திருவீழிமிழலை


பண் :

பாடல் எண் : 1

கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்
கந்தமா தனத்துளார் காளத்தி யார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

திருமாலுக்குச் சக்கரம் ஈந்த பெருமானார் , கூரிய நுனியினை உடைய சூலமும் மண்டையோடும் விளங்கும் திருக்கைகளை உடையவராய் , காளையை இவர்ந்து வெயில்போல ஒளி வீசும் நீற்றினைப் பூசிக் கயிலை மலை , நாகை குடந்தைக் காரோணங்கள் , கந்தமாதனம் , காளத்தி , மயிலாடுதுறை , உஞ்சைனி இரும்பை அம்பர் மாகாளங்கள் , வக்கரை இவற்றில் தங்கித் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

கந்தமாதனமலை , மாகாளம் வைப்புத் தலங்கள் . மயிலாடுதுறை , சோழ நாட்டில் உள்ளது . வக்கரை , தொண்டைநாட்டுத் தலம் . அயில் வாய - கூர்மையான வாயினை உடைய . கபாலம் , ` காபாலம் ; என முதல் நீண்டது . வெயிலாய - வெயில் போன்ற ; நண்பகல் வெயில் வெண்ணிறமாதல் காண்க . ` திருக்கயிலை முதலிய இடங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , திருவீழிமிழலையைச் சிறந்த இடமாகக்கொண்டு விளங்குகின்றார் ` என முடிவு செய்க . இவ்வாறு அருளிச்செய்தது , அங்குத் தமக்கும் , ஞானசம்பந்தருக்கும் , இருவரோடும் வந்த இருபெருந் திருக்கூட்டத்தார்க்கும் எளிவந்து இனிது அருள் புரிந்த பெருங்கருணைத் திறம் நோக்கி யென்க .

பண் :

பாடல் எண் : 2

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசரம் மேவினார் கேதா ரத்தார்
கெடில வடஅதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவா ளனார்
வேதிகுடி யுள்ளார் மீயச் சூரார்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

கெடிலக்கரையிலுள்ள அதிகை வீரத்தானப் பெருமான் பெருந்துயரைத் தீர்த்து என்னை வாழச் செய்தவராய்ப் பொன்னார் மேனியில் நீறு பூசி , பூணூல் தரித்து , கோபம் மிக்க பாம்பினை அணிந்து , காதில் வெண்குழையை இட்டு , எல்லோருக்கும் நன்மை செய்பவராய் , கேதீச்சரம் , கேதாரம் , மழு ஏந்தும் மழபாடி , வேதிகுடி , மீயச்சூர் , இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

` பூண் ` என்பது , அகரம் பெற்று , ` பூணநூலர் ` என நின்றது . ` கேதீச்சரம் ` என்பது குறுகிநின்றது ; இத் தலம் ஈழநாட்டில் ( இலங்கையில் ) உள்ளது . திருக்கெடில வடவீரட்டானம் சுவாமிகளை ஆட்கொண்ட தலமாதலை நினைக . மழபாடி , வேதிகுடி சோழநாட்டுத் தலங்கள் ; ` மழபாடி மேய மணவாளனார் ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 3

அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணா ழிகையார் உமையா ளோடும்
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

இமையோர் பெருமானார் உமையாளோடும் தேவர்கள் எல்லோரும் விரும்பித் துதிக்க அண்ணாமலை , ஆரூர் , அளப்பூர் , அந்தணர்கள் மிக்க வைகல் , மாடக் கோயிலின் மூலத் தானம் , ஒற்றியூர் , பெண்ணாகடத்துத் தூங்கானை மாடம் , ஏமகூடம் , பேராவூர் இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்து அடைந்தார் .

குறிப்புரை :

` ஆவூருள்ளார் ` என்பதும் பாடம் . அளப்பூர் , கூடம் ( ஏமகூட மலை ), பேராவூர் இவை வைப்புத் தலங்கள் . மாடக்கோயில் சோழ நாட்டில் , ` வைகல் ` என்னும் தலத்துடன் சேர்த்து , ` வைகல் மாடக்கோயில் ` என , ஆளுடையபிள்ளையாரால் பாடப்பெற்றது . உண்ணாழிகை - மூலத்தானம் . ` மாடக்கோயிலின் உண்ணாழிகையார் ` என்க .

பண் :

பாடல் எண் : 4

வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
பராய்த்துறையார்சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
யுரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

வேதம் ஓதும் நாவினராய் , முன்பு வெண்கோட்டுக் கருங்களிறு ஒன்றை அது பேரொலி செய்யுமாறு பற்றி அதன் தோலை உரித்துப் போர்த்திய கோபமுற்ற வடிவினைப் பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி அஞ்சுமாறு காட்டி , வெண்காடு , செங்காட்டங்குடி , வெண்ணி , வேட்களம் , வண்டுகள் பண்பாடும் பழனம் , பராய்த்துறை , சிராப்பள்ளி இவற்றில் தங்கிய பெருமான் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

வண்டு ஆர் - வண்டுகள் ஒலிக்கின்ற . விடலை - காளை . விடலை வேடம் - வீரக்கோலம் . ` விண் காட்டும் பிறை ` என இயையும் . ` இறைவன் , யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து நின்ற உக்கிரக் கோலத்தைக் கண்டு இறைவி அஞ்சினாள் ` எனப் புராணம் கூறும் .

பண் :

பாடல் எண் : 5

புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சிமேற்
றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

தம்மைச் சுற்றிப் பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கூத்து நிகழ்த்தும் பெருமான் , புலித்தோலை உடுத்துக் கச்சிமேற்றளி , குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பம் , கழுமலம் இவற்றில் வீடுகள் தோறும் பிச்சைக்கு உலவும் , முழு எலும்புக் கூட்டைத் தோளில் அணிந்த , வடிவத்தாராய் , மலர் மாலையை அணிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் காளை வடிவம் எழுதப்பட்ட கொடியோடும் செல்வம் மிகும் வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

உடை சூழ்ந்த - உடையாகச் சூழ்ந்த . கலி - ஒலி . கடைசூழ்ந்து - வாயில்கள்தோறும் சென்று . கழுமலம் - சீகாழி . செழு மலர்த் தார்க் குழலி - செழித்த மலர் மாலைகளை அணிந்த கூந்தல் உடையவள் . ` குழலியோடு ` என்னும் மூன்றனுருபு , ` கொடியார் ` என்னும் வினைக்குறிப்பொடு முடிந்தது . உம்மை , சிறப்பு .

பண் :

பாடல் எண் : 6

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார்
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார்
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான் , அவ்வூர் மூலத்தானம் , அரதைப்பெரும்பாழி , இரும்புதல் , இரும்பூளை , இன்னம்பர் , ஈங்கோய்மலை , கருகாவூர் , கருப்பறியலூர் , கரவீரம் என்ற இடங்களில் தங்கித் தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு வீழிமிழலையையே விரும்பி அடைந்தார் .

குறிப்புரை :

பெரும்புலியூர் , இரும்பூளை , இன்னம்பர் , ஈங்கோய் மலை , கருகாவூர் , கருப்பறியலூர் . கரவீரம் இவை சோழநாட்டுத் தலங்கள் . பெரும்பற்றப்புலியூர் - தில்லை . பெரும்பாழி , திரு அரதைப் பெரும்பாழி : இதுவும் சோழ நாட்டுத் தலமே . இரும் புதல் ஆர் - பெரிய புதர்கள் நிறைந்த . ` கரும்பனையாள் ` என்பதே திருக்கருகாவூர் அம்மையின் பெயராய் வழங்கும் .

பண் :

பாடல் எண் : 7

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லிய்யார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகண் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

பழையனூர் ஆலங்காட்டுப் பெருமானார் மண்டை ஓட்டினை ஏந்திப் பறையைப்போல குழிந்த விழிகளை உடைய பேய்கள் பல சூழ , நீலகண்டராய் , மார்க்கண்டேயனுக்குத் துன்பம் தரவந்த காலன் அழியுமாறு அவனை ஒறுத்து , மறைக்காடு , வலிவலம் , வாய்மூர் , வாழ்கொளிபுத்தூர் , உஞ்சேனி இரும்பை அம்பர் மாகாளங்கள் , கற்குடி , விற்குடி , கானப்பேர் இவற்றில் தங்கி வீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

மறைக்காடு ( வேதாரணியம் ), வலிவலம் , வாய்மூர் , வாழ்கொளிபுத்தூர் , கற்குடி , விற்குடி இவை சோழ நாட்டுத் தலங்கள் . ` வாள்கொளிபுத்தூர் ` எனவும் பாடம் ஓதுப . கானப் பேர் , பாண்டி நாட்டுத்தலம் . பழையனூர் ஆலங்காடு , தொண்டை நாட்டுத் தலம் . மாகாளம் , வைப்புத் தலம் . பறைக்காட்டும் - பறைபோலத் தோன்றும் . மிறை - துன்பம் . ` கறைக்காட்டும் ` முதலியவற்றில் ககரம் , விரித்தல் . விழி கண் வினைத்தொகை .

பண் :

பாடல் எண் : 8

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவராய் , அஞ்சைக்களம் , ஐயாறு , ஆரூர் , பேரூர் , அழுந்தூர் , தஞ்சைத் தளிக்குளம் , தக்களூர் , சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி , நாகேச்சரம் , நாரையூர் இவற்றில் தங்கி , வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

அஞ்சைக்களம் , மலைநாட்டுத் தலம் . ஐயாறு , ஆரூர் . அழுந்தூர் , நாகேச்சரம் , நாரையூர் இவை சோழநாட்டுத் தலங்கள் . சாந்தை , சாத்தமங்கை என்பதன் மரூஉ ; இதுவும் சோழ நாட்டுத் தலம் ; இங்குள்ள திருக்கோயிலின் பெயரே ` அயவந்தி ` என்பது . பேரூர் , தஞ்சைத் தளிக்குளம் , தக்களூர் இவை வைப்புத் தலங்கள் . வெஞ்சொல் - பயனால் கொடியவாகின்ற சொற்கள் .

பண் :

பாடல் எண் : 9

கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங் காட்டி லுள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்
வலஞ்சுழியார் வைகலின்மேல் மாடத் துள்ளார்
வெண்டலைகைக் கொண்ட விகிர்த வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திய , உலகத்தார் கொள்ளும் வேடங்களிலிருந்து வேறுபட்ட வேடத்தை உடைய பெருமானார் , கொண்டல் , கொண்டீச்சரம் , கோவலூர் வீரட்டம் , சோலைகள் சூழ்ந்த தலையாலங்காடு , தலைச்சங்காடு , காவிரி வண்டலொடு மணலைக் கரையில் சேர்க்கும் திருவலஞ்சுழி , வைகல் மாடக்கோயில் ஆகிய தலங்களில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

கொண்டீச்சரம் , தண்டலை ( தண்டலை நீணெறி ), தலையாலங்காடு , வலஞ்சுழி இவை சோழநாட்டுத் தலங்கள் . தலைச் சங்கை - தலைச்சங்காடு ; வைகல் மேல்மாடம் - வைகல் மாடக் கோயில் , இவைகளும் சோழநாட்டுத் தலங்கள் . கோவலூர் வீரட்டம் , நடுநாட்டுத் தலம் . கொண்டல் வைப்புத் தலம் , ` வெண்டலை மான் கைக்கொண்ட ` என்பதும் பாடம் . விகிர்த வேடர் - உலகத்தார் கொள்ளும் வேடங்களின் வேறுபட்ட வேடத்தை உடையவர் .

பண் :

பாடல் எண் : 10

அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கும் அரிய ரானார்
புரிச்சந்தி ரத்துள்ளார் போகத் துள்ளார்
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
எரிச்சந்தி வேட்கு மிடத்தார் ஏம
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

திருமால் பிரமன் , இந்திரன் என்பவர்களுக்குக் காண்டற்கு அரியராய் உள்ளாராய் , உலகவர் நுகரும் எல்லா இன்பங்களிலும் கலந்திருப்பாராய் , இமவான் மகளாகிய பார்வதியிடத்து விருப்பமுடையவராய் , மூன்று சந்திகளிலும் தீயை ஓம்பும் வேள்விச் சாலைகளில் உகந்திருப்பவராய் , தாம் சூடிய மாலைகளில் வண்டுகள் பாட ஏழிசையும் பொருந்திய பண்களைப் பாடுபவராய் , உள்ளங் கையை விரித்து அதன்கண் அனலைஏந்தி ஆடும் வேடம் உடையவராய்ச் சிவபெருமான் , அரிச்சந்திரம் , அம்பர்மாகாளம் , புரிச்சந்திரம் , ஏமகூடம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

அம்பர் - அம்பர்ப் பெருங்கோயில் , அம்பர் மாகாளம் இரண்டுங் கொள்க . இவை சோழநாட்டுத் தலங்கள் . புரிச் சந்திரம் - சந்திரபுரம் ; பிறையனூர் ; இதுவும் , அரிச்சந்திரமும் , ஏமகூடமும் வைப்புத் தலங்கள் . போகத்து உள்ளார் - உலக இன்பத்திலும் உள்ளவர் . ` சந்தி எரிவேட்கும் இடம் ` என மாறுக ; ` வேள்விச் சாலைகள் ` என்பது பொருள் ; ` எரிச்சந்தி ` என்பதில் சகரம் விரித்தல் . ` எரிச்சந்திரவேட்கும் ` என்பது பிழைபட்ட பாடம் . ` தேன் பாட ` என மாற்றி , ` கொன்றை முதலிய மாலைகளில் வண்டுகள் பாட ` என்றுரைக்க . இசை ஆர் கீதர் - ஏழிசையும் பொருந்திய பண்களை யுடையவராய் இருப்பவர் ; ` இசை` என்றதனை , வண்டின் இசை என்றாயினும் , வீணையின் இசை என்றாயினும் கொள்க . ` விரித்து அங்கை ` என்பது ` விரிச்சு அங்கை ` என மரூஉவாய் நின்றது ; போலி எனலுமாம் . ` இசையார் தீதா - விரிச்சங்கை எரிக்கொண்டு ` எனவும் பாடம் ஓதுவர் . ` எரிக்கொண்டு ` என்பதில் ககரம் விரித்தல் .

பண் :

பாடல் எண் : 11

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

ஒளிவீசும் சடைமுடி உடையவராய் , காளையை வாகனமாக உடையவராய் , வலிமை மிக்க தன் ஆற்றலை நினைத்துக் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய மலைகளை ஒத்த தலைகளையும் தோள்களையும் தாள்களையும் பொற்கழலணிந்த தம் திருவடியின் ஒரு விரலை ஊன்றி மலையின் கீழ் நொறுங்குமாறு செய்து பின் அவனுக்கு அருள் செய்த உலக நாயகர் , புன்கூர் , புறம் பயம் , புத்தூர் , பூவணம் , புலிவலம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விருப்புற்று வந்தடைந்தார் .

குறிப்புரை :

புன்கூர் , புறம்பயம் சோழநாட்டுத் தலங்கள் , புத்தூர் , பூவணம் பாண்டிநாட்டுத் தலங்கள் . புலிவலம் , வைப்புத் தலம் . கூர்மை - மிகுதி ; இது வலிமை மிகுதியைக் குறித்தது . ` தோளும் தாளும் ` என மாற்றிப் பொருள் கொள்க ; ` அவ்வாறு ஓதப்படுவதே பாடம் ` என்றலுமாம் . ` அடிக்கண் உள்ள ஓர் விரலால் ` என்க . புவன நாதர் - உலக முழுவதற்கும் தலைவர் . பாகர் - செலுத்துவோர் ; முதல்வர் .
சிற்பி