திருவானைக்கா


பண் :

பாடல் எண் : 1

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

எத்தனை மேம்பட்ட நற்றாய் செவிலித்தாயர், தந்தை, சுற்றத்தார் என்று நம்மால் போற்றப்படுபவருள் எவர் நமக்கு நல்லவர்கள்! எந்தச் செல்வம் நம்மைத்தாங்கக்கூடியதாகும்? நாம் இறந்தால் நம் தேகபந்துக்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் ஏனைய தேகபந்துக்களை விடுத்து, `என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவை உகந்தருளியிருக்கும் இடமாக உடைய செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை யான் அடைவேனோ?` எனக்குத் துன்புறும் நிலை ஏற்படாது என்றபடி.

குறிப்புரை :

``எத்தாயர்`` என்பது முதலியவற்றில் எகரவினா, `எத்துணைச் சிறந்த` என உயர்வு குறித்து நின்றது. `நற்றாய், செவிலித்தாய், முதலாகத் தாயர் பலராகலின், ``தாயார்`` எனப் பன்மையாக அருளினார். மாடு - செல்வம். ``சும்மாடு`` என்றது, `தாங்குவது` என்னும் பொருட்டாய் நின்றது. ``ஏவர்`` என்றதனை, ``சுற்றத்தார்`` என்றதன் பின்னர்க் கூட்டி, `மற்றும் யாவர் தாம்` என உரைக்க. ``சும்மாடாம்`` என்றாற்போல, `நல்லராவார்` என ஆக்கம் வருவிக்க. ``சும்மாடாம்``, ``நல்லாராவர்`` என்னும் பயனிலைகளை எதிர்நிரல் நிறையாகக் கொடுக்க. ``நல்லார்`` என்பது உயர்திணை யாகலின், அது ``தாயர்`` முதலிய நான் கெழுவாய்கட்கும் பயனிலை யாம். `ஒருவரும்` என்னும் முற்றும்மை தொக்கது, `இல்லையாய்` என எச்சமாக்குக. தீ மூள்வதற்கு இடப்படுவன அனைத்தும், `விறகு` எனப்படுமாதலின், எளிதிற் பற்றுதற்கு இடுவனவற்றை, ``சிறுவிறகு`` என எடுத்தோதியருளினார். `வெந்து தணியுந் துணைதானும் நில்லாது, மூட்டி விட்டு விரைந்து போவர்` என்பது உணர்த்துதற்கு; தீ மூண்டெரிதல் நிகழாநிற்கத் தாம் சென்று கொண்டிருப்பர் என்னும் பொருள்பட, ``செல்லாநிற்பர்`` என, எதிர்காலத்துள் நிகழ்காலம் பற்றி ஓதியருளினார். ``உதவுவார் ஒருவர் இல்லை, செல்லாநிற்பர்` என்றது, ``ஏவர் நல்லார்`` என்புழி, `அஃது என்னை` என்றெழும் அவாய் நிலையை நிரப்பியவாறு. சித்து. அறிவு; அது, சத்தியைக் குறித்தது; இறைவனின் வேடங்களெல்லாம் சத்திவடிவமே யாதலின் அவ்வாறு அருளிச்செய்தார்; ``காயமோ மாயை யன்று காண்பது சத்திதன்னால்`` (சிவஞானசித்தி. சூ. 1.41.) எனவும்,
``உருவருள் குணங்க ளோடும் உணர்வரு ளுருவில் தோன்றும்
கருமமும் அருள்அ ரன்றன் கரசர ணாதி சாங்கம்
தரும் அருள் உபாங்கமெல்லாந் தானருள் தனக்கொன் றின்றி
அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே``
எனவும் (சிவஞானசித்தி சூ. 1 - 47) அருளியன காண்க.
பொன்னி - காவிரியாறு; அஃது என்றும் வற்றாது ஓடுதலின் ``நீடு பொன்னி`` என்றருளிச் செய்தார். ``பெற்றால்`` என்று பெறாதார் போல எதிர்காலத்தாற் கூறியது, பெற்றதன் அருமை நோக்கி யென்க. அல்லகண்டம் - துன்பம். ``கொண்டு`` என்பது, மூன்றாம் வேற்றுமை ஆன் உருபின் பொருள்படுவதோர் இடைச்சொல். என் செய்கேன் - வருந்துதல் என் செய்யக் கடவேன்; யாது மில்லை என்றவாறு; `அவை என்னை ஒன்றும் செய்யா` என்பது கருத்து; ஆகவே, `தாயர் முதலியவரை நல்லாராகவும், மாட்டினைச் சும்மாடாகவும் கருதிக் கிடப்பின், யான் துன்பக்கடலுள் அழுந்தி யொழிவேன்` என்றபடி. `துன்பம்` என்றது, பிறப்பினையும், அதன் கண் வரும் `ஆதியான்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தெய்வீகம்` என்னும் மூன்றனையுமாம். ஆதியான்மிகம் முதலிய மூன்றும் மேலே (ப.23. பா.1. குறிப்புரை.) குறிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்து
நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாய்உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீ உள்ளாய். யான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய், தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.

குறிப்புரை :

``ஊன்`` என்றது, உடம்பை. ஏதும் - சிறிதும். `நானே சிறிதும் அறியாதபடி என்னுள்ளே வந்து` என்றது, `என்றுமே என்னுள் இருந்து` என்றவாறு. நின்றியூர், சோழ நாட்டுத் தலம். `அனைத்தும் நீயே ஆயினமை உணரப்படுதலின் சிலர் உறவும் சிலர் பகையுமாதல் நீங்குதலும், நீயே என் உணர்விற்கு முதலாதல் உணரப்படுதலின், `யான்` என்பது நீங்குதலும், ஞானமே (அறிவே) வடிவாய் நிற்றலின் இன்பம் இடையறாது ஈண்டுதலும் உளவாமாகலின், உன் பொற்பாதம் அடையப்பெற்றால் எனக்கு வரும் துன்பம் யாதுளது` என்றருளிச் செய்தவாறு.

பண் :

பாடல் எண் : 3

ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன்
திறம்மறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுன்னுணர்வே யாக்கி யென்னை
ஆண்டவனே யெழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

அழகான ஆனைக்காவில் உள்ளவனே! தேவர்கள் தலைவனே! எல்லோருடனும் சமமாய் இவ்வுலக நடையோடு பொருந்தி வாழ்வதனை மேற்கொள்ளாத சமணத்துறவியரோடு பொருந்தி வாழ்ந்து, உண்ணுதற்கேற்ற கஞ்சியுணவை நிரம்ப உண்டு, நன்மை தரும் உன் பண்பு செயல்களை மறந்து திரிந்த அடியேனைப் பாதுகாத்து, அடியேன் உள்ளத்து வந்து, எப்பொருட்கண்ணும் உன்னை உணரும் உணர்வைத் தந்து, என்னை அடிமை கொண்டவனே! உன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.

குறிப்புரை :

``ஒப்பாய் இவ்வுலகத்தோடு ஒட்டி வாழ்வான்`` என்றதனை, ``திரிவேனை`` என்றதன்பின் கூட்டி உரைக்க. ``வாழ்வான்`` என்னும் எச்சம், ``காத்து`` என்பதனோடு முடியும். இவ்வுலகத்தோடு ஒப்பாய் ஒட்டி வாழ்தல் - கண்டார் அருவருக்குமாறு நக்கரை யாகாது உடையுடுத்தும், தலைமயிரைப் பறித்தல், நின்றுண்ணல், வெயில் நின்றுழலல் முதலியன இன்றியும் பிறர்போல நின்று ஒத்து வாழ்தல். சுவாமிகள் சமணரோடு இருந்தபொழுது இவ்வாறின்றி உலகத்தோடு ஒட்ட ஒழுகாதொழிந்தமையை நினைந்து, `உலகத்தோடு ஒட்ட ஒழுகுவிக்கவும் திருவுளங்கொண்டருளினாய்` என்றருளினார். ஒன்றலா - ஒன்றாத; பொருந்தாத. தவத்தார், சமணர். துப்பு ஆரும் - உண்ணல் பொருந்திய. ``குறையடிசில்`` என்றது. `கஞ்சி` என்றவாறு. துற்றி - நிறைத்து. `துறு` என்பதேயன்றி, `துற்று` என்பதும் முதனிலையாமாதலின், ``துற்றி`` என வந்தது. `நன்று` என்பது `நற்று` என வலித்தலாயிற்று. `நீ வந்து காத்து` என மாற்றியுரைக்க. முற்பட்டமையை, ``வந்து`` என்றருளினார். காத்தமை, சூலை வாயிலாக மீட்டமை. எப்பாலும் - எப்பொருட்கண்ணும்; இஃது, ``ஆக்கி`` என்பதனோடு இயையும். திருவருள் பெற்ற பின்னர், நாயனார் எங்கும் சிவனையன்றி வேறுபொருளைக் காணாமையின் ``எப்பாலும் நுன்னுணர்வேயாக்கி`` என்றருளினார். ``நுன் உணர்வு`` என்பதனை, `நுன்னை உணரும் உணர்வு` என விரிக்க. `நும்` என்னும் பன்மைப் பெயர்க்கு உரிய ஒருமைப்பெயராய், `நுன்` என்பது திருமுறைக் கண் வழங்கும்; இதுவே, பிற்காலத்தில் நகரங்கெட்டு, `உன்` எனமருவி உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் பயின்று வருவது. எப்பாலும் இறைவன் உணர்வே யாதலையே, `எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்பதறிவு` (குறள் - 355) என மெய்யுணர்வாக அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார். அஃதுணராது, அவ்வருமைத் திருக்குறட்கு மாயாவாத உரை உரைத்தார், பரிமேலழகர். அவ்வுரை போலி என்பது, அவர் காட்டிய எடுத்துக்காட்டுள் அவர் கற்பனை எனக் காட்டிய அனைத்தும் உண்மையேயாதலையும், கற்பனையாவது கானலை நீரென்றுணர்தல் போலும் மயக்க உணர்வேயாகலின், அவர் காட்டினாற்போல்வன வற்றை உண்மை என்னாது கற்பனை என்பார்க்கு, யாண்டும் கற்பனையின் வேறாய் உண்மை இல்லா தொழிதலையும், அவர் காட்டினாற் போல்வனவற்றை, நீரில் எழுத்தும் நிகழ் கனவும்போல நிலையா தொழிதல் பற்றி, `நிலையில் பொருள்` என்றல் அன்றி, `கற்பனைப் பொருள்` என்றல் ஆசிரியர் கருத்தன்று என்பதற்கு. ``நில்லாதவற்றை நிலையின வென்றுணரும் - புல்லறி வாண்மை கடை`` (குறள் - 331) என்பதே போதிய சான்றாதலையும் நுனித்துணர வல்லார்க்குத் தெற்றென விளங்குவதாம். ஆகவே, அவர் காட்டினாற் போல்வனவற்றை, `பொய்` என ஒரோவழி உயர்ந்தோர் கூறுதல் நிலையாமையுடையதென்னுங் கருத்தானன்றி, கற்பனையென்னுங் கருத்தான் அன்று என்பது விளங்கும். விளங்கவே, `பொய்ப்பொருள்` எனப்படுவன ஒரு நிலையின் நில்லாது திரிந்து பலநிலைப்பட்டுச் செல்வன என்பதும், `மெய்ப்பொருள்` என்பது, அவ்வாறன்றி யாண்டும் ஒருபெற்றித்தாய்த் திரிபின்றி நிற்பது என்பதும் போதரல் காண்க.
இறைவனை அவனது திருவருள் கண்ணாகக் காணப் பெற்றோர், பின்னர் எவ்விடத்திலும் அவனை யன்றி வேறொரு பொருளையும் காணுதல் இல்லை என்பதனையும், அங்ஙனம் அவர் காணாதொழிதற்குக் காரணம், அவையெல்லாம் மயக்க உணர்வாகிய அஞ்ஞானமே யாதலின், அவ்வஞ்ஞானம் அவர்மாட்டு இல்லா தொழிந்தமையேயாம் என்பதனையும் வரும் பாடலால் அறியலாம்.
``பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்; பார்க்க
வருஞானம் பலஞானம்; அஞ்ஞான விகற்பம்;
வாச்சியவா சகஞானம் வயிந்தவத்தின் கலக்கம்
தருஞானம்; போகஞா திருஞான ஞேயந்
தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும்;
திருஞானம் இவையெல்லாம் கடந்தசிவ ஞானம்;
ஆதலால் சீவன் முத்தர் சிவமேகண்டிருப்பர்``
(சிவஞானசித்தி. சூ. 11. பா. 2)

பண் :

பாடல் எண் : 4

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையாதுன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களையும் ஆள்கின்ற ஆனைக்காப் பெருமானே! உன்னை அன்போடு நினைப்பவர்களுடைய நெஞ்சிலே மறைந்து உறையும் வஞ்சனையை உடைய கள்வனே! ஒளி நிறைந்த பிறையைச் சடையில் சூடியவனே! உன்னைச் சரணடையாது, உன்னோடு பகைத்தவர்களின் மதில்கள் மூன்றும் தீயில் எரியுமாறு அழித்தவனே! முன் ஒரு காலத்தில் யானை ஒன்றனைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய உலக காரணனே! செருக்கி ஒலித்துக்கொண்டு வரும் காளையை இவர்ந்த நீல கண்டனே! கயிலாய மலையில் உறைபவனே! உன் திருவடிகளை அடைந்த அடியேன் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே!

குறிப்புரை :

நினையாதவர் நெஞ்சில் ஒளிந்திருத்தல் நோக்கி, வஞ்சக் கள்வா`` என் றருளிச்செய்தார். `உன்பால் அடையாது` என மாற்றுக. `முனைந்தவர்` என்பது வலிந்து நின்றது; `போர்செய்ய முற்பட்டவர்` என்பது பொருள். `முனித்தவர்` என்னும் பாடத்திற்கும் வலித்தல் கொள்க. கனைத்தல் - ஒலித்தல். காளகண்டன் - நஞ்சு பொருந்திய கழுத்தினை உடையவன். ``உன் கழலே சேர்ந்தேன்`` என்பதனை, ``ஆனைக்காவா`` என்பதன் பின் கூட்டி, `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 5

இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
வேதியனே தென்னானைக் காவுள் மேய
அம்மான்நின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

கொடிய மதச் செருக்குடைய யானைத் தோலைப் போர்த்த வேதியனே! அழகான ஆனைக்காவை உகந்தருளியிருக்கும் தலைவனே! இந்த நிலையின்மையை உடைய பிறவிக் கடலில் துன்பமாகிய சுழியில் அகப்பட்டு, வருந்தும் என்னைக் கைகொடுத்து நீர்ச் சுழியிலிருந்து காப்பவரைப்போல, மனத்திலிருந்து உதவி செய்து, கருணை காட்டி, என்னிடத்தில் அன்பையும், அருளையும் பொழிந்தும், யான் கண்ணால் காணுமாறு வெளியேநிற்கின்றாய் அல்லை. நின் பொற்பாதத்தை அடியேன் அடைப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே!

குறிப்புரை :

மாயம் - நிலையின்மை. கை மான மனத்து உதவி - கை (கொடுத்தல்) போல மனத்தின்கண் உதவிசெய்து; என்றது, `குழியில் வீழ்ந்து கிடப்பாரைக் கையால் எடுத்து வழியிற் செலுத்துதல்போல, சமணசமயக் கொள்கையிலே அழுந்திக் கிடந்த மனத்தைத் திருப்பி உனது திருவருள் நெறியிற் செலுத்தி` என்றவாறு. இவ்வாறு உதவியதாகிய கருணையைச் செய்ததனோடு அமையாது, பின்னரும் நீற்றறை முதலிய பலவற்றால் துடிதுடித்து இறவாதவாறு காத்தருளினை என்பார், ``உதவிக் கருணைசெய்து`` எனவும், ``காதலரு ளவை வைத்தாய்``எனவும் இருகாற் கூறியருளினார். `இவ்வாறெல்லாம் உடன் நின்று தாயினும் சாலப் பரிந்தருளினாய் எனினும், ஊனக் கண்ணாற் காணுமாறு வெளிநின்றாயல்லை` என்றற்கு, ``காண நில்லாய்`` எனக் கூறியருளினார். `இவ்வாறெல்லாம் செய்த உன் அருளாலே உன் பாதத்தை நான் அடையப் பெற்றேன்` என்பது திரு உள்ளம். வெம்மான மதகரி - வெவ்விய பெரிய மதமுடைய யானை. `அம்மான்`` என்றதும் விளிப்பெயர்.

பண் :

பாடல் எண் : 6

உரையாரும் புகழானே யொற்றி யூராய்
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

புகழுவார் புகழும் சொற்களிலெல்லாம் நிறைந்த புகழுடையவனே! ஒற்றியூர், கச்சி ஏகம்பம், குடந்தை நாகைக் காரோணங்கள் இவற்றில் உறைபவனே! நறுமணமுடைய மலர்களைத் தூவி வணங்கும் அடியவர் மனத்தில் மிக்கு விளங்குபவனே! எலும்பையும் பாம்பையும் மாலையாகப் பூண்டவனே! அலைகள் நிறைந்த நீரை உடைய காவிரியாகிய புண்ணிய தீர்த்தம் நிறைந்த திருவானைக்காவில் உள்ள தேன் போன்ற இனியவனே! தேவர் தலைவனே! உன்பொற்பாதம் அடியேன் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.

குறிப்புரை :

உரை ஆரும் - புகழுவார் புகழும் சொற்களில் எல்லாம் நிறைந்த. விரை ஆரும் - வாசனை நிறைந்த. மிக்கான் - மிகுந்து விளங்குபவன், `அக்கினையும் அரவத்தையும் ஆரமாகப் பூண்டவனே` என்க. தீர்த்தம் - தெய்வயாறு; `பொன்னியாகிய தீர்த்தம்` என்க. மல்கு - நீர்நிரம்பி ஓடும் இடமாகிய. சோலையில் உள்ள தேனே` என்பது நயம். அரையன் - அரசன்; தலைவன்.

பண் :

பாடல் எண் : 7

மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
மான்மறியும் மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்
குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

நீலகண்டனே! பார்வதிபாகனே! மான்கன்று, பெரிய மழுப்படை, நெருப்பு இவற்றைத் தாங்கும் திருக்கரங்களை உடையவனே! கூற்றுவனுடைய உயிர்போகுமாறு அவனை அழித்த, முழு எலும்புக்கூடு அணிந்தவனே! முற்பிறப்புக்களில் செய்து கொள்ளப்பட்ட வினைகளும் அவற்றின் பயன்களும் ஆனவனே! செம்மேனி அம்மானே! யாவர்க்கும் நேராகக் காண்பதற்கு அரியவனே! தேவர் குலத்துத் தளிர் போன்றவனே! அழகிய ஆனைக்காவுள் உறையும் தலைவனே! உன்பொற்பாதங்களை அடியேன் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.

குறிப்புரை :

மை ஆரும் - கருமை பொருந்திய. மணி - அழகு; `நீலமணி போலும்` என்றுமாம். ``முன்கோள்`` என்றது, முற்பிறப்புக்களில் செய்துகொள்ளப்பட்ட வினையை. விளைவு - அவ்வினையின் பயன். `திருமேனி செய்யானே` என மாற்றுக. செய்யான் - செந்நிறம் உடையவன்; ``திருமேனி செய்யான்`` எனச் சினை முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டது. `யாவர்க்கும் அரியாய்` என்க. குலம் - கூட்டம். ``கொழுந்து`` என்றது `தலையாயவன்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 8

இலையாருஞ் சூலத்தாய் எண்டோ ளானே
எவ்விடத்தும் நீயல்லா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
தழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

இலைவடிவாக அமைந்த சூலத்தை ஏந்தியவனே! பெருந் தோள்களை உடையவனே! எவ்விடத்தும் உன்னைத் தவிர வேறு பொருள் இல்லை என்று, தலைமேல் கைகுவித்துக் கும்பிடுபவர் செயல்களுக்கு உதவும் பண்பினனே! மேருவாகிய வில்லைக் கையில் கொண்டு, திரிபுரத்தைத் தீக்கு இரை ஆக்கியவனே! திருவானைக்காவுள் உறையும், தீயில் கூத்து நிகழ்த்துபவனே! சிறிய நோய்களால் துன்புறுத்தப்பட்டு உள்ளம் வருந்தாது, நின் அடியே அடைதல் கூடுமாயின் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.

குறிப்புரை :

இலை ஆரும் - தகட்டு வடிவம் பொருந்திய. இல்லை என்று - கடவுள் பிறர் இல்லை என்று உணர்ந்து; இவ்வாறுணர்தலே, `சிவஞானம்` எனப்படுவது என்க. இச் சிவஞானத்தாற் சிவனை வணங்குவோர் மிகச் சிலரேயாதல் பற்றியே ``ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்`` (தி.5. ப.91. பா.3.) என அருளிச் செய்தார் சுவாமிகள். தன்மையான் - தன்மைக்கண் விளங்குபவன்; என்றது, `அவர் தன்மை தன் தன்மையே யாம்படி ஆண்டு விளங்கி நிற்பவன்` என்றவாறு; எனவே, `சிவனது தன்மை இத்தகையது` என்பதைச் சிவஞானிகள் பாலே நம்மனோர் காண்டல் கூடும் என்பது போந்தது. இதனையே,
``ஒன்றுங் குறியே குறியாத லால்அதனுக்
கொன்றுங் குறியொன் றிலாமையினால் - ஒன்றோ
டுவமிக்க லாவதுவுந் தானில்லை ஒவ்வாத்
தவமிக்கா ரேயிதற்குச் சான்று``
என விளக்கிற்று, `திருக்களிற்றுப்படியார்` என்னும் திருநூல் (10).
தலையாரக் கும்பிடுதல், தலைமேற் கைவித்துக் கும்பிடுதல்; தலைக்கு மேல் உயரக் குவிப்பினும் அவ்வாறு உயர்வதற்கு எல்லையாய் நின்று தலை இன்புறும் என்க. தழல் மடுத்தது, திரிபுரங்களை. `கையில் வைத்த மாமேருச் சிலையாய்` எனக் கூட்டி. `மடுத்த சிலையாய், வைத்த சிலையாய், மேருச் சிலையாய்` எனத் தனித்தனி முடிக்க. ``கையில் வைத்த`` என்ற விதப்பு, `மலை கையில் எடுக்க ஒண்ணாததாக, எல்லா மலைகளினும் மிகப்பெரிதாகிய மகாமேருமலையை எளிதிற் கையிலே வைத்தவன்` என்பது விளக்கிநின்றது. அலையாதே - வருந்தாத படியே; `அலையாதே அடையப் பெற்றால்` என்க.

பண் :

பாடல் எண் : 9

விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
நெறியானே யெறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
என்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்
கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

ஆகாய கங்கை தங்கிய செந்நிறச் சடையனே! வேத நெறியை உபதேசித்தவனே! கடலின் விடத்தை உண்டவனே! எண் நிறைந்த புகழ்களுக்கு உரிய பண்புகளையும் செயல்களையும் உடையவனே! உன்னை என் தலைவன் என்று நாவினால் எப்பொழுதும் கூறி மனத்தால் நினைத்துக் கண்கள் மகிழ்ச்சி நிறையுமாறு காணும்படி எப்பொழுதும் நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய ஆனைக்காவுள் உகந்தருளியிருக்கும் அண்ணால்! நின்பொற்பாதம் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.

குறிப்புரை :

விண் ஆரும் புனல் - விண்ணுலகத்திற் பொருந்திய கங்கை. பொதி - கரந்த. சிவபிரானை இன்றிப் பிறரெல்லாத் தேவரும் கூடிச் செய்த தக்கன் வேள்வி முற்றாது கெட்டு, அவனும் தலை இழந்தமையின், `வேதநெறியின் முதற்கடவுள் சிவபிரானே என்பதுதெற்றென விளங்கிக் கிடத்தலின், ``வேதநெறியானே`` என்றருளிச் செய்தார். எண் ஆரும் - எண் என்பன எல்லாம் நிரம்பிய: என்றது, `எண்ணுட்படாத` என்றவாறு. `உன்னை எப்பொழுதும் எம்தலைவன் என்று உரிமையோடு மனத்தினால் நினைந்தும் நாவினால் சொல்லியும், கண்ணாற்கண்டும் எப்போதும் களித்திருக்குமாறு உன் பொற்பாதம் அடையப்பெற்றால்` எனக்கொண்டு கூட்டிப் பொருள் உரைக்க. ``நாவினால்`` என்றதனால், `சொல்லி` என்பதும், ``உன்னி`` என்றதனால் மனத்தினால் என்பதும் தாமேவந்து இயையும். அவை இரண்டிற்குமாகவே, ``என்று என்று`` என இருமுறை அருளிச் செய்தார். இவற்றால், நாயனாருக்கு ஆனைக்கா அண்ணலிடத்து உண்டாகிய அளவிலா ஆர்வம் புலனாவதாம். அண்ணா - அண்ணல்; தலைவனே.

பண் :

பாடல் எண் : 10

கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
குறட்பூதங் கூத்தாட நீயும் ஆடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் தன்னைப்
பருமுடியுந் திரள்தோளும் அடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

கொடியில் எழுதப்பட்ட உருவாக அமைந்த காளையை உடையவனே! பேய்கள் பாடக் குட்டையான பூதங்கள் கூத்தாட, நீயும் கூத்து நிகழ்த்தி, அழகிய பார்வதி பாகனாய், மதில்களை உடைய ஆனைக்காவிலும், உஞ்சேனி, இரும்பை, அம்பர் மாகாளங்களிலும் உறைபவனே! நிலம் முழுதும் சூழ்ந்த கடலிடையே உள்ள இலங்கை மன்னனான இராவணனுடைய பருத்த தலைகளையும் வலிய தோள்களையும் நெரித்து, மகிழ்ந்த உன் திருவடிகளைச் சரணாக அடைந்து உனக்கு அடிமையாகப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.

குறிப்புரை :

கொடி ஏயும் - கொடியிற் பொருந்திய; `கொடியாகப் பொருந்திய` என்றுமாம். கூளி - பேய் `பூதம் இணையொத்தாடும்` என்க. ``நீயும்`` என்றது, `நின்னாவார் பிறரில்லாத சிறப்புடையையாகிய நீ, அக்குறட்பூதத்தோடு நின்று ஆடுகின்றாய்` என அவனது எளிமைத் தன்மையை நினைந்து அருளியவாறு. ``ஆடி`` என்னும் எச்சம் எண்ணுப்பொருட்டு. வடிவு ஏயும் - அழகு பொருந்திய. மாகாளம், வைப்புத்தலம். ``படி ஏயும்`` என்றது. ``படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்`` (குறள் - 606). என்புழிப்போல, `நிலம் முழுதும் உடைய` எனப்பொருள் தந்தது. மேலெல்லாம் ``உன் பொற் பாதம் அடையப்பெற்றால்`` என அருளிப் போந்ததனை இறுதியில் இனிது விளக்கத் திருவுளம்பற்றி, ``இலங்கைக் கோமான்தன்னை அடர்த்து உகந்த அடியே வந்து அடைந்து அடிமை ஆகப்பெற்றால்`` என்று அருளிச் செய்தார். அதனால், திருவடி, முன்னர் மறக்கருணையும் பின்னர் அறக்கருணையும் செய்து வாழ்விப்பன என்பதும், அவைகளை அடைதலாவது `பாதம் ஈசன் பணியலது ஒன்றிலா`து (தி.12 பெ.பு. திருக்கூட்டச் சிறப்பு - 9.) அதனையே மேற்கொண்டு செய்தல் என்பதும் பெறப்பட்டன. ``மதில் ஆனைக்கா` என்றருளிய இத்தலத்தின் திருமதிலை, `சிவபெருமானே எழுந்தருளிவந்து திருநீற்றைக் கூலியாகக் கொடுத்துக் கட்டியது` எனவும், `இது பாதலம் வரையில் ஊடுருவியுள்ளது` எனவும் கூறுவர்.
சிற்பி