திருவீழிமிழலை


பண் :

பாடல் எண் : 1

கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்
கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலா னான்காண்
பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

திருமாலால் விண்ணுலகிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பெற்ற விமானத்தை உடைய குளிர்ந்த வீழிமிழலையில் உள்ள பெருமான் , கண்ணாய் கண்ணினது ஒளிசேர்தலால் உண்டாகும் காணுதல் தொழிலாய்ப் பாட்டின்கண் உள்ள இசையாகிய இலக்கியத்தில் வைத்துக் காட்டப்படுகின்ற பண்ணாய் , அப்பண்களின் உட்பிரிவுகளாய்ப் பழமாய்ச் சுவையாய்ப் பயன்தருகின்றவனாய் , மண் , நீர் , தீ எல்லாவற்றையும் அசைக்கும் காற்று , நீர் உட்கொண்ட மேகம் சேரும் வானம் என்ற ஐம்பூதங்களாய் , தேவர்களுக்கு மேம்பட்டவனாய் உள்ளான் .

குறிப்புரை :

` கண்ணவன் ` முதலியவற்றில் அகரம் , சாரியை , இறைவன் உயிர்களோடும் உலகத்தோடும் பொருந்தி நிற்கும் நிலையில் , கலப்பினால் அப்பொருள்களேயாகியும் , தன் தன்மையால் தானேயாகியும் , அவைகளை உடன்நின்று இயக்கும் முறையால் அவைகளும் தானுமாகியும் நிற்பன் . இந்நிலைகள் முறையே ` ஒன்றாய் ( அபேதமாய் ), வேறாய் ( பேதமாய் ), உடனாய் ( பேதா பேதமாய் ) நிற்றல் ` எனக் கூறப்படும் . இங்ஙனம் , ` பேதம் , அபேதம் , பேதாபேதம் ` என்னும் மூன்று நிலையும் தோன்ற , அம்மூன்றற்கும் பொதுவாய்ப் பொருந்தி நிற்கும் நிலையே , ` அத்வைத சம்பந்தம் ` எனப்படுகின்றது . ` பிரமப் பொருள் ஒன்றே ; அஃது அத்விதீயம் ` என்னும் உபநிடத வாக்கியத்திற்கும் இதுவே பொருளாகும் . இதுபற்றி வேறுவேறு கூறுவார் கூறுவனவெல்லாம் பொருந்தாமையை ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் , தமது அரிய சிவஞானபோத நூலாலும் , அருணந்தி தேவ நாயனார் முதலிய அருள்மாணாக்கர்களுக்குச் செய்த உபதேசத்தாலும் இனிது விளங்கச்செய்தார் . அதனால் , அம்முதல்நூலின் பாடியத்தாலும் , வழிநூல் சார்பு நூல்களாலும் மேற்குறித்த பொருள் யாவரும் அறிய இனிது விளங்கித் திகழ்கின்றது . அவ்விளக்கங்களை உணர வேண்டுவார் , அந்நூல்களிலும் , பாடியத்திலும் பரக்கக் கண்டு கொள்க . இவ்வத்துவித நிலையில் , இறைவன் கலப்பினால் உலகமேயாய் நிற்கும் அபேதநிலையே , முதற்கண் உலகத்தை நிலைபெறுவித்தற்கு இன்றியமையாததாதல்பற்றி அதனையே அருளாசிரியர்கள் பெரும்பான்மையாகப் பலவிடங்களில் அருளிச் செய்வர் ; அவ்வாறு வருவது இத்திருப்பதிகம் ஆதலின் , ` கண்ணவன் காண் ` என்பது முதலியவற்றிற்கு , ` கண்ணாகி உள்ளவன் ` என்பதுமுதலியனபோலப் பொருள் கொள்க . இதற்கு முன்னும் பின்னும் இவ்வாறு பல திருப்பதிகங்கள் இருத்தலையும் அறிந்து கொள்க . கண் ஒளிசேர் காட்சி - கண்ணினது ஒளி சேர்தலால் உண்டாகும் காணுதற் றொழில் . கந்திருவம் - இசையிலக்கண நூல் . பாட்டு இசையில் காட்டுகின்ற - ( அந்நூல் ) பாட்டின்கண் உள்ள இசையாகிய இலக்கியத்தில் வைத்துத் தெரிவிக்கின்ற . திறல் - திறம் ; இசை , ` பண் , திறம் , திறத்திறம் ` என மூவகைப் படுதலின் , திறத்தையும் திறத்திறத்தையும் , ` திறல் ` என்றருளினார் . ` திறமானான் என்பதே பாடம் ` எனினும் அமையும் . பயக்கின்றான் - பயன் தருகின்றான் . மாருதன் - காற்றாய் உள்ளவன் . திருவீழிமிழலைக் கோயிலின் விமானம் , திருமாலால் விண்ணுலகத்திலிருந்து கொணர்ந்து நிறுவப் பட்டதாகலின் , ` விண் இழி தண் வீழிமிழலை ` என்றருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 2

ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்ணிழி தண் வீழிமிழலையான் ஆலையினின்றும் ஒழுகுகின்ற கரும்பின் சாறு போலத் தித்திக்கும் திருவைந்தெழுத்தைத் தனக்குப் பெயராக உடையவனாய் , நற்பண்புடைய அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவனாய் , வானில் திரியும் மும் மதில்களையும் தீக்கு இரையாக்கிய வில்லை உடையவனாய் , பால் , தயிர் , நெய் இவற்றால் அபிடேகிக்கப்படுபவனாய் , பண்டரங்கக் கூத்தாடுபவனாய் , சாம்பலை உடல் முழுதும் பூசியவடிவினனாய்ப் பிச்சை எடுப்பவனாய் , கடல் விடம் உண்டதால் நீலகண்டனாய் உள்ளான் .

குறிப்புரை :

ஆலைப் படு - ஆலையினின்றும் ஒழுகுகின்ற . அண்ணிக்கும் - தித்திக்கும் . எரி படுத்த - தீயின்கண் படுவித்த ; ஏழாம் வேற்றுமைத் தொகைக்கண் சிறுபான்மை வல்லெழுத்து மிகாமையறிக . ` எரிப்படுத்த ` என்பதே பாடம் எனலுமாம் . நெய் பலவாகலின் , ` நறு நெய் ` என அடைகொடுத்து உணர்த்துப . அடையில் வழிச் சொல்லுவார் குறிப்பால் , குறித்த பொருள் விளங்கும் . பண்டரங்க வேடம் - பாண்டரங்கம் என்னும் கூத்திற்குரிய வேடம் . வேலை - கடல் .

பண் :

பாடல் எண் : 3

தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
சக்கரம்புட் பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபாலிகாண்
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்ணிழிதண் வீழிமிழலையான் தண்மை வெம்மை என்ற இரு திறமும் உடையவனாய்த் திருமாலுக்குச் சக்கரத்தை அருளியவனாய் , மூன்று கண்களை உடையவனாய் , காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காமன் உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணனாய் , என் உள்ளத்தில் இருந்த சமண சமயப் பற்றினை நீக்கி என்னை ஆட்கொண்டவனாய் , பிரமன் திருமால் இருவருக்கும் தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கியவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு உள்ளான் .

குறிப்புரை :

` தண்மையும் வெம்மையும் தானே ஆயினான் ` என்றது , ` மாறுபட்ட பலவகை ஆற்றல்களும் தனது ஓர் ஆற்றலுள் அடங்க நிற்பவன் ` என்றருளியவாறு . புள் பாகன் - கருடனை ஊர்பவன் ; திருமால் . இது , திருமால் சிவபிரானை நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூக்கள் கொண்டு வழிபட்டு , இறுதியில் ஒரு நாள் தனது கண்ணையே ஒரு தாமரை மலராகச் சாத்திச் சக்கரம் பெற்ற தலமாதல் அறிக . இதனை , ` நீற்றினை நிறையப் பூசி ` ( தி .4. ப .64. பா .8.) என்னும் இத்தலத் திருநேரிசையுள் விளங்க அருளிச்செய்தார் . எண் இல் - பொருளுணர்வு இல்லாத .

பண் :

பாடல் எண் : 4

காதிசைந்த சங்கக் குழையி னான்காண்
கனக மலையனைய காட்சி யான்காண்
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்
வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
ஐந்தலைமா நாகம்நாண் ஆக்கி னான்காண்
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழி தண் வீழிமிழலையான் காதில் சங்கக் குழை அணிந்தவனாய்ப் பொன்மலைபோன்ற உருவத்தானாய்ப் பார்வதியின் மேம்பட்ட தவத்தைச் சோதித்தவனாய் , வலிய பன்றியின் வெள்ளிய கொம்பினை அணியாக அணிந்தவனாய் , எல்லாவற்றிற்கும் முற்பட்டவனாய் , அண்டங்களையும் கடந்து பரந்தவனாய் , ஐந்தலைப்பாம்பினைத் தன் வில்லுக்கு நாணாகக் கொண்டவனாய் , வேதம் ஓதுபவனாய் , வேத நெறியை உலகிற்கு உபதேசித்தவனாய் உள்ளான் .

குறிப்புரை :

கனகமலை - பொன்மலை . மாது - உமை ; அவள் தவத்தைச் சோதித்தமை முன்னுங் கூறப்பட்டது ( ப .50 பா .3). ஏனம் - பன்றி ; திருமால்கொண்ட வராக அவதாரம் . எயிறு - பல் ; கொம்பு . நாண் , அரைநாண் , வேதியன் - வேதத்தை ஓதுபவன் .

பண் :

பாடல் எண் : 5

நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமா னேந்தி னான்காண்
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழி தண்வீழிமிழலையான் நெய் , பால் , இளநீர் இவற்றால் அபிடேகிக்கப்பட்டவனாய் , நித்திய கல்யாணனாகக் காட்சி வழங்குகின்றவனாய் , கைகளில் மழுவும் மானும் ஏந்தியவனாய்க் காலன் உயிரைத் தன் காலால் போக்கியவனாய்ச் சிவந்த அழகிய திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய்ச் செஞ்சடைமேல் வெண்பிறையைச் சேர்த்தியவனாய் , சூடான தீயில் கூத்தாடுபவனாய் உள்ளான் .

குறிப்புரை :

நித்த மணவாளன் - அழியாத மணக்கோலம் உடையவன் : ` நித்த மணாளர் நிரம்ப அழகியர் ` ( திருவாசகம் . அன்னைப் பத்து - 3) என்றருளியதுங் காண்க . இள நீராடுதலும் இங்கு அருளிச் செய்யப்பட்டது . ` நெருப்போடு விளையாடினான் ` என்பது நயம் .

பண் :

பாடல் எண் : 6

கண்துஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
வான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்
பண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழிதண் வீழிமிழலையான் எப்பொழுதும் அறிதுயில் கொள்ளும் திருமால் தனக்குச் சக்கராயுதம் வேண்டுமென்று செந்தாமரை போன்ற தன் கண் ஒன்றனைக் குறைந்த மலராகக் கொண்டு அருச்சித்த அதனைக்கண்டு அவனுக்குச் சக்கரம் அருளியவனாய் , வண்டுகள் உண்ணும் தேனை உடைய கொன்றை , வன்னி , ஊமத்தை என்னும் இவற்றை ஆகாய கங்கையோடு சடையில் மறைத்த பெரியதேவனாய் , பண்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய் , மேம்பட்டவனாய் , உயர்ந்த இடத்தில் இருப்பவனாய்ப் பிறையைப் பாம்போடு சடையில் வைத்தவனாய் , அடியார் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

கண் துஞ்சும் மால் - எப்பொழுதும் அறிதுயில் கொள்ளும் மாயோன் . மத்தம் - ஊமத்தை . பரமேட்டி ( பரம இஷ்டி ) மேலான வணக்கத்துக்கு உரியவன் .

பண் :

பாடல் எண் : 7

கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழிதண் வீழிமிழலையான் மலைபோல விளங்கிய தோள்களை உடைய சலந்தரன் என்ற அசுரனுடைய உடலைப்பிளந்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு வழங்கிய கருணையாளனாய் , வில் விளங்கும் தோளை உடைய அருச்சுனன் வலிமையைக் குறையச் செய்து வேடுவனாய் அவனோடு போர் செய்து தன் போர்த் திறமையைக் காட்டியவனாய் , மாயையின் மேம்பட்டதாகிய உயிரினும் மேம்பட்ட பொருளாய் இருக்கின்றவனாய்ச் சதாசிவனாய் , ஒப்பற்றவனாய் , பார்வதியைத் தானும் விரும்பி அவளால் விரும்பப்படுபவனாய் இருப்பவனாவான் .

குறிப்புரை :

கல் பொலி தோள் - மலைபோல விளங்கிய தோள் . பொருததும் விசயனோடேயாம் . காட்டியது , தனது போர்த்திறனை . தற்பரம் ( தத்பரம் ) - அதனின் மேம்பட்டது . ` தற்பரமாந் தற்பரம் ` என்பதற்கு , ` மாயையின் மேம்பட்டதாகிய உயிரினும் மேம்பட்ட பொருள் ` என்க . ` தற்பரமாய் நற்பரமாய் ` என்பதும் பாடம் . ` பாவை விருப்புளான் ` என்பதனை , ` பாவையினது விருப்பத்தை உடையவன் , பாவையை விரும்பும் விருப்பத்தை உடையவன் ` என இரட்டுற மொழிந்துகொள்க .

பண் :

பாடல் எண் : 8

மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன் காண் புத்தன் மறவா தோடி
யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

ஞானிகள் விரும்பிப்போற்றும் விண்இழிதண் வீழிமிழலையான் உண்மையான தவத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உள் பொருளாய் விளங்குபவனாய்த் தன் இடத்து விருப்பம் இல்லாத இரும்புபோன்ற கடிய மனத்தவர்களுக்குத் தன் உருவத்தைக் காட்டாது மறைந்தே இருப்பவனாய் , சாக்கியநாயனார் மறவாமல் இடும் சிறு கற்களைப் புதிய மலர்களாக ஏற்பவனாய் , தன்னைத் தியானித்தவர்களை உயர்கதிக்கண் செலுத்துபவனாய் , உலகங்களை அழித்துப் படைத்துக் காக்கும் திறல் உடையோனாய் உள்ளான் .

குறிப்புரை :

மெய்த்தவன் - பயனால் , உள்பொருளாய் விளங்கியவன் . ` நிற்பார்க்கெல்லாம் மெய்த்தவன் ` என முன்னே கூட்டுக . ` தன்னிடத்து விருப்பம் இல்லாத இரும்புபோலும் மனத்தையுடைய கன்மிகளுக்கு எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் தனது இருப்பினைப் புலப்படுத்தாது மறைந்தே நின்றவன் ` என்க . புத்தன் , சாக்கிய நாயனார் . சல்லி - கல் . மலர்கள் ஆக்கினான் - மலர்கள்போல நினைத்து ஏற்றுக்கொண்டவன் . ` உள்கினாரை உயர்கதிக்கே உய்த்தவன் ` எனக் கூட்டுக . உய்த்தல் - செலுத்துதல் . அளித்தல் - காத்தல் . வித்தகன் - திறனுடையவன் ; ஒளித்து நின்றே செய்தலின் , ` வித்தகன் ` என்றருளிச்செய்தார் . ` முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை ` ( தொல் . சொல் . 240) கிளவாது , தாம் அநுபவத்தால் அறிந்தது கிளத்தல் திருவுள்ளமாகலின் , இறந்த காலத்தால் அருளினார் ; இது பிறவிடத்தும் ஒக்கும் .

பண் :

பாடல் எண் : 9

சந்திரனைத் திருவடியால் தளர்வித் தான்காண்
தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்
இந்திரனைத் தோள்முரிவித் தருள்செய் தான்காண்
ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழிதண்வீழிமிழலையான் தக்கன் வேள்வியில் சந்திரனைத் திருவடியால் தேய்த்துத் தக்கனை வெகுண்டு எச்சன் தலையை நீக்கி இந்திரனுடைய தோள்களை ஒடித்துப்பின் அவர்களுக்கு அருள் செய்தவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , தன்னை விருப்போடு நினைப்பவர்களுக்கு அன்பனாய் , மந்திரமும் வேதப்பொருளும் ஆயினானாய்ப் பிரமனும் திருமாலும் மேலும் கீழும் அறியாவண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவனாய் உள்ளான் .

குறிப்புரை :

சந்திரனைத் தளர்வித்தது முதலியன , தக்கன் வேள்வியில் . நினைபவர் , மந்திரத்தினாலும் மறைப்பொருளாலுமே நினைதலின் , அவைகளாய் இருந்து அருள்செய்கின்றான் என்க .

பண் :

பாடல் எண் : 10

ஈங்கைப்பே ரீமவனத் திருக்கின் றான்காண்
எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்
ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க்கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்
கொல்லேறு வெல்கொடி மேற் கூட்டினான் காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழிதண் வீழிமிழலையான் இண்டங் கொடிகள் அடர்ந்த சுடுகாட்டில் இருப்பவனாய் , எங்கள் தலைவனாய் , யானைத்தோலைப் போர்த்தியவனாய்ப் பார்வதியோடு ஒரே உருவமாய் நின்றவனாய் , ஓங்காரவடிவினனாய் , கோங்கு கொன்றை ஆகிய மாலையை உடையவனாய்க் காளை எழுதிய கொடியை உடையவனாய் , வேங்கைத்தோலை மேலாடையாகக் கொண்ட வனாய் உள்ளான் .

குறிப்புரை :

ஈங்கை - இண்டங் கொடி . ஈமவனம் ( சுடுகாடு ). இரு பெயரொட்டு . கைம்மா - யானை . ` கொல்லேற்றைக் கொடி மேற் கூட்டினான் ` என்க .
சிற்பி