திருவானைக்கா


பண் :

பாடல் எண் : 1

முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை
மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்
சார்தற் கரியானை தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை
யெறிநீர்த் திரையுகளும் காவிரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

முன் ஒரு காலத்தில் யானையைக் கொன்று , அதன் தோலைப் போர்த்தியவனாய் , ஞானம் மிகப் பெறாத அடியேனுடைய சிந்தை மனம் வாக்கு இவற்றைத்தான் இவரும் யானைகளாகக் கொண்டு இவர்ந்தானாய் , அடியார்க்கு அல்லது மற்றவருக்குக் கிட்டுதற்கு அரியனாய் , எல்லோருக்கும் தந்தையாய் , என் ஆனைக் கன்று போன்று எனக்கு இனியவனாய் , என்னை அடக்கி ஆள்பவனாய் , அலைகள் மோதும் காவிரியை அடுத்த அழகிய ஆனைக்காவில் தேனாகவும் பாலாகவும் இனியனாய் , நீர்த்திரள் வடிவாக அமைந்த பெருமானை நான் தலைப்பட்டேன் .

குறிப்புரை :

முன் - முற்காலத்தில் . ` ஆனைத் தோல் போர்த்த ` என்றது , ` யானை ஒன்றை உரித்து அதன் தோலைப் போர்வையாகப் போர்த்துக்கொண்ட ` என , இசையெச்சத்தால் , வேண்டுஞ் சொற்கள் வந்து இயைய நின்றது . மூவாத - முதிராத ; ஞானம் மிகப் பெறாத , ` சிந்தையே ` முதலிய ஏகாரங்கள் மூன்றும் எண்ணிடைச் சொல் ; இவ்விடத்தில் , ` காயமே ` என்பது இனம் பற்றிக்கொள்ளப்படும் ; ஏகார எண்ணிற்குத் தொகை கொடாது போயதும் அதுபற்றி . ஏனைய அந்தக் கரணங்களினும் சிந்தை ஆன்ம அறிவிற்கு மிக அணுக்கமாய் நிற்றல் பற்றி ஆன்ம அறிவினை , பெரும்பாலும் ` சிந்தை ` எனத் தொல்லாசிரியர் அனைவரும் வழங்குவராகலின் , அம்முறை பற்றியே இங்கு அதனை , ` சிந்தை ` என்று அருளினார் . இதனையே , ` சிந்தையைச் சீவனென்றும் சீவனைச் சிந்தையென்றும் ........... வந்திடும் ` ( சிவஞான சித்தி . சூ .4. பா .28.) என விளக்கியது . மருள் வழிப்பட்டுச் சென்ற முக்கரணங்களையும் தன் அருள் வழிப்படுத்து ஆண்டான் ` என்றற்கு அவைகளை அவனுக்குரிய மதயானைகளாக உருவகித்து , ` தன் ஆனையாப் பண்ணி ஏறினானை ` என்று அருளுகின்றவர் , அவையெல்லாவற்றிற்கும் அடியாகிய ஆன்ம அறிவினை அதற்கு முன்னே அருள்வழிப்படுத்தினமையை முதற்கண்ணே அருளிச்செய்தார் . ஆன்ம அறிவு மருள் வழிப்பட்டு நிற்குங்கால் கரணங்களும் அவ்வாறே நிற்கும் ; அஃது அருள்வழிப்பட்டு நிற்குங்கால் அவையும் அவ்வாறே நிற்கும் என்பதனை , சிவப்பிரகாசத்து , ` ஞானவாய்மை ` என்னும் பகுதிக்கண் உணர்ந்து கொள்க . அகன் ஞாலத்தகத்துள் தோன்றி வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு , வான்புலன்கள் அகத்தடக்கி , மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப்போக மாற்றி , பொதுநீக்கித்தனை நினையவல்லார்க்கு அல்லது ( தி .6. ப .1. பா .5.) ஏனையோர்க்குச் சார்தல் கூடாமையின் , ` சார்தற்கு அரியானை எனவும் , உலகிற்கெல்லாம் ஒரு தந்தை யாகலின் , ` தாதை தன்னை ` எனவும் அருளிச்செய்தார் . ` என் ஆனைக் கன்று ` என்றது , காதற்சொல் ( தொல் - சொல் . 56 .). ` எரிகின்ற நீரையுடைய திரை ( வீசுகின்ற திவலைகளை உடைய அலை )` என்க . உகளுதல் - புரளுதல் . தென் - தென்னிலத்துக்கண் உள்ள ; இஃது இயைபின்மை நீக்கிய விசேடணம் ; தென் - அழகுமாம் . செழு நீர் - மிக்க நீர் . பிறவியாகிய கோடை தணிந்து மெய் குளிரப் பெற்றமையின் , ` செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேன் ` என மகிழ்ந்து அருளிச் செய்தார் . அந் நீர்த்திரளில் ஆடப்பெற்றதனால் உளதாகிய இன்பம் , ஏனை நீரின் இன்பம்போல உடலின் கண்ணதேயாய் ஒழியாது . உள்ளத்தையும் உயிரையும் விழுங்கிக்கொண்டு , இங்ஙன் இருந்தது என்று இயம்பவாராது இருந்தமையின் , ` தேன் ` எனவும் , ` பால் ` எனவும் பலவாற்றான் அருளிச்செய்தார் . ` செழுநீர்த் திரள் ` என அருளியது , இத்தலத்துள் இறைவன் நீர் ஊற்றாய் விளங்குதல் பற்றி ; அதற்கேற்ப , ` ஆடினேன் ` என்றாராயினும் , ` தலைப்பட்டேன் ` என்பதே பொருளாகலின் , அச்சொல் இரண்டனுருபுகட்கு முடிபாதலும் , ` மூர்த்தி ` முதலியவற்றோடு இயைதலும் பொருந்திற்று . நீர்த் திரளைத் திருமேனியாகக் கொள்ளுதலின் , ` நீர்த்திரள் ` என்றதனை அடையடுத்த இடவாகு பெயராகக் கொண்டு , மூர்த்தி முதலிய பெயர்களோடு இயைக்க .

பண் :

பாடல் எண் : 2

மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை
வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் உள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை
இமையவர்தம் பெருமானை யுமையா ளஞ்சக்
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்
கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

அமுதமாக உள்ளவனாய் , தியானிப்பவர் மனத்து இருப்பவனாய் , பிறையை அணிந்த சடையனாய் , மகிழ்ந்து என் உள்ளத்து இருப்பானாய் , பிறப்பு இறப்பு இல்லாதவனாய் , தேவர்கள் தலைவனாய் , பார்வதி அஞ்சுமாறு கரிய மத நீரை உடைய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனாய் , வலிய மழுப்படையை உடையவனாய் , ஊர் ஊராய்ப் பிச்சை எடுத்துத் திரிவானாய்த் திருவானைக்காவில் உள்ள நீர்த்திரள் ` வடிவாக அமைந்த பெருமானைத் தலைப்பட்டேன் .

குறிப்புரை :

மருந்தான் - அமுதமாய் உள்ளவன் : ` பிறவிப் பிணிக்கு மருந்தாய் உள்ளவன் ` எனலுமாம் . ` வளர்மதி ` என்றது , ` இளம்பிறை ` என்றவாறு . ` மதி ` என்பது , அம்ஏற்று , மகர ஈறாய் நின்றது ; அதன்கண் தொக்கு நின்ற இரண்டனுருபு , ` சடையான் ` என்னும் வினைக்குறிப்புக் கொண்டது . ` மகிழ்ந்து ` என்றது . ` அருளி ` என்னும் பொருளது கருந்தானம் - கரிய மதநீர் ; இது கூறினமையால் , ` மதகளிறு ` என்பதில் ` மதம் ` என்றதற்கு , ` களிப்பு ` எனப் பொருள் உரைக்க . இவ்வாறன்றி , ` கருந்தாள மதகரி ` எனப் பாடம் ஓதுவாரும் உளர் . கனம் - பெருமை . ` கனல் மழுவாள் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :

பாடல் எண் : 3

முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே.

பொழிப்புரை :

பிறையை முடிமாலையாக அணிந்தவனாய் , கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்க்கு அமுதம் வழங்கும் உறவினனாய் , பல உயிர்களுக்கும் துணையாவானாய் , ஓங்காரத்தின் உட்பொருளாய் , உலகங்களை எல்லாம் தோற்றுவித்துப்பின் ஒடுக்குபவனாய்த் தன்னைத் தலைவன் என்று போற்றாத அசுரர்களின் முப் புரங்களையும் அழித்தவனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

முந்நீர் - கடல் . உற்றான் - உறவினன் ; களைகண் ஆனவன் . ஓங்காரத்து உட்பொருளை மேலே ( ப .39. பா .10) காண்க . ` பெற்றான் ` என்பது , ` தோற்றுவித்தான் ` என்னும் பொருட்டாய் நின்றது . இறக்கம் செய்தல் - ஒடுக்குதலைச் செய்தல் . ` இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் ; தோற்றி - இறைவனே யீண்டிறக்கம் செய்வான் ` ( அற்புதத் திருவந்தாதி - 5.) என்னும் அம்மை திரு மொழியைக் காண்க . ` இரக்கம் செய்வான் ` என்னும் பாடம் சிறப்பின்று .

பண் :

பாடல் எண் : 4

காராருங் கறைமிடற்றெம் பெருமான் தன்னைக்
காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்
பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

கருமை நிறைந்த நீலகண்டனாய்க் காதில் வெண்ணிறக்குழையை அணிந்தவனாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூ மாலையனாய் , புலித்தோலை ஆடையாக அணிந்தவனாய் , ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவனாய் , படிகமணிமாலையை மார்பில் அணிபவனாய் , உலகங்களை அழிப்பவனாய் , தெய்வத் தன்மை பொருந்திய நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழு நீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

கார் ஆரும் கறை - கருமை பொருந்திய நஞ்சு ; ` மணி மிடறு ` என்பதும் பாடம் . ` கொன்றைப் பூந்தாரானை ` என மாற்றுக . தான் அன்றி - தான் இருப்பின் அல்லது . ஒன்றும் - ஒருபொருளும் . இல்லா - இலையாகின்ற சிறப்பினை உடைய ; என்றது , எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாய் உள்ள என்றபடி . ` பேர் ` என மருவி நின்ற ` பெயர் ` என்பது , ஈண்டு ` பொருள் ` என்னும் பொருளதாய் நின்றது ; ` ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவன் ` என்க . காரியப் பொருட்டாகிய , ` இல்லா ` என்னும் எதிர்மறைப் பெயரெச்சக் குறிப்பு , காரணப் பெயர் கொண்டது . எலும்புமாலை தலைமாலைகளேயன்றி , ஏனையோரொடொப்ப மணிமாலை அணிதலும் சிவபிரானுக்கு உண்டென்பது உணர்த்தற்பொருட்டு , ` மணி ஆரமார்பினானை ` என்றருளினார் ; ` நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பர்க்குக் - கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்கு ` ( தி .5. ப .92. பா .2.) என்று அருளினார் , திருக்குறுந்தொகையினும் . திரிபுரம் எரிக்கச் சென்ற காலத்து , வேதங்களே சிவபிரானுக்குத் தேர்க் குதிரைகளாயின எனப் புராணங் கூறுதல் அறிக .

பண் :

பாடல் எண் : 5

பொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப்
புண்ணியனை நண்ணாதார் புரம்நீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை
ஏறமரும் பெருமானை யிடமான் ஏந்தும்
கையானைக் கங்காள வேடத் தானைக்
கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

பொய்க்கலப்பற்ற மெய்ம்மை வடிவினனாய் , புண்ணியனாய் , பகைவர் மும்மதில்களும் சாம்பலாகுமாறு அம்பு செலுத்தியவனாய் , தவத்தில் மேம்பட்டவனாய் , காளை வாகனனாய் , மானை ஏந்தும் இடக்கையனாய் , கங்காள வேடத்தானாய் , கட்டங்கம் என்ற படையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உடையவனாய் , தீயைப்போன்று சிவந்த மேனியனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

ஏதும் - சிறிதும் . நண்ணாதார் - நெருங்காதவர் ; பகைவர் . ` புண்ணியம் ` ஈண்டுத் தவம் ; உயிர்கட்குத் தவமாகின்றவன் தானே ` என்றவாறு . கடைதலின்கண் தோன்றும் விறகில் தீப்போல , உயிர்கள் செய்கின்ற தவத்தின்கண் மிக்கு விளங்குபவன் என்க ; தவமாவது , அவனை நோக்கிச் செய்வதே என்பது முன்னே குறிக்கப்பட்டது . ஏறு அமரும் - எருதை ஊர்தியாக விரும்புகின்ற . இடம் - இடப்பக்கத்தில் . செய்யான் - செம்மை நிறம் உடையவன் .

பண் :

பாடல் எண் : 6

கலையானைப் பரசுதர பாணி யானைக்
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்தலையி னுச்சி யானை
வார்தருபுன் சடையானை மயானம் மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

கலையையும் , மழுப்படையையும் ஏந்திய கைகளை உடையவனாய் , பெரிய வயிரத்திரளாய் , மாணிக்கமலையாய் , என் தலையின்மேல் உள்ளானாய் , நீண்டசெஞ்சடையனாய் , சுடுகாட்டில் நிலையாக இருப்பவனாய் , வாசுகி என்ற பாம்பை நாணாகக் கோத்து , தன்னை விருப்புற்று நினையாத அசுரர்களின் மும்மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு , வளைக்கப்பட்ட மேருமலையாகிய வில்லினை உடையவனாய் , திருவானைக்காவில் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

கலை - மான் , பரசு தர பாணி - மழுத் தரித்த கை ; மான் மழு ஏந்தினமை குறித்தவாறு . ` பாசுபத பாணியானை ` எனவும் பாடம் ஓதுப . கனம் - பெருமை . மணி - அழகு . ` வயிரத் திரளான் , மாணிக்க மலையான் ` என்பன ஒப்பின் ஆகிய பெயர் . வார்தரு - நீண்ட . நினையாதார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 7

ஆதியனை யெறிமணியி னோசை யானை
அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் தன்னை
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

எல்லோருக்கும் முற்பட்டவனாய் , மணியின் ஓசை போல எங்கும் பரந்தவனாய் , உலகில் உள்ளவரால் அறிய முடியாதபடி உலகுக்கு அப்பாலும் பரவிய சோதி வடிவினனாய் , வேதத்தின் விழுமிய பொருளாய் , வண்டுகள் தங்கும் கொன்றை மலர் , எல்லோருக்கும் முற்படத் தான் பூண்ட பூணூல் இவற்றால் விளங்கும் வேதியனாய் , அறத்தை உபதேசித்த ஆசிரியனாய் , தாமரையில் விளங்கும் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை நீக்கியவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

ஆதியன் - முதல்வன் . அணி மணியிற் பிரித்தற்கு , ` எறி மணி ` என்றருளினார் . ` மணியின்கண் ஓசையாய்க் கலந்து நிற்பவன் ` என்க . அண்டத்தார் - வானவர் ` அண்டத்துக்கு அப்பால் மிக்கு விளங்கும் ஒளியாய் உள்ளவன் ` என்க . ` அண்டம் ஆரிரு ளூடுக டந்தும்பர் - உண்டு போலுமோரொண்சுடர் ` ( தி .5. ப .97. பா .2.) என்றருளியது காண்க . தொன்னூல் - நூல் பூண்பார் எவரும் பூண்பதற்கு முன்னர்ப் பூண்ட நூல் ; எனவே , ` வேதியன் ` என்றது , ` முதல் வேதியன் ` என்றவாறாம் . இதனால் , ` வேத ஒழுக்கத்திற்கு முதல்வன் அவனே ` என்பது குறிப்பிக்கப்பட்டது . பட்டன் - ஆசிரியன் . ` சேதி ` என்னும் முதனிலைத் தொழிற் பெயரொடு அன் ஈறு புணர்ந்து , ` சேதியன் ` என்று ஆயிற்று ; ` அறுத்தலை உடையவன் ` என்பது பொருள் .

பண் :

பாடல் எண் : 8

மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை
மறவாது கழல்நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்
பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை
ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

கச்சி ஏகம்பத்தை விரும்பி உறைபவனாய் , தன் திருவடிகளை மறவாது விருப்புற்று நினைத்து வாழ்த்தி உயர்த்திப் புகழ்ந்த அடியவர்களைப் பொன்னுலகு எனப்படும் தேவர் உலகை ஆளச் செய்பவனாய் , பூதகணமாகிய படையை உடையவனாய் , சுடு காட்டில் கூத்தாடுதலை விரும்புபவனாய் , பிச்சை ஏற்றலை ஆசைப் படுபவனாய் , பவளத்திரள்போல என் உள்ளத்தில் விளங்குபவனாய் , திருவானைக்காவுள் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

` கச்சி ஏகம்பம் மகிழ்ந்தானை ` என்பது கருத்தாகக் கொள்க ; மகிழ்ந்தான் - விரும்பினான் . ஏத்துதலை , வணக்கங் கூறுதலாக உரைக்க . பொன்னுலகம் - சிவலோகம் ; அன்னதாதலை , மண்ணுல கிற்பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் - பொன்னுலகம்பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் ` ( தி .7. ப .100. பா .5.) என்பதனானும் அறிக . ஆள்வித்தல் - அதன்கண் பெறும் இன்பம் எல்லாவற்றையும் நுகர்வித்தல் . ` பவளத் திரள் ` என்பது , உவமையாகுபெயர் . ` உள்ளம் ` என்றது , அறிவை .

பண் :

பாடல் எண் : 9

நசையானை நால்வேதத் தப்பா லானை
நல்குரவு தீப்பிணிநோய் காப்பான் தன்னை
இசையானை யெண்ணிறந்த குணத்தான் தன்னை
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

எல்லோருடைய விருப்பத்திற்கும் உரியவனாய் , நான்கு வேதங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் , வறுமை மனநோய்கள் உடல்நோய்கள் ஆகியவற்றை நீக்குபவனாய்ப் புகழுக்கு உரியவனாய் , எல்லையற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமாயவனாய் , இடை மருதும் ஈங்கோயும் உறைவிடமாக உடையவனாய் , காளைவாகனனாய் , விரிந்த கடலும் ஐம்பூதங்களும் எட்டுத் திசைகளும் ஆகியவனாய் , திருவானைக்காவுள் உறைவானாய் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

நசையான் - விருப்பத்திற்கு உரியவன் ; ` விரும்புதற்கு உரியவன் ` என்றதாம் . நல்குரவு - வறுமை . நோய் - துன்பம் , ` நல்குரவு தீப்பிணிநோய் ` என்னும் செவ்வெண்ணின் தொகை தொகுத்தல் ஆயிற்று . ` நல்குரவும் ` என்பது பாடம் அன்று . இசையான் - பண்ணின் கண் உள்ளவன் . இறைவனது குணத்தை ` எட்டு ` என்றல் , வகையால் அன்றி , விரியால் அன்மையின் , அவை விரியால் எண்ணிறந்தன வாதல் உணர்க . இடைமருது , ஈங்கோய் சோழநாட்டுத் தலங்கள் . ` நீங்காத ` என்னும் எதிர்மறைப் பெயரெச்ச ஈற்று அகரம் தொகுக்கப் பட்டது . அவ்வெச்சம் , ` ஏற்றின்மிசையான் ` என்னும் பெயரொடு முடிந்தது , செய்யுட்கேற்ப உம்மை தொகுத்தும் , பிறவாறும் ஓதப்பட்டதாயினும் , புனலும் காற்றும் திசையும் ஆகியானை ` என்றே கொள்க : ` மிகுதல் ` என்னும் அடை , ` மாண் ` முதலிய எல்லாவற்றிற்கும் ஆகும் ; பெரும் பொருள்களாகிய அவை எல்லாம் ` என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 10

பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்
பண்டயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணஞ்
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்
தேவர்கள் தம் பெருமானைத் திறமுன்னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்
ஆண்மையெலாங் கெடுத்தவன்தன் இடரப் போதே
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

மன்மதன் உடல் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவனாய் , ஒருகாலத்தில் பிரமன் திருமால் இருவரும் தன்னை முடி அடி அறிய முடியாதவாறு தீப்பிழம்பாய் நின்றவனாய் , தேவர்கள் தலைவனாய் , தன்னுடைய வலிமையை நினைத்துப்பாராமல் ஆரவாரித்து ஓடிவந்து , கயிலை மலையை எடுத்த இராவணனுடைய ஆற்றலைப் போக்கிப்பின் அவன் துயரை அப்பொழுதே தீர்த்தானாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

` வீழப் பார்த்தானை ` எனக் கூட்டுக . சீர்த்தான் - உயர்ந்து தோன்றியவன் . திறம் - வலிமை ; என்றது , வினை வலியையும் தன் வலியையும் . உன்னாதே - ஆராயாமலே . ஆர்த்து - ஆரவாரித்து .
சிற்பி