திருக்கச்சி ஏகம்பம்


பண் :

பாடல் எண் : 1

உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க
ஓங்காரத் தொருவன்காண்உணர் மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பார்வதி கண்டு அச்சத்தால் தளருமாறு , வலிய யானையின் தோலை உரித்தவனாய் , ஓங்காரத்தால் உணர்த்தப்படுகின்ற பரம் பொருளாய் மெய்ஞ்ஞானத்தை விரித்தவனாய் , நான்கு வேதங்களையும் ஓதுபவனாய் , உலகில் பல உயிர்களையும் ஊழ் வினைப்படி படைத்தவனாய் , எங்கும் சிறுதெய்வங்களாகவும் தோன்றிப் பரந்திருப்பவனாய் , முப்புரங்களும் சாம்பலாகுமாறு வில்லால் எரித்தவனாய் , அழகு நிறைந்த சோலைகள் நிரம்பிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்தில் உள்ளான் .

குறிப்புரை :

உரம் - வலிமை . ஒல்க - தளர ; அஞ்ச , ` உமையாள் ஒல்கக் களிற்றை உரித்தவன் ` என்க . ஓங்காரத்து - ஓங்காரத்தினால் உணர்த்தப்படுகின்ற . ஒருவன் - தன்போல்வார் ஒருவரும் இன்றித் தான் ஒருவனேயாய் நிற்பவன் . இதுபற்றியே , சிவபிரானை , ` ஏகன் ` என வழங்கும் உபநிடதம் ( சுவேதாசுவதரம் ). ` ஞானம் ` என்றது , அறியற்பாலனவாய பொருள்களை ; அவை பொருள் இயல்புகள் . விரித்தான் - பெரியோர்க்கு விளக்கினான் . ` அவ்வாறு விரித்த ` என இயைவித்து உரைக்க . வேதத்தான் - வேதத்தை உடையவன் ; என்றது , ` அவற்றிற்குத் தலைவன் ` என்றவாறு ; ` வித்தையெல்லாவற்றிற்கும் தலைவ ` ( சிவபிரான் ) என்கின்றது மகோபநிடதம் . விதியினால் - ஊழின்படி . தெரித்தவன் - படைத்தவன் . ` எங்கும் சில்லுருவாய் ` எனக் கூட்டுக . ` உரு ` என்றது , தெய்வங்களை . பன்மை கூறாது சின்மை கூறியது அவற்றது இழிவு தோன்ற என்க ; ` சில்லாண்டிற் சிதையும் சிலதேவர் ` ( தி .9 திருப்பல்லாண்டு . 4.) என்றருளியதுங் காண்க . திரண்டவன் - அவற்றது ஆற்றல்கள் பலவும் தனது ஆற்றலேயாக நிறைந்து நிற்பவன் .

பண் :

பாடல் எண் : 2

நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண்
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

அடியார்க்கு அன்பனாய் , தன்னிடம் அன்பு இல்லாத கீழ்மக்களை நினைத்துக் கூசி அகல்பவனாய் , தன்னை வணங்குதற்கு நாணாதவர் மனத்தின் கண் எளிமையாய்த் தங்கும் இளையவனாய் , அழகிய மணம் கமழும் கொன்றையை அணிந்தவனாய் , பார்வதி பாகனாய் , தேவர்கள் எப்பொழுதும் வணங்கித் துதிக்கும் எழிலாரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` நேசர்க்கு நேசன் ` என்க . ` நீசர்தம்மை ` என்பதன்பின் , ` அணுகுதற்கு ` என ஒரு சொல் வருவிக்க . கூசன் - கூசுதலுடையவன் ; கூசுதல் - நாணுதல் ; ` நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே ` ( தி .5. ப .90. பா .9.) என்றருளினமை காண்க . கூசாதார் - மாண்பு இறந்த மானங் காரணமாகத் தன்னை வணங்கிக் கூசியொழியாதவர்கள் . ` நெஞ்சின்கண் ` என உருபு விரிக்க . ` தஞ்சம் ` என்பது கடைக் குறைந்து நின்றது . ` தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டு ` ( தொல் . சொல் . 266.) என்பவாகலின் , ` தஞ்சே குடி கொண்ட ` என்பதற்கு , ` எளிமையாகக் குடிகொண்ட ` என உரைக்க . ` கொன்றை வாசன் ` என்றதற்கு ` வாசக் கொன்றையன் ` என்பது கருத்தாகக் கொள்க .

பண் :

பாடல் எண் : 3

பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்
புண்ணியன்காண் நண்ணியபுண்டரிகப்போதின்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் தான்காண்
வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பூமி முதலிய எழு உலகங்களையும் தாங்கி , மேம்படும் பாரத்தைச் சுமப்பவனாய் , புண்ணியனாய் , தாமரையில் உறையும் வேதா எனப்படும் பிரமனாய் , அவனைப்படைத்த திருமாலாய் , நீண்ட சடையில் பாம்போடு பிறையைச் சூடியவனாய் , பிறையைப் போன்ற பற்களையும் பிளந்த வாயையும் உடைய பேய்களோடு சுடுகாட்டில் இரவில் கூத்து நிகழ்த்தும் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

பொறை - பொறுத்தல் ; தாங்குதல் ; ` அதனை உடையவன் ` என்றருளினமைக்குக் காரணமாக , ` பூமி ஏழ்தாங்கி ` என்றருளினார் , ` பூமி ` என்றது , ` உலகம் ` என்னும் பொருட்டாய் நின்றது . புண்டரிகப் போது - தாமரை மலர் . மறையவன் - பிரமன் ; அவனைப் பயந்தவன் ( பெற்றவன் ) திருமால் . ` அணிந்து ` என்னும் வினையெச்சம் , ` பிறையவன் ` என்னும் வினைக்குறிப்புப் பெயர் கொண்டது ; ` அணிந்த ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . பிறை திகழும் - பிறைபோல விளங்குகின்ற . எயிறு - பல் . பேழ்வாய் - பெரிய வாய் . எல்லி - இரவு .

பண் :

பாடல் எண் : 4

பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்
பேரவன்காண் பேரா யிரங்க ளேத்தும்
பெரியவன்காண் அரியவன்காண் பெற்றம் ஊர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பூமியாய் , வானமாய் , வெள்ளத்தை உடைய கடலாய் , பனி உறையும் மலைகளாய் , இரவாய்ப் பகலாய் உள்ள சிறப்பை உடையவனாய் , திசைகளாய் , திசைகள் எட்டின் கண்ணும் செறிந்தவனாய் , அடியவர்கள் சிறப்பாகத் தியானிக்கும் பெயர்களை உடையவனாய் , ஆயிரம் பெயர்களால் போற்றப்படும் பெரியவனாய் , அடியார் அல்லார்க்குக் கிட்டுதற்கு அரியவனாய் , காளையை இவரும் அழகினை உடையவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

பார் - பூமி . விசும்பு - ஆகாயம் . பௌவம் - கடல் . பனி வரைகள் - குளிர்ந்த மலைகள் . சீரவன் - புகழை உடையவன் . திசையவன் - திசைகளாய் இருப்பவன் ; அகரம் சாரியை . ` எட்டின்கண்ணும் ` எனவும் , ` ஆயிரங்களால் ` எனவும் உருபுவிரிக்க . ` சிந்திக்கப்படும் பெயர்களை உடையவன் ` என்க ; அவை , ` சிவன் ` முதலியன ; அவைதாம் சிந்திப்பார்க்கு அகஇருளைப் போக்குவனவாதல் அறிக . ஏத்தும் - புகழப்படுகின்ற . ` பெற்றம் ` ஈண்டு , இடபம் , ஏரவன் - அழகினை உடையவன் .

பண் :

பாடல் எண் : 5

பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பெரிய தவக்கோலத்தையும் , தலைக்கோலத்தையும் உடையவனாய்ப் பிறையைச் சூடியவனாய் , அடியேனுடைய துன்புறுத்தும் நோயைத் தீர்க்கும் மருந்தாய் , மந்திரங்களாய் , தேவர்கள் வணங்கும் பெருந்தேவனாய் , மிக்க தவத்தை உடைய பார்வதி பாகனாய் , தேவர்கள் அர்ச்சனை செய்து துதிக்குமாறு இருப்பவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

தவத்துப் பிஞ்ஞகன் - தவக்கோலத்தையும் தலைக் கோலத்தையும் உடையவன் . வாதை - துன்பம் . மாதேவன் - தேவர்கட்குத் தேவனாகிய பெருந்தேவன் . ` தவத்தாளும் ஆயிழையாளும் ஆகிய உமையாள் ` என்க . ` அவளது கூற்றினை விரும்பியவன் ` என்பதாம் . அமர்தல் - விரும்புதல் . கச்சியில் அம்மை காமக் கோட்டத்து எப்பொழுதும் தவம் புரிபவளாதல் அறிக .

பண் :

பாடல் எண் : 6

ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்கம் ஆறும்
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காமன் ஆகங்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகால் பந்தர்
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

அரிய வேதங்களையும் , ஆறு அங்கங்களையும் ஆராய்பவனாய் , படம் எடுத்து ஆடும் பாம்பு , எலும்பு , ஆமை இவற்றை அணிந்தவனாய் , கண்ணிலிருந்து புறப்பட்ட தீயினால் மன்மதனுடைய உடம்பை எரித்தவனாய் , வெகுண்டெழுந்த கூற்றுவனுடைய உடம்பு அழியுமாறு காலால் பாய்ந்தவனாய் , ஒரு காலத்தில் பல சருகுகளைத் தன் வாயிலிருந்து வெளிப்படும் நூலால் இணைத்துத் தனக்கு நிழல் தரும் பந்தலை அமைத்த சிலந்திக்கு நாட்டை ஆளும் செல்வத்தை ஈந்தவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` ஆறு , என்பு , ஆமை , ஆகம் ` என்பவற்றில் இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது . ஆய்ந்தவன் - ஆய்ந்தான் போலும் உணர்வுடையவன் . ` ஆமை ` என்பதில் உம்மை தொகுத்தலாயிற்று . ஆகம் - உடம்பு . ` பொடியாய் வீழ ` என்றதற்கு , ` பொடியாய் வீழ்வது போல வீழ ` என உரைக்க . சருகுகளால் பந்தர் இட்ட சிலந்தியைச் சிவபிரான் அரசனாக்கிய வரலாற்றை , தி .12 பெரியபுராணத்துக் கோச்செங்கட் சோழ நாயனார் புராணத்துட் காண்க .

பண் :

பாடல் எண் : 7

உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் தான்காண்
இற்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்
சமயமவை யாறினுக்குந் தலைவன் தான்காண்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பார்வதி பாகனாய் , மகிழ்ந்து கங்கையைச் சடையில் ஒடுக்கியவனாய் , இமயமலையில் உள்ள வடகயிலை மலையில் உறையும் செல்வனாய் , வீடுகள் தோறும் பிச்சைக்கு அலையும் வறியவனாய் , ஆறுவகை வைதிகச் சமயங்களுக்கும் தலைவனாய் , மெய்ப்பொருளாய் , உயர்வற உயர்நலம் உடையவனாய்த் தனக்குத்தானே நிகராகும் தேவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

உகந்து ஒலி நீர்க் கங்கை - உயர்ந்து ( மிகுந்து ) ஒலிக்கின்ற நீர்வடிவாகிய கங்கை , ` கங்கையைச் சடையினின்றும் ( பகீரதன் பொருட்டு ) ஒழுகவிட்டான் ` என்க . ` வட இமயக்கயிலை ` என மாற்றுக . இமயக் கயிலை - இமயத்தின்கண் உள்ள கயிலை . ` இற் சென்று ` என இயையும் . ` இல்லங்கள் தோறும் பிச்சைக்குச் சென்று உழலும் ` என்க . ஆறு சமயங்கள் மேலே காட்டப்பட்டன ; எல்லாச் சமயங்களையும் உயிர்களின் அறிவு நிலைக்கேற்ப , இறைவன் , உலகில் தோன்றி நிலவச் செய்தலின் , அவன் ஒருவனே எல்லாச் சமயங்கட்கும் உண்மைத் தலைவன் என்க ; ` எல்லாக் கலைகளுக்கும் சிவபிரானே முதல்வன் ` என மேற் ( பா .2 உரை ) காட்டிய உபநிடத வாக்கியத்திற்கும் இதுவே கருத்து . இனி , ` உயிர்களின் அறிவு நிலைக் கேற்ப வேண்டும் நூல்களைததோற்றுவித்தலேயன்றி வேண்டாதனவற்றை இறைவன் அழித்தலும் செய்வன் ` என்று அருளுகின்றது , திருவாசகம் ; அதனை , ` மண்ணும் விண்ணும் வானோருலகும் - துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் ` ( தி .8 கீர்த்தி . 4,5.) என்புழிக் காண்க ; உத்தமன் - மேலானவன் . தானே ஆய இமையவன் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருந்தேவன் .

பண் :

பாடல் எண் : 8

தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்
தூமலர்ச்சே வடியிணையெம் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்
ஒலிகடலில் அமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

அடிமை செய்யும் அடியார் துயரங்களைத் தீர்ப்பவனாய் , தூய மலர்போன்ற திருவடிகளை உடைய , எம் சோதி வடிவினனாய் , உண்டவிடத்தைக் கழுத்தில் ஒடுக்கியவனாய் , கடலிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தைத் தேவர்களுக்கு உதவியவனாய் , வண்டுகள் பொருந்தும் கொன்றை மலர் மாலையனாய் , ஒளி பொருந்திய சந்திரனும் விண்மீன்களும் ஆயினவனாய் , எட்டுத் திசைகளிலும் அழகு நிறைந்த பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத் தானே .

குறிப்புரை :

தொண்டு படு - தொண்டு பொருந்திய . ` தொண்டர் ` என்றது , வாளா பெயராய் நின்றது . ` படுவிடம் உண்டு ` என மாற்றுக . படு விடம் - இறத்தற்கு ஏதுவாகிய நஞ்சு . வாள் - ஒளி . எண்டிசையும் எழில் ஆரும் - எட்டுத் திசைகளும் அழகு பொருந்துதற்கு ஏதுவாய .

பண் :

பாடல் எண் : 9

முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

யாவரினும் முற்பட்டவனாய் , மும்மூர்த்திகளிலும் வேறுபட்டு , அவர்கள் தோற்றத்துக்குக் காரணனாய் , முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் , முருகனுக்கும் யானைமுகத்தானாகிய விநாயகனுக்கும் தந்தையாய் , பணிந்து தன் திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்கு அவர்கள் சிந்தையில் அகப்படுபவனாய் , புறப்பொருள்கள் மாட்டுச் செல்லாத உள்ளத்தாருக்கு இன்பவடிவினனாய் , செங்கண்ணனாகிய திருமாலைக் காளையாகக் கொண்டு இவரும் எம் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

முந்தை - யாவரினும் முற்பட்டவன் . மூவரினும் - ` அயன் அரி அரன் ` என்னும் மூவருள்ளும் . முதல் ஆனான் . தலைவன் ஆகியவன் ; உம்மை , ` முரசு முழங்கு தானை மூவருள்ளும் ` ( புறம் - 35) என்புழிப்போல , முற்று . தண்கட மா - குளிர்ந்த மதநீரை யுடைய விலங்கு ; யானை . ` அடியே ` என்னும் ஏகாரம் , ` தன் திருவடியையே ` எனப் பிரிநிலை சிந்தைக்கு அகப்படுபவனை , ` சிந்தை ` என்றருளினார் ; ` சிந்திதன் ` என்றபடி ; எனவே , ` ஏனையோர்க்கு அசிந்திதன் ` என்றதாம் . சிந்தாத - சிதறாத ; புறத்துச் செல்லாத , சிவன் - இன்ப வடிவினன் ; ` அவன் `, பகுதிப்பொருள் விகுதி . மால் , பெருமை எனக் கொண்டு ` செங்கண் ` என்றதனை விடைக்கு அடையாக்கினும் , அன்றி , ` திருமால் ` எனக்கொண்டு அவனுக்கே அடையாக்கினும் பொருந்தும் . விடைக்குக் கொள்ளின் இன அடையாம் .

பண் :

பாடல் எண் : 10

பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் தான்காண்
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தஎழி லரவி னான்காண்
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் தான்காண்
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
யெடுக்கஅடி யடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இன்னிசைகேட் டிலங்கொளிவா ளீந்தோன் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பொன்போன்ற ஒளிவீசும் முறுக்கேறிய சடையை உடைய எம் தூயோனாய் , பூதகணத் தலைவனாய் , புலித்தோலாகிய ஆடையின் மேல் இறுக்கிச் சுற்றிய அழகிய பாம்பினை உடையவனாய் , காதில் சங்கினாலாகிய குழையை அணிந்த திறமை உடையவனாய் , மின்னலைப் போல ஒளி வீசும் வெள்ளிய பற்களை உடைய இராவணன் , கோபம் கொண்டு கயிலை மலையை அசைக்கத் தன் திருவடி அவனை நசுக்க , பின்னர் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட இனிய இசையைக் கேட்டு , அவனுக்குச் சந்திரகாசம் என்ற வாளினை வழங்கிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்திலுள்ளான் .

குறிப்புரை :

` பொன் இசையும் , மின் இசையும் ` என்பவற்றில் . ` இசையும் என்பன உவம உருபுகள் . ` பூத கணத்தை யுடையநாதன் ` என்க . ` ஆடையொடு ` என உருபு விரிக்க . தன் இசைய - தனக்குப் பொருந்த ; இனி , ` தன் ` என்றதனைச் சாரியை யாக்கி , ` ஆடை தன்னொடு வைத்த ` என உருபுவிரித்து உரைத்தலுமாம் . ` காதின் ` என்பதில் , சாரியை நிற்க ஐ உருபு தொக்கது . ` காதினை உடைய சதுரன் ` என்க ; சதுரன் - திறலுடையவன் . மின் இசையும் வெள் எயிற்றோன் , அரக்கன் , இராவணன் . ` அடியினால் அடர்ப்ப ` என்க . அடர்த்தல் - வருத்துதல் . ` மீண்டு ` என்பது மற்றென்பதன் வினைமாற்றுப் பொருள் தந்தது . ` ஈந்தோன் ` என்புழியும் ` காண் ` என்பது விரிக்க .
சிற்பி