திருவீழிமிழலை


பண் :

பாடல் எண் : 1

மானேறு கரமுடைய வரதர் போலும்
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்
கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலும்
தேனேறு திருவிதழித் தாரார் போலுந்
திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
ஆனேற தேறும் அழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

திருவீழிமிழலையில் அமர்ந்த செல்வராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் கையில் மானை ஏந்தி வரம் கொடுப்பவராய், பெரிய மலையின் இருபகுதிகளையும் வில்லாகுமாறு வளைத்தவராய், காட்டில் உலவும் யானை கதறுமாறு அதன் தோலை உரித்தவராய்க் கட்டங்கப்படை உடுக்கை இவற்றைக் கைகளில் கொண்டவராய், தேன் பொருந்திய கொன்றைப் பூ மாலையை அணிந்தவராய், காளையை இவரும் அழகராய்க் காட்சி வழங்குகிறார்.

குறிப்புரை :

வரதர் - வரத்தைக் கொடுப்பவர். `மால்வரை வளைத்தார்` என இயையும். கால் வளை வில் - இருமுனையும் வளையும் வில். கான் ஏறு - காட்டிற் பொருந்தும். கரி - யானை. கொடி, விடைக்கொடி. துடி - இடை சுருங்கு பறை (உடுக்கை). இதழி -கொன்றை. ``ஏறது`` அது, பகுதிப் பொருள் விகுதி.
அடிகள் - முதல்வர். இஃது, `அடி` என்பது அடியாகப் பிறந்த பெயர்; `அடி` எனினும், முதல் எனினும் ஒக்கும்; அது பண்பாகு பெயராய், முதலாவாரை யுணர்த்தி, ஆண்பால் பெண்பால் இரு பாலார்க்கும் பொதுவாய் நிற்கும். பின்னர், அஃது உயர்வுபற்றிவந்த திணைவழுவமைதியும் பால்வழுவமைதியுமாக, `கோக்கள், குருக்கள்` என்பனபோல அஃறிணைப் பன்மைவிகுதியாகிய `கள்` என்பதனோடு புணர்ந்து, மேற்கூறியவாறே இருபாலார்க்கும் பொதுவாய் நிற்கும்; எனவே, இது, `சுவாமி` என்னும் வடசொற்கு நேராய தமிழ்ச்சொல் என்பது பெறப்படும். இதனானே, `சுவாமி` என்பதும், தமிழ் மொழியுள் `சுவாமிகள்` என, கள்ளொடு புணர்த்து வழங்கப்படுகின்றது. `அடிகள்` எனற்பாலதனைச் சேக்கிழார் நாயனார், ``வாகீசத் திருவடி`` (தி.12 திருநாவுக்கரசர் புராணம் - 109.) என முதற்கண் `திரு` என்பதனை, புணர்த்து அருளிச்செய்தார். இப்பெயர் உயர்ந்தோர்க்கு உரியதாதல் பற்றி, ``மாமடிகள்`` (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - அம்புலி - 6) என்றாற்போலச் சிலர்க்கு முகமனுரையாய் வழங்கும். எனினும், `தலைவர்` என்பதே இதன் பொருளாகலின், ஆடவருள்ளும் பெண்டிருள்ளும் தலைவராயினார்க்கே இஃது உண்மையில் உரியதாகும். துறவறத்தில் நிற்பவர் பிறர்யாவர்க்கும் தலைவராதல் பற்றி, அவர்களையே சிறப்பாக `அடிகள்` என வழங்குவர். இங்கு, ``அடியேனை ஆளுடைய அடிகள்`` என்றருளியதனால், `அடிகள்` என்பது தலைவர் என்றவாறாதல் இனிது விளங்குதல் காண்க. பொருட்பன்மையன்றி உயர்வுப் பன்மையாகலின், பன்மையொருமை மயக்கமாக ஒருமைச் சொல்லொடு இயைதலும் உண்டு. தாம், ஏ அசைகள். `அடிகள் தாம்` என்பதே எழுவாய்.

பண் :

பாடல் எண் : 2

சமரம்மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்
நாரணனை யிடப்பாகத் தடைத்தார் போலும்
குமரனையும் மகனாக வுடையார் போலுங்
குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

குளிர்ந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கும் இளையவராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் தம்மோடு போரிடவந்த சலந்தரன் என்ற அசுரனைச் சக்கரத்தால் பிளந்த திறமை உடையவராய், நமனை ஒரு காலால் உதைத்து அழித்தவராய், திருமாலை இடப்பாகத்துக் கொண்டவராய், முருகனையும் மகனாக உடையவராய்த் தேவர்கள் பிறகு அமுதம் உண்ணுமாறு முன்னர் அவர்களை அழிக்க வந்த நஞ்சினை உண்டவராவார்.

குறிப்புரை :

சமரம் - போர்; சமரத்துக்கண் மிகுகின்ற (மேம்படுகின்ற) என உரைக்க. சதுரர் - திறலுடையவர். `காலால் குறைத்த` என்க. குறைத்தல் - இல்லையாக்குதல்; அழித்தல்.
நாரணனை இடப் பாகத்துக் கொண்டது, ஒரு சத்தியாதல் பற்றி, குமரன் - முருகக்கடவுள். `பிறர் பின்பு அமுதுண்ணுதற்குத் தாம் முன்பு நஞ்சுண்டவர்` என அவரது பெருங்கருணைத் திறத்தினை நினைந்துருகி அருளிச்செய்தவாறு.

பண் :

பாடல் எண் : 3

நீறணிந்த திருமேனி நிமலர் போலும்
நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்
எயில்மூன்றும் எரிசரத்தா லெய்தார் போலும்
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்
வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வியன்வீழிமிழலை உறை விகிர்தராய் அடியேனை அடிமையாகக் கொண்ட அடிகள் திருமேனியில் நீறு அணிந்த தூயோராய்த் திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கியவராய், காளை எழுதிய கொடியை உடைய என் தலைவராய், நெருப்பாகிய அம்பினால் மூன்று மதில்களையும் எய்தவராய், உலகியலுக்கு வேறாகக் கொண்ட வடிவுடைய வேடராய்ச் சடைமுடியில் கங்கையை அணிந்த அழகராய்க் காட்சி வழங்குகிறார்.

குறிப்புரை :

நேமி - சக்கரம். தீக்கடவுள் தன் ஆற்றலைக் காட்டி நின்றமையின், ``எரிசரம்`` என்றருளினார். சரம் - அம்பு. வேறு அணிந்த கோலம் - உலகியலுக்கு வேறாகக்கொண்ட கோலம்; `விகிர்தர்` என்பதும் அப்பொருளது.

பண் :

பாடல் எண் : 4

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

பெரிய வீழிமிழலையில் உறையும் வேறுபட்ட இயல்பினை உடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் விநாயகனைப் படைத்து அவனால் கயாசுரனைக் கொல்வித்துத் தக்கனுடைய வேள்வியையும் பிரமன் தலை ஒன்றனையும் அழித்து, யாகதேவன் தலையை அறுத்து, ஐவகை வேள்விகளும் வேதங்களின் ஆறு அங்கங்களுமாக உள்ளார்.

குறிப்புரை :

கை வேழம் - கையை உடையதாகிய யானை; இது கை யுடைமையை விதந்தருளியவாறு. வேழ முகத்தவன், விநாயகக் கடவுள். ``கயாசுரன்`` என்றது, கயமுகாசுரனை. அவனை விநாயகக் கடவுளைத் தோற்றுவித்து அழிப்பித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க. வேள்விமூர்த்தி - யாக தேவன். ஐ வேள்வி - `பிரமவேள்வி, தேவவேள்வி, மனித வேள்வி, உயிர் வேள்வி, பிதிர் வேள்வி, என்பன. இவை முறையே வேதம் ஓதுதலும், வழிபாடு செய்தலும், விருந்தோம்பலும், உயிர்களிடத்து இரக்கங் கொண்டு உணவிடுதல் முதலியன செய்தலும், தென்புலத்தார் கடன் தீர்த்தலும் ஆகும். ``விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன்`` எனவும், விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்`` எனவும் விருந்தோம்பலை, திருவள்ளுவ நாயனாரும் `வேள்வி` என்றருளினார். (குறள் - 87, 88.) இவை முறையே `பிரமயாகம், தேவயாகம், மானுட யாகம், பூத யாகம், பிதிர் யாகம்` எனப்படும். இவையெல்லாம் வைதிக முறை. இனிச் சைவ முறையிற் சொல்லப்படும் ஐவகை வேள்விகள். `கன்மவேள்வி, தவ வேள்வி, செபவேள்வி, தியானவேள்வி, ஞானவேள்வி` என்பன. வைதிக முறையிற் சொல்லப்பட்ட ஐவகை வேள்விகளும் சைவ முறையில், `கன்மவேள்வி` என ஒன்றாய் அடங்கும். `சமயம், விசேடம்` என்னும் இருவகைத் தீக்கைகளின் வழி, `சரியை கிரியை யோகம்` என்னும் மூன்று நெறிகளினும் நிற்றல் தவவேள்வி; அத்தீக்கைகளிற் பெற்றவாறே திருவைந்தெழுத்தைக் கணித்தல் செபவேள்வி; அச் செபத்தின்வழிச் சரியை முதலிய மூன்று நெறியிலும் முறையே சிவபிரானது `உருவம், அருவுருவம், அருவம்` என்னும் மூவகைத் திருமேனிகளைத் தியானித்தல் தியான வேள்வி; பதியாகிய சிவபிரானது இயல்புகளையும் அவனுக்கு அடிமையும் உடைமையும் ஆகிய பசு பாசங்களின் இயல்புகளையும் உள்ளவாறுணர்த்தும் ஞான நூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல், நல்லாசிரியரிடத்தே அந் நூற்பொருளை இனிது கேட்டல், பின்னர்ச் சிந்தித்தல் என்பன ஞான வேள்வி. இவ்வகை வேள்விகளுட் சிறந்ததாகிய ஞானவேள்வியை,
``ஞானநூல் தனைஓதல் ஓது வித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றாய்
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை``
என (சிவஞானசித்தி. சூ. 8. அதி. 2) எடுத்தோதுவதும் காண்க. ஆறங்கம் முன்னே (ப.21. பா.2 குறிப்புரை) கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுந்
சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்
பூதகணம் புடைசூழ வருவார் போலும்
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்
வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

பரந்த வீழிமிழலையைச் சேர்ந்த தூயோராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கீளோடு இணைக்கப்பட்ட கோவணம் ஒன்று உடையாராய், மூன்று சுடர்களும் அவற்றின் ஒளியுமாகிய தூயவராய், பொன்னார் மேனிப் புனிதராய், பூதகணம் தம்மைச் சுற்றி வரத் தாம் வருபவராய், மின்னலை ஒத்து ஒளிவீசும் சிவந்த சடையில் பிறை சூடியவராய், அன்னத்தை வாகனமாக உடைய பிரமனுடைய மண்டையோட்டினை ஏந்திய தலைவராய் உள்ளார்.

குறிப்புரை :

துன்னம் - (கீளோடு) இணைத்தல். `அவற்றது சோதி` என்க. தூயார், அவைகளினும் தூயவர். அன்னத் தேர் - அன்னப் பறவையாகிய ஊர்தி. `முடி` என்றது, தலையோட்டினை.

பண் :

பாடல் எண் : 6

மாலாலும் அறிவரிய வரதர் போலும்
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்
நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வியன் வீழிமிழலை அமர்ந்த விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் திருமாலாலும் அறிய முடியாதவராய், வரம் அருளுபவராய், தம்மை மறவாதவர் பிறவிப்பிணியைப் போக்க வல்லவராய், நான்கு வேதங்களுக்கும் தலைவராய், அஞ்செழுத்தாகிய பெயரை உடையவராய், நம்மால் விரும்பப்படுபவராய், கையில் வேலை ஏந்திய காளியைத் தாருகன் என்ற அசுரனை அழிப்பதற்காகப் படைத்தவராய், விடத்தைத்தம் கழுத்தில் அடக்கித் தேவர்களைப் பாதுகாத்தவராவர்.

குறிப்புரை :

`அஞ்செழுத்தாய நாமத்தை யுடைய நம்பர்` என்க. வேல், சூலம். வீரி - காளி; இவளைத் தாருகன் என்னும் அசுரனை அழித்தற்பொருட்டுப் படைத்தருளினமை யறிக.

பண் :

பாடல் எண் : 7

பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்
வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்
செஞ்சடைக்கண் வெண்பிறை கொண் டணிந்தார் போலுந்
திருவீழி மிழலையமர் சிவனார் போலும்
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

திருவீழிமிழலை அமர்ந்த சிவனாராகி அடியேனை ஆட்கொண்ட அடிகள் செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்டவராய், காளமேகம் போன்ற அழகிய நீலகண்டராய், வடகயிலைத்தலைவராய், செஞ்சடையில் வெண்பிறை சூடியவராய், ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் அடியவர்களுக்கு நெருக்கத்தில் இருப்பவராய் உள்ளார்.

குறிப்புரை :

``விரல்`` என்றது நகத்தினை; அடையடுத்த ஆகு பெயர். பை - பாம்பின் படம். மஞ்சு அடுத்த - மேகம் அடுத்தது போன்ற. மணாளர் - தலைவர். கொண்டு - பற்றி. அஞ்சு, பொறிகள். அணியார் - அண்மையில் உள்ளவர்.

பண் :

பாடல் எண் : 8

குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலும்
குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்
புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்
வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வியன் வீழிமிழலை நகருடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் சமணரிடமிருந்து அடியேனை ஆட்கொண்டவராய், குடந்தையில் உறைபவராய், அடியவர்கள் உள்ளத் தாமரையை ஆசனமாகக் கொண்டவராய், கருடனைக் கொன்று பின் அவனை உயிர்ப்பித்தவராய், வெள்ளிய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் விகிர்தராய், அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவராய் உள்ளார்.

குறிப்புரை :

குடமூக்கில் - குடந்தை (கும்பகோணம்). புள்ளரசு - கருடன்; இவனை முன்னர் ஒறுத்துப் பின்னர் அருள்செய்தமை முன்னே குறிக்கப்பட்டது. (ப.26 பா.3) புறத்து, `அத்து` வேண்டா வழிச் சாரியை; `புறமாகிய அப்பால்` என்க. ஆனார் - உள்ளவர்.

பண் :

பாடல் எண் : 9

முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்
மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வியன்வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை அடிமைகொண்ட அடிகள் முத்துப்போன்ற சிறிதே அரும்புகின்ற நகைப்பினையும், செறிந்த பவளக்கொடிபோன்ற சடையினையும் உடையவராய், சிறிதளவு, தம்பால் பக்தி உடையவருக்கும் இனியராய், அட்டமூர்த்த உருவினராய், நண்பனாகிய குபேரனிடம் விருப்பு உடையவராய், அடியேனுக்குத் தந்தையும் தாயும் ஆவார்.

குறிப்புரை :

முகிழ் முறுவல் - சிறிதே அரும்புகின்ற நகைப்பு. எத்தனையும் - சிறிதாயினும். இரு நான்கு மூர்த்திகள் - அட்ட மூர்த்தம். அவை முன்னே கூறப்பட்டன. (ப.15 பா.9) மித்திரன் - தோழன். வச்சிர வண்ணன் - குபேரன். அத்தன் - தந்தை. அம்மை - தாய்.

பண் :

பாடல் எண் : 10

கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்
கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்
எரியதொரு கைத்தரித்த இறைவர் போலும்
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்
வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

பரந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கிய தூயராய், அடியேனை ஆளுடைய அடிகள், பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலை உரித்துப் போர்த்துக் கங்கையையும் சிவந்த சடையில் மறைத்து, அக்கினி தேவனுடைய ஒரு கையை நீக்கிய தலைவராய்ப் பன்றியின் கூரிய பல்லை அணிகலனாகப் பூண்டு, சந்திரன் சூரியன் என்ற இருவரையும் தக்கன் வேள்விக்களத்தில் வெகுண்டு ஒறுத்துத் திருமாலும் பிரமனும் தம்மைத் தோத்திரிக்க அவர்களுக்கு அருள் செய்தவர்.

குறிப்புரை :

கரி - யானை. வெருவ - அஞ்ச. கண்டார் - செய்தார். ``எரியது`` அது, பகுதிப்பொருள் விகுதி. ஏனம் - பன்றி. கூன் எயிறு - வளைந்த பல் (கொம்பு). கதிரோர் இருவர். செங்கதிரோனும் (சூரியனும்) வெண்கதிரோனும் (சந்திரனும்). அளித்தார் - வரங்கொடுத்தார்.

பண் :

பாடல் எண் : 11

கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலும்
குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலைவேற் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் கதறிக்கொண்டு விழுமாறு அவனைக் கால் விரலால் நசுக்கிப்பின் அவனுக்கு அருள் செய்தவராய், குயில்போன்ற இனிய சொற்களை உடைய உமையம்மை மனம் குளிர்ந்து காணுமாறு கூத்தாடுதலில் வல்ல இளையராய்ப் பகலவன்போல ஏனைய ஒளிகளைத் தாழ்த்தித் தாம் ஒளி வீசுபவராய்க் கூர்மையான முத்தலைச் சூலப்படையுடையவராய் இருக்கின்றார்.

குறிப்புரை :

வெயிலாய - பகலவன் ஒளிபோன்ற; இது பிற வெளிகளைத் தன்னுள் அடக்கிநிற்கும் தொழில்பற்றி வந்த உவமை; பல்வேறு சிறப்பியல்புகளை உடைய உயிர்களின் அறிவுகள் எல்லாவற்றையும் தம் அறிவினுள் அடக்கி நிற்றல் பொருள் என்க. அயில் - கூர்மை.
சிற்பி