திருப்புள்ளிருக்குவேளூர்


பண் :

பாடல் எண் : 1

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவா ளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.

குறிப்புரை :

`ஆளாக்கொண்டு ஆண்டான்` எனக் கூட்டுக. அடியேனை - இயல்பாகவே அடியவனாய் உள்ள என்னை. ஆளாக் கொண்டு - அதனை அறியாதிருந்த அறியாமையை நீக்கி அறிவித்து. ஆண்டான் - அருள் செய்தவன்: `இத்துணைப் பெருங்கருணை யாளனை முன்பே அறிந்து போற்றாது ஆற்றநாள் போக்கினேனே` என இரங்கி யருளியவாறு. நெடுங்களம், சோழநாட்டுத் தலம். நேமிவான் படையால் - சக்கரமாகிய பெரிய படைக்கலத்தால். நீள் உரவோன் - மிக்க வலிமையை உடையவன்: சலந்தராசுரன். கேதாரம், வடநாட்டுத் தலம்.
கேடிலி - அழிவில்லாதவன். பொறி - புள்ளி. வாளரவு - கொடிய பாம்பு. ``போற்றாதே`` என்னும் தேற்றேகாரம் இன்றியமையாது செயற்பாலதனைச் செய்யாதொழிந்த இழிபினைக் குறித்தது. ஆற்ற - மிகுந்த, ``போக்கினேனே`` என்னும் தேற்றேகாரம். அதுபற்றி இரங்கும் இரங்கற்பொருட்கண் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

`சிறந்து சீர்த்தான்` என்க: சீர்த்தல் - வாய்த்தல் (கிடைத்தல்): ``சீரிடங் காணின்`` எனவும், ``மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து`` (குறள் - 821, 490.) எனவும் வந்தன காண்க. சிவன் - மங்கலமாய் உள்ளவன். கூர்த்தான் - நுணுகியவன். குமைத்து - அழித்து. முனி, மார்க்கண்டேயர். கைம்மா - யானை. உரிவை - தோல். பேணி - விரும்பி.

பண் :

பாடல் எண் : 3

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

``அடியேன்றன்னைப் பன்னாள்`` என்றதனை முதற் கண் கூட்டுக. `தன்னைப் பணிந்து பாட` என இயையும், `அடியேன் றன்னைப் பயில்வித்தானை` என இயைப்பினுமாம். `பன்னாளும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. எத்தேவும் - எந்தக் கடவுளும்: `கடவுளர்க்கெல்லாம கடவுள்` என்றபடி, ஊறும் - சுரக்கின்ற. ``அத்தேன்`` என்பது பலரறி சுட்டாய், உயர்வுப் பொருள் குறித்தது. அண்ணித்தல் - தித்தித்தல். ஆதிப் புத்தேள் - முதற் கடவுள்.

பண் :

பாடல் எண் : 4

இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி
யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.

பொழிப்புரை :

என் இருண்ட உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்க அறிவற்ற என் துயரங்களையும் தீவினைகளையும் போக்கி, நான் கடைத்தேறுமாறு என் தெளிவற்ற மனத்தில் தெளிவு பிறப்பித்து, தன்னைப் போலச் சிவலோகத்தின் வழியை அறியும் உள்ளத்தை வழங்கிய அருளாளனாய், தொடக்கத்திலிருந்தே பெரிய தவத்தில் நிலைபெற்றிருப்பவனாய், நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட பொருளாய் உள்ள புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

``ஏழையேனை`` என்பதை முதற்கண் வைத்துரைக்க. ஏழைமை - அறிவின்மை. இருளாய - அறியாமை வடிவாகிய. இடர் பாவம் - இடரையும், அதற்கு முதலாய் உள்ள பாவத்தையும். ``உய்ய`` என்னும் வினைஎச்சம் தொழிற்பெயர்ப் பொருள் தந்தது. ``தன்போல்`` என்பதன் பின், `ஆக` என்பது விரிக்க.
ஆதி மாதவம் - முதற்கண் நின்ற பெரிய தவநிலை: `அதன் கண் உள்ளான்` என்றது. `அவனே முதற்கண் ஆசிரியனாய் யோக நிலையில் இருந்து அதனைச் செய்துகாட்டினான்` என்றபடி. இதனானே, `சுவேதாசுவதரம்` என்னும் உபநிடதம் சிவபெருமானை, `பெரிய இருடி` (``விஸ்வாதிகோ ருத்ரோ மகர்ஷி``) என்கின்றது.

பண் :

பாடல் எண் : 5

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

மின்னல் போன்று பிரகாசிக்கும் உருவினனாய், வானத்தில் ஒலி என்ற ஒரே பண்பாய், வீசும் காற்றில் ஒலி ஊறு என்ற இருபண்புகளாய், சிவந்த நெருப்பில் ஒளி, ஊறு, ஒலி என்ற முப்பண்புகளாய், பள்ளம் நோக்கிச் செல்லும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற நான்கு பண்புகளாய், நிலத்தில் நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற ஐந்து பண்புகளாய்க் குறையாத புகலிடமாக நிலைபெற்ற பொருளாய், பவளக் கொழுந்தாய், முத்தாய், வளர் ஒளியாய், வயிரமாய், பொன்போலும் நிறமுடைய புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

மின் உரு - `மின்னலின் ஒளியாய் உள்ளவன்` வானம், காற்று, தீ, நீர், நிலம் என்னும் ஐம்பெரும் பூதங்களிலும், முறையே ஒன்று முதலாக ஐந்து ஈறாக ஒன்றின் ஒன்று ஒவ்வொரு குணம் ஏற்றமாக, `ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்` என்னும் ஐந்து குணங்களும் அமைந்துள்ளன என்பதனை, ``விண்ணகத்தில் ஒன்றாய்`` என்பது முதல், ``தரணி தலத்து அஞ்சாகி`` என்பதுகாறும் உள்ள தொடர்களால் அருளிச் செய்தார். ``பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி`` (தி.8 திருவாசகம். போற்றித் திருவகவல் - 137 - 41) என்பது முதலியனவாக அருளிச்செய்தவற்றையும் அறிக.
கால் - காற்று. ``உரு`` என்றது பருநிலையை. தாழ் புனல் - வீழும் இயல்புடைய நீர். தரணி - பூமி. எஞ்சா - குறையாத; அழியாத. தஞ்சம் - புகலிடம். `தஞ்ச மாய` என, ஆக்கச்சொல் விரித்துரைக்க. மன் உரு - நிலைபெற்ற பொருள். பொன் உருவை - பொன் போலும் நிறம் உடையவனை.

பண் :

பாடல் எண் : 6

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

பொன்னாலாகிய கழல் ஒலிக்கத் தில்லை அம்பலத்துள் கூத்தாடும் அழகனாய், விடக்கறை பொருந்திய முத்தலைச் சூலப்படையனாய்க் கடலை அடுத்த நாகைக் காரோணத்தை உறைவிடமாக விரும்பியவனாய், என் உள்ளத்துள்ளே தங்கி நீங்காது இருந்தவனாய், ஏழுலகப் பாரத்தையும் தாங்குபவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

அறை ஆர் - ஒலித்தல் பொருந்திய. கறை - நஞ்சு. படைக்கலங்களின் வாயில் நஞ்சு பூசப்பட்டிருத்தல் இயல்பு;
நாகை - நாகபட்டினம். விள்ளாது - நீங்காது. பொழில் - உலகம். பொறை - சுமை.

பண் :

பாடல் எண் : 7

நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

நெருப்பினை ஒத்த சிவந்த திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய், என் உள்ளத்தினுள்ளே நீங்காது விரும்பி இருப்பவனாய், வேதம் ஓதுபவனாய், வேதத்தை நன்கு உணர்ந்தவனாய், வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய்மலை இவற்றை நீங்காத இறையவனாய், என்னை ஆட்கொண்ட, கயிலாய மலையை உறைவிடமாகக் கொண்ட புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

`திருமேனியில் வெண்ணீற்றான்` என்க. `விருப்பவன், பொருப்பவன்` என்பவற்றில் அகரம், சாரியை. வேதவித்து - வேதத்தை நன்குணர்ந்தவன்; `வேதத்திற்கு வித்தாய் உள்ளவன்` என்றும் ஆம். வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய் மலை, இவை சோழநாட்டுத் தலங்கள்.

பண் :

பாடல் எண் : 8

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

ஆயிரம் திருநாமங்களை முன்னின்று உச்சரித்துத் தேவர்கள் துதிக்கும் பெருமானாய்த் தன்னை விடுத்து நீங்காத அடியவர்களுக்கும் என்றும் பிறப்பெடுக்கவாராத வீடுபேற்றுச் செல்வத்தை வழங்குபவனாய், மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் முறைகளும் மருந்துமாகித் தீராத நோய்களைப் போக்கியருள வல்லானாய், திரிபுரங்கள் தீப்பற்றிச் சாம்பலாகுமாறு திண்ணிய வில்லைக் கைக்கொண்டு போரிடுதலில் ஈடுபட்டவனான புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

பேர், `பெயர்` என்பதன் மருஉ. `பேர் ஆயிரமும்` என்னும் உம்மை தொக்கது. `ஆயிரம்` என்பது மிகுதிகுறித்தது; ``ஆயிரந் திருநாமம் பாடி நாம்`` (தி.8 திருவாசகம், தெள்ளேணம். 1) என் புழி ஆயிரம் இப்பொருளதாதல். முன்னர், ``ஒரு நாமம்.......... இல்லாற்கு`` என்றதனால் இனிது பெறப்படும்; எனவே `எத்துணைப் பெயர்கள் உள்ளனவோ அத்துணைப் பெயர்களையும் சொல்லி` என்றவாறு; இங்கு, `உள்ளன` என்றது, `ஏத்துவோரால் அறியப் பட்டுள்ளன` என்றதேயாம். பிரிவின்மை - மறதி இன்மை. வாராத செல்வம் என்பது, ``பொச்சாவாக் கருவி`` (குறள் - 537.) என்பது போல, `வாராமையாகிய செல்வம்` எனப் பொருள் தரும்; வாராமை - பிறந்து வாராமை; ``மற்றீண்டு வாரா நெறி`` (குறள் - 356.) ``மீண்டு வாரா வழி அருள் புரிபவன்`` (தி.8 திருவாசகம். கீர்த்தி - 117) என வந்தனவுங் காண்க. இனி, `வருதற்கரிய (கிடைத்தற்கரிய) செல்வம்` என்றுரைத்து, `அதனாற் போந்த பொருள் வீடுபேறு` என்றலுமாம். துன்பத்தோடு இயைபின்றி எல்லையற்று விளையும் வீட்டின்பத்தின் மிக்க செல்வம் வேறின்மையின் அதனை இவ்வாறருளிச்செய்தார்: இதனானே, பூரியார் கண்ணும் உளவாகும் (குறள் - 241.) பொருட் செல்வங்களை வருவிப்பானாதல் கூறவேண்டாதாயிற்று. இனி, `வாராத செல்வம் - இயல்பாகவே உள்ள செல்வம்: திருவருட் செல்வம்` என்றுரைப்பினும் அமையும். மந்திரம். திருவைந்தெழுத்து; தந்திரம், அதனை மேற்கொள்ளும் முறையைக் கூறும் ஆகமங்கள்; மருந்து. அவ்வாகமங்களின் வழிநின்று செய்யும் செபம். பூசை, தியானம் முதலியன: தீராநோய், மலம்; நோய் தீர்தற்கு உரியன யாவை அவையெல்லாம் `மருந்து` எனற்கு உரியனவாகலின், செபம் முதலிய செயல்களை மருந்தென்றருளினார். மந்திரம் முதலிய மூன்றும், உடல்நோயைத் தீர்ப்பவற்றின் மேலும் நோக்குடையன. இவற்றால் இருநோயையும் தீர்த்தல்பற்றி இத்தலப் பெருமானை `வைத்தியநாதன்` எனவும், இத்தலத்தினை, `வைத்தியேசுரன் கோயில்` எனவும் கூறிப் போற்றுவர். அருள - இன்பந்தர. ``வல்லான்`` என்றது, பிறர் அதுவல்லர் ஆகாமையை உணர்த்தி நின்றது. பிறவிநோய் நீங்குதல், அந்நோய் எவ்வாற்றானும் எஞ்ஞான்றும் சிறிதும் இல்லாதவனாகிய சிவபிரானாலன்றிக் கூடாமையால், அவனை அடையாது அந்நோய் நீங்குமாறில்லை என்பதாம். இதனை, `எப்பொழுது ஆகாயத்தைத் தோல் போற் சுருட்டுதல் கூடுமோ அப்பொழுது சிவனை யறியாமல் துன்பத்தினின்று நீங்குதல் கூடும்` என்று விளக்குகின்றது, ``யதா சர்மவ தாகாஷம் வேஸ்டையிஸ்யந்தி மானவாஹா... ததா சிவ மவிஞ்ஞாய துக்கஸ்யாம் தோ பவிஸ்யதி`` `சுவேதா சுவதரம்` என்னும் உபநிடதம். இவ்வுபநிடத வாக்கியப் பொருளை,
``பரசிவ னுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும்
விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைது மென்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே
பெருமறை இயம்பிற்றென்னிற்பின்னுமோர் சான்றுமுண்டோ``.
(கந்தபுராணம். தட்சகா, உபதேசப், 25.)
``மானிடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்லோ னாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடு மெய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமே அறிதல் வேண்டும்``
(காஞ்சிப்புராணம். சனற்குமாரப். 43)
எனப் புராணங்கள் ஆளக் காணலாம். `உடற்றுன்பம் பிறராலும் நீக்கப் படும்: உயிர்த்துன்பம் சிவபிரானையன்றிப் பிறரால் நீக்கப்படுமா றில்லை` என்பதுபற்றியே, சிவபிரான், `வீடு பேறளிப்பவன்` எனப் படுகின்றானாதலின், உடற்றுன்பத்தை அவன் நீக்கமாட்டுவானல்லன் என்பது அதற்குப் பொருளன்று என்பதும் இங்குப் பெறப்பட்டது. ஆகவே, `உலகப்பயனைப் பிற தேவரிடத்தே பெறல்வேண்டும்` என்பாரது கூற்று, `நாடு வழங்கும் பேரரசனொருவன், நிலஞ் சிறிது வழங்கமாட்டுவானல்லன்` என்பாரது கூற்றோடொப்பதா மென் றொழிக. இவற்றையெல்லாம் இனிது தெரிவித்தற் பொருட்டன்றோ, ``இம்மை யேதரும் சோறுங் கூறையும் ஏத்த லாம் இடர்கெடலுமாம் - அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே`` (தி.7. ப.34. பா.1.) ``பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப் போகமுந் திரு வும்புணர்ப் பானை`` (தி.7. ப.59. பா.1.) என்றற்றொடக்கத்துத் திருமொழிகள் எழுந்தன என்க.
``திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட போரான்`` என்பதும், `அசுரரை அழித்துத் தேவர்க்கு விண்ணுலக இன்பத்தைத் தந்தவன்` என, உலக இன்பத்தையும் அவன் மிக வழங்குவோன் ஆதலைக் குறிப்பித்ததேயாம் என்க.

பண் :

பாடல் எண் : 9

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களையும் ஆக்கியவனாய்ப் பார்வதிபாகனாய், பரவிய சடையிலே கங்கையை மறைத்தவஞ்சகனாய், எனக்குத் துணையாய், உடன் நின்று என்னைத் திருத்தித் தன்னிடத்தினின்றும் நீங்காது அணைத்துக்கொண்டவனாய், நான் மறையின் சிறந்த பொருளாய், குளிர்ந்த வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனாய், விரைந்து செல்லும் காளையை இவர்ந்த உலக காரணனாய், நாரணனாய், தாமரையில் தங்கும் பிரமனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

பண்ணியன் - (எல்லாவற்றையும்) ஆக்கியவன். ``படிறன்`` என்றது. கரந்தமைபற்றி. நண்ணியன் - (எனக்குத் துணையாய்) உடன் நின்றவன். என் ஆக்கி - என்னைத் திருத்தி. தன் ஆனானை - தன்னினின்றும் நீக்காது அணைத்துக் கொண்டவனை. (ஆனாமை, நீக்காமை.) நளிர் - குளிர்மை. கண்ணி - முடியிலணியும் மாலை. காரணன் - முதல்வன். கமலத்து ஓங்கும் புண்ணியன், பிரமன்; ``நாரணன்காண் நான்முகன்காண்`` என்னும் திருத்தாண்டகக் குறிப்புக் காண்க. (ப.8 பா.3)

பண் :

பாடல் எண் : 10

இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய நரம்பின் இசை கேட்டு மகிழ்ந்தவனாய், அடியார்களுடைய கொடிய நோய்களையும் தீவினைகளையும் போக்கியவனாய், அலைவீசும் கடலின் விடமுண்ட நீல கண்டனாய், நெற்றிக்கண் தீயினால் மன்மதனுடைய உடலை எரித்தவனாய், தீப்பொறி கக்கும் மழுப்படையையும் மானையும் அழகிய கைகளில் கொண்டவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

`பத்தும் இறுத்தானை` எனவும், `அருநோய் பாவம் அறுத்தானை` எனவும் கூட்டுக. இறுத்தல் - நெரித்தல். இதனுள்ளும், அருநோயும் பாவமும் அறுத்தல் அருளப்பட்டது: ``வெந்தறும் வினையும் நோயும்`` எனத் திருநேரிசையிலும் (தி.4. ப.77. பா.4.) அருளிச்செய்தார். கலை - மான். பொறுத்தான் - தாங்கினான்.
சிற்பி