திருக்கயிலாயம்


பண் :

பாடல் எண் : 1

பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

எதனையும் தாங்குதலை உடைய நிலமாகவும் நீராகவும் இருப்பவனே ! பூதப்படையை ஆளும் தூயவனே ! நல்வழியில் நிறுத்தப்படும் நெஞ்சில் இருப்பவனே ! என் உள்ளத்தில் நீங்காது இருப்பவனே ! மறைத்துச் சொல்லப்படும் பொருள்களை உடைய வேதத்தை விரித்து உரைத்தவனே ! தேவர்களால் வணங்கப் படுபவனே ! நீலகண்டனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

பொறை - பொறுத்தல் ; தாங்குதல் . நிறை - ( நல்வழியில் ) நிறுத்தப்படுதல் ; ` நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை ` ( கலி - 133 அடி - 12) எனலுமாம் . இங்கு மறையாவது இறைவனது அருள் அநுபவம் ; பிறராவார் , அதனை உணர்ந்து போற்றமாட்டாதார் . மறை - மறைத்துச் சொல்லப்படும் பொருள்கள் ; மறைத்தல் , உணரமாட்டாதார்க்கு என்க ; இனி , ` மந்திரம் ` என்றும் ஆம் . கறை - நஞ்சு .

பண் :

பாடல் எண் : 2

முன்பாகி நின்ற முதலே போற்றி
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி
யென்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் முன் உள்ள காரணப்பொருளே ! மூப்படையாத உடலை உடைய முக்கண் பெருமானே ! அன்பர்களுக்கு ஆபரணமே ! கங்கைச் சடையனே ! எலும்பாகிய அணிகலன்கள் உடையவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! கண்ணில் பரவியுள்ள ஒளியே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

முன்பு - எல்லாவற்றிற்கு முன்னுள்ள பொருள் . முதல் - எல்லாப் பொருட்கும் அடிநிலை . மூவாத - மூப்படையாத ; என்றும் ஒரு பெற்றியாய் உள்ள . அன்பாகி - அன்பர்களாய் . அணியாய் - அணிமையில் உள்ளவனே ; என்றது ,` அவர்கள் வேண்டுமிடத்து வெளிநிற்பவனே ` என்றவாறு . ` எங்கும் ( உடம்பெங்கும் ) என்பாக ` என்க . கண் பாவி நின்ற - கண்ணிற் பரவியுள்ள . கண் , தீயின் கூறே ஆகலின் , ` கண் பாவி நின்ற கனலே ` என்றருளிச்செய்தார் . எனவே , ` கண் என்னும் பொறியாய் நிற்பவனே ` என்றதாம் ; இது , கனல் உருவமாய் நிற்பதனை நயந்தோன்ற அருளிச் செய்தவாறு .

பண் :

பாடல் எண் : 3

மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

மாலை மதியமே ! என் சிந்தையில் நிலைபெற்று இருப்பவனே ! இனித்தோன்றும் என் வினைகளைப் போக்குபவனே ! வானில் உலவும் பிறை முடியனே ! ஆலையில் பிழியப்படும் கருப்பஞ் சாற்றின் தெளிவே ! அடியார் அமுதமே ! காலையில் தோன்றும் இளஞாயிறே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` மாலை எழுந்த மதி , காலை முளைத்த கதிர் ` என அவற்றது இயல்புகளை விதந்தோதியருளியது , உயிர்கட்கு அவை பயன்பட வைத்த அருட்டிறத்தினை நினைந்து . ` அறுப்பாய் ` என எதிர்காலத்தால் அருளிச் செய்தமையின் , ` மேலை வினைகள் ` எனப்பட்டன , இனித் தோன்றும் வினைகளேயாயின ; இவற்றை ` ஆகாமியம் ` என்ப . மேல் ஆடு - ( கங்கைபோலக் கரந்து நில்லாது ) மேல் நின்று விளங்கும் . ஆலைக் கரும்பு - ஆலையில் இடப்பட்ட கரும்பு . அன்பினால் ஆரப்படும் இன்பம் ஆதலை , ` அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் ` ( தி .12 பெரிய . புரா . தடுத் . 196.) என்றருளிச் செய்தார் . ` ஆரமுதம் ` என்பது , ` அரிய அமுதம் ` என்றாதலேயன்றி , ` ஆரப் படும் ( நிறைய உண்ணப் படும் ) அமுதம் ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 4

உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலில் ஒளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

உடலில் நுகரப்படும் வினைகளை அறுப்பவனே ! எரியை ஏந்தி ஆடும் பிரானே ! பிறையை அணிந்த சடையனே ! பல பூதங்களோடு கூத்தாடும் பெருமானே ! விளக்குப் போல ஒளிவிடுகின்ற சோதியே ! என் உள்ளத்தில் தோன்றியிருப்பவனே ! கடலில் ஆழ்ந்திருக்கும் முத்துப் போன்றவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` உடலின் வினைகள் ` என்பது , ` முருகனது குறிஞ்சி ` என்பது போன்றது . ` உடம்பிற்கு உரிய வினைகள் ` என்பது பொருள் . இதனை , ` பிராரத்தம் ` என்ப ; அவற்றை அறுத்தலாவது , அவை உயிரைத் தாக்கி விருப்பு வெறுப்புக்களைத் தோற்றுவியாது , உடலூழாய்க் கழியும்படி , தான் முன்னின்றருளுதலும் , அவை தம்மையும் மெலியவாய் வந்து பொருந்தச் செய்தலும் , வேண்டு மிடத்து , அவற்றை அடியோடு ஆற்றல் கெடச் செய்தலுமாம் . அவற்றது ஆற்றலைக் கெடுத்தருளினமையை , சுவாமிகளுக்கு அமணர் தந்த நஞ்சு யாதும் செய்யா தொழிந்தமை முதலியவற்றின் அறிக . எரி வீசும் - எரியைப் போல ஒளிவிடுகின்ற . ` வீசும் `, வீசுதற்கு இடமாய் உள்ள ; ` ஏந்தியுள்ள ` என்றுமாம் . படரும் - விரிந்த . பல்கணம் . பூத கணங்களே யன்றி , பதினெண்கணங்களும் என்க . கணக் கூத்து , கணங் களின் இடையிற் செய்யப்படும் கூத்து . கூத்தப்பிரான் - நடராசன் . சுடரின் - விளக்குப் போல . ` அவ்வாறு ( விளக்குப் போலத் ) தோன்றி ` என எடுத்துக்கொண்டுரைக்க . இறைவன் உள்ளமாகிய வெளியில் சுடர்போலத் தோன்றுதலை உணர்ந்து வழிபடும் முறையை . ` தகர வித்தை ` என உபநிடதம் கூறுதலை மேலே ( ப .16. பா .17) குறித்தாம் . கடலில் ஒளி ஆய - கடலினுள் ஒளிதலை ( மறைந்திருத்தலை ) உடைய ; என்றது , ` ஆழ்ந்தும் அகன்றும் நுணுகியுணரும் பேரறிவாளர்க்கே கிடைப்பவன் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

மைசேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி
மாலுக்கும் ஓராழி யீந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசே ரனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

நீலகண்டனே ! திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே ! ஐயம் திரிபுகள் உள்ள உள்ளங்களில் புகாதவனே ! என் உள்ளத்தே நீங்காது இருப்பவனே ! உடல் முழுதும் வெள்ளிய நீறு பூசியவனே ! சான்றோர்கள் போற்றும் ஞானதீபமே ! கையில் அனலை ஏந்திக் கூத்து நிகழ்த்துபவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

மை - கருநிறம் . பொய் , ஐய விபரீதங்கள் . பால் வெண்ணீறு - பால்போலும் வெள்ளிய திருநீறு . மிக்கார் - உயர்ந்தோர் . ` விளக்கு ` என்றது , பொருள் சேர்ந்த புகழுடைமை பற்றி . கைசேர் அனல் ஏந்தி ஆடீ - கையின் கண் பொருந்தியுள்ள நெருப்பினை விடாது ஏந்தி நின்றே ஆடுகின்றவனே .

பண் :

பாடல் எண் : 6

ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

கங்கைச் சடையனே ! அடியார்களுக்கு ஆரமுதே ! நீறு பூசிய மேனியனே ! நீங்காது என் உள்ளத்து இருப்பவனே ! கையில் கூரிய மழுப்படையை ஏந்தியவனே ! ஏழு கிழமைகளாகவும் உள்ளவனே ! நீலகண்டனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

முடி - சடைமுடி . ` கூரேறு , காரேறு ` என்பன , எதுகை நோக்கித் திரிந்தன . ` கூறேறு ` என்பதற்கு , ` கூறு செய்தல் பொருந்திய ` என்றுரைத்தலுமாம் . ` கூரேறு `; ` காரேறு ` என்றே பாடம் ஓதுவாரும் உளர் . கொள்ளும் கிழமை - கணிநூல் வழியாற் கொள்ளப்படும் கிழமைகள் . ` ஏழும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . ` கிழமை ஏழானாய் ` என்றதனால் , கோளும் நாளும் அடியாரை வந்து நலியாமை பெறப்பட்டது , காறேறு கண்ட - கருமை பொருந்துதல் காணப்பட்ட . ` கண்ட மிடறு ` ஒரு பொருட் பன்மொழி என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 7

அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

ஏழுலகம் கடந்தவனே ! ஆதிப்பழம் பொருளே ! பழையவினைகளை நீக்குபவனே ! மன்னவரும் விண்ணவரும் போற்றும் மூர்த்தியே ! அடியார்கள் போற்றும் திருத்தலங்களில் உறைபவனே ! வழிபாட்டினை நோக்கி அடியவர்களை ஆளும் ஒளியே ! நீலகண்டனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` அன்றே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொக்கது ; அன்றே - அநாதியே . ` ஆதிபுராணன் ` என்பதற்கு முன்னைத் திருப்பதிகத்துள் உரைக்கப்பட்டது . பண்டை வினைகள் - பல பிறவிகளிற் செய்த வினைகள் ; இவற்றை , ` சஞ்சிதம் ` என்ப . ` பாரோர் ` என்ற வாறே , ` விண்ணோர் ` என்க . பரவும் இடம் - திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனி ; அவைகளை , ` கும்ப விம்ப தம்பம் முதலாயின ` என்பர் . கும்பம் - குடம் ( கலசம் ). விம்பம் - விக்கிரகம் . தம்பம் - இலிங்கம் . முதலாயின , வேள்வித் தீ திருமுறை முதலியன . ` இவ்வாதாரங்களில் வைத்து வழிபடும் அடியவர்கட்கு , அவரது அன்பு நோக்கி அவ்விடங்களில் தோன்றி நிற்பவன் ` என்றவாறு . ` தொண்டர் பரவும் மிடற்றாய் ` என்பது பாடம் அன்று என்பதனை , பின்வருகின்ற , ` தொழில் நோக்கி ஆளும் சுடர் ` என்றதனாலும் அறிந்து கொள்க . ` தொழில் ` என்றது , வழிபாட்டினை ; சைவாகமங்களும் இதனை , ` கிரியை ` எனக் கூறும் . இனி , ` தொழில் ` என்றது அதன் அளவினையே . ` அதன் அளவு , பொருளும் காலமும் முதலிய புறமாயவை பற்றி ` ஆகாது , அன்பாகிய அகமாயது பற்றியே ஆம் ` என்பது , ` பொக்கம் மிக்கவர் பூவும் நீருங் கண்டு - நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே ` ( தி .5 ப .90 பா .9) என்றற் றொடக்கத்துத் திருமொழிகளான் இனிது விளங்கிக் கிடந்தது . ` கண்டம் கறுக்கவும் வல்லாய் ` என்றது , ` நஞ்சினை உண்ணவும் , அதனைக் கண்டத்திற்றானே நிறுத்தவும் வல்லவனே ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 8

பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகிநினை வார்தம் முள்ளாய் போற்றி
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
யாரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பெருகி அலைவீசும் ஆறுபோல்பவனே ! நீங்காத நோய்களை நீக்குபவனே ! உருகிநினைப்பவர்களின் உள்ளத்தில் உள்ளவனே ! குறைபாடுகளை நீக்கும் பெருமானே ! அரிதில் கிட்டப் பெற்று ஒளிவீசும் பொன் போன்றவனே ! ஒருவராலும் குறை கூறப் படாதவனே ! கார்மேகமாகிப் பொழியும் மழையானவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

ஆறே - ஆறுபோன்றவனே ; இஃது இறைவனது வரம்பிலின்பத்தினை வியந்தருளிச் செய்தவாறு . ` ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் ` என , திருமறைக்காட்டுத் திருப்பதிகத்திலும் ( ப .23 பா .5) அருளிச் செய்தார் . ` பேராநோய் பேரவிடுப்பாய் ` என்பதற்கு , ` தீராநோய் தீர்த்தருள வல்லான் ` ( ப .54 பா .8) என்பதற்கு உரைத்தது உரைக்க . ஊனம் - குறை ; அது , பாசங்களின் வழிப்பட்டு , அவை அலைத்தவாறே அலைப்புண்டல் . இதனை , ` ஐம்புல வேடரின் அயர்ந் தனை வளர்ந்து ` என்றருளிச் செய்தார் மெய்கண்ட தேவநாயனார் . ( சிவஞானபோ - சூ .8) அருகி - அரிதிற் கிடைக்கப்பட்டு . ` யாரும் இகழப்படாதாய் ` என்றது , ` உண்மை உணர்ந்தோர் யாரும் ` என்னும் கருத்துப்பற்றி யாதலின் , ` புத்தர் சமணர் முதலாயினோரால் இகழப் படுபவனன்றோ ` என்னும் தடை நிகழாமை யுணர்க . இங்ஙனமாகவே , ` உண்மையாவது நின்னையன்றி இல்லை ` என்றவாறாம் . கருகுதற்கு , ` மேகம் ` என்னும் வினைமுதல் வருவிக்க . பொழிந்து - பொழியப் பட்டு ; ` பொழிய ` எனத் திரிப்பினுமாம் .

பண் :

பாடல் எண் : 9

செய்யமலர் மேலான் கண்ணன் போற்றி
தேடியுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
பொருளாக வென்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

செந்தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாதவாறு நின்றவனே ! விடத்தை உண்ட தவறாத அருள் வடிவே ! என்னையும் ஒரு பொருளாக ஆண்டு கொண்டவனே ! பஞ்சகவ்விய நீராட்டை விரும்புபவனே ! சான்றோர்கள் புகழும் நற்குணனே ! துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

செய்ய - செந்நிறத்ததாகிய . கண்ணன் - கரியவன் ; திருமால் . முதற்கண் நின்ற , ` போற்றி ` என்பதனை , இரண்டாவதுடன் கூட்டி அடுக்காக்கி யுரைக்க . அயனும் மாலும் தேடியது அகங்கரித்தன்றிப் போற்றியன்று ஆதலின் , ` போற்றித் தேடி ` என்பது பாட மன்மை அறிக . ` பொய்யாப் பொறை ` என இயையும் , பொறை - அருள் . ` பொருளாக ` என்புழி . ` நினைந்து ` என்பது வருவிக்க , ` என்னையும் ` என்னும் இழிவு சிறப்பு உம்மை தொகுத்தலாயிற்று . ` என்னையும் ஒரு பொருளாக நினைந்து ஆட்கொண்டாய் ` என வுரைக்க . ` மெய்யாக உகந்தாய் ` என்றது , ` பிறிது காரணம் இன்றி அவற்றது தூய்மை கருதியே விரும்பினாய் ` என்றதாம் . குணம் - அருட் குணம் ; அவை தன்வயத்தனாதல் முதலிய எட்டுமாம் . கை - தும்பிக்கை .

பண் :

பாடல் எண் : 10

மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் தன்னை யன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

மேல் உலகில் தங்கும் வாய்ப்பளிக்கப்பட்ட தேவர்கள் தலைவனே ! வானில் உலவிய மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே ! இராவணன் கயிலையைப் பெயர்க்க அவனை வாயால் அலற வைத்துப் பின் அவனை , உன்னை வழிபடும் பண்பினன் ஆக்கியவனே ! அழகில் குறைவில்லாத மன்மதனை ஒருகாலத்தில் சாம்பலாகும்படி கோபித்தவனே ! ஒருகாலத்தில் கூற்றுவனையும் வெகுண்டவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

மேல் வைத்த - மேலிடத்து வைக்கப்பட்ட . மேல் ஆடு - வானத்தில் திரிகின்ற , சீலத்தான் - நின்னை வழிபடுபவன் ; இக் குறிப்புவினைப்பெயர் எதிர்காலம்பற்றியது . ` மன்னன் ` என்பதன் பின்னுள்ள ` போற்றி ` என்பதனை அடுத்த தொடரிற் கூட்டுக . ஈண்டும் , ` போற்றிச் சிலையெடுக்க ` என்பது பாடம் அன்று . சிலை - மலை . கோலம் - அழகு . அதிற் குறைவில்லாதவன் , ( நிரம்ப உடையவன் ) மன்மதன் . கொடிது ஆக - வன்கண்மை தோன்ற ; என்றது , அறியாதார் ` வன்கண்மையாகக் கருத ` என்றவாறு . ` காலதனால் ` என்பது , ` காலத்தால் ` என மருவிற்று . ` அது ` பகுதிப் பொருள் விகுதி . ` காலனையும் ` என்னும் உம்மை ஒருவராலும் காயப்படாமை உணர்த்தி நின்ற சிறப்பும்மை . ` கூற்றங் குதித்தலுங் கைகூடும் ` ( குறள் - 269) என்றார் , திருவள்ளுவநாயனாரும் .
சிற்பி