயிற்று . ஆர்த்தல் - ஆரவாரித்தல் இனி , ` வெடித்தல் , நீங்குதல் ` எனக் கொண்டு , ` மிக நீங்கினார்க்கு ( இகழ்ந்தார்க்கு ) அழல்போன்றவன் ` என்றுரைத்தலுமாம் . பொட்ட - கடிதில் : ` பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் ` ( தி .5. ப .42. பா .6.) என்றருளியதுங் காண்க . கட்டவினை - துன்பம்தரும் வினை . கண்டன் - கண்டு ( சருக்கரை ) போன்றவன் : ` கண்டம் ( சருக்கரை ) போன்றவன் ` எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக்
கால்விரலால் தோள்நெரிய வூன்றி னான்காண்
மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு
மீண்டே யவற்கருள்கள் நல்கி னான்காண்
பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்
போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்
மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் கைகளால் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனை , கால் விரலால் தோள்கள் நெரியுமாறு அழுத்தியவனாய் , தன் உடம்பில் உள்ள நரம்புகளை வீணை நரம்புகளாகக் கொண்டு இன்னிசை எழுப்பி , தன்னைச் செவிமடுக்கச் செய்த இராவணனுக்கு அருள்களை விரும்பிக் கொடுத்தவனாய்ப் பொய்யருடைய உள்ளங்களுக்கு அப்பாற்பட்டவனாய் , போரிடுவதற்குரிய படைக்கலன் ஏந்தியவனாய் , அவற்றால் போர் செய்யப்படுவார் ஒருவரும் இல்லாதானாய் , நீலகண்டமும் , நீண்ட சடையும் உடையவனாய் , அடியார்கள் அகக் கண்ணுக்குத் தோற்றம் வழங்குகின்றான் .

குறிப்புரை :

` கையால் எடுத்தற்கரிதாகிய மலையை எடுத்தவனைக் காலால் எளிதில் ஊன்றினான் ` என்பது நயம் . மெய்யின் நரம்பு - உடம்பிலுள்ள நரம்பு . இசையால் - ஒலியால் ; ` இசை கேட்பித்தாற்கு ` என்க . ` மனத்துக்கு ` என்னும் நான்காவது தொகுத்தலாயிற்று . ` போர் செய்தற்குரிய படைக் கலங்களை யுடையவன் ; ஆயினும் , அவற்றால் போர் செய்யப்படுவார் ஒருவரும் இல்லாதவன் ; யாவரும் நெற்றிக் கண் , புன்முறுவல் , கைந்நகம் , கால் , கால் விரல் , என்பவற்றுக்கே ஆற்றாராயினர் ` என்றவாறு ; இதனால் அவனது பேராற்றல் உணர்த்தப் பட்டது .
சிற்பி