திருக்கீழ்வேளூர்


பண் :

பாடல் எண் : 1

ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

தனக்கு அடிமையான அன்பர்களுக்குத் தானும் அன்பனாய் , பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவனாய் , நான் அடைக்கலம் புகுந்த திருவடிகளை உடையவனாய் , ஒப்பற்றவனாய் , சந்தனமும் குங்குமமும் வாசக்கலவைகளும் பூசப்பட்ட தோள்களை உடையவனாய் , துளையிடப்படாத முத்தினை ஒப்பவனாய் , தூய வெள்ளிய கோவணத்தைக் கீளோடு இடுப்பில் கட்டியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள என்றும் அழிதல் இல்லாத பெருமானை அடைக்கலமாக அடைபவர்கள் பிறந்து இறத்தலாகிய கேட்டினை எதிர்காலத்தில் பெறாதார் ஆவர் .

குறிப்புரை :

யாவரும் இறைவனுக்கு அடியவரேயாகலின் , அவனை அறிந்து அடைந்தோரை , ` ஆளான அடியவர்கள் ` என்று அருளினார் . அவர்கட்கு அன்பன் ஆதலாவது , அவர்க்கு வேண்டுவன யாவும் தானே முன்வந்து அருளுதல் ; இதனை , திருஞானசம்பந்தர்க்கு முத்துச்சிவிகை , முத்துப்பந்தர் முதலியவைகளும் , நாயனார்க்குப் பொதிசோறும் , அவர் இருவர்க்கும் திருவீழிமிழலையில் படிக்காசுகளும் , வன்றொண்டர்க்கு ஊரில் இரந்து கொணர்ந்த சோறும் தானே முன்வந்து அளித்தமையாலும் , பிறவாற்றாலும் இனிது தெளியப்படும் . ` புக்க ` என்னும் பெயரெச்சம் , ` தாள் ` என்றதனோடு முடிந்தது . இத் தொடரினை , ` ஆளானவர்கட் கன்பா போற்றி ` என்னும் திருவாசகத் தொடருடன் வைத்து நோக்குக . ( தி .8 போற்றித் - 198) தாள் - திருவடி ; திருவடியே அடியவரைத் தாங்குவன என்பது , ` உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் ` ( தி .11 திருமுருகு - 4) என்றதனானும் விளங்கும் . ` சாந்து ` என்றது , கத்தூரி முதலியவற்றை . சந்தனம் முதலியன , அடியவர் செய்யும் வழிபாட்டிற் பெறுவன . தோளாத - துளை இடாத . துளையிடப்பட்ட முத்துச் செயற்கையாய் சிதைவுபட்டுப் பெருமை குறைதலின் , இறைவனை இயற்கையாய் நின்று பெரிதும் போற்றப்படும் துளையிடாத முத்தாக அருளுவர் ஆசிரியர் ; இதனை , ` தோளா முத்தச் சுடரே போற்றி ` ( தி .11 திருவா . போற்றித் - 197) என்றதனாலும் உணர்க . ` தூயதாக வெளுத்த ` என ஆக்கம் வருவித்து உரைக்க . ` கோவணத்தை ` என்னும் இரண்டாவது , ` கீளானை ` என்னும் வினைக்குறிப்போடும் , ` ஆர்த்த ` என்பது , ` கீளான் ` என்பதன் முதனிலையோடும் முடியும் ; எனவே , ` கோவணத்தை - அரையில் ஆர்த்த கீளின்கண் உடையான் ` என்பது பொருளாம் . கீள் - கோவணத்தை இணைத்துவைத்திருக்குமது . கேடு - அழிவு ; பிறந்து இறத்தல் . நாடுதல் - விரும்புதல் ; விரும்பி அடைதல் .

பண் :

பாடல் எண் : 2

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய இயல்புகளை உணர்த்தும் பாடல்களில் உள்ள சொற்களின் பொருளை நன்றாக உணர்ந்து , மலங்கள் பற்றற நீங்கப் பெற்றுப் பசுபோதம் நீங்கி , அருளில் அடங்கி நில்லாதவர்கள் உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தை நீக்காதவனாய் , உய்வதற்குரிய வழியை அறியாத நாய் போன்ற கீழ்மையனாகிய என்னை நல்ல வழியில் செல்லும் வண்ணம் விரும்பி ஆட்கொண்டவனாய் , பற்கள் வரிசையாக அமைந்த வாயினால் , உச்சரிப்பில் குறை ஏற்படாதவகையில் பாடியும் ஆடியும் பணிந்து எழுந்தும் , குறை இரந்து தன்னைச் சரணமாக அடைந்தவர்களுடைய பாவங்களைப் போக்கும் ஆற்றலுடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடுஇலார் .

குறிப்புரை :

சொற்பாவும் பொருள் - சொல்லின்கண் பரவிய ( நிறைந்துள்ள ) பொருள் . தூய்மை நோக்கி - தூய்மை பெறுதல் ( மலங்களெல்லாம் பற்றற நீங்குதல் ) குறித்து . தூங்குதல் - பசுபோதம் நீங்கி அருளில் அடங்கிநிற்றல் . ` சொல் ` என்றது , சிவபிரானது இயல்பு உணர்த்தும் பாட்டுக்களை . அவற்றின் பொருளைத் தெரிந்தாலன்றித் தூய்மை நோக்குதலும் , தூங்குதலும் இயலாவாகலான் , ` சொற்பாவும் பொருள் தெரிந்து ` என்றருளினார் ; இவ்வாறே , ` திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் ` என ஆளுடைய அடிகளும் ( தி .8 சிவபுராணம் . 92 -94) அருளியது காண்க . ` மனம் ` என்றது , உயிரினது அறிவை ; அதன் இருளாவது , அறியாமை ; ஆணவ மலம் . பான்மை - பகுதி ; நெறி . நாயினேனை - நாய்போன்றவனாகிய என்னை ; இழி வுடைமைக்கு நாயினை உவமையாகக் கூறுதல் , தொன்றுதொட்ட தொரு வழக்கு . ` நற்பான்மை ` என முன்னர் அருளினமையின் , ` நன் னெறிக்கே ` என்றது , ` அதற்கே ` என்னும் சுட்டளவாய் நின்றது . ` பற்பாவும் பாடி ` என இயையும் ; ` பல் பா ` என்பது , எதுகைநோக்கித் திரிந்தது . பா - திருப்பாடல் . இனி , ` பற்பாவும் ( பற்கள் நிறைந்த ) வாய் ` என்றே இயைத்து , ` எழுத்துக்கள் இனிது பிறத்தற்கு ஏதுவாய பற்களும் அவற்றையுடைய வாயும் பயன் பெறுமாறு பாடி ` என உரைத்தலுமாம் ; இப்பொருட்கு ` பாடி ` என்றதற்குச் செயப்படுபொருளாகிய ` பாடல்கள் ` என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்படும் . குறைந்து - குறை இரந்து . போக்ககிற்பான் - நீக்க வல்லவன் .

பண் :

பாடல் எண் : 3

அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை
ஆதரிக்கும் அடியவர்கட் கன்பே யென்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

புற்றில் உள்ள பாம்புகளை அணிந்த அழகனாய் , தன்னை விரும்பும் அடியவர்களுக்கு அன்பனாய் , மெய்ஞ்ஞானப் பொருளாய் , பெருந்திறல் உடையவனாய் , பத்தர்களுடைய பத்தி எவ்வளவிற்றாயினும் அதற்கு மனம் இரங்குபவனாய் , பத்தர் அல்லாதவருக்கு இரங்கானாய் , என்றும் அழிவில்லாதவனாய் , என் உள்ளத்துப்புக்கு அங்குள்ள மாசுகளைக் கல்லி எடுத்து நீக்குபவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலம் அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

அளை வாயில் - புற்றாகிய இடத்தில் உள்ள . ஆதரிக்கும் - விரும்புகின்ற . ` அன்பு விளைவான் ` என , பண்பின் தொழில் பண்பிமேல் ஏற்றப் பட்டது . வித்தகன் - திறல் உடையவன் . உளைதல் - வருந்துதல் ; ஈண்டு , மனம் இரங்குதல் . உலப்பு - அழிவு . ` மனத்து ` எனப் பின்னர் வருகின்றமையின் வாளா ` உள்புக்கு ` என்றருளினார் . ` கிளைப்பான் ` என்பது , எதுகை நோக்கி , ` கிளைவான் ` என நின்றது ; கிளைத்தல் - கல்லுதல் . ` மனத்து மாசு ` என்பதன்றி , ` மனப் பசாசு ` எனப் பாடம் ஓதுவாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 4

தாட்பாவு கமலமலர்த் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் தன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் தன்னைக்
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

தண்டிலே விரிந்த தாமரையில் உறையும் பிரமனுடைய தலை ஒன்றினை அறுத்தவனாய் , மாவிரத சமயத்திற்கு உரிய வேடத்தை அணிந்தவனாய் , கிரகங்களின் பெயரால் அமைந்த கிழமைகள் யாவும் ஆவானாய் , தீவினையை உடைய அடியேன் நின்ற கொடிய நரகக் குழியிலிருந்து அடியேனை மீட்பவனாய் , பவளக் கொத்தினை ஒத்த நிறத்தினனாய் , வேதம் ஓதுபவனாய் , வேதத்தின் பொருள் கொண்ட வீணை ஒலியைக் கேட்பானாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

தாள் பாவு - தண்டின்கண் விரிந்த . தயங்குவான் - விளங்குவான் ; கமல மலரில் தயங்குபவன் , பிரமன் ; ` தங்குவானை ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` மாவிரதம் ` என்றது , மாவிரத சமயத்தவர்க்கு உரிய வேடங்கள் ; அவை , எலும்பு மாலை முதலியன . கோள் பாவும் நாள் - கோள்களின் உரிமை பொருந்திய நாள் ; கிழமைகள் . ` நின்றால் ` என்றதனால் , நில்லாமை பெறப்பட்டது . அவ்வாறன்றி , ` யாதானுமோராற்றால் நின்றாலும் மீட்பான் ` என்றதாம் . வித்து உரு - வித்தாகிய உருக்கள் ; ` அவற்றின் கொத்து ஒப்பான் ` என்றது , ` எல்லாப் பொருள்களின் முதலும் தானேயானவன் ` என்றவாறு ; இனி , ` வித்துருமத்தின் கொத்து ` என்பது குறைந்து நின்றது எனினுமாம் . வித்துருமம் - பவளம் . ` வீணை ` என்றது , கருவியாகு பெயராய் , அதன் இசையைக் குறித்தது .

பண் :

பாடல் எண் : 5

நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் தன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் தன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் தன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

பெரியவனாய் , வெண்ணிறக் காளை வாகனனாய் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் அணுகமாட்டாத அருள் ஞானத்தானாய் , மூன்று சுடர்களும் ஆனவனாய் , தொண்டர்களாகித் தன்னைப் பணிபவர்களுக்கு அருகில் உள்ளவனாய் , சுயம்பிரகாசனாய் , பார்வதி பாகனாய் , உண்மையாகத் தன்னை தியானிக்காதவர்கள் வினைகளைப் போக்காதவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

நரை விடை - வெள்விடை ; ` முதிய விடை ` என்பது நயம் . நால்வேதமும் ஆறங்கமும் நணுக மாட்டாத சொல் , அருள் ஞானம் ; ` அதனானே உணரப்படும் பொருளாய் உள்ளவன் ` என்பது கருத்து . ` பணிவார்கட் கினியான் தன்னை ` என்பதும் பாடம் . ` வில்லான் ` என்றது , இசையெச்சத்தால் , ` மேரு வில்லானை ` எனப் பொருள்தரும் . மெய் - துணிபு ; ` அஃது உடையாராய் நினையாதார் ` என்றது ஐயத்தொடு நினைவாரை . தீர்க்ககில்லான் - தீர்க்கமாட்டாதவன் ; ` தீர்த்தல் செய்யாதவன் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் வளைத்துக் கொண்டவனாய் , அச்சடையில் வன்னி , கொன்றை , ஊமத்தை மலர்கள் , ஒளி பொருந்திய பாம்பு இவற்றைச் சூடியவனாய் , மும்மதில்களும் தீயில் வெந்து சாம்பலாகுமாறு அழித்தவனாய் , ஆலகால விடத்தை உண்டவனாய் , மன்மதன் உடல் பொடியாக விழுமாறு தீக்கண்ணால் விழித்தானாய் , பார்வதி பாகனாய் , முன்னொரு காலத்தில் வேல் போன்ற கூரிய தந்தங்களை உடைய யானைத் தோலைக் கிழித்து உரித்தவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

` கங்கை சுழித்தானை ` என்க . சுழித்தல் - வளைத்தல் ; அடக்குதல் . இவ்வாறன்றி ` சுழிகளாகிய தானைகளை ( படைகளை ) யுடைய கங்கை ` என்றலுமாம் . ` மலராகிய வன்னி கொன்றை மத்தம் ` என்க . வன்னி , இலையாயினும் , மலர்களோடு ஒப்பக்கொள்ளப் படுதல் பற்றி மலர்களுள் வைத்து எண்ணினார் . ` வேவ அழித்தானை , வீழ விழித்தானை ` என்க . ` ஆலாலம் ` என்பது பாற்கடலில் தோன்றிய விடத்தின் பெயர் . வேல் நல் ஆனை கிழித்தான் - வேல்போலும் நகத்தால் வன்மை மிக்க யானையைப் பிளந்தான் . கயாசுரனாகிய யானையைச் சிவபிரான் தனது நகத்தால் பிளந்தமையை , ` ஒருப தத்தினைக் கவானுறுத் திருகரத் துகிரால் வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவ குருதி கக்கியே வோலிட வவுணர்தங் குலத்துக் கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையுங் கலங்க ` என்பதால் ( கந்தபுராணம் . ததீசியுத்தரப்படலம் - 146) அறிக . இனி , ` வேல் ` என்றது வேலேந்திய படை ஆட்களைக் குறித்தது எனக் கொண்டு , ` வேலாண் முகத்த களிறு ` ( குறள் - 500) என்றாற்போல . ` அவர்களைக் கோட்டில் ஏந்திய யானை ` என , அதனது வலிமை தோன்ற அருளியதாக உரைத்தலுமாம் . இன்னும் ` வேல் ` என்றதற்கு , ` வேல் போலும் தந்தத்தினையுடைய ` எனினும் பொருந்தும் . ` நன்மை ` ஈண்டு , வலிமை மிகுதி குறித்தது . ` வேனலானை ` எனவும் , ` வேனிலானை ` எனவும் இரண்டனுருபு விரிந்து நின்றதாகவே ஓதுவன பாடம் ஆகாமைக்கு , ` கிழித்தான் ` என்பதுதானே சான்றாகும் . மேல் , ` விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ ` என அருளிச் செய்தவர் . மறித்தும் ஈண்டே அதனை அருளிச்செய்தார் என்றல் பொருந்துமாறு எங்ஙனம் என்க .

பண் :

பாடல் எண் : 7

உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற
ஓங்காரத்துட் பொருள்தான் ஆயி னானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானை
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

அசைகின்ற ஒளிவிளக்காய் , உள்ளத்து நிலை பெற்ற ஓங்காரத்தின் உட்பொருளாய் , வெள்ளொளி உடைய சூரியன் , சந்திரன் , செந்நிறமுடைய அக்கினி என்ற இவையாகி , தேவருலகும் , நிலவுலகும் , தேவருலகுக்கும் மேற்பட்ட ஆகாயமுமாகி , மாணிக்கத்தின் ஒளியும் மரகதத்தின் ஒளியுமாகி , தேவர் எப்பொழுதும் வாழ்த்தித் துதிக்கும் ஒளிமிக்க திருமேனியை உடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

உளர் ஒளி - அசைகின்ற ஒளி ; விளக்கு . காற்றுக் காரணமாக எஞ்ஞான்றும் அசைந்து விளங்குதலே அதற்கியல்பாதல் பற்றி , அவ்வாறருளினார் . ஓங்காரத்து உட்பொருள் , மேலே காட்டப்பட்டது . ( ப .39 பா .10) விளர் ஒளி - வெளுத்த ஒளி ; ` அதனை விடுகின்ற சுடர்கள் இரண்டும் ஒன்றும் ` என்க . இரண்டு , சூரியனும் சந்திரனும் ; ஒன்று , நெருப்பு . இவை மூன்றனது ஒளியும் வெள்ளியவாதல் அறிந்து கொள்க . முச்சுடர்களில் , ஞாயிறும் திங்களும் ஒருதிறத்தினவாகவும் , நெருப்பு மற்றொரு திறத்தினதாகவும் காணப்படுதல் பற்றி இவ்வாறு , ` இரண்டும் ஒன்றும் ` எனப் பிரித்தோதி யருளினார் ; ` வளர் ஒளி ` என்றது , மாணிக்கத்தினது ஒளியை ; அது , கழுவுந்தொறும் வெளிப்படுதல் பற்றி அவ்வாறு அருளிச்செய்தார் . கிளர் ஒளி - மிக்க ஒளி ; என்றது அவனது அருட்டிருமேனிகளை ; அவை , அவற்றின் மிக்க ஒளியில்லாத பேரொளியினவாதல்பற்றி , அவ்வாறருளிச்செய்தார் . உளரொளியாயும் , வளரொளியாயும் இருப்பவனை அவைகளாகவே அருளியது , ஒற்றுமைபற்றி அருளிய பன்மைவழக்கு . ` கிளரொளி ` என்றது முன்னர்ப் பண்பாகுபெயராய்த் திருமேனியையும் , பின்னர்ச் சினையாகுபெயராய் அதனை உடையவனையுங் குறித்த இருமடி ஆகுபெயர் ; ` உடம்பும் உறுப்பெனப்படும் ` என்பது , ` உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் ` ( குறள் - 993) என்பதனால் அறிக .

பண் :

பாடல் எண் : 8

தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

கூற்றுவன் இறக்குமாறு அவனைக் காலால் உதைத்து , தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயனுக்கு ஒருகாலத்தில் அருள் செய்தவனாய் , புலித்தோலோடு எலும்பும் பாம்பும் பூண்டவனாய் , தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்து இருப்பவனாய் , கொடிய நஞ்சினைத் தன் கழுத்தில் தங்குமாறு உண்டவனாய் , தேவர்கள் கூடியிருந்த தக்கனுடைய வேள்வியை அழித்தவனாய் , உள்ள கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

` காலால் தடுத்தான் ` என்பது , ` உதைத்தான் ` என்னும் பொருளது . ` காலனைப் பொன்றக் காலால் தடுத்தானை ` எனக் கூட்டுக . ` தடுத்து அருள்செய்தான் ` என எடுத்து இயைவிக்க . மாணி - பிரமசாரி ; மார்க்கண்டேயர் . அதள் - தோல் . ` அதளோடு ` என்றதில் ஓடுவுருபு , ` தொடியொடு தொல்கவின் வாடிய தோள் ` ( குறள் - 1235) என்பதிற் போல , வேறுவினைக்கண் வந்தது . அக்கு - எலும்பு . மடுத்தான் - வாய் மடுத்தான் ; உண்டான் . ` மிடற்றுள் தங்க மடுத்தான் ` என்க .

பண் :

பாடல் எண் : 9

மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
போகாதென் னுள்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

இறந்தவர்களுடைய எலும்புகளை அணியும் இயல்பினனாய் , கடவூர் மயானம் முதலிய இடங்களில் கூத்தாடுபவனாய் , ஒளி பொருந்திய பாம்போடு எலும்பை அணிபவனாய் , சுடுகாட்டில் ஆடுபவனாய் , என் உள்ளத்தில் இடம் பெற்று , அதனை விடுத்து நீங்காது , என்னை அடிமை கொண்டானாய் , தன் உள்ளத் திருப்பதனைப் பிறர் அறிய இயலாதவனாய் , அச்சம் இல்லாதவனாய்த் தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

எலும்பு அணிந்த வாழ்க்கை - எலும்பை அணிதற்கு ஏதுவாய் நின்ற வாழ்க்கை ; என்றது , ` வறுமை வாழ்க்கை ` என்னும் பொருட்டாய் , அவனது நிலைபேற்றினைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்று , பழித்ததுபோலப் புகழ்புலப்படுத்து நின்றது ; ` மாண்டார் எலும்பு ` என்றதும் அதுபற்றி , பின்னர் ` அரனொடு என்பு பூண்டான் ` என்றது , அவனது பற்றின்மையைக் குறிக்கும் . ` மயானம் , புறங்காடு ` என்னும் இரண்டனுள் முன்னது , ` உலக முழுதும் ஒடுங்கிய நிலையையும் , பின்னது உலகப் புறங்காட்டையும் குறித்து , முன்னின்ற தொடர்களின் பொருளை வலியுறுத்தின . உள் - உள்ளம் . ` அதனை இடங்கொண்டு ` என்க . சிந்தை , அவனது திருவுள்ளக் குறிப்பு ; அதனை அறிவார் ஒருவரும் இல்லை என்க . அசங்கை - அச்சம் இன்மை ; ` அச்சம் இல்லாதவன் ` என்றது , ` தான் யார்க்கும் குடியல்லாத் தன்மை யன் ; தன்வயம் உடையவன் ` என்றபடி . சங்கை - அச்சம் ; அமரர்கள்தம் அச்சம் எல்லாம் தீர்த்தது , அசுரர்களை அழித்து என்க . கீண்டான் - பிளந்தான் ; அழித்தான் .

பண் :

பாடல் எண் : 10

முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும்
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய் தானைப்
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

தனக்கு அறிவுரை கூறிய தேர்ப்பாகனிடம் கடுஞ் சொற்கள் பேசிக் கயிலைமலையை அசைத்த இராவணன் முதுகு நொறுங்குமாறு அழுத்திப்பின் அவன் தன் கை நரம்புகளை வீணைத் தந்திகளாகக் கொண்டு பாட மலையை அசைத்த அவனுக்குச் சிறிய வாளை அருள் செய்தவனாய் , அடியேன் உள்ளத்தே தன் திருவடிகளைப் பதித்தவனாய் , மும்மதில்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவனாய் , அன்பின்றி வழிபடுபவர்களுக்குத் தானும் அருள்புரிவான் போன்று காட்டி வஞ்சிப்பவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

முறிப்பு ஆன - தொடர்பை அறுப்பனவாகிய சொற்கள் ; ` கடுஞ்சொற்கள் ` என்றபடி . தான் , அசைநிலை ; உம்மை , சிறப்பு . முதுகு இற - முதுகு நெரியப்பெற்றமையால் . எடுத்து - உரத்து . பறிப்பான் - அவன் , பகைவரது உயிரை வாங்குதற் பொருட்டு . அரி வாள் - பகைவரது உறுப்புக்களை அறுக்கின்ற வாள் ; ` சிற்றரிவாள் ` என்றது , ` அஃது ஒன்றுதானே பல பெருவீரரை வெல்லும் ஆற்ற லுடைத்து ` என்பது தோற்றுவித்தற்பொருட்டு . ` நீட்டினான் ` என்றது , பான்மைவழக்கால் , ` ஈந்தான் ` என்னும் பொருளைத் தந்தது . பொய்யர்கள் , அன்பின்றி வழிபடுவோர் ; பொய்செய்து - அருள் புரிவான் போன்று அதனைக் கடைபோகச் செய்யாது . கிறிப்பான் - வஞ்சிப்பான் ; கிறி - வஞ்சனையாதல் , ` கேட்டாயோ தோழி கிறி செய்த வாறொருவன் ` ( தி .8 திருவா . திருவம் . 6) என்பதனான் அறிக .
சிற்பி