திருவீழிமிழலை


பண் :

பாடல் எண் : 1

போரானை ஈருரிவைப் போர்வை யானைப்
புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலா னானைப்
பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

தன்னை எதிர்த்து வந்த யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை மேலே போர்த்தி , புலித்தோலை ஆடையாக உடுத்தவனாய் , நிலனாய்ச் சந்திரனாய்ச் சூரியனாய் , வானவெளியாய் , நீராய் காற்றாய்த் தீயாய்ப் பல உயிர்களாய் அட்ட மூர்த்தியாய்ப் பரந்து நிற்பவனாய் , பகைவருடைய மும்மதில்களும் எரியுமாறு நினைத்த போது இவர்ந்து சென்ற தெய்வத்தேருடையவனான திருவீழி மிழலைப் பெருமானை அணுகி வழிபடாதவர்கள் தீய வழியிலேயே சென்று கெடுகின்றவர் ஆவார்கள் .

குறிப்புரை :

போர் ஆனை - போர் செய்ய வந்த யானை ; கயாசுரன் . ஈர் உரிவை - உரித்த தோல் . ` உடை ` என்பது இடையில் உடுக்கப் படுவதற்கும் , ` ஆடை ` என்பது மேலே இடப்படுவதற்கும் ( உத்தரீயம் ) பெயர் . ` உடுக்கப்படுவது , ஆடுதலை ( அலைதலை ) உடையது ` என அவற்றின் காரணம் உணர்க . ` யானைத் தோலைப் போர்வையாகவும் , புலித்தோலை உடுப்பதும் மேலே இடுவதும் ஆகிய கூறைகளாகவும் இறைவன் கொண்டுள்ளான் ` என்பது இங்கு இனிது விளக்கியருளப்பட்டுள்ளது . ` புலி அதளாகிய ஏய் ( பொருந்திய ) உடை ஆடை ` என்க . பார் - பூமி . மதி - சந்திரன் . பகல் - சூரியன் . வெளி - வானம் . முப்புரம் எரிக்கச் சென்றபோது ஊர்ந்து சென்றது , நிலம் முதலியவற்றின் உரிமைத் தெய்வங்களால் இயன்ற தேர் ஆதலின் , ` தெய்வத் தேர் ` என்றருளினார் . ` நெறிக்கு ` என்பது , கண்ணுருபின் பொருளில் வந்த உருபு மயக்கம் . ஏகாரம் , நன்னெறியினின்று பிரித்தலிற் பிரிநிலை . ` சேர்கின்றார் ` என்பது வினைப்பெயர் ; அதன்கண் ஏகாரம் தேற்றம் . இங்ஙனமாதலின் , ` தம்மை யறியாது தாம் தீநெறிக்கண் சென்று கெடுகின்றவரே யாவர் ` என உணர்வித்தவா றுணர்க .

பண் :

பாடல் எண் : 2

சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு
தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப்
பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்
கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக்
கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்
சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

பிணங்களை உடைய சுடுகாட்டுச் சாம்பல் , எலும்பு மண்டையோடு பஞ்சவடி என்ற இவற்றை அணிந்தவனாய்ப் பிறப்பைத் தடுக்கின்ற பாசுபத மதத்தினர் விரும்பிக் கொள்ளும் வேடத்தைத் தரித்தவனாய்த் தன்னை ஒழிந்த தேவர்களைத் கொண்டு தக்கன் செய்த வேள்வியை அழித்தவனாய்க் கச்சி ஏகம்பனாய்த் தன் திருவடிகளைத் சார்ந்த அடியவனைக் கோபித்து வந்த கூற்றுவனைக் கீழே விழுமாறு அவனைக் கோபித்து உதைத்தவனாய்த் திரு வீழிமிழலையில் உள்ள பெருமானை அடையாதவர் தீ நெறிக்கண் சேர்கின்றவராவர் .

குறிப்புரை :

மயிர்க் கயிறு - மயிரினாலாகிய பூணூல் ; இது ` பஞ்சவடி ` எனப்படும் . பவம் தாங்கு - பிறப்பைத் தடுக்கின்ற . இறைவன் ஒரோவொரு காரணம்பற்றிக்கொண்ட வேடங்கள் பலவற்றுள் ஒரோவொன்றை ஒவ்வொருவர் விரும்பிக்கொள்ளும் நிலையில் , ` பாசுபத மதத்தினர் விரும்பிக்கொண்ட வேடம் ` என்பார் , ` பாசு பத வேடத்தானை ` என்றருளினார் . வேள்வி , தக்கன் செய்தது ; அதனைத் தேவர் பலரும் உடன்பட்டமையின் , ` பண்டமரர் கொண்டு கந்த வேள்வி ` என்றார் . எல்லாம் - முழுதும் , கவர்ந்தான் - அழித்தான் . கழல் அடைந்தான் , மார்க்கண்டேயன் . கறுத்த - வெகுண்ட . சிவந்தான் - வெகுண்டான் . ` கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள ` ( தொல் . சொல் . 372.) என்பது உணர்க .

பண் :

பாடல் எண் : 3

அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை
அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட
நின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை
நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்
வென்றானை மீயச்சூர் மேவி னானை
மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்
சென்றானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழிருந்து அறத்தை உபதேசித்தவனாய் , அகத்தியனை அவன் பெருமை தோன்ற உயரச் செய்தவனாய்ப் பிரமனும் திருமாலும் தேடுமாறு அனற் பிழம்பாய் நின்றவனாய் , கடல்விடம் உண்டவனாய்ப் பார்வதியோடு சேர்ந்திருந்தே பொறிவாயில் ஐந்து அவித்தவனாய் , மீயச்சூரை உறைவிடமாக விரும்பியவனாய்ப் பார்வதியின் தவத்தின் திண்மையை அளக்கச் சென்றவனாய்த் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

குறிப்புரை :

அகத்தியரை உகத்தல் , முனிவருட் சிறந்தோராதல் பற்றி ; இது நிலம் வடதிசை தாழ்ந்து தென்றிசை உயர்ந்த ஞான்று , சிவபிரான் இம்முனிவரைத் தனக்கு நிகராகத் தென்றிசை சென்றிருக்க விடுத்தமை முதலியவற்றால் அறியப்படும் . ` நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை ` என்றது , ` உயிர்கட்குப் போகம் அமைதல் வேண்டிப் போக வடிவம் கொண்டு போகிபோல நிற்கும் அவ்வளவே யன்றி , உண்மையில் போகியல்லன் ` என்றவாறு . மீயச்சூர் , சோழ நாட்டுத் தலம் . நிறை - திண்மை . சிவபிரான் , இமயமலையில் உமையம்மை செய்த தவத்தை அளக்கச்சென்ற வரலாற்றினைக் கந்தபுராணத்துட் காண்க .

பண் :

பாடல் எண் : 4

தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

தூயனாய்ப் பவளத்தின் ஒளியை உடையவனாய் , எல்லா உயிர்களுக்கும் துணையாக நின்ற தாயாய்த் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய் , எல்லாருக்கும் நன்மை செய்பவனாய்ச் சந்தோக சாமம் ஓதுபவனாய் , மந்திரங்களை எண்ணுபவர் மனத்து உறைபவனாய்த் திருவைந்தெழுத்தின் பயனைத் தெளியாது ஐயுற்று ஓதுபவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

குறிப்புரை :

தாயான் - தாய் போன்றவன் . வேதத்துள் இசையின்றி இயற்றமிழ்போலச் சொல்லப்படுவன ` இருக்கு ` எனவும் , இசைத் தமிழ்போல இசையோடு சொல்லப்படுவன ` சாமம் ` எனவும் சொல்லப்படும் . அவற்றுள் சாமங்கள் , ` இரதந்திரம் , பிருகத்து , வைரூபம் , வைராசம் ` முதலாகச் சொல்லப்படுகின்றன . அவற்றுள் ` சந்தோக சாமம் ` என்பது ஒன்றுபோலும் . மந்திரிப்பார் - மந்திரங்களை எண்ணுபவர் . ` வஞ்சனையால் ` என்றது , ` பயனுடைத்தாதலைத் தெளியமாட்டாது ஐயுற்று ` என்றவாறு . சேயான் - சேய்மையில் ( தொலைவில் ) உள்ளவன் .

பண் :

பாடல் எண் : 5

நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த
நஞ்சமுது செய்தானை அமுத முண்ட
மற்றமரர் உலந்தாலும் உலவா தானை
வருகாலஞ் செல்காலம் வந்த காலம்
உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா
ஒருசுடரை இருவிசும்பி னூர்மூன் றொன்றச்
செற்றவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

ஞானத்தின் பொருட்டுச் செய்யப்படும் தவத்திற்குப் பயன் அளிக்கும் பெரியவனாய் , தீங்கு செய்வதாய் வந்த விடத்தை அமுதாக உண்டவனாய் , அமுதமுண்ட தேவர்கள் இறந்தாலும் தான் இறவாதவனாய் , முக்காலப் பொருள்களை உணரும் ஞானிகளும் உணரமுடியாத ஒப்பற்ற ஞானப்பிரகாசனாய் , வானத்தின் உலவிய மதில்கள் மூன்றையும் ஒரு சேர அழித்தவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர் .

குறிப்புரை :

நற்றவம் , ஞானத்தின் பொருட்டுச் செய்யப்படும் தவம் ; ஞான சாதனம் . ` இது நிட்காமிய அறமே ` என்பர் . ஆயினும் , சிவபிரானை நோக்கிச் செய்யும் அறமே உண்மையில் ஞான சாதனமாதல்பற்றி , ` நற்றவத்தின் நல்லான் ` என்றருளிச் செய்தார் . ` நற்றவத்தினுள் நற்றவமாய் நிற்பவன் ` என்பது பொருள் . ` மற்று ` என்பது வினைமாற்றாய் , ` உலவாது நிலைபெறுத்தும் அமுதத்தை உண்ட அமரர் நிலைபெறாது உலந்தாலும் ` என்னும் பொருள் தோற்று வித்தது . உலந்தாலும் - அழிந்தாலும் . ` வருகாலம் , செல்காலம் ` என்பன முறையே எதிர்கால நிகழ்கால வினைத் தொகைகள் . ` அத்தை `, ` அதனை ` என்பதன் மரூஉ ; ` வத்து ` என்பதில் உகரம் தொகுத்தலாய் நின்றது எனலுமாம் . ` உற்றவற்றை ` என்பதே பாடம் என்றலும் ஒன்று . எவ்வாறாயினும் , ` முக்காலத்தும் உற்ற பொருளை ` என்பதே பொருள் . உம்மை ; சிறப்பு . முக்காலமும் உணர்தல் யோகத்தாற் கூடும் . இறைவனை உணர்தல் அவன் அருளே கண்ணாகக் காணும் ஞானத்தாலன்றிக் கூடாமையின் , முக்காலமும் உணர்ந்தார்க்கும் இறைவன் உணரலாகாதவனாயினான் என்க .

பண் :

பாடல் எண் : 6

மைவான மிடற்றானை அவ்வான் மின்போல்
வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்
பெய்வானைப் பிச்சாட லாடு வானைப்
பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்
பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப்
பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை
செய்வானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

கரிய மேகம் போன்ற நீலகண்டனாய் , வானத்து மின்னல்போலச் சடையில் ஒளிவீசும் பிறை அணிந்தவனாய் , எங்கும் மழையாய் அருளைப் பொழிவானாய் , எங்கும் சென்று பிச்சை எடுப்பானாய்ப் பள்ளம் போன்ற வாயை உடைய பேய்க் கூட்டங்கள் ஆரவாரிக்க நிறைந்த தூணியிலிருந்து அம்பைச் செலுத்துபவனாய்ப் பொய்கலவாத மெய்யனாய்ப் பூமியிலும் மேலுலகங்களிலும் பொருந்தும் வாழ்க்கையில் உயிர்களைப் பிறக்கச் செய்வானாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

குறிப்புரை :

மை வான மிடறு - கரிய மேகம்போலுங் கண்டம் . ` அம் மேகத்தில் தோன்றுகின்ற மின்னல்போல வளர்ந்த சடை ` என்க . மழையாய் - மழை பெய்யும் மேகமாய் நின்று . பிச்சாடல் - பித்தாடல் ; துன்பமின்றி இன்பத்தோடே நின்று ஆடுதல் . ` பிச்சை ஏற்றலை எங்கும் செய்வானை ` என்றலுமாம் . பில வாய் - பிலம் ( பள்ளம் ) போன்ற வாய் . பொய்வான் - குத்திப் பறிப்பான் . பொய்த்தல் - பறித்தல் ; இது , ` புய்த்தல் ` என்பதன் மரூஉ ; இஃது இக்காலத்தில் , ` பிய்த்தல் ` என்றாயிற்று . ` பொய்ப்பான் ` எனற்பாலது எதுகைநோக்கி , ` பொய்வான் ` எனப்பட்டது . மண்டலம் - மேலுலகங்கள் . ` பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை செய்வான் ` என்றது , ` உயிர்களை அன்ன பிறப்புக்களிற் செலுத்துவான் ` என்றதாம் .

பண் :

பாடல் எண் : 7

மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை
வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்
புக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப்
பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்
தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்
தத்துவனைத் தடவரையை நடுவு செய்த
திக்கானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

எல்லோருக்கும் மேலானவனாய்க் குறையிரந்து வருபவர்களை விரும்பிக் குறைமுடிப்பவனாய் , அறுவகை வைதிக சமயங்களாகவும் ஆகியவனாய் , எல்லாப் பொருள்களுக்கும் பொதுவானவனாய்த் தேவர்களும் போற்றத்தக்கானாய்த் தன்னைத் தவிர வேறு மெய்ப்பொருள் இல்லாதவனாய் , மேருமலையை நடுவாக வைத்துத் திசைகளைப் பகுக்கச் செய்தவனாய் , உள்ள திருவீழி மிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

குறிப்புரை :

மிக்கான் - மேமேலான் . குறைந்து - குறையுற்று ; குறையிரந்து . ` அடைந்தாரை ` என இரண்டாவது விரிக்க . மேவலான் - விரும்புதல் உடையவன் ; இது , ` மேவல் ` என்பது அடியாக வந்த பெயர் . இருமூன்று சமயம் , ஆறுசமயங்கள் , சமயங்களை ஆறாகக் கூறுதல் தொன்றுதொட்ட வழக்கு . ஆயினும் அவை இவை என்பதனை வேறுவேறாகக் கூறுவர் . ` சைவம் , வைணவம் , காணாபத்தியம் , கௌமாரம் , சாத்தேயம் , சௌரம் ` என்றல் ஒருவகை ; இவை வேதத்திற் சொல்லப் பட்டு அவரவரால் வழிபடப்படும் கடவுளரைப் பற்றிக் கூறப்படுவன . ` வைரவம் , வாமம் , காளாமுகம் , மாவிரதம் , பாசுபதம் , சைவம் ` இவை உட்சமயங்கள் என்றும் , ` உலகாயதம் , புத்தம் , சமணம் , மீமாஞ்சை , பாஞ்சராத்திரம் , பட்டாசாரியம் ` இவை புறச் சமயங்கள் என்றும் கூறுதல் ஒருவகை ( பிங்கல நிகண்டு ). இவை பழைமை புதுமை பற்றிக் கூறப்படுவன . இவையெல்லாம் இன்றி , ` புறப்புறம் , புறம் , அகப்புறம் , அகம் ` என நால்வகைப்படுத்து ஒவ்வொன்றனுள்ளும் அவ்வாறு சமயங்கள் சிவஞானமாபாடியத்துட் கூறப்பட்டன . எவ்வாறாயினும் , சமயங்கள் ஆறு எனவே யாண்டும் கூறப்படுதல் அறிக . ` பொருளுக்கு ` ` பொருள்களுள் ` என வேற்றுமை மயக்கம் . தக்கான் - மேலானவன் . தத்துவன் - உண்மை இயல்புடையவன் . ` தடவரை ` என்றது , மேரு மலையை ; அதனை நடுவாக வைத்தே நிலத்துத் திசைகள் பகுக்கப்படுதலின் . ` தடவரையை நடுவுசெய்த திக்கான் ` என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 8

வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை
ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்
உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற
கானவனைக் கயிலாயம் மேவி னானைக்
கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்
தேனவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

இந்திரனுடைய தோள்களை நீக்கிய வலிமை உடையவனாய் , வளைகுளம் மறைக்காடு என்ற தலங்களில் உறைபவனாய் , உடலாகவும் உயிராகவும் இருப்பவனாய் , ஒரு காலத்தில் அருச்சுனனுடைய தவத்தின் உறுதி நிலையை அறியச் சென்ற வேடுவனாய்க் கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்த் தன்னைச் சேர்ந்தவர்களுக்குத் தேன் போல இனியவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர் .

குறிப்புரை :

வானவர் கோன் தோள் இறுத்தது மேலே ( ப .31 பா .2) காட்டப்பட்டது . வளைகுளம் , வைப்புத்தலம் . இஃது ஐயடிகள் காடவர் கோன் நாயனார் திருவெண்பாப் பெற்றது . கானவன் - வேடன் . தேனவன் - தேன்போல இனியவன் .

பண் :

பாடல் எண் : 9

பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்
பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்து ளானை
மாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ்
சரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த
தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்
சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

மாயைக்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளவனாய் , மாயைக்கு இப்பால் அளவற்ற வடிவங்களும் உடையவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் , அடியவர்களுக்கு முத்தி நிலையைக் காட்டும் மேம்பட்டவனாய்த் தன்னை வணங்குபவர் மனத்து இருப்பவனாய் , வாயுதேவன் திருமால் அக்கினி தேவன் இம்மூவரையும் முறையே அம்பின் சிறகாகவும் அம்பாகவும் அம்பின் கூரிய நுனியாகவும் கொண்டவனாய் , அந்த அம்பையும் பயன் படுத்தாது விடுத்த தவச்செல்வனாய்த் தாருகவனத்து முனிவர் விடுத்த வெண்தலையைச் சடைமுடியில் அணிந்தவனாய்த் திருவீழிமிழலையில் உள்ள பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர் .

குறிப்புரை :

பரத்தான் - மேல் நிலையில் உள்ளவன் ; இது மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கும் நிலை . ` இப்பக்கம் ` என்றது , மாயைக்கு உள்ளாய் நிற்கும் நிலையை . பலவாவன , அளவற்ற நிலைகளும் வடிவங்களும் . வரத்தான் - மேலானவன் . பசுபதி - உயிர்கட்குத் தலைவன் . மாருதம் - வாயுதேவன் . மால் - திருமால் . எரி - அக்கினி தேவன் ; ` இவர் மூவரும் முறையே அம்பின் சிறகும் , அம்பும் , அதன் கூர்மையுமாக நின்றனர் ` என்பதை , ` வாய் அம்பு ஈர்க்கு ` என்பதில் எதிர் நிரனிரையாய்க் கொள்க . திணைவிராய் எண்ணியவற்றைப் பன்மைபற்றி , ` மூன்றும் ` என அஃறிணையான் முடித்தருளி னார் . சரம் - அம்பு . சரத்தையும் தாட்கீழ் ( காலின்கீழ் ) இட்டது , அதற்குச் செயல் இல்லாது , சிரித்தெரித்தமையால் . தபோதனன் - தவமாகிய செல்வத்தை யுடையவன் ; என்றது , தவத்தை ஏற்றுப் பயன்தருதல் பற்றி . ` வைத்த ` என்னும் எச்சம் , ` தனன் ` என்பதன் இறுதிநிலையோடு முடியும் . தாருகவனத்து முனிவர்கள் விடுத்த வெண்டலையைச் சிவபிரான் தன் சடையில் அணிந்துகொண்ட வரலாற்றினைக் கந்தபுராண த்துள் ததீசி உத்தரப் படலத்திற் காண்க .

பண் :

பாடல் எண் : 10

அறுத்தானை அயன்தலைகள் அஞ்சி லொன்றை
அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்
பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப்
பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்
செறித்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

பிரமனுடைய ஐந்தலைகளுள் ஒன்றனை அறுத்தானாய் , அஞ்சாமல் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் தோள்களை முரித்து அவன் இசைத்த நரம்பின் ஒலியைக் கேட்டவனாய்த் தக்கன் வேள்வியில் சந்திரனைக் காலால் தேய்த்தவனாய் , சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்தவனாய்ப் பகீரதனுக்காகவும் தேவர்கள் வேண்டியதற்காகவும் பரவலாக இறங்கிவந்த கங்கையைப் பனித்துளி போலத் தன் சடையில் அடக்கியவனாய் , உள்ள திருவீழிமிழலைப் பெருமானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர் .

குறிப்புரை :

` ஒன்றை அறுத்தானை ` எனக் கூட்டுக . இறுத்தான் - முறித்தான் . இசை , அவன் ( இராவணன் ) பாடியது . இந்து - சந்திரன் . இரவி - சூரியன் . சந்திர சூரியரை ஒறுத்தது தக்கன் வேள்வியில் . ` கங்கைப் புனல் ` என மாற்றிக்கொள்க . ` பனி போல் ` என்றது . ` புல் நுனிமேற் பனித்துளிபோல ` என்றபடி . ஆங்கு - அப்பொழுதே . ` பனி போலாக ` என்பதும் பாடம் . செறித்தான் - அடக்கினான் . ` பகீரதற்காகவும் , வானோர் வேண்டவும் ` என எண்ணுப் பொருளாகக் கொள்க . சிவபிரான் கங்கையைச் சடையில் அடக்கியதற்கு , இவ்விரு காரணங்களும் புராணங்களுட் பெறப்படுகின்றன . அவற்றுட் பகீரதற்காக நிகழ்ந்தது மேலே ( ப .34. பா .10.) குறித்தாம் . வானோர் வேண்ட அடக்கியது , ` உமையம்மை விளையாட்டால் சிவபிரானது கண்களைப் பொத்திய ஞான்று உலகில் மூடிய இருளை நீக்குதற்கு அப்பெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்தபொழுது அம்மை அஞ்சி பெயர்த்துக் கைகளை வாங்கி விதிர்க்க , அக் கைகளின் விரல்கள் பத்தினும் பத்துக் கங்கைகள் தோன்றிப் பெருகி உலகை அழிக்கத் தொடங்குதலும் , அதனையறிந்து அஞ்சிய வானோர் வந்து வேண்டிக்கொண்டமையின் , சிவபிரான் அவைகள் அனைத்தையும் ஒன்றாக்கி வருவித்துச் சடையில் ஏற்றனன் என்பது . இத் திருத்தாண்டகம் , சிவபிரானது எல்லாம்வல்ல தன்மையை எடுத்தோதி , ` அவனை அடையாதார்க்கு உய்யும் நெறி வேறு உண்டாவதில்லை ` என அறிவுறுத்தருளியதாதல் அறிக .
சிற்பி