திருநாகேச்சரம்


பண் :

பாடல் எண் : 1

தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தாய் போல்பவனாய் , எல்லாருக்கும் தலைவனாய் , மலைகளில் உறைபவனாய் , எல்லா உலகங்களும் ஆகியவனாய் , அடியார் அல்லாதாருக்குத் தீப்போன்றவனாய்ச் சேய்மையிலுள்ளவனாய் , அடியார்களுக்கு நிழல் போன்றவனாய் அண்மையில் உள்ளவனாய் , பிறரால் அறியப்படாத வியத்தகு பண்பு செயல்களை உடையவனாய் , வேதம் ஓதுபவனாய் , வேதியர்கள் தியானிக்கும் மந்திரவடிவாய் உள்ளவனாய் , ஆகமமாக இருப்பவனாய் , வேள்வித்தீயாய் இருப்பவனாய் , திருநாகேச்சரத்தில் உள்ள பெருமானை அடைந்து வழிபடாதவர்கள் நல்ல வழியில் செல்லாதவராவர் .

குறிப்புரை :

தாயவன் - தாயாய் இருப்பவன் . தலையவன் - தலைவன் . மலையவன் - மலையின்கண் உள்ளவன் ; சேயவன் - ( அடியரல்லாதார்க்குச் ) சேய்மையில் உள்ளவன் . அணியான் ( அடியார்க்கு ) அண்மையில் உள்ளவன் . மலை , கயிலை , அழல் - வெம்மை ; நிழல் - தண்மை ; ` வெம்மையாயும் தண்மையாயும் உள்ளவன் ` என்றதாம் . மாயவன் - வஞ்சன் . மறையவன் - வேதத்தில் உள்ளவன் . மந்திரன் - மந்திர வடிவாய் உள்ளவன் . தந்திரன் - ஆகமமாய் இருப்பவன் . வளராநின்ற தீ - வேள்வித் தீ ; ` அத்தீயாய் இருப்பவன் ` என்க .

பண் :

பாடல் எண் : 2

உரித்தானை மதவேழந் தன்னை மின்னா
ரொளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

மத யானைத் தோலை உரித்தவனாய் , மின்னல் போல ஒளி வீசும் சடை முடி உடையவனாய் , பார்வதி பாகனாய் , பகைவர் மும்மதில்களை எரித்தவனாய் , அடியார்களுடைய வினைப் பயனாம் நோய்களையும் பாவங்களையும் போக்கியவனாய் , கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து முனிவர் நால்வர்க்கு அறம் , பொருள் , இன்பம் , வீடு என்ற உறுதிப் பொருள்களையும் அவற்றை உணரும் கருவிகளாகிய நான்கு வேதம் ஆறு அங்கங்கள் ஆகியவற்றையும் உபதேசித்தவனாய்த் திருநாகேச்சரத்தில் உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .

குறிப்புரை :

மின் ஆர் ஒளி முடி - மின்னல்போலும் ஒளியை உடைய முடி ; சடைமுடி . இனி , ` மின்னார் ( கங்கையாரை ) ஒளித்த முடி ` என்றலுமாம் ; இப்பொருட்கு . இரண்டனுருபு தொகுத்தலாயிற்றாக உரைக்க . தரியலர் - பகைவர் . வினைநோய் - வினையால் வரும் நோய் ; பெரு நோய்கள் . அரித்தான் - அறுத்தான் . ` அறம் பொருள் இன்பம் வீடு ` என்றது . ` ஈதலறம் ; தீவினைவிட் டீட்டல்பொருள் ; எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்தொருமித் - தாதரவு பட்டதே இன்பம் ; பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு ` ( ஔவையார் பாடல் ) என்றாற் போலக் கூறும் அவற்றின் இலக்கணங்களை . தெரித்தான் - விளக்கினான் .

பண் :

பாடல் எண் : 3

காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளானை
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத
ஏரானை இமையவர்தம் பெருமான் தன்னை
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

யானைத்தோல் போர்த்த கடவுளாய் , தன்னை விரும்பி நினையாத கீழ் மக்கள் உள்ளத்துக்கண் வாராதானாய் , தன்னை மதிப்பவர் மனத்து இருப்பவனாய் , தன்னிகர் இல்லாத அழகனாய் , தேவர்கள் தலைவனாய் , இயல்பாகவே உலகமெல்லாம் நிறைந்து விளங்கும் பொருள்சேர் புகழ் உடையவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .

குறிப்புரை :

காரானை உரி - கரிதாகிய யானையினது தோல் , ` காதலித்தலும் நினைத்தலும் இல்லாத கயவர் ` என்க . கயவர் ; கீழ்மக்கள் . ` செல்லானை ` என்று ஓதற்பாலதனை , ` வாரானை ` என்று ஓதியது , இடவழுவமைதி . ` இலாத ` என்றதனை , ` ஒப்பார் ` என்றதற்கும் கூட்டுக ; இது , பின் வருகின்ற ` ஒப்பில்லாத ஏரானை ` என்பதனை இனிது விளக்கியருளியவாறு , ஏர் - எழுச்சி ; ஈண்டு , ` உயர்வு ` என்னும் பொருட்டு , ` மிக்க ` என்பது , ` சீரான் ` என்பதன் முதனிலையோடு முடிந்தது . ` இறைவன் புகழே உலகெலாம் நிறைந்து மிக்கு விளங்குவது ` என்க .

பண் :

பாடல் எண் : 4

தலையானை எவ்வுலகுந் தானா னானைத்
தன்னுருவம் யாவர்க்கும் அறிய வொண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை வரியரவு நாணாக் கோத்து
வல்லசுரர் புரமூன்றும் மடிய எய்த
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

தலைவனாய் , எல்லா உலகும் தானே ஆனவனாய் , தன் உருவத்தைப் பிறர் அறியமுடியாத நிலையினனாய் , அடியார்க்கு அன்பனாய் , நீண்ட வானத்து உச்சியைத் தடுத்து ஓங்கிய மலைகளானவனாய் , கோடுகளை உடைய பாம்பினை நாணாகக் கட்டி , கொடிய அசுரருடைய மும்மதில்களையும் அழியுமாறு அம்பு எய்த வில்லை ஏந்தியவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .

குறிப்புரை :

தலையான் - தலைவன் ; முதல்வன் ; பதி . இறைவனை யாவரும் உருவறியார் என்பதனை , ` அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது ` ( தி .11 அற்புதத்திருவந்தாதி - 61.) என்று அருளிய அம்மை திருமொழியாலுங் காண்க . உருவம் என்றது , திருமேனியையே யன்றி அவனது உண்மை இயல்பையும் குறிப்பதே யாம் . வீடு பெற்றார்க்கும் அவனது இன்பத்தை நுகர்ந்து வாழ்தலன்றி , அவனது இயல்பினை முற்றும் அளவிட்டுணர்தல் இயலாது என்பதை , ` கடல்அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும் கடல்அளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம் கருத்துக்குச் சேயனாய்க் காண் ` ( திருக்களிற்றுப்படியார் - 90.) என மெய்ந்நூல் விளக்கிற்று . ` மலை மேருமலை ` என்பது , பின் வருவனவற்றால் விளங்கும் . ` அதன்கண் கோத்து ` என இயைவித்து உரைக்க .

பண் :

பாடல் எண் : 5

மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு
விரும்பாத வரும்பாவி யவர்கட் கென்றும்
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்
பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்
பையானைப் பையரவ மசைத்தான் தன்னைப்
பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

தன்பக்கல் விருப்பமுடைய அடியவர்களுக்கு உண்மையானவனாய் , தன்னை விரும்பாத கொடிய பாவிகளுக்குப் பொய்யானவனாய் , சுடுகாட்டில் கூத்தாடுபவனாய் , பொன் போல ஒளிவீசும் சடையினனாய் , திருநீறு நிறைந்த பையை உடையவனாய் , பாம்பினை அணிந்தவனாய் , எங்கும் பரவியிருப்பவனாய் , பவள மலைபோலச் சிவந்த திருமேனியை உடையவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

` விரும்புவார்க்கு ` என்றது , ` விருப்பத்தைச் செலுத்துவார்க்கு ` என்றவாறாய் நின்றது . ` அவர்க்கு மெய்யன் ` என்க . அரும் பாவியர்கள் - நீக்குதற்கரிய மிக்க பாவத்தை யுடையவர்கள் ; ` அவர்களே இறைவன்மாட்டு விருப்பம் செலுத்துதலை ஒழிவார் ` என்றபடி . பொய்யான் - சிறிதும் விளங்காது , இல்பொருள்போலவே இருப்பவன் . பொன் பொலிந்த - பொன்போல விளங்குகின்ற ; அல்வழியாகலின் , னகரம் திரியாதாயிற்று . ` பொன் பொதிந்த ` எனவும் பாடம் ஓதுவர் . பொடி - திருவெண்ணீறு . ` பூதிப் பை ` என்பது , வாளா ஓர் பெயராக அருளப்பட்டது . பை அரவம் - படத்தை உடைய பாம்பு . பரந்தான் - எங்கும் நிறைந்தவன் . ` மேனிச் செய்யான் ` எனச் சினை வினை முதல்மேல் நின்றது .

பண் :

பாடல் எண் : 6

துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை
அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

அறத்தை விரும்பாத குற்றமுடையவர்களைக் கைவிட்டவனாய் , தேவர்கள் பலவாகத் துதித்துப்புகழுமாறு , எல்லா முதன்மைகளாலும் நிறைந்தவனாய் , ஐம்பூதமும் , அவற்றின் காரியமாகிய சராசரமும் ஆகியவனாய் , தன்னைத் தியானிக்காத வஞ்சர்களை மறந்து திருவைந்தெழுத்தை ஓதுபவர்களுக்கு எக்காலத்திலும் சிறந்து உதவுபவனாய் , திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

துரிசர் - குற்றம் உடையவர் . ` துரிசர்தம்மைத் துறந்தானை ` எனவும் , ` வஞ்சகர்தம்மை மறந்தானை ` எனவும் இயைக்க . ஏத்த - புகழும்படி . நிறைந்தான் - எல்லா முதன்மைகளாலும் நிரம்பினான் . ` வல்லோர் ` என்றது . ` நான் மறக்கினும் - சொல்லும்நா நமச்சிவாயவே ` ( தி .7. ப .48.) என்றருளியவாறு சொல்ல வல்லவர் என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

மறையானை மால்விடையொன் றூர்தி யானை
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்
இறையானை யென்பிறவித் துயர்தீர்ப் பானை
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம்
என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

வேதப் பொருளாய் உள்ளவனாய் , பெரிய காளை வாகனனாய் , பெரிய கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாய் , தேவர்கள் தலைவனாய் , என் பிறவித்துயரைப் போக்குபவனாய் , நிலைபெற்ற சிறப்பினை உடைய ஏகம்பத்தில் இனிய அமுதமாக உறைபவனாய் , மற்றவருக்குப் புலப்படாத வகையில் அடியேன் உள்ளத்தினுள்ளே சிறை செய்து வைக்கப்பட்டவனாய் , திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

மறையான் - வேதத்தின்கண் உள்ளவன் : வேதப் பொருளாய் உள்ளவன் . மால்கடல் - பெரிய கடல் . இறையான் - கடவுள் ; ` தேவர்க்குத் தேவன் ` என்றவாறு , ` யான் ஒளித்து வைத்த ` என்க . சிறையான் - சிறையில் உள்ளவன் . இறைவனைத் தாம் அனுபவமாக இடையறாது உணர்ந்து இன்புற்றிருக்கவும் , பிறர் ஒருஞான்றும் அதுமாட்டாது , துன்பிற்கிடந்து சுழல்கின்றார் என்பதனை , பான்மை வகையால் இவ்வாறு அருளிச் செய்தார் . ` நாடி நாரணன் நான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத் தாடி பாதம்என் நெஞ்சு ளிருக்கவே ` ( தி .5. ப .1. பா .10) எனத் திருக்குறுந்தொகையினும் அருளிச்செய்தார் . ` ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து ` ( தி .11 அற்புதத் திருவந்தாதி -96) என அம்மையும் இவ்வாறே அருளுதல் காண்க .

பண் :

பாடல் எண் : 8

எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்
இருவிசும்பில் வரும்புனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்
பிரமன்தன் சிரமொன்றைக் கரமொன் றினால்
கொய்தானைக் கூத்தாட வல்லான் தன்னைக்
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

இமைகொட்டும் நேரத்தில் மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனாய் , வானிலிருந்து இறங்கிய கங்கை வெள்ளத்தை அழகிய தலையில் ஏற்றவனாய் , பிறப்பில்லாதவனாய் , அறவழியில் நில்லாத பிரமனுடைய தலை ஒன்றனைத் தன் கை ஒன்றினால் நீக்கியவனாய் , கூத்து நிகழ்த்துதலில் வல்லவனாய் , குறிக்கோள் ஏதும் இல்லாத கொடியவனான என்னை அடியவனாகச் செய்தானாய் உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

` இமைக்கும் போதில் ` என்றது , எய்தமை . பெய்தமை இரண்டிற்குமாம் . திரு - அழகு . ` அறம் ` என்றது , வேதத்தின் பொருளை ; அஃதாவது , ` சிவபிரானே முதற்பொருள் ` என்பது , வேதத்தினை ஒழியாது ஓதியும் , உணர்ந்தும் , பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பெரும் பேதையாயினானாகலின் , அவனை உணர்த்தும் வாயிலின்றித் தலைகளில் ஒன்றைக் கொய்தான் ` என்றபடி . குறி - குறிக்கோள் ; ` குறிக்கோள் இலாது கெட்டேன் ` ( தி .4. ப .67. பா .9.) என்றருளினமை காண்க .

பண் :

பாடல் எண் : 9

அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கும் அரியான் தன்னை
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறல்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

கருணை உடையவனாய் , இனிக்கும் பசுப்பால் போல்பவனாய் , உலகில் வளரும் பயிர்களாய் , அப்பயிர்களின் வாட்டம் தீர்க்கும் மழையாய் உள்ளவனாய் , பிரமனும் , திருமாலும் தேடியும் காண முடியாத தீப்பிழம்பாய் , குற்றம் தீரத்தொண்டு செய்யும் அடியவருக்கு எளியவனாய் , மற்றயாவருக்கும் அரியவனாய் , இனிய கருப்பஞ்சாற்றின் தெளிவு போன்றவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

அளியான் - கருணையுடையவன் . அண்ணிக்கும் - தித்திக்கின்ற . ஆன்பால் - பசுவின்பால் . ` மாண்பன் தன்னை ` எனவும் , ` அன்பன்தன்னை ` எனவும் பாடங்கள் ஓதுப . ` ஆன்பால் , தேறல் தெளி ` என்பன அடையடுத்த உவமையாகுபெயர்கள் . துளி - மழை ; இதனை , ` துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் - அளியின்மை வாழும் உயிர்க்கு ` ( குறள் - 557) என்பதனாலும் அறிக . துரிசு - குற்றம் . கரும்பின் பயன் அதன் சாறேயாகலின் , அதனையே , ` தேறல் ` என்றார் . ` உள்ளால் ` என்றதில் ஆல் , அசைநிலை ; உருபாக உரைப்பாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 10

சீர்த்தானை யுலகேழுஞ் சிறந்து போற்றச்
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் தன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்
பனிமதியஞ் சடையானைப் புநிதன் தன்னை
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்கன் அஞ்ச
அருவிரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவந்
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

உலகங்கள் ஏழும் பரவிப் போற்றும்படியான புகழுடையவனாய் , ஏனையோரினும் சிறந்தவனாய் , நிறைந்து உயரும் செல்வத்தனாய் , மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் பார்த்தவனாய் , பிறை சூடிய சடையினனாய் , தூயோனாய் , ஆரவாரித்து ஓடிவந்து கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அஞ்சுமாறு , அவனைக் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனாய் , தன்னைச் சரணாக அடைந்தவர்களின் பாவங்களைப் போக்குபவனாய் , உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

சீர்த்தான் - சீரை ( புகழை ) உடைய பொருளானா யினான் . சிறந்து - ஞானத்திற் சிறந்து நின்று ; இங்ஙனம் அருளவே அவ்வாறில்லாதார்க்குச் சிவபிரானைப் போற்றுதல் கூடாதாகும் என்பது பெறப்பட்டது . ` அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் ` ( குறள் - 241) என்பவாகலின் , திருவருளை , ` செல்வம் ` என்றருளினார் . மதனவேள் - மன்மதன் . பொடி - சாம்பல் . ` வீழப் ( விழுமாறு ) பார்த்தானை ` என்க . பனி - குளிர்ச்சி . ` மதியம் ` என்புழித் தொக்கு நின்ற இரண்டனுருபு , ` சடையான் ` என்னும் வினைக்குறிப்போடு முடியும் ; ` மதி அம்சடையான் ` எனலுமாம் . புநிதன் - தூயோன் ; ஒன்றிலும் தோய்வில்லாதவன் . ஆர்த்து - ஆரவாரித்து .
சிற்பி