திருக்கச்சி ஏகம்பம்


பண் :

பாடல் எண் : 1

கூற்றுவன்காண் கூற்றுவனைக்குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

உலகை அழிப்பவனாய் , கூற்றுவனை அழித்த தலைவனாய் , உலக காரணனாய் , உலகில் நீரும் காற்றும் கனலும் ஒலிக்கின்ற மேகமும் அதன் மின்னலுமாகி , பவளச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்து , பிறைதவழும் சென்னியனாய் , கங்கை வெள்ளத்தை நிமிர்ந்த சடைமேல் ஏற்றவனாய் , அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கச்சி ஏகம்பத்திலுள்ள பெருமான் என் எண்ணத்தின்கண் ஆயினான் .

குறிப்புரை :

சிவபிரானை , ` கூற்றுவன் ` என்றல் , அழித்தல் தொழிலை உடைமை பற்றி . குமைத்த - அழித்த . குவலயம் - பூமி . கலிக்கும் - ஒலிக்கின்ற ; இடிக்கின்ற : இதற்கு , ` மேகம் ` என்னும் வினைமுதல் வருவிக்க . ` கலிக்கும் ` என்னும் பெயரெச்சம் , ` மின் ` என்னும் கருவிப்பெயர் கொண்டது ; மின்னலும் இடியும் புலப்பாட்டு வகையால் முறையே காரண காரியங்களாகக் கூறப்படும் . கனம் - பெருமை . ` மேனியில் கலந்த ` என்க . ஊர்தல் - தவழ்தல் . ` நிறைய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ஆர்ந்த - பொருந்திய ; ` நிலவுலகில் வந்த ` என்றபடி நிமிர்சடை - நீண்டசடை , ` எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ` என்றது . கோ நகராய சிறப்புப்பற்றி ; இனி , ` எழிலாரும் பொழிலார் ஏகம்பம் ` என ஏகம்பத்திற்கு அடையாக்கலுமாம் ; ` அம்மை இங்கு வழிபடுதற் பொருட்டு திருநந்தனவனம் ஒன்றை ஆக்கினார் ` எனவும் ` ` அஃது , ` அம்பிகாவனம் ` என்னும் பெயருடையது எனவும் இத் தலபுராணங் கூறுதலும் , இதனை அடுத்துள்ள ` அம்பி . என்பதோர் ஊரே அத்திருநந்தனவனமாக இஞ்ஞான்று சொல்லப்பட்டு வருதலும் , ` ஏரி யிரண்டும் சிறகா ` ( தண்டி ) என்னும் வெண்பாவினுள் , ` காருடைய பீலி கடிகாவா ` எனக் காணப்படுதலும் இங்கு நினைத்தற்கு உரியன ; ` கடிகாவா ` என்பதற்கு வேறு பொருள் கூறுவாரும் உளர் . கச்சியில் உள்ள எண்ணிறந்த தலங்களுள் , ஏகம்பம் முதல் தலம் என்க . ` அவன் என் எண்ணத்தான் ` என்றருளியது . சுவாமிகளுக்கு அப்பெருமானிடத்துள்ள அழுந்திய ஆர்வத்தைப் புலப்படுத்தும் . இவ்வாறே , அவனை , ` என் மனத்தே வைத்தேனே ` ( தி .4. ப .7.) என ஒரு திருப்பதிகத்தை முன் அருளிச்செய்தார் . சேக்கிழாரும் , ` திருவே கம்பர் தமை - நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடு பதிகம் பாடுவார் ` ( தி .12 தி . நா . பு . 323) என சுவாமிகள் புராணத்துட் கூறினார் .

பண் :

பாடல் எண் : 2

பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையகங்கள் பொறைதீர்ப் பான்காண்
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பல உயிர்களாகி எங்கும் பரந்தவனாய் , தன்னை வழிபட்டு எழுபவருடைய பாவங்களையும் வினைகளையும் போக்கியவனாய் , தூய பூக்களாலாகிய முடிமாலையை உடையவனாய் , உலகைப்படைத்துக் காத்து அழிக்கும் பொருளாய் அமைந்த அமுதமாய் , உலகங்களின் பாரத்தைப் போக்குபவனாய் , மலர்களைத் திருவடிகளில் சேர்த்து , விருப்புற்று நினைத்து வழிபடுபவர்களுடைய உள்ளத்தை விடுத்து நீங்காது இருப்பவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .

குறிப்புரை :

` எங்கும் பரந்தவன் ` என இயைக்க . எங்கும் - எல்லாப் புவனங்களிலும் . பரந்தவன் - பரவியவன் . பணிந்தெழுதல் வணங்கும் உணர்வோடே துயிலுணர்தல் ; ` தம்மையே சிந்தியா எழுவார்வினை தீர்ப்பர் ` ( தி .3. ப .54. பா .3.) எனவும் , ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய - என்றெழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே ` ( தி .6. ப .93. பா .10.) எனவும் ` தொழுதெழுவார் - வினைவளம் நீறெழ நீறணி யம்பலவன் ` ( தி .8 திருக்கோவை - 118.) எனவும் அருளியன காண்க . பாவத்தை மட்டிலே நீக்க வேண்டுவார்க்கு அதனையும் , இருவினைகளையும் நீக்கவேண்டுவார்க்கு அவைகளையும் நீக்கியருளுவான் என்பார் , ` பாவமும் வினையும் போகத் துரந்தவன் ` என்றருளினார் . துரத்தல் - ஓட்டுதல் . ` மலர் ` என்பது சொல்லுவாரது குறிப்பால் , கொன்றை மலராம் . ` தோற்றம் நிலை இறுதி ` என்றது . உலகம்படும் முத்தொழிலை . அத்தொடர் உம்மைத் தொகையாய் நின்று , ` அவற்றைச் செய்யும் பொருள் ` என , இரண்டாம் வேற்றுமைப் பொருள்மேல் , ` பொருள் ` என்னும் சொல்லோடு தொக்கது . ` நிற்றல் ` என்பது உண்மையையுணர்த்தல்போல , ` வருதல் ` என்பதும் ஒரோவழி உண்மையை உணர்த்தும் ; அதனால் ` வந்த ` என்றது , ` நின்ற ` என்றவாறாம் . மூலமலமாய நோய்க்குத் தோற்றம் முதலிய மூன்றும் மருந்தாகலானும் , ` உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்றப்பால்நாற் கூற்றே மருந்து ` ( குறள் - 950.) என , நோயைத் தீர்ப்பவனும் , ` மருந்து ` எனப்படுதலானும் , ` தோற்றம் நிலையிறுதிப் பொருளாய் வந்த மருந்தவன்காண் ` என்றருளினார் . ` மருந்தவன் ` என்பதில் அகரம் சாரியை . ` நிலவுலகம் ` என்னும் பொருளதாகிய ` வையகம் ` என்பது , இங்கு , ` உலகம் ` எனப் பொதுப் பொருள் குறித்து நின்றது . பொறை - சுமை . ` அதனைத் தீர்ப்பான் ` என்றது . ` உயிர்களது பிறவியை நீக்கியருளுவான் ` என்றவாறு ; ` வையகங்கள் ` என்புழியும் இரண்டனுருபு விரிக்க . ` நினைந்தெழுவார் ` என்பதற்கும் , மேல் , ` பணிந்தெழுவார் ` என்பதற்கு உரைத்தவாறு உரைக்க .

பண் :

பாடல் எண் : 3

நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக் கேடில்லா தான்காண்
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்தவனாய் , நீரும் தீயும் ஆனவனாய் , கனமான மழுப்படை உடுக்கை அக்கினி இவற்றைக் கைகளில் ஏந்தியவனாய்த் தனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லாதவனாய் , ஒப்பற்றவனாய் , தன்னைத் துணையாகக் கொண்டு தொழும் அடியவர்களுடைய உள்ளத்தைப் பாதுகாப்பவனாய் , புகழ்கள் படைத்தவனாய் , விரிந்த சடைமீது புள்ளிகளை உடைய பாம்பினையும் கங்கையையும் ஏற்றவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .

குறிப்புரை :

நிறை மழு - வெம்மை நிறைந்த மழு . தமருகம் - துடி ( உடுக்கை ). தோற்றவன் - தோன்றுதலுடையவன் ; தோற்று , முதனிலை திரிந்த தொழிற்பெயர் ; அகரம் சாரியை . ` தோற்றக் கேடு ` உம்மைத் தொகை ; ` தோன்றுதலும் அழிதலும் ` என்பது பொருள் . துணை இலி - ஒப்பு இல்லாதவன் ; ` தனக்குவமை இல்லா தான் ` ( குறள் - 7.) என்றார் திருவள்ளுவ நாயனாரும் . ` அவனே துணை என்று ` என்க . ` உள்ளம் ` என்புழி , இரண்டனுருபு விரிக்க . போற்றவன் - காத்தல் உடையவன் ; என்றது , நீங்காதிருப்பவன் ` என்றவாறு . ` புகழ்கள் ` என்றது , ` எல்லாப் புகழ்களையும் ` என்றபடி . ` படைத்தான் ` என்பதில் , ` படைத்தல் ` என்பது , ` படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும் - உடைப் பெருஞ் செல்வர் ` ( புறம் - 188.) என்புழிப்போல ` உடையனாதல் ` என்னும் பொருளது . ` கங்கைப் புனலும் ` என மாற்றியுரைக்க . ` பொறியரவம் விரிசடைமேற் புனலங் கங்கை ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :

பாடல் எண் : 4

தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் மலைமங்கை பங்கா என்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்கும்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத்தானே.

பொழிப்புரை :

உலகிற்குத் தாயாய் , தன்னொப்பார் இல்லாத தத்துவனாய் ; பார்வதி பாகனாய் , அடியவர்கள் வாக்கில் இருப்பவனாய் , இனி வரக்கூடிய பிறவி நோயைத் தீர்ப்பானாய் , உலகியலிலேயே ஈடுபடும் தன்னை நினையாத தேவர் தானவர் மக்கள் ஆகியோருக்குத் தூரத்திலுள்ளவனாய் , மனமாரத் திருவடியை விரும்பித் தியானித்து எழுபவர் உள்ளத்தில் பொருந்தியவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .

குறிப்புரை :

தாயவன் - தாயாய் இருப்பவன் . வாயவன் - வாயின் கண் இருப்பவன் ; என்றது , ` அவர்சொல்லின்கண் விளங்கி நின்று பயன் தருபவன் ` என்றதாம் ; இதனால் , ` இறைவன் அடியார் நிறை மொழி மாந்தராய் விளங்குதல் இவ்வாற்றான் ` என்பது விளக்கி யருளப்பட்டது . ` வரும் ` என்றது , ` வினையால் பிறப்பும் , பிறப்பால் வினையும் எனக் காரண காரியத் தொடர்ச்சியாய் முடிவின்றி வருகின்ற ` என்றவாறு . பிறவியாகிய நோய் ` என்க . வானவர் - தேவர் ; தானவர் - அசுரர் . மண்ணுளோர் - மக்கள் ; ` உயர்திணையாகிய இவர் அனைவர்க்கும் எட்டாதவன் ` என்றதாம் . சித்தம் ஆர - மனம் இன்பத்தினால் நிரம்ப . ` உள்கி நினைந்து ` என்பது ஒரு பொருட்பன் மொழி . ஏயவன் - பொருந்துதல் உடையவன் .

பண் :

பாடல் எண் : 5

அடுத்தானை யுரித்தான்காண் * *
* * * * * * *

பொழிப்புரை :

தன்னைக் கொல்ல நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவன் .

குறிப்புரை :

இத்திருப்பதிகத்தின் ஐந்தாம் திருத்தாண்டகத்துள் , ` அடுத்தானை உரித்தான்காண் ` என்னும் ஒரு தொடரையன்றி , ஏனைய பகுதிகள் கிடைத்தில ; அத்தொடர் இத்தலத்து அருளிய மற்றொரு திருப்பதிகத்தின் தொடக்கமாகிய ` அடுத்தானையுரித் தானை ` ( தி .4. ப .7. பா .10.) என்னும் தொடரோடு ஒருங்கு ஒத்து நிற்கின்றது .

பண் :

பாடல் எண் : 6

அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் தான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

கூரிய வாயை உடைய அம்பினாலே மும்மதிலையும் அழித்தவனாய் , ஐயாறும் , இடைமருதும் ஆள்பவனாய் , பகைவரைப் பழித்தவனாய் , அடியார்களுக்குத் துணையாய் இருப்பவனாய் , பாம்பினை வில் நாணாகக் கொண்டவனாய் , தலையில் கங்கையைச் சுழன்று தங்கச் செய்தவனாய் , தன் திருவடிகளை வழிபட்ட பகீரதனுக்காக உலகில் ஒடுமாறு கங்கை நீரைச் சிறிது இறக்கியவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆரும் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .

குறிப்புரை :

` அம்பால் அழித்தவன் ` எனவும் , ` அடையாரைப் பழித்தவன் ` எனவும் , ` முடிக்கண் கங்கை சுழித்தவன் ` எனவும் கூட்டுக . அயில்வாய் - கூர்மையான வாயினையுடைய ; ` கூர்மை வாய்ந்த ` எனலுமாம் . ஐயாறும் , இடைமருதும் சோழநாட்டுத் தலங்கள் . அடையார் - தன்னை அணுகாதவர் . பழித்தலாவது , விரும்பாமை ; முன்னின்று அருளாமை . பற்றவன் - துணையாய் இருப்பவன் ; அகரம் , சாரியை . ` புற்று அரவம் ` என்றது இன அடை . நாண் - அரைநாண் . சுழித்தவன் - அடக்கியவன் . ` முனிவர்க்கா ` என்றது , ` அவர்கள் முழுகித் தவஞ்செய்தற் பொருட்டு ` என்றவாறு . இழித்தவன் - இறக்கியவன் ; இழித்ததும் கங்கையை என்க ; ` சடையில் அடக்கிய கங்கையைப் பகீரதன் முன்னிலையாகப் பலர்க்கும் பயன்படுமாறு பூமியில் சிறிது விடுத்தவன் ` என்றவாறு ; சிவபிரானை , கங்கையைச் சடையில் தரித்த நிலைபற்றி , ` கங்காதர மூர்த்தி ` எனவும் , அக்கங்கையைச் சிறிது நிலத்தில் விடுத்தநிலைபற்றி , ` கங்கா விசர்ச்சன மூர்த்தி ` எனவும் கூறுவர் .

பண் :

பாடல் எண் : 7

அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
அழல்வண்ணத் தில்அடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
பான்மையன் காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் தான்காண்
கடலில்விடம் உண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பாடலை விரும்பி , உடல் அசைந்து கூத்து நிகழ்த்தியவனாய் , தன் தீப்பிழம்பாகிய வடிவில் அடியும் , முடியும் , மாலும் அயனும் தேட , அவர்களுக்கு இரங்கியவனாய் , பேய்க் கூட்டங்கள் முன் நின்று துதித்துப் புகழும் இயல்பினனாய் , தன்னை முன் நின்று துதித்துத் தியானிப்பவர்பால் மனம் இளகியவனாய் , யானைத் தோலைப் போர்த்தவனாய் , கடலின் விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதம் ஈய மனம் பொருந்தியவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` பாடல் பேணி நடம் ஆடி அசைந்தான் ` எனக் கூட்டி , ` அசைந்து நடம் ஆடினான் ` என மாற்றியுரைக்க . ` அசைந்து ` என்றது , ` அசைவு இல்லாதவன் ` என்பது உணர்த்தி நின்றது . ` அடியும் முடியும் தேட ` என்றதற்கு , ` மாலும் அயனும் ` என்னும் வினைமுதல் வருவித்துக் கொள்க . பசைந்தவன் - இரங்கியவன் ; இரங்கியது அவர்கள் துன்பத்திற்கு . பரவி - பரந்து - பரந்து ; சூழ்ந்து . பான்மை யான் - தன்மையுடையவன் . ` கசிந்தவன் ` என்பதும் , ` இரங்கியவன் ` என்றே பொருள் தரும் . கடலில் விடம் - கடலின்கண் எழுந்த நஞ்சு . ` இசைந்தவன் ` என்றது , அச்செயலுக்கு ஒருவரும் இசைய ( உடன் பட ) மாட்டாமை குறித்து நின்றது .

பண் :

பாடல் எண் : 8

முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
முழங்கிஉரு மெனத்தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

கொடிய கூற்றுவனை அழித்தவனாய் , தன் கோபத்தீயினால் , வலிய பகைவர்களின் மும்மதில்களும் தீயில் வெந்து அழியுமாறு , வில்லை ஏந்தியவனாய் , தலைக்கோலம் அணிந்த வேடத்தானாய் , நறுமணம் கமழும் கொன்றை மாலையையும் , பாம்பையும் தலையில் அணிந்தவனாய் , முத்தலைச் சூலத்தை உடையவனாய் , மழையாய் மின்னி இடித்தவனாய் , உள்ள எழிலாகும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` வன் கூற்றை முடித்தவன் ` எனக் கூட்டுக . கூற்று - இயமன் . முடித்தவன் - அழித்தவன் . சீற்றத் தீ - சினம் என்னும் நெருப்பினாலே . சாபம் - வில் . ` பிடித்தவன் ` என்றது , அவ்வில் பயன்படாதே நின்றதைக் குறித்தது . மூவிலை வேல் - சூலம் . உரும் என - இடியாகி . மழை - மேகம் . ` இடித்தற்கு உரிய மேகமாய் ` என்பார் , ` உருமெனத் தோன்றும் மழையாய் ` என்றருளினார் . ` மழையாய் மின்னி இடித்தவன் ` என்றது , உலகைக் காத்து நிற்கும் கருணையை விளக்கியருளியவாறு .

பண் :

பாடல் எண் : 9

வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` நினையாதார்க்கு வருந்தவன் ; ` வஞ்சன் ` என்க . வருந்து - வருந்துதற்கு ஏது ; துன்பம் ; முதனிலைத் தொழிற் பெயர் , ஆகுபெயராய் நின்று , விகுதியேற்றது . அகரம் , சாரியை . ` வருந்தான் காண் ` என்றும் ஓதுப . ` பிணிகள் தீரும் வண்ணம் மருந்தவன் ` என்க ; இதன்கண் , ` தீரும் வண்ணம் ` என்பதற்கு முடிபாக , ` ஆவான் ` என்பது வருவிக்க . பரந்தவன் . பரவி இருப்பவன் ; வியாபி . நடுச்சடையை விடுத்து , திசைக்கு ஒன்றாய் ஆடும் சடைகளை எண்ணி , ` சடை எட்டு உடையான் ` என்றாராகலின் , அஃது , ` ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ` ( தி .4. ப .18. பா .9.) என அருளிச் செய்ததனோடு மாறுகொள்ளாது என்க .

பண் :

பாடல் எண் : 10

வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் தான்காண்
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே

பொழிப்புரை :

`கொடிய பெருமை மிக்க புலித்தோலைப் போர்த்தி , வேதத்தின் பொருளாய் , எம் இறைவன் உள்ளான் ` என்று சொல்லி , மிடறு தழுதழுத்து , அழும் அடியவர்களுக்கு அருள் வழங்குபவனாய் , காளையை இவர்ந்து திரிபவனாய் , கூத்தாடும் பூதங்களின் தலைவனாய் , உலகங்களைத் தாங்கும் அற்புதனாய் , சொல்லின் அளவைக் கடந்து நின்ற புகழை உடைய எம் தலைவனாய் , எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

உழுவை - புலி ; அதனை , ` மானம் ` உடையதாக அருளியது , இடம் வீழ்ந்ததனை உண்ணாமை முதலியன நோக்கி ; ` புலி தனது வேட்டத்தின்கண் இடப் பக்கத்து வீழ்ந்த விலங்கினை உண்ணா திருந்து வலப்பக்கத்து வீழ்ந்ததனையே உண்ணும் ` என்பதனை , ` கடமா தொலைச்சிய கானுறை வேங்கை - இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும் ` ( நாலடி . 300.), ` கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென - அன்றவண் உண்ணாதாகி வழிநாள் - பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து - இருங்களிற்றொருத்தல் நல்வலம் படுக்கும் - புலி ` ( புறம் - 190.) என்றாற் போல்வனவற்றால் அறிக . அதள் - தோல் ; ` உரி ` என்றது ` ` உரிக்கப்பட்டது ` எனப் பொதுமையில் நிற்ப , அதனை ` அதள் ` என்றது பொதுமை நீக்கிச் சிறப்பித்தது என்க ; எனவே , ` அதளாகிய உரி ` என விரிதல் பெறப்பட்டது ; போர்த்தல் , ஈண்டு மேலாடையாக இடுதல் ; புலித்தோலைச் சிவபிரான் தன் அரையிற் கட்டுதலேயன்றி , மேலாடையாக அணிதலும் சில விடத்துக் கூறப் படுதல் அறிக . ` என்று இயம்பி ` என்றருளினாராயினும் , ` இன்னோரன்ன புகழை இயம்பி ` என்பதே கருத்தாகக் கொள்க . அழுதல் - கண்கலுழ்தல் . அளிப்பான் - அவர்க்கு வேண்டுவன ஈவான் ; அன்றி , ` அழுவாரை ` என உருபு மயக்கமாகக் கொண்டு , ` காப்பான் ` என்றுரைத்தலுமாம் . ` நடம் ` என்றது , துணங்கைபோல்பவற்றை . ` பூதத்தை உடைய அம்மான் ` என்க . அற்புதன் - அதிசய நிலையினன் . சொற்பதம் - சொல்லினது நிலை ; உம்மை . சிறப்பு .

பண் :

பாடல் எண் : 11

அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் தான்காண்
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையில்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
பொருகயிலை எடுத்தவன்தன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பிரமன் தலை ஒன்றை அறுத்தவனாய் , தேவர் வேண்ட ஆழ்ந்த கடலின் விடத்தை உண்டு , கங்கையைச் சடையில் அடக்கியவனாய் , தேவர்களுக்கும் தேவனாய் , எண்திசையும் தொழுது வணங்குமாறு கலைமானைக் கையில் தாங்கியவனாய் , தன் இருப்பிடமாகிய கயிலை மலையை அசைக்கவந்து , அதனைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் நசுக்கியவனான , எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

செறுத்தான் - அடக்கினான் . ` ஏனைய உயிர்கட்கே யன்றித் தேவர்க்கும் ` எனப் பொருள் தருதலின் , ` தேவர்க்கும் ` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம் . கலை மான் - ஆண் மான் . கயிலை அசைந்தமையால் உலகம் நடுங்கியது ஆகலின் , ` புகலிடத்தை நலிய வந்து கயிலை எடுத்தவன் ` என்றருளினார் . இனி , ` உலகை வருத்துதற்கு என்றே பிறந்து , கயிலையை எடுத்தவன் ` என்றுரைத்தலுமாம் . ` புகல் இடம் ` என்பது , ` வீட்டு நெறியை அடைய வேண்டுவார் புகுதல் உடைய இடம் ` என , நிலவுலகத்தைக் குறித்து நின்றது . ` இந்தப் பூமி - சிவன் உய்யக் கொள்கின்றவாறு ` ( தி .8 திருவா . திருப்பள்ளி . 10.) எனவும் , ` வானிடத்தவரும் மண்மேல் வந்தரன் றனையர்ச் சிப்பர் ` ( சிவஞான சித்தி . சூ . 2. 92.) எனவும் அருளியன காண்க . ` பொரு கயிலை ` என்றது , ` அவனுக்குத் தடையாய் நின்ற கயிலை ` என்றவாறு . இறுத்தான் - நெரித்தான் .
சிற்பி