திருவலம்புரம்


பண் :

பாடல் எண் : 1

மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
மறையவனும் வானவருஞ் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையார் ஒற்றை
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானு மெல்லாம்
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

உலகத்தை அளந்த நீலமணி நிறத்தவரான திருமாலும் பிரமனும் தேவர்களும் தம்மைச் சூழ , நெற்றிக்கண்ணராய் , ஒற்றைப் பாம்பினைக் கையில் உடையவராய் , இனியமொழிகளையுடைய மற்றப் பெண்களும் யானும் பணிந்து வணங்கித் தம்பின்னே செல்லவும் , மண்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளையுடைய வலம்புர நகரில் புகுந்து , பெருமான் அங்கேயே தங்கிவிட்டார் .

குறிப்புரை :

மண் அளந்த மணி வண்ணர் , திருமால் ; ` மணி வண்ணர் ` என்ற பன்மை , நகையை உள்ளுறுத்தது . மறையவன் - பிரமன் . ` மற்றை ` என்பதனை , ` வானவரும் ` என்பதனோடு கூட்டுக . அணிந்தவை பல பாம்புகளாயினும் , கையிற் பிடித்து ஆட்டி மகிழ்வது ஒரு பாம்பு என்க . கதம் - சினம் . ` காணீர் ` என்பது முன்னிலை அசை : இதனை இறுதிக் கண் கூட்டுக . ` அன்றே ` என்றது , தான் கண்ட அந் நாளினை , ` அன்றே வலம்புரம் புக்கு ` என்க . பண் மலிந்த மொழியவர் , தன்னைப்போலும் பெண்டிர் . பணிதல் - அடிக்கண் வீழ்தலும் . இறைஞ்சுதல் - தலை வணங்குதலுமாம் . ` பின்பின் ` என்னும் அடுக்கு இடைவிடாமை குறித்தது . ` அங்கே ` என்னும் ஏகாரம் , ` மீள இவண் போந்திலர் ` என்பது குறித்த பிரிநிலை . ` நெற்றி யுடையவரும் கையுடையவருமாகிய ஒருவர் , நின்று , செல்ல , புக்கு மன்னினார் ` என வினைமுடிவு செய்க .

பண் :

பாடல் எண் : 2

சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம்
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

வில்லில் பழகிய அம்பு ஒன்றால் முப்புரமும் அழித்த , தீயைப் போன்ற செந்நிறமுடைய பெருமானாய் , இமையவர்கள் வழிபட்டுப்புகழக் கொலைத் தொழிலில் பழகிய மத யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கூத்தாடிக் கொண்டு எங்கும் செல்லும் அக்கூத்தர் , கலைகளில் பழகிய அந்தணர்கள் காணவும் , பூதகணங்கள் சூழவும் , விரைவாகச் செல்லும் காளை மீது பார்வதியும் கங்கையும் தாமுமாக இவர்ந்து , வலம்புரம் சென்று அங்கே தங்கி விட்டார் .

குறிப்புரை :

சிலை நவின்ற - வில்லிற் பொருந்திய . சிறந்து - சிறந்து தோன்றி . கொலை நவின்ற - கொலை பயின்ற . களி - மதமயக்கம் . கலை நவின்ற - கலைகளைப் பயின்ற . அடுக்கு , பன்மை குறித்தது . பாரிடம் - பூதகணம் . ` மலைமகளையும் கங்கையையும் அணைத்துச் சென்றவர் , எம்மை நோக்காதே போயினார் ` என வருந்தினாள் . ` தீவண்ணரும் கூத்தரும் ஆகிய அவர் , காண , சூழ , புக்கு மன்னினார் ` என்க .

பண் :

பாடல் எண் : 3

தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல
வருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

திருமேனியின் ஒரு பகுதி தீயின் நிறமாகவும் , மற்றைப்பகுதி திருமாலின் நிறமாகவும் விளங்கித்தோன்ற , ஆக்கூரிலுள்ள தான்தோன்றி மாடத்திற்குச் செல்பவரைப்போல யான் அப்பக்கம் சென்ற அளவில் ஓரிடத்தையும் நோக்காமல் , பூணூலும் மான் தோலும் பொருந்திய தம் மேனியில் வெள்ளிய நீறு பூசி , வேதக் கருத்துக்களை விரித்து , மாயமாகச் சில பேசிய வண்ணம் , வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே .

குறிப்புரை :

தீக்கூரும் - நெருப்பு மிக்கெரிவது போலும் . ` திருமேனி ஒருபால் ` என்புழியும் உம்மை விரிக்க . ` அரிஉருவம் ஒருபாலும் ` என மாற்றுக . ஒருபால் தம்முருவமும் , ஒரு பால் அரி - ( திருமால் ) உருவமுமாக நிற்பவரை , ` சங்கர நாராயணர் ` என்பர் . இந்நிலை , படைப்புக்காலத்தில் திருமாலை இடப்பாகத்தில் தோற்றுவித்து , அவர்வாயிலாகப் பிரமனைத் தோற்றுவித்து , அவன் வாயிலாக உலகங்களைத் தோற்றுவித்தலைக் குறிப்பதாம் . ஆக்கூர் , சோழ நாட்டுத்தலம் ; இதன்கண் இறைவர் சுயம்பு மூர்த்தியாய் இருத்தலின் , ` தான்றோன்றி ` எனப்படுவர் ; அப்பெயர் , அவரது திருக்கோயிலுக்கும் ஆயிற்று . அது மாடக்கோயிலாதலால் , ` தான்றோன்றிமாடம் ` எனவும் , வழங்கப்படும் . ` அங்குப்போவார் போலக்காட்டி எம்மை அலைவித்தார் ` என்றாள் . அப்பால் - அதன் பின் . எத்திசையிலும் ` ஓரிடத்தும் ` என்பது , ` ஒருவிடத்தும் ` என வந்தது செய்யுள் விகாரம் . வருகின்ற திருப்பாடல்களுள் இவ்வாறு வருவனவும் அவை ` ஒருவிடத்தும் நோக்காராய் ` என்க . நூலும் தோலும் பிரமசாரியாதலை விளக்குவன . துதைந்து - நிறைந்து ; இதனை , ` துதைய ` எனத் திரிக்க . மாயம் - பொய் : ` மறைவிரிக்கின்ற வாயால் மாயம் பேசினார் ` எனப் புலந்து கூறினாள் . ` வாயம்பேசி ` எனவும் பாடம் ஓதுவர் , ` செல்வர் ஒருவர் ` என எழுவாய் கொள்க .

பண் :

பாடல் எண் : 4

மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

மூப்படையாத கொடிய பாம்பை அரையில் கட்டி , மும்மூர்த்திகளின் உருவமாக உள்ள முதற்கடவுளாம் சிவபெருமான் , வேறுயாரும் இணைக்க முடியாத அக்கினியாகிய அம்பினை வில்லில் கோத்த இளையராய்க் , குளிர்ந்த கொன்றைப் பூவைச்சூடி , இன்று இங்கே போகின்றவரைக் கண்டு அடியேன் பின்னே செல்ல , என்னைப் புறக்கணித்து , என்னை வாவா என்று பொய்யாக அழைத்துவிட்டுத் தம்முடைய பூதகணம் தம்மைச் சூழ , வலம்புரமேபுக்கு அங்கே மன்னினாரே .

குறிப்புரை :

இறைவனை அடைந்த பொருள்களும் என்றும் ஒரு பெற்றியவாய் நீடு வாழ்தலின் , பாம்பும் மூவாதாயிற்று ; ` இளநாகம் ` ( தி .1. ப .1. பா .2.) என்றருளிச்செய்தார் ஆளுடைய பிள்ளையாரும் . பிறையும் அன்னதாதலுணர்க . ` மூர்க்கப் பாம்பு ` என்பது , ` மூக்கப் பாம்பு ` என மருவிற்று . ` மூர்க்கப் பாம்பு ` என்றேயும் பாடம் ஓதுப . இஃது இன அடை . மூவர் , ` அயன் , அரி , அரன் ` என்பவர் . முதல்வர் - தலைவர் . கோவாத கணை - வில்லில் தொடுக்கப் படாத ( அம்பின் தன்மை யில்லாத ) அம்பு : என்றது , ` திருமால் , வாயுதேவன் , அக்கினி தேவன் ` என்ற இவர்களே அம்பாய் அமைந்தமை பற்றி . எரிகணை - எரிக்கின்ற கணை . ` குழகனாராய்ப் போவாரை ` என்க . உடன்கொண்டு செல்லாது ஒளிந்தமையின் . ` வா வா ` என உரைத்ததனை ` மாயம் ` ( பொய் ) என்றாள் . ` உரைத்து , பேசி ` என்றவற்றை , ` செல்ல ` என்ற தன் பின்னர்கூட்டி , ` அவர் ` என எடுத்துக்கொண்டுரைக்க .

பண் :

பாடல் எண் : 5

அனலொருகை யதுவேந்தி யதளி னோடே
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல்மேனிப்
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேல்கொண்டு திருவா ரூருஞ்
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

ஒருகையில் தீயை ஏந்தி , இடையில் அணிந்த தோலாடை மீது ஐந்தலையை உடைய பெரிய பாம்பினை இறுகக் கட்டிக் கங்கை தங்கிய சடைமுடியும் பொன் போன்ற திருமேனியும் உடைய புனிதர் , விரும்பித் தேவர்கள் வழிபட்டுத்துதிக்கக் கோபம் உடைய காளையை இவர்ந்து , திருவாரூரும் சிரபுரமும் , இடைமருதும் அடைபவரைப்போல , என்மனம் உருகுமாறும் வளைகள் கழலுமாறும் என்னிடத்துப் பொய்யாகச் சிலவற்றைப் பேசி வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .

குறிப்புரை :

` கையது ` அது , பகுதிப்பொருள் விகுதி . ` கையதன் கண் ` என உருபு விரிக்க . அதள் - தோல் . புனல் பொதிந்த - நீர் உள் நிறைந்த . புரிந்து - விரும்பி . சிரபுரம் - சீகாழி .

பண் :

பாடல் எண் : 6

கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

நீலகண்டராய்க் கூற்றுவன் அழியுமாறு காலினால் உதைத்து மகிழ்ந்த காபாலக்கூத்தாடும் பெருமானார் தாம் உரித்த தோலை ஆடையாக உடுத்து , திருநீறு பூசி முனிவர்கள் தம் இருபுடையும் சூழ்ந்துவர , வீடுகளில் முன்னிடம் தோறும் வீணையை இசைத்துக் கொண்டு சென்றாராக , அவருடைய புன்சிரிப்பு என் சிந்தையைக் கவர , மீண்டும் ஒருமுறை என்னை நோக்காமல் பொய்யாக ஏதோ பேசி , வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .

குறிப்புரை :

முறித்தது - உரித்தது . முண்டம் - தலைமாலை . ` முற்றம் ` என்றது , முன்றிலை . ` சிறுமுறுவல் செய்தவர் ` மறித்து ஒருகால் நோக்காதே போயினார் என வருந்தினாள் .

பண் :

பாடல் எண் : 7

பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்
பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்
கெவ்வூரீர் எம்பெருமா னென்றே னாவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

பட்டினை உடுத்துப் பவளம் போன்ற தம் மேனியில் பசிய சந்தனம் பூசித் தம் திருவடிகளை ஊன்றியும் தூக்கியும் கூத்தாடிக் கொண்டு என்னிடம் வந்தாராக . யான் ` எம்பெருமான் நீர் எவ்வூரைச் சேர்ந்தவர் ` என்று வினவ என் உயிர்போகுமாறு என்னை விரைந்து பார்த்து , எனக்கு காமமீதூர்வினை வழங்கி , வேறோர் ஊருக்குச் செல்பவரைப்போலப் பொய் பேசிச் சுழன்று நடந்து , வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே .

குறிப்புரை :

பசுஞ் சாந்து - குளிர்ந்த சந்தனம் . ` பாதம் இட்டு ( ஊன்றி எடுத்து ( தூக்கி )` என்றது , நடனம் ஆடிய வகையை விரித்தவாறு . ` எம்பெருமான் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் . ` ஆவி ( உயிர் ) விடுமாற்றினைச் செய்து ` என்க . அது , பகுதிப்பொருள் விகுதி , ` ஆவி விடுமாறாவது , காமம் மீதூர்வு . விரைவு , போகவேண்டுங் குறைபற்றித் தோற்றுவித்தது . வட்டணைகள்பட - சுழற்சி தோன்ற .

பண் :

பாடல் எண் : 8

பல்லார் பயில்பழனம் பாசூ ரென்று
பழனம் பதிபழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகி
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச்
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கு
மல்லார் வயல்புடை சூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

பலரும் தங்கியிருக்கும் திருப்பழனம் , பாசூர் என்று தம் ஊர்களைக் குறிப்பிட்டு , அவற்றுள் பழனப்பதியில் தமக்கு உள்ள பழந்தொடர்பைக்கூறி , நல்லவர்கள் மிக்க நனிபள்ளியில் இன்று தங்கி , மறுநாள் நள்ளாறு போய்ச் சேர எண்ணியுள்ளதாகக்கூறினார் . இன்ன இடத்துக்குப் போகப்போவதாக உறுதியாய்க் கூறாமல் , திருநீறு பூசிய அழகியராய்த் தம் கைகளை வீசிக் கொண்டு , வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளை உடைய வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .

குறிப்புரை :

பழனம் , சோழநாட்டுத் தலம் . பாசூர் , தொண்டை நாட்டுத் தலம் . பழனத்தை முன்னர்க் கூறினமையால் அதன் பழமை கூறியதாயிற்று . ` பழனம் ( தமக்குப் ) பதியாதல் பழமையாதலைச் சொல்லி நின்றார் ` என்க . நனிபள்ளி , நள்ளாறு சோழநாட்டுத் தலங்கள் . முன்னே இரண்டு ஊர்களைச் சொல்லி . பின்பு , இன்று , ஓர் ஊரிலும் , நாளை ஓர் ஊரிலும் இருப்பதாகக் கூறினமையின் , ` ஓரிடமாகச் சொல்லிற்றிலர் ` என்றால் . ` தோளும் கையும் வீசி `, என்க . ` எங்கும் அல்லாராய் ` என . மோனை நயம் கருதாதே பிரித்து , ` முன்சொல்லிய எவ்விடத்தும் செல்லாராய் ` என்றே உரைக்க . ` மல் ஆர் வயல் ` எனப் பிரித்தலுமாம் . மல் - வளம் .

பண் :

பாடல் எண் : 9

பொங்கா டரவொன்று கையிற் கொண்டு
போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந்
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா
என்கண்ணின் நின்றகலா வேடங் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

படமெடுத்து ஆடும் பாம்பு ஒன்றனைக் கையில் கொண்டு , மறுகையில் போரிடும் மழுப்படையை ஏந்தி , ஓரிடத்தும் தங்காராய்ப் போய்க்கொண்டே , தம்மிடத்து மற்றவர் கொள்ளும் விருப்பத்தை நீக்காராய் மெய்ப்பொருளிடத்தே நிற்பவராகத் தம்மைக் கூறிக்கொண்டே ஒன்றோடொன்று பொருந்தாத செயல்களை உடையவராய் , என்கண்களை விட்டு நீங்காத தம் இனிய வேடத்தைக் காட்டி , வானத்திலுள்ள சந்திரன் தவழும்படியான உயர்ந்த மாட வீடுகளைக் கொண்ட வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .

குறிப்புரை :

பொங்கு - சினம் மிக்க . வெண்மை , கூர்மையைக் குறிக்கும் . தத்துவம் - உண்மை . ஒன்றொன்று ஒவ்வா - ஒன்றோ டொன்று ஒவ்வாது , முரணி நிற்கின்றன . ` எங்கே ` என்பதனை , ` ஒவ்வா ` என்பதன் பின்னர்க்கூட்டி , ` அவை எத்தன்மையன ` என்றுரைக்க . ` எத்தன்மையன ` என்னும் வினா ` ஒன்றினும் படாப் பித்தர் செய்கையாம் ` என்பது தோற்றி நின்றது . ` இச் செய்கைதாமே காதலை வளரச்செய்யா நின்றது ` என்பது , ` என் கண்ணின் நின்றகலா வேடங்காட்டி ` என்றதனால் இனிது பெறப்படும் .

பண் :

பாடல் எண் : 10

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி
யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

திருமால் வில்லை ஏந்திக் குரக்குச்சேனையோடு , கடலில் அணைகட்டி , இலங்கையைச் சென்று அடைந்து , மேம்பட்ட பலபோர்கள் செய்து , தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்கிரீவன் , வீடணன் முதலியோர் உதவியதால் அரிதில் வென்றழித்த இராவண னுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு , தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி , அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான் . அப்பெருமானார் , இன்று கப்பல்கள் நிறைந்த கடலால் ஒருபுறம் சூழப்பட்டதாய் , மாடவீதிகளை உடைய வலம்புரம் என்ற ஊரை அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார் .

குறிப்புரை :

செங்கண் மால் அரிதின் வென்றமையை நினைவாள் , சிலை பிடித்தமை முதலியவற்றை எடுத்துக் கூறினாள் . புகல் - அடைக் கலம் ; என்றது , அடைக்கலமாக வந்தடைந்த , ` சுக்கிரீவன் , வீடணன் ` என்பவர்களைக் குறித்தது . முடிகள் , தலையில் அணியப்பட்டவை . ` பொடி வாய் வீழ ` என்பது பாடமாயின் , மண்ணில் விழ ` என உரைக்க . ` திருமால் அரிதில் வெல்லும் ஆற்றலுடையவனைக் கால் விரலால் சிறிதே ஊன்றி அடர்த்தார் ` எனவும் , ` திருமால்போல அடர்த்தே ஒழியாது , பின்பு அவனுக்கு அருள்புரிந்தார் ` எனவும் வியந்தவாறு . இவ்வாறு அவரது ஆண்மை மிகுதியையும் . அருள் மிகுதியையும் . நினைந்து நினைந்து ஒருகாலைக்கொருகால் காதல் மீதூரப் பெற்றாள் என்க . ஆண்மையும் அருளும் உடைய ஆடவரிடத்திற்றானே மகளிர்க்குக் காதல் பிறக்கும் என்பதனை , ` கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் - புல்லாளே ஆயர் மகள் ` ( கலி - 103 அடி 63 - 64 ) எனவும் , ` பொருளே காதலர் காதல் - அருளே காதலரென்றி நீயே ` ( அகம் - 53 அடி 15 - 16 ) எனவும் வருவனபோல்பவற்றாற் குறிப்பர் , சான்றோர் .
சிற்பி