திருக்கற்குடி


பண் :

பாடல் எண் : 1

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவ மார மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த அன்போ
டேத்தவனை யிறுவரையில் தேனை ஏனோர்க்
கின்னமுத மளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

தேவர்களுக்கு எல்லாம் மூத்தவனாய், மூப்படையாத திருமேனியை உடைய முதல்வனாய், இடுப்பில் கொடிய பாம்பைச் சுற்றியவனாய், எலும்புகளையும், பாம்புகளையும் மாலையாக அணிந்தவனாய், அடியவர்களால் பணிந்து அன்போடு தோத்திரிக்கப்படுபவனாய், பெரிய மலையில் உள்ள தேன் போன்றவனாய், தேவர்களுக்கு இனிய அமுதம் வழங்கியவனாய், துயரங்களில் இருந்து எல்லோரையும் காத்தவனாய், கற்பகம் போன்றவனாய்க் கற்குடியில் மேம்பட்டவனாய் உள்ள பெருமானை அடியேன் கண்ணாரக் கண்டேன்.

குறிப்புரை :

மூத்தவன் - முற்பட்டவன். `வானவர்க்கும் மூத்தவனை` எனக் கூட்டுக. மூவா - மூப்படையாத. `முதல்வன்` என்பது, அகரம் பெற்று, ``முதலவன்`` என நின்றது. அக்கு - எலும்பு. அடைந்த அன்பு - அடைந்ததற்குக் காரணமாயிருந்த அன்பு. `அடியார் அன்போடு பணிந்து ஏத்தவனை` எனக் கூட்டுக. ஏத்தவன் - ஏத்தப்படுதல் உடையவன்; இதன்கண், `ஏத்து` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் செயப்பாட்டு வினையாய் நின்றது.
இறு வரை - பெரிய மலை. ``ஏனோர்க்கு`` என்றது, `தனக்கின்றிப் பிறர்க்கு` என்றவாறு; பிறர், தேவர். காத்தவன் - வராமல் தடுத்தவன். விழுமியான் - மேலானவன்.

பண் :

பாடல் எண் : 2

செய்யானை வெளியானைக் கரியான் தன்னைத்
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் தன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானை
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் தன்னை
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

செம்மை, வெண்மை, கருமை என்ற நிறங்களை உடையவனாய், பிரமனாய், பெருந்திசையும் பரவியவனாய், அழகியவனாய், நன்மையனாய், புகழுடையவனாய், அண்மையில் உள்ளவனாய்த் தீயவர்களுக்குத் தொலைவில் இருப்பவனாய், பஞ்ச கவ்வியத்தில் நீராடும் திருமேனியனாய், பொய்யேதும் இல்லாதவனாய், காளை வாகனனாய், சடைமுடியுடையவனாய், மருண்ட மானைக் கையில் ஏந்தியவனாய், கற்பகமாய்க் கற்குடியில் உறையும் சிறப்புடையவனை நான் கண்ணாரக் கண்டேன்.

குறிப்புரை :

``செய்யானை`` முதலிய மூன்றனையும் மேலே (ப.57 பா.3 குறிப்புரை.) காண்க. திசைமுகன் - பிரமனாய் இருப்பவன். ஐயான் - அழகியவன்; ஐயன் என்றலுமாம்.
நொய்யான் - நுணுகியவன். சீரியான் - புகழுடையவன். மெய்யான் - திருமேனியை உடையவன். வெறித்த - மருண்ட.

பண் :

பாடல் எண் : 3

மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை
விண்ணதனி லொன்றை விரிக திரைத்
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன்
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மண்ணில் ஐந்து, நீரில் நான்கு, தீயில் மூன்று, காற்றில் இரண்டு, விண்ணில் ஒன்று என்ற பண்புகளுக்குக் காரணனாய், சூரியனாய், சந்திரனாய், விண்மீன்களாய், அவைகளிலும் எண்ணிறந்தனவாய் உள்ள பொருள்கள் மேல் நிகழும் சொற்களாய், ஏழிசையாய், மன்மதனுடைய அழகிய உடல் அழியுமாறு தீயை வெளிப்படுத்திய அதற்குமுன், திறக்கப்படாத நெற்றிக்கண்ணனாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

``மண்ணதனில் ஐந்து`` முதலியவற்றை மேலே (ப.54 பா.5. குறிப்புரை) காண்க. தாரகைகள் - விண்மீன்கள். `தாரகைகளை` என்பதும், `எண்ணதனை` என்பதும் உடம்பொடு புணர்த்தலாற் கொள்ளப்படும். `தாரகைகளினும் மிக்க எண்` என்க. எண்ணதனில் எழுத்தாவது, எண்ணப்படும் பொருள்மேல் நிகழும் சொல்.

பண் :

பாடல் எண் : 4

நற்றவனைப் புற்றரவ நாணி னானை
நாணாது நகுதலையூண் நயந்தான் தன்னை
முற்றவனை மூவாத மேனி யானை
முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் தன்னைப்
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மேம்பட்ட தவத்தினனாய்ப் பாம்பை வில் நாணாகக் கொண்டவனாய் வெட்கப்படாமல் மண்டையோட்டில் இடப்படும் பிச்சையை விரும்பியவனாய், நிறைவுடையவனாய், மூப்படையாத உடம்பினனாய், கடல் நஞ்சை விரும்பி உண்டவனாய், எப்பொருட்கும் பற்றுக்கோடாய் உள்ளவனாய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த படையை உடையவனாய், தன்னை அடைந்த அடியவருடைய பாவத்தைப் போக்கக் கற்றவனாய், கற்பகமாய் கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன். நகுதலை ஊண் - வெற்றெலும்பாய்ச் சிரிப்பதுபோலக் காணப்படும் தலை யோட்டில் உண்ணுதல். நயந்தான் - விரும்பினான். முற்றவன் - நிறைவுடையவன்; முந்நீர் - கடல். பற்றவன் - எப்பொருட்கும் பற்றாய் (பற்றுக்கோடாய்) உள்ளவன். பற்றார் - பகைவர். பதிகள், திரி புரங்கள். செற்ற - அழித்த. படை - படைக்கலம்; அம்பு. இயல்பாகச் செய்பவனை, கற்றுச் செய்பவனாக அருளியது, புகழ்தல் கருதி; இஃது இலக்கணை.

பண் :

பாடல் எண் : 5

சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் தன்னைச்
சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானை
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின்
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

ஐயத்தைப் போக்கி அடிமை கொண்ட தலைவனாய், நன்மை செய்பவனாய், கைப்பிடியை உடைய நெருப்பைப் போன்ற கொடிய மழுப்படையைத் தாங்கும் கையனாய், எலும்பை அணிந்த மார்பினனாய், பார்வதி பாகனாய், பிறையும் பாம்பும் நட்புடன் பழகும் தன் சடைமுடிமேல் ஆகாய கங்கையை வைத்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

சங்கை - ஐயம்; அது, `முதற்பொருள் ஒன்று உண்டோ இல்லையோ` என்பது; இவ்வையத்தினை உண்டாக்கியவர், சமணர்கள். அதனைத் தவிர்த்தமையாவது, `முதற்பொருள் உண்டே` என்பதனை, தீராத சூலைநோய் சில நொடிகளில் தீர்ந்த அநுபவத்தால் உணரக் காட்டினமை. சங்கரன் - இன்பம் செய்பவன். தழல் உறு - நெருப்பாய்ப் பொருந்திய. தாள் - கைப்பிடி; `முயற்சிக்குரிய` என்றலுமாம். `தழல் உறு மழுவாள்` என இயையும். அங்கம் - எலும்பு. `ஆகம்` இரண்டில், முன்னது மார்பு; பின்னது உடம்பு. ``தம்மின் மருவ`` என்றது, `அவை அங்ஙனம் மருவாத பகைப் பொருள்கள்` என்பது தோற்றுவித்தது. வான் நீர்க் கங்கை - விண் யாறாகிய கங்கை; பிரமன் உலகத்திலிருந்த கங்கையை அவனை நோக்கித் தவம் செய்து பகீரதன் பூமியிற் கொணர, அவன் பொருட்டு அதனைச் சிவபிரான் சடையில் தாங்கினன் என்பது புராணம்.

பண் :

பாடல் எண் : 6

பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்
பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்
பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பெண்ணாய், ஆணாய், அலியாய்ப் பிறப்பு இறப்பு அற்றவனாய், ஓசை நீங்காத விண்ணாய், விண்ணவர்க்கு மேம்பட்டவனாய், வேதியனாய், வேத கீதம் பாடும் பண்ணாய்ப் பண்ணில் வரும் பயனாய் அமைபவனாய், நில உலகமாய், அவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் பற்றுக்கோடாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

``பெண்ணவன்`` முதலியவற்றில் அகரம் சாரியை. பேரா - நீங்காத. வாணி - சொல்; ஓசை ஆகாயத்தின் குணமாதலின், `சொல்லுக்குக் காரணமாய் உள்ள ஆகாயம்` என்பார், ``பேராவாணி விண்`` என்றருளினார். `ஆணி` எனப் பிரித்து, `நீங்காத ஆணிபோல எல்லாவற்றையும் நிலைபெறுவிக்கின்ற விண்` என்றுரைத்தலுமாம்.
பண்ணவன் - இசையை உடையவன். பண்ணில் வருபயன், இன்பம். `உயிர்கட்குக் கண்` என்றது, காட்சியை (அறிவை) உண்டாக்குதல் பற்றி.

பண் :

பாடல் எண் : 7

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப்
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை
யொருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பண்டையனாய், உலகத்தோற்றத்தில் பரந்து நிற்பவனாய், உலக ஒழுக்கத்தில் குவிந்து இருப்பவனாய், இவ்வுலகாய், தேவருலகாய், இவ்வுலகமெல்லாம் உண்டவனாய்ப் பின் வெளிப்படுத்தியவனாய், அவற்றிற்கு உரிமையாளனாய், ஒருவரும் தன் பெருமையை அறிய முடியாதபடி சேயனாய், பகைவர் முப்புரமும் தீயில் வெந்து பொடியாகி விழச் செய்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

`பண்டையான்` என்பதில் சாரியை ஐகாரம் தொகுத்தலாயிற்று. பரந்து நிற்றல் உலகத்தின் தோற்ற நிலைகளிலும், குவிந்து நிற்றல் அதன் ஒடுக்கத்திலும் என்க. இதனை, ``விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை`` (தி.2 ப.30 பா.3) என்னும் திருஞானசம்பந்தர் திருமொழியோடு நோக்குக. உண்டான் - ஒடுக்கினான். உமிழ்ந்தான் - படைத்தான். `ஒண்ணாது` என்பதன் ஈறுகெட்டது. விண்டான் - நீங்கினான்; சேயனாயினான். கண்டான் - செய்தான்.

பண் :

பாடல் எண் : 8

வானவனை வானவர்க்கு மேலா னானை
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் தன்னைச்
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லை விடை யேற்றி னானைக்
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

வானவனாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய், தன்னை வணங்கும் அடியவர் மனத்துள் விரும்பிப்புகுந்த தேன் போன்றவனாய், தேவர்கள் தொழும் திருவடிகளை உடையவனாய், பலவாகி நின்ற தன் செயல்கள் யாவினும் வெற்றி காணும் தலைவனாய், முல்லை நிலத்தெய்வமாம் திருமாலாகிய காளையை உடையவனாய், குழலும் முழவும் ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்தாடவல்ல, கற்பகம் போன்ற கற்குடியில் விழுமி யானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

தேவ வடிவில் தோன்றுதலின், ``வானவனை`` என்றருளினார். ``குணங்கள்`` என்றது செயலை; அச்செயல்கள் அனைத்தும் தான் நினைத்தவாறே முடித்தலின், ``நின்ற வென்றிக்கோன்`` என்றருளிச்செய்தார். ``அவன்``, பகுதிப்பொருள் விகுதி. ``கொல்லை`` என்னும் ஐகாரம் சாரியை. ``விடை ஏறு`` என்பது, இரு பெயரொட்டு. ``கானவன்`` என்றது, காட்டில் ஆடுதல்பற்றி; இதனால், குழலும் முழவமும் இயம்புவன பூதகணங்கள் என்பது பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 9

கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்
கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த
சிலையானைச் செம்மைதரு பொருளான் தன்னைத்
திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்க ளானான் தன்னைத்
தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

தன்னால் கொல்லப்பட்ட யானையின் தோலைப் போர்த்த செயலினனாய், மலையாகிய வில்லில் திருமாலைக் கூரிய அம்பாகக் கோத்தவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், திரிபுர அசுரருள் சுதர்மன், சுசீலன், சுமாலி என்ற மூவருக்கு நலன் செய்த மேம்பட்டவனாய், மெய்ப்பொருள்கள் ஆகியவனாய், பார்வதி பாகனாய், கையில் மானை ஏந்தியவனாய், கற்பகமாய், கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

கோள் அரி - எல்லாரையும் வெற்றி கொள்ளும் திருமால்; இனி, நரசிங்கமாய்த் தோன்றினமைபற்றி, ``கோளரி`` என்றார் எனினுமாம். அரி, `நெருப்பு (தீக்கடவுள்)` என்றலும் பொருந்தும். `அரியைக்கோத்த` என இயையும். வரை, மேரு மலை. செம்மை - நன்மை. அதனைத் தருபவன் அதனைத் தனக்கு இயல்பாக உடைய சிவபிரானேயாதல் அறிக. திரிபுரத்து ஓர் மூவர், `சுதன்மன், சுசீலன், சுமாலி` என்பவர். திரிபுரத்து அசுரர்கள், புத்தனும் நாரதனும் மயக்கிச் சொல்லிய உரைகளால் மயங்கிச் சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதிற் பிறழாது நின்றவர் இம்மூவரும். அதனால், திரிபுரம் முழுதும் வெந்து நீறாகச் செய்தபொழுது, சிவபிரான், இம்மூவரையும் உய்யக்கொண்டான். இப்பேரருட்டிறத்தினை,
``உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே யுந்தீபற``
என ஆளுடைய அடிகளும், (தி.8 திருவா. திருவுந்தி. 4) `மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள் செய்தார்` (தி.1. ப.69. பா.1.) என ஆளுடைய பிள்ளையாரும்,
``மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்
காவலாளரென் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே``
என ஆளுடைய நம்பிகளும் (தி.7. ப.55. பா.8.) சிறந்தெடுத்தருளிச் செய்தமை காண்க. இம்மூவர்க்குச் செம்மை செய்தமைதானே, தன்னையடைந்தார்க்கு எஞ்ஞான்றும் இடையூறுவாராது காத்துச் செம்மை தருவன் என்பதற்கு அமையும் சான்று என்பது குறித்தருளியவாறு. தலையான் - முதல்வன். தத்துவங்கள் - காரணப்பொருள்கள். கலை - மான்.

பண் :

பாடல் எண் : 10

பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் தன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக்
குன்றெடுத்த அரக்கன்தோள் நெரிய ஊன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

உலகமாக உள்ளவனாய், சோலைகள் நிறைந்த புன்கூர், புறம்பயம், அறத்தை விரும்பிச் செய்கின்ற புகலூர், இடை மருது, ஈங்கோய் இவற்றில் அழகாக இடங்கொண்டு நீங்காது தங்கும் தலைவனாய், தீயில் கூத்தாடும் திருமேனியை உடையவனாய், ஒரு காலத்தில் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு ஊன்றிய திருவடியை உடையவனாய்க் கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

பொழிலான் - உலகமாய் உள்ளவன். புறம்பயம், புகலூர், இடைமருது, ஈங்கோய் இவை சோழநாட்டுத் தலங்கள். அறம்புரிந்த - அறத்தை எப்பொழுதும் விரும்பிச் செய்கின்ற. ``புறம்பய மதனில் அறம்பல அருளியும்`` (தி.8 திருவா. கீர்த்தி. 90) என்றருளினமையால், `அறம் புரிந்த புறம் பயனை` எனக்கூட்டி யுரைத்தலுமாம். அழல் ஆடு மேனி. நெருப்பு எரிவது போலும் திரு மேனி. ``அக் குன்று`` என்றது, பலரறி சுட்டாய்க் கயிலைமலையைக் குறித்தது.
சிற்பி